Monday, December 19, 2016

‘வாடி’, ‘போடி’ என்று பேசாதீர்! துணைவரைத் தேடும் உரிமை பெண்களுக்கே!

பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு
குழந்தைப் பேறு பெண்களின் தனி உரிமை!
‘வாடி’, ‘போடி’ என்று பேசாதீர்!
துணைவரைத் தேடும் உரிமை பெண்களுக்கே!
ஆணவக் கொலைகளைத் தடுப்பீர்!
பெண்களே அணிமணிகளைத் தவிர்ப்பீர்!
சம வேலைக்கு சம ஊதியம்
இந்துத்துவாவை எதிர்ப்போம்!
பூரண மதுவிலக்குத் தேவை!
விவசாயிகளுக்கு வாழ்வுயர்வு தேவை
இழிவுபடுத்தும் வேதங்கள் - ஸ்மிருதிகளை எரிப்போம்!
தேவை அனைத்திலும் பாலின சமத்துவம்!!
தீப்பொறி பறக்கும் திருவாரூர் மகளிர் எழுச்சி மாநாட்டுத் தீர்மானங்கள்!
திருவாரூர், டிச.18 பாலின சமத்துவம் உள்ளிட்ட தீப்பொறி பறக்கும் 36 தீர்மானங்கள் திருவாரூரில் நடைபெற்ற திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1:
பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு
மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கும் பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும் 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட ஆவன செய்யுமாறு மாநில, மத்திய அரசுகளையும் தனி யார்த் துறைகளையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. உயர்நீதி மன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் நீதிபதி பதவிகளில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வழிசெய்யுமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 2:
33 சதவீத இடஒதுக்கீடு
நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படாமல் 1996ஆம் ஆண்டு முதல் முடக்கப்படுவதற்குக் காரணமான அனைத்துத் தரப்பினருக்கும் இம்மாநாடு தனது கண்டனத்தைத் தெரி வித்துக் கொள்கிறது. இனியும் காலதாமதமின்றி நடப்புத் தொடரிலேயே அந்த சட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்குமாறு அனைத்துக் கட்சிகளையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. அதில் உள்ஒதுக்கீடு கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்பதையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. தவறும்பட்சத்தில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் அனைத்துத் தரப்புப் பெண்களையும் குறிப்பாக மாணவிகளை ஒன்றுதிரட்டி வீதிக்கு வந்து கடுமையாகப் போராட நேரிடும் என்றும் இம் மாநாடு எச்சரிக்கிறது.
தீர்மானம் 3:
விவாகரத்து வழக்குகள்
மணவிலக்கு முறையை குற்றப் பார்வையோடு பார்க் காமல், பெண்களின் உரிமை உணர்வோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கவேண்டும் என்றும் இம்மாநாடு கருதுகிறது. இத் தகு வழக்குகளில் காலத்தை விரயமாக்கும் போக்குத் தடுக்கப்பட்டு, மூன்று மாதத்திற்குள் முடித்திட வகை செய்யவேண்டுமென்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. விருப்பற்ற இரு சாராருக்கும் காலநீட்டிப்பு தேவையற்ற மன உளைச்சலைத்தான் ஏற்படுத்தும்.
தீர்மானம் 4:
குழந்தைப் பேறு - பெண்ணின் உரிமை
குழந்தைப் பேறு என்பதை பெண்களே முடிவு செய்ய வேண்டுமேயல்லாமல் இதில் ஒரு தரப்பாக வெறும் ஆண்கள் ஆதிக்கத்திற்கு இடம் இருக்கக்கூடாது என்று இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 5:
பெண்களுக்கு எதிரான
வன்கொடுமைகள்
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளும் வளர்ந்து வருகின்றன. ஆண்டுக்கு 12 சதவீதம் அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது. இது மிகவும் வெட்கப்படத்தக்கதாகும். சட்டம் வெறும் காகிதமாக இல்லாமல் நகமும், பல்லும் உள்ளதாக மாற் றப்பட்டு, செயல்பாட்டிற்கு வரவேண்டும் என்றும் இது போன்ற குற்றங்களை விசாரிக்கும் காவல்துறைப் பிரிவில் பெண்களையே அதிகமாக நியமிக்குமாறும் மாநில, மத்திய அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் 6:
பெண்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி
ஆண்கள்-பெண்கள் விகிதாச்சாரத்தில் பெண்களின் எண்ணிக்கை நாளும் குறைந்து வருவது அதிர்ச்சிக் குரியதாகும். பெண் சிசுக்களை அழிப்பதில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும்கூட இருக்கவே செய்கிறார்கள்! பெண்ணுரிமை இயக்கங்கள் வெளியில் வந்து விழிப்புணர்வு இயக்கத்தை நடத்தவேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் பாசறை இதற்கு முன்னுரிமை கொடுக்கும் என்று இம்மாநாடு தெரி வித்துக்கொள்கிறது. கருவில் வளர்வது ஆணா, பெண்ணா என்று கண்டுபிடித்துச் சொல்லுவது குற்றம் என்று ஆக்கப் பட்டாலும் நடைமுறையில் இச்சட்டமெல்லாம் முனைமுறிந்த மூளியாகவே காணப்படுவதை மாற்றி, உயிரோட்டம் உள்ளதாகச் செயல்படுத்த வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 7:
வாடி - போடி என்று
அழைக்கக் கூடாது
பெண்களை வாடி, போடி என்றும், வா, போ என்றும் மரியாதைக் குறைவாக ஒருமையில் அழைக்கும் பிற் போக்குப் புத்தியிலிருந்து ஆண்கள் மாற வேண்டும் என்று இம்மாநாடு கண்டிப்பாகத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தப் பார்ப்பனக் கலாச்சாரத்தைக் கைவிடாவிட்டால், பெண்கள் எதிர்நிலையில் ஆண்களை விளிக்கும் நிலை ஏற்படும் என்று இம்மாநாடு எச்சரிக்கிறது.
