Saturday, April 9, 2016

பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் தமிழர் தலைவர் கி.வீரமணி சந்திப்பு

பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் தமிழர் தலைவர் சந்திப்பு

தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவுக்கு
தமிழகம் வருவதாக முதல்வர் ஒப்புதல்
பாட்னா, ஏப்.8- பீகார் தலைநகர் பாட்னாவில் ‘சமூகநீதிக்கான கி. வீரமணி விருது’ பெற உள்ள பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் அவர்களை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சந்தித்து அளவளாவினார்.
அப்போது தமிழ்நாட்டில் செப்டம்பரில் நடைபெற உள்ள தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதாக மகிழ்ச்சியுடன் ஒப்புதல் அளித்தார்.
பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில் 2015-ஆம் ஆண்டுக்கான “சமூக நீதிக்கான கி.வீரமணி விருது’’ பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு, பாட்னாவில் நாளை (9.4.2016) வழங்கப்பட உள்ளது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் பொருட்டு பாட்னாவிற்கு 7-ஆம் தேதி வருகை தந்த தமிழர் தலைவருக்கு, பாட்னா விமான நிலையத்தில், அய்க்கிய ஜனதா தள மாநில நிர்வாகிகளும், ரவீந்திரராம் தலைமையில் பீகார் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் நிர்வாகிகளும் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
தமிழர் தலைவருடன், மானமிகு மோகனா வீரமணி, பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநரும், விருது வழங்கும் குழுவின் தலைவருமான டாக்டர் இலக்குவன் தமிழ், (அமெரிக்கா) திராவிடர் கழக வெளியுறவு செயலர் வீ.குமரேசன், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்
கோ.கருணாநிதி ஆகியோரும் வருகை தந்தனர்.
முதல்வருடன் சந்திப்பு!
மாலை 7 மணிக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் தமிழர் தலைவர் சந்தித்து, பொன்னாடை அணிவித்தார். பீகாரில் முழு மதுவிலக்கை நிறைவேற்றியதற்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார். உலக நல்வாழ்வு தினத்தை ஒட்டி, பழக்கூடையும் மானமிகு மோகனா வீரமணியால் அளிக்கப்பட்டது. பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில் சமூக நீதிக்கான கி.வீரமணி விருதினை பெற்றிட ஒப்புதல் தந்தமைக்கு டாக்டர் இலக்குவன்தமிழ் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தார்.
ஏறக்குறைய ஒரு மணி நேரம் தமிழர் தலைவருடன், பெரியார் பற்றியும், பெரியார் டிரஸ்டு நடத்திடும் கல்விக் கூடங்கள் பற்றியும் மற்றும் சமூக, அரசியல் நிலவரங்கள் குறித்தும் விரிவாக பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடன் அளவளாவப்பட்டது.
தமிழர் தலைவருடன், பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநரும், விருது வழங்கும் குழுவின் தலைவருமான டாக்டர் இலக்குவன் தமிழ், திராவிடர் கழக வெளியுறவு செயலர் வீ.குமரேசன், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி, பீகார் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் பொதுச் செயலாளர் ரவீந்திர ராம், பீகார் மேலவை உறுப்பினர் சஞ்சய்குமார் சிங் ஆகியோரும் உடன் இருந்தனர்.
தமிழ்நாட்டிற்கு செப்டம்பர் மாதத்தில் வருகை தந்து தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழர் தலைவர் விடுத்த வேண்டுகோளையும் பீகார் முதல்வர்
நிதிஷ்குமார் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார். பின்னர் முதல்வர் இல்லத்தில் நிதிஷ்குமாரால் நிறுவப்பட்ட போதி மரத்தினை தமிழர் தலைவர் உள்ளிட்ட விருந்தினர்களைப் பார்வையிட அழைத்துச் சென்றார்.அனைவருக்கும் தேனீர் அளித்து மகிழ்வித்தார் முதல்வர் நிதிஷ்குமார். தமிழர் தலைவர் உள்ளிட்ட அனைத்து விருந்தினர்களையும் வாயில்வரை வந்து வழியனுப்பி வைத்தார்.


.
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Tuesday, April 5, 2016

டில்லி பல்கலைக் கழக மாணவர்கள் கொளுத்திய மனுதர்ம வாசகங்களைக் காணீர்!!


டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தீவைத்துக் கொளுத்திய மனுதர்ம நூலின் 40 விதிகள்
1.  'எந்தப் பருவத்தினளாயினும், தனது இல்லத்திலே கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றலா காது'' (10 : 147)
2. ''இளமையில் தகப்பன், பருவத்தில் கணவன், விதவையான பின் மக்கள் இவர்கள் காவலிலன்றிப் பெண்கள் தன்னிச்சையாக இயங்கலாகாது'' (10 : 148).
3. ''இழி நடத்தை, பரத்தையர் நட்பு, நற் குணமின்மை இவற்றையுடையவனா யினும், கற்பினளான பெண் தன் கணவனைத் தெய்வமாகப் பேணுக'' (10 : 154).
4. ''அன்றாட வேள்விகள் அய்ந்தும், உண்ணாமை, நோன்பு முதலியனவும் மாதர்க்குத் தனிப்பட யாதுமிலது. கணவனைப் பேணுதலே அவர்க்கு மறுமையின்பிற்குரிய நல்லாறு'' (9 : 14).
5. ''நிறை பிறழ்தலும், நிலையில் மனமும், நண்பின்மையும், மாதர் தம் இயல்பாவதால், கணவனால் நன்கு போற்றிப் புரக்கப்படும் போதும், அவர்கள் கணவரின் காவலை விரும்புவதில்லை'' (9 : 15).
6. இவ்வித இயல்புகள் மாதர்க்குப் பிறப்புடன் வருவதாகையால் மாதர் ஒழுக்கம் கேடுறாமற் பேணும் முயற்சியில் ஆடவர் கவனமாக இருக்க வேண்டியது (9 : 17).
7. 'படுக்கை, ஆசனம், அழகு செய்தல், காமம், சினம், பொய், துரோக எண்ணம் இவற்றை மாதரின் பொருட்டே மனு படைத்தார்' (9 : 17).
8. மாதர்க்குப் பிறவியைத் தூய்மை யாக்கும் சமஸ்காரங்கள் மந்திரப்பூர்வமாகச் செய்வித்தல் யாதுமின்று. இவர்களுக்கு வெள்ளை யுள்ளமும் இல்லை. பாவம் நீக்கும் மந்திர உபதேசமும் கிடையாது. எனவே பொய்யைப் போல் மாசு வடிவினராக மாதர் இயன்றிருக்கின்றனர் (9 : 18).
9.  பிள்ளை இல்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாக இருந்தால் அப்பேது ஸ்திரீ தன் கணவன், மாமனார் முதலானவர்களின் உத்திரவு பெற்றுக்கொண்ட தன் மைத் துனன் அல்லது தன் கணவ னுக்கு ஏழு தலை முறைக்குட் பட்ட பங்காளி இவர்களோடு மேற்சொல்லுகிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ளலாம் . ( அத் 9. சு.59)
10.  கணவன் துராசாரமுள் ளவனாக இருந்தாலும் அந்நிய ஸ்திரீலோலனாயிருந்தாலும், நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப்போல பூசிக்க வேண்டியது. ( அத் 5. சு.154)
11.  பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், யௌவனத் தில் கணவன் ஆக்ஞை யிலும், கணவன் இறந்த பின்பு பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல் ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்கக் கூடாது. ( அத் 5. சு.148)
12 . பெண்களையும், பிராமணரல்லாதா ரையும் கொல்லுதல் பாதகமாகாது. ( அத் 11 சு.65)
13. தனக்கு பொக்கிஷநாசம் முதலிய மேலான ஆபத்து வந்தாலும் அரசன் அதிகத் தீர்வையை ஏற்படுத்தி பிராமணர் களுக்குக் கோபம் வரச் செய்யக்கூடாது. அவர்கள் கோபித்தால் இவன் சேனை யோடும். வாகனத்தோடும் அழிந்து போகும் படி சபிப்பார்கள். (அத் 9. சு.343)
14. வைதீகமாக இருந்தாலும், லௌகீகமாக இருந்தாலும் மூடனாயிருந்தாலும் பிரா மணனே மேலான தெய்வம்.( அத் 9. சு.317)
15 . ஒளியுள்ள அக்கினியானது மயானத்தில் பிணத்தைத் தகித்தாலும் நிந்தனை இல்லாமல் எப்படி ஹோமத்தினால் விர்த்தி செய்யப்படுகின்றதோ அப்படியே பிரா மணன் கெட்ட காரியத்தில் ஈடுபட்டிருந் தாலும் பூஜிக்கத்தக்கவன்; மேலானவன்.
அரசன் பூமியிலிருந்து புதையல் கண்டெடுத்தால் அதில் பாதியை பிராம ணர்களுக்கு தானஞ்செய்து மற்றதை தன் பொக்கிஷத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டியது. ( அத் 8. சு.38)
16. பிராமணனுக்குத் தலையை முண்டிதஞ் செய்வது (மொட்டை அடிப்பது) கொலைத் தண்ட னையாகும். மற்ற வருணத் தாருக்கு கொலைத் தண்டனை யுண்டு. ( அத் 8. சு.379)
17. சர்ப்பம், பிராமணன் இளைத்திருந்தாலும் அவனை அவமானம் செய்யக் கூடாது. (அத் 4. சு.135-6)
18. பிராமணன் கொடிய குற்றம் செய்தவன் ஆயினும் அவனைக் கொலை செய்யா மலும் துன்பப்படுத்தாமலும் அவன் பொருளைக் கொடுத்து அயலூருக்கு அனுப்ப வேண் டும். (அத் 8. சு.380)
19. பிராமணனுக்கு மங்களத் தையும், சத்திரியனுக்குப் பலத் தையும், வைசியனுக்குப் பொரு ளையும் , சூத்திரனுக்குத் தாழ் வையும் காட்டுகிறதான பெயரை இடவேண்டியது. சூத்திரனுக்குத் தாஸன் என்ற தொடர் பெயராக இட வேண்டியது. (அத் 2. சு.31-32)
