Thursday, April 25, 2013

மதுரைக் கூத்து!


மதுரையில் நேற்று காலை 8.41 மணிக்கு சுந்தரேசுவரருக்கும், மீனாட்சிக்கும் கோலாகலமாக விவாஹ சுப முகூர்த்தம் - அதாவது திருக் கல்யாணம் நடந்ததாம். இப்படி ஒவ்வொரு ஆண்டும் இவர்களுக்குக் கல்யாணம் நடக்கிறது. இலட்சக் கணக்கான பக்தர்கள் அப்படியே வெள்ளமாய்த் திரண்டு வந்து சேவிக்கிறார்களாம்.
அப்படி சேவிக்கிற பக்தர்களில் ஒரே ஒருவராவது சிந்திக்கவேண்டாமா?
போன வருசம் இதே நாளில்தானே இதே இருவருக்கும் கல்யாணம் நடந்தது. இப்பொழுது மறுபடியும் கல்யாணம் என்றால், போன வருடம் செய்துகொண்ட கல்யாணம் என்னாச்சு என்று யோசிக்கவேண்டாமா?
பக்தர்களாகிய நாம் ஒவ்வொரு ஆண்டும் கல்யாணம் செய்துகொண்டா இருக்கிறோம்? இது என்ன கூத்தாயிருக்குது? போன வருசம் கல்யாணம் கட்டிக்கொண்ட மீனாட்சி வேறு - இந்த மீனாட்சி வேறா? என்றெல்லாம் கொஞ்சம் அசைப்போட வேண்டாமா?
மற்றொன்றையும் அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டியது. நன்றாகப் பாருங்கள். பக்தர்கள் நம்பும் அந்த மீனாட்சிக்கு சுந்தரேச ஆண் கடவுளா, மீனாட்சியாகிய பார்வதியின் கழுத்தில் தாலி கட்டுகிறார்? இல்லையே! பார்ப்பான்தானே மீனாட்சியின் கழுத்தில் தாலி கட்டுகிறான்.
எந்த ஒரு பக்தருக்கும் ஆத்திரம் பொத்துக் கொண்டு கிளம்பவில்லையே! அகிலாண்டேசுவரியின் கழுத்தில் இந்த அற்பப் பார்ப்பன அர்ச்சகனா தாலி கட்டுவது? என்ற கோபம் கிழித்துக்கொண்டு கிளம்ப வேண்டாமா? வைரத்தாலி கட்டியதால் ரோஷம் வரவில்லையா? பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்று தந்தை பெரியார் சொன்னது சரியாக அல்லவா போய்விட்டது!
தந்தை பெரியார்தான் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும்படிக் கேட்டார். போன வருஷம் கல்யாணம் பண்ணியதை எவன் அடித்துக்கொண்டு போனான்? என்று கேட்டாரே, அப்பொழுதுகூடப் பக்தர்களுக்குப் புத்திவரவில்லையே, வெட்கக்கேடு!
இன்னொரு படுதமாஷ். நாளை அழகர் ஆற்றில் இறங்குகிறாராம். எதற்கு? தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணத்தைக் கண்குளிரக் காண்பதற்கு; நேற்று காலையிலேயே கல்யாணம் ஆகிவிட்டது. நாளை தான் அழகர் ஆற்றில் இறங்குகிறாராம். ஞானக் கண்ணால் தங்கையின் கல்யாணம் நடந்ததையும் அறிந்திருக்கவேண்டாமா? பாதி வழியில் தெரிந்து கோபித்துக்கொண்டு திரும்பு கிறாராம் அழகர்! இன்னொரு கேள்வியும் நியாயமாக எழவேண்டுமே!
போன வருஷம்தான் தாமதமாக வந்தார்... இருந்துவிட்டுப் போகட்டும்; இந்த ஆண்டாவது குறிப்பிட்ட நேரத்துக்குத் தங்கையின் திருக்கல் யாணத்தைக் காண விரைந்து வந்திருக்க வேண்டாமா? மனிதன் ஒருவன் தவறு செய்தால் இந்தக் கேள்வியைத்தானே கேட்பார்கள்.
ஆனால், கடவுள் செய்த காரியமாயிற்றே! அதனால்தான் பெரியவர்கள் செய்தால் பெருமாள் செய்தது மாதிரி என்ற பழமொழியும் பிறந்ததோ!
சரி, அழகருக்குக் கோபம் வந்ததே - திரும்பி எங்கு சென்றார்? தான் குடியிருக்கும் அழகர் மலைக்கா சென்றார்?
அதுதான் இல்லை, வண்டியூருக்குத் திரும்பினா ராம்; அங்கே யார் இருக்கிறார்? துலுக்கநாச்சியார் என்ற அழகரின் வைப்பாட்டி வீட்டுக்குச் செல்லுகிறாராம்.
என்ன வாந்தி வருகிறதா? நாம் எழுதுவது கடவுள் கதை - ஞாபகம் இருக்கட்டும்!
இந்து முன்னணிகாரர்கள், அழகர், துலுக்க நாச்சியார் வீட்டுக்குச் செல்லுவதுபற்றி மூச்சு விடுவதில்லையே - ஏன்? நியாயமாக அவர்கள் மறியலில் ஈடுபடவேண்டாமா?
கடவுள் என்றால் உயர்ந்தவர்; அனைத்துயிரையும் படைத்தவர் - அனைவருக்கும் தந்தை போன்றவர் என்று சொல்லிக்கொண்டு இவ்வளவு ஒழுக்கக் கேட்டையும் செய்கிறார் என்றால், இதனை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கவேண்டாமா? இத் தகைய ஒழுக்கக்கேடான கோவில் விழாக்களைத் தடை செய்யவேண்டும் என்று பக்தர்கள் அரசுக்குக் கோரிக்கை வைக்கவேண்டாமா?
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றும், பரப்பியவன் அயோக்கியன் என்றும், வணங்கு கிறவன் காட்டுமிராண்டி என்றும் தந்தை பெரியார் சொன்னது தவறா? இப்பொழுது சொல்லுங்கள்! சொல்லுங்கள்!!

