Tuesday, May 30, 2017

பேராசிரியர் ந. சுப்பிரமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவு (4)

பேராசிரியர், முனைவர் ந.க.மங்கள முருகேசன் சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறையில் பரிதிமால் கலைஞர் அரங்கில் ஆற்றிய உரையின் (27.5.2017) அன்றைய தொடர்ச்சி...
தந்தை பெரியார் எழுதிய இந்த உரை வரலாற்றுச் சிறப்புடையது. நாகம்மையார்தமக்கும், இயக்கத்திற்கும் ஆற்றிய தொண்டினைப்பற்றி மிக உருக்கமாகவும், ஒரு தனித்தன்மையுடனும் கூறுகிறார். அதை இங்கே எடுத்துக்கூற நேரம் போதாமையால் விட்டுச் செல்கிறேன். நாகம்மையாரைப் பற்றியே இந்த அறக்கட்டளைப் பொழிவில் கூற ஏராளமாக இருக்கிறது என்ற போதிலும், தந்தை பெரியாரின் வாழ்வின் இரண்டாம் பகுதியில் அவரைப் பேணிக்காத்து 95 வயது வரை வாழ வைத்து, அதுவும் உலகில் எந்தப் பெண்மணியும் பெற்றிராத ஏச்சும், பேச்சும், இழிமொழிகளும் பெற்று வாழ்ந்த அற்புத அன்னையார் - அம்மா மணியம்மையார்.
காந்திமதி என்ற இயற்பெயருடைய, திராவிட இயக்கக் குடும்பத்தைச்சேர்ந்த வேலூர் கனகசபையின் புதல்வி அவர்.
தந்தை மறைந்த பின் 1943ஆம் ஆண்டில் தம் 23ஆம் வயதில் தந்தை பெரியாரின் உதவியாளராக, தொண்டராக, நலம் பேணுபவராக வந்தபோது காந்திமதி என்ற பெயர் க.அரசியல்மணி, கே.ஏ.மணி என்று அறியப்பெற்றிருந்தது. தந்தை பெரியாருக்காகத் தன் இளமையை, மணவாழ்க்கையை, குடும்பத்தைத் துறந்து வந்தவர். ஆரம்பத்தில் ஏராளமான கட்டுரைகளைக் "குடி அரசில்" வடித்திருக்கிறார். பெரியாருடன் பயணம் செய் வது, இயக்கச் சுவடிகள் விற்பது, உடல் நலனைக் கண்டிப் புடன் பேணுவது ஆகியவை மட்டுமே அவருடைய பணிகள்.
எந்த அளவிற்குப் பெரியாரின் உடல் நலனைப் பேணினார் என்பதற்கு கோவை அய்யா முத்து எழுதிய எழுத்துக்கள் சான்று.
அதே வேளையில் தந்தை பெரியாரின் இந்தி எதிர்ப்புப் போரில் பங்கேற்றுக் கைது ஆனபோது விசாரணை அலுவலர் உங்கள் மதம் என்று கேட்டபோது ‘திராவிட மதம்' எனவும், உங்கள் சாதி என்று கேட்டபோது ‘சாதி இல்லை' என்று பதில் தந்திட்ட கொள்கைப் பிடிப்பாளர்.
மணியம்மையாரின் வாழ்க்கையை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவது பிரிவு 1943 முதல் 1949 வரையிலானது.  இப்பிரிவில் தந்தை பெரியாரின் நலம் மட்டும் பேணியவர், "குடி அரசு" ஏட்டின் பதிப்பாளர், திராவிடர் கழக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்.
இரண்டாவது காலக்கட்டம் 1949 முதல் 1973 வரையிலான காலம். இக்காலக்கட்டம்மிகவும் குறிப்பிடத்தக்கது. ஏச்சும், இழிவுப் பேச்சும் ஏற்றுத் தந்தை பெரியாருடன் நிழலாய்ப் பயணித்த காலம். தந்தை பெரியாரின் உடல் நிலை அவ்வப்போது பாதிப்படைந்த வேளையில் அருகிருந்து இவர் மட்டும் காத்திருக்கவில்லையென்றால் தந்தை பெரியார் 95ஆண்டுக் காலம் உயிர் வாழ்ந்திருக்க இயலாது. இதை நான் சொல்லவில்லை. தந்தை பெரியாரின் திருமண ஏற்பாட்டை - திருமணத்தை அல்ல, திருமண ஏற்பாடு தான். அதனை விமரிசித்த அண்ணாவே, ஒரு முறை அவரைச் சந்தித்த ஆசிரியர் வீரமணி, "விடுதலை" சம்பந்தம் ஆகியோரிடையே உரையாடிய போது கூறியதே சான்று ஆகும்.
"வீரமணி எனக்கு இன்று என்ன வயதோ அந்த வயது அன்று அய்யாவிற்கு. இன்று எனக்கு என்ன என்ன நோய்த் தொல்லைகள் இருக்கின்றனவோ அத்தனையும் அவருக்கு இருந்தது. ஆனால் அவரைக் காத்து 95 ஆண்டுகள் வாழ வைத்த பெருமைக்குரியவர் என்றால் மணியம்மையார்தான்" என்று குறிப்பிட்டார். "புயல் வருகிறது" என்று எல்லாம் விமரிசித்த அண்ணாவின் மொழிகள் இவை.
1943 முதல் அய்யாவுடனே இருக்கிறார். 1949இல் தான் திருமண ஏற்பாட்டைச் செய்கிறார். திருமண வயதில் ஒருவர் எதற்காகத் திருமணம் செய்வாரோ - அதாவது காம சுகம், பிள்ளைப் பேறு எல்லாம் அற்ற நிலையில் அதனைச் செய்கிறார் என்றால் அது எதற்காக என்பதை எண்ணிப் பார்க்காமல் வசை பாடினர். இழிசொற்களால் அர்ச்சித்தனர்.
1943 முதல் உடன் இருப்பவரைத் திருமணம் செய்து தான் அவர் ஏதேனும் பெற வேண்டுமா? எனவே இது திருமண ஏற்பாடுதான். இயக்கத்தைக் காத்தல் பொருட்டுச் செய்த ஏற்பாடு. இதில் தந்தை பெரியாரின் தொலைநோக்கு வெளிப்பட்டது. எப்படி?
மூன்று பேருடைய கணிப்புப் பொய்த்தது. அந்த மூவர் - இராஜாஜி, அண்ணா, கவிஞர் பாரதிதாசன்.