20. பிராமணனுக்குப் பஞ்சு நூலாலூம் சத்ரியனுக்கு சணப்ப நூலாலும் வைசிய னுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண் டியது. (அத்2. சு.44)
21. பன்றியின் மோத்தலினாலும், கோழிச் சிறகின் காற்றினாலும், நாயின் பார்வை யினாலும், சூத்திரன் தொடுதலாலும் பதார்த்தம் அசுத்தமாகின்றது. (அத்3.சு,241) சிரார்த்த உணவு சூத்திரனுக்குக் கூடாது.
22. எவன் சிரார்த்தஞ்செய்து அன்னம் முதலியவற்றை சூத்திரனுக்குப் போடு கிறானே அந்த மூடன் கால சூத்திரமென் னும் நரகத்தில் தலைகீழாக விழுகிறான். (அத் 3. சு. 249)
23. ''இவர்களுக்கு நேரே உணவு பரிமாறல், ஏவலாளரைக் கொண்டு, உடைந்த சட்டியில், அன்னமிட்டு வைக்க வேண்டும். இவர்கள் ஊரிலும், நகரிலும் இரவில் திரியக்கூடாது'' (10 : 54).
24. அந்த சிரார்த்தத்தில் (சூத்திர னுக்கு தானஞ்செய்யப்பட்ட சிரார்த்தத் தில்) புசித்த பிராமணன் தன் மனைவி புணர்ச்சி யினாசையால் வந்தபோதிலும், அவளுடன் அன்று சம்போகஞ் செய்தால் அவளுடைய மலத்தில் அந்த மாதம் முழுவதும் அவனுடைய பிதுர்க்கள் மூழ்குகிறார்கள். (அத்.3.சு .250)
25. சூத்திரன் என்பவன் ஏழு வகைப் படும் 1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன். 2. யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன். 3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழி யஞ் செய்கிறவன். 4. விபசாரி மகன். 5. விலைக்கு வாங்கப் பட்டவன். 6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன். 7. தலைமுறை தலை முறையாக ஊழியம் செய்கிறவன். (அத் 8. சு. 415)
26. சூத்திரன் சுவர்க்கத்திற்காவது, ஜீவ னத்திற்காவது அல்லது இரண்டிற்கு மாவது, பிராமணனையே தொழ வேண் டும். இவன் பிராமணனை அண்டிய சூத்திரன் என்று ஒருவனுக்குப் பெயர் வந்தால் அதே அவனுக்குப் பாக்கியம். (அத் 10. சு .122)
27. பிராமணர்களை வழிபடாததனா லும் உபநயனம் முதலிய சடங்குகள் செய்து கொள்ளாததனாலும் சத்திரியர் வரவர சூத் திரத் தன்மை அடைந் தார்கள். (அத்10. சு.43)
28. பிராமணன் உண்டு மிகுந்த உணவு(எச்சில்) உடுத்திக் கிழிந்த ஆடை, சாரமற்ற தானியம்(பதர்) இவைகளைப் பிராமணன், சூத்திரன் ஜீவனத்திற்குக் கொடுக்க வேண்டும். (அத்.10.சு.,125)
29. சூத்திரனைக் கூலி கொடுத்தோ, கொடாமலோ பிராமணர் வேலை வாங்க லாம், பிராமணனுக்குத் 29. தொண்டு செய்யவே சூத்திரனைப் பிரம்மா படைத் திருக்கிறார். (அத்.8. சு 413)
31. சூத்திரன் பிராமணனுக்குப் பணிவிடை செய்யும்படி அரசன் செல்ல வேண்டியது, அப் படிச் செய்யாவிட்டால் அரசர்கள் தண்டித்து அங்ஙனம் செய்யச் சொல்ல வேண்டியது. (அத் 8. சு. 235)
32. சூத்திரன் மற்ற மூன்று வருணத் தாருக்கும் பொறாமையின்றி பணி செய்வதை முக்கியமான தர்மமாக ஏற்படுத்தினார் ; இதனால் அவனுக்குத் தானம் முதலியவையும் உண் டென்று தோன்றுகிறது (அத் 1. சு.91)
33. யாகம் செய்யாதவனுடைய (சூத்திரன்) பொருள் அசுரர் பொருளாகும் . ஆகையால் அதைக் கொள்ளையிடுவது தர்மமாகும்.
(அத். 7. சு.24)
34. செல்வம் உள்ள சூத்திரன் வீட்டில் சிறிதும் தயங்காமலும் கேளாமலும் பலாத் காரத்தினாலும் கொள்ளையிடலாம். (அத்.11. சு.13)
35. சூத்திரன் பொருள் சம்பாதிக்கத் தக்க வனாயிருந்தாலும், குடும்பத்திற்கு உபயோக மானதைவிட அதிகப் பொருளை சம்பாதிக்கக் கூடாது . அப்படிச் சம்பாதித்தால் தன்னால் உப சரிக்கத்தக்க பிராமணனையே இம்சை செய்ய வேண்டி வரும். (அத்.10.சு.129)
36. சூத்திரன், பிராமணர்களைத் திட்டி னால் அவன் நாக்கை அறுக்க வேண்டும். (அத்.8.சு.270)
37. சூத்திரன் பிராமணன் பெயர்,சாதி இவை களைச் சொல்லித் திட்டினால் அவன் வாயில் பத்து அங்குல நீளமுள்ள இரும்புக் கம்பியைக் காய்ச்சி எரிய எரிய வைக்க வேண்டும். (அத்.8.சு.271)
38. சூத்திரன் பிராமணனைப் பார்த்து நீர் இதைச் செய்ய வேண்டும் என்று உபதேசம் செய் தால் அவன் வாயிலும், காதிலும் எண்ணெய்யைக் காய்ச்சி ஊற்ற வேண்டும். (அத்.8. சு.272)
39. சூத்திரன் பிராமணனுடன் ஒரு ஆச னத்தில் உட்கார்ந்தால், இடுப்பில் சூடுபோட வேண்டும்; அல்லது ஊரைவிட்டுத் துரத்த வேண்டும். (அத்.8.சு.281)
40. சூத்திரன் பிராமணனின் எந்தெந்த உறுப்புகளை கையினாலும் தடியினாலும் தாக்கு கிறானோ, அந்தந்த உறுப்புகளை நறுக்க வேண் டும் அடித்தால் கையையும் , உதைத்தால் காலை யும் வெட்டிவிட வேண்டும். (மனு. அத் 9. சு.280)


