Monday, February 23, 2015

திருமண வீடு - சாவு வீட்டில்கூட - சந்திக்க மறுக்கும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் வடநாட்டைப் பார்க்கட்டும்!

திருமண வீடு - சாவு வீட்டில்கூட - சந்திக்க மறுக்கும்

தமிழ்நாட்டுத் தலைவர்கள் வடநாட்டைப் பார்க்கட்டும்!

பிரதமர் மோடியும் - லாலுவும் - முலாயமும் கூடிக் குலவும் காட்சியைப் பார்த்த பிறகாவது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் புதிய நாகரிகத்தை வளர்க்கட்டும்



வடநாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் அரசியலை மறந்து ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது அன்பு பாராட்டி அளவளாவும் நாகரிகத்தைப் பார்க்க முடிகிறது; அதே நேரத்தில் துக்க வீட்டில்கூட ஒருவரை ஒருவர் சந்திக்க மறுக்கும். தயங்கும் நிலை அல்லவா இங்கு இருக்கிறது. உ.பி. திருமணச் சடங்கு ஒன்றில் பிரதமர் மோடியும், லாலு பிரசாத்தும், முலாயம்சிங் யாதவும் கூடி மகிழ்கின்றனர். வடநாட்டில் நிலவும் இந்த நனி நாகரிகத்தை தமிழ்நாட்டின் தலைவர்களும், பிரமுகர்களும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் அறிக்கை வருமாறு:

தமிழ்நாடும் தென் மாநிலங்களும் மிகவும் பண்பட்டவை நனி நாகரிகம் படைத்தவை. வடநாட்டவர்களைவிட பல துறைகளில் முன்னேறியவர்கள் என்று பெருமைபேசி மகிழுபவர்கள் என்ற நிலை அரசியல் கட்சிகளின் தவறான அணுகுமுறையால் ஒரு கட்சித் தலைவரோ, அல்லது வேறு பொறுப்பாளர்களோ, திருமணம், வரவேற்பு மற்றும் துக்க, இரங்கல் நிகழ்ச்சிகளில் கூட ஒருவரை மற்றொருவர் சந்திப்பது, குறைந்தபட்ச மரியாதையை, விசாரிப்புகளை ஒருவருக்கொருவர் இன்முகத்தோடு பரிமாறிக் கொள்ளுதல் போன்றவைகூட, - காணாமற் போனவையாக ஆகி விட்டன! இது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரிய கூடா ஒழுக்கம் ஆகும்!

தலைவர்களே, வடநாட்டைப் பாருங்கள்!

வடநாட்டைப் பார்த்து தமிழ்நாட்டவர் கற்றுக்கொள்ளும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் எவ்வளவு கடுமையாக கட்சித் தலைவர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ பேசித் தாக்கிக் கொண்டாலும் மத்திய அரங்கம் (Central Hall Parliament) என்ற நாடாளுமன்ற அரங்கில் நுழையும்போது, தோள் மேல் கைபோட்டு, நட்புறவும் நயத்தக்க நனி நாகரிகமும் பொங்கி வழிவது போல் பேசிக் கொள்ளும் நடைமுறை வெகு சர்வ சாதாரணம் ஆனால் - தமிழ்நாட்டில்....? இந்நிலையை மாற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் நடப்பது என்ன?

சட்டமன்றம் கூடுகிற நிலையில், ஒருவரைப் பார்த்து மற்றொரு கட்சியினர் வணக்கம் கூறும்போது மறுபுறம் அதற்கு பதில் வணக்கத்தை புன்னகையோடு கூறும் நிலைகூட அருகிப் போய் விட்ட அவலம் உள்ளது!

தலைவர்கள் எதிர்பாராமல், ரயில் நிலையம், விமான நிலையம் - விமானப் பயணம் போன்றவைகளில் அடுத்தடுத்த பகுதிகளில் - ஒரே பெட்டியில் - பயணம் செய்யும்போதுகூட, ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்து விடக் கூடாது என்று ஓடோடி அறைக் கதவைச் சாத்திக் கொள்வது, அல்லது சந்திப்பைத் தவிர்க்க இரயில் நிற்பதற்கு முன்பேகூட குதித்து ஓடுவதுபோல கீழே இறங்கி குடுகுடுவென்று காரில் ஏறிக் கதவை அடைத்துக் கொள்வது எல்லாம் கசப்பான நிகழ்வுகள் அல்லவா!

