உயர்ஜாதி மற்றும் ஆங்கிலம் பேசுவோரின் அமைப்பே ஜனலோக்பால்!
தாழ்த்தப்பட்ட மக்கள் கடும் எதிர்ப்பு!
புதுடில்லி ஆக.27- அன்னாஹசாரே நடத்தும் ஊழல் ஒழிப்பு இயக்கம் என்பது உயர் ஜாதியினரின் அமைப்பு; இடஒதுக்கீட்டுக்கு எதிரானது - ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதில் இடம் கிடையாது என்ற கருத்து தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தி யில் ஓங்கி ஒலிக்கிறது.
இதுகுறித்து ராஜஸ்தான் மாநில பிரபல சமூகத் தொண் டர் பன்வார் மேக்வான்ஷி இந்தி இதழ் ஒன்றில் எழுதி யிருப்பதாவது:
லஞ்ச ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் இயக்கத் திற்கு நாடு முழுவதிலும் இருந்து குறிப்பிடத் தக்க அளவு ஆதரவு கிடைத்துள்ளது. அன்னா மற்றும் அவரது பட்டினிப் போராட்டம் பற்றி முக்கிய ஊடகங்கள் எண்ணற்ற கதை களை பரப்பிக் கொண்டிருக் கின்றன. செய்தி வெளியிட தகுந்த அளவில் இந்தியாவில் வேறு எந்த நிகழ்ச்சியுமே நடை பெறாதது போன்று அன்னா வின் செய்திகளை மட்டுமே அனைத்து ஊடகங்களும் அனைத்து நேரங்களிலும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனால், அன்னாவுக்கும் அவரது இயக்கத்துக்கும், இது போன்ற முக்கியத்துவம் அளித் துப் பிரசாரம் செய்வதில் ஊட கங்கள் சுறுசுறுப்பாக இருக்கும் நிலையில், இந்தியாவில் இந்திய சமூக பிரமிட்டில் அடி நிலையில் உள்ள, லஞ்ச ஊழலால் அதிக அளவில் துன்புறுகிறவர்களாக வும் உள்ள பெரும்பகுதி மக் களான தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், மத சிறுபான் மையினர் இந்த இயக்கத்திற்கு எந்த ஆதரவும் தராமல் தூர விலகி நிற்கின்றனர். நன்கு அறியப்பட்ட தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியின அறிஞர் ஒருவர் கூட அன்னாவின் இயக் கத்திற்கு ஆதரவு அளிக்க முன் வரவில்லை. சாதாரணமான தாழ்த்தப்பட்ட பிரிவு, பழங்குடி பிரிவு மக்களும் ஆதரவு தர வில்லை. அதே போல தொழி லாளிகள் மற்றும் விவசாயிகள் இந்த இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. இதன் பிறகும், இந்த இயக்கமும், இந்த இயக்கத்தை நடத்துபவர் களும் இந்த ஒட்டு மொத்த நாட்டின் பிரதிநிதிகள் நாங்கள் என்று கூறிக் கொள்கிறார்கள்.
ஆர்வம் காட்டாத பிரிவினர்!
அன்னா இயக்கத்தின் பின் னணியில் உள்ள லஞ்ச ஊழ லுக்கு எதிரான அமைப்பு 120 கோடி இந்திய மக்களின் குரல் தங்களின் குரல் என்று உரிமை கொண்டாடுகின்றனர். ஆனால், பல கோடி மக்கள் தொகை கொண்ட தாழ்த்தப் பட்ட, பழங் குடியின, மத சிறுபான்மை மக்கள் இந்த இயக்கத்தில் சிறிதும் ஆர்வம் காட்டாத நிலையில், அவர்களின் சார்பாக எவ்வாறு இத்தகைய தவறான உரிமையை இந்த இயக்கம் கோரமுடியும்? இந்த இயக்கத் தால் தாங்கள் புறக்கணிக்கப்பட் டோம், அலட்சியப்படுத்தப்பட் டோம் என்று இந்த மக்கள் நினைப்பதற்கான காரணங் களில் ஒன்று இந்த இயக்கத் தின் பின்னணியில் உள்ள மனிதர்கள் நடந்து கொள் ளும்விதமும், பொதுமக்களைக் காப்பாற்ற வந்த தேவதூதர்கள் தாங்களே என்று தங்களைக் காட்டிக் கொள்ளும் சுயதம் பட்டம் அடித்துக் கொள்ளும் தலைவர்களும்தான்.
இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பான குரல்!
சுதந்திர இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப் பட்ட இயக்கங்களிலேயே மிகப் பெரிய இயக்கம் என்று ஊடகங்களால் தவறாக எடுத்துக் காட்டப்படும் இந்த இயக்கத்தில் இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் ஏன் ஆர்வம் காட்டவில்லை என் பதைப் புரிந்து கொள்ள, இந்த இயக்கத்தை ஒரு ஜாதிக் கண் ணோட்டத்தில் பகுத்தாய்வு செய்து பார்க்க வேண்டும்.
புதுடில்லி ஜந்திர் மந்திரில் அன்னா பட்டினிப் போராட்டம் மேற்கொண்டபோது, அவரது ஆதரவாளர்கள் அமைத்த பதாகைகளில் பாரதமாதா, காந்தி, சிவாஜி, லட்சுமிபாய் போன்றவர்களின் படங்களை வைத்து அலங்கரித்திருந்தார்கள்.
ஆனால் பாபாசாகிப் அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா பூலே போன்ற ஒடுக்கப் பட்ட மக்களின் விடுதலைக்காக உண்மை யாக பாடுபட்ட தலைவர் களின் படங்கள் இவர்களின் பதாகைகளில் எங் கும் இடம் பெறவில்லை. பட்டினிப் போராட்டம் நடத்தப்பட்ட மேடை அருகே இட ஒதுக்கீட்டை ரத்து செய், லஞ்ச ஊழலை ஒழி என்று ஒலி முழக்கங் களை இந்த இயக்க ஆதரவாளர்கள் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இந்த போராட்ட களத்திற்கு வந்திருந்த தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள், ஒடுக்கப் பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது இந் தப் இயக்கம் என்ற உண் மையை உணர்ந்து மனம் வெறுத்துத் திரும்பிச் சென்றனர்.
லோக்பால் வரைவுக் குழுவிலும் ஒடுக்கப்பட்டோர் இடம் பெறாதது ஏன்?
அது மட்டுமல்ல. லோக்பால் வரைவு மசோதாவைத் தயாரிக்கும் கூட்டுக் குழு நியமனம் செய்யப்பட்டபோது, இதற்காக சிவில் சமூகத்திலிருந்து அய்ந்து உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் அவர்களில் ஒருவர் கூட தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மத சிறுபான்மைப் பிரிவு மக்களைச் சேர்ந்தவர் இல்லை; அவர்களில் பெண் ஒருவரும் இல்லை. இதற்கு எதிராக நாடெங்கிலும் இருந்த தாழ்த்தப் பட்ட பிரிவு மக்கள் தலைவர்கள் குரல் எழுப்பியபோது, சட்டங்கள் இயற்றுவதற்கு தனித் தகுதி பெற்றவர்கள் தேவை என்று லஞ்ச ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பின் தலைவரான அர்விந்த் கேஜ்ரிவால் பதிலளித்தார்.
அப்படியானால் 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசமைப்புச் சட்ட மசோதாவைத் தயாரிக்கும் குழுவின் தலைவராக பாபாசாகிப் அம்பேத்கர் என்ற தாழ்த்தப்பட்ட ஒருவர் இருந்தபோது, ஒரே ஒரு சட்டவரைவைத் தயாரிக்கும் குழுவில் இடம் பெறதகுதி படைத்த ஒரே ஒரு தாழ்த்தப்பட்டவர் இன்று கிடைக்காமல் போய்விட்டாரா என்பதை வலியுறுத்தி தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள் கேட்கமாட்டார்களா? உண்மையைக் கூறவேண்டுமானால், தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களின் தகுதிகள், திறமைகளைப் பற்றி கேள்விகள்தான் இங்கும் எழுப்பப்பட்டன.
தனியார்த்துறைகளிலும் இடஒதுக்கீடு பற்றிய கருத்து என்ன?
