Thursday, September 7, 2017

மாநாடுகளில்- நீதிமன்றத்தில் - தேர்தல் பிரச்சாரத்தில் சமஸ்கிருதத்திலேயே பேச நீங்கள் தயார்தானா?


சமஸ்கிருதவாதிகளைப் பார்த்து தோழர் தா.பாண்டியன் கேள்வி


சென்னை, செப்.6-  மாநாடுகளில் - நீதிமன்றத்தில் - தேர்தல் பிரச்சாரத்தில் சமஸ்கிருதத்துக்காக வக்காலத்து வாங்குவோர் சமஸ்கிருத மொழியில் பேசத் தயார்தானா? என்ற வினாவை எழுப்பினார்  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தோழர் தா.பாண்டியன் அவர்கள்.
25.8.2017 அன்று சென்னை பெரியார் திடலிலுள்ள  நடிகவேள் எம்.ஆர்.இராதா அரங்கில் ‘‘இந்தி - சமஸ்கிருத திணிப்பு கண்டன மாநாட்டில்  இந்திய கம்யூனிஸ்டு   கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தோழர் தா.பாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு: நாடு முழுவதிலும் மக்களிடம் பேசவேண்டி இருக்கிறது
இம்மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர்  தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே,
நன்றியுரை பகர இருக்கிற இன்பக்கனி அவர்களே, குமாரதேவன் அவர்களே, பெரியோர்களே, காலம் கருதி நான் சுருக்கமாக சொல்ல விரும்புகிறேன். ஏனெனில், எனக்குமுன் உரையாற்றிய அத்துணை பேரும் நாம் எதற்காக இந்த மாநாட்டில் கூடியிருக்கிறோம் - இந்த எதிர்ப்பு ஏன் இப்பொழுது ஒருமுகப்படுத்தப்படுகிறது என்பதை தெளிவாக விளக்கிப் பேசியிருக்கிறார்கள். நான் மீண்டும் அதற்கொரு விளக்கவுரையாற்ற வேண்டிய அளவிற்கு அவசியமில்லை. அது இதற்குப் பிறகு நாடு முழுவதிலும் இங்கு வராத மக்களிடம் பேசவேண்டி இருக்கிறது.
ஏன் எதிர்க்கிறோம் இந்தி மொழித் திணிப்பை?
எனவே, இது அடுத்து நாம் நடத்தப்போகிற போராட் டத்திற்கான பிரகடன மாநாடு. எனவே, ஏன் எதிர்க்கிறோம் சமஸ்கிருதத்தை? ஏன் எதிர்க்கிறோம் இந்தி மொழித் திணிப்பை? என்பதைச் சொல்ல நான் விரும்பவில்லை.
1930 ஆம் ஆண்டிலிருந்தே இந்த தமிழ் மண்ணில், அறிவுள்ளவர்கள், தமிழ் பற்றுள்ளவர்கள் தொடர்ந்து போராடி வந்திருக்கிறார்கள்.
குள்ளநரி மிகக் குதூகலமாக வந்துகொண்டிருக்கிறது
இப்பொழுது நம்மை எதிர்க்கின்ற சக்தி முழு மூச்சாக மத்தியில் ஆட்சிக்கு வந்திருக்கிறது. அவன் ஒரு கொள் கைத் திணிப்பாக மட்டுமல்ல, அதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்கள் தந்த வரிப் பணத்தையும் செலவிட்டு, அதேநேரத்தில் தமிழ்நாட்டில் அல்லது வேறு மாநிலங்களில் காணப்படுகிற பலவீனத்தையும் பயன்படுத்தி, இதுதான் வேட்டையாடு வதற்கு நல்ல நேரம்; நாம் குடியேறுவதற்கு நல்ல நேரம் என்று குள்ளநரி மிகக் குதூகலமாக வந்துகொண்டிருக்கிறது.
நாம் ஒப்புக்கொண்டிருக்கிற இந்த தேர்தல் ஜனநாயக முறையில், ஒரு மூன்றாண்டு காலத்தைக் கழித்துவிட்டால், இன்னும் ஓர் இரண்டாண்டு காலம் இருக்கப் போகிறார்கள். அவர்கள் ஜனநாயகத்தை மதிக்கவில்லை என்றாலும், நாம் ஜனநாயகத்தை மதிக்கின்ற காரணத்தால், ஜனநாயக முறையிலேயே நம்முடைய எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றோம்.
நம்முடைய தேர்தல் முறைகளில் உள்ள பலவீனத்தின் காரணமாய்...
அவர் வாக்குக் கணக்குப்படி பெரும்பான்மை பெற்று இந்தியப் பிரதமர் ஆனவர் அல்ல. சரியான தேர்தல் கணக்குப்படி பார்த்தால், நம்முடைய தேர்தல் முறைகளில் உள்ள பலவீனத்தின் காரணமாய், குறைந்த வாக்குள்ள வர்களாக இருந்தாலும், அதிக இடங்களைக் கைப்பற்று கின்றபொழுது, சட்டமன்றங்களுக்குள், நாடாளுமன்றத் திலும் பெரும்பான்ம பெற்று பிரதமராக வந்துவிட்டார்.
உத்தரப்பிரதேசத்தில் இரண்டாம் முறை வெற்றி பெற்ற போதுகூட, 33 விழுக்காடு வாக்குகள்தான் பெற்றார். 67 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற நாம் தோற்றோம். வேறொன்றுமில்லை அதற்குக் காரணம் - நாம் நமக்குள் இருந்த சண்டையை கறாராக நடத்தினோம். முதல் எதிரி யார் என்பதைப் பார்க்காமல் சண்டை போட்டோம்.
இப்பொழுது இந்த மாநாடு நடத்தப்படுவதற்குள்ள காரணம், அந்த முதல் எதிரியை மறந்துவிட்டு, பக்கவாட்டில் சகோதர சண்டையில் தமிழா ஈடுபட்டு விடாதே, உத் தரப்பிரதேசம் போன்று ஏமாந்துவிடாதே என்பதற்காகத் தான் இந்த மாநாடு.
இங்கே தோழர் ராமகிருஷ்ணன் அவர்கள் சில விளக்கங்கள் கொடுத்தார்; நான் இப்பொழுது அந்த ஒப்புதல் வாக்குமூலங்களில் இறங்க விரும்பவில்லை.
இந்தியாவின் ஒருமைப்பாடு காப்பாற்றப்பட வேண்டும் என்று எங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்பிக்கப் பட்டது - தேசிய இயக்கங்கள் - அதிகமாக பொதுவுடைமை இயக்கம்.
மீண்டும் நாம் பிளவுபட்டு நின்றால், அடிமைப்பட்டு விடுவோம்
ஏன்? இந்தியா ஒன்றுபட்டு நிற்கவேண்டும்; பிளவு பட்டதால்தான் அடிமைப்பட்டது. எனவே, மீண்டும் நாம் பிளவுபட்டு நின்றால், அடிமைப்பட்டு விடுவோம் என்று தான் திராவிட நாடு என்ற கோரிக்கையை எதிர்த்தே, அநேகமாக ஒரு 30 ஆண்டுகாலம், நா தழும்பேற பேசிய வன்தான், இப்பொழுது இங்கே பேசிக் கொண்டிருக்கிறேன்.
அவர்களும் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், திராவிட நாடு பிரிவினையை கைவிடுகிறோம் என்று அறிவித்தார். பெருந்தன்மையோடு அறிஞர் அண்ணா அவர்கள் அறிவித்தபொழுதே சொன்னார், கோரிக்கையை நான் கைவிடுகிறேன்; ஆனால், அந்த திராவிட நாடு என்பதற்கு வற்புறுத்திய காரணங்கள், எதுவும் தீரவில்லை என்பதை நான் நினைவுபடுத்துகிறேன் என்றார்.
அவர் நினைவுபடுத்தினார்; அவர் சொன்னது, இன்றைக்கு நினைவுபடுத்தி இருக்கிறது.
எனவே, இப்பொழுது ஒற்றுமை என்ற பெயரால், மாநில உரிமைகள், மக்களுடைய கலாச்சார, பண்பாட்டு உணர் வுகள் அத்தனையையும் மிதிக்கத் தொடங்கியபொழுது, இப்பொழுது அடிக்கடி நான் தொலைக்காட்சிகளில் பார்க் கிறேன், காட்டெருமைகள் வீட்டிற்குள் நுழைந்துவிட்டது; யானைகள் வாழைத் தோட்டத்திற்குள் நுழைந்துவிட்டது என்று.
மொழி என்பது ஒரு கருவி
தமிழ்நாட்டிற்குள் என்ன நுழைந்து கொண்டிருக் கின்றன என்பதை தமிழன் தெரிந்துகொள்ளவேண்டாமா?  அவ னுக்கே தெரியும், அவன் பேசுகிற மொழி என்பது விஞ்ஞான ரீதியில், ஆக்ஸ்போர்டு டிக்ஷனரி கொடுக்கிற மொழி பெயர்ப்பில் க்ஷிமீலீவீநீறீமீ ஷீயீ ஜிலீஷீuரீலீt கருத்தை வெளியிடுகிற ஒரு கருவி - ஒரு சாதனம்.
அது ஒரு சாதனம் என்பது - இப்பொழுது மருத்துவத் துறைக்கு சில சாதனங்கள் வேண்டும்; போக்குவதற்திற்கு வாகனங்கள் என்ற சாதனங்கள் வேண்டும்; பறப்பதற்கு ஒரு சாதனம் வேண்டும்; கடலில் நீந்துவதற்கு ஒரு சாதனம்; தண்டவாளத்திற்குப் போவதற்கு ஒரு சாதனம். இப்படி சாதனங்கள் வேறுபடுகிறது அல்லவா! இப்பொழுது புதிய சாதனங்கள் வருகிறபொழுது, அதனை நாம் கடைபிடிக் கிறோம். பயன்படும் என்பதால். அது எந்த நாட்டில்  உருவாக்கப்பட்டது என்பதெல்லாம் பிறகு. அது பயன்படவேண்டும்.
இப்பொழுது அவன் சொல்கிறான், நீங்கள் தான் உலக வழக்கு அழிந்து ஒழிந்து, சிதையா உன் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே என்று இந்த ஆரிய மொழியைச் சொல்கிறீர்கள். ஆரிய மொழி உலக வழக்கில், அழிந்து ஒழிந்து - எவனும் பேசக் காணோம்.
ஆனால், பிள்ளையார் சதுர்த்தியான இன்று காலை நான்  வருகிறபொழுது, ஆங்காங்கே அது கத்திக் கொண்டிருக்கிறது.  நல்லவேளை அது என்ன சொல்கிறது என்று வைத்தவனுக்கே தெரியாது.
குண்டர்படைதான் ஆர்.எஸ்.எஸ்.
அதேபோன்று சில விளம்பரங்களையும் சென்னை மாநகரத்தில் பார்த்திருக்கலாம். குளோபல் சம்ஸ்கிருத் எஜுகேசன் இன்ஸ்டிடியூசன் என்று பெரிய அளவில் போட்டு, விரைவில் சேருங்கள் என்று விளம்பரம் செய்கிறார்கள்; பலர் அதில் படிக்கிறார்கள்; மேற்படியார் அந்தப் பள்ளிக்கூடத்தில் சேருகிறார்கள். அவர்கள்மீது எனக்குக் கோபமே இல்லை. ஏனென்றால், அவர்கள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், நன்னா பேசுவா; நம்முடைய சங்க கால இலக்கியங்கள், வள்ளுவர் எதுவுமே அவர்களின் நாக்குகள் போகாது. நன்றாகப் பேசுங்கள் - பாரதீய ஜனதா கட்சி - என்னைப் பொறுத்த வரையில், இதை எதிர்க்கிறேன், அதை எதிர்க்கிறேன் என்று ஒவ்வொன்றாக அடுக்கவில்லை.
பாரதீய ஜனதா கட்சியின் அடிப்படை கொள்கையே மனுஸ்மிருதி - வருணாசிரும தர்மம். அதற்காக தொண்டர் படை என்று சொல்லக்கூடிய குண்டர் படைதான் ஆர்.எஸ்.எஸ். இதை இப்பொழுது பரிமாறுவதற்கு சங் பரிவார்.
இப்பொழுது அவனுக்கு உலக பின்னணியும், பின் ஆதரவும் வந்திருக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்களும் பணம் கொடுத்து ஆதரிக்க வந்திருக்கிறார்கள்.
எனவே, ஏகாதிபத்தியம், கார்ப்பரேட் நிறுவனம், வகுப்புவாதம் இவை அத்தனையும் ஒரு பேயாக உரு வெடுத்து வந்திருப்பதுதான் பாரதீய ஜனதா கட்சி.
நான் சொல்வதற்கு முன்பே, நமக்குப் புரிவதற்காக அவர்களே சொல்லிவிட்டார்கள். கழகங்கள் இல்லாத தமிழகம். கவலை இல்லாத தமிழகம். இதைச் சொன்னதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. தாமரை பூக்கப் போகிறது - ஆளப் போகிறது.
தாமரை பூக்கும் என்று எவனாவது சொல்வானா?
அவர்களுக்குக் கண்கள் இருக்கிறதா? இல்லையா? என்று தெரியவில்லை. தமிழ்நாட்டு குளத்தைப் பார்த்து இப்பொழுது தாமரை பூக்கும் என்று எவனாவது சொல் வானா? ஆனால், துணிந்து சொல்கிறான்.
அவர்களுக்கு நாம் வைக்கின்ற ஒரே ஒரு வேண்டுகோள். நான் சமஸ்கிருதத்தையும் எதிர்க்கவில்லை, இந்தியையும் எதிர்க்கவில்லை, மேற்படியாளையும் எதிர்க்கவில்லை - ஏனென்றால், எனக்கு அதைப்பற்றி ஒன்றுமே தெரியாது. நான் ஆறு ஆண்டுகள் டில்லியில் என்னுடைய காலத்தைக் கெடுத்தேன் - நாடாளுமன்றத்தில் தெரியாத்தனமாக. அப்பொழுது நான் கற்றுக்கொண்டது இரண்டே இரண்டு வார்த்தைகள் தான் - ‘ஜாவ்’, ‘நஹி’ எவ்வளவு அருமையா சொற்கள் பார்த்தீர்களா?
அதைத்தான் இப்பொழுது இவர்களுக்கும் சொல்கி றேன். நஹி, ஜாவ். மூன்றாவது வார்த்தையை நான் படிக்கவேயில்லை. ஏனென்றால், எனக்கு அவ்வளவுதான் தெரியும். நீ என்ன பேசினாலும் எனக்குப் புரியாது. அந்த இரண்டு வார்த்தைகள்தான் எனக்குப் புரியும் - உனக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.
‘ஜாவ்’ என்று சொன்னால்தான் அவனுக்குப் புரியும்!
இதைச் சொல்வதற்காகத்தான் அந்த இரண்டு வார்த்தைகளையும்கூட படித்தேன். போடா என்று சொன்னால், அவனுக்குப் புரியாது. ஜாவ் என்று சொன்னால்தான் அவனுக்குப் புரியும்.
நீ இரண்டே இரண்டு காரியம் செய். இது கருத்தை வெளியிடுகிற கருவி.
இப்பொழுது சுஷ்மா சுவராஜ் சொல்லியிருக்கிறார், உலக அறிவே வரும்; நுண்ணறிவு வரும்; இந்தியா முன்னேறும் என்று.
தொடையில் கயிறு திரித்துவிடலாம் என்று நினைக்காதே!
இன்னும் என்னென்ன பஜனை பாட முடியுமோ பாடு. ஒரே ஒரு வேண்டுகோள், நீங்கள் வைக்கின்ற கடைகள் அத்தனையிலும் பெயர்ப் பலகைகளை சமஸ்கிருதத்தில் எழுது.
நீ நடத்துகிற மாநாடுகள் அத்தனையிலும், சமஸ் கிருதத்திலேயே பேசு.
நீதிமன்றத்திலும் நீ சமஸ்கிருதத்திலேயே வாதாடு
தேர்தல் பிரச்சாரத்திலும் மறக்காமல் சமஸ்கிருத்த திலேயே நடத்து.
உன்னை யாரும் தடுக்க முடியுமா? தாராளமாகப் பேசு; ஏன் பேச மாட்டேன் என்கிறாய்?
உன் சோன் பப்படியும் விக்காது. எனவே, நாங்கள் மீண்டும் தூங்குகிறோம், தொடையில் கயிறு திரித்து விடலாம் என்று நினைக்காதே! மற்றவர்கள் எல்லாம் ஏற்கெனவே மொழிப் போரில் போராடியிருக்கிறார்கள்.
நான் சுற்றிவளைத்துச் சொல்ல விரும்பவில்லை - இந்தி மொழி எதிர்ப்புப் போர் நடைபெற்றபொழுது, அதில் பங்கேற்காத பச்சைத் தமிழன் நான்.
நான் என்று சொன்னால், காரணம், என்னுடைய கட்சி. அதைத்தான் தீபக் பவார் இங்கே மிகவும் நாகரிகமாகக் குறிப்பிட்டார். எங்கள் மாநிலத்தில் மாநாடு நடந்தால், கம்யூனிஸ்டுகள் மேடைக்கு வந்திருப்பார்களா? என்று.
செத்துப் போன மொழியை சொல்லி, ஊமையாகப் பிறக்கிறதா?
அவர் சொன்னது உண்மை. அதை ஏன் மறைக்க வேண்டும்? ஏனென்றால், இந்தியாவின் ஒற்றுமை கெட்டுப் போய்விடும் என்று முன் அப்படி சொன்னோம் - இப்பொழுது தெளிவாக தெரியவேண்டும் - இந்தியைத் திணிக்க முயன்றால், ஒற்றுமை சாகடிக்கப்படும்.
என் பண்பாட்டையும், என் கலாச்சாரத்தையும், என் வரலாற்றையும் மறந்த பிறகு, நான் ஏன் பயன்படவேண்டும். ஒரே ஒரு வேண்டுகோள் - நீ சமஸ்கிருதத்தை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்துவதற்கு ஒரு புதிய இந்தியா - புதிய இந்தியாவிற்கு, ஒரு புதிய மொழியை சொன்னாலும் பரவாயில்லை. செத்துப் போன மொழியை சொல்லி, ஊமையாகப் பிறக்கிறதா?
நீ  ஒன்றைப் பயன்படுத்து. நீதான் வேதங்களையெல்லாம் படைத்திருக்கிறாய். பகவத் கீதையை உலக முழுவதும் கொண்டு போகவேண்டும் என்று சொன்னாய். அதோடு விட்டாயா? அப்துல்கலாமுக்கு நினைவிடம் வைத்து, அங்க வைக்கப்பட்டுள்ள அவரது சிலையின் காலிலும் பகவத் கீதையை வைக்கிறாய். பரவாயில்லை, உனக்கு இருக்கும் பக்திக்கு பகவத் கீதையை விடாதே!
நாடாளுமன்றத்தில் பேசுவதும் இல்லை - விவாதிப்பதும் இல்லை!
ஆகவே, நீ ஆட்சியில் இருப்பதால், இந்தியா முழு மைக்கும் ஒரே வரியா? ஒரு பொதுக்கூட்டத்தில் போடு கிறாய். ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாதா? பொதுக் கூட்டத்தில் அறிவிக்கிறாய்.
நாடாளுமன்றத்தில் பேசுவதும் இல்லை - விவாதிப்பதும் இல்லை. அதேபோல், இந்திய ராணுவ முழுமைக்கும், அர்ஜுனன் பயன்படுத்திய வில் தரப்படும்; பீமன் பயன்படுத்திய கதாயுதம் வழங்கப்படும்.
விமானங்களையெல்லாம் இனி நாம் வெளிநாடுகளில் இருந்து வாங்கவேண்டியதில்லை. மயில்களில் ஏறித்தான் பிரதம மந்திரி உலகம் முழுவதும் சுற்றி வரப் போகிறார். பிள்ளையாருக்குப் பெருச்சாளி. இப்படியே இருந்தால், பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தைப்பற்றி நாம் கவலைப் படவேண்டாம்.
எனவே, அந்தக் கருவிகளையெல்லாம் உன் ராணு வத்திற்குப் பயன்படுத்து; மந்திரிகளுக்கெல்லாம் மயில் பிடித்துக் கொடு; மற்றவனுக்கு எல்லாம் மாடு பிடித்துக் கொடு; எருமைப் பிடித்துக் கொடு. எங்களை தயவு செய்து விட்டுவிடு!
தமிழ் மக்களைத் தட்டி எழுப்புவோம்!
நாங்கள் இந்த மண்ணிலே பிறந்தோம் என்பது மட்டுமல்ல, இருப்பது எங்களுக்கும் ஓர் உயிர்தான்; உனக்கும் ஒரே ஓர் உயிர்தான் என்பதை மறந்துவிடாதே!
அடிமைகளாக வாழ்வதைவிட, போராடி மடியத் தயார் என்று தமிழ் மக்களைத் தட்டி எழுப்புவோம்!
முன்பு போராட்டத்தில் ஈடுபடாமல் விட்டதையும், ஈடுகட்டுகின்ற முறையில், அடுத்த போராட்டத்தில் - பேரன்பிற்குரிய மோடி அவர்களே, இந்த அரிய வாய்ப்பைக் கொடுத்ததற்காக உங்களுக்கு அரிய நன்றி!
ஏனென்றால், சாவதற்கு முன்பு ஒரு போராட்டத்தை நடத்திவிட்டு சாகவேண்டும் என்று ஒரு ஆசை - நிறைவேறும் என்று நினைக்கிறேன்.
போராடுவோம், வாருங்கள்!