பிறந்த நாளிலாவது வாழ்த்து கூறக் கூடாதா?

திராவிடர் இயக்கத்தின் பிறப்புக்குப் பின் இந்நிலை என்பது கசப்பான உண்மையாகும். இதனை நாம் வெட்கத்தோடும், வேதனையோடும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

எவ்வளவு கருத்து வேறுபாடு, கொள்கை மாறுபாடு இருந்தாலும், பிறந்த நாள்களுக்கு வாழ்த்து அனுப்பியோ; நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறுவதோ, மனித நேயத்தையும், மக்கள் பண்பையும் வளர்த்து, தொண்டர்கள் மத்தியில் வெறுப்புக் குறைய, அல்லது மறைய வாய்ப்பை ஏற்படுத்தும்.

அந்தக் காலத்துத் தலைவர்களின் அன்பும், பண்பும் அகிலம் அறிந்தவை. (ஒரு பெரிய புத்தகமே எழுதலாம்).

பிரதமர் மோடி - லாலு - முலாயம் - சந்திப்பும் அளவளாவலும்
நேற்று (22.2.2015) ஒரு படம் பல நாளேடுகளில் வந்துள்ளது.

உ.பி. மாநிலத்தில் ஒரு ஊரில் (சைபை) திருமணச் சடங்கு விழா ஒன்று.

லாலு பிரசாத் மகளுக்கும், முலாயம் சிங் பேரனுக்கும் மணவிழா; அதில் பிரதமர் மோடி சென்று ஒரு மணி நேரம் - எதிரும் புதிருமாக இருக்கும் தலைவர்களுடன் - கலகலப்பாக சிரித்துப் பேசி மகிழ்ந்துள்ள செய்தி எவ்வளவு வரவேற்கத்தக்க, பாராட்டத்தக்க, பின்பற்றப்பட வேண்டிய முறை!

பிரதமரைச் சந்தித்த கெஜ்ரிவால் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தேர்தல் முடிந்த நிலையில் பிரதமரைச் சந்திக்கச் சென்றபோது அவரது இல்லத்தில் பிரதமர் மோடி அவர்கள் கெஜ்ரிவால் இருமல் - ஆஸ்தமாவிலிருந்து விடுபட தனது மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற அறிவுறுத்தி உதவுவதாகக் கூறி, தமது பண்பைக் காட்டியுள்ளார்.

வடநாட்டுத் தலைவர்கள் பலரிடமும் நான் பழகியுள்ளேன் - எந்தவித பந்தாவும் இல்லாமல் பழகுபவர்கள் அவர்கள்.

தமிழ்நாட்டில் தான் இப்படி ஒரு வெறுக்கத்தக்க நோய் எப்படியோ கடந்த 30 ஆண்டுகளாகப் பரவி விட்டது. யார்மீதும் குற்றம் சுமத்தி புண்ணைக் குடைய விரும்பவில்லை நாம்.

தமிழர்களை உலக அரங்கில் உயர்த்தும்

நம் நாட்டில் கட்சி, கொள்கை வேறுபாடுகளைத் தள்ளி வைத்து (தற்காலிகமாக) பிறந்த நாள் போன்ற நிகழ்வுகளில் தயங்காமல் சந்தித்து அன்புடனும், பண்புடனும் தலைவர்கள், பொறுப்பாளர்கள் நடத்து கொள்ளுவது தமிழர்களை உலக அரங்கில் உயர்த்திட, திராவிடத்திற்கு ஏற்றம் தேடிடச் செய்ய அணுகுமுறை மாற்றம் அவசரம் அவசியம் என்று கனிவுடன் வேண்டுகோளாக வைக்கிறோம்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

23-02-2015

Monday, February 16, 2015

இங்கர்சால் கூறுகிறார்...



போப்பாண்டவர்களை விட, குருமார்களைவிட, பாதிரிகளைவிட, அர்ச்ச கர்களைவிட, ஆண்டவ னின் அடியார்களைவிட குண்டூசியைக் கண்டுபிடித் தவன் ஓராயிரம் மடங்கு மக்களுக்கு நன்மை புரிந் திருக்கிறான்.