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

இடஒதுக்கீடு, சமஸ்கிருத வாரம், ‘பாரத் மாதா கி ஜே’ எல்லாவற்றிலும் இரட்டை வேடம்!


எதிர்ப்பால் பின் வாங்கும் ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸின் இரட்டை வேடத்தைப் புரிந்து கொள்வீர்!

அதிகாரம் ஆணவப் போதைகளை முறியடிப்போம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
பிரதமர் மோடிக்கு நெருக்கடியைகொடுக்கிறார்-ஆர்.எஸ்.எஸ்தலைவர்?  வெளியுறவுக் கொள்கையில் கடும் சிக்கல் வரும் எச்சரிக்கை!
எல்லாவற்றிலும் இரட்டை வேடம் போடும் ஆர்.எஸ்.எஸின் முரண்பாடுகளையும், அதிகார ஆணவப் போதைகளையும் முறியடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஆரியக் கலாச்சாரமான சனாதன பார்ப்பனீயக் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்காகவே, ஹிந்து மகாசபை என்ற பழைய பார்ப்பனியப் பாதுகாப்பு, வெளிப்படையாகத் தெரிவதால் அந்த மதவெறி அமைப்பின் பக்கம் வர அஞ்சும் அப்பாவி மக்களை ஈர்க்க, ‘தேச சேவை’ என்ற போர்வை போர்த்தப்பட்டு, அதன் முகமூடி அமைப்பாக 1925இல் மகாராஷ்டிர சித்பவன் பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட ஒரு அமைப்பே ஆர்.எஸ்.எஸ். என்ற ‘ராஷ்டிரிய சுய சேவக் சங் ஆகும்! (R.S.S.)

