Tuesday, May 3, 2011

விரயம் செய்யாத - வீணாக்காத வாழ்வே வெற்றி வாழ்வு!


எனது இனிய மருத்துவ நண்பர் ஒருவர் முக்கியமான சுவையான அரிய தகவல்களையெல்லாம் எனக்கு இணையத்தில் வருவதை மின் அஞ்சலின் மூலம் அனுப்பி மகிழ்வார்.

அப்படி அவருக்கு வேறு ஒரு நண்பர் அனுப்பிய அருமையான ஒரு தகவல் இது!

மிகவும் தொழில் துறையில் முன்னேறிய நாடு ஜெர்மனி  -அனைவரும் அறிவோம்!

- பென்ஸ், பி.எம். டபுள்யூ போன்ற விலை உயர்ந்த கார்கள், சீமென்ஸ் மின் பொருள்கள் உற்பத்திக் கூடம் - அணுத்துறையில் (The Nuclear Reactor pump) ஒழுங்குபடுத்தும்  பம்ப் போன்றவைகளை சிறு நகரங்களில் மிகவும் சாதாரணமாகச் செய்து விடும் ஆற்றல் பெருகிய நாடு.

அப்படிப்பட்ட நாட்டில் மிகவும் ஆடம்பரம் கொழித்து  இருக்கும் என்றுதான் பலரும் எண்ணுவோம்.

ஆனால், அந்த மக்களிடம் உள்ள உழைப்பு, நாணயம், மட்டும் முக்கிய மல்ல; சிக்கனம், ஆடம்பரமின்மை இவைபற்றி அறியும்போது இன்ப அதிர்ச்சியாகிறது!

ஹாம்பர்க் என்பது ஒரு துறைமுக நகரம். அங்கே பணியாற்றிய அவரது நண்பர், முதன்முறையாகச் சென்ற இவருக்கு ஒரு வரவேற்பு விருந்து என்று ஏற்பாடு செய்து, ஒரு உணவு விடுதிக்கு அழைத்துச் சென்று ஒரு மேசை அருகே உட்கார வைத்தார். நடந்து செல்லும்போது பல மேசைகள் காலியாக இருந்தன! ஒரு மேசை முன்பு ஒரு இளம் வாழ்விணையர்கள் இருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

இரண்டே அயிட்டங்கள் (Dishes) - இரண்டு குவளை - பீர் குடம் இவை அங்கே இருந்தன.

இவ்வளவு எளிமையாக உள்ள விருந்தா இவர்களுக்கு? கிளுகிளுப்பை ஊட்டு கிறது என்று வியந்தேன்! இந்த கஞ்சப்பயல் கணவனோடு இந்தப் பெண் எவ்வளவு நாள் வாழப் போகிறாள்? என்று எனக்குள் ஓர் அசட்டுத்தனமான, ஆணவம் கலந்த தன் முனைப்புச் சிந்தனை!

அதற்கடுத்து மற்றொரு மேசையில் வயதான மூத்த இரண்டு கிழத் தாய்மார்கள் - அவர்களுக்கு உணவு வந்து பரிமாறப்பட்டது. அவ்விருவரும் தங்கள் தட்டுகளில் ஒரு சிறு பருக்கையைக்கூட விடாது, பிளேட்டையே துடைத்ததைப் போல சாப்பிட்டு முடித்து விட்டதைப் பார்த்தேன்.

நாங்கள் அவர்கள் பால் அதிக கவனஞ் செலுத்தாமல் நாங்கள் ஆர்டர் செய்த உணவு வகைகளைக் கொண்டு வரச் சொல்லி பசியடங்க உண்டோம். அந்த உணவு விடுதியில் கூட்டம் அதிகம் இல்லாததால், உடனுக்குடன் உணவு வகைகள் எங்களுக்குப் பரிமாறப்பட்டன - எவ்வித காலதாமதமும் இன்றி!