மத ஸ்தாபனங்களைக் காட்டிலும், அதனைத் தோற்றுவித்த மூல கர்த்தாக்களைக் காட்டிலும், சித்தாந்தங்களை சிருஷ்டித்தவர்களைக் காட்டிலும் சாமியார்களைக் காட்டிலும், சாதாரண தீக் குச்சியைக் கண்டுபிடித்தவன் மக்கள் சமூகத்தின் சுக வாழ்விற்கும், சவுகரியத்திற்கும் எவ்வளவோ நன்மை புரிந்தவனாகிறான்.

- கடவுள்கள் - கோயில்கள் நூல்
க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி

சாக்ரட்டீஸின் பொன்மொழிகள்



தங்கத்தைக் கண்டுபிடிக்கச் சுரங்கத்திற்குள் நுழைகிறவன் மரியாதையை பார்த்தால் முடியுமா? தங்கத்தை விட மேலான பொருளை அதாவது நீதியைத் தேடி கண்டுபிடிக்க நாங்கள் புறப்பட்டிருக்கிறோம். இதில் மரியாதையை பார்த்துக் கொண்டு முயற்சியைக் கைவிட்டு விடு வோமா?
 
***************
 
நீதிக்கு நான் மிக உயர்ந்த ஸ்தானம் கொடுக்கிறேன். அதாவது எந்த விஷ யத்தை அந்த விஷயத்திற்காகவும் அதன் விளைவு களுக்காகவும் நேசிக்கிறோமோ அந்த மாதிரியான விஷயங்களில் ஒன்றாக நீதியை நான் கருதுகிறேன்.
 
***************
 
ஒரு மனிதனுக்கு எந்தத் தொழிலைச் செய்ய இயலுகையிலேயே ஒரு திறமை இருக்கிறதோ அந்தத் தொழிலை மட்டும் அவன் செய்து கொண்டு போனால் நல்லது.
 
***************
 
விபரீதமான குற்றங்களைச் செய்கிற கடவுளர்களை சிருஷ்டித்து அந்தக் கடவுள்களின் கதைகளைச் சிறுவர் களுக்கு சொல்லிக் கொடுப்போமானால் அவர்கள் என்ன நினைத்துக் கொண்டு விடுகிறார்கள் தெரியுமா? கடவுளர்களே  பல குற்றங்களை செய்திருக்கிறபோது நாமும்தாம் செய்தாலென்ன! என்று கருதி அதே மாதிரி செய்யத் தொடங்கி விடுகிறார்கள்.

இந்த மாதிரியான கதைகளை நாம் சொல்லிக் கொடுக்கக் கூடாது. தவிர, ஒரு தெய்வத்திற்கு விரோதமான மற்றொரு தெய்வம் சதி செய்வதாகவோ, யுத்தம் செய்வதாகவோ உள்ள கதைகளையும் நாம் சொல்லலாகாது. ராட்சதர்களோ அல்லது தேவர்களோ ஒருவருக் கொருவர் போராட்டங்கள் நடத்தியதாகவும் நாம் உபதேசிக்கலாகாது.

மனிதர்கள் ஒருவரை யொரு வர் நேசிக்க வேண்டுமென்றும், ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும், இதை போன்ற நீதிகளைப் புகட்டுகிற கதைகளையே சொல்ல வேண்டும்.
 
***************
 
அதிகமான செல்வமோ அதிகமான வறுமையோ தங்கள் ராஜ்யத்திற்குள் வரவொட்டாதபடி அரசர்கள் பாதுகாக்க வேண்டும். அதிக செல்வத்தினால் ஆடம்பரத் தன்மையில் சோம்பேறித்தனமும் உண்டாகும். அதிக வறுமையினால் புரட்சியும், இழிதகைமையும், துரோகமும் ஏற்படும்.


Friday, February 13, 2015

காதலர் தினத்தை ஆதரிப்போம்- திராவிடர் கழக மாணவரணி அழைப்பு

காதலர் தினத்தை ஆதரிப்போம்!
 
பாசிஸ்டுகளின் எதிர்ப்பை முறியடிப்போம்!
 
மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் திராவிடர் கழக மாணவரணி அழைப்பு



மனித இனத்தின் இயற்கை உணர்வான காதல் என்பது, இரு தனி மனிதர்களுக்கிடையிலான அன்புப் பரிமாற்றமாக மட்டுமில்லாமல், இந்தியாவைப் பொறுத்தளவில் ஜாதி, மதம் போன்ற அடிப்படைவாதத்தைத் தகர்க்கும் மனித நேயக் கருவியாகத் திகழ்கிறது. 