‘சித்பவன்’ பார்ப்பனர்களுக்கு கூடாரமே ஆர்.எஸ்.எஸ்.
அதன் மூலம் முக்கிய தலைவர்களிலிருந்து அதனிடம் பயிற்சி பெற்று காந்தியாரைச் சுட்டுக் கொன்ற கோட்சே வரை இந்த ‘சித் பவன்’ மகாராஷ்டிர பார்ப்பனரேயாவர்!
சமூகநீதிக்கு  எதிராகக் குரல் கொடுத்து வர்ணப் பாதுகாப்பை வரிந்து கட்டிக் கொண்டு ஆதரித்து, தேசியத்தைப் புகுத்த பிள்ளையாரை ஒரு ஆயுதமாக மகாராஷ்டிரத்தில் கொண்டு வந்த உத்தியைக் கையாண்ட பாலகங்காதர திலகர் என்ற பார்ப்பனரும் சித்பவன் பிரிவு பார்ப்பனரே! இவர் கீதையையும் அதன் வர்ண தர்மங்களையும் போற்றியவர் (வி.டி. சவார்க்கரும் அதே பிரிவுதான்)
தீண்டாமை எதிர்ப்பு என்பதும்கூட ஒரு பாவனைதான்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் லட்சியம் ஹிந்துத்துவாவைப் புகுத்திப் பார்ப்பனீய மறுமலர்ச்சிக்கான சமஸ்கிருதத்தை - அதன் கலாச்சார பண்பாடுகளை நாடு தழுவிய அளவில் பரப்புதல் - வர்ண தர்மத்திற்குப் பாதுகாப்பு அளிக்கும்போது, ஒரு தந்திர உத்தியாக, தீண்டாமையை எதிர்ப்பதைப் போல் காட்டிக்  கொள்வது!
“பேசுநா இரண்டுடையாய் போற்றி,
தந்திரமூர்த்தி போற்றி”
என்று அறிஞர்அண்ணா “ஆரிய மாயை” நூலில் குறிப்பிட்டதற்கு சரியான எடுத்துக்காட்டு ஆர்.எஸ்.எஸ்.!
அடிப்படை மூலக் கொள்கையை அடைய அவ்வப்போது உத்திகளையும் தந்திரங்களையும் அஸ்திரங்களாக ஏவி, வியூகங்களை மாற்றி அமைப்பது ‘அவாளுக்கு’ கை வந்த கலையாகும்!
எடுத்துக்காட்டாக, பெண்களுக்கு  அனுமதியில்லை என்று ஆர்.எஸ்.எஸ். கூறியது; பிறகு மெல்ல 10 ஆண்டுக்கு பின் பெண்களை உள்ளே சேர்த்து, அவர்களது சம உரிமையை மனப்பூர்வமாக ஏற்காமல், ‘அவர்கள் வேலை குடும்பப் பாங்கோடு வீட்டிற்குள்ளே இருப்பது தான் நல்லது’ என்று தேன் தடவிய பூச்சு கொண்ட பேச்சு பேசுகிறது!
அரசியலில் ஈடுபடுவதில்லை என்று ஆர்.எஸ்.எஸ். எழுதிக் கொடுத்தது என்னாயிற்று?
முதல் முறை ஆர்.எஸ்.எஸ். தடை (1948) செய்யப்பட்டபோது, மத்திய அரசிடம் இவர்கள் கொடுத்த வாக்குறுதியில் அரசியல் அமைப்பு அல்ல ஆர்.எஸ்.எஸ். என்று கூறியதுடன், சட்ட திட்டங்களை இனி வகுத்துக் கொள்வோம் என்பதுதான். (அதுவரை கிடையாது).
சென்னைப் பார்ப்பனர் டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரிதான் இவர்களுக்காக மத்திய உள்துறை அமைச்சருடன் பேசி, எழுதி, தடை நீக்கம் செய்யப் பயன்பட்டவர்!
வெளிப்படையாக நாங்கள்(R.S.S.) அரசியலுக்கு வர மாட்டோம் என்று கூறிக் கொண்டே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் (2014) வெளிப்படையாக அரசியல் காட்சிகளை அரங்கேற்றியவர்கள் இவர்கள்!
இரண்டு வகையான பேச்சுகளும், நடத்தையும் இவர்களது வாடிக்கைகளில் வழமையாகி விட்டன!
எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உண்டு.
இடஒதுக்கீடு பற்றி பல பல்டிகள்
இதோ ஒரு சில:
பீகாரில் இடஒதுக்கீட்டினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று (ஒழிக்க வேண்டுமென்பதை மறைமுகமாக) கூறி, எழுந்த கடும் எதிர்ப்பும், பா.ஜ.க. பீகாரில் சந்தித்த படு தோல்வியும் பேச்சை மாற்றி கட்டாயம் இடஒதுக்கீடு தொடர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவரே “பிளேட்டை” மாற்றிப் போட வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது.
‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்லும்படி செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் கூறி, திட்டமிட்டே சிறுபான்மைச் சமுதாய மக்களுக்கும், மற்ற பொதுவானவர்களுக்கும் ஒரு இக்கட்டான சங்கடத்தை ஏற்படுத்தி தேசபக்தி சர்டிபிகேட்டை இவர்களிடமிருந்து தான் பெற வேண்டும் என்பது போன்ற ஒரு மாயையை  அதிகார ஆணவ போதை மூலம் அறிவித்து வருகின்றன!
மகாராஷ்டிர முதல்வரின் பாசிச குரல்!
மகாராஷ்டிர முதல் அமைச்சர் (பா.ஜ.க.) தேவேந்திர பட்னவிஸ் (மராத்திய பார்ப்பனர்) ‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்லாதவர்களுக்கு இந்த தேசத்தில் வாழ இடமில்லை என்று ஏதோ குடிஉரிமையை இவர்கள் பார்த்து மற்றவர்களுக்கு வழங்கும் பிச்சை போல பேசியுள்ளார்!
ஒரு பொறுப்பான பதவியில் உள்ள முதல் அமைச்சர் இப்படிப் பேசுவது அழகா? நியாயமா? ஏற்புடைத்தா?
எதிர்ப்பான கொந்தளிப்பான  வீச்சைத் தாங்க முடியாத நிலையில், உடனே ஆர்.எஸ்.எஸ். கட்சி டில்லியிலிருந்து அப்படி யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று மறுப்புத் தெரிவிக்கிறது!
சூழ்ச்சிப் படலம்!
ஏன் இரட்டை குரல்? எதற்காக இந்த இரட்டை வேடம்?
நோட்டம்(Feelers) விட்டுப் பார்க்கும் பார்ப்பனீயத் தந்திர முறைகளில் ஒன்று இது!
சமஸ்கிருத வாரம் கொண்டாட சுற்றறிக்கை விடுவது, பிறகு எதிர்ப்புப்  பலமாக வந்தவுடன் பின் வாங்குவது - இதெல்லாம் மக்கள் விழித்துள்ளனரா? என்று பார்க்கும் சூழ்ச்சிப் படல அரங்கேற்றமே!
இந்தப் பாசிசம் ஒரு போதும் பலிக்காது! ராம் ஜெத்மலானி போன்ற பிரபல வழக்குரைஞர்  பா.ஜ.க. தலைவர்களில் முன்பு ஒருவராக மதிக்கப்பட்டவர், ‘இப்போது நெருக்கடிகால சூழ்நிலை நிலவுகிறது’ என்று நேற்று தஞ்சையில் கூறியிருப்பது எதனைக் காட்டுகிறது?
ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் பாரத மாதாவின் கையில் தேசியக் கொடியா உள்ளது? மாறாக, காவிக் கொடி அல்லவா உள்ளது? இதன் நோக்கம் புரிகிறதா?
வந்தே மாதரம் பாடல்
‘வந்தே மாதரம்‘ பாடலேகூட இஸ்லாமிய சிறுபான்மை யினரைக் கொச்சைப்படுத்தும் தன்மையது என்பது எத்துணைப் பேருக்குத் தெரியும்?
1938இல் ஆச்சாரியார் (ராஜாஜி) முதலமைச்சராக இருந்தபோது சென்னை ராஜதானியில் - சட்டமன்றம் துவங்குமுன் வந்தே மாதரம் பாட்டு பாடக் கட்டளை இட்டு, பின்பு அது திரும்பப் பெற்ற பழைய வரலாறே இதன் நோக்கத்தை விளக்குவதாகும்.

இந்த இரட்டை வேடத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.


கி.வீரமணி   
தலைவர்,    திராவிடர் கழகம்


சென்னை
4.4.2016  



.
 2

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Wednesday, March 30, 2016

சட்டத் தடை, நீதிமன்றத் தடையில்லாத நிலையில் தீட்சை பெற்ற 206 பேரையும் அர்ச்சகர்களாக நியமிக்க முதலமைச்சர் தயங்குவது ஏன்?

குலக்கல்வி திட்டம் ஒழிக்கப்பட்ட நாளில் (ஏப் 18) நடத்தப்படும்
மறியலில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வாரீர்! வாரீர்!!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

பிரதமர் மோடிக்கு நெருக்கடியைகொடுக்கிறார்-ஆர்.எஸ்.எஸ்தலைவர்?  வெளியுறவுக் கொள்கையில் கடும் சிக்கல் வரும் எச்சரிக்கை!
தந்தை பெரியார் அவர்களால் தம் வாழ்நாளில் இறுதியாக அறிவிக்கப்பட்ட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற மனித உரிமைக் கருத்தினை நடைமுறைப்படுத்த, சட்டத் தடையோ, நீதிமன்றத் தடையோ இல்லாத நிலையில், அர்ச்சகர் பயிற்சி மற்றும் தீட்சை பெற்ற 206 பேரையும் அர்ச்சகர்களாக நியமனம் செய்ய முதல் அமைச்சர் தயங்குவது ஏன் என்ற வினாவை எழுப்பி, குலக்கல்வி திட்டம் ஒழிக்கப்பட்ட நாளான ஏப்ரல் 18 அன்று திராவிடர் கழகம் முன்னின்று நடத்த உள்ள மறியல் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
திருச்சி - சிறுகனூர் பெரியார் உலகத்தில் கடந்த 19,20 (மார்ச்) தேதிகளில் திராவிடர் கழக மாநில மாநாடு, ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு, சமூக நீதி மாநாடு களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், வரலாற் றினை வருங்காலத்தில் மாற்றப் போகும் லட்சியத் தீர்மானங்களாகும்.
அரசியல் மற்றும் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பல சான்றோர்கள் அதனை வெகுவாகப் பாராட்டி நம்மிடம் பேசினார்கள் - மகிழ்ந்தார்கள்!
சட்டமன்றத்தில் முதல்வர் கொடுத்த வாக்குறுதியை
முதல் அமைச்சர் நிறைவேற்றட்டும்!
நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் தமது இறுதிப் போராட்டமாக பிரகடனப்படுத்திய ஜாதி - தீண்டாமை ஒழிப்பினை மய்யமாக்கிடும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகி விட வேண்டும் என்பதற்கு சட்டபூர்வ இசைவும் - மறுப்பேதுமின்றி. கிடைத்து விட்ட நிலையில், ஏனோ, தமிழ்நாடு (அதிமுக) அரசு அதன் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியைக்கூட - சட்டத் தடைகள் இல்லை யானால் இந்த அரசு நியமனங்கள் செய்யும் என்று முன்பு தந்த உறுதிமொழியைக்கூட - செயல்படுத்தாமல் உள்ளது, வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியது.
முறைப்படி ஆகமக் கல்லூரிகளில் தனித்தனியே சிவன் கோயில், வைஷ்ணவக் கோயில்களில் பூசை செய்ய “தீட்சை” பெற்ற 206 பேர் பார்ப்பனர் முதல் ஆதி திராவிடர் வரை பலரும் பல ஆண்டுகளாக நியமனமின்றி காத்துக் கிடக்கும் நிலை உள்ளது!
தமிழ்நாட்டில் உள்ள 36,000 கோயில்களில் பல முக்கிய பிரபல கோயில்களில் அர்ச்சகர்கள் ஆகமப் பயிற்சியே முறைப்படி பெறாதவர்கள் என்பது ஜஸ்டிஸ் ஏ.கே. ராஜன் கமிட்டியே தெரிவித்துள்ளது.
இந்து அறநிலையத்துறைக்கு ஆணையிட வேண்டிய முக்கிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு, குறிப்பாக முதல் அமைச்சருக்கு உண்டு.
முதற்கட்ட பட்டியலில் 7000 பேர்
இதை வலியுறுத்தும் முதல் கட்ட அறப்போர் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிகுந்த நாளில் - தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
மாநாட்டில் தீர்மானம் முன்மொழியப்பட்ட நிலையில், (முன்கூட்டியே போராட்டம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்த காரணத்தால்) அறப் போரில் ஈடுபடும் அறப்போர் வீரர்களின் பட்டியல்கள் மேடைக்கு வந்தன!
சுமார் 7000 தோழர்கள் பல மாவட்டங்களில் கலந்து கொள்ள பெயர்களோடு இசைந்து அறிவித்தனர்.
அதன் பின்னரும் சுமார் 1000 பேருக்கு மேல் நம்மிடம் நேரில் பல ஊர்களில் தந்தனர்.
ஜாதியின் உயிர் நிலை, சட்ட பூர்வமாகவும் நடைமுறைத் தன்மையிலும் கோயில் கருவறைக்குள் ‘கர்ப்பகிரகத்தில்’ உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டாக்டர் டி.எம். நாயர் தாம் 1916ஆம் ஆண்டு சென்னையில் நிகழ்த்திய உரையில் இக்கருத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
பாரம்பரிய அர்ச்சகர் முறை ஒழிய வேண்டும்
என்றவர் பாபா சாகெப் அம்பேத்கர்
தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதனை உறுதிப்படுத்தும் பல்வேறு கொள்கை அணுகுமுறைகளில், பாரம்பரிய பார்ப்பன அர்ச்சகர் முறை ஒழிய வேண்டும் என்பதை 1929ஆம் ஆண்டே ஒரு பார்சி கோயில் பாரம்பரிய அர்ச்சகர் முறையை எதிர்த்து நடந்த போராட்டத்தினை ஆதரித்து ஒரு கட்டுரையே தீட்டினார் அம்பேத்கர்.
‘’Supporting the move in his article entitled “wanted an Anti-Priest-Craft Association”. Ambedkar wrote in the Bombay Chronicle that the Hindu priestly classes stood   no way superior ethically, educationally or otherwise to the average member of Parsee priesthood. “The counts in the indictment,” he proceeded, against the heriditary Hindu priests are numerous and appalling. He is a clog on the wheel of civilisation. Man is born, becomes the father of the family and then in time dies. All along the priest shadows him like an evil genius,”
Ambedkar described the officiating Brahmin as a miserable specimen of humanity and further said, “He practises the sham of being a middleman between the unseen powers and  helpless man and makes a living by it.” 
-Dr. B.R. Ambedkar: Life and Mission
by Dhananjay Keer (page 134)




