Tuesday, December 28, 2010

அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்பதுபோல் நடப்பதுதான் பத்திரிகை தர்மமா?




நாடாளுமன்றத்தில் விவாதிக்க முன்வராமல்  நாடாளுமன்றத்தை முடக்குவதுதான் ஜனநாயகமா - வீரமா?  அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்பதுபோல் நடப்பதுதான் பத்திரிகை தர்மமா?

ஊழல் பிரச்சினையானாலும், வேறு எந்தப் பிரச்சினையானாலும் நாடாளு மன்றத்தில் விவாதிக்க முன்வரவேண்டும் - அதற்காகத்தான் மக்கள் வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். அதனை மறந்துவிட்டு, அவையை நடக்கவிடாமல் செய்வது எந்த வகை ஜனநாயகம் என்ற வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:

நம் நாட்டில் ஜனநாயகம் அசல் கேலிக் கூத்தாக்கப்படுகிறது - இதற்கு முக்கிய காரணம் எதிர்க்கட்சிகளேயாகும்.

கூடி விவாதிக்க வேண்டிய மன்றம் கூச்சல், குழப்பம் அன்றாடம் அரங்கேற்றப் பட்டு, ஒத்தி வைப்பு என்பது ஒரு தொடர் கதை மன்றமாகி, வாக்களித்த மக்களை ஒன்றும் தெரியாத மண்ணாங்கட்டிகள் என்றும் கருதிக் கொண்டு சந்தைக் களேபரம் நடைபெறுகிறது!
விவாதிக்க வரத் தயங்குவது ஏன்?
பொது ஒழுக்கம் விடைபெற்றுச் செல்வதைக் கண்டு நாகரிகம் புரிந்தோர் எள்ளி நகையாடும் வேதனை அன்றாட அவலமாகி வருகிறது!

ஊழல், ஊழலோ ஊழல் என்று நடக்காத ஒன்றை, வெறும் கனவுக் கணக்குக் காட்டியே பாமரர்கள்முதல் படித்தவர்கள் வரை பலரையும் திகைக்க வைக்கும் தீராதி தீர, சூராதி சூர எதிர்க்கட்சிகள் நியாயமாக செய்யவேண்டியது என்ன?

ஆளுங்கட்சி கூட்டணி எந்த விவகாரத்தைப்பற்றியும், 2ஜி ஸ்பெக்ட்ரம் உள்பட அவையில் வெளிப்படையாக விவாதிக்கத் தயார் என்று கூறி, அவைக்கு வாருங்கள்; புறக்கணிக்காதீர்கள், அவையை நடத்தி அதில் ஆரோக்கியம் மிக்க விவாதங்களை நடத்துவோம் வாரீர், எந்தப் பிரச்சினையை வேண்டுமானாலும் எழுப்புங்கள், பதில் அளிக்கிறோம் என்று நான்கு முறை எதிர்க்கட்சிகளிடம் அவை முன்னவர் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி திரும்பத் திரும்ப வேண்டுகோள் மேல் வேண்டுகோள் விடுத்தும் எந்தப் பலனும் ஏற்படவில்லையே! தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்றே சாதிக்கின்றனர் எதிர்க்கட்சியினர்.

குறுக்குவழியில் ஆட்சியைப் பிடிக்கும் தந்திரம்

ஏற்கெனவே ஜே.பி.சி. (J.P.C.) என்ற நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை மூன்று, நான்கு முறை நடந்தும் காதொடிந்த ஊசியளவும் பலன் இல்லாதபோது, இப்படி பிடிவாதமாக ஒரு கோரிக்கையை எதிர்க்கட்சிகள் வைப்பதன் நோக்கம் என்ன தெரியுமா?

5 ஆண்டுகாலத்திற்கு அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு (UPA) நாட்டு மக்கள் வாக்களித்து அனுப்பியுள்ளதில், ஒரு ஆண்டுதான் கழிந்திருக்கிறது; எஞ்சிய நான்கு ஆண்டுகளுக்குள் குறுக்கு வழியில் இந்த அரசை பதவி விலகச் செய்ய - இந்தக் கூட்டுக் குழு தங்களுக்கு ஒரு கருவி, கரணாதியாகப் பயன்படாதா என்பதுதான் அந்த நப்பாசைகளால் நாளும் இப்படி கூச்சல், குழப்பம்!

கடந்த 2009 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று எதிர்க்கட்சியினர் பிரச்சாரம் செய்து பார்த்தனரே! அதையும் மீறி - அதனைப் பொருட்படுத்தாது மக்கள் அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவளித் தனர்.

தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் உள்ள கூட்டணி வெற்றி பெற்றதே! அமைச்சர் திரு. பன்சால் அவர்கள் குறிப்பிட்டுள்ளதுபோல், பா.ஜ.க.வை இயக்குவது எப்போதும் ஆர்.எஸ்.எஸ். என்ற மதவாத அமைப்புதான் என்பது உலகறிந்த உண்மை.

இப்போதும் அதுதான் பா.ஜ.க.வுக்கு சாவி கொடுத்து இப்படி நாடாளுமன்றத்தை 13 நாள்களாக முடக்கும்படி செய்கிறது!

இடதுசாரிகளாவது சிந்திக்கவேண்டாமா?

இடதுசாரி கட்சிகளாவது தங்களது ஜனநாயகக் கடமைகளை நாடாளுமன்ற விவாதத்தில், ஆணித் தரமாக உண்மைகளைக் கூறுவோம் என்று சொல்லி, அவை நடத்த ஒத்துழைப்புத் தர முன்வந்திருக்க வேண்டும். இரண்டு மாநிலங்களில் ஆளுங்கட்சி கூட்டணியாக உள்ள அவர்களது ஆட்சிக்கு இப்படி ஒரு நிலை வந்தால் என்ன பேசியிருப்பார்கள்?

மேற்குவங்கம், கேரளா இங்கேயெல்லாம் அவையை இப்படி முடக்க எதிர்க்கட்சிகள் முயன்றால், வேடிக்கை பார்த்து இவ்வளவு பொறுமையுடன் நடந்துகொள்வர்களா?

ஆர்.எஸ்.எஸ். நாளேடான தினமணி போன்ற பூணூல் ஏடுகள், மடியில் கனம், வழியில் பயம் என்று உண்மையைத் தலைகீழாக்கி, ஒரு குலத்துக்கொரு நீதி பேசி தலையங்கங்கள் தீட்டுகின்றன!

விவாதிக்கத் தயார் என்பவர்களுக்கு பயமாம்! எப்படி இருக்கிறது நியாயம்!

அங்கே வராமல் ஓடி ஓடி கூச்சல் போட்டு, ஒத்தி வைத்து மக்கள் வரிப்பணத்தைக் கரியாக்கும் கட்சிகள் வீராதி வீரர்களாம்!

மகாபாரத பத்தினித் தர்மமும் -
இன்றைய பத்திரிகா தர்மமும்!

இது எப்படி இருக்கிறது தெரியுமா? அய்வருக்கும் தேவியாம். அழியாத பத்தினியாம் துரவுபதி எனும் மகாபாரத பத்தினித் தர்மத்தின் அண்ணன் இந்த பத்திரிகா தர்மம் என்பதை சராசரி அறிவுள்ள எவரும் புரிந்துகொள்ளுவர்.
அந்தோ ஜனநாயகமே! உன் கதி இப்படியா?

வெட்கம்! வேதனை!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...