இதனாலேயே ஜாதி-மதங்களைக் காப்பாற்ற நினைக்கும் ஜாதீயவாதிகளும் மதவாதிகளும், பாசிஸ்டுகளும் மதத்தின் பெயராலும் கலாச்சாரத்தின் பெயராலும் காதலர் தினத்தை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு ஆங்காங்கே வன்முறையிலும், அருவருக்கத்தக்க செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோம் என்று வெளிப்படையாக வன்முறையைத் தூண்டும் அளவுக்கு அறிவிப்பு விடுக்கும் அசட்டுத் துணிவை இன்றைய சூழ்நிலை அவர்களுக்குத் தந்திருக்கிறது. இது மிகப்பெரிய ஆபத்தான போக்காகும். மனிதநேயத்தில் அக்கறை கொண்டோரும், சமூக நல்லிணக்கத்திலும், சமூக அமைதியிலும் பற்றுக் கொண்டோரும் இந்தப் போக்கைக் கண்டிக்க முன்வரவேண்டும்.

காதலர் தினத்தை எதிர்ப்பதாகக் கூறி நடக்கும் இத்தகைய பாசிச வன்முறைப் போக்குக்கு, முற்போக்கு இயக்கங்களும், கல்லூரி மாணவர் அமைப்புகளும், அமைப்புகளைச் சாராத பல்வேறு கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டும்.

 காதலர்கள் மீதான வன்முறைகளிலிருந்து அவர்களைக்  காப்பதற்கான முயற்சிகளிலும், அத்தகைய வன்முறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் மனிதநேயமும் சமூக அக்கறையும் கொண்டோர்,  மாணவர்கள், இளைஞர்கள்  ஒன்றிணைந்து ஈடுபடவேண்டும் என்று திராவிடர் கழக மாணவரணி அழைப்பு விடுக்கிறது.

இந்த உணர்வோடு தங்களைப் பதிவு செய்துகொள்ளவிரும்புவோர் 9176757084, 8807541920  என்ற எண்களில், அல்லது savelove.tn@gmail.com    என்ற மின்னஞ்சலில் தங்களது பெயரைப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
மாநில செயலாளர்
9444210999
த.சீ.இளந்திரையன்
மாநில இணைச் செயலாளர்
9750134599

த.அஜிதன்
மாநில துணைச் செயலாளர்
9789775497



மாணவர்களை முட்டாளாக்க வேண்டாம்!

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் இருபால் மாணவர்களுக்கும் சிறப்பு வழிபாடு ஒன்று சென்னை சைதாப்பேட்டையில் காரணீஸ்வரர் கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

இந்தச் சிறப்பு வழிபாட்டில் பங்கு கொள்ள விரும்பும் மாணவர்கள் முன் கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டுமாம். இந்த வழிபாட்டில் பங்கு கொள்ளும் இருபால் மாணவர்களிடம் அகல் விளக்குகள் வழங்கப்படுமாம். அந்த அகல் விளக்கை ஏற்றி எங்கள் வாழ்வில் ஒளியேற்று இறைவா! என்று மாணவர்கள் வேண்டிக் கொள்ள வேண்டுமாம். அதன் பிறகு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கிட சிறப்பு வழிபாடு நடத்துவார்களாம். அதன் பிறகு பூஜையில் வைக்கப்பட்ட காப்புக் கயிறுகளை மாணவர்களுக்கு வழங்குவார்களாம்.

இதனைப் படிக்கும் பொழுது, இந்த 21ஆம் நூற்றாண்டின் நுழைவு வாசலில் ஆன்மீகவாதிகள் எதிர்கால நம்பிக்கை ஒளி விளக்குகளின் கைகளில் அகல் விளக்கைக் கொளுத்தி கடவுளிடம் விண்ணப்பம் போட்டால் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பாக வெற்றி பெறுவார்கள் என்று சொல்ல முன் வருகிறார்கள் - வெட்கக்கேடு!

இது மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்குப் பதிலாக மூடநம்பிக்கையையும், சோம்பேறித்தனத்தையும் தானே வளர்க்கும்.

கடவுளிடம் கையேந்தினால் தேர்வில் வெற்றி பெறலாம் என்ற பொய் நம்பிக்கையை மாணவர்களிடம் திணித்தால் அவர்கள் கல்வியில் எப்படிக் கவனம் செலுத்துவார்கள்? அன்றாடம் பாடங்களைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்படும்?

அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும், தேர்வில் சிறப்பாக வெற்றி பெறுவதற்குமான அறிவார்ந்த வழிமுறைகள் உள்ளன. கல்வியாளர்கள் அதைப்பற்றி எல்லாம் எடுத்துக் கூறியுள்ளனர். அவற்றையெல்லாம் புறந்தள்ளி, அறிவுக்கு ஒவ்வாத முறையில் தவறான வழியில் மாணவர்களைத் திசை திருப்பலாமா!?

மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும், சீர்திருத்த உணர்வை ஊட்ட வேண்டும். அது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51கி(பி) தெளிவாக, திட்டவட்டமாகக் கூறுகிறது.

இந்த நிலையில், இதற்கு முற்றிலும் முரண்பாடாக மூடநம்பிக்கை வலைக்குள் மாணவர்களைச் சிக்க வைப்பது சட்டப்படி குற்றமல்லவா!? மாணவர்களின் எதிர் காலத்தை இருட்டறையில் தள்ளுவது குற்றம் அல்லவா?

இது ஏதோ ஒரு மதப்பிரச்சினை என்று கருதி விடக் கூடாது; எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இது போன்ற வேலையில் ஈடுபட்டாலும் அது குற்றம் குற்றமே!
இதுகுறித்து ஏடுகளும், இதழ்களும், ஊடகங்களும் விமர்சிக்க வேண்டாமா?

ஆனால் நம் நாட்டு ஏடுகளும், இதழ்களும் ஊடகங்களும் ஆன்மீக மலர்களைத்தானே வெளி யிட்டுக் கொண்டு இருக்கின்றன. அவர்களுக்கு எதை விற்றாவது கல்லாப் பெட்டியை நிரப்ப வேண்டும் என்பதுதானே நோக்கம்.

சரி, கல்வியாளர்கள் இல்லையா? அவர்கள் முன்வந்து கருத்துக்களைச் சொல்லக் கூடாதா என்று கேட்கலாம்;  அப்படிச் சொல்லுவதற்கு முதுகெலும்பு வேண்டுமே, நமக்கு ஏன் வீண் வம்பு என்று ஒதுங்கிக் கொள்ளும் சுயநல கதகதப்பில் அல்லவா வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்!

அரசியல்வாதிகள் கருத்துச் சொல்ல பெரும்பாலும் விரும்பாததற்குக் காரணம் இது கடவுளோடு, பக்தி யோடு சம்பந்தப்பட்டது என்பதால் வாக்கு வங்கியை நினைத்து வாய் மூடிக் கொள்ளும் நிலைதான்.

கடைசியில் எங்கு வந்து நிற்கிறது என்றால், இது பகுத்தறிவாளர்கள் அதிலும் குறிப்பாக திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களின் பிரச்சினை என்று நினைத்து ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

இதில் உண்மை நிலை என்னவென்றால் எதிர் காலத்தின் உலகை நிர்மாணிக்கக் கூடிய மாணவர்களை தன்னம்பிக்கையற்றவர்களாக ஆக்கி விடக் கூடாது என்று கருதுகிற ஒவ்வொரு வரும் சிந்திக்க வேண்டிய, தலையிட வேண்டிய ஒன்றாகும். இது வெறும் கழகப் பிரச்சினையல்ல.

இதில் இன்னொரு கேள்வியும் உண்டு, தேர்வுகளுக்குமுன் இப்படி வழிபாடு நடத்திய மாணவர்கள் அனைவரும் வெற்றி பெற்று விட்டனர் என்பதற்கான புள்ளி விவரங்கள் உண்டா?

கடவுள் நம்பிக்கை இல்லாத மாணவர்கள் எல்லாம் தேர்வில் தோல்வி அடைந்து விடுகின்றனரா?

பக்தி என்பது தவறான பாதைக்கு இழுத்துச் செல்லக் கூடிய மூட உணர்வு என்பதற்கு இந்த ஏற்பாடுகள் ஓர் எடுத்துக்காட்டே!

டில்லி யூனியன் பிரதேசத்தில் இராமனுக்குப் பிறக்காதவர்கள் இவ்வளவு அதிகமா?

டில்லி யூனியன் பிரதேசத்தில்
இராமனுக்குப் பிறக்காதவர்கள் இவ்வளவு அதிகமா?

டில்லி சட்டமன்றத் தேர்தலில், ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்களின் அமைப்புகளுக்கும், பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. அரசுக்கும், அக்கட்சிக்கும் படுதோல்வியைப் பரிசாக, டில்லி வாக்காளர்ப் பெரு மக்கள் வழங்கி, விட்டனர். மதவெறி அரசியலும், அதிகாரப் போதை, ஆணவ உளறலும், இனிமேல் செல்லாது என்று உணர்த்தி உள்ளனர்.

அமித்ஷா - மோடி கூட்டு ஏதோ பெரிய அற்புத அதிசயங்களை யெல்லாம் தரக்கூடிய அலாவுதீனின் அற்புத விளக்கு என்பதைப் போன்ற (மாய்மாலப் பிரச்சாரப் புரட்டு என்ற) பெரிய பலூனை - கெஜ்ரிவால் என்ற சின்ன குண்டூசியைக் கொண்டு குத்தி ஒன்று மில்லாமல், பரிதாபத்திற்குரிய நிலையில் எதிர்க்கட்சித் தகுதியைக்கூடப் பெறாது வீழ்த்திப் பாடம் புகட்டி யுள்ளனர்!

நாடாளுமன்றத் தேர்தலில் மோடியால் இளைஞர் களுக்கும், ஏனையோருக்கும் தரப்பட்ட குளோரோபாம் - மயக்க மருந்து தொடர்ந்து வேலை செய்யவில்லை; மயக்க மருந்து தொடர்ந்து வேலை செய்யவும் கூடாது; அது மரணத்தில்தான் போய் முடியும்!

ஆகவே நாடு அழிவை நோக்கி - மதவெறி பழைய வர்ண தர்ம வெறி, சிறுபான்மையினரை மிக மோசமாக சித்தரித்து நடத்திய வன்கொடுமைக்கு வாக்கு பெட்டி வழியே இப்படி ஒரு மவுனப் புரட்சியை டெல்லி வாக்காளர்கள் நடத்திப் பாடம் போதித்துள்ளனர்.

5 முறை தேர்தல் பிரச்சாரத்தினை மும்முரமாக நடத்திய மோடி பிரச்சாரம் பரிதாபத்திற்குரிய நிலையில் 5 இடங் களைக்கூட பெற முடியாமல், வெறும் 3 இடங்களையே பெற்றுள்ளது!

கிரண்பேடி என்ற ஒரு பச்சோந்தி பதவி ஆசைப் பெண்ணை -விளம்பர வியாதியால் வீணே அலைந்த ஒரு பெண்ணை - ஒரே நாளில் கட்சித் தாவ வைத்து, எடுத்த எடுப்பிலேயே முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவித்து பெண்கள் வாக்குளைப் பெற இந்த மாயமான் காட்சியை நடத்தியும்கூட கை கொடுக்கவில்லை.

அவரே தோற்றுப் போனார்!

கூடு விட்டுக் கூடு பாயும் குணவதிக்கு வாக்குகளால் பாடம் கற்பித்துள்ளனர்!
அவருக்குத் திடீர் பிரோமோஷன் கொடுத்த ஷாவின் வித்தைகளின் விலா எலும்பு முறிக்கப்பட்டுள்ளது!

அதைவிட டில்லி வாக்காளர்கள் இந்தப் பெருத்த தோல்வியை பா.ஜ.க.  அணிக்குத் தந்து, நன்றாகக் கரி பூசி விட்டனர்.

எவ்வளவு கேவலமான பேச்சு! - தேர்தல் பிரச்சாரத்தில்? ஒரு ஆர்.எஸ்.எஸ். கதாகாலட்சேப பெண்ணைக் கொண்டு வந்து மத்திய இணை அமைச்சராக்கியதோடு, அவரை டில்லி தேர்தல் பிரச்சாரத்திலும் களம் இறக்கினர் - பிரதமர்.

அந்தப் பெண் அமைச்சர்  உதிர்த்த நாகரிகமான கருத்து - தேர்தல் பிரச்சார வரலாற்றில் எங்கே தேடினாலும் கிடைக்காது.