தீர்மானம் 8:
யோகாவிற்குப் பதில் கராத்தே பயிற்சி
பள்ளிகளில் பெண்களுக்கு யோகாவிற்குப் பதில் வீர விளையாட்டுகளையும், கராத்தே போன்ற தற்காப்புக் கலை யையும் அவசியம் கற்றுத்தர வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.தேவைப்பட்டால்பெண்களுக்குத்துப்
பாக்கிச் சுடும் பயிற்சியையும் அளித்து, துப்பாக்கி உரிமத்தையும் அளிக்கவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 9:
வாழ்விணையரைத்
தேர்வு செய்யும் உரிமை
18 வயது அடைந்த பெண்கள் தன் வாழ்விணையரை தேர்ந்தெடுத்துக் கொள்வது அவர்களின் உரிமையே ஆகும்! தேவைப்பட்டால், பெற்றோர்கள் வழிகாட்டலாம்; அதேநேரத்தில், வலுக்கட்டாய முறையிலோ வன்முறையிலோ அணுகுவது சட்டப்படி குற்றம் மட்டுமல்ல; மனித உரிமைக்கு எதிரானது என்பதை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 10:
ஜாதி ஆணவக் கொலைகள் தடுக்கப்பட வேண்டும்
ஜாதி ஆணவக் கொலைக்குக் கவுரவக் கொலை என்று கூறி ஜாதியைக் கடந்து காதல் திருமணம் செய்கிறவர்களைப் படுகொலை செய்யும் ஜாதி வெறியர்களை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. இதில் ஈடுபடும் குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய கடுந்தண்டனை அளிக்கப்பட்டால், அது சமுதாயத்திலே ஓர் அதிர்வை ஏற்படுத்தும் என்பதால், இந்த வகையிலே அரசுகள் செயல்பட வேண்டும் என்று இம்மாநாடு தெரிவித்துக்கொள்கிறது.  போதிய வயதடைந்த பெண்கள் காதல் கொண்டு திருமணம் செய்து கொள்வதை நாடகக் காதல் என்பதெல்லாம் அசல் பிற்போக்குத் தனம் என்பதையும் இம்மாநாடு அறிவித்துக் கொள்கிறது. ஜாதியைப் பார்த்து வருவதல்ல காதல் என்பதையும் இம்மாநாடு தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 11:
பெயருக்கு முன் தலைப்பெழுத்து
குழந்தைகளின் தலைப்பெழுத்துக்கு (ஐவையைட) தாய், தந்தை இரு பெயர்களைப் பயன்படுத்தலாம் என்ற மாநில அரசின் ஆணையிருந்தும், நடைமுறையில் போதுமான அளவில் பயன்படுத்தாதிருப்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டி, நூறு சதவீதம் செயல்படுத்துமாறு இம்மாநாடு பெற்றோர்களைக் கேட்டுக்கொள்கிறது. ஆதார், கடவுச்சீட்டு  (ஞயளளயீடிசவ), நிரந்தர கணக்கு எண் அட்டை (ஞய ஊயசன) போன்ற மத்திய அரசு ஆவணங்களில் தலைப்பெழுத்துகள் நீக்கப்பட்டு, தந்தை பெயர் மட்டும் பயன்படுத்தப்படுவதால், தாய், தந்தை பெயர்களைப் பயன்படுத்தும் மாநில அரசின் ஆணை பயனற்றதாகி விடுகிறது. ஆதார் உள்ளிட்ட மத்திய அரசு ஆவணங்களிலும் தாய் பெயரும் சேர்க்கப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 12:
உயர் கல்விக்கு ஊக்கம் தருக!
பெண் கல்வி வளர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கக் கூடியது என்றாலும் மேல் வகுப்புகளுக்குச் செல்லச் செல்ல பெண்களின் சதவீதம் குறைந்து வருகிறது. (னுசடியீ டீரவள) அதனைத் தடுக்கப் பெண் கல்விக்கு ஊக்கம் தரும்வகையில் அரசுகள் போதிய ஊக்கத் தொகையையும், வசதியையும் ஏற்படுத்தித் தரவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 13:
இரயில் பெட்டிகளில் பெண்களுக்குக் கூடுதல் இடங்கள்
இரயில்களில் பெண்களுக்கான தனிப் பெட்டிகள் மிகவும் சுருக்கப்பட்டு வருவதை மாற்றி, கணிசமான அளவில் விரிவுப்படுத்த வேண்டும் என்று இரயில்வே துறையை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 14:
(அ) அணிமணிகள் வேண்டாமே!
பெண்கள் நகை, பட்டுப் புடவை, அணிமணிகள் இவற்றில் ஆர்வம் காட்டுவதைத் தவிர்த்து, உரிமை உணர்வுப் பக்கம் ஊக்கம் பெற வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. குறிப்பாக வளையல் அணிவதை அறவே தவிர்க்க வேண்டும் என்றும்,  தாலி கட்டிக் கொள்வதையும் கட்டாயம் பெண்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
(ஆ) அழகுப் போட்டிக்கு ஆயத்தப்படுவதைவிட, அறிவுப் போட்டிக்கும், அனுபவப் போட்டிக்கும் முந்துறுவதே மகளிருக்கு மாண்பை உருவாக்கும்.
தீர்மானம் 15:
சட்டங்கள் இருந்தும் செயல்படாத தன்மை
குழந்தைத் திருமண சட்டம் - 1929, விபச்சார தடுப்புச் சட்டம் - 1956, வரதட்சணை தடுப்புச் சட்டம் - 1961, பெண்களை இழிவுபடுத்திடும் சித்தரிப்புத் தடுப்புச் சட்டம் 1986, பாலியல் தொந்தரவு தடுப்புச் சட்டம் - 2000, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் - 2005, பாலியல் வன்முறைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் - 2012 முதலிய சட்டங்கள் இருந்தும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவதை இம்மாநாடு வருத்தத்துடன் சுட்டிக்காட்டுவதுடன் எந்த நோக்கத்துக்காக இத்தகு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டனவோ, அவற்றைச் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது. குறைந்தபட்சம் மேல்நிலை, கல்லூரி, பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களில் இவற்றைப் பற்றிய விவரங்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும், இந்தச் சட்டங்கள்பற்றிய விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 16:
பெண்களுக்கு அர்ச்சகர் உரிமை
ஆண்களைப் போலவே பெண்களுக்கு வழிபாடு மற்றும் அர்ச்சகர்கள் உரிமைக்கான சட்டம் கொண்டுவந்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 17:
இழிவுபடுத்தும் வேதங்கள் - ஸ்மிருதிகள்
பெண்களை இழிவுபடுத்தும் வேதம், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்களைத் தடை செய்ய வேண்டும் என்று இம்மாநாடு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது. இதுகுறித்தவற்றைப் பாடத் திட்டங்களிலிருந்து அறவே நீக்கி வைக்க வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. இதற்கென வரும் ஆண்டில் மகளிரே முன்னின்று அத்தகைய பகுதிகளின் நகல்களை எரிக்கும் போராட்டத்தை அறிவிக்க கழகத் தலைவரை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 18:
தமிழிலேயே பெயர் சூட்டுக!