இராஜாஜியிடம் தந்தை பெரியார் தம் திருமண ஏற்பாட்டை எடுத்துக் கூறியபோது, எந்த அளவிற்கு  தந்தை பெரியாரின் நம்பிக்கை சரியாக இருக்கும்? யோசித்துச் செய்க எனத் தன் அவ நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
அண்ணாவோ இயக்கத்தைப் பிளந்து தனி இயக்கம் கண்டார்.
புரட்சிக் கவிஞரோ திருமண ஏற்பாட்டைக் கண்டித்து அன்னையாரை இழிவாகக் கூறிக் கவிதையே படைத் தார். ஆனால், இந்த மூவருடைய எண்ணங்களும் தோற்றுப் போயின. அன்னையின் அருந்தொண்டினால்.
அண்ணா என்ன கூறினார் என்று பார்த்தோம்.
புரட்சிக் கவிஞர் ஓர் அற்புதக்கவிதையைப் படைத்து அன்னையின் அருந்தொண்டைப் பாராட்டி, பெரியாரை வாழ வைத்த பெண்மணி என்று சுட்டிக்காட்டி "அந்தப் பொடிப் பெண்ணை அன்னை என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது" என்று எழுதினார் என்றால், மேலே குறிப்பிட்ட மூவரின் கணிப்பையும் பொய்யாக் கியவர், தந்தை பெரியாரின் கண்ணாடி பார்த்த பார் வையே சரியானது என்று காட்டியவர் அன்னை மணியம்மையார்.
(தொடரும்)
தந்தை பெரியார் மறைந்தபோது இனி இயக்கம் அவ்வளவுதான் என்று எண்ணியவர்களின் எண்ணத்தில் மண் விழும்படி அன்னை வீரிட்டெழுந்தார். அய்யாவின் எண்ணம் பொய்த்து விடாதபடி புது வீராங்கனையாகக் கொள்கை கொடி கட்டிப்பறக்கச் செய்பவராகத் தந்தை இல்லாத சோகத்தை நெஞ்சில் தாங்கிப் புறப்பட்டார்.
1973இல் இயக்கத் தலைமைப் பொறுப்பைத் தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஏற்றுக் கொண்டவர் செய்த முதல் பணி, தந்தை பெரியாரின் செயல் முடிப்பது. அவர் வகுத்து தந்த பாதையில் நடைபோடுவது என்று முடிவெடுத்தார்.
ஒரு மாபெரும் இயக்கத்தலைவியான அவரிடம் இருந்த இந்த அரிய பண்புகளை, எளிமையை எடுத்துக் கூறாவிடில் மணியம்மையார் பற்றிய கூற்று நிறைவு பெறாது.
எளிமையென்றால் அவ்வளவு எளிமை. தந்தை பெரியார் விட்டுச் சென்ற சொத்துக்கள், அவருடைய சொந்தச் சொத்துக்கள் ஏராளம். ஆனால் அவர் நினைத்திருந்தால் ஆடம்பரமாக இல்லாவிடினும், மிகச் சொற்ப வசதிகளுடனும் வாழ்ந்திருக்கலாம். அப்படி வாழ்ந்திருத்தால் கூட 58 வயது என்பதைத் தாண்டி மேலும் சில காலம் வாழ்ந்திருக்கக்கூடும். அவரோ மிக மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்.
திருச்சியிலிருந்து சென்னை வரும்போது மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் மக்கள் கூட்டத்தோடு ஒருவராக அமர்ந்து வருவார். வருபவர், மாற்று உடை என்று ஒரு சேலை, பாவாடை இவற்றை ஒரு துணிப்பையில் எடுத்து வந்து இரயில் நிலையத்தில் இறங்கி நடந்து வந்து விடுவார். திடலில் இருந்து தகவல் அறிந்து அழைத்துவரச் சென்றால், "இந்த ரயில் நிலையம் அருகிலேயே திடல் இருக்கிறது. எதற்கு வீணாக வர வேண்டும்" என்று கடிந்து கொள்வார்.
கவிஞர் கலி.பூங்குன்றன் சொன்ன இரண்டு தகவல்களை இங்கே பதிவு செய்தால் சரியாக இருக்கும். "விடுதலை" ஆசிரியர் மணியம்மையார். எனவே கவிஞர் "விடுதலை" பொறுப்பேற்ற போது தலையங்கம் தான் எழுதுவது சரியாக இருக்காது என்று பழைய தலையங்கங்களையே வெளியிட்டு வந்தார்.
ஒரு நாள் மணியம்மையார் கவிஞரை அழைத்து "நாளை முதல் ‘விடுதலை'யை நிறுத்தி விடலாம் என்று இருக்கிறேன். அறிவிப்பு வெளியிட்டு விடு" என்று சொல்ல அதிர்ச்சியுற்ற கவிஞர் "ஏன் அம்மா? அவ்வாறு செய்ய வேண்டும்?" என்று கேட்க "பின் என்ன பழைய தலையங்கங்களையே போட்டுக்கொண்டு இருந்தால் தொண்டர்கள் சோர்வு அடைந்து விடுவார்கள். உன்னை எழுதச்சொன்னேன். நீ எழுதத் தயங்குகிறாய்? பின் பத்திரிகை நடத்தி என்ன பயன். நிறுத்தி விட வேண்டியது தான்" என்று சொல்ல அதன் பின் தாமே தலையங்கம் எழுதுவதாகச் சொல்லி அப்பணியைச் செய்து வந்திருக்கிறார்.
அம்மாவின் பண்பிற்கு மற்றோர் எடுத்துக்காட்டு. சென்னை புரசைவாக்கத்தில் கண் அறுவைச் சிகிச்சையினை ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் மருத்துவமனையில் செய்து கொண்டவரை கவிஞர் சென்று கண்டிருக்கிறார். "என்ன அம்மா இப்படி சொல்லாமல் வந்து மருத்துவ மனையில் இருக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு அன்னையார் "டாக்டர் அறுவைச் சிகிச்சை செய்கிறார். நர்ஸ் மருந்து ஊற்றுகிறார். எனக்கு உணவு முதலியன கொடுப்பதற்குத் தங்கை மகள் உடன் இருக்கிறாள். நீ என்ன செய்யப் போகிறாய்! சரி வந்ததற்கு விடுதலையைப் படித்துக் காட்டி விட்டுப்போ" என்று கூறிவிட்டாராம். எவ்வளவு எளிமையான குணம் என்று பாராட்டாமல் இருக்க முடியாது.