- இவ்வாறு  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தோழர் தா.பாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.

மோடி ஆட்சியை அப்புறப்படுத்தத் தயாராவோம்

மோடி ஆட்சியை அப்புறப்படுத்தத் தயாராவோம்


முரசொலி பவள விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் சூளுரை


சென்னை, செப். 6- மத்தியில் அமைந் திருக்கும் பிஜேபி ஆட்சியானது மோடி ஆட்சியல்ல, வெறும் மோசடி ஆட்சிதான். இந்தியாவில் நடக்கும் இந்த மோசடி ஆட்சியை அப்புறப் படுத்தத் தயாராவோம் என நேற்று (5.9.2017) மாலை சென்னை கொட்டி வாக்கத்தில் நடைபெற்ற முரசொலி யின் பவளவிழா மாபெரும் பொதுக் கூட்டத்தில் சூளுரை நிகழ்த்திய தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் உரை வருமாறு:
முரசொலியின் பவளவிழா நிகழ்ச் சியில் நன்றியுரை வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. கிடைத் திருக்கிறது என்பதைவிட நானாக அதை எடுத்திருக்கிறேன். முதலில் அந்தப் பணியை நிறைவேற்றுகின்ற நிலையில் நான் இருக்கிறேன்.
1943ஆம் ஆண்டு முரசொலியின் முதலாமாண்டு விழா. மதிப்பிற்குரிய நாவலர் அவர்கள் நம்முடைய பொதுச் செயலாளர் அவர்கள், நம்முடைய பேராசிரியர் அவர்கள் ஆகியோரை அழைத்து வந்து தலைவர் கலைஞர் அவர்கள் அந்த விழாவை நடத்தினார். ஆனால், இந்தப் பவளவிழாவுக்கு தலைவர் கலைஞர் அவர்களால் வர முடியவில்லை. ஆனால், நான் தொடக்கத்தில் சொன்னதுபோல, இந்த விழாவின் நிகழ்ச்சிகள் அத்த னையும் அவரது மனதில் இருந்து கொண்டிருக்கும். கடந்த ஜூன் 3 ஆம் தேதி நடைபெற்ற தலைவர் கலைஞர் அவர்களின் வைரவிழாவை நான் எண்ணிப் பார்க்கிறேன். நம்முடைய திரு. திருமாவளவன் அவர்கள் பேசிய போது சொன்னாரே, வைரவிழா, அடுத்து இந்த முரசொலியின் பவள விழா. இவை தலைவர் கலைஞருக்குப் பெருமை சேர்க்க வேண்டிய விழா என்றார்.
உண்மைதான். ஆனால், கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதியன்று தலை வர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழாவில் ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடத்திய நேரத்தில், அகில இந்திய அளவில் இருக்கும் தலைவர்களை எல்லாம் அழைத்து வந்து அந்த நிகழ்ச்சியை நடத்தினோம். அப்போது, இந்த மேடை யில் உள்ள பல தலைவர்களுக்கு எல் லாம் கூட வருத்தம் உண்டு. அதை நமது மதிப்புக்குரிய தொல். திருமாவ ளவன் அவர்கள் வெளிப்படையாகவே எடுத்துச் சொன்னார். உரிமையோடு, பாசத்தோடு, அந்த வாய்ப்பு நமக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் தான் அதனைச் சொல்லியிருக்கிறார் என்பதை நாமும் அறிவோம். ஆனால், அந்த நிகழ்ச்சியில், முதலில் அகில இந்திய அளவில் உள்ள தலை வர்கள் பாராட்டட்டும், வாழ்த்தட்டும், இப்போது தமிழக அளவில் இருக்கக் கூடிய தலைவர்களான நீங்கள் வாருங் கள், வாழ்த்துங்கள், பாராட்டுங்கள், நீங்கள் அந்தப் பெருமையைத் தேடித் தாருங்கள் என்ற உணர்வோடு, உங் களை எல்லாம் இன்றைக்கு அழைத் திருக்கிறோமே தவிர, வேறல்ல. எனவே, உங்கள் மனதில் உள்ள அந்தக் குறை நிச்சயமாக இந்த விழா வின் மூலமாக அகற்றப்பட்டு இருக் கும் என உளமாற நம்புகிறேன். திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கு ஒரு இதழா, இரண்டு இதழா, 265க்கும் மேற்பட்ட எத்தனையோ இதழ்கள் துணை நின்று, திராவிட இயக்கத்துக்கு வாளும்  கேடயமுமாக இருந்திருக்கின்றன. பேரறிஞர் அண்ணா அவர்கள் நடத்திய திராவிட நாடு, கேண்டி, ஹோம் லேண்ட், ஹோம் ரூல், நம் நாடு, தலைவர் கலைஞர் அவர்கள் நடத்திய முர சொலி, முத்தாரம், மறவன் மகள், நம்முடைய பேராசிரியர் அவர்கள் நடத்திய புதுவாழ்வு, தந்தை பெரியார் அவர்கள் நடத்திய விடுதலை, நாஞ்சிலார் அவர்கள் நடத்திய இந்தியம், பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் நடத்திய குயில், ஆசைத்தம்பி அவர் கள் நடத்திய தனியரசு, நாவலர் அவர் கள் நடத்திய மன்றம், ஏ.பி.ஜனார்த் தனம் அவர்கள் நடத்திய டார்பீடோ, கே.ஏ.மதியழகன் அவர்கள் நடத்திய தென்னகம், செல்வராசு அவர்கள் நடத்திய மறுமலர்ச்சி ஆகிய இப்படிப் பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இதழ் களுக்கு இடையில் நடைபயின்று, வெற்றிகண்டு, இன்றைக்கு 75 ஆம் ஆண்டு பவளவிழா காணக்கூடிய ஏடுதான் முரசொலி என்பதை மகிழ்ச் சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். உலகத்தில் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு, தனி வர லாறு உண்டு, அதுபோன்ற சிறப்பு முரசொலிக்கும் உண்டு. பிரான்சு நாட்டில் 1789இல் மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சியை ஒழித்த வர லாறு உண்டு. 1917இல் ரஷ்ய நாட்டில் ஜார்ஜ் பரம்பரை ஒழிக்கப்பட்டு, மக் கள் புரட்சி வெற்றி பெற்றது வரலாறு. அதேபோல 1947இல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த வரலாறு உள்ளது. அந்தப் பட்டியலில், 1942க்கு முர சொலி தொடங்கப்பட்ட வரலாறு என் பதை நான் எண்ணிப் பார்க்கி றேன்.
நிரந்தர எழுத்தாளர்
தலைவர் கலைஞர் அவர்கள் நெஞ்சுக்கு நீதி முதல் பாகத்தில், தன்னுடைய வாழ்க்கை வரலாறு புத்தகத்தில், முரசொலியின் நிரந்தர எழுத்தாளர் நான் என்று குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். அப்போது கலை ஞராக அல்ல, புனைப்பெயரில் அன்றைக்கு சேரனாக முரசொலியின் பக்கங்களில் தலைவர் கலைஞர் அவர்கள் இருந்திருக்கிறார். இன் றைக்கு 144 தடையுத்தரவு என்பதை அனுபவரீதியாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே, ஜனநாயகரீதி யில் நடைபெறும் தேர்தலை நிறுத்தி தடையுத்தரவு, கதிராமங்கலம் செல்வ தற்கும் தடையுத்தரவு, நெடுவாசல் பகுதிக்கு யாரும் செல்ல முடியாமல் தடையுத்தரவு, சேலம், எடப்பாடியில் உள்ள ஏரியை எதிர்க்கட்சித் தலைவர் சென்றுப் பார்க்கக்கூடாது என்பதற்கும் ஒரு தடையுத்தரவு, இப்படி இன்று மட்டுமல்ல, அன்றும் தடையுத்தரவு போடப்பட்டிருக்கிறது.