தமிழ்நாட்டுப் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கண்டிப்பாக வேறு மொழிப் பெயர்களை வைக்காமல், குறிப்பாக சமஸ்கிருதப் பெயர்களைச் சூட்டாமல், பெயர், எண்கணித ஜோதிடத்தில் ஏமாந்து விடாமல் தமிழிலேயே பெயர்களைச் சூட்ட வேண்டும் என்று இம்மாநாடு வற்புறுத்துகிறது.
தீர்மானம் 19:
விதவைப் பெண்களுக்கு முன்னுரிமை
துணைவரை இழந்த பெண்களைத் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்குதல், விதவைகளுக்குப் பூச்சூட்டல் (அத்தன்மையை அழிக்க) போன்றவற்றிற்கு முன்னிலைப்படுத்துதல் என்பதை முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டுமாய் இம்மாநாடு முக்கியமாகக் கழகத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறது. அதன் மூலமாகச் சமுதாயத்தில் ஒரு விழிப்பை ஏற்படுத்த முடியும் என்று இம்மாநாடு கருதுகிறது.
தீர்மானம் 20:
மூடத்தனங்களைக் கைவிடுக!
கோயிலுக்குச் செல்லுதல், சாமியார்களை நாடுதல், மதச்சடங்குகளில் ஆர்வம் காட்டுதல், குறிப்பிட்ட கோயில்களுக்குச் சென்று நிர்வாணப் பூஜை செய்தல் இவற்றை இழிவாகக் கருதி மனரீதியாகப் புதிய சிந்தனை, ஊக்கம் பெறுமாறு பெண்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 21:
பெண்கள் நுகர்வுப் பொருள்கள் அல்ல!
தொலைக்காட்சிகளில், திரைப்படங்களில் பெண்களை வில்லியாகவும், கோழையாகவும், கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும் பலவீனர்களாகவும் சித்தரிப்பதற்கும் இம்மாநாடு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. பெண்கள் வீரமானவர்கள் என்று பழைய காலத்து வரலாற்றுப் பாத்திரங்களைப் பெருமையாகப் பேசும் இந்தத் துறையினர், நிகழ்காலத்திலும் பெண்களை வீரமுள்ளவர்களாக, துணிவுள்ளவர்களாக, திறன் உள்ளவர்களாக, தலைமை தாங்கும் பண்புள்ளவர்களாகச் சித்தரிப்பதில் மனத் தயக்கம் காட்டுவது ஏன் என்ற வினாவை இம்மாநாடு கலையுலகினரையும், படைப்பாளிகளையும், எழுத்தாளர்களையும், அரசியல்வாதிகளையும் கேட்க விரும்புகிறது.
அதேபோல பெண்களை அரைகுறை உடையுடன் அட்டைப் படம் போடுவது, விளம்பர நுகர்வுப் பொருளாகச் சித்தரிப்பது - நாய் விற்றக் காசு குரைக்காது என்ற போக்கில் நடந்துகொள்வது ஆண்களின் அழுக்கு மனப்பான்மையையே காட்டுவதாக இம்மாநாடு கருதுகிறது. இந்நிலை நீடித்தால் பெண்களை ஒன்றுதிரட்டி திரைப்படம், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், விளம்பர நிறுவனங்கள் முன் முற்றுகைப் போராட்டத்தை நடத்துவது என்று இம்மாநாடு அறிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 22:
சமையல் - ஆண்,  பெண்ணுக்குப் பொதுவானதே!
சமையல் என்றாலே பெண்கள்தான் என்ற நிலை மாற்றப்பட்டு, ஆண்-பெண் இருவருக்கும் பொதுவான பணி என்ற மற்ற நாடுகளின் நடைமுறைகளை இந்த நாட்டிலும் பின்பற்ற வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 23:
பாலின சமத்துவம்
சமூகநீதி என்பது பாலியல் நீதியும் உள்ளடக்கியது என்பதை இம்மாநாடு தெளிவுப்படுத்தி பிரகடனப்படுத்துகிறது. பாலின சமத்துவம் என்பது மனித உரிமை என்று  அய்.நா.மன்றம் அறிவித்திருப்பதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று இம்மாநாடு தெரிவிக்கிறது.
தீர்மானம் 24:
கற்பு என்பது பொதுவானதே!
கற்பு என்பது எந்தப் பொருளில் கூறப்பட்டாலும் சரி, அதனை முதன்மைப்படுத்தி பெண்களை ஒடுக்குவது என்பது சமுதாயக் கூடா ஒழுக்கம் என்று கருதப்பட வேண்டும் என்றும், கற்பு என்பது ஒழுக்கமே; கட்டுப்பாடே என்று கருதப்படுமேயானால், அது ஆண் - பெண் இருவருக்குமே பொதுவானதாக ஆக்கப்பட வேண்டும், உருவாக்கப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 25:
வரதட்சணையும் - நன்கொடையும்
வரதட்சணை என்பது குற்றம். ஆனால், நன்கொடைகள் குற்றமல்ல என்று வியாக்கியானம் சொல்லுவதெல்லாம் யதார்த்தத்தில் ஒன்றேதான் என்பதால் இந்த மறைமுகப் பேரம் சட்டப்படியாகத் தடுக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 26:
பெண் ஏன் அடிமையானாள்?
பெரியார் என்று பெண்கள் மாநாடு கூட்டி பட்டம் கொடுத்துப் பெருமை பெற்றவர்கள் பெண்கள். பெண்ணுரிமை தளத்தில் பெரியார் படைக்க விரும்புவது வெறும் புதுமைப் பெண்ணல்ல; புரட்சிப் பெண்கள் என்பதை உணர்ந்து, அதனைப் பாடத் திட்டமாகவும், சமுதாயக் கருத்தாகவும், மாற்றியமைக்கப் பாடுபடுவது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது. குறிப்பாக தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள்? எனும் நூலை ஓர் இயக்கமாகவே முனைந்து பரப்பிடுவது என்று இம்மாநாடு முடிவு செய்கிறது.