இப்படி அம்மாவின் எளிமைக்கு இன்னும் பல சான்று காட்டலாம். மேலும் ஒன்றே ஒன்று. "விடுதலை" சம்பந்தம் இல்லத்திருமணம் மறுநாள் அம்மாவின் தலைமையில் நடைபெற இருக்கிறது. திடலில் பெரிய பந்தல் போட்டு விளக்கு அலங்காரத்துடன் தடபுடல் விருந்து ஏற்பாடுகள் பலமாக இருந்தன.
திருச்சியிலிருந்து மாலை அம்மா வந்து சேர்ந்தார்கள். பலத்த ஏற்பாடுகளைக் கண்டு அதிர்ச்சி. ஆசிரியரை அழைத்தார்கள். "வீரமணி நாம் திருமணங்களை எளிமையாக நடத்தவேண்டும் என்று உபதேசம் செய்கிறோம். ஆனால் நம் திடலிலேயே இவ்வளவு ஆடம்பரமா? நாளை நான் வரப்போவதில்லை" என்று கூறி விட்டு ஷெனாய் நகர்  சுந்தரவடிவேலு இல்லம் சென்றவரை ஆசிரியர் சென்று சமாதானம் செய்து அழைத்து வந்தார்கள்.
எளிமைக்கு மட்டுமல்ல; துணிச்சலுக்கும் தொண்டர்களை மதித்துப் போற்றுவதிலும் அம்மாவின் வாழ்வில் இடம் உண்டு.
1957இல் சாதி ஒழிப்புப் போராட்டத்தில் தந்தை பெரியார் சிறைப் பட்ட வேளையில் திருச்சி சிறையில் இறந்த இரு தொண்டர்களின் உடலைக் கொடுக்காமல் சிறை நிருவாகம் அழிச்சாட்டம் செய்தபோது அன்னையார் சென்னை வந்து அமைச்சர்களிடம் பேசி இருவர் உடலையும் வெளிக்கொணர்ந்து காவிரிக் கரையில் புதைக்க முயன்றபோது, காவல்துறை அதிகாரிகுறிப்பிட்ட பாதை வழியேதான் செல்ல வேண்டும் என்று கட்டளையிட "முடியாது" என்று மறுத்துச் சாலையில் அமர்ந்து மறியல் செய்தவர் நம் தங்கத்தாய் மணியம்மையார். இது நடந்தது திராவிடர் கழக ஆதரவு பெற்ற காமராசர் ஆட்சியில்.
அதைப் போலவே பின்னால் திராவிடர் கழக ஆதரவு பெற்ற கலைஞர் ஆட்சியில் அம்மாவின் சாதனை நிகழ்வு இராவண லீலா நடத்தியது. தடையை மீறி இராவண லீலா நடத்த முயன்றபோது டில்லியில் இருந்த இந்திரா அரசு தமிழகத்தில் ஆட்சி செய்த கலைஞர் அரசை அதை எப்படியும் நடத்த விடாமல் தடுக்கும்படி நெருக்கடி கொடுத்தது.
தலைவர் கலைஞர் காவல்துறை ஷெனாயையும், துரையையும் அனுப்பி அம்மாவிம் பேசச் சொன்னார். அம்மாவிடம் வந்து பேசினர். அம்மா உறுதியாக இராவண லீலா நடைபெறும், இராம, லட்சுமணர் உருவங்களுக்குப் பெரியார் திடலில் எரியூட்டப்படும் என்று கூறிவிட்டார். எனவே அவர்கள் அம்மாவிடம் விடை பெற்றுச் செல்கையில், "அய்யாவாக இருந்தால், எங்கள் வேண்டுகோளை ஏற்றுப் போராட்டத்தை நிறுத்தியிருப்பார்" என்று சொல்ல, அம்மா நச்சென்று அவர்களிடம் சொன்ன பதில் "ஆமாங்க! அவர் தலைவர். அவர் சொன்னால் தொண்டர்கள் மீற மாட்டார்கள். நான் இயக்கத் தலைவியானாலும் தொண்டர் தான். நான் சொன்னால் எந்த அளவிற்கு கேட்பார்கள் என்று உறுதி சொல்ல முடியாது" என்று கூறிவிட்டார்.
மூன்றாவது நிகழ்ச்சி எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நடந்தது. தொண்டர் பொருட்டு அம்மா எந்த அளவிற்குப் பொங்கி எழுவார் என்று காட்டக்கூடியது. இந்திரா காந்திக்குக் கறுப்புக் கொடி காட்டச்சென்றபோது, மறைமலையடிகள் பாலத்தில் அன்னை, ஆசிரியர் உள்ளிட்டோரை கைது செய்தபோது வேனில் அமர்ந்திருந்தவர், வெள்ளைச்சாமி என்ற காவல் அதிகாரி தொண்டரை அடித்துக் கொண்டிருந்ததைக் கண்டபோது வேனில் இருந்து இறங்கி, அந்த அதிகாரியிடம் "ஏன் அடிக்கிறாய்!" என்று துணிவுடன் கேட்டபோது, அங்கு வந்த வால்டர் தேவாரம் அந்த அதிகாரியைக் கண்டிக்காது, ஒரு மாபெரும் இயக்கத் தலைவியாம் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாரைப் பார்த்து, அவரெல்லாம் அந்தப்பதவிக்கு வரக்காரணமாக இயக்கத் தலைவி அன்னையாரைப் பார்த்து "மி ஷ்வீறீறீ sலீஷீஷீளீ ஹ்ஷீu" - "உங்களைச் சுட்டுக் கொல்வேன்" என்று மிரட்டியது கண்டும் மிரளாமல், அஞ்சாமல் துணிவுடன் இருந்தவர் அன்னையார். எளிமைக்கும், துணிச்சலுக்கும், அன்னைப் பண்புடன் இயக்கத் தோழர்களுக்குத்தோழர் நாகம்மையார்போல் வடித்துக் கொட்டிய, தாமே சமைத்துப் போட்ட ஒருதலைவியை வேறு எங்கும் காணமுடியாது. உலகிலேயே பகுத்தறிவு இயக்கத்திற்குத் தலைமையேற்ற ஒரே தலைவியை வேறு எங்கும் காணவியலாது.
அன்னையாரின் தொலை நோக்கத்தையும், அருட்கொடை உணர்வினையும் கூறாவிடில் இந்த உரை நிறைவு பெறாது.
