ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து மக்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் கட்சிகளைக் கடந்து சுருதிபேதம் இல்லாமல் கடும் புயலாக எழுந்து நின்று கர்ச்சித்தது நிம்மதி அளிக்கிறது. உலகம் பூராவும் உள்ள தமிழர்கள் மத்தியில் நன்னம்பிக்கை ஒளியை ஏற்படுத்துகிறது.
எதிலும் அரசியல் பார்வையோடு நடந்து கொள்வது தான் வழமையாக இருந்து வந்திருக்கிறது. மற்ற மற்ற மாநிலங்களின் உறுப்பினர்கள் காட்டும் ஒற்றுமை, தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளில்கூட தமிழக உறுப்பினர்களிடம் இல்லையே என்று எத்தனையோ முறை இதே தலையங்கம் பகுதியில் குமுறியதுண்டு.
அந்தப் புண்ணுக்கு மருந்து போட்டதுபோல் இருந்தது நேற்று முதல் நாள் (25.8.2011) மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தமிழ்நாட்டு உறுப்பினர்கள் கிளர்ந்தெழுந்து, போட்டி போட்டுக் கொண்டு, ஈழத் தமிழர்களின் பிரச்சினை குறித்து அக்கறை காட்டிப் பேசியுள்ளனர்.
தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் இவற்றோடு வட மாநிலத்திலும் பி.ஜே.பி.யைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் இந்தியக் கம்யூனிஸ்டும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசியது வரவேற்கத் தகுந்ததாகும்.
இதற்குப் பிறகாவது மத்திய அரசு இறுக மூடிக் கொண்டிருந்த கண்களைத் திறந்து பார்க்கும் என்று எதிர்பார்க்கிறோம் - திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
கிழக்கு பாகிஸ்தானுக்கு முக்திவாஹினிப் படையை அனுப்பி, பங்களாதேஷை சுதந்திர நாடாக பிரகடனப் படுத்தியதுபோல நடக்கும் என்று எதிர் பார்த்தோம். இதைத் தான் இந்திய அரசு செய்திருக்க வேண்டும். ஆனால் இதனைச் செய்யவில்லை என்று தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் மானமிகு டி.ஆர். பாலு அவர்கள் அவருக்கே உரித்தான குரலை உயர்த்தி, நாடாளுமன்றம் குலுங்கப் பேசியது பாராட்டுக்குரியதாகும்.
அந்த அளவுக்கு ஈழத் தமிழர்கள் கொடும் பாதிப்புக்கு ஆளானார்கள் என்பது தான் உண்மை; அந்த அளவுக்கு உலகத் தமிழர்களும், மனித நேயர்களும் இந்தப் பிரச்சினையில் துக்கத்தில் உறைந்து போனார்கள் என்று பொருள்.
மானமிகு டி.ஆர்.பாலு அவர்களின் பேச்சுக்கிடையே பல குறுக்கீடுகள் ஏற்பட்ட நிலையிலும் அவற்றைப் பற்றியெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் நெஞ்சில் புதைந்து கிடந்த உணர்வுகளைக் கொட்டி முடித்திருக் கிறார்.
அவைத் தலைவர் திருமதி மீராகுமார் ஒரு கட்டத்தில் அவையின் மூத்த உறுப்பினராகிய நீங்கள் மற்றொரு நாட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை மனதிற் கொண்டு பேச வேண்டாமா? என்ற வேண்டு கோளை முன் வைக்கும் அளவுக்கு அவர் பேச்சு அக்னிப் பிரவாகமாகப் பெருக்கெடுத்தது என்று கூற வேண்டும்.
ஈழத்தில் இளைஞர்கள் ஏன் ஆயுதம் தாங்கினார்கள்? அந்த இடத்துக்கு அவர்களைத் துரத்தியவர்கள் யார் என்கிற நியாயமான எதார்த்தமான வினாக்கள் எல்லாம் தொடுக்கப்பட்டுள்ளன.
ஈழத் தமிழர்களுக்காக இந்தியா அளித்த உதவித் தொகையெல்லாம் யாருக்குப் பயன்பட்டன? பாதிக்கப்பட்ட மக்கள் அதனால் அடைந்த பயன் என்ன என்பதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அவர்களிடமிருந்து நியாயமான பதில் இல்லை.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது, சுட்டுக் கொல்லப்படுவது குறித்தும் தமிழ்நாட்டு உறுப்பினர்கள் குரல் கொடுத்திருக்கின்றனர். இந்தப் பிரச்சினையில் இந்தியா மெத்தனம் காட்டியிருப்பதையும் கண்டனமாக வெளிப்படுத்தவும் தவறவில்லை.
உண்மையைச் சொல்லப் போனால் உறுப்பினர்களின் நியாயமான குற்றச்சாற்றுக்குச் சமாதானம் உருப்படியான சரக்கு ஏதும் இந்திய அரசிடம் இல்லை.
இந்தப் பிரச்சினையில் இத்தனைப் பேரும் ஒன்று சேர்ந்து எழுவார்கள் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்தவரும், மாநிலங்களவை உறுப்பினருமான தமிழ்நாட்டை சேர்ந்த து.ராஜா அவர்களும் தன் பங்குக்கு இந்திய அரசின் நடவடிக்கைகள் மீது குற்றச்சாற்றுகளை வலுவாக எடுத்து வைத்துள்ளார்.
ஒரு உண்மை என்னவென்றால் கட்சிகளைக் கடந்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கர்ச்சனை செய்த விவரங்கள் அனைத்துமே இந்திய அரசுக்குத் தெரியாதவையல்ல!
தெரிந்தும் தெரியாததுபோல பொய்யுறக்கம் கொண் டுள்ளனர் என்பதுதான் உண்மை. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எடுத்து வைத்த குற்றச்சாற்றுகள் உலக நாடுகள் மத்தியில் இந்தப்பிரச்சினைமீது மேலும் அக்கறை கொள்ளவும் இந்தியா இதற்குமேல் எதிர் நிலைக்குச் செல்லாமலும் தடுத்திடப் பயன்படக் கூடும்.
இதற்குப் பிறகும் இந்தியா ஈழத் தமிழர்களுக்குத் துரோகமாகவும், ராஜபக்சேகளுக்கு ஆதரவாகவும் நடந்து கொள்ளுமேயானால் உலக நாடுகள் மத்தியில் இந்தியா கூனிக் குறுகி நிற்க வேண்டிய அவலத்தைத்தான் ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.
ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் ஏற்பட்ட தமிழ்நாட்டு உறுப்பினர்களின் ஒற்றுமை, தமிழ்நாட்டின் அடிப்படை உரிமைப் பிரச்சினைகளிலும் தொடரட்டும் - தொடர வேண்டும் என்பதே நமது கனிவான வேண்டுகோள்!
No comments:
Post a Comment