Wednesday, April 17, 2013

தோண்டத் தோண்ட தமிழர் எலும்புக் கூடுகள்! தமிழர்களை உயிரோடு புதைத்த கொடுமை!!

கோத்தபாய ராஜபக்சே பொறுப்பென்று சாட்சியம் அளித்த சிங்களப் பெண்!



கொழும்பு, ஏப். 16- சிங் களவர் அதிகம் வசிக்கும் மாத்தளை பகுதியில் நூற்றுக் கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் மகிந்த ராஜ பக்சேவின் தம்பி கோத்தபாய ராஜபக்சேவை குற்றம்சாட்டி சிங்களப் பெண்மணி ஒருவர் அளித்துள்ள வாக்கு மூலம் அதிர வைத்திருக்கிறது.

மாத் தளைபகுதியில் மருத்துவமனை கட்ட மண் தோண்டிய போது தோண்டத் தோண்ட மனித எலும்புக் கூடுகள் வெளிவந்தன. இந்த எலும்புக் கூடுகள் 1980-1989 ஆம் ஆண்டு காலப் பகுதியில் புதைக்கப்பட்டதாக இருக்கலாம் எனக் கருதப் படுகிறது. இந்தக் கால கட்டத் தில் அப்பகுதியில் லெப்டினன்ட் கர்னலாக பதவி வகித்தவர் கோத்தபாய ராஜபக்சே. அத னால் அவர்தான் இந்தப் படு கொலைக்கு காரணமாக இருக் கலாம் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.


இந்நிலையில் சிங்கள தாய் கமலாவதி என்பவர் மாத்தளை மனித புதை குழி தொடர்பாக அளித்திருக்கும் வாக்குமூலம் கோத்தபாய ராஜபக்சேவின் கோர முகத்தை வெளிப்படுத்து கிறது. அவர் தமது வாக்குமூலத் தில் கூறியுள்ளதாவது: 1989ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி மாத்தளையில் உள்ள விஜய வித்தியாலயா என்னும் பள்ளிக் கூடத்துக்கு அருகே இருந்த வீடுகளை, இராணுவம் சுற்றி வளைத்தது. அப்போது எனது இரண்டு மகன்களுக்கு மதிய உணவைக் கொடுத்துக் கொண்டு இருந்தேன். வீட்டுக் குள் நுழைந்த ராணுவத்தினர், மகன்கள் இருவரையும் பலவந்த மாக இழுத்துக்கொண்டு சென் றனர். அருகில் உள்ள ரெஸ்ட் ஹவுஸ் என்ற முகாமுக்கு முதலில் சென்றனர்.

இராணுவத்தின் வாகனத் துக்கு பின்னால் நான் ஓடிச் சென்று அவர்கள் அந்த முகா மிற்குள் செல்வதனை பார்த் தேன். மீண்டும் மறுநாள் அங்கு சென்று மகன்கள் இருவரையும் பார்க்கவேண்டும் என்று மன் றாடினேன். ஆனால் முகாமுக் குள் செல்ல அனுமதிக்கப்பட வில்லை. இதனைத் தொடர்ந்து அவர், உள்ளூர் அரசியல்வாதி யான எக்கநாயக்கவை தொடர்பு கொண்டேன்.

அவர் தமது செயலாளரை அந்த முகாமுக்கு அனுப்பி விசாரித்து விட்டு, லெப்டினன்ட் கர்னல் கோத்தபாயவிடம் பேசிவிட்ட தாகவும் இனி நீங்கள் உங்கள் மகனைப் பார்க்கலாம் என்றும் கூறினார். இதனை நம்பி நானும் அந்த முகாமுக்கு மீண்டும் சென்றேன். ஆனால் என்னைப் பார்க்க கோத்தபாய மறுத்துவிட்டார். மேலும் உங்களது இரண்டு மகன்களும் வேறு முகாமுக்கு மாற்றப்பட்டுவிட்டதாகக் கூறி அலைய வைத்தனர்.

இதுவரைக்கும் எனது மகன்கள் வீடு திரும்பவில்லை. மாத்தளையில் அவர்களோடு சிறையில் இருந்த சிலர் விடுதலையாகி வெளியே வந்த போது என் மகன்கள் ரெட் பானா சித்திரவதை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. ரெட் பானா முகாமில் ஜேவிபியினர் எனக் கருதி மகன்கள் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு மