Saturday, June 25, 2016

ஜூலை முதல் தேதி சமஸ்கிருத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கட்சிப் போராட்டமல்ல - இனப் பாதுகாப்புப் போராட்டம்

பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுக்கும் போராட்டம்
கிளர்ந்தெழுவீர் தோழர்களே - டில்லி வரை எட்டட்டும்! 
மத்தியில் உள்ள பிஜேபிஅரசு திணிக்கும் சமஸ்கிருதம் என்பது - பண்பாட்டுப் படையெடுப் பின் ஏற்பாடாகும் - ஜூலை முதல் தேதி அதனை எதிர்த்து எங்கெங்கும் ஆர்ப்பாட்டம் நடக்கட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணிஅவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அருமைத் தோழர்களே! ஜூலை முதல் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சமஸ் கிருதத் திணிப்பு நடவடிக்கையை எதிர்த்து கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திட உள்ளோம்.
இந்தகால கட்டத்தில் முக்கியமான போராட்டம்!
நமது இயக்க வரலாற்றில் இந்தக் கால கட்டத்தில் இது ஒரு தேவையான போராட்டமாகும்.
சமஸ்கிருதம் என்றால் அது ஏதோ வெறும் மொழியை எதிர்த்து மட்டும் நடைபெறும் போராட்டமல்ல; மக்களைப் பிறப்பின் அடிப்படையில் நால்வருணமாகப் பிரித்ததும் - நமது தமிழ்மொழியைப் பல கூறுகளாக ஊடுருவிப் பிளவுபடுத்தியதும் இந்தப் பாழாய்ப் போன சமஸ்கிருதம் தான்.
விவேகானந்தர் கூறியதை இங்கு கவனிக்க வேண்டும்
இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்பிய விவேகானந்தர்கூட இந்த சமஸ்கிருதம் பற்றி தனிக் கருத்தினைக் கொண்டவர்தான்!
"மதச் சண்டைகளும் சாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குவதற்கு ஒரு பெருங் கருவியாய் இருந்ததும், இருப்பதும் சமஸ்கிருத மொழியேயாகும். சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால் இப்போராட் டங்களும் தொலைந்துபோகும்" என்று கூறியுள்ளதைக் கவனிக்க வேண்டும்.
மதச் சண்டைகளையும், ஜாதி சண்டைகளையும் வளர்த்து வரும் பிஜேபி, ஆர்.எஸ்.எஸின் நடவடிக்கைகள் நாட்டில் நாளும் வளர்ந்து வருவதைக் கவனித்தால் விவேகானந்தர் தெரிவித்த கருத்தின் அருமையும், ஆழமும் நன்றாகவே புரியும்.
வாஜ்பேயி காலத்திலேயே
ஆரம்பமாகி விட்டது
வாஜ்பேயி அவர்கள் தலைமையில் ஆட்சி நடை பெற்ற காலத்திலேயே இதற்கான தொடக்கம் ஆரம்பமாகி விட்டது.
பல்கலைக் கழகங்களிலே சமஸ்கிருதம், வேத கணிதம் ஜோதிடம் இவைகள் எல்லாம் கொண்டு வரப்பட்டன.
இப்பொழுது பெரும் பலத்துடன் மத்தியில் ஆட்சியில் அமர்ந்து விட்ட துணிவில் வேக வேகமாக சமஸ்கிருதத் திணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதற்காகக் கோடி கோடி யாகக் கொட்டி அழுகின்றனர்.
1. 2014-ஆம் ஆண்டு சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக பல்கலைக்கழகங்களுக்கு ரூ.70 கோடி ஒதுக்கீடு.
2. அய்.நா.வின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தியை அறிவித்தால் அதற்காகச் செலவாகும் சுமார் ரூ.270 கோடியை இந்திய அரசு ஏற்கத் தயாராக இருப்ப தாகவும்; இதில் செலவு ஒரு பொருட்டே அல்ல என்றும் சுஷ்மா அறிவித்தார்.
3. 23.7.2015 சமஸ்கிருத மொழிவளர்ச்சிக்காக சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரகம் ரூ 320-கோடி ஒதுக்கியது.
4. 2015-ஆம் ஆண்டு ஜூலை பாங்காக்கில் நடைபெற்ற சமஸ்கிருத மாநாட்டிற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
5. 2016-ஆம் ஆண்டு ரூ.70 கோடி ராஷ்டிரிய சமஸ்கிருத சன்ஸ்தான் என்ற சமஸ்கிருத மொழி வளர்ச்சித் துறைக்கு புதிய ஆய்வு மாணவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய ஒதுக்கியுள்ளது.
யார் வீட்டுப் பணத்தை யார் வீட்டு மொழிக்காகக் கொட்டுவது? இதனை அனுமதிக்கலாமா? இந்தியா முழுமையும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் - பார்ப்பனர் அல்லாத மக்கள் சிந்திக்க வேண்டும்.
வழிபாட்டு மொழி இன்றும்
சமஸ்கிருதம் தானே!
தமிழன் கட்டிய கோயில்களுக்குள் இன்றும் சமஸ் கிருதத்தில் தான் வழிபாடு. கரூர் அருகில் உள்ள திருமலை முத்தீசுவரர் கோயிலில் தமிழில் குட முழுக்கு நடத்தப் பட்டதால் (9.9.2002) கோயிலை மூன்று நாள் இழுத்து மூடி, தோஷம் கழித்தனர் என்பது எதைக் காட்டுகிறது?
பூஜை வேளையில் இன்றைக்குக்கூட சங்கராச்சாரியார் தமிழில் பேச மாட்டார்; காரணம் தமிழ் "நீஷப்பாஷையாம்!"  அப்படிப் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டால் 'ஸ்நானம்' செய்து விட்டு சமஸ்கிருதத்தில்தான் பேசுவார். (ஆதாரம்: ஆட்சி மொழிக் காவலர் கீ. இராமலிங்கனார் பேட்டி)
கோயிலில் தமிழில் வழிபாடுபற்றி திமுக ஆட்சியில் ஆணை பிறப்பித்தபோது, உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்குத் தொடுத்தவர்கள் இதே பார்ப்பனர்கள்தான்.
இந்து ராஜ்ஜியம் அமைக்க முன்னோடி!
இந்து ராஜ்ஜியத்தை அமைப்போம் என்று ஆட்சி நடத்துபவர்களுக்கு சமஸ்கிருதத் திணிப்பு என்பது அவசியமாகிறது.
1938இல் ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநில பிரதம அமைச்சராக இருந்தபோது லயோலா கல்லூரியில் என்ன பேசினார்?
"சமஸ்கிருதத்தைப் படிப்படியாக புகுத்தவே இப்பொ ழுது இந்தியைப் புகுத்துகிறேன்" என்றாரே, அதனுடைய தொடர்ச்சியாகத் தான் இன்றைய பிஜேபி அரசின் சமஸ்கிருதத் திணிப்பை நோக்கிட வேண்டும்.
அலட்சியப்படுத்தக் கூடாது
இதனை அலட்சியப்படுத்தி விடக் கூடாது - மிக பெரிய ஆபத்து, அபாயம் நம்மைச் சூழ்ந்து  நிற்கிறது.
மீண்டும் ஆரியம் நம்மை அடிமைப்படுத்த தயாராகி விட்டது. தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் தான் - திராவிடர் கழகம்தான் இதனை எதிர்த்து முறியடிக்கும் களத்தில் முதல் வரிசையில் நின்று போராட வேண்டும்.
கட்சிப் போராட்டமல்ல - இனவுணர்வுப் போராட்டம்! களம் காண்பீர்!
அந்தக் கடமையைத்தான் இப்பொழுது செய்கிறோம். ஜூலை முதல் தேதி ஆர்ப்பாட்டத்தை தமிழ் மண்ணின் உணர்வை மூண்டெழும் பெருந் தீயாகக் காட்டுவோம்!
இது ஒரு கட்சிப் போராட்டமல்ல! பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் இனமான போராட்டம்!
கழகத் தோழர்களே! ஒத்த கருத்துள்ள தோழர்களை இணைத்துக் கொண்டு ஜூலை முதல் தேதி போராட் டத்தின் எழுச்சி, டில்லியை எட்டும் வரை நடக்கட்டும்! நடக்கட்டும்!!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

                                                                                                                                                                             

Thursday, June 23, 2016

0.01 சதவீத மொழி!

தேஜ்நாராயணன் டண்டன் என்பவர் உ.பி. மாநிலம் லக்னோ நகரைச் சேர்ந்தவர் அவர் இந்தி மொழியில் ‘‘ஜெய கிருஷ்ணா ஜெய கன்யாகுமரி’’ என்ற ஒரு பயண நூலை எழுதி யுள்ளார்.

ஆந்திர மாநிலத்தைப் பற்றிய ஒரு சுவையான தகவலைத் தந்துள்ளார்.

ஆந்திர மாநிலம் வெங்க டேஸ்வரா பல்கலைக் கழ கத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் நரசிம்மாச்சாரி அவ ரிடம் சொன்ன தகவல்தான் அது.

‘‘இங்கே சமஸ்கிருத மொழிப் பிரிவு இருக்கிறது, அதற்கு ஒரு பேராசிரியரும் உள்ளார். 11 ரீடர்கள் உள்பட 12 ஆசிரியர்கள் உள்ளனர். பேராசிரியருக்கு மாத ஊதி யம் ரூ.1,200 (1982 ஆம் ஆண்டைய நிலவரம் இது) ரீடருக்கு மாத ஊதியம் ரூ.900. ஆக, மாதம் ஒன்றுக்கு மட்டும் சமஸ்கிருதத் துறை யில் பணிபுரிவோருக்குச் சம்பளம் ரூ.11,100. ஒருமுறை சமஸ்கிருதத்தைப் படிக்க ஒரு மாணவன்கூட வர வில்லை. 12 ஆசிரியர்களும் வேலை யில்லாமல் முதல் தேதி வந்ததும் சம்பளத்தை மட்டும் தவறாமல் பெற்றுக் கொண்டு வந்தனர்.

மனச்சான்று கொஞ்சம் உறுத்த, துணைவேந்தரிடம் சென்று ‘‘நாங்கள் வேலை ஏது மின்றி வெறுமனே பொழுது போக்கிக் கொண்டிருக்கிறோமே - மாணவரும் ஒருவர்கூட கிடையாது - நாங்கள் என்ன செய்யட்டும்?’’ என்று குறை பட்டுக் கொண்டனர்.

துணைவேந்தர், அவர் களுக்குச் சொன்ன பதில் என்ன தெரியுமா?

‘‘உங்களுக்கெல்லாம் முழுச் சம்பளம் முதல் தேதி யன்று கிடைத்து விடுகிறது அல்லவா! பிறகு என்ன குறை? வேண்டுமானால், பல் கலைக் கழகத்தில் உள்ள பெரிய சமஸ்கிருத நூலகத்திற்குச் சென்று ஏதாவது படித்துக் கொண்டு இருங்கள்’’ என்று அறிவுரை வழங்கி னாராம்.

எப்படி இருக்கிறது பார்த் தீர்களா? இதுதான் சமஸ் கிருதப் படிப்பின் நிலை. வேறு ஒரு துறை இப்படி இருந்தால், சும்மா இருப் பார்களா? ஆங்கில ஏடு களில் எத்தனை ஆசிரியர் கடிதங்கள் இடம்பெற்று ‘கிழிகிழி’ என்று கிழித்திருப் பார்கள்!

தெய்வ மொழியா யிற்றே... அதையெல்லாம் கண்டு கொள்ளலாமா?இந் திய அளவில் சமஸ்கிருதம் தெரிந்தோர் 0.01 சதவிகி தம்தான். அதுவும் தெரிந் தோர்தான் - பேசுவோர் என்றும் கூற முடியாது.

கோடிக் கணக்கில் சமஸ் கிருதத்திற்குப் பணத்தைக் கொட்டியழ பி.ஜே.பி. அரசு துடிப்பது ஏன் தெரியுமா? இந்தத் திண்ணைத் தூங்கிப் பேர்வழிகளை ஊட்டி வளர்க்கத்தான்!

- மயிலாடன்

நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் சிலை! மத்திய, மாநில அரசுகள் அளித்த ஒப்புதல் என்னவாயிற்று? - கி.வீரமணி

திராவிட இயக்கத்தின் சாதனையைப் பாரீர்!
நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் சிலை வைக்கப்படும் என்று மத்திய - மாநில அரசுகள் அளித்த ஒப்புதல் என்னவாயிற்று? என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாடாளு மன்றத்தில் தலைவர்கள் சிலை நிறுவுவது குறித்து காரசார மான விவாதம் நடைபெற்றது. (20.6.2016) இந்த நேரத்தில் 13 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட முடிவு ஒன்றை நினைவூட்டுவது நமது கடமையாகும்.

மக்களவை உறுப்பினரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினருமான மதுரையைச் சேர்ந்த தோழர் மோகன் அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் சிலை நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுத்து மூலம் முன்வைத்தார்.
தேசியத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உருவப்படங்கள் மற்றும் சிலைகள் நிறுவுவதற்கான இணைப்புக்குழு அதற்கு ஒப்புதலும் அளித்து அது தொடர்பாக தோழர் மோகன் அவர்களுக்கு கடிதமும் எழு தியது.

சிலையை எந்த இடத்தில் எப்பொழுது நிறுவுவது என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்தக்கடிதத்தில் குறிப்பிடவும்பட்டி ருந்தது. மேலும் அந்தக்குழு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியது.

முதல் அமைச்சராக இருந்த செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் 9 அடி உயரத்தில் தாமிரம், ஈயம், வெள்ளீயம், மற்றும் துத்தநாகம் ஆகியவை கலந்து கருப்பு, பழுப்பு நிறத்தில் சிலை செய்யப்பட உள்ளது என்றும் அச்சிலையை தமிழ்நாடு அரசு வழங்க முடிவு செய்துள்ளது என்றும் செய்திகள் வெளிவந்தன.
இது குறித்து அப்பொழுதே வரவேற்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டோம் (விடுதலை 22.9.2003). ஆண்டுகள் 13 ஓடிவிட்டன, மத்திய, மாநில அரசுகள் எடுத்த அந்த முடிவினை இதுவரை செயல்படுத்தாதது ஏன்?

தமிழ்நாடு அரசு முயற்சி எடுக்குமா? எங்கே பார்ப்போம்?


கி.வீரமணி  
தலைவர்,
திராவிடர் கழகம்


சென்னை
22.6.2016


.
 3



Wednesday, June 22, 2016

பீகார் முதலமைச்சரின் கேள்விக்கு என்ன பதில்?

பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி எழுப்பிய கேள்வி மிகவும் முக்கியமானது - அர்த்தமுள்ளதும்கூட!

‘‘நான் சிறுவயது முதல் யோகா பயிற்சி செய்து வருகிறேன். ஆனால், நான் அதை பெருமையாகச் சொல்லிக் கொண்டது இல்லை. குஜராத்தில் மதுவுக்கான தடை நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே உள்ளது. இதில் பிரதமர் மோடிக்கு எந்தப் பங்கும் இல்லை. எனவே, அதற்கான பெருமை அவரைச் சேராது. யோகா என்பது இயற்கையான ஒரு பயிற்சிதான். ஆனால், நாடு முழுவதும் மதுவுக்கு தடையைக் கொண்டு வராமல் யோகாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதில் எவ்விதப் பயனும் இல்லை. மதுவுக்கு அடிமையான வர்களால் யோகா பயிற்சியை செய்ய இயலாது. மதுவை விற்று அரசு வருமானத்தை ஈட்டுவதை விடுத்து, மாற்று வழிகளில் வருமானத்தைத் தேடவேண்டும். சர்வதேச யோகா தின நிகழ்ச்சி, பொது நிகழ்ச்சி அல்ல. அது பா.ஜ.க.வின் கட்சி சார்ந்த நிகழ்ச்சியாகவே நான் கருதுகிறேன்.’’

இவ்வாறு பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் கருத்துத் தெரிவித்துள்ளார்

யோகா என்ற ஒன்றை ஏதோ நரேந்திர மோடி என்பவர் கண்டுபிடித்ததுபோலவும், உலக மக்களை இந்த யோகாவின்மூலம் காப்பாற்ற வந்த ரட்சகர் என்பது போலவும் விளம்பரப் பதாகையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு திரிகின்றனர். எதிலும் விளம்பர மோகம் என்பது பி.ஜே.பி.,க்குக் குறிப்பாக மோடி - அமித்ஷா வட்டாரத்துக்கு உடன்பிறந்த நோய் போலும்!
அந்த யோகாவிலும் இந்துத்துவா வாடை வீசுகிறது என்று எதிர்ப்புக் கிளம்பியவுடன், கொஞ்சம் கொஞ்சமாக அது சம்பந்தமானவற்றை விலக்க ஆரம்பித்தனர். எடுத்துக்காட்டாக ‘ஓம்’ என்பதை யோகாவுடன் இணைத் தனர். எதிர்ப்புக் கிளம்பவே வாலைச் சுருட்டிக் கொண்டனர்.

உடல்நலனை கடுமையாகப் பறிக்கும் மதுக்கடை களை ஒரு பக்கத்தில் திறந்து வைத்துக்கொண்டு, இன்னொரு பக்கம் உடல்நலனுக்கான யோகா என்றால், இது அசல் இரட்டை வேடம் அல்லவா? நெருப்பையும், பஞ்சையும் ஒரே இடத்தில் வைத்துக்கொண்டு சாகச சித்துகளை நடத்திக் காட்டுவது சரியா?

குறிப்பாக மதுவினால் பெரிதும் பாதிக்கப்படக் கூடியவர்கள், முதல் தலைமுறையாகக் கொஞ்சம் படித்து, வேலை வாய்ப்பும் பெற்று, தட்டுத் தடுமாறி மேலே வரும் நிலையில், குடி குடியைக் கெடுக்கும் என்பதற்கு நிதர்சன எடுத்துக்காட்டாக அந்த முதல் தலைமுறை, வளரும் குடும்பங்கள் நாசமாகப் போய்க் கொண்டிருக்கின்றனவே.

இந்தக் குடிப் பழக்கம் பள்ளிப் பிள்ளைகளையும் பற்றிக் கொண்டுவிட்டது என்றால், இந்தப் படுபயங் கரத்தை என்னவென்று சொல்ல!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு - அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 7 மாணவிகள் குடித்து விட்டு வந்த செய்தி சாதாரணமா?

திருச்சியைச் சேர்ந்த மாணவி தன் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக மது அருந்தும் காட்சி சமூக வலைதளங்களில் உலா வரவில்லையா? நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?

குடியினால் மலட்டுத் தன்மையை அடையும் ஆண் கள், மனைவிமீது சந்தேகப்பட்டு கொலை செய்வது வரை இந்த மதுவின் கொடுங்கரம் குடும்பங்களில் நீள்கிறதே! குடும்பங்களில் மகிழ்ச்சியும், அமைதியும் தொலைந்து விட்டனவே.

கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கை நாளும் வளர்ந்து வருகிறது. எடுத்துக்காட்டுக்கு கடலூர் மாவட்டம், கச்சிராயநத்தம் என்னும் கிராமம். இந்தச் சின்ன கிராமத்தில் 450 குடும்பங்களில் 105 பெண்கள் துணைவரை இழந்தவர்கள் ஆவார்கள்.

எல்லாம் மது என்னும் கொடு நோயால் தூக்கிக் கொண்டு செல்லப்பட்டவர்கள்தாம்.

உலக நாடுகளில் அதிகமான குடி நோயாளிகள் கொழுத்து நிற்கும் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்று விட்டது. இந்தியாவிலும் ‘முதல் பரிசை’ தமிழ்நாடு தட்டிப் பறித்துவிட்ட அவலம். தமிழ்நாட்டில் குடிகாரர்களின் எண்ணிக்கை 1.32 கோடியாகும்.

2001 இல் தமிழ்நாட்டில் குடிகாரர்களின் சராசரி வயது 40; 2014 ஆம் ஆண்டிலோ அது 20 வயதாகி விட்டது; 2016 இல் மேலும் ‘வளர்ச்சி’தான்!

