Tuesday, August 30, 2011

வேண்டாம் தற்கொலை!


பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் உயிரின் நிலை என்ன? அவர்களின் உயிர்கள் மீட்கப்பட்டு விடக் கூடாதா? என்று உலகத் தமிழர்கள் அத்தனைப் பேரும் உறக்கமின்றித் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் இந்தக் காரணத்துக்காக இன்னொரு செங்கொடி என்ற தமிழச்சி  தீக்குளித்துத் தன் உயிரைப் போக்கிக் கொண்டார் என்பது வெந்தப் புண்ணில் எரியும் தீக்குச்சியைச் சொருகியது போல் இருக்கிறது. இது தேவைதானா? இந்தச் செயலால் விளையப் போவது என்ன? எல்லோருக்கும் - உணர்வு  இருக்கிறது. தற்கொலை செய்து கொள்ளாதவர்கள் எல்லாம் உணர்வற்றவர்கள் என்று பொருளாகாது.

ஒரு போராட்டக் களத்தில் உயிர் தருவது என்பது வேறு - அது உன்னதமானது வரலாறும் மெச்சக்குரியதாகும். அதே நேரத்தில் ஒரு களத்தில் நம் உயிரை நாமே மாய்த்துக் கொள்வது எப்படி உன்னதமானதாக இருக்க முடியும்?போராட வேண்டிய நேரத்தில் உயிரைப் போக்கிக் கொள்வதால் எதிரிக்குத் தான் பலம் சேர்க்கும்.இந்த முறையே கூடாது என்று பொதுவாக தலைவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள் என்றாலும், இது போதுமானதல்ல; மிக அழுத்தமாகக் கூற வேண்டும்; திருப்பித் திருப்பி கூற வேண்டும். அறிக்கைகளாக வெளியிட வேண்டும்.தற்கொலை செய்து கொண்டவர்களை வீரர்களாகவும், வீராங்கனைகளாகவும் காட்டிப் பெரிதுபடுத்தும்போது, விளம்பரப்படுத்தும்பொழுது, மற்றவர்கள் மத்தியிலும் வேறு வகையான உணர்ச்சிகள் தூண்டப்படுவதற்குக் காரணமாக இருந்து விடக் கூடாதல்லவா!இதுபோன்ற கூட்டங்களில் இரங்கல் உரையாற்றும் போதுகூட, இதனை மிக அழுத்தமாக வெளிப்படுத்த வேண்டும்.சாகச் செய்வானை சாகச் செய்யாமல் சாகின்றாய் தமிழா என்று புரட்சிக் கவிஞர் சொன்ன வரிகளை நினைவுபடுத்திக் கொள்வது நல்லது.உண்ணாவிரதம் இருந்து தற்கொலை செய்வதாக மிரட்டுவதையேகூட தந்தை பெரியார் ஏற்றுக் கொண்டவர் அல்லர்.காந்தியார் அத்தகு உண்ணாவிரதம் மேற் கொண்டபோதுகூட அதனை சண்டித்தனம் என்று கண்டித்தவர் தந்தை பெரியார்.நம்மீது பரிதாபத்தை உண்டாக்கி உரிமைகளைக் கேட்பது கூடாது - அது ஒரு வகையான யாசகம் ஆகும்.தந்தை பெரியார் அந்தக் கால கட்டத்தில் எச்சரித்தது - சரியாகப் போய் விட்டது என்பதை இப்பொழுது அரங்கேறும் உண்ணாவிரதங்களைப் பார்க்கும் பொழுது தெளிவாகிறதே!எந்தப் போராட்டம் என்றாலும் வெளிப்படையாக அறிவித்து, தடை வந்தாலும் அதனைமீறி நடத்திக் காட்டி, அதற்குரிய தண்டனையை இன்முகத்தோடு எதிர் கொள்வதுதான் உண்மையான வீரமாகும்.எந்தவித உரிமைகளைப் பெறுவதாக இருந்தாலும் அதற்குரிய கஷ்ட நஷ்டம் என்னும் விலை கொடுத்தாக வேண்டும் என்பதுதான் சரியான அணுகுமுறையும், நாணயமான செயல்முறையுமாகும்.போராட்டக் காலங்களில் தந்தை பெரியார் வெளியிடும் அறிக்கைகளைப் பார்த்தால் அதன் வீரியமும், விவேகமும் விளங்கும்.வீணாக உணர்ச்சி வயப்பட்டு, பின் விளைவு களைப் பற்றிக் கவலைப்படாமல் மேற்கொள்ளும் எந்தச் செயலும் எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும் - ஏமாற்றத்தைக் காண்பதுதான் மிச்சமாகும்.முத்துக்குமரனோடு முடிந்து போகும் என்று நினைத்தது நடக்கவில்லை; இப்பொழுது செங்கொடியும் அந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டார். இதாவது கடைசியாக இருக் கட்டும் என்று தலைவர்களும், ஊடகங்களும் உரக்கக் கூறட்டும்! சப்தம் போடட்டும்!உயிர் என்பது விலை மதிக்கப்பட முடியாதது; அது மலிவாகப் போய் விடக் கூடாது; வெறும் உணர்ச்சி வயம் என்று பலகீனத்திற்குப் பலியாகி விடக் கூடாது.தன்னைத்தானே மாய்த்துக் கொண்டவர்களின் கல்வெட்டில் - தற்கொலை செய்து கொள்ளாதே மனிதா! என்ற வாசகங்கள் பொறிக்கப்படட்டும்!திருத்தணியில் நடைபெற்ற காஞ்சி மண்டல திராவிடர் கழக மாநாட்டில்கூட தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தமிழினப் பெரு மக்களுக்கு இந்த வேண்டுகோளை முன் வைத் துள்ளார் - தலைவர்களும் பின்பற்றுவார்களாக!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...