தீர்மானம் 27:
பெண்களின் திருமண வயதை உயர்த்துக!
இன்னும் சில குறிப்பிட்ட வட்டாரங்களில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்குத் தந்திரமான முறையில் திருமணம் நடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. திருமண வயது 18 என்று ஆக்கப்பட்டாலும் கல்வியில் மேலும் உயர்நிலை எட்டும் வகையில் அந்தத் திருமண வயதை நடைமுறையில் தள்ளிப்போடும் மனப்பான்மையைப் பெண்கள் பெற வேண்டும் என்றும், படிக்கும்போதே திருமணம் செய்து  வைக்கும் நிலை தடுக்கப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. பெண்களின் திருமண வயதை மேலும் உயர்த்தும் வகையில் சட்டம் இயற்றுமாறும் இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம் 28:
ஜாதி மறுப்புத் திருமண இணையர்களின் குழந்தை எந்த ஜாதி?
ஜாதி மறுப்புத் திருமணங்களைச் செய்து கொண்டவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் இடஒதுக்கீடு பெறுவதற்கு தந்தையின் ஜாதியைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பை மாற்றி, தாய் அல்லது தந்தையாரின் ஜாதியை பெற்றோர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வைத்துக் கொள்ளலாம் என்ற முந்தைய நிலை தொடருவதற்குச் சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வருமாறு மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 29:
உச்சநீதிமன்றத்தின் தவறான தீர்ப்பினை மாற்றுக!
மாமியாரை மருமகள் எட்டி உதைத்தால் அது ஒன்றும் குற்றமல்ல என்றும், என் மகன் உன்னை விவாகரத்து செய்து விடுவான்! என்று மாமியார் மிரட்டுவதும் குற்றமல்ல; இது குற்றவியல் பிரிவு 498இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமல்ல என்று உச்சநீதிமன்ற அமர்வு (நீதிபதிகள் எஸ்.பி.சின்கா, சிரியாக் ஜோசப் -  நாள்: 22.7.2008) வழங்கிய தீர்ப்பு மறுபரிசீலனை செய்யப்பட்டு, சட்டத் திருத்தத்தின் மூலம் பெண்களுக்கான உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 30:
மூப்படைந்த பெற்றோர்களைப் பேணுக!
மூப்படைந்த பெற்றோர்களைப் பேணிக் காப்பதில் ஆண்களைவிட பெண்கள் கூடுதல் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு இம்மாநாடு பெண்களைக் கேட்டுக்கொள்கிறது. இதன்மூலம் ஆண்களிடத்திலும் புதிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்று இம்மாநாடு கருதுகிறது.
தீர்மானம் 31:
மார்பகப் புற்றுநோயும் பெண்களும்
மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வரும்நிலையில், ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட அனைத்து சுகாதார நிலையங்களிலும் அதனைக் கண்டுபிடிக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ உதவி செய்யவுமான வசதிகளைச் செய்து கொடுக்குமாறும் தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 32:
திருநங்கைகள் உரிமை - வளர்ச்சி
மூன்றாவது பாலினமான திருநங்கைகளின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள வாரியத்தை பெயரளவுக்கு இல்லாமல் செயல்படும் வாரியமாக ஆக்க வேண்டும் என்றும், சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் திருநங்கைகளையும் நியமனம் செய்ய வேண்டும் என்றும், கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.
தீர்மானம் 33:
இந்துத்துவாவைப் புறக்கணித்திடுக!
இந்துமதம், இந்துத்துவா என்பதெல்லாம் பெண்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் பெண்களை அடிமைப்படுத்தும் அடிப்படை நோக்கம் கொண்டவை என்பதால், இவற்றிலிருந்து முற்றிலுமாக ஒதுங்கி நிற்குமாறு பெண்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 34:
சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கிடுக!
சம வேலைக்குச் சம ஊதியம் என்ற அடிப்படையில் ஆண் - பெண் ஊதிய விகிதத்தில் வேறுபாடு கூடாது என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 35:
தேவை முழு மதுவிலக்கு
ஆண்களிடம் உள்ள மதுப் பழக்கமென்பது பெரும்பாலும் குடும்பத் தலைவியையும், பிள்ளைகளையும், ஒட்டுமொத்த குடும்பத்தையும் பெரிதும் பாதிக்கச் செய்வதால் முழு மதுவிலக்கை செயல்படுத்துமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 36:
விவசாயக் குடும்பங்கள் மீட்சி பெற
மழை பொய்ப்பதாலும், நதிநீர் தடைப்படுவதாலும் விவசாயத் தொழில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பெரும் அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. அதை நம்பி வாழும் இலட்சக்கணக்கான குடும்பங்களின் அன்றாட வாழ்வே கேள்விக்குறியாகிறது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகிறது. இந்த நிலையில் வங்கிக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், நட்டப்படும் விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்குவதில் தாராள சிந்தனையையும் மனிதாபிமானத்தையும் காட்ட வேண்டும் என்றும், மாநில அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. இம்மாதிரி சூழலில் மத்திய அரசு தேவையான நிதி உதவியையும் மாநில அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும், இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
விவசாயம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை வறட்சிப் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
விவசாயத் தொழிலில் ஆண்களுக்கு நிகராகப் பென்களும் பெரும் அளவில் ஈடுபடுவதையும் இம்மாநாடு சுட்டிக்காட்டி நினைவூட்டுகிறது.

மார்ச் 10 ஆம் தேதி பெண்களை இழிவுபடுத்தும் சாஸ்திரங்களைக் கொளுத்துவோம்!

அன்னை மணியம்மையார் பிறந்தநாளான மார்ச் 10 ஆம் தேதி
பெண்களை இழிவுபடுத்தும் சாஸ்திரங்களைக் கொளுத்துவோம்!
திருவாரூர் திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் அறிவிப்பு!
திருவாரூர், டிச.18 அன்னை மணியம்மையார் அவர் களின் பிறந்த நாளான மார்ச் 10 ஆம் தேதியன்று பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மம் சாத்திரம் முதலிய நூல்களைக் கொளுத்துவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.
