Saturday, January 2, 2010

2011ஆம் ஆண்டே வருக!

2010ஆம் ஆண்டில் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள் போற்றத்தக்கவையே! அடுக்கடுக்கான மாநாடுகள் - அலை அலையாக வெளியீடுகள்! டில்லியில் பெரியார் மய்யம் திறப்பு மகத்தானது - அதன் வீச்சு இனி வருங்காலத்தில் பெரும் அளவில் இருக்கப் போகிறது.

தந்தை பெரியார் அவர்களின் தேவை உலகமெல்லாம் உணரப்படுகிறது. மதத்தின் மோதல்களுக்கிடையே மனிதம் சொல்லொண்ணாத் தீயில் கருகித் துடிக்கும் அவலம்!

இளம் குருத்துகளுக்கும்கூட மத வெறிப் பயிற்சியாம் - ஆயுதப் பயிற்சியாம்! இது எதில் போய் முடியும்?
இந்துத் தீவிரவாதம் பற்றி இந்தியாவின் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் இராகுல் காந்தியும் மனந் திறந்து சொல்லி விட்டார்களாம் - அப்படியே தாண்டிக் குதிக்கிறது இந்துத்துவா கும்பல்!

என்ன செய்வது? 1992 டிசம்பர் 6இல் - சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலத்தை பட்டப் பகலில் ஆயிரக்கணக்கில், பெரும் பெரும் தலைவர்களின் தலைமையில் அடித்து நொறுக்கினார்களே - அந்தக் கொடிய கூட்டத்தின்மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுத்து சிறைக்குள் தள்ளியிருந்தால், அந்தக் கும்பலும், அமைப்பும் இருந்த இடம் தெரியாமல் மண்ணுக்குள் புதையுண்டு போயிருக்கும்.

சாதாரண குற்றங்களா அவை? அவற்றைச் செய்தவர்களை எவ்வளவு கடுமையாகத் தண்டித்தாலும் மக்கள் இரு கரம் கூப்பி, கரவொலி எழுப்பி வரவேற்கவே செய்வார்கள்.

இந்த அடிப்படைக் கடமையை, சட்ட ரீதியான செயல்பாட்டை கோட்டை விட்டுவிட்டு காங்கிரஸ் கைபிசைந்து நிற்பது பரிதாபமே! இந்தக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் சட்டப்படி காலா காலத்துக்கும் தேர்தலில் நிற்கத் தகுதியற்றவர்கள் ஆகி விடுவார்களே!

இந்தக் குற்றவாளிகளைக் கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவை நாடு அனுபவித்துக் கொண்டு இருக்கிறது. குஜராத் - ஒரு மாநில அரசே முன்னின்று சிறுபான்மை மக்களை வேட்டையாடி முடித்தது.

இந்தியா முழுமையும் மதக் கலவரங்களும், குண்டு வெடிப்புகளும் இந்துத்துவா கும்பலின் திட்டமிட்ட சதிப் பின்னலில் நடந்திருக்கின்றன என்ற உண்மை புலனாய்வின் மூலம் வெளிச்சத்துக்கு வந்து விட்டது. இந்த இந்துத்துவா கும்பல் இராணுவம் வரை ஊடுருவியிருக்கிறது என்பது எத்தகைய பயங்கரம்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியா முழுமையும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது.
அதில் மதவெறித்தன பாடங்கள் என்ற நச்சு விதை மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் விதைக்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய அரசுக்குப் பொறுப்பு இல்லையா? மிதவாத இந்துத்துவா போல காங்கிரஸ் செயல்படுகிறது என்ற எண்ணம் சிறுபான்மை மக்கள் மத்தியிலும், மதச் சார்பற்றவர் களிடையேயும் நிலவி வருகிறது.

தமிழ்நாட்டில் இந்துத்துவா கும்பலின் வாலாட்டம் செல்லுபடியாகவில்லை என்றால் காரணம் - அதற்குத் தந்தை பெரியார் அவர்களும், அவர்கள் உருவாக்கி விட்டுச் சென்ற கழகமும் தலைமையும், ஏற்பாடுகளும்தான்.

உண்மையிலேயே மதத் தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டிய சிந்தனை ஆயுதம் தந்தை பெரியாரியலே! அகில இந்திய அளவில் பாடத் திட்டங்களில் தந்தை பெரியார் கருத்துகளை இடம் பெறச் செய்ய வேண்டும்; அவர்தம் பகுத்தறிவுக் கருத்துகளை மட்டுமல்ல; சமூக நீதி, பெண்ணியல் சிந்தனை மலர்களை இடம்பெறச் செய்ய வேண்டும். புத்தாண்டு பிறந்த ஒரு வார முடிவில் திருச்சியில் உலக நாத்திகர்கள் மாநாடு மூன்று நாள்கள் நடைபெற விருக்கின்றன. உலகமே தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கப் போகிறது.

மதமற்ற உலகம் என்ற ஒரு கருத்தியல் உலகத்திற்குத் தேவைப்படுகிறது. அதற்கான மாற்று மருந்து ((Alternative Culture)) நாத்திகமே என்பதை மக்களை உணர வைப்போம்.

மதம் மிருகங்களுக்குப் பிடிப்பதோடு நிறுத்தி (அதைக்கூட மனித நேயத்தோடு ஒழித்துக் கட்ட விலங்கியல் மருத்துவத்துறை ஆய்வில் ஈடுபட்டு வருகிறது) மனிதனை மதம் பிடிக்க வேண்டாம் - பிடிக்க விடக் கூடாது என்ற நோக்கில் நாத்திகக் கருத்துகளை நாடு முழுவதும் பரவிடச் செய்வோம்!பெரியார் தொலைக்காட்சி என்பது நமது இலட்சியம். அது ஈடேறும் வரை தனியார்த் தொலைக்காட்சியில் குறிப்பிட்ட நேரத்தைப் பெற்று, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிந்தனை ஒளியை நாடெங்கும் பாய்ச்சுவோம்.

யாருக்கோ வந்த விருந்து என்று பொது மக்கள் கருதிடக் கூடாது. திராவிடர் கழகம் எந்தவித பிரதிபலனையும் கிஞ்சிற்றும் எதிர் பார்க்காமல் தொண்டறப் பணியை தம் மேற் போட்டுக் கொண்டு செய்து வருகிறது. வீட்டுக்கொரு பிள்ளையை இந்த இயக்கத்துக்கு அனுப்புவீர்!

கழகப் பொறுப்பாளர்களே, கடந்த பல ஆண்டுகளையும் விஞ்சும் வகையில் கழகப் பணி - களப் பணிகள் நடக்கட்டும்! நடக்கட்டும்!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...