வர்ணாசிரம மாநாடு
சிதம்பரத்தில் நடைபெற்ற வர் ணாசிரம மாநாடு பற்றி தலைவர் கலைஞர் அவர்களால் முரசொலியில் எழுதப்பட்ட கட்டுரைக்குத் தடையுத் தரவு போடப்பட்டது. அதுமட்டுமால், சிதம்பரத்துக்குள் தலைவர் கலைஞர் வரக்கூடாது என்றும் தடையுத்தரவு போட்டார்கள். காரணம், தலைவர் கலைஞர் அவர்கள் முரசொலி கட்டு ரையில், மரணத்தின் உச்சியில் மானங் காக்கும் மறத்தமிழா போராடு, என்று எழுதினார். அது, அன்றைய அதிகார வர்க்கத்தை நடுங்க வைத்தது. அந்த முழக்கம் தான் இப்போதும் தேவை என்பதை நாமெல்லாம் உணர்ந்திட வேண்டும்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் முர சொலி பற்றி, என்னுடைய தம்பிகள் கருணாநிதியும், மாறனும் கழகத்துக் குத் தொண்டாற்றுவது மட்டுமல்ல, அந்தத் தொண்டில் கலைநயத்தை இழைத்து, குழைத்துத் தருகிறார்கள், என்று அழகான வரிகளில் குறிப் பிட்டார். இப்படி அண்ணா அவர் களால் பாராட்டப்பட்ட முரசொலிக்கு இன்று பவளவிழாவை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆக, எந்தக் கொள்கைக்காக 75 ஆண்டுகாலமாக முரசொலி பாடுபட்டிருக்கிறதோ, அந் தக் கொள்கைக்கு சவால் வந்திருக் கிறது.
சமூகநீதிக்கு ஆபத்து
மாநில சுயாட்சிக்கு ஆபத்து, சமூக நீதிக்கு ஆபத்து, மாநில உரிமைகளுக்கு ஆபத்து, மாநிலத்தில் சுயாட்சி - மத்தி யில் கூட்டாட்சி என்ற கொள்கைக்கும் ஆபத்து என எல்லாவற்றுக்கும் ஆபத்து வந்திருக்கின்றன. நாம் இன்றைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளாக பிரிந் திருக்கலாம், கொள்கைகளில் மாறு பாடு கொண்டிருக்கலாம், வேறுபாடு கள் இருக்கலாம், ஆனால், மேடை யில் இருக்கும் தலைவர்கள் நீங்கள் மட்டுமல்ல, பேசிக் கொண்டிருக்கும் என்னையும் சேர்த்துச் சொல்கிறேன், சமூகநீதியைக் காப்பாற்ற எத்தனை வேறுபாடுகள், மாறுபாடுகள் இருந் தாலும், அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, சமூகநீதியைப் பாது காக்க நாம் ஒன்று கூட வேண்டும் என முழக்கமிடுகின்ற விழாவாக இந் தப் பவள விழா அமைந்திட வேண்டும்.
தமிழகத்தை காப்போம்
இன்றைக்கு மத்தியில் ஒரு மிருக பலத்தைப் பெற்றுக் கொண்டிருக்கும் காரணத்தால், எப்படியாவது மத அடிப்படை வாதத்தை இந்தியாவில் இருக்கும் எல்லா மாநிலங்களிலும் பரப்பிட வேண்டும், குறிப்பாக, தமிழ் நாட்டில் இன்றைக்கு ஆளும் கட்சி யாக உள்ள அதிமுகவின் பிளவைப் பயன்படுத்தி, எப்படியாவது காலூன்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில், திட்டமிட்டு, பிஜேபி ஆட்சி முயற்சி மேற்கொண்டுள்ளது. அவர்களுக்கு எல்லாம் நான் நீண்ட விளக்கமல்ல, ஒரே ஒரு விளக்கத்தைச் சொல்வதென்றால், எட்டாத கனிக்குக் கொட்டாவி விடாதே அப்பனே, என்றுதான் சொல்ல முடியும். ஆகவே, தமிழகத்தை காப்போம். வேற்று மையில் ஒற்றுமை கொண்டுள்ள இந்தியாவை காப்போம். பிரதமர் மோடி அவர்கள் தேர்தலுக்கு முன் என்ன சொன்னார்? நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதை செய்வோம், இதை செய்வோம், வானத்தைக் கிழிப்போம், வைகுண்டத்தைக் காட்டுவோம், மணலைக் கயிறாகத் திரிப்போம், என்றெல்லாம் கதைகளை விட்டு ஆட்சிக்கு வந்தாரே? நான் கேட்கி றேன், இன்றைக்கு நீட் தேர்வில் என்ன நிலை? கருப்புப் பணத்தை ஒழிப்பேன் என்றாரே, ஒழிக்கப்பட் டதா? ஸ்விஸ் வங்கியில் இருக்கும் கருப்புப் பணத்தை நான் இந்தியா வுக்கு கொண்டு வருவேன், இந்தியா வின் ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வேன் என்றாரா, இல்லையா? அது நிறைவேற்றப்பட்டதா? தமிழக மீனவர்களை பாதுகாப்பேன் என் றாரே, அந்த உறுதி நிறைவேற்றப் பட்டதா? நதிகள் இணைக்கப்படும் என்றாரே, இணைக்கப்பட்டதா? இப்படி அவர் சொன்னதையும் செய்யவில்லை, நாம் கேட்பதையும் நிறைவேற்றவில்லை. எனவே, மத்தியில் அமைந்திருக்கும் பிஜேபி ஆட்சியானது மோடி ஆட்சியல்ல, வெறும் மோசடி ஆட்சிதான். இந்தி யாவில் நடக்கும் இந்த மோசடி ஆட் சியை அப்புறப்படுத்தத் தயாராவோம். விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

இவ்வாறு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

எட்டாத கனிக்குக் கொட்டாவி ஏன்?

சென்னையில் திமுக சார்பில் நேற்று மாலை நடைபெற்ற முரசொலி பவள விழா வெகு நேர்த்தியுடன் நடத்தப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 10 அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., திடலில் நடைபெறவிருந்த இந்த விழா கடுமழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு நேற்று நடைபெற்றது.
ஒத்தி வைக்கப்பட்ட ஒரு விழா இவ்வளவு சிறப்பாக நேர்த்தியாக, எழில் குலுங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பது மிகுந்த பாராட்டுக்குரியதே!
மேனாள் சென்னை மேயரும், தென் சென்னை மாவட்ட திமுக செயலாளருமான, மா.சு. என்று அழைக்கப்படும் மா.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் அம்மாவட்டத்தைச் சேர்ந்த திமுக பொறுப்பாளர்களும்  திறன்பட இந்தச் சிறப்பான பணியைச் செய்து முடித்துள்ளனர். அவர்களைத் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பாராட்டியது வெகு பொருத்தமே!

பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சமூக அமைப்பினர் 27 பேர் உரையாற்றினர். நாலரை மணிநேரம் ஒரு பொதுக்கூட்டம் நடைபெறுவது என்பது அசாதாரணமானது.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் மானமிகு  வைகோ அவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது கூடுதல் சிறப்பாகும். அவர் தம் உரையும் நெகிழ்ச்சி மிக்கதாக - குற்றால அருவியாகக் கொட்டியது.
தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள், வைகோ அவர்களின் வருகையை வரவேற்று, எது நம்மை இணைக்கிறதோ அதனை அகலப்படுத்த வேண்டும் என்றும், எது நம்மைப் பிரிக்கிறதோ அதனை அலட்சியப்படுத்த வேண்டும் என்றும் தந்தை பெரியார் கூறிய கருத்தினை பொருத்தமாகச் சுட்டிக்காட்டினார். அவரின் அந்தக் கருத்து, வெள்ளம் போல திரண்டிருந்த மக்கள் மத்தியில்  பெரும் ஆரவார அலையைத் தட்டி எழுப்பியது.
அதுவும் தாய்க் கழகத்தின் சார்பில் இதனைச் சுட்டிக்காட்ட தமக்குக் கடமை இருக்கிறது - உரிமையும் இருக்கிறது என்று அழுத்தமாகச் சொன்ன போது அந்த வார்த்தைக்குக் கூடுதல் முக்கியத்துவமும், மதிப்பும் இருந்தது என்றே சொல்ல வேண்டும்.
சமூக நீதிக்கு எதிரான - மதச்சார்பின்மைக்கு விரோதமான ஓர் ஆட்சி மத்தியில் அமைந்திருக்கும் நிலையில், மதச்சார்பற்ற சக்திகளும், சமூக நீதி சக்திகளும் ஒருங்கிணைவது அவசியமான ஒன்றுதானே! விழாவில் பேசிய பல்வேறு தலைவர்களின் உரையில் இந்தக்கருத்து முக்கியமாக மய்யம் கொண்டிருந்ததை அறிய முடிந்தது.
கழகமில்லாத ஆட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்துவோம் என்று காற்றில் சிலம்பாட்டம் ஆடிக் கொண்டிருக்கும் பிஜேபி - சங்பரிவார்க் கும்பலுக்கும் நேற்று திமுக நடத்திய விழா சரியான மரண அடியைக் கொடுத்திருக்கும் என்பதில் அய்யமில்லை.
அரியலூர் அனிதா ‘நீட்’ தேர்வு காரணமாக, தமது மருத்துவக் கனவு சிதைந்த காரணத்தால் தற்கொலை செய்து கொண்டதானது - தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் கூட மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தத் தாக்கம் என்பது ‘நீட்’ என்னும் மாநிலக் கல்விக்கு சற்றுமே தொடர்பில்லாத, பொருத்தமில்லாத, நுழைவுத் தேர்வை திணித்ததில் உயர் ஜாதி ஆதிக்கச் சக்திகளின் கை இருக்கிறது என்ற கருத்து பெரும்பாலும் மக்கள் மத்தியில் உறுதியாகி விட்டது.
பிஜேபி என்னும் உயர்ஜாதி வர்க்கத்தின் அமைப்பும், உயர் ஜாதியினர் கரங்களில் வகையாகச் சிக்கியிருக்கும் ஊடகங்களும் நீட்டுக்கு   ஆதரவாக உரத்த முறையில் முரட்டுத்தனமாக ஆதரித்து கூச்சல் போடுவதிலிருந்தே, நீட் அவர்களுக்குச்சாதகமாகவே இருக்கும் ஒன்று என்பது தெளிவாகப் புரிந்து விட்டது.
அரியலூர் அனிதாவின் தற்கொலை - பிஜேபி - சங்பரிவார் கூட்டத்தினர் மீது மிகப்பெரிய எரிச்சலையும், கடும் வெறுப்பையும் வேகமாகத் தூண்டிவிட்டது. தமிழ்நாட்டுக்கு பிஜேபி தலைவர்களும், அமைச்சர்களும் வருவதைத் தவிர்த்து விட்டனர். உள்ளூர் பிஜேபியினரும் மக்கள் முகத்தில் விழிக்க முடியாதவர்களாக முடங்கிக் கிடக்கிறார்கள்.
இணையதளத்தில் திமிர்த் தனத்துடன், உயர் ஜாதி மமதையுடன், செய்திகளையும், கருத்துகளையும், வெளியிட்டவர்கள் சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளனர்.
மாணவர்களும் அனைத்து மாவட்டங்களிலும் தன்னிச்சையாகவே  வகுப்புகளைப் புறக்கணித்து வீதிக்கு வந்து போராட ஆரம்பித்து விட்டனர்; இந்தி எதிர்ப்புப் போராட்டம் போல காட்டுத்தீயாக மாணவர் மத்தியில் கொந்தளித்து எழுவது தொடரும் என்றும் தெரிகிறது.  ஏனெனில் இந்த ‘நீட்’ தேர்வு என்பது மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் சவாலானதாகும்.
நன்றியுரையாற்றிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நறுக்குத் தெறித்தது போல முரசொலி பவள விழா தரும் செய்தியாகக் சொன்னக் கருத்து முத்தாய்ப்பானது.
சமூகநீதி, மதச்சார்பின்மைக்கு எதிராக மத்திய அரசு - அதற்கு நிபந்தனையின்றித் தண்டனிட்டுத் துணை  போகும் மாநில அ.இ.அ.தி.மு.க அரசு இரண்டுமே மக்கள் விரோதமானவை என்றும், விரைவில் மாற்றம் நிகழும் என்றும் தளபதி மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்து விழாவின் முத்தாய்ப்பான செய்தியாக அசைபோட்டு மக்கள் வெள்ளம் விழாப் பந்தலிலிருந்து விடைபெற்றுச் சென்றது.

எட்டாத கனிக்குக் கொட்டாவி விட வேண்டாம் என்று பாஜகவினருக்கு திமுக செயல் தலைவர் சொன்னது சிரிக்க வைத்துச் சிந்திக்கவும் வைத்தது!.

திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானங்கள்

டிசம்பர் 2 - தமிழர் தலைவர் பிறந்தநாளில் 15,000 விடுதலை சந்தாக்கள் வழங்குவோம்


2018 ஜனவரி - திருச்சி உலக நாத்திகர் மாநாட்டுக்குப் பேராதரவு
விடுதலை வாசகர் வட்டம், புத்தகச்சந்தை,

துண்டறிக்கை விநியோகம், பகுத்தறிவு தகவல் பலகை அமைத்து இயக்கப் பணியில் தீவிரம்

தந்தை பெரியார் பிறந்தநாளை

ஊர்தோறும் ஊர்வலத்துடன் கொண்டாடுவோம்!

திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானங்கள்



சென்னை, செப்.6 தந்தை பெரியார் 139ஆம் ஆண்டு பிறந்தநாளை ஊர்தோறும் ஊர்வலத்துடன் நடத்துவது என்றும், விடுதலைக்கு 15000 சந்தாக்கள் சேர்ப்பது உட்பட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டம் - 6.9.2017 தீர்மானங்கள்
இன்று (6.9.2017) அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
1.            இரங்கல் தீர்மானம்
தீர்மானம் 2 ஊர்தோறும் தந்தை பெரியார்

பிறந்த நாள் பெருவிழா!
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி அன்று தந்தை பெரியார் படத்தினை அலங்கரித்து அனைத்துக் கட்சியினரையும் பொதுமக்களையும் குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் கலந்துகொள்ளும் ஊர்வலத்தினைச் சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது. ஆங் காங்கே தந்தை பெரியார் உருவப்படத்தினை அலங்கரித்து வைத்து பிரச்சாரம் செய்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
காவல்துறை அனுமதி உள்ளிட்ட அனைத்துப் பணி களையும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தந்தை பெரியார் பிறந்த நாள் அன்று புத்தாடை அணிதல், இனிப்புகளை வழங்குதல், நண்பர்களை, உறவினர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ளுதல் உள்ளிட்ட வகையில் தேசியத் திருவிழாவாக தந்தை பெரியார் பிறந்த விழாவைக் கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 3 (அ) 15,000 விடுதலை சந்தாக்கள்

அளிக்க முடிவு
தமிழர்களின் உரிமைப் போர்வாளான ‘விடுதலை’ ஏட்டுக்கு 15 ஆயிரம்  ஆண்டுச் சந்தாக்களைச் சேர்ப்பது எனவும், அதனை தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்த நாளான வரும் டிசம்பர் 2ஆம் தேதியன்று ஈரோட்டில் மிகப் பெரிய விழா நடத்தி அவ்விழாவில் அளிப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது. கழகப் பொறுப்பாளர்கள் கிளைக்கழகம் முதல் அனைவரும் விடுதலைச் சந்தாதாரராக இருக்க வேண்டும் என்று கட் டளைத் தீர்மானமாக இச்செயற்குழு நிறைவேற்றுகிறது.
(ஆ) விடுதலை சந்தா சேர்ப்பதற்காக “வீடுதோறும் விடுதலை - வீதிதோறும் பிரச்சாரம்” எனும் தலைப்பில் ஆயிரக்கணக்கான துண்டறிக்கைகளை அச்சிட்டு, பொது மக்கள் மத்தியில் வழங்கி, ‘விடுதலை’யின் தேவையை மக்கள் மத்தியில், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில்அறியும்படி செய்வது என்று தீர்மானிக்கப்படுகிறது. “ஜாதி இல்லா நாடு; சாமியார்கள் இல்லா நாடு” என்ற பொருளில் தமிழ்நாடு முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தை வரும் அக்டோபரில் குமரி தொடங்கி, திருத்தணி வழியே சென்னை வரை, 7 நாள்கள் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

(இ) செப்டம்பர் 22 முதல் ஒவ்வொரு வெள்ளி, சனி, ஞாயிறுகளில் மாவட்டக் கழகமே பொறுப்பாளர்களைச் சந்தித்து ‘விடுதலை’ சந்தா சேர்ப்புக்கான வழிமுறைகள் பற்றிக் கலந்துரையாடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
(ஈ) வரும் அக்டோபர் 7ஆம்  தேதியன்று கடலூரில் திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம்  4