மகள் என்றும், மனைவி என்றும் தெரியாமல் மதிமயக்கம் மன்னிக்கத்தக்கதுதானா? சாலை விபத்துக் களுக்கு முக்கிய காரணமும் இந்த மதுதானே? இரு வகையில் இந்த மது - வீட்டையும், நாட்டையும் நாசப் படுத்துகிறது. இதனை ஒழித்துக் கட்டாமல், இன்னும் சொல்லப் போனால் அரசுக்கு வருவாய் என்ற கண்ணோட்டத்தில் மதுவை அரசே விற்கும் நிலை என்றால், நாட்டு மக்களைக் காப்பாற்றுவோர் யார்?

பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் பிரதமரை நோக்கி விடுத்த வினா விவேகமானது - விரிவான பொருளைக் கொண்டது.

யோகா மூலம் மதுவிலக்குப் பிரச்சாரம் செய்ய முன்வரட்டுமே பார்க்கலாம்; செய்யமாட்டார்கள். அதனை செய்தால் குடிகாரர்களின் எதிர்ப்பைச் சம் பாதிக்க நேரிடுமே!
குடியை ஒழித்து, குடியைக் காப்பீர் என்பது முக்கிய முழக்கமாகட்டும்!


.

Tuesday, June 21, 2016

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் உதவியோடு உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டு அரங்கின் பின்னணி என்ன?

தமிழர்கள் 16 பேர் படுகொலை செய்யப்பட்ட இடம்!
தமிழர்களின் நினைவுச் சின்னங்களை அழித்து உருவாக்கப்பட்டுள்ள சதி!

தமிழர் தலைவர் ஆசிரியர் அம்பலப்படுத்தும் அறிக்கை
திராவிட இயக்கத்தின் சாதனையைப் பாரீர்!

16 தமிழர்களை சிங்களக் காவல்துறையினர் கொன்று குவித்த இடத்தில், தமிழர்களின் நினைவுச் சின்னங்களை அழித்து விட்டு, இந்திய அரசின் துணையோடு யாழ்ப்பாணத்தில் விளையாட்டு அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

யாழ்ப்பாணத்தில் முன்னாள் யாழ்ப்பாண மேயர் ஆல்பர்ட் தம்பிராஜா துரையப்பாவின் நினைவாக  புனரமைக்கப்பட்ட   விளையாட்டு மைதானத்தை தலை நகர் டில்லியில் இருந்து மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் போன்றோர் கலந்துகொண்டு காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தனர்.  

2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த மைதானத்தை சீர்படுத்த இந்தியா 7 கோடி ரூபாயைக் கொடுத்தது. சுமார் 7 மாதத்திற்குள் அவசர அவசரமாக இந்த மைதானம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தின் திறப்பு விழாவின் போது டில்லியில் இருந்து மோடி கூறியதாவது, 'நாங்கள் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் டில்லியில் இருந்தாலும், இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் துடிப்பை உணர முடிகிறது. இந்த மைதானம் வெறும் சிமென்ட் மற்றும் செங்கற்களால் ஆனதல்ல. ஆக்கபூர்வமான மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான அடையாளம்,'' என்றார்.

அந்த நிகழ்வில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட பிரமுகர்கள் யாழ்ப்பாணத்தில் பங்கேற்றார்கள். அப்போது, பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னணி என்ன?

இந்திய பிரதமர் மோடி அவர்களால் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட இந்த விளையாட்டு அரங்கத்தின் பின்னணி என்ன?
1974 சனவரி 3 முதல்  9 வரை அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அந்த மாநாட்டை நடத்த விடக் கூடாது என்று சிங்கள அரசு பல வகைகளிலும் முட்டுக்கட்டை போட்டது. மாநாட்டில் கலந்து கொள்ள வந்த வெளிநாட்டுத் தமிழ் அறிஞர்களும், பார்வையாளர்களும் காட்டு நாயக்க சர்வதேச விமான நிலையத்திலேயே அனுமதி மறுத்துத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஒரு பண்பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாதவாறு தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து அந்த அறிஞர் பெரு மக்கள் கண்டனம் தெரிவித்தது - அந்தக் கால கட்டத்தில் உலகளாவிய சேதியானது.

சிங்களக் காவல்துறையினரின்
வன்முறை - 16 பேர் படுகொலை!

எல்லா தடைகளையும் மீறி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாநாட்டில் கூடினர். 9ஆம் தேதி மாநாடு முடிவுற்று 10ஆம் தேதி வழியனுப்பு விழா சிறப்பாக நடந்து கொண்டிருந்தபோது இலங்கை அரசின் காவல்துறை உள்ளே புகுந்து பெரும் கலகம் விளைவித்தனர். எவ்வித காரணமுமின்றி தடியடிப் பிரயோகம் நடத்தினர். கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசினர். மின்கம்பிகள் அறுந்து வீழ்ந்தன. நூற்றுக் கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். 16 பேர் பரிதாபமான முறையில் கொல்லப்பட்டனர்.
மரணமடைந்தவர்களுக்கு நினைவுத் தூண் அந்த யாழ் துரையப்பா மைதானத்தில் எழுப்பப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட அதே இடத்தில் தான்
அந்த இடத்தில்தான் இப்பொழுது இந்திய அரசின் உதவி யோடு விளையாட்டு அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்த தமிழர்களுக்கான நினைவுச் சின்னங்கள் உடைத்தெறியப்பட்டு விட்டன. இந்த இடத்தில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் 25க்கும் குறைவில்லாத மனித உடலின் எச்சங்கள், உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த எலும்புக் கூடுகள் அனைத்தும் இலங்கைக்குச் சென்ற அமைதிப்படையினரால் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களின் உடல்கள் என்று பின்னாளில் சர்வதேச மனித உரிமைக் குழுவினர் நடத்திய நேரடி விசாரணையில் தெரிய வந்தது.  ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட ஓரிடத்தில்தான் - நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டு இந்திய அரசின் உதவியால் விளையாட்டு அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது கவனத்திற்குரியதாகும்.

ஈழத் தமிழர் தலைவர்கள் பங்கேற்றது எப்படி?

இந்த நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் மைதிரிபால சிறீசேனா பங்கு கொண்டதைப் புரிந்து கொள்ள முடிகிறது. வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்கூட அரசு நிலை என்ற நிர்ப்பந்தத்தில் கலந்து கொண்டு இருக்கலாம்; ஈழத் தமிழர் தலைவர்கள் பங்கு கொண்டு இருப்பது தான் ஆச்சரியமானது.

'சும்மா ஆடுமா சோழியன் குடுமி' என்பதுபோல இந்திய அரசின் துணையோடு தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட ஓரிடத்தில் அவர்களின் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டு அரசு சார்பாக விளையாட்டு அரங்கம் என்ற சின்னம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இதன் பொருள் என்ன? ஓரிடத்தில் அழிப்பு - அதன்மீது ஆதிக்க இனத்தின் சிம்மாசனம் என்பதைத் தமிழர்கள் புரிந்து கொள்ளட்டும்.

ஒன்றை அழித்து இன்னொன்றை நிலை நிறுத்துவது
அழிக்கப்பட்டவர்களின் நினைவுச் சின்னத்தை அழித்து, அழிவுக்குக் காரணமானவரின் நினைவுச் சின்னம் தான் இந்தவிளையாட்டு அரங்கம் என்பது எத்தகைய கொடுமை!
இதுபோலவே சிங்கள ராணுவக் குடியேற்றங்கள். வடக்கு மாகாணத்தில், பெரிதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் நிரந்தரமாகக் குடியேற்றி, தமிழர்களின் காணிகளைப் பறிக்கும் கொடுமையையும், தமிழர்களை அச்சுறுத்தல் செய்கின்ற போக்கையும் சுட்டிக் காட்டுகிறோம்.

ஈழத் தமிழர்களுக்கு உருப்படியான உதவிகளைச் செய்ய முன் வராவிட்டாலும்,  சிறுபான்மை மக்களை அழிக்க அதன்மீது பெரும்பான்மை ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் ஆட்சியை மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர், அதே கண்ணோட்டத்தில் செயல்படும் இலங்கை அரசுக்குத் துணை போயுள்ளார் என்பதை மறந்து விடக் கூடாது - கூடவே கூடாது.


கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம் 



.
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Monday, June 20, 2016

திராவிட இயக்கத்தின் சாதனையைப் பாரீர்!

திராவிட இயக்கத்தின் சாதனையைப் பாரீர்!
மருத்துவக் கல்லூரியில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் சாதனை!
இதனை ஒழித்துக் கட்டத்தான் நுழைவுத் தேர்வு எனும் சதி - எச்சரிக்கை!

தமிழர் தலைவர் ஆசிரியர் சமூகநீதிக்கான அறிக்கை 

தேர்தல் முடிவுகள்  - திராவிட கட்சிகளுக்கு மாற்று ஏதுமில்லை என்பதற்கான நிரூபணம்!  அதிமுக வெற்றி மிகப் பெரியது என்றோ - தி.மு.க. தோல்வி பரிதாபமானது என்றோ சொல்லுவதற்கு இடமேதுமில்லை

நடந்து முடிந்த மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் திறந்த போட்டியில் தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் அரும் சாதனையைப் புரிந்துள்ளனர். இந்த நிலையை ஒழித்துக் கட்டத்தான் நுழைவுத் தேர்வு என்ற சதித் திட்டத்தை திணிக்க உயர் ஜாதி வட்டாரம், பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்., கூட்டம் கச்சைக் கட்டி நிற்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி. வீரமணி அவர்கள் சுட்டிக்காட்டி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
2016-2017ஆம் ஆண்டுக்கான மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 2853 இடங்களுக்கு 25,379 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
குறைந்தது 197.75 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மட்டுமே இந்த 884 இடங்களைப்  பெறுகின்றனர் .