திருவாரூரில் நேற்று (17.12.2016) மாலை நடைபெற்ற திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:
அண்மைக் காலத்தில் நடத்தப்பட்ட மாநாடுகளிலேயே சிறப்பு
அண்மைக் காலத்தில் கழகம் நடத்திய மாநாடு களிலேயே சிறப்பான மாநாடு இது. தங்களுக்கும் ஆற்றல் உண்டு என்று கழக மகளிரணியினர், பாசறையினர் நிரூபித்துக் காட்டியுள்ளனர், அவர்களுக்குப் பாராட்டு.
தோழர் என்று சொன்னால் ஆண் - பெண் இரு பாலரையும்தான் குறிக்கும்.  ‘குடிஅரசு’ இதழில் தோழர் என்று பெண்களைக் குறிப்பிட்டுள்ளார் தந்தை பெரியார். அதனை மீண்டும் இம்மாநாட்டின்மூலம் புதுப்பிப்போம்! (கைதட்டல்).
36 முத்தான தீர்மானங்கள்
நேரம் குறைவாக இருக்கிறது. உங்கள் உற்சாகத்தைப் பார்க்கும்பொழுது  இரவு முழுவதும் பேசலாம் என்று தோன்றுகிறது.
இங்கு நிறைவேற்றப்பட்ட முப்பத்தாறு தீர்மானங் களும் முத்து முத்தானவை. இதைப்பற்றி விரித்துப் பேச ஆரம்பித்தால் பல நாள்கள் பேசலாம்.
வறட்சிப் பகுதியாக அறிவித்திடுக!
குறிப்பாக திருவாரூர் பகுதிக்கு நாங்கள் வந்தால் மக்களிடம் மலர்ந்த முகங்களைப் பார்க்கலாம். இப் பொழுது வரும்போது சோகத்துடன் காணப்படுகிறது - காரணம் விவசாயத்தை நம்பி வாழும் இப்பகுதி மக்கள் பெரும் இழப்புக்கு ஆளானதன் அடையாளமே அது.
நாம் வஞ்சிக்கப்படுகிறோம் என்பது உண்மை. இந்த நேரத்தில், தமிழக அரசுக்கு நமது கனிவான வேண்டுகோள். விவசாயம் பாதிக்கப்பட்ட இந்தப் பகுதிகளை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து விவசாயப் பெருங்குடி மக்களுக்குத் தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் - இழப்பீடுகளையும் செய்யவேண்டும் என்று இம்மாநாட்டின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம். (பலத்த கரவொலி).
பெண்ணுரிமைப்பற்றி தந்தை பெரியார் அளவு சிந்தித்தவர்கள் யார்?
பெண்கள் உரிமை என்று வரும்போது தந்தை பெரியார் அவர்கள் சிந்தித்ததுபோல, வேறு யாரும் சிந்தித்து இருக்க முடியாது. சிந்தனையின் எல்லைக்கே சென்று சிந்தித்தார். பாடுபட்டார்; அதனால்தான் நன்றி உணர்வுடன் பெண்கள் மாநாடு கூட்டி அவருக்கு ‘பெரியார்’ என்ற பட்டத்தைக் கொடுத்து மகிழ்ந்தனர்.
மகளிர் உரிமை என்றால், அதன் பொருள் மனித உரிமையே! இந்துத்துவா என்பது பெண்களை அடிமைப்படுத்தக் கூடியது. சிறுமைப்படுத்தக் கூடியது என்பதால், அதிலிருந்து பெண்கள் விலகி நிற்கவேண்டும் என்று ஒரு தீர்மானம் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மற்ற மற்ற நாடுகளிலும்கூட பெண்ணடிமை இருந்தது உண்டு. ஆனால், படிப்படியாக அங்கெல்லாம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இங்கு ஏற்படவில்லை - நாம் சிந்திக்கவேண்டும்.
சமுதாய விஞ்ஞானி பெரியார்
சென்னை வானொலியில் பணியாற்றிய லீலா என்ற அம்மையார் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.
‘ஆண்களால் பெண்களுக்கு உரிமைகள் கிடைக்காது என்று பெரியார் சொல்லுகிறார். அப்படிப் பார்த்தால் பெரியாரும் ஓர் ஆண்தானே?’ என்பது அவரின் நியாயமான கேள்வி.
நான் சொன்ன பதில்: ‘நல்ல கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். பெரியாரை அந்தப் பார்வையில் பார்க்கக் கூடாது; பெரியாரை ஒரு சமுதாய விஞ்ஞானியாகப் பார்க்கவேண்டும்‘ என்று கூறினேன். அதையேதான் இங்கும் நான் கூற விரும்புகிறேன்.
பெண்ணை இழிவுபடுத்தும் மனுதர்மம்!
நம் நாட்டு சாத்திரங்களும், இதிகாசங்களும், வேதங்களும் பெண்களை ஒரு மானுடக் கூறாகவே பார்ப்பதில்லை. அடிமையாக மட்டுமல்ல; இழிவான பிறவிகளாக, கேவலமாகப் பேசுகின்றன.
என் கையில் இருப்பது அசல் மனுதர்மம். அதன் ஒன்பதாவது அத்தியாயம் 14 ஆம் சுலோகம் என்ன சொல்லுகிறது?
‘‘மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரமும் முக்கியமானதாக எண்ணி அவர்களைப் புணருகிறார்கள்.’’
15 ஆம் சுலோகம் என்ன கூறுகிறது?
‘‘மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையா மனமும் நண்பின்மையும் இயற்கையாக யுடையவராதலால் கணவனால் காக்கப்பட்டிருப்பினும் அவர்களை விரோதிக்கிறார்கள்.’’
16 ஆம் சுலோகம் அதைவிட மோசம்.
‘‘மாதர்களுக்கு இந்த சுபாவம் பிரமன் சிருட்டித்த போதே யுண்டானது என்றறிந்து ஆடவர்கள் அவர்கள் கேடுறாமல் நடப்பதற்காக மேலான முயற்சி செய்யவேண்டியது’’ என்கிறது மனு. இன்னும் எத்தனையோ இருக்கின்றன. இதிகாசங்களும், உபநிஷத்துகளும், வேதங்களும் இந்த வகையில்தான் எழுதப்பட்டுள்ளன.
திருவாரூரில் நடக்கும் இந்த எழுச்சிமிக்க திராவிடர் மகளிர் மாநாட்டில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்.
அன்னை மணியம்மையார் பிறந்த நாளான வரும் மார்ச் 10 ஆம் தேதியன்று பெண்களை இழிவுபடுத்தும் இத்தகைய நூல்களைக் கொளுத்துவோம்! இந்தப் போராட்டத்துக்குப் பெண்களே எங்கும் தலைமை தாங்குவார்கள் என்றார். (கரவொலி அடங்க வெகுநேரமாயிற்று!)
(முழு உரை பின்னர்).

இந்நாட்டு சமதர்மத்தின் முதல் படி - தந்தை பெரியார்-

தோழர்களே! சமதர்மம் என்கின்ற வார்த்தை ஒரு பொது வார்த்தை. இது ஆங்கிலத்தில் உள்ள சோஷலிசம் என்னும் வார்த்தைக்குத் தமிழ் மொழி பெயர்ப்பாகக் கையாளப்படுகிறது என்றாலும் சோஷலிசம் என்ற வார்த்தையே தேசத்திற்கு ஒருவிதமான அர்த்தத்தில் கையாளப்படுகிறது. அநேகமாக அந்த வார்த்தை அந்தந்த தேச நிலைமைக்கும், தகுதிக்கும், சவுகரி யத்துக்கும், அரசாங்கத்துக்கும் தகுந்தபடிதான் பிரயோகிக்கப்படுகிறது. சில இடங்களில் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டும், சில இடங்களில் சட்ட திட்டங்களுக்கு மீறினதாயும் உள்ள பொருள்களுடன் சமதர்மம் என்ற வார்த்தை பிரயோகிக்கப்படுகிறது.
ஆகவே சோஷலிசத்துக்கு இதுதான் அர்த்தம் என்று வரையறுக்க அவ்வார்த்தையில் எவ்விதக் குறிப்பும் இல்லை.
சில இடத்து சோஷலிசத்துக்கும், பொதுவுடைமை என்பதற்கும் பேதமே இல்லாமல் அர்த்தம் இருந்து வரு கிறது. சில இடங்களில் வெகுசாதாரண விஷயத்துக்கும் அப்பெயர் இருந்து வருகிறது. சில இடத்தில் பொது வுடைமை வேறாகவும், சமதர்மம் வேறாகவும் இருந்து வருகின்றது.
இங்கு சமதர்மம் என்கின்ற வார்த்தைக்குச் சமூகத் துறையிலும் பொருளாதாரத் துறையிலும், மக்கள் உயர்வு தாழ்வு இல்லாமல் சமத்துவமாய் (அபேதமாய்) வாழவேண்டும் என்பதையே சமதர்மம் என்று நான் கருத்து கொண்டு சமதர்மம் என்கின்ற வார்த்தையை இங்கு பிரயோகிக்கின்றேன்.
ஏனெனில் மற்ற நாட்டில் சமூகத் துறையில் நமது நாட்டில் உள்ளது போன்ற உயர்வு- தாழ்வு பேதாபேதம் இல்லை. பொருளாதார சம்பந்தமே பெரிதும் மற்ற நாடுகளில் இருக்கின்றது. நமது நாட்டு சமுதாய உயர்வு தாழ்வானது பிறவியிலேயே வகுக்கப்பட்டு அதை மதத்தோடு பொருத்தி அதற்கு அரசியல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்து வருகிறது.
முதலில் சமுதாயத்தில் பிறவியின் பேரால் உள்ள பேதங்களை ஒழித்தாக வேண்டும். அதுவே இந்நாட்டு சமதர்மத்துக்கு முதல் படியாகும். அதனாலேயே பொருளாதார சமதர்மமே மனித சமூக சாந்திக்கு மருந்து என்று கருதி இருக்கும் நான் சமுதாயத்தில் வாழ்க்கையில் சமதர்மத்தை அபேதவாதத்தை முக்கியமாய் வலியுறுத்தி வருகிறேன்.
நிற்க பொதுவாகவே சமதர்மம் என்பது எந்த அர்த்தத்தில் இருந்தாலும் சமுதாயம் முக்கியமானாலும், பொருளாதாரம் முக்கியமானாலும் அதற்கு கடவுள் உணர்ச்சி மத நம்பிக்கை என்பவை எதிராகவே இருந்து வந்திருக்கின்றன. சர்வதேச சமதர்ம வாதிகளும் பெரிதும் கடவுள் உணர்ச்சியும் மத நம்பிக்கையும் சமதர்மத்திற்கு விரோதமானது என்று தான் சொல்லியிருக்கிறார்கள். ஆதலால் எந்த சமதர்மவாதிக்கும் இதைப் பொறுத்த வரையில் அபிப்பிராய பேதம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த வேலை அபிப்பிராய பேதமில்லாமல் நடந்துதான் தீரும்.
நம் நாட்டிற்கு இன்று முதலில் ஜாதி பேதங்கள் ஒழிந்து மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சியே செய்ய வேண்டியிருக்கிறது. ஜாதி பேதம் பிரிவு ஆகியவை ஒழிந் தால்தான் சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் வாழ முடியும். பொருளாதார பேதத்துக்கும் சமூக ஜாதி பேத முறைதான் பெரிதும் காரணமாய் காவலாய் இருந்து வந்திருக்கிறது. இன்றும் பெருவாரியான மக்களுக்கு ஜாதிபேதமே பொருளாதார சமதர்ம முறையை நினைக்கக்கூட இடம் கொடுக்காமல் அடக்கி வருவதுடன் பொருளாதார பேதத்துக்கு இடமளித்தும் வரு கிறது. எந்தக் காரணத்தைக் கொண்டாவது இன்று நாட்டிலுள்ள பொருள்களையெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து விட்டாலும் நமது ஜாதி முறைகள் மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலைமையைத்தான் உண்டு பண்ணிவிடும். மற்ற நாட்டு மக்களுக்குப் பொருளாதார சம தர்ம உணர்ச்சி ஏற்பட்டதற்குக் காரணமெல்லாம் அவர்களில் பிறவியில் கீழ்மேல் நிலை இருக்கும்படியான ஜாதி பேதம் இல்லாததேயாகும். நம் மக்களுக்கு வெறும் பொருளாதார சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது. ஜாதி பேதம் ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லி பொருளாதார சமதர்மத்தைச் சொன்னால்தான் உண்மையாகக் கஷ்டப்படுகிற மக்களுக்கு உணர்ச்சி உண்டாக்க முடிகின்றது.