பெரியார் படிப்பகம், நூலகங்களைச் 
சரிவரப் பராமரிப்பது
நாட்டின் பல பகுதிகளிலும் துவக்கப்பட்ட பெரியார் படிப்பகங்கள், நூலகங்கள் சிறப்பாக நடைபெற வேண்டும் என்றும், எந்தக் காரணத்தை முன்னிட்டும் அவை செயல்படா நிலையில் இருக்கக் கூடாது என்றும், பகுதி நேரப் பணியாளர்கள் அமர்த்தப்பட்டு, செவ்வனே நடத்துவது என்றும், பெரியார் படிப்பகங்கள் கழகத் தோழர்களின் சந்திப்புக் களமாகவும் முக்கியமாக செயல்பட வேண்டும் என்றும் அதற்கான பொறுப்புகளை சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் பொறுப்பாளர்களாக இருக்கும் மாநில, மண்டல, மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் ஏற்க வேண்டும் என்றும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5

(அ) துண்டறிக்கைப் பிரச்சாரம்
நமது கழகப் பிரச்சாரத்தில் துண்டறிக்கைகளை மக்க ளுக்கு வழங்குவது என்பது நீண்டகாலமாக இருந்துவரக்கூடிய - பயன் அளிக்கக்கூடிய எளிய திட்டமாகும். மூடப் பழக்கவழக்கங்களை, தோலுரித்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் தலைமைக் கழகம் வெளியிடும் துண்டறிக் கைகளைக் கழகத் தோழர்கள் கழக் கொடியுடன் கடை கடை யாக, வீடு வீடாகச் சென்று, பகுத்தறிவுப் பிரச்சாரப் பணியை மேற்கொள்வது என்றும், அதுபோலவே பகுத் தறிவுத் தகவல் பலகையைக் கிளைக் கழகம் தோறும் வைத்து, நாள்தோறும் புதுப்புது கருத்துகளை எழுதி விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கழகத் தோழர்களையும், பகுத்தறிவா ளர்களையும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
(ஆ) விடுதலை வாசகர் வட்டத்தை நகர்ப்புறங்களிலும், ஒன்றிய தலைநகரங்களிலும், குறிப்பாக பெரியார் படிப்ப கங்கள் உள்ள இடங்களிலும் கண்டிப்பாக நடத்திடத் தீர்மானிக்கப்படுகிறது.
(இ) புத்தகச் சந்தையை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 6


மாநிலக் கழகப் பொறுப்பாளர்கள் தலைமைக் 
கழகத்திற்கு 15 நாள்களுக்கு ஒருமுறை வருதல் மாநிலக் கழகப் பொறுப்பாளர்கள் 15 நாள்களுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக சென்னைத் தலைமைக் கழகத்தில் இரு நாள்கள் தங்கி தலைமையுடன் கலந்துரையாடி, அவ்வப்போது மேற்கொள்ளப்பட வேண்டிய கழகப் பணிகள், திட்டங்கள் கள நிலைமை குறித்து முடிவு செய்து செயல் படுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம்  7

திருச்சியில் நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்டத்திற்குப் பேராதரவு
தி.மு.க செயல் தலைவரும் தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் 4.9.2017 மாலை சென்னை அண்ணா அறிவால யத்தில் கூட்டிய பல்வேறு கட்சிகளின் கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இச்செயற் குழு தனது முழுஆதரவினையும் தந்து வரவேற்கிறது. அதன்படி 8.9.2017 அன்று திருச்சியில் மத்திய - மாநில அரசின் சமூகநீதிக்கு எதிரான கண்டனப் பொதுக்கூட்டத்தில் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் தமிழினப் பொதுமக்களை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
சமூகநீதி வரலாற்றில் ஒரு மைல்கல் போன்ற இந்தக் கண்டனக் கூட்டத்தின் வெற்றிக்கு எல்லா வகைகளிலும் ஒத்துழைப்பது என்றும் இச்செயற்குழு முடிவு செய்கிறது. கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக திரளுமாறும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 8

உலகநாத்திகர் மாநாட்டுக்கு ஆதரவும் - ஒத்துழைப்பும் தருதல்
திருச்சியில் 2018 ஜனவரியில் நடக்கவிருக்கும் உலக நாத்திகர் மாநாட்டை சீரும் சிறப்புமாக நடத்துவதற்கு அனைத்து ஒத்துழைப்பையும் அளித்து மகத்தான அளவில் வெற்றிப்பெறச் செய்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 9

பகுத்தறிவாளர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு கண்டனம்
கருநாடக மாநிலம் பெங்களூரில் முற்போக்கு எழுத்தாளர், ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் அவர்கள் காவிகளால் படுகொலை செய்யப்பட்டதற்கு இச்செயற்குழு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
இதற்குமுன் மகாராட்டிர மாநிலத்தில் தபோல்கர், கோவிந்த்பன்சாரே, கருநாடாகாவில் கல்புர்கி ஆகிய பகுத்தறிவாளர்களும் தொடர்ந்து காவிகளால் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். மத்தியில் பிஜேபி ஆட்சி வந்த தற்குப் பிறகு பகுத்தறிவாளர்களுக்கும், முற்போக்காளர் களுக்கும் கடும் அச்சுறுத்தல், உயிருக்கு ஆபத்தும் நிகழ்ந்து வருகிறது. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகளும் இது வரை வழங்கப்படவில்லை. பகுத்தறிவாளர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதற்கு  இது ஊக்கத்தையும், துணிச் சலையும் கொடுக்கிறது என்று இச்செயற்குழு குற்றஞ்சாட்டுகிறது.
எனவே -குற்றவாளிகள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனையைப் பெற்றுத் தருமாறு மத்திய - மாநில அரசுகளை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

Thursday, August 31, 2017

பிரதமர், முதல்வர்களுக்கு ஆரம்ப அறிவியல் கல்வி தேவை

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள  உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனத்தில் 2016-17ஆம் ஆண்டிற்கான  பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அம்மாநில முதல்வர் விஜய் ரூபனி கூறியிருப்பது ஒரு நகைச்சுவை விருந்துதான்.
"இராமாயண காலத்திலேயே இலங்கைக்கு சேதுப்பாலம் கட்டியுள்ளார்கள். இதற்கு  திட்டமிட்டவர் ராமன். அவரது தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு தான் இன்று உலகம் முழுவதும் பாலங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ராமன் தலைசிறந்த பொறியியலாளர் மட்டுமல்ல, அவர் ஒரு பொதுநல நோக்காளர். ஆகையால் தான் சேது பாலம் கட்டி இலங்கையையும், இந்தியாவையும் இணைத்தார். அவர் பாலம் கட்டுவதற்கு அணில்கள் உதவி செய்துள்ளன. தற்போதும் அந்த பாலம் கடலுக்கு அடியில் இருப்பதை நாம் பார்க்கிறோம். ராம் சேது பாலம் ராமனின் கற்பனையில் தோன்றியது. அதன் பின் தான் தற்காலிக பாலத்தை என்ஜினியர்கள் கட்டியுள்ளனர்" என்றார்.
"போரில் லட்சுமணன் மயங்கி விழுந்தவுடன், வடக்குப் பகுதியில் அதற்கான மூலிகை இருக்கிறது. அதை எடுத்து வரச் சென்ற அனுமன் மூலிகையின் பெயரை மறந்துவிடுவார். அதன் பின் அந்த மலையையே தூக்கிக் கொண்டு வருவார். மலையையே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது எத்தகைய தொழில்நுட்பம்!.உள்கட்டமைப்பு பணிகளுக்கு இந்தத் தொழில்நுட்பம் தான் கைகொடுத்தது.
இன்று நமது ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் ஏவுகணைகள் இலங்கையுடன் போர் புரிந்த ராமனின் அம்புகளை மய்யமாக வைத்துத்தான் செய்யப்பட்டுள்ளன. இராமாயணத்தில் ராமன் ஏவிய ஒவ்வொரு அம்பும் ஒரு ஏவுகணையாகும். இதனை முதன்மையாக வைத்துதான் அதே தொழில் நுட்பத்தில் இந்திய ராணுவம் ஏவுகணைகளைத் தயாரித்து வருகிறது. தற்போதுள்ள கட்டமைப்புகள் அனைத்தும் ராமன் மற்றும் இராமாயணத்துடன் தொடர்புடையதாகும். ஆயுதம் மற்றும் உள்கட்டமைப்பு மட்டுமின்றி சமூக பொறியியலிலும் ராமன் ஈடுபட்டுள்ளார். தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து ஜாதியினரையும் ஒன்றிணைக்கிறோம்.
ஆனால், அப்போதே அனுமன் குரங்குகள் படையை ஒன்றிணைத்தார். இது தான் சமத்துவம். இதைத் தான் ராமராஜ்ஜியம் என்று மகாத்மா காந்தி பேசினார். இதை நரேந்திரமோடி தற்போது செயல்படுத்தி வருகிறார்" என்றார்.
இதே குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் முதல் வரும், இன்னாள் பிரதமருமான மோடி 2015ஆம் ஆண்டு மும்பையில் அம்பானிக்குச் சொந்தமான மருத்துவமனையில் நவீன தொழில்நுட்ப அறுவைசிகிச்சை மய்யம் ஒன்றை திறந்துவைத்து "இந்தியாவில் தான் முதல் பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நடந்தது; அதனைச் செய்தது சிவன்" என்றாரே பார்க்கலாம்.
2016ஆம் ஆண்டு நேபாளத்தில் நடந்த நிலநடுக்கத்தின் போது பேசிய பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான விஜய் வர்கியா "மாட்டிறைச்சி சாப்பிட்டுவிட்டு சென்றதால்தான் நேபாளத்தில் பூகம்பம் வந்துவிட்டது" என்று கூறினார்.
உத்தரப் பிரதேச முதல்வரும், சாமியாருமான ஆதித்தியநாத் "சாமியார்கள் மற்றும் விரதமிருந்து பாதயாத்திரை செல்லும் சிவ பக்தர்களின் பார்வையில் வழியில் உள்ள அத்திமரங்கள் பட்டால் அவர்களின் விரதத்தின் பலன் நீர்த்துப்போய்விடும். ஆகையால் பாதயாத்திரை செல்லும் பாதையில் உள்ள அத்தி மரங்களை வெட்டிவிட வேண்டும்" என்று உத்தர விட்டார்.
இதே போல் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே மாநில அரசு அலுவலகங்களில் தினசரி பசுமூத்திரம் (கோமியம்) தெளிக்கவேண்டும் என்றும், மருத்துவமனைகளில் கிருமிநாசினிகளுக்குப் பதில் கோமியம் தெளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு ராஜஸ்தானின் பல்வேறு மருத்துவமனை மருத்துவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஃபகன்சிங் குலுஸ்தே இந்தூரில் உள்ள பசுமூத்திரத்தின் மூலம் நோய்களுக்கு சிகிச்சை அளித்துவரும் மய்யம் ஒன்றில் நடந்த விழாவில் பேசும் போது, "பசுமாட்டின் மூத்திரம் விலைமதிப்பில்லாதது, நாம் தங்கத்தை விலைமதிப்புள்ளது என்று கூறுகிறோம், ஆனால் அதை விட அதிக மதிப்புடையது பசுமூத்திரம்" என்று கூறியிருந்தார்.

மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்ற இந்திய அரசமைப்புச் சட்டம் (51கி-லீ) வலியுறுத்துகிறது. முதலில் பிஜேபியைச் சேர்ந்த பிரதமர் மோடி முதல் மாநில முதல் அமைச்சர்கள் வரையில் அறிவியலின் ஆரம்பப் பயிற்சியினைச் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

ஈரோட்டில் ஓர் உணர்வுப் பூர்வமான விழா வாரீர்!

நம் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான சர் ஏ.டி.பன்னீர்செல்வம்  அவர்கள் பெயரில் இயங்கி வரும் பன்னீர் செல்வம் பூங்கா.  அதற்கு முன் இது  ஆங்கிலேயர் காலத்தில் "வேல்ஸ் பார்க்" என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
இங்கே இருந்த அய்யா தந்தை பெரியார், பேரறி ஞர் அண்ணா ஆகியோர் திருவுருவச் சிலைகளைப் புதுப்பித்து மக்கள் பயன் பாட்டிற்கு வழங்கப்படு கின்றன (31.8.2017)  உருவ வழிபாட்டை மறுக்கும் பகுத் தறிவாளர்களாகிய அய்யாவிற்கும்,  அண்ணாவிற் கும் எதற்காக சிலைகள்!!  நம் வழிபாட்டிற்கா?  அல்ல .. அல்ல!
பெரியாரே அதற்கு விடை சொல்கிறார்! "பிற் காலத்தில் வரும் தலை முறையினர்க்கு நம் வர லாற்றை சரியாகச் சொல்லவில்லை என்றால் என்னையும் ஒரு கடவுளாக்கி 11ஆவது அவதாரம் இவர் என்று பொட்டு வைத்து பூணூலும் மாட்டி விடுவார்கள்" என்று கூறினார்.  எனவே தான் அய் யாவிற்கு ஊர் தோறும் சிலைகள் அமைக்கப்பட்டு அதனடியில் அவரது அடிப்படைக் கொள்கையான கடவுள் மறுப்பு வாசகத்தைப் பொறித்து வைத்துள் ளோம்!
அந்த வகையில் தமிழகத்தில், இந்தியாவில் கூட எங்கும் காணாத வகையில் போக்கு வரத்திற்கு துளியும் இடையூறின்றி அமைக்கப்பட்டுள்ளது.  இவர்களது கருத்துக்களை உலகோர் வியந்து பார்ப்பது போல், படிப்பது போல் இச் சிலைகளையும் நாம் வியந்து தான் பார்க்க வேண்டும்!
காலம் காலமாக அடிமைப் பட்டுக் கிடந்த ஒரு இனத்தை பண்பாட்டு ரீதியாக தலைநிமிர வைத்த தலைவர்களை நாம் தலை நிமிர்ந்து பார்க்க வேண்டும்!  உயர்ந்த எண்ணங்களை மக்களின் மனங்களில் விதைத்த விந்தையான இருபெரும் தலைவர்களை அறிவுத்தூண்களாக நம் ஈரோட்டுக் கழகத் தோழர்கள் மிக உயர்ந்த இடத்தில் அமைத் துள்ளார்கள்!!

பொதுவாக சிலை என்றால் ஒரு பீடம் இருக்கும், ஆனால் இச்சிலைகள் அப்படி ஒரு பீடத்தில் வைக் கப்படவில்லை!  மாறாக "அறிவுத் திருக்கோயில்"   (இங்கே கோயில் என்பது அரசன் வசிப்பிடம் என்ற பொருளில் கூறப்படுகிறது என்பதறிக..!)   என்று சொல்லப்படுகிற ஒரு நூலகமே சிலைகளைத் தாங்கி நிற்கிறது.
மனுவாதிகளால் கல்வி மறுக்கப்பட்ட ஒரு தலைமுறைக்கு அவ்வுரிமையை பெற்றுத் தந்தவர் அய்யா பெரியார்.  அதுபோல் இல்லந் தோறும்  நூலகம் அமைக்கப்பட வேண்டும் என்று அறி வுறுத்தியவர் நம் அண்ணா!  இவர்களுக்கு சிறப்பு சேர்ப்பிக்கின்ற வகையில் முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட ஒரு நூலகம்.  அரசுப்பணிக்கும், இந்திய ஆட்சிப் பணி,இந்திய காவல் பணிக்கும் தங்களை தயார்படுத்திக் கொள்ளும் மாணவர்கள் பயன் பெறுகிற வகையில் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் எண்ணற்ற நூல்களைக் கொண்டு  அமைக்கப்பட்டுள்ளது!
இந்த நூலகத்தின் மேல் அய்யா, அண்ணா சிலைகள்  எழிலார்ந்த வகையில், காண்போர் எழுச்சி  பெறத்தக்க அளவில் அமைக்கப்பட்டுள்ளன!
அய்யா தந்தை பெரியார் தான் வாழ்ந்த காலத்திலேயே தமிழ்த்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் தலைவர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட சிலை!! இன்று அவரது இளவல் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர்

கி.வீரமணி அவர்கள் தலைமையேற்க தமிழர்களின் எதிர்காலம்,  நம் அன்புத் தளபதி அவர்கள் திறந்து வைக்கிறார்கள்..!!
இந்த அரும் பெரும் பணியை ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் மனிதநேயர் திரு.சு.முத்துசாமி அவர்கள்  நம் இனமானத் தலைவர் கலைஞர் அவர்கள் தமிழ கத்தின் புதிய தலைமைச் செயலகத்தை எப்படி  பார்த்து பார்த்து, வடிவமைத்துக் கட்டினாரோ, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை எப்படி ஆசை ஆசையாக வடிவமைத்துச் செய்தாரோ அதே போல் இந்த சிலைகளையும், நூலகத்தையும், அதைச் சுற்றிய பூங்காவையும் தானே முன்னின்று பணி துவங்கிய நாள் முதல் இரவு பகல் பாராமல் தொழிலாளர்களோடு ஒரு தொழிலாளியாக நின்று சிறப்பாக பணியாற்றிய நம் செயல் வீரர் அண்ணன் சு.முத்துசாமி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!!
தமிழர்களே! ஈரோடு என்றாலே உலகப் பகுத் தறிவாளர்களுக்கு ஒரு தாய் வீடு போன்றது.  இனி ஈரோட்டிற்கு இப்பகுத்தறிவுச் சின்னம் மேலும் ஒரு   லேண்ட் மார்க் என்று சொல்கிற "தனித்த அடையாளம்" ஆகும்!  இது திண்ணம்..!!
தமிழர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு வரலாற்று நாயகர்களைப் போற்றுவோம்...!! வாரீர்...!! வாரீர்...!!!

அன்புடன்

ஈரோடு மாவட்ட திமுக சார்பாக பி.என்.எம்.நடேசன், பி.என்.எம்.பெரியசாமி

மோடி பிரதமராக இருப்பது இந்தியாவுக்கா? பாஜகவுக்கா?