ஒவ்வொரு பிரிவிலும் மிக அதிகமான மதிப்பெண் பெற்ற மாணவர்களும் தரவரிசைப் பட்டியலில்  அவர்களது மதிப்பெண்ணும், தரவரிசை எண்ணும் வருமாறு:

நம் மக்களிடையே ஒரு பொதுவான எண்ணம் உண்டு அல்லது பரப்பப்படுகிறது; தாழ்த்தப்பட்டோர் 35% மதிப்பெண் பெற்றாலே இடம் கிடைத்து விடும் என்பதுதான் அது.  உயர் வகுப்பினர் என்று எண்ணிக் கொள்பவர்கள் 200/200  வாங்கினால் மட்டுமே அனுமதி என்ற தவறான கருத்தும் பரப்பப்படுகிறது. அது தவறானது என்பதை மேற்கண்ட புள்ளி விவரங்கள் நிரூபிக்கும்.
புள்ளி விவரங்கள் காட்டுவது என்ன?

மேற்கண்ட புள்ளி விவரங்கள் எதைக் காட்டுகின்றன? திராவிட இயக்க ஆட்சியில் 69 சதவீத இடஒதுக்கீடு, நுழைவுத் தேர்வு ஒழிப்பு, கல்வி வளர்ச்சிக்கான திட்டங்கள் செம்மையாகத் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதால் இத்தகைய "அறுவடை" நிகழ்ந்திருக்கிறது.

திராவிட இயக்கத்திற்கான வெற்றி!

திராவிட இயக்கத்தின் சமூகநீதிக்குக் கிடைத்த மகத்தான வெற்றியல்லவா இது!

மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற பார்ப்பன சூழ்ச்சியை ஒழித்துக் கட்டியது நீதிக்கட்சி அல்லவா! தந்தை பெரியார் அவர்களின் முயற்சி அல்லவா!
+2 தேர்வு மதிப்பெண் அடிப்படைக் காரணமாக கிராமப்புற ஒடுக்கப்பட்ட ஏழை எளிய நடுத்தர இருபால் மாணவர்களும் இந்தச் சாதனையின் வெற்றிச் சிகரத்தை எட்டியுள்ளனர் பாராட்டுகிறோம் - வாழ்த்துகிறோம்!

வெற்றியை வீழ்த்த சதி!

இந்த வெற்றியைத் தட்டிப் பறிக்கத்தான் - ஆண்டாண்டு காலமாக கல்விஉரிமை மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் இந்தச் சாதனையை ஒழித்துக் கட்டத்தான் அகில இந்திய நுழைவுத் தேர்வு எனும் கொடுவாளை கொல்லைப்புற வழியில் தூக்கிக் கொண்டு வருகின்றனர். உயர் ஜாதி வட்டாரமும், பா.ஜ.க., சங்பரிவார்களும் மும்முரம் காட்டுகின்றன; கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளின், தலைவர்கள் சமூகநீதியாளர்கள் ஒன்று திரண்டு,  நாம் போராடிப் போராடிப் பெற்ற இந்த நல்வாய்ப்பைப் பாதுகாத்துக் கொள்ளவும் இதனை ஒழித்துக் கட்ட துடித்துக் கொண்டு நிற்கும் முயற்சிகளைப் புறந்தள்ளவும்,  நுழைவுத் தேர்வை உள்ளே நுழைய விடாமல் நிரந்தரமாகத் தடுத்து நிறுத்தவும் ஒன்றுபட்டு நிற்கத் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்தியாவுக்கே வழிகாட்டுவோம்!


தந்தை பெரியார் பிறந்த தமிழ்மண் இந்தப் பிரச்சினையில் இந்தியாவுக்கே வழிகாட்டும் ஒரு நிலையை உருவாக்கி, இந்தியா முழுமையும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கும், வளர்ச்சிக்கும் வழி காட்டுவோம்! வழி காட்டுவோம்!!

வாரீர்! வாரீர்!!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்



.
 2

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Saturday, June 18, 2016

குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது நடந்த மதக் கலவரம் மோடி பொறுப்பு ஏற்பாரா?

குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது நடந்த மதக் கலவரம்
69 முஸ்லீம்கள் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு!
11 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை
12 பேருக்கு 7 ஆண்டுகள், ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை
மோடி பொறுப்பு ஏற்பாரா? நாடே எதிர்பார்க்கிறது?
அகமதாபாத் ஜூன் 17 நரேந்திர மோடி குஜராத்தில் முதல் அமைச் சராகவிருந்தபோது சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலையில் குற்றவாளிகள் 11 பேர்களுக்கு ஆயுள் தண்டனை - (சாகும் வரை) விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

மோடி முதல்வராக இருந்த போது குஜராத் மாநிலம் முழு வதும் 2002ஆம் ஆண்டு மதக் கலவரம் நடைபெற்றது.