ஆகவே, சமூக சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம் ஜாதி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்று கருதுகிற நாம் பொருளாதார சமதர்மத்துக்காகவே பிறவி ஜாதியை ஒழிக்க வேண்டியிருக்கின்றது என்றும் பிறவி ஜாதியை ஒழிப்பதற்கு அதற்கு ஆதரவான மதத்தையும் ஒழிக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றோம்.  மதத்தைப் பற்றியோ மதத்தில் உள்ள ஏதாவது ஒரு கொள்கையைப்  பற்றியோ பேசினாலும் அதை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாலும் அதை நாஸ்திகம் என்று சொல்லி விடுகிறார்கள். அதனால்தான் சமதர்மம் பேசுகின்ற யாரும் கண்டிப்பாய் நாஸ்திகர்களாகியே தீரவேண்டி இருக்கிறது.
நாஸ்திகனாவதற்குக் கடவுள் இல்லை என்று கூட சொல்ல வேண்டியதில்லை. மதக் கொள்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்து பேசினாலே போதுமானதாக இருக்கிறது.
ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப்பட்டதாக - கடவுளால் கற்பிக்கப்பட்டதாக - கடவுளே சொன்னார் என்று மத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.
அந்த மத சாஸ்திரங்கள் வேதமாகவும், வேதம் போன்றதாகவும், கருதப்படுகின்றன. உதாரணமாக பகவத் கீதை என்பது இந்துக்கள் என்பவர்களுக்கு மிகப் புனிதமானதும் மேலானதுமான புஸ்தகம் என்று கொள்ளப்படுகின்றது.
மகமதியர்கள் கொரானை மதிப்பதைவிட கிறிஸ் தவர்கள் பைபிளை மதிப்பதைவிட கீதையை அதிக பக்தியாய் அநேக இந்துக்கள் மதிக்கிறார்கள். ஆனால் அப்புஸ்தகத்தில் நான்கு ஜாதிகளும், நான்கு பிரிவான ஜாதிப் பெயர்களும், அதற்குத் தனித்தனி வேலைக் கிரமங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. கீதை என்றாலே பகவான் வாக்கு என்று அர்த்தம்.
ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசுகிறவர்களில் கூட 100 க்கு 99 பேர்கள் கீதையைப் பகவான் வாக்கு என்று நம்பிக் கொண்டுதான்  இருக்கிறார்கள்! இந்நிலையில் இப்படிப்பட்ட மக்களால் ஜாதிப் பிரிவுகளுக்கு உள்ள மேல் கீழ் நிலைகளை எப்படி ஒழிக்க முடியும்? கீதை முறை தனது அல்ல என்றோ, கீதை கடவுள் சொன்னது அல்ல என்றோ, அப்படித்தான் கடவுளே சொல்லி இருந்தாலும் அதைப் பற்றிக் கவலை இல்லை என்றோ, சொல்லத் துணியாவிட்டால், சொல்ல தைரியமில்லாத மக்கள் யாவரையும் அந்தப்படி சொல்லத் தயார் செய்யாவிட்டால் ஜாதிப் பிரிவு ஜாதி வித்தியாசம் ஆகியவை எப்படி ஒழியும்? ஆகவே இந்தப்படி சொல்லும்படியான ஒருவன் கீதையையும், கிருஷ்ணனையும் நம்பும் மக்களால் நாத்திகன் என்று சொல்லப்படாமல் இருக்க முடியாது.
ஆதலால் நாஸ்திகனாகவோ நாஸ்திகனாவதற்குத் தயாராகவோ நாஸ்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.
இது மாத்திரமல்லாமல் சர்வமும் கடவுள் செயல் என்னும் மனித சமூகத்தில் பிறவி மூலமாகவும் வாழ்வு மூலமாகவும் இன்று இருந்து வரும் பிரிவுக்கும் பேதத்துக்கும் உயர்வு தாழ்வுக்கும் கடவுளே பொறுப்பாளியென்றும், கடவுள் சித்தத்தினால்தான் அவற்றில் ஒரு சிறு மாற்றமும் செய்ய முடியும் என்று சொல்லப்படுமானால் அதை நம்பாமல் இருப்பது நாஸ்திகமானால் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் நாஸ்திகராகத்தான் ஆக வேண்டும்.
ஏனெனில் செல்வவான்களிடம் இருக்கும் செல்வமும், பார்ப்பான் பாராட்டிக் கொள்ளும் உயர்ந்த ஜாதித் தத்துவமும், கடவுள் கொடுத்தது என்றும். கடவுள் சித்தத்தால் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுமானால் அந்தக் கடவுளை யார்தான் ஏற்றுக் கொள்ள முடியும்?
அதை யார்தான் நிலைத்திருக்க விட்டுக் கொண்டி ருக்க முடியும்? எந்த மாதிரியான மூடக்கடவுளும், எந்த மாதிரியான அயோக்கியக் கடவுளும், மனிதரில் ஒருவனை மேல் ஜாதியாக்கிப் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்படிக்கும் மற்றொருவனைக் கீழ் ஜாதியாக்கி பாடுபட்டு பாடுபட்டு சோம்பேறிகளுக்கு அழுதுவிட்டு பட்டினியாய், நோயாய், கட்டக் கந்தையற்று, இருக்க இடமற்றுத் திரியும்படி சொல்லி இருக்கவே முடியாது.
இந்தக் காரியங்களுக்குக் கடவுளைப் பொருத்து கின்றவர்களை யோக்கியர்கள் என்றோ, அறிவாளிகள் என்றோ யாராலும் சொல்ல முடியாது.
ஊரார் உழைப்பைக் கொள்ளைக் கொள்ளாமல் எவனும் பணக்காரனாக முடியாது.
நாட்டிலே சிலர் 10 லட்சம், 20 லட்சம் கோடிக்கணக் கான ரூபாய் சொத்துள்ளவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தப் பணம் ஏது? இவர்கள் படும் பாட்டுக்கு இவர்கள் அனுசரிக்கும் முறைக்கும் இவர்கள் நடந்து கொள்ளும் மாதிரிக்கும் எந்தக் கடவுளாவது இவ்வளவு பணம் கொடுத்திருக்க முடியுமா?