தமிழாக்கம் வருமாறு:
‘பாம்பே கிரானிக்கிள்’ ஏட்டில் 1929ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் பார்சி ஒருவர் ஜாதி அடிப்படையில் அர்ச்சகர் முறை இருக்கக்கூடாது என்று வலியுறுத்தி அதற்காகவே சங்கம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் எழுதியிருந்தார்.
அதை ஆதரித்து ‘அர்ச்சகர் எதிர்ப்பு சங்கத்தைக் கட்டமைக்க விரும்பினேன்’ எனும் தலைப்பில் பாம்பே கிரானிக்கிள் ஏட்டில் டாக்டர் பாபாசாகெப் அம்பேத்கர் எழுதியுள்ளார்.  இந்துக்களில் அர்ச்சகர்கள் எவரும் அறத்தின்படியும், கல்வியிலும், மற்றவகையில் சராசரியாக உள்ள பார்சி அர்ச்சகர்களைவிட மேலானவர்களாக இருக்கவில்லை.
‘குற்றச்சாற்றுகளின் எண்ணிக்கை’ என்று கூறுகையில், “இந்து மத அர்ச்சகர்களின்  பழைமைவாதங்கள் எண்ணிலடங்கா அச்சுறுத்தலாக இருக்கின்றன. இந்து அர்ச்சகன் என்பவன் நாகரிக சக்கரத்துக்கு தடையாக இருந்திருக்கிறான். மனிதன் பிறக்கிறான், குடும்பம், குழந்தைகள் என்று வாழ்ந்து காலத்தால் மறைகிறான். அனைத்து நிலைகளிலும் அர்ச்சகன் என்பவன் தீமை தரக்கூடிய நிழலாக இருந்திருக்கிறான்”
“பார்ப்பனர்களைக் கொண்டு எதையும் செய்வது என்பது மனிதத்தன்மையில்லாத, தவறான முன்மாதிரியாகவே இருந்துவந்துள்ளது” என்று கூறும் அம்பேத்கர் மேலும் கூறுகையில்,காணமுடியா சக்தி என்று கூறிக்கொண்டு அதைக்கொண்டு ஆதரவற்ற மனிதனின் வாழ்வை மேம்படுத்துவதாகக் கூறி இடைத்தரகனாக இருக்கின்ற வெட்ககரமான செயலைச் செய்து பிழைத்து வருகிறான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
(டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்வும், பணியும் என்று தனஞ்செய கீர் எழுதியுள்ள நூலின் பக்கம் 134)
அனைத்துத் தரப்பினரும்
மறியலில் கலந்து கொள்க!
அம்பேத்கர் பற்றாளர்கள் உட்பட இந்த அறப்போரில் கலந்து கொள்ள முன் வர வேண்டும்!
ஏற்கெனவே ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் இரா. அதியமான் அவர்களும் தோழர்களுடன் இந்த அறப்போரில் கலந்து கொள்ளுவோம் என்று அறிவித்தார்கள்.
பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் நிறுவனர் - தலைவர் பெருங் கவிக்கோ வா.மு. சேதுராமன் தனது தோழர்களுடன் கலந்து கொள்ள அறிக்கை விடுத்துள்ளார்.
இது ஒரு  கட்சியின் போராட்டமோ, இயக்கத்தின் கிளர்ச்சியோ அல்ல. மாறாக, ஒட்டு மொத்த சமுதாய அமைப்பினைப் புரட்டிப் போடும், ஜாதி தீண்டாமை ஒழிப்பையே முன்னிறுத்தும் மாபெரும் போராட்டமாகும்!
வைதீக சனாதனத்தவர் தவிர, மற்ற அத்தனைப் பக்தர்களும்கூட இதனை வரவேற்கவே செய்கிறார்கள்.
எனவே, ஏப்ரல் 18ஆம் தேதி போராட்டத்தை இனஉணர்வாளர்கள், பகுத்தறிவாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் உட்பட பலரும் பல்லாயிரக்கணக்கில்  கலந்து கொண்டு அறப்போரில் ஈடுபட முன்வர வேண்டும். போராட்ட இடங்கள், முறைகள்பற்றி ஏப்ரல் முதல் நாள் அன்று திராவிடர் கழக தலைமைச் செயற்குழு முடிவு செய்து வழிகாட்டும்.
அனைவரும் வாரீர்! வாரீர்!!


கி.வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்


சென்னை
29.3.2016  



.
 1

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...