தொலைநோக்கு என்பது, தனக்குப்பின் இந்த இயக்கம் நிலை பெறுவது யாரால் என்று கண்டுபிடித்து தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணிதான் இயக்கத்தை வழிநடத்த, தந்தை பெரியாரை உலக மயமாக்க உகந்தவர் என்று கண்டறிந்த ஒன்று போதும் அன்னையாரின் பெருமை கூற! இயக்கத்தில் எவ்வளவோ மூத்த தலைவர்கள், சிறந்த எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் இருந்தனர். ஆயினும் அன்னையார் அதைக் கண்டு கொண்டாலும், இயக்கம் தழைக்க தந்தை பெரியாரின் தொண்டு சிறக்க ஆசிரியர் வீரமணியே தகுந்த வாரிசு என்று உயில் எழுதி வைத்தார்.
முக்கியஸ்தர்கள் ஆசிரியரிடம் வந்து அன்னையார் இருக்கையில் அந்தப் பொறுப்பை திருவாரூர் தங்கராசுவிடம் விட்டுக் கொடுக்கச் சொன்னபோது அவரும் ‘பெருந்தன்மையோடு, சரி' என்று சொல்லி விட்டார். அம்மாவிடம் போய்த் தன் செயலாளர் பொறுப்பைத் தமிழர் தலைவர் விட்டுக்கொடுக்க ஒத்துக் கொண்டார் என்றவுடன் அம்மாவுக்கு வந்ததே கோபம், "நான் கொடுத்த பதவியை விட்டுக்கொடுக்க உனக்கு உரிமை கொடுத்தது யார்?" என்று கேட்க ஆசிரியர் பணிந்தார். இதைப்போலவே இன்னுமொரு சம்பவம். மருத்துவமனையில் இருந்த அம்மா குழுக்கூட்டத்திற்கு வந்து தாம் வகித்த பொறுப்பைத் துறப்பதாகவும், ஆசிரியரிடம் அதனை ஒப்புவிப்பதாகவும் மருத்துவமனையிலேயே எழுதி எடுத்து வந்த கடிதத்தை ஆசிரியர் ஒப்புக்கொள்ளாது கிழித்துப் போட்ட நிகழ்ச்சியும் உண்டு.
இப்படி எத்தனை, எத்தனையோ நிகழ்வுகள். எடுத்துச் சொல்லவும் ஆவல் தான். எனினும் கால நெருக்கடி கருதி இவ்வாய்ப்பு அளித்த தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் முனைவர் ஒப்பிலா மதிவாணன் அவர்களுக்கும் அதற்கு உறுதுணையாக விளங்கிய முனைவர் ஏகாம்பரம், முனைவர் நெடுமாறன் அவர்களுக்கும் நன்றி கூறி இந்த அறக்கட்டளைப் பொழிவை நிறைவு செய்கிறேன்.
- தொடரும்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

திருச்சி மாநாடு

திருச்சிராப்பள்ளியில் கடந்த சனியன்று (27.5.2017) திரா விடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் நடத்தப்பட்ட மாநாடு - இயக்க வரலாற்றில் என்றென்றும் நங்கூரம் பாய்ச்சி நிற்கக் கூடிய அளவிற்கு சிறப்புகளைக் கொண்டதாகும்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 36 தீர்மானங்களும் முத்து முத்தானவை. பெண்களின் சகலப் பரிமாணங்களிலும் கிடைக்க வேண்டிய உரிமைகள் பற்றியும் பேசுகின்றன - எந்தெந்த வகைகளில் எல்லாம் பெண்கள் ஆண்களின் உடைமைகளாகக் கருதப்பட்டு நசுக்கப்படுகின்றனர் என்னும் உண்மைகளை வெளிப்படுத்தும் அதே நேரத்தில் பெண்கள் கிளர்ந்தெழ வேண்டிய ஆவேசத்தையும், ஆழத்தையும் புலப்படுத்துவனவாக அமைந்துள்ளன.
நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் என்கிற அமைப்புகள் திராவிடர் இயக்கம் என்னும் பொதுப் பெயரில் சுட்டப்படுகின்றன. இந்த அமைப்புகள் நடத்திய மாநாடுகள்  எல்லாம் குறிக்கோளோடு நடத்தப் பட்டவையாகும். அவற்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் காலத்தின் கலங்கரை விளக்கமே! இதனைப் பெண்ணுரிமைப் பாதுகாப்பு மாநாட்டிலும் திராவிடர் கழகத் தலைவர் சுட்டியும் காட்டியுள்ளார்.
அத்தீர்மானங்கள் பிற்காலத்தில் அரசின் சட்டங்களாகவே வழங்கப்பட்டுள்ளன.
அதிலும் குறிப்பாகப் பெண்கள் குறித்து தீர்மானங்கள் சுட்டிக் காட்டத் தகுந்தவையே! கல்வி உரிமை, உத்தியோக உரிமை, திருமண வயது நிர்ணயம், சொத்துரிமை, மக்கள் பேறு, திருமண உரிமை, விவாகரத்து உரிமை, விதவைப் பெண்களுக்கு மறுமணம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இராணுவத் துறைகளிலும்கூட பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்று 1929களில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதற்குத் துணிவும், தொலைநோக்கும், அந்தத் தத்துவத்தின் மீதான அடக்க முடியாத ஆளுமையும் தேவை.
இராணுவத் துறையில் பெரிய அதிகாரிகள் நிலைக்குப் பெண்கள் கம்பீரமாக உயர்ந்து நிற்பதை ஒருகணம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
என்றாலும் இந்தக் கால கட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் உயர்ந்து எழுந்து விட்டார்களா - தடையில்லா சுதந்திரம் கிடைத்துதான் விட்டதா என்னும் கேள்வி அறிவுக்கு விருந்தே!
சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எத்தனை ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதைக் கவனித்தால் கட்சிகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளிலும் உள்ள ஆண்களிடத்தில் குடி கொண்டிருக்கும் - தான் என்னும் ஆண்மைதான் அதற்குத் தொடர்ந்து முட்டுக்கட்டையைப் போட்டு வருகிறது. 
நாடாளுமன்ற இரு அவைகளில் மாநிலங்களவையில் மட்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவையில் நிறை வேற்றப்படவில்லை. இது எதைக் காட்டுகிறது? ஆண்களின் சுயநலம்தான் இதன் பின்னணியில் இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா? நாடாளுமன்றத்திலேயே கட்சிகளைக் கடந்து கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள் என்றால் இதன் பொருள் என்ன?
சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் பெண் உறுப் பினர்களின் விழுக்காடு இன்னும் 12 சதவீதத்தைத் தாண் டவில்லை என்பது நியாயந்தானா?
தங்களுக்குரிய பிரச்சினைகள்பற்றி அவர்கள் தானே சட்டப் பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் குரல் எழுப் பிட வேண்டும்; ஆண்கள் குரல் கொடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்க முடியுமா? எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா என்று தந்தை பெரியார் சொன்னதை இந்த இடத்தில் நினைவுபடுத்திப் பார்த்துக் கொள்வது மிகவும் நல்லதே!
பொதுவாக முஸ்லிம் நாடுகளில் பெண்களுக்கு உரிமை கள் மறுக்கப்படுகின்றன என்று பரவலான ஒரு கருத்து உண்டு; ஆனால் உண்மை என்ன தெரியுமா? இந்த விடயத்தில் முசுலிம் நாடுகளைவிட இந்தியாபின் தங்கி உள்ளது என்பதுதான் அப்பட்டமான உண்மை.
இந்தியாவில் ஏதோ பிரதமராகவும், குடியரசு தலைவ ராகவும் ஒரு பெண் வந்து விட்டார் என்பதற்காக இந்தியாவில் பெண்ணுரிமை கொடி கட்டிப் பறக்கிறது என்று தவறான ஒரு முடிவுக்கு வரக் கூடாது.
சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், அமைச்சரவைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களின் எண்ணிக்கை இருப்பதே அறிவு நாணயம் ஆகும்.
33 விழுக்காடு இடங்கள் பெறுவதற்கே இவ்வளவு முட்டுக்கட்டை - இவ்வளவு தாமதம் என்றால் 50 விழுக்காடு என்பதை நினைத்துத்தான் பார்க்கத்தான் முடியுமா? குறைந்தபட்சம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள பெண்களாவது இந்தப் பிரச்சினை குறித்து வாய்த் திறக்காதது ஏன்? கட்சிக் கட்டுப்பாட்டுக் கட்டளைக்குள் பதுங்கிவிட்டார்களா?
மாநிலங்களிலும் சரி, மத்தியிலும் சரி அமைச்சரவையில் பெண்களுக்கென்று சில துறைகளை ஒதுக்கி வைத்துள்ளது பரிதாபமே. இது குறித்துக்கூட திருச்சி மாநாடு ஒரு தீர்மான வடிவத்திலே பேசுகிறது.
சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் மட்டுமல்ல, இவற்றிற்கு மேலே மிகப் பெரிய அதிகாரங்களைத் தம் வசம் வைத்துள்ள நீதிமன்றங்களில் பெண்களின் நிலை என்ன? இந்தியத் துணைக் கண்டத்தில் 10 மாநிலங்களில் உள்ள நீதிமன்றத்தில் ஒரே ஒரு இடம்கூடப் பெண்ணுக்குக் கிடையாது - இவ்வளவுக்கும் இந்தியாவைப் பாரத மாதா என்று பீற்றிக் கொள்கிறோம்.
ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்குத் தந்தையின் ஜாதியைத்தான் கணக்கில் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல் லுவதில் என்ன நீதி இருக்கிறது? பாலியல் வேறுபாட்டு அடிப்படையில் நீதி இருக்கக் கூடாது என்பதெல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய்த்தானா?
ஒரு பெண் நீதிபதியாக இருந்தால் இப்படியொரு தீர்ப்புக் கிடைத்திருக்குமா? திருச்சி மகளிர் மாநாட்டில் இதுகுறித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருப்பது மிகவும் சிறப்பானதே! மாநில மத்திய அரசுகள் திருச்சி - பெண்ணுரிமை பாதுகாப்பு மாநாட்டுத் தீர்மானங்கள்மீது கவனம் செலுத்தி கருத்தூன்றிப் பார்க்கட்டும். அப்படிப் பார்க்கப்பட்டால் பெண்களுக்கு தேவையானது என்ன என்ற வெளிச்ச மின்னல் தென்படும்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

கோமாதா பக்தர்களைக் கோபமாக சீறும் விவேகானந்தர்.

"பசுவதையும் - இந்துமதமும்"
கோமாதா பக்தர்களைக் கோபமாக சீறும் விவேகானந்தர்
ஒன்பது லட்சம் மக்கள் பட்டினி - உதவி செய்யுங்களே!
நரேந்திர பாபு போன பின்னர், பசுக்களைப் பரிபாலிக்கிற சபை ஒன்றினுக்குரிய ஊக்கமுள்ள பிரசாரகர் ஒருவர் சுவாமி ஜியைக் காணும் பொருட்டு வந்தார். அவர் தம் தலையிலே காஷாயத் தலைப்பாகை அணிந் திருந்தார்; தோற்றத்தில் வட நாட்டினரைப் போலக் காணப்பட் டார். அவரது உடை ஏறக்குறைய சந்நியாசி களுடைய உடை போன்றிருந்தது. 
அந்தப் பசு பரிபாலன சபைப் பிரசாரகர் வந்தார் என்று கேள்விப்பட்டதும் சுவாமிஜி சாலை அறைக்கு வந்தார். பிரசாரகர் சுவாமிஜியை வணங்கிப்பசுத்தாயினுடைய படம் ஒன்றினைச் சுவாமிஜிக்குக் கொடுத்தார். சுவாமிஜி படத்தைப் பெற்று அருகில் நின்ற ஒருவர் கையில் கொடுத்த பின்னர், பின்வரும் சம்பாஷணை நிகழ்ந்தது.
சுவாமி: உங்களுடைய சங்கத்தின் நோக்கம் என்ன?
பிரசாரகர்: நமது நாட்டிலுள்ள பசுத் தாய்களைக் கசாப்புக்காரர்களிட மிருந்து நாங்கள் பாதுகாக்கிறோம். நோயுற்ற பசுக் களும் வலுவிழந்தனவும் கசாப்புக்காரர்களிடமிருந்து வாங்கப்பட்டனவும் பரிபாலிக்கப் படுவததற்காகப் பசு வைத்திய சாலைகளை ஏற்படுத்தி யிருக்கிறோம்.
சுவாமி: அது மிக நல்லது. உங்கள் வரு வாய்க்கு வழி என்ன?
பிரசாரகர்: உங்களைப் போன்ற பெரிய மனிதர் அன்போடு கொடுக்கின்ற நன் கொடைகளைக் கொண்டே சபையின் வேலை நடந்து வருகின்றது.
சுவாமி: இப்பொழுது எவ்வளவு பணம் சேர்த்து வைத்திருக்கிறீர்கள்?
