நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் மிக அற்புதமான கலை திரை ஓவியம் - கொள்கை லட்சிங்களை இளைஞர்களுக்குப் போதிக்கும் உணர்ச்சி பூர்வமான காவியம் ஒன்றை கலைஞரின் கைவண்ணம் - படைப்பாற்றல் மூலம் கண்டு மற்ற நண்பர்கள் தொல். திருமாவளன் (உடன்பார்த்தவர்களை) போலவே எல்லையற்ற மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அடைந்தேன்.
கலைஞரின் 75 ஆவது திரைக் காவியம்
நமது திராவிடர் பேரியக்கக் குடும்பத்தில் இன்றைய இணையற்ற தலைவரான கலைஞர் தம் 75 ஆவது திரைக் காவியம் இளைஞன் என்ற அந்தப் படம்!
புரட்சிகரமான சிந்தனைக்கு உலைக்கூடமாக ஊதி ஊதி உந்தப்படும் இளைஞன் கார்த்தி என்ற கதாபாத்திரம்தான் கதையின் முக்கியக் கருவி.
ஒரு கப்பல் கம்பெனி அதிபர் தெய்வநாயகம் (சரத்பாபு) நல்ல இதயம் படைத்தவர். அவரது ஒரே மகன் ராஜநாயகம் (சுமன்) ஒரு மனித இரக்கமற்ற கொடுமையாளன்; ஆடம் பரவாதி. அவனை ஆட்டிப்படைக்கும் ஒரு சாகசக்காரி சோனா (நமீதா) அந்தக் குடும்பத்திலும் ஒரு படித்த பண்பு மிகுந்த (ராஜ நாயகத்தின்) தங்கை (மீரா ஜாஸ்மின்) நியாயத்தின் பக்கம் நிற்கும் ஒரு பெண்.
கப்பல் கட்டும் தளத்தை தொழிலாளர்களுக்கு வாழ்வளிப்பதற்குப் பதிலாக, பணம் சம்பாதிக்கும் பேராசை காரணமாக, இந்த ராஜநாயகம் தன் தந்தையையே உதா சீனப்படுத்தி கொடுமையான முதலாளியாகி, தொழிலாளர்களைக் கொத்தடிமைகளை விடக் கேவலமாக நடத்தி வேலை வாங்குகிறார்; 8 மணி நேரம் 12 மணி நேர வேலையாகி, அது 16 மணி நேரமாகவும் ஆக்கிட உத்தரவிடுகிறான் வன்னெஞ்சினன் ஆனான்.
பழைய கால சமூகத்தின் முதலாளிகளின் கோரமுகம் இங்கே பளிச்சிடுகிறது.
கார்த்தியின் தந்தை (நாசர்) ஓர் ஏழைத் தொழிலாளி; அவனது தாயார் (குஷ்பு) அந்த ஏழையின் வாழ்வில் உள்ள ஒரு ஓட்டைக் குடிசை வாழ் ஒளிவிளக்கு! - அருமையான தாய்.
வறுமையை சுவாசிக்கும் அக் குடும்பத்தின் நிலையை அப்பட்ட மாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. வறுமை வாட்டினாலும் அத்தயை குடும்பங்களில் வாஞ்சைக்குப் பஞ்ச மேது? பாசத்துடன் உள்ள கார்த்தியின் குடும்பத்தில், பணிச்சுமை, அடி உதை சித்தரவதைக் கொடுமையின் வலியை மறக்க தினமும் குடித்துவிட்டு வரும் அந்த மூத்த தொழிலாளி தனது மனைவியை அடிக்கிறார்; (உழைப்பின் வலியையும் அவமானத்தையும் மறைக்க குடிதான் அந்த தொழிலாளி வர்க்கத்திற்கு மருந்து ஆகிறது!) முதலாளியின் கொடுமைகளைக் கொட்ட, அத்தகைய குடும்பங்களில் தயார் நிலை கொத்தடிமை, எதிர்த்து அடிக்கத் தெரியாத மனைவிகள்தானே - அது போன்ற ஒரு மனைவியாகத்தான் குஷ்பு இருக்கிறார்.