இந்தக் கலவரத்தில் ஈடு பட்ட காவிக்கும்பல் அகமதா பாத் நகரத்தில் மய்யப்பகுதி யான குல்பர்க் சொசைட்டியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட இஸ்லா மியர்கள் அடைக்கலம் புகுந்தி ருந்தனர். இந்த குடியிருப்பில் நுழைந்த பஜ்ரங்க்தள் மற்றும் பல்வேறு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள், குழந்தைகள், பெரியவர்கள் எனப் பார்க்கா மல் அனைவரையும் வெட்டிச் சாய்த்தனர். வெட்டுப்பட்ட நிலையில் இருந்தவர்களை ஒன்றாக இழுத்துப் போட்டு அவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி டயர்களைப் போட்டு தீவைத்துக் கொளுத்தினர். இதில்  69 மரணமடைந்தனர் 27 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

11 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை

14 ஆண்டுகளாக நடந்து வந்த  இந்த வழக்கில்  24 பேர் குற்றவாளிகள் என்றும் 36 பேரை விடுதலை செய்தும் அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் ஜூன் 2 ஆம் தேதி தீர்ப்பளித் தது. முதலில் இவ்வழக்கில் தண்டனை விவரம் 6-ஆம் தேதி அறிவிக்கப்படுவதாக இருந் தது. ஆனால், தண்டனை விவ ரத்தை 9-ஆம் தேதி, 11-ஆம் தேதி, 13ஆ-ம் தேதி என மூன்று முறையும் அறிவிக்காமல்  ஒத்தி வைக்கப்பட்டது. பிறகு 4-ஆவது முறையாக ஜூன் 17-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதன் படி இன்று அளிக்கப் பட்ட தீர்ப்பில்  படுகொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களில்  11 பேருக்கு ஆயுள் தண்டனை யும், 12 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ஒருவ ருக்கு 10 ஆண்டு சிறைத் தண் டனையும் விதித்தும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரும் சாகும் வரை சிறைத் தண்டனை அனுபவிக்க வேண் டும் எனவும் நீதிமன்றம் தீர்ப் பளித்தது.

மரண தண்டனை இல்லை

குற்றவாளிகள் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த 69 பேரை உயிருடன் எரித்துக் கொன்று கொடுஞ்செயல் புரிந்துள்ள தால், அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் கொலைக் குற்றவாளிகள் 11 பேர் உட்பட யாருக்குமே மரண தண்டனை வழங்கப்படவில்லை.

இந்தத் தீர்ப்பு நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தும் என்பதில் அய்யமில்லை. அன்றுமுதல் அமைச்சராகவி ருந்த நரேந்திர மோடி பொறுப் பேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2002ஆம் ஆண்டு பீகார் மாநிலம் தர்பங்காவிலிருந்து குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு வந்து கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில், கோத்ரா ரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது ரயிலின் எஸ்-6 பெட்டி தீப்பிடித்து எரிந்தது. இதில் அந்தப் பெட்டியில் இருந்த அயோத்திலிருந்து வந்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த கரசேவ கர்கள் 59 பேர்  உடல் கருகி மாண்டனர். இதையடுத்து குஜ ராத்தில் பெரும் கலவரம் வெடித்தது. முஸ்லீம் சமுதாயத் தினரை குறி வைத்து வேட்டை யாடினர் சங் பரிவார் அமைப் பினர். மிகக் கொடூரமான  முறையில் முசுலீம்கள் கொல் லப்பட்டனர்! இந்த கலவரத் தில் சிக்கி 2000 பேர் பலியா னார்கள். கலவரத்தில் 254 இந்துக்களும் பலியானார்கள். பிப்ரவரி 28ஆம் தேதி 2000 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ''குல்பர்க் சொசைட்டி'' பகுதி யில் வசித்த முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பலர் உயிரோடு எரித்து கொல்லப்பட்டதோடு, அடித் தும் படுகொலை செய்யப்பட் டனர்.

முதலமைச்சர் நரேந்திர மோடியின் தூண்டுதல்

இந்த சம்பவத்தில் 69 பேர் உயிரிழந்தனர். முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈசன் ஜாப் ரியும் கொல்லப்பட்டார். கல வரம் நடந்த போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் தூண்டுதலின் பேரில் தான் இந்தப் படுகொலைகள் நடந்தன என ஈசன் ஜாப்ரியின் மனைவி ஜாகியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் சி.பி.அய் முன்னாள் இயக்குனர், ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு விசா ரணைக் குழுவை அமைத்தது. ஆனால் அந்த சிறப்பு புல னாய்வுக் குழுவோ, குல்பர்க் படுகொலையில் மோடிக்கும் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் களுக்கும் தொடர்பில்லை எனத் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கிலிருந்து மோடியும் அவ ரது அமைச்சரவை சகாக்களும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் இதை ஜாகியா ஏற்றுக் கொள்ள வில்லை; விசாரணை முறை யாக நடக்கவில்லை என்று கூறி மீண்டும் விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். முதலில் இந்த வழக்கை விசாரித்த, அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண் டும் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் ஜாப்ரிக்கு அனுமதி தந்தது. இந்த மனுவை விசா ரித்த அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மோடிக்கு எதிரான ஜாகியா ஜாப்ரியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த கலவரத்தில் மோடிக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் ஏது மில்லை என உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்வதாகவும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது.

இந்த நிலையில் குல்பர்க் சொசைட்டி வழக்கு  உச்சநீதி மன்றம் கண்காணிப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 8 மாதங்களுக்கு முன் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், மே 31ஆம் தேதி தீர்ப்பு வழங்கும்படி சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன் றம் அறிவுறுத்தி இருந்தது.


.
 1

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...