பிரசாரகர்; இந்த முயற்சிக்கு மார்வாடி வணிகர் கூட்டம் சிறந்த உதவி புரிகின்றது. இந்த நன்முயற்சிக்காக அவர்கள் பெருந் தொகை கொடுத்திருக் கின்றார்கள்.
சுவாமி: மத்திய இந்தியாவிலே ஒரு கொடிய பஞ்சம் எழுந்து விட்டது. ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள் என்று இந்திய அரசாங்கத் தார் செய்தி வெளியிட்டிருக்கின்றனர். இதற்கு உதவி புரிவதற்கு உங்களுடைய சபை ஏதாவது செய்திருக்கின்றதா?
மக்களுக்கு இரங்கோம்:
மாடுகளுக்கே இரங்குவோம்
பிரசாரகர்: பஞ்சம் முதலிய துன்பம் வரும்பொழுது நாங்கள் உதவி புரிவ தில்லை. எங்கள் சபை பசுத்தாய் களைப் பரிபாலிக்கும் பொருட்டே ஏற்படுத்தப்பட்டது.
சுவாமி: உங்களுடைய சொந்தச் சகோதர சகோதரிகளாகிய லட்சக்கணக் கான மக்கள் பஞ்சத்தினால் துன்பம் அடைந்து மரணத்தின் வாயில் விழும் பொழுது அவர்களுக்கு எவ்வழியிலா வது உணவளித்துக் காப்பாற்ற வேண் டுவது உங்கள் கடமை என நீங்கள் நினைக்க வில்லையா?
பிரசாரகர்: இல்லை. இந்தப் பஞ்சம் மக்களுடைய பாவகருமத்தினாலே ஏற் பட்டது. கருமம் எப்படியோ, பயனும் அப்படியே. பிரச்சாரகர் இந்த வார்த்தை களைக் கூற, இவறறைக் கேட்டுச் சுவாமிஜி யினுடைய கண்களிலிருந்து நெருப்புப் பொறி பறப்பது போன்றிருந்தது. முகம் சிவந்தது. அவர் தம் சினத்தை அடக்கிக் கொண்டு, பின்வருமாறு சொல்லுவராயினார்:
தம்முடைய சொந்தச் சகோதரர் பட்டினியினால் இறக்க, அவர்களுடைய உயிரைக் காப்பாற்றும் பொருட்டு ஒருபிடி அரிசி கொடாமல், மனிதர் மேல் அனுதாப மின்றிப் பறவைகளுக்கும், விலங்குகளுக் கும் குவியல் குவியலாக உணவைக் கொடுக்கின்ற இத்தகைய சபைகளில் நான் புகுவதில்லை. மக்கள் சங்கம் இவற்றினால் நன்மை அடை கிறதென நான் எண்ண வில்லை. மனிதர் தம் கருமத்தினால் இறக்கின் றனரென்று நீர் வாதிப்பீராயின், இவ்வு லகத்திலே எதைக் கருதியும் முயல வேண்டுவதில்லை என்பது தீர்மானமா கின்றது. விலங்குகளைப் பரிபாலிப்ப தற்காக நீர் செய்கிற வேலையும் இவ் விதிக் குப் புறம்பாகாது. பசுத்தாய்களும் தம் முடைய கருமத்தினால் கசாப்புக் காரர் களுடைய கையிலகப்பட்டு இறக்கின்றன வென்று சொல்லிவிட்டுச் சும்மா இருக்க லாமே?
பிரசாரகர்: சிறிது நாணி, ஆம். நீங்கள் சொல்வது உண்மை. ஆனால், பசு நம் அன்னை என்று சாத்திரங்கள் சொல்லு கின்றனவே? என்றார்.
சுவாமிஜி: நகைத்துக் கொண்டே, ஆம், பசு நம் அன்னை என்பதை  நான் அறிந்து கொண்டேன்; இத்தகைய புத்திசாலிகளான பிள்ளைகளை வேறு யார்தான் பெறுதல் கூடும்! என்றார்.
இவர்கள் மனிதர்களா?
வடநாட்டுப் பிரசாரகர் அந்த விஷ யத்தைப் பற்றி பின்பு ஒன்றும் பேச வில்லை. சுவாமிஜி கேலி பண்ணிய கருத்தை அவர் அறிந்து கொள்ள வில்லை போலும்! தமது சபைக்காக ஏதாவது உதவ வேண்டுமென்று அவர் சுவாமிஜியை கேட்டார்.
சுவாமி: நான் ஒரு சந்நியாசி, பக்கிரி உமக்கு உதவி செய்ய எங்குப்பணம் பெறுவேன்? பணம் பெற்றாலும், முதலிலே மனிதருடைய சேவைக்காகச் செல வழிப்பேன். முதலிலே மனிதனுக்கு உணவு, கல்வி, ஆன்மிக வாழ்க்கை என்னும் இவற்றைத் தந்து காப்பாற்ற வேண்டும் அதற்குப் பின்பு ஏதாவது மிகுந்திருந்தால், உம்முடைய சபைக்குக் கொடுக்கலாம்.
இந்த வார்த்தைகளைக் கேட்டுப் பிர சாரகர் சுவாமிஜியை வணங்கி விட்டுப் போய்விட்டார். பின்பு சுவாமிஜி எங்களை நோக்கிச் சொல்லுகிறார்.
அந்த மனிதனுடைய சொற்களைப் பாருங்கள்! மனிதர் தமது கருமத்தினால் இறக்கிறார்கள் என்று சொல்கின்றான், அவர்களுக்கு உதவுவதனால் என்ன பயன் என்கிறான். நாடு நாசமாய்ப் போய்விட்ட தென்பதற்கு இது ஒரு தக்கசான்று. 
இந்துக் களுடைய கரும விசாரணை எவ்வளவு பழுதடைந்து விட்டதென்பதைப் பாருங்கள்! மனிதருக்கு இரங்காத இதயமுள்ளவர்கள் இவர்கள் இத்தகையோரை மனிதர் என்று எண்ணலாமா?
("சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள்" பக்கம் 5,7)
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

பிஜேபி ஆட்சியின் மதவாத இந்துத்துவா போக்கை எதிர்த்து, கண்டித்து மே 30 மாலை சென்னை பெரியார் திடலில் மாபெரும் பொதுக் கூட்டம்

80 சதவீத மக்களின் மாட்டிறைச்சி உணவைத் தடை செய்வதா?