அந்தத் தாயும், தாய்-தந்தை படும் கஷ்டம் கார்த்தியை சிறுக சிறுகச் சிந்திக்கத் துண்டுகிறது. வெளிநாட்டு என்சினீயர் செய்யவேண்டிய திறன் படைத்த முக்கிய பணி - கொடி மரத்தைத் தூக்கி சரியான இடத்தில் வைக்கும் பணியை - அனுபவத்தில் முதிர்ந்த (கார்த்தியின்) தந்தையை செய்ய வைக்கிறான் ராஜநாயகம்; அந்த இடத்தில் முதலாளித்துவக் கொடுமை எப்படிப்பட்டது என்பதை கண்கள் கசிந்துருகி கண்ணீர் விடும் நிலையில், செய்தமைக்குப் பாராட்டுக்குப் பதில் கடுமையான தாக்குதல் அந்தத் தொழிலாளியின் மீது. ஏன் தெரியுமா? இந்தத் திறமையான பணி வெற்றியில் அவனுக்கு திமிர் ஏறிவிடக் கூடுமாம்! அதை ஆரம்பத்திலேயே அடக்கி ஒடுக்கி வைத்தால்தான் மற்ற தொழிலாளிகளும் வாயற்ற புழுப் பூச்சிகளாக இருப்பார்கள் என நினைத்து, அடித்துத் துவைக்க அவர் செத்துவிடுகிறார்!
சுயமரியாதைச் சூரியன்
கஞ்சியில் புழு, பூச்சிகள்- குடிக்க மறுத்தால் கடும் அடி உதை கங்காணி களால். முன்காலத் தேயிலைத் தோட்டத் துக் கங்காணிகளையே நல்லவர்களாக்கி விடும் அளவுக்கு கொடுமைக்காரர்களை, தொழிலாளர் கூட்டத்தினை ஏவுகணை களாக்கி, தாதாக்கள் போல அவர்கள், அத்தொழிலாளிகளை ஆலையிட்ட கரும்பாக பிழிந்து விடுகின்றனர். அடக்கு முறைகளும், ஒடுக்கு முறைகளும் எல்லோரையும் என்றென்றும் அடி பணிந்தே கிடக்க வைக்காது; அந்த இருளிலும் சுயமரியாதைச் சூரியன் விடியலைத்தர உதித்தே தீருவது இயற்கை விதிதானே!
அதன்படி இளம் தொழிலாளியாக கப்பல் கட்டச் சேர்ந்த கார்க்கி, கொடுமை கண்டு குமுறுகிறான் ; கைவல்லம் (டெல்லி கணேஷ்) போன்ற பாத்திரங்கள், இன்னும் இவர் போன்ற கொடுமையில் குமுறி அழுது காலம் கனியக் காத்திருக்கும் தொழிலாளியை மெல்ல மெல்ல, ஆனால் உறுதியாக விழிப்புணர்வுக் கதிரொளி பரவி காரிருளை விரட்டத் துவங்குகிறது.
புரட்சிதான் ஒரே வழி
இளைஞர்கள் என்ன செய்வது? எப்படி புரட்சிக்குப் பூபாளம் பாடுவது? ஆயுதப் புரட்சிதான் ஒரே இறுதி வழி, தகர்ப்போம். செய் அல்லது செத்துமடி என்பதாக முடிவு செய்து ஒரு இரகசியமாகக் குமுறும் ஒரு தொழிலாளர் பட்டாளத்தினைச் சேர்ந்த வீரர்கள் பற்றிக் கேள்வியுற்று அன்னை - மார்க்சிம் கார்க்கிய தாய் காவியம் போல், நல் அறிவுரை கூறி - உயிர் பலிகளைக் கொடுத்து இரத்த ஆறு ஓடவிட்டு, இதை சுடுகாடாக்குவதனால் எந்தப் பலனும் ஏற்படாது.
ஆயுதப் போர் இப்போது பலன் தராது என்று அறிவுரை கூறி, குழி தோண்டி பீரங்கிகளைப் புதைத்து வைக்கச் செய்து, தொழிலாளிகளால் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு, உணர்வு பூர்வ ஒற்றுமையைக் கட்டி, ஒரு புயலை மய்யம் கொள்ளச் செய்கிறார் அவனை. அந்தப் புயலுக்கு (ராஜநாயகத்தின் தங்கையும் பயன்படுகிறார்) பூவொன்று புயலுக்குத் துணையாக நிற்கிறது!