இத்தகைய அவமதிப்புக்கு எதிராக தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, அரசே தாழ்த்தப்பட்ட பிரிவு உறுப்பினர் ஒருவரை நியமிக்கட் டுமே என்று கேஜ்ரிவால் சுலபமாக பதில் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
வேறு சொற்களில் கூறுவதானால், வேகமாக வாய்ப்புகள் சுருங்கி வரும் அரசுத் துறைகளில் வேண்டுமானால் இட ஒதுக்கீட்டு முறை நடைமுறைப்படுத் தப்படுமே அன்றி, தனியார் துறையிலோ அல்லது ஒட்டு மொத்த இந்திய சமூகத்தின் பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்ளும் சிவில் சமூகத்திலோ நிச்சயமாக இட ஒதுக்கீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படப் போவதில்லை. அப்படியிருக்கும்போது, இந்த லஞ்ச ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற போர்வையில் இட ஒதுக்கீட்டு நடைமுறைக்கு எதிரான இயக்கம்தான் என்று தாழ்த்தப் பட்டபிரிவு மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் இந்த இயக்கத்தின் செயல்பாடுகளில் இருந்து விலகி இருக்கிறார்கள் என்பது வியப் பளிக்கக்கூடியதல்ல. சில தனிப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதி உதவி யுடன் செயல்படும் இந்த இயக்கத்திற்கு தலைமை தாங்கும் அன்னா குழு ஒடுக்கப் பட்ட பிரிவு மக்களுக்கு தனியார் துறை களில் இட ஒதுக்கீடு அளிப்பது என்ற பிரச்சினையில் தங்களின் நிலை என்ன என்று சொல்ல முன்வருவார்களா? அன்னாவின் சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களின் நிலை என்ன? ஸ்வராஜ்யம் வாழ்க என்ற பெயரிலான வர்ண ஜாதி நடைமுறையை ஆதரிப்பவர் அல்லவா அன்னா? அன்னாதான் இந்தியா. அன்னாவுடன் இல்லாதவர்கள் திருடர்கள். லஞ்ச ஊழலுக்கு ஆணிவேர் இட ஒதுக் கீட்டு முறைதான் என்ற ஒலி முழக்கங்கள் மூலம் கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு தெரிவிக்கப்படும் செய்தி என்ன?
தாழ்த்தப்பட்டவர்கள் தாக்கப்பட்டபோது எங்கே போனார்கள்?
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மதசிறு பான்மை மக்களுக்கு எதிராக விலங் காண்டித்தனமாக கொடுமைகள் இழைக் கப்பட்டபோது அன்னாவும், அவரது ஆதரவாளர்களும் இது போன்றதொரு பட்டினிப் போராட்டத்தை மேற்கொள்ள ஏன் முன்வரவில்லை? ஹசாரேயின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவின் ஒரு மூலையில் இருக்கும் கரிலாஞ்சி என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டபோது, மகா ராஷ்டிர மாநிலத்திலும், வெளிமாநிலங்களி லும் தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும் அளவி லான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்திய போது, இத்தகைய போராட்டத்தினை மேற் கொள்ள அன்னா ஏன் முன்வரவில்லை? அடக்கு முறைக்கு எதிராக பழங்குடி மக்கள்போராடியபோது, சால்வா ஜுடும் என்ற போர்வையில் பழங்குடியினரை நக்சலைட்டுகள் என்று முத்திரை குத்தி, அந்தப் போராட்டத்தை அரசாங்கம் அடக்கியபோது அன்னா ஏன் போராட முன்வரவில்லை? கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மத சிறு பான்மை பிரிவு மக்களை அன்றாடம் துன்புறுத்தி வரும் அநீதி பற்றியோ, அடக்குமுறை பற்றியோ அன்னாவும், அவரது குழுவுக்கும் சிறிதும் கவலை இல்லை என்பதை இவை சுட்டிக் காட்ட வில்லையா?
ஆயிரக்கணக்கான அப்பாவி மக் களைக் கொன்று குவித்த நரேந்திர மோடியைப் பாராட்டியதன் மூலம், மதவாதம் மற்றும் பாசிசம் என்பவைகளை எதிர்த்துப் போராடுவதில் தனக்கு ஆர்வ மில்லை என்பதை அன்னா தெளிவாகக் காட்டியிருக்கிறார். அவரது சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் ஆயிரக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னா பட்டினிப் போராட்டத்தை மேற் கொள்ளவில்லை. இவைகளை எல்லாம் பார்க்கும்போது, தாழ்த்தப்பட்ட, பழங் குடியின, மதசிறுபான்மை பிரிவு மக்க ளுக்கு அன்னாவின் இயக்கத்தில் சிறிதும் ஆர்வம் இல்லை என்பதைக் காண்பது வியப்பு அளிக்கக்கூடியதல்ல.