பிஜேபி ஆட்சியின் மதவாத இந்துத்துவா போக்கை எதிர்த்து, கண்டித்து
மே 30 மாலை சென்னை பெரியார் திடலில் மாபெரும் பொதுக் கூட்டம்
ஜூன் முதல் தேதி மாலை வள்ளுவர் கோட்டமுன் கண்டன ஆர்ப்பாட்டம்!
மதவெறி மாய்த்திடுவோம் வாரீர்! வாரீர்!!
தமிழர் தலைவரின் அன்பு வேண்டுகோள்!

சுதந்திர நாட்டில் ஜாதி ஒழிப்புக்கான அரசின் திட்டம் என்ன?  - கி.வீரமணி அறிக்கை
மதவாதக் கண்ணோட்டத்தோடு மக்களின் உணவுப் பிரச்சினையில் மூக்கை நுழைக்கும் மத்திய பிஜேபி அரசை எதிர்த்து மே 30ஆம் தேதி மாலை சென்னை பெரியார் திடலில் நடக்கும் பொதுக் கூட்டத்திலும், ஜூன் முதல் தேதி மாலை வள்ளுவர் கோட்டத்தின் முன் நடக்கவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் பெருந் திரளாகப் பங்கேற்குமாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பசு, காளை, எருமை, ஒட்டகம் இவை இறைச்சிக்காக விற்பனை செய்யப்படக் கூடாது என்ற சட்டத்தை மத்தியில் உள்ள பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பிறப்பித்துள்ளது.
இந்தச் செய்தியைப் பார்த்து உலகம் முழுவதும் உள்ளவர்கள் கைகொட்டிச் சிரிப்பார்கள் என்பதில் அய்யமில்லை.
குடிமக்கள் மூன்று வேளை உணவு சாப்பிடுகிறார்களா, அதற்கு உத்திரவாதம் உண்டா? என்பதில் கவனம் செலுத்த வேண்டிய அரசு தனது மதவாதப் புத்தியில் சிக்கி இப்படியொரு சட்டத்தைப் பிறப்பித்துள்ளது. இரவு உணவு இல்லாமல் தூங்கச் செல்பவர்கள் இந்தியாவில் 20 கோடிப் பேர் என்று வெட்கமில்லாமல் ஒருபக்கத்தில் சொல்லிக் கொண்டே இன்னொரு பக்கத்தில் மக்களின் உணவுப் பிரச்சினையில் மூக்கை நுழைப்பது அறிவுடைமையா?
இதில் பல்வேறு பிரச்சினைகளும், சிக்கல்களும் உண்டு. அதைப்பற்றியெல்லாம் சீர் தூக்கிப் பார்க்காமல், இந்து மதவாதப் போதைக்கு ஆளாகி இப்படியொரு கண் மூடித்தனமான வேலையில் இறங்கியுள்ளது.
இந்தியாவில் இறைச்சி உணவு உண்போர் 80%
உலகின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 68 விழுக்காடு மக்கள் இறைச்சி உணவை வழக்கமாக கொண்டவர்கள் ஆவார்கள். இந்தியாவிலோ 80 விழுக்காடு மக்கள் இறைச்சி உண்பவர்கள் - அதிலும் குறிப்பாக மாட்டிறைச்சி உண்பவர்கள் 47 விழுக்காடாகும்.
வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலும் அன்றாட உணவு மாட்டிறைச்சியே! மேகாலயா 80.74%, லட்சத்தீவு 77.29%. ஒரு சட்டத்தின் மூலம் இதனை மாற்றி அமைக்க முடியும் என்று கருதுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடைந்தெடுத்த கோமாளிகள் என்றுதான் கருதப்பட வேண்டும்.
பிஜேபி ஆளும் கோவா, இதற்கு முன்பே எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்து விட்டதே!
ஏழை, எளிய மக்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்கும் சத்துணவு மாட்டுக்கறியே! 2015ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி இந்தியாவில் 80 விழுக்காடு மக்கள் புரதச் சத்து குறைபாடு உடையவர்கள்; புரதச்சத்து நிறைந்த உணவு ஒன்று உண்டென்றால் அது மாட்டு மாமிசமே!
மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பில் லினோலிக், டால்மி டோலிக் ஆசிடுகள் உள்ளன. இவை புற்று நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் ஒன்று உண்டு - மாட்டிறைச்சியில் அதிக சத்து இருந்தாலும் குறைந்த அளவு கலோரிகள் என்பதுதான் இதில் உள்ள தனித்துவம் ஆகும்.
உலகில் நீண்ட ஆயுள் வாழும் பகுதிகளைப் பார்த்தால் அதில் இறைச்சி உணவே முதலிடம் வகிக்கிறது. ஹார்மோன்கள் நலனுக்கும் இவ்வுணவு அவசியமாகும்.
மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதலிடம் இந்தியாவே!
உலகில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் பிரேசில் முதலிடத்தில் இருந்தது; கடந்த ஈராண்டுகளில் அதனை கீழே தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2.4 மில்லியன் டன்களை ஏற்றுமதி செய்து  சாதனை படைத்துள்ளது.
கடந்த நிதி ஆண்டில் மட்டும் ரூ.13,275 கோடி மதிப்புள்ள மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் பசு மாட்டு மாமிசம் மட்டுமே 40 விழுக்காடாகும் (கோமாதா பேசும் இந்துத்துவா வாதிகளுக்கு "அர்ப்பணம்!")
பாரதீய ஜனதாவோ, சங்பரிவார்களோ பசு மாதாவைக் கொல்லுவதா - பசு தெய்வம் அல்லவா என்று மூக்கைச் சிந்தக் கூடியவர்கள்பற்றி நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல் ஒன்று உண்டு. இந்தக் குலமாதா - கோமாதா இறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் மிகப் பெரிய முதல் அய்ந்து நிறுவனங்களை நடத்துபவர்கள் யார் தெரியுமா? பார்ப்பனர்கள்! பார்ப்பனர்கள்!! பார்ப்பனர்களே!!!
ஊருக்குத்தான் உபதேசமா? முதலில் இந்த எரிவதை இழுக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். இந்தியாவில் தடை செய்து விட்டு ஏற்றுமதி வியாபாரம் செய்து கல்லா கட்டும் இந்தப் பார்ப்பனர்களின் இரட்டை வேடத்தை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
மாட்டிறைச்சி ஏற்றுமதியில்
முதல் அய்ந்து இடத்தில் இருப்போர் பார்ப்பனரே!
அல் கபீர் எனும் மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனத்தில் திமில் இல்லாத பசுக்கள், திமிலுடன் கூடிய காளைகள் கொல்லப்பட்டு,  இறைச்சிப் பாக்கெட்டுகளின் மேலே அம்புக்குறி இடப்பட்டிருக்கும். பார்ப்பனர்களால் நடத்தப்படுகின்ற மாட்டிறைச்சி ஏற்றுமதி தொழில் நிறுவனங்களின் பட்டியல் வருமாறு: 
1. அல் கபீர் எக்ஸ்போர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட், உரிமையாளர் சதீஷ் (மும்பை) பார்ப்பனர் 
2. அரேபியன் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட், உரிமையாளர் சுனில் கபூர் (மும்பை) பார்ப்பனர் 
3. எம்.கே.ஆர். ஃபுரோசன் ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் பிரை வேட் லிமிடெட், உரிமையாளர் மதன் அபோட் (டில்லி) பார்ப்பனர் 
4. பி.எம்.எல். இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட், உரிமையாளர் ஏ.எஸ்.பிந்த்ரா (சண்டிகர்) பார்ப்பனர் 
5. இந்திரா நூயி (தமிழ்நாடு) பார்ப்பனப் பெண்மணி.  உலகின் மிகப்பெரிய பசு மாட்டிறைச்சி விற்பனை நிறு வனத்தின் தலைமைப்பொறுப்பில் உள்ளார். 
6. பாஜக சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சிங் சோம், மாட்டிறைச்சி பதப்படுத்தும் நிறுவனமான அல் துவா நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.
எதிலும் அறிவு நாணயம்  இல்லாத ஒரு கூட்டம் உலகில் உண்டு என்றால்,  அவர்கள் இந்த  இந்துத்துவாவாதிகளும், பார்ப்பனர்களும் தான்.
22 கோடி பேர் வேலை இழப்பர்
மாட்டிறைச்சி தடையால் அந்தத் தொழிலை நம்பி வாழும் 22 கோடி மக்கள் இந்தியாவில் பாதிக்கப்படுவார்கள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாகும். தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இழுத்து மூடப்படும் அபாயம்! 2 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப் போகிறோம் என்று கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்குறுதி கொடுத்தார்களே -  செயல்படுத்தினார்களா? குதிரை குப்புறத் தள்ளியதோடு அல்லாமல் குழியும் பறித்த கதையாக ஏற்கெனவே பணியாற்றும் 2.2 கோடி மக்களையும் நடு வீதியில் நிற்க வைக்கும் பேராபத்து இதில் பதுங்கி இருக்கிறதே!
இதன் விளைவு - இந்தியாவை உள்நாட்டு யுத்தப் பூமியாக மாற்றியமைக்கப் போகிறது என்பது மட்டும் உறுதி! உறுதி!!
மாட்டுச் சந்தையில் ஒரு லட்சம் கோடி  ரூபாய் புழக்கம் - 90 சதவீத வியாபாரம் சந்தையில்தான். அதில் கை வைப்பதன் மூலம் பொருளாதார வீழ்ச்சிக்கும் வித்திடப்படுகிறது.
எதிலும் மதவாதக் கண்ணோட்டம் என்பது ஆபத்தானது என்பதற்கு மோடி அரசின் இந்த முடிவு ஒன்றே போதுமானது.
இந்து சாத்திரங்கள் சொல்லுவது என்ன?
கோமாதா பற்றிப் பேசும் புத்திரர்கள் - இந்து மத சாத்திர நூல்களில் பசு மாமிசம் பற்றிப் பேசப்படவில்லையா? பசுவைக் கொலை செய்து 36 பங்குகளாகப் பிரிக்க வேண்டும். இதை முறைப்படி உணர்ந்தவன் சுவர்க்கத்தை அடைகிறான் என்கிறதே அய்தரேய ப்ராஹ் மண பஞ்சிகா காண்டம். எப்படியெல்லாம பசுவை அடித்துக் கொல்ல வேண்டும் என்ற வழி முறையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதே. சிரார்த்தத்தில் விதிப்படி விதிக்கப்பட்ட பிராமணன்  மாமிசத்தைத் தோஷம் என்று புசியா விட்டால் அவன் 21 ஜனனமும் பசுவாகப் பிறப்பான் (மனுதர்மம் அத்தியாயம் 5 சுலோகம் 38).
இதற்கெல்லாம் இந்துத்துவாவாதிகள் என்ன பதில் சொல்கிறார்கள்?
மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி ஆர்.எஸ்.எஸின் கட்டளைக்கு இணங்கி செயல்பட்டே தீர வேண்டும்; இப்பொழுது இல்லை என்றால் வேறு எப்பொழுது (Now or Never) என்ற வேகத்தில் செயல்பட்டு வருகிறார்கள்.
மதம் - தனி மனிதன் பிரச்சினை. உணவுப் பழக்கமும் அத்தகையதே! அதனைப் பொது வெளியில் நிறுத்தி ஆணை பிறப்பது என்பது - காட்டு ராஜாக்களின் காலம்! காட்டுத் தர்பார் நடத்தும் என்.டி.ஏ. ஆட்சியை வெளியேற்ற இதுதான் சரியான தருணம்.
மதசார்பற்ற சக்திகளே திரள்வீர்!
மதச் சார்பற்ற சக்திகள் ஒன்று திரள வேண்டும்; அவர்கள் சொல்லும் முறையிலே சொல்ல வேண்டுமென்றால் இப்பொழுது இல்லை என்றால் நாம் வேறு எப்பொழுது?
ஒன்று திரண்டு வாருங்கள்! உரிமைக்குக் குரல் கொடுப்போம்!! அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மையை நிலை நிறுத்துவோம்!!!
நாளை (30.5.2017) மாலை சரியாக ஆறு மணிக்கு சென்னை பெரியார் திடலில் ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் நடைபெறவிருக்கும் சிறப்புக் கூட்டத்திலும் (அனைத்துக் கட்சி முக்கிய தலைவர்களும் பங்கேற்பர்)?
ஜூன் முதல் தேதியன்று மாலை 4 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தின்முன் நடைபெற உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் கடல் போல் திரள்க! திரள்க!! என்று அழைக்கிறோம் - அழைக்கிறோம்!
இப்பிரச்சினையில் இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் வழிகாட்ட வேண்டும் என்பதை மறவாதீர்! மறவாதிர்!!
கி.வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்
சென்னை
29-5-2017 
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...