அருவருக்கத்தக்க ஆணவப் பேச்சு! பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் நீங்கள் எல்லாம் இராமனின் பிள்ளைகள். மற்றவர்களுக்கு வாக்களித்தால் நீங்கள் எல்லோரும் முறை தவறிப் பிறந்தவர்கள்

- எத்தகைய கேவலமான இழி நிலைப் பேச்சு! இப்படிப்பட்டவர் மோடி அரசில் இன்னமும் மந்திரியாக தொடருவதும், பிரதமர் மவுனமாக இருப்பதும் சரிதானா?

67 இடங்களைப் பெற்று வியக்கத்தக்க வெற்றி பா.ஜ.க.வுக்கு எதிராகக் கிடைத்துள்ளது. பா.ஜ.க. வெறும் மூன்றே இடங்களைத்தான் பெற்றுள்ளது! அப்படியானால்

ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ பிரச்சாரகரான அந்தஅமைச்சர் அம்மாவின் கணக்குப்படி டில்லி யூனியன் பிரதேசத்தில் இராமனுக்குப் பிறந்தவர்கள் வெறும் மூன்று தொகுதிகளில்தான் உள்ளனர்.

மற்றவர்கள் எல்லாம்....? நமக்கே எழுதிடக் கை கூசுகிறது!
 
இப்படிப்பட்ட கழிசடைகளையெல்லாம் துடைப்பத் தால் கூட்டி வாரிக் குப்பைத் தொட்டியில் கொட்டி விட்டார்கள்!

வார்த்தைகளால் பதில் கூறாமல் வாக்குகளால் செயலில் காட்டி, மூக்கறுத்துள்ளனர்.

கெட்டிக்காரன் புளுகுக்கேகூட உச்ச வரம்பு எட்டு நாள்கள்!

ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங் புளுகுக்கு எட்டு மாதங்கள் போலும்!
இனியாவது ஆர்.எஸ்.எஸ். பல குரல்  மன்னர்களின் ஆணவம் குறையுமா?
எங்கே பார்ப்போம்!


- ஊசி மிளகாய்



Thursday, February 5, 2015

நீதி போதனை வகுப்பா?

உச்சநீதிமன்றத்தில் டில்லியைச் சேர்ந்த வழக்குரைஞர் ஒருவர் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

சமூகத்தில் அறநெறிகள் குறைந்து வருகின்றன. பணம் சம்பாதிப்பது மட்டுமே சமூகத்தின் குறிக்கோளாக மாறி வருகிறது. இதுபோன்ற சமூகச் சீரழிவை மாற்றி அமைக்க வேண்டும். எனவே, பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை நீதி போதனை வகுப்பைக் கட்டாய மாக்கி, மாணவர்களுக்கு அறநெறிகளைப் போதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த வழக்குரைஞர் கள், தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி சிக்ரி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசும், மத்திய அரசின் கல்வி வாரியமும் விளக்கம் அளிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்பேகூட இந்தக் கருத்து உலா வந்து கொண்டிருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது இது நல்லதுதானே - நல்லொழுக்கத்தை மாணவர்களாக இருக்கும் பருவத்திலிருந்தே பயிர் செய்தால்தானே அவர்களின் எதிர்காலம் ஒழுக்கம் உள்ளதாக, கட்டுப்பாடு உள்ளதாக இருக்கும் என்று சொல்லக்கூடும்.

நடைமுறையில் பார்க்கும்பொழுது - அதுவும் பி.ஜே.பி. மத்தியில் ஆட்சியில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் - சங் பரிவார்க் கூட்டத்தின் அழுத்தத்தில் ஆட்சி நடை போடும் ஒரு சமயத்தில் நீதி போதனை என்பது இந்து மதப் பிரச்சாரப் புயலாகத்தான் வீசும்.

ஏற்கெனவே அரியானாவில் கீதை கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டு விட்டது; கல்வித் திட்டத்தையே இந்து மயமாக ஆக்க இருப்பதாகவும் அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

நீதி போதனை என்றாலே இதிகாசக் கதைகள், புராணக் கதைகளைத்தான் மாணவர்களுக்குப் போதிப்பார்கள்; பல ஆண்டுகளுக்குமுன் உயர்நிலைப் பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு (Moral Instruction) நடைபெற்றுக் கொண்டு தானிருந்தது. அப்பொழுதும் புராண அளப்புகள்தான்; இராமன் கதை, அரிச்சந்திரன் கதை, குரு பக்திக்கு எடுத்துக்காட்டு கட்டை விரலைக் காணிக்கையாக துரோணாச்சாரிக்குக் கொடுத்த ஏகவலைவன் கதை களைத்தான் கதைத்துக் கொண்டிருந்தனர்.