சாப்பிட்டு முடித்துவிட்டு நாங்கள் எழுந்தோம் - எங்கள் மேசையில் மூன்றில் ஒரு பங்கு உணவு எங்களால் சாப்பிட முடியாமல் அப்படியே விடப்பட்ட நிலையில், நாங்கள் எழுந்து பில் கொடுத்துவிட்டு வர முயன்றபோது, திடீரென்று எங்களை யாரோ கூப்பிட்டார்கள். அந்த  வயதான இரு மூதாட்டிகள் வந்து, எங்களை அந்த முதலாளியிடம் அழைத்துச் சென்று, நாங்கள் மேசையில் மூன்றில் ஒருபங்கு உணவை சாப்பிடாமல் வீணாக்கி அப்படியே  விரயம் செய்து விட்டுச் செல்லுவதற்கு அதிருப்தியையும் எதிர்ப்பையும், வருத்ததையும் தெரிவித்தனர்!

முதலாளி ஆங்கிலம் தெரிந்து எங்களி டம் இவர்கள் கூறிய குற்றச்சாற்றினைக் கூறி, ஏன் உணவை இப்படி விரயம் செய்தீர்கள்? என்று மென்மை யாகக் கேட்டார்.

எனக்கு - எங்களுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது!

உடனே, நாங்கள்தான் சாப்பிட்ட உணவு வகைகளுக்கு - ஆர்டர் செய்தவைகளுக்கு - பில் கட்டணம் முழுமையாகச் செலுத்தி விட்டோமே, அதுபற்றி நீங்கள் ஏன் கவலைப்பட்டு இப்படி கேள்வி, கேட் கிறீர்கள்? எங்கள் உரிமை அது என்று நம்மூரில் பேசுவதுபோலப் பேசினோம்!

அந்த வயதான மூதாட்டிகளுக்குக் கோபம் வந்து, உடனே யாருக்கோ தொலைபேசியில் பேசினார்கள்!

சில மணித்துளிகளில் சீருடையில் இருந்த ஒரு சமூக நல அமைப்பின் பொறுப்பாளர் ஒருவர்  (Social security - organiser) வந்துவிட்டார் -  உடனே எங்க ளுக்கு இந்த விரயம் - பொறுப்பின்மைக்கு 50 மார்க் அபராதம் (ஒரு மார்க் என்பது ரூ.65.49) சுமார் ரூ.3300 ரசீது கொடுத்து கட்டி விட்டுப் போகச் சொன்னார்.  

உள்ளூரில் வேலை பார்க்கும் - விருந்துக்கு அழைத்துப் போன எனது நண்பர் பேசாமல் 50 மார்க் அபராதத் தொகையைக் கட்டி விட்டு அந்த அதிகாரியிடம் மன்னிப்புக் கோரினார்!

கடுமையான குரலில் அந்த அதிகாரி சொன்னார், எப்போதும் உங்கள் தேவைக்கேற்ப ஆர்டர் செய் யுங்கள் - பணம் உங்களுடையதாக இருக்கலாம்; ஆனால் அந்த உணவுப் பண்டங்கள் இந்நாட்டின் தேசியச் சொத்து; உலகம் பல பற்றாக் குறைகளைக் காணும் இக் கால கட்டத்தில் இப்படி விரயம் செய்வது பகுத்தறிவுக்கு முரண் அல்லவா? எனவே இனி எங்கும் இப்படிச் செய்யாதீர்கள் என்று அறிவுரை வழங்கி விட்டுச் சென்றார்; எங்கள் முகங்கள் சிவந்து விட்டன!

பணக்கார நாடான ஜெர்மனியில் இப்படி சிக்கன உணர்வு; விரயத்திற்கு எதிரான போர்; ஆனால் ஏழை நாடான நமது நாட்டில் எவ்வளவு விரயங்கள் - எவ்வளவு விருந்துகளில்! எண்ணிப் பார்த்த நண்பர்கள் இப்படி தகவலை இணையத்தில் தந்துள்ளனர்!

தந்தை பெரியார் அவர்கள் சாப்பிடும்போது ஒன்றையும் வீணாக்க, இலையில் வைத்து விட்டு எவரையும் எழுந்துவிட அனுமதிப்பதில்லை; கோபப்படுவார். உடன் செல்லுகிறவர் கள் வீணாக்க மாட்டார்கள்.

வளர்ச்சி, முன்னேற்றம், பொது ஒழுக்கச் சிந்தனை எப்படி பார்த் தீர்களா?

நம் நாட்டு விருந்துகளை நினைத் தால் எவ்வளவு வெட்கமாக உள்ளது?

எனவே எதையும் விரயமாக்காத வாழ்வே வெற்றி வாழ்க்கையாகும்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...