ஏதோ இதெல்லாம் அவரவர் பிரயத்தனத்தினால் தொழில் முறையினால், மன வலிமையினால் சம்பவங்களால் ஏற்பட்டதென்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?
இவ்வளவு பணம் இவர்களுக்குச் சேருவதற்கு  ஆதார மாயிருந்த முறையை  யார்தான் சரியான முறையென்று சொல்லிக் கொள்ள முடியும்? இவ்வளவு பணம் இவர்களுக்குக் கொடுத்தவர்களில் பெரும்பான்மை மக்கள் இன்று இருக்கும் நிலையை யார்தான்  நல்ல நிலை என்று சொல்ல முடியும்? இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று சொல்லும்போது கடவுளையும், மதக் கொள்கைகளையும் கொண்டு வந்து குறுக்கே போட்டால், அக் கடவுளையும், மதத்தையும் ஒழிக்காமல் எப்படி இருக்க முடியும்?
மற்றும் கடன்பட்டு வட்டி கொடுத்த மக்களுடையவும் பாடுபட்டுப் பயனைக் கொடுத்த மக்களுடையவும் மனமும், வயிறும், வாயும் பற்றி எரிய எரிய அப் பணங்களைக் கோவில் கட்ட, சாசனம் செய்ய, சாமிக்குக் கிரீடம் செய்ய, கல்யாணம் செய்ய, தாசி வீட்டுக்குப் போக, தாசிகளை வைத்து உற்சவம் வாண வேடிக்கை செய்யப் பாழ் பண்ணப்படுமானால் யார்தான் சகித்துக் கொண்டு இருக்க முடியும்?  இந்த அக்கிரமங்களைப் பார்த்துக் கொண்டு எந்தக் கடவுள்தான் இருக்க முடியும்?
அப்படியும் ஒரு கடவுள் இருக்கிறது என்று சொல்லப்படுமானால் அப்படிப் பட்ட கடவுளை அழித்து ஒழித்து விடுவதில் யாருக்கு என்ன  நஷ்டம் வரும்?
அப்படிப்பட்ட கடவுளை யாரும் ஒழிக்க முடியாது என்று சொல்லப்படுமானால் அது ஒழிந்தது என்று ஒருவராவது ஏன் வருத்தப்பட வேண்டும்?
தோழர்களே, இதையெல்லாம் பார்க்கும்போது கடவுளைக் கற்பித்தது நல்ல எண்ணம் கொண்டு என்பதாக நம்ப நம்மால் முடியவில்லை.
சோம்பேறிக் கொள்ளைக் கூட்டங்கள் கொடுங் கோன்மைக்காரன், பேராசைக்காரன் முதலிய கூட்டத்தாரின் சுயநலனுக்குத்தான் பயன்படுகிறதே ஒழிய வேறு காரியத்துக்குக் கடவுள் பயன்படுவதே இல்லை. மனித சமூக வாழ்க்கை ஒழுக்கத்திற்கு  என்று கடவுள் சிருஷ்டிக்கப்பட்டிருக்குமானால் அப்படிப்பட்ட கடவுளைப் பற்றி அது இருந்தாலும் அது இல்லாவிட்டாலும் நமக்குக் கவலையில்லை.
இதுவரை எந்தக் கடவுளால் யாருக்கு எப்படிப்பட்ட ஒழுக்கம் ஏற்பட்டது என்று யாராவது சொல்லமுடியுமா? என்று கேட்கிறேன்.
கடவுளைச் சதாகாலம் கட்டியழுது அதனாலேயே ஜீவனம் நடத்தும் அர்ச்சகர்கள், குருக்கள் ஆகியவர்கள் முதலில் ஒழுக்கமாய் இருக்கிறார்களா? இவர்களுடைய ஒழுக்கக்கேடான காரியங்கள் நமக்குத் தெரியாதா?
கடவுளுக்காக 10 லட்சம் பணம் போட்டு கோவிலைக் கட்டிக் கும்பாபிஷேகம் செய்து அய்ந்து வேளை ஆறு வேளை பூசை செய்து மானியம் விட்ட கடவுள் பக்தர்களில் எவராவது ஒழுக்க மாய் யோக்கியமாய் நடக்கிறார்களா? கடவுளுக்காகவே சன்யாசியாய், குருவாய், சங்கராச்சாரியாய், தம்பிரானாய், முல்லாவாய், மவுலானாவாய் இருக்கிறவர்களிலாவது எல்லோரும் ஒழுக்க மானவர்கள் என்று சந்தேகமறச்  சொல்லத்தக்கவர்களாய் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? இவர்கள் நிலையே இப்படி இருக்க கடவுள் நம்பிக்கை உள்ள சாதாரண பாமர மக்களிடத்தில் எப்படி ஒழுக்கம் யோக்கியதை எதிர்பார்க்க முடியும்?
எப்படியானாலும் கடவுளைப் பற்றிய எண்ணமே யாருக்கும் இருக்கக்கூடாது என்பதற்காக நான் பேச வரவில்லை. மனித சமூக சமதர்ம வாழ்வுக்குத் தடையாய் எந்தக் கடவுளும் இருக்கக் கூடாது என்றும் அப்படிப்பட்ட கடவுளை இருக்க விடக்கூடாது என்றும் தான் சொல்ல வருகிறேன். மனித வாழ்க்கைக்கும், பேதா பேதங்களுக்கும், கடவுள் சம்பந்தமில்லை என்று சொல்லும் பட்சத்தில் அக்கடவுளைப் பற்றி நமக்கு என்ன கவலை?
ஆகவே தோழர்களே! சமதர்மவாதிகள் ஏன் நாஸ்திகர்கள் என்று சொல்லப்படுகிறார்கள்? அவர்கள் ஏன் நாஸ்திகர்கள் என்று சொல்லப்பட வேண்டியவர்களாகிறார்கள்? என்பதை நீங்கள் உணரவேண்டும் என்பதற்காகவே இதை எடுத்துச் சொன்னேன்.
-1935 செப்டம்பர் முதல் வாரத்தில் தேவக்கோட்டையில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு  (`விடுதலை’, 2.12.1951).

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...