குசேலனுக்கு 27 குழந்தைகள் - அவன் கிருஷ்ணன்மீது கொண்ட ஆழமான பக்தியின் காரணமாக கிருஷ்ண பகவான் தங்கத்தையும், பொருளையும் வாரி வழங்கி செல்வந்தனாக ஆக்கினார். ஆகவே, மாணவர்களே, பகவான்மீது பக்தி செலுத்துங்கள் என்று சொல்லுவதனால் மாணவர்கள் சோம்பேறிகளாக ஆவதைத் தவிர வேறு வழியே இல்லை!

தந்தை பெரியார்தான் அறிவார்ந்த வினாவை எழுப்பினார்.

ஒருவனுக்கு 27 குழந்தைகள் இருந்தால், அவன் வருஷத்துக்கு ஒரு குழந்தையைப் பெற்றிருந்தால், இருபது வயதிலும், அதற்கு மேற்பட்ட வயதும் நிறைந்த குழந்தை கள் எட்டாவது இருக்கும்.

இந்தக் குழந்தைகளும் சோம் பேறித் தடியன்போல், ஒரு வேலைக்கும் லாயக்கு இல்லாத மாமிசப் பிண்டங்களாக அல்லவா இருந்திருக்கக் கூடும்! இப்படி இருபது வயதுக்கு மேற்பட்டவர்களை வீட்டிலே வைத்துக்கொண்டு ஒருவன் பிச்சைக்குப் போயிருந்தால், அந்த நாட்டில் மற்றவர்களும் இதுபோல் இருந்திருக்க வேண்டாமா? அப்படி இருந்தால் அந்த நாடு எப்படி உருப்படி ஆகியிருக்கும்? இப்படிப்பட்ட சோம்பேறித் தடியர்களுக்குக் கடவுள் செல்வம் கொடுக்கலாமா? (பொன்னி பொங்கல் மலர், 1948)

என்று தந்தை பெரியார் எழுதியுள்ளாரே! இதில் ஒரு வரியை மறுக்க முடியுமா? மதம் காட்டும் மார்க்கம், புராணம் காட்டும் புத்தியுரை இதுதானா?

இவற்றையெல்லாம்தானே நீதி போதனை வகுப்பில் சொல்லிக் கொடுத்தார்கள்? இனிமேலும் சொல்லியும் கொடுப்பார்கள்.

கொள்கைக்காக நஞ்சுண்டு மறைந்த சாக்ரட்டீசை பற்றியா சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள்?

பக்தி என்பது தனிச் சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து என்று கூறிய தந்தை பெரியார் அவர்களின் கொள்கையைப் பற்றியா எடுத்துக் கூறுவார்கள்?

இப்பொழுதே ஆசிரியர் தினம் என்பதை குரு உத்சவ் என்று சொல்லி வியாசரின் பிறந்த நாளைத்தான் இன்றைய தினம் மத்தியில் ஆட்சியிலிருக்கும் வகையறாக்கள் கொண்டாடுகிறார்கள்.

நேருவின் பிறந்த நாளைக் குழந்தைகள் நாளாக ஏற்காமல், சின்ன வயதில் வெண்ணெய்யைத் திருடி, வாலிப வயதில் பெண்ணைத் திருடிய கிருஷ்ணன் பிறந்த நாளை(?) கொண்டாடக் கூடியவர்கள்.

இத்தகைய ஓர் ஆட்சியில் நீதி போதனை என்ற வகுப்பு எந்தக் கேவலத்திற்கு - பிற்போக்குத் தனத்திற்கு, மூட நம் பிக்கைக்கு இழுத்துப் போகும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

நீதி போதனை வகுப்பில் மதச்சார்பின்மை என்னும் தத்துவத்தின் சீலத்தைச் சொல்லிக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?

ராமராஜ்ஜியத்தை உண்டாக்குவோம் - இந்து ராஜ்ஜி யத்தைப் படைப்போம் என்று காட்டுக் கூச்சல் போடுவோர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய இந்தக் காலகட்டத் தில் நீதி போதனை வகுப்பு என்பது மாணவர்கள் மத்தியிலேயே மதவாதத்தைத் திணிக்கும் பேராபத்தில் கொண்டு போய் விடும் - எச்சரிக்கை!

எச்சரிக்கை!!

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...