பஞ்சாப், அரியானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக சாடல்

சண்டிகர், ஆக. 30- மோடி பிரதமராக இருப்பது இந்தியாவுக்குத்தானே தவிர, பாஜகவுக்கு அல்ல என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடு மையாக சாடியுள்ளனர்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36-ஆக உயர்ந்துள்ளது.
தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங். இவர், தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண் சீடர்களை கடந்த 1999-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச் சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஅய் கடந்த 2002ஆ-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
குர்மீத் ராம் ரகீம் சிங் மீதான இந்த வழக்குகள் அரியானா மாநிலம் பஞ்ச்குலா சிபிஅய் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், அதன் மீதான தீர்ப்பு ஆகஸ்ட் 25-ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதில், சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என பஞ்ச்குலா சிபிஅய் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், தண் டனை குறித்த விவரம் 28ஆ-ம் தேதி அறிவிக் கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் பல்வேறு பகுதி களில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 36-ஆக அதிகரித்துள்ளது.

பொதுநல வழக்கு
இந்த நிலையில், கலவரம் குறித்த பொது நல வழக்கில்,  பஞ்சாப், அரியானா உயர்நீதி மன்றம் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசையும், மனோகர் லால் கத்தார் தலைமையிலான அரியானா அரசையும் சாடி யுள்ளது.
பாலியல் வன்முறை வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மித்ராம் ரகீம் சிங் குற்றவாளி என்று அரியானா மாநிலம் பஞ்ச்குலா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அரியானாவில் பயங்கர வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 36 பேர் பலியாகினர். 250க்கும் அதிக மானோர் காயம் அடைந்தனர். ஆனால் பஞ்சாப்பில் இந்த அளவுக்கு வன்முறை நடக்க வில்லை. அங்கு காங்கிஸ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. முதல்வராக அம்ரீந்தர் சிங் இருக்கிறார். அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வன்முறை பெரிய அளவில் வெடிக்காமல் பார்த்துக்கொண்டார். ஆனால் பாஜக ஆட்சி நடக்கும் அரியானாவில் அத்தகைய நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டுஎழுந்தது. இது தொடர்பாக அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரையும், பிரதமர் மோடியையும் பஞ்சாப், அரியானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இது தொடர்பான நீதிபதிகள் கருத்து தெரிவிக்கும்போது,
நாம் அனைவரும் வாழ்வது ஒரே நாடு தானே தவிர, ஒரு கட்சியை சார்ந்து இயங்கும் நாடு அல்ல. எனவே, அரசியல்வாதிகள் இதனை புரிந்து கொண்டு செயல்பட வேண் டும். பிரதமர் என்பவர் இந்திய நாட்டிற்காக த்தானே தவிர, பாஜக-விற்கானவர் அல்ல. மாநில முதலமைச்சர், அரசு தலைமை வழக் குரைஞர் சத்யபால் ஜெயின் ஆகியோர் பாஜகவின் பதவியில் இருப்பவர்கள் அல்ல. இது மக்களுக்கான பதவி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என கடுமையாக கண்டித்தனர்.
மத்திய அரசானது பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது போல தெரிகிறது. மத்திய அரசு தனது கடமையை தட்டிக்கழிக்கும் விதமாக நடந்து கொள்ளக் கூடாது. வாக்கு வங்கியை மய்யமாக வைத்து மாநில அரசு செயல்படுவதாகவும் விமர்சித் தனர்.
மாநிலத்தின் முதலமைச்சர்தான் உள் துறை அமைச்சராக இருக்கிறார். அப்படி இருக்கும் பட்சத்தில் கடந்த ஒரு வாரத்தில் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கவலரத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் வெளி ஊர்களில் இருந்து பஞ்சகுலாவிற்கு வந்து தங்கியுள்ளனர்.
அரசியல் தொடர்பான முடிவுகளுக்கும், அரசு நிர்வாகத்திற்கும் மிகப்பெரிய வித்தியா சம் உள்ளது என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அரசியல் ரீதியிலான முடிவுகளால், அரசு நிர்வாகம் முடக்கப் பட்டுள்ளது என்று கடுமையாக கண்டித்து உள்ளனர்.

இதையடுத்து, பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்கள் வன்முறை தொடர்பான அறிக்கையையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

Friday, August 25, 2017

தமிழ்நாடு வழிகாட்டும்


தமிழ்நாட்டு சமூகநீதி வரலாற்றில் ஒரு சவாலான சூழல்களை நாம் சந்திப்பது இது முதல்முறையல்ல.
1950ஆம் ஆண்டு, செண்பகம் துரைராசன் என்கிற பார்ப்பனப்பெண்மணி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பினால், தமிழகத்தில் அதுவரை நடைமுறையில் இருந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்கிற நூறு விழுக்காடு இடஒதுக்கீடு முறை செல்லாது என்று ஆக்கப்பட்டது. தந்தை பெரியார் அதை எதிர்த்து போர்க்குரல் எழுப்பினார். தந்தைபெரியாரின் கர்ஜனை நாடாளுமன்றத்தை அசைத்தது,  அதன் விளைவாக நேரு தலைமையில் அமைந்த மத்திய அரசினால் முதலாவதாக இந்திய அரசமைப்புச்சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்தியா முழுமைக்கும் இன்று பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் கல்வியில் பயன்பெறும் இடஒதுக்கீடு என்பது சாத்தியமானது!
1979ஆம் ஆண்டு, அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். தவறான ஆலோசனையின் காரணமாக ஒரு தீயமுடிவினை எடுத்தார். பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டினை பெறுவதற்கு ரூ.9000 வருமான உச்சவரம்பு என்கிற பொருளாதார அளவுகோலை கொண்டுவந்தார். திராவிடர் கழகமும், திமுகவும், ஒத்த கருத்துள்ள கட்சிகளும் அதைக் கண்டித்து தமிழகம் முழுக்க மக்களைத் திரட்டினார்கள். அதன் விளைவு 1980ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. தன் தவறை உணர்ந்த எம்.ஜி.ஆர். தான் கொண்டுவந்த சட்டத்தை பின்வாங்கியதோடு மட்டுமல்லாமல், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டின் அளவை 31 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தினார். அதுதான் இன்றுவரை நீடிக்கிறது!
1993ஆம் ஆண்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக, தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்தபோது, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, சிறப்பு சட்டம் இயற்றி அதை அரசமைப்பு சட்டத்தின் 9ஆவது அட்டவணை என்கிற பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்து, தமிழ்நாட்டின் தனிச்சிறப்பான சமூகநீதியைக் காப்பாற்றினார். இந்தப்பெருமை முழுக்க முழுக்க திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சாரும். இதை எடுத்துக்காட்டாகக் கொண்டே பாஜக ஆட்சி செய்கின்ற இராஜஸ்தான் உட்பட பல மாநிலங்கள், தமிழகம் காட்டிய வழி யினைப் பின்பற்ற முயற்சி செய்துகொண்டிருக்கின்றன.
இப்போது 'நீட்' கொம்பை நீட்டிக் கொண்டு கிளம்பியுள்ளது.
குறைந்தபட்ச நியாய உணர்வு கொண்ட ஒரு மத்திய அரசு இருந்திருந்தால்கூட, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஏற்றுக்கொண்டு தமிழகத்திற்கு விலக்கு அளித்திருக்க வேண்டும். உச்சநீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை எழுப்பிய மிகச்சரியான கேள்விகளை ஏற்றுக்கொண்டு, தமிழகத்திற்கு நீதி வழங்கியிருக்க வேண்டும்! தற்போதைய சூழலைப்பார்க்கும்போது, நீட் சிக்கலின் பேரபாயத்தை தமிழக மக்கள் பெரிதும் உணர்ந்திருக்கவில்லை என்றே தெரிகிறது. கெட்டவாய்ப்பாக, இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நீட் தேர்வின் அடிப்படையில் நடந்த நிலையில், தமிழகம் இப்போது இருப்பதுபோலவே எப்போதும் தூங்கிக்கொண்டிருக்காது என்பது உறுதி.
பாதிப்பு ஏற்படும் நிலையில் பதைபதைப்பார்கள் - பாய்ந்தும் எழுவார்கள் என்பதில் அய்யமில்லை.
மண்டல் குழுப் பரிந்துரையை எடுத்துக் கொண்டாலும், "பத்தாண்டு ஆகிவிட்டது. இனிமேல் அதற்கு உயிர் இல்லை. குழிதோண்டிப் புதைத்தாகி விட்டது" என்று ஆணவமாகப் பார்ப்பனர்கள் மற்றும் அவர்களின் ஏடுகள் ஊளையிட்டன.
""Burry the mandal Report" என்று ஓர் ஆங்கில ஏடு தலையங்கம் தீட்டியது. "Hurry the Mandal report" என்று பதிலடி கொடுத்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அதில் வெற்றி கொண்டோமா இல்லையா? 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் அகில இந்திய அளவில் திராவிடர் கழகம் நடத்தியது அல்லவா?
திராவிடர் கழகத்தின் பங்களிப்பை அந்நாள் பிரதமர் வி.பி.சிங் அங்கீகரித்தாரே!
27 சதவிகித இடஒதுக்கீட்டை நாடாளுமன்றத்தில் அவர் பிரகடனப்படுத்தியபோது, மறவாமல் தந்தை பெரியாரை நினைவு கூர்ந்தாரே!

எந்த இன்னல் வந்தாலும் சமூக நீதியில் தமிழ்நாடு முகம் கொடுத்து வெற்றி பெறும் - காரணம் இது பெரியார் பிறந்த மண்!

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...