எல்லாவற்றிற்கும் மேலான அதிகார அமைப்பா?
அன்னாவின் குழு மற்றும் அதன் கோரிக்கைகள் பற்றி ஒடுக்கப்பட்ட ஜாதி மக்கள் வெறுப்பு அடைந்திருப்பதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கிறது. அன்னா குழு கோரும் லோக்பால் புகார்களை விசா ரிப்பது, குற்றங்களை புலன் விசாரணை செய்வது, கைது செய்வது, தொலைப் பேசிகளை ஒட்டுக் கேட்பது, ஈ.மெயில்கள், எஸ்எம்எஸ் செய்திகளை இடைமறித்துப் பெறுவது, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவது என்பது போன்ற பல்வகை யான அதிகாரங்களையும் கொண்ட அதிகாரம் மிகுந்த அமைப்பாகும். அளவற்ற அதிகாரம் கொண்ட இந்த அமைப்பு, சட்டமன்றம், நிருவாகம் மற்றும் நீதித் துறைகளை விட உயர் அதிகாரம் கொண் டது. அரசின் மூன்று பிரிவுகளான சட்ட மன்றம், நிருவாகம், நீதித்துறை ஆகியவற்றின்அதிகாரப் பகிர்வு பற்றி நமது அரசமைப்புச் சட்டம் பேசுகிறது. ஆனால், அன்னா குழு கோரும் லோக்பால் இந்தக் கட்ட மைப்பைச் சீரழித்து, தன்னையே இந்த மற்ற அரசமைப்புச் சட்ட அமைப்பு களுக்கும் மேலானதாக திணித்துக் கொள்கிறது. கிராம அளவிலான அதிகாரி முதல் பிரதமர் வரை, அனைவரும் லோக் பாலுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்ட வர்கள். ஆனால் இந்த லோக்பால் அமைப்பினர் மட்டும் யாருக்குமே பதில் சொல்லக் கடமைப் பட்டிராதவர்கள். அன்னாவின் லஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்ற போர்வையில், இந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையும், சட்டப் பிரிவுகளையும் தள்ளி வைத்துவிட்டு, ஜனநாயகத்தைக் கைவிட்டு விடச் செய்ய ஒரு கலவரக் கும்பல் முனைந்திருக்கிறது.
சிறுபிரிவினரின் குரலே!
இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக பாபாசாகிப் அம்பேத் கர் இருந்தார். எனவே தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களுக்கு அரசமைப்புச் சட்டத்தின் மீது உணர்வு பூர்வமான ஒரு பற்று இருக்கிறது. அத்தகைய அரசமைப்புச் சட்டத்துக்கும் மேலாக ஒரு அமைப்பு தன்னை நிலை நிறுத்திக் கொண்டு, அரசமைப்புச் சட்டத் தின் முக்கிய தூணான ஜனநாயகத் துக்கே சவால் விடுக்குமேயானால், அத்தகைய முயற்சிக்கு ஆதரவு அளிக்க தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள் மறுக்கவே செய்வார்கள். அன்னாவின் இயக்கம் பற்றி தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களும் மற்ற ஒடுக்கப்பட்ட ஜாதி குழுக்களும் ஆர்வமோ, அக்கறையோ இல்லாமல் அலட்சியமாக, புறக்கணிப்பவர்களாக உள்ளனர். இதன் காரணமாக, ஒட்டு மொத்த இந்தியாவின் பிரதிநிதிகள் என்று அன்னா இயக்கம் கோருவது உண்மையானது அல்ல. ஆங்கிலம் பேசும், நடுத்தரப் பிரிவு, சவர்ன இந்து சிறுபான்மை என்னும் ஒரு சிறு பிரிவின் குரலாக வேண்டுமானால் அதனைக் கருதிக் கொள்ளலாம்.
(பன்வார் மேக்வன்ஷி ராஜஸ்தான் மாநில பில்வாராவில் உள்ளஒரு பிரபல சமூகத் தொண்டர். சமூக அடித்தளப் பிரச்சினைகளைப் பற்றி கையாளும் இந்தி மாத பத்திரிகை ஒன்றின் ஆசிரியராக இவர் உள்ளார்)
(தமிழில்: த.க.பாலகிருட்டிணன்)
No comments:
Post a Comment