ஆணவம், அதிகாரம் பயன்படாத நேரத்தில் முதலாளி வர்க்கத்திற்குப் பயன்படும் ஆயுதம் நயவஞ்சக நர்த்தனம் தானே! அதையே ஒரு நாடகமாக்கி அரங்கேற்றுகிறார் ராஜநாயகம்.
அப்பாவி தொழிலாளி வர்க்கம், கார்த்தி - தாய் உட்பட அவர்களை ஜாலக்காரியின் கூற்றை உண்மை என்று நம்பி, உழைப்பை, உற்சாகத்தில் இரவு பகல் பாராது, பசி நோக்காது, கண் துஞ்சாது தனது கப்பலை குறித்த காலத்திற்குள் முடித்துத் தர கடும் உழைப்பை, வியர்வையை ரத்தம் சிந்தி தருகின்றனர்.
பிறகுதான் புரிகிறது அந்த சிரித்திட்ட ஓநாய் சைவமாகவில்லை; வேஷம் போட்டு, சூழ்ச்சிப் பொறியை கண்ணிவெடியாக்கி சிக்க வைத்தது என்பது. அப்போது இந்தத் தாய் அந்த மகனுக்கும் தொழி லாளர்களுக்கும் இனி இதோபதேசம் பயன்படாது. எடு கருவியை தொடு போரை எனக் கூறி போராட்டம் வெடித் துக் கிளம்பி தொழிலாளர்களின் வெற்றி யால் சூழ்ச்சி முறியடிக்கப் படுகிறது!
கொடுமைக்காரர் ராஜநாயகம் என்ற நல்ல பாம்பு - சாகடிக்கப்படுகிறது. அதன் கோர நஞ்சுக்கு அவன் தந்தையே கூட இரையானவர்தானே!
பல்லாயிரக்கணக்கான தொழி லாளர்கள் கூடிடும் கப்பல் கட்டும் தளம்; கொடுமை கோலோச்சிய தளம் அது என்பதை சித்திரிப்பது; சண்டைகள் - குதிரைகளின் குளம்படிச் சத்தமும் கோர ஒலிகளும், மனித உயிர்கள் புழு பூச்சிக் களாக ஆக்கிடுவது போன்ற காட்சிகள், ஆங்கிலப் படத்தை நாம் பார்க்கிறோமோ என்ற உணர்வைத்தான் உருவாக்குகிறது. (Lawrence of Arabia) லாரன்ஸ் ஆஃப் அராபியா படம் பார்த்துள்ளேன். பல படங்களின் காட்சிகளை வெல்லுவதாக அமைந்திருக்கும் இப்படக் காட்சி, இயக்குநர் முதலியவர்களின் திறமை தான். (கவிஞர் வாலி இது பென்ஹர் படம் போல எடுக்கப்பட்டுள்ளது என்றார்)
நறுக்குத் தெறிக்கும் வசனங்கள்
கலைஞர் அமைத்த காட்சிகள் - கதையமைப்பு - பேச்சுகள் - எல்லாம் - வசனங்கள் நறுக்குத் தெறித்தவைகளாக - நகைச்சுவை மின்னல்களைக் கொண்டதாக உள்ளன! நாசர் தன் மனைவியை (குஷ்பு) அறைந்து 32 பல்லையும் பேர்த்துடுவேன் என்றவுடன், அமைதியாக குஷ்பு எனக்கு 32 இல்லையே1 பல் முன்னேயே விழுந்துவிட்டது. 31 தாங்க இருக்குது என்ற போது நம்மை அறியாமல் சிரிக்கிறோம்.
பா.விஜய் மூலம் கனல் தெறிக்கும் வசனங்கள், பழைய மனோகராவை நினைவூட்டு கின்றன! தமிழன் அடிமையாக மாட்டான் - சுயமரியாதையை விட்டுக் கொடுக்க முடியுமா - மானமும் அறிவும்தான் எங்களுக்கு உயிரினும் முக்கியம் என்பதை வலியுறுத்தும்போது (இதே கருத்து பாடல்களிலும், நீயே, நானே என்று கூட்டு முயற்சி எழுச்சிப்பாடல் நரம்புகளைப் புடைக்க வைக்கின்றன.)
நீ என்ன பத்து தலை இராவணன் என்ற நினைப்போ என்று ராஜநாயகம் கேட்கும்போது, அதைச் சொல்லி நீ பெருமை தேடிக் கொள்ள முயல் கிறாயோ? என்று திருப்பிக் கேட்டு இராவணனின் பெருமையை தனது வசனத்தில் பளிச்சிடச் செய்கிறார் மானமிகு சுயமரியாதைக்காரர் நமது முதல்வர் கலைஞர்!
காட்சிகள் மிகவும் பிரம்மாண்ட மானதாகவும், விறுவிறுப்பும் வேகமாக வும் ஓடுகின்றன. இடைவேளைக்குப் பின் மேலும் விரைவாகச் செல்கின்றன.
நகைச்சுவைக் காட்சிகள்
நகைச்சுவைக் காட்சிகள் வடிவேலு, முத்திரையுடன் உள்ளன. குறிப்பாக அவர் கனவுக் காட்சியில் வர்ணிக்கும் முறை நினைத்தாலே சிரிப்பு பொங்கு கின்றது. கருணாஸ், மற்றும் மணி வண்ணன், சரத்பாபு, தியாகு, டெல்லி கணேஷ், ஒய்.ஜி.மகேந்திரன் , வில்லன் ராஜேந்திரன் முதல் நடிகைகள் மீரா ஜாஸ்மின், ரம்யா நம்பீசன்,நமீதா ஆகியவர்களின் நடிப்பு வரை படத்திற்கு சிறப்பூட்டுகிறது.
வித்தகக் கவிஞர் என்று கலைஞர் அவர்களால் பட்டம் சூட்டப்பட்ட வீரவசனம் பேசி துடிப்புடன் கலை ஞரின் வசனங்களை முழங்கி இளைஞனாக ஆக்கிக் காட்டியுள்ள - பா. விஜய் ஆற்றல் பளிச்சிடுகின்றது. நடிப்பாலும் வெற்றி பெற்றுள்ளார்!
இளைஞர்கள் இப்படத்தைப் பார்த்தால் நல்லதொரு லட்சிய உணர் வினைப் பெறுவார்கள் என்பது நிச்சயம்.
கலை மக்களுக்கே!
கலை கலைக்காக என்பதை மாற்றியவர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர். கலை மக்களுக்காக, சமுதாயத்தின் எழுச்சிக்காக, ஏற்றத்திற்காக, மாற்றத்திற்காக என்ற மகத்தான செய்தி (Message இளைஞன் படத்தின் மூலம் இந்த 87 வயது இளை ஞரால் விசை ஒடிந்த தேகத்தில் வன்மை ஏற்படுத்தி, வீழ்ச்சியுள்ள தமிழகத்தை எழுச்சி பெறச் செய்யும் அற்புதமான கலைப் படைப்பு -அருமையான சாதனை!
மார்ட்டின் பிச்சர்ஸின் இந்தப் படத்தை குடும்பத்துடன் கண்டு மகிழலாம். ஆபாசமோ, அருவருப்போ, முகம் சுளிக்கும் காட்சிகளோ இடம் பெறாத ஒரு நல்ல திரைப்படம். இளைஞர்கள் நல்ல செய்தியோடு திரும்புவர் என்பது உறுதி.
- கி. வீரமணி - "விடுதலை" 20-1-2011
பெண் சாமியார் சாத்வி பிராச்சியின் கொலைவெறி பேச்சு
முஸ்லீம்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் - பஞ்சாயத்தில் முடிவாம்
கிறிஸ்தவ மதத்திலும் ஜாதி வேறுபாடா?
இன்னும் எத்தனை இளவரசன்கள் தேவை?
அறிவோம் சட்டம் (1) : தகவல் அறியும் உரிமைச் சட்டம்
பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்
தமிழ்நாட்டிலும் விநாயகர் ஊர்வலங்களுக்குத் தடை வருமா?
யோகா - மூச்சுப் பயிற்சி - கி. வீரமணி
சூத்திரர் வரிப் பணம் பிராமண மொழிக்கா?
விடுதலைப்புலிகள்மீது தொடர்ந்து பழி சுமத்தி வருபவர் செல்வி ஜெ. ஜெயலலிதா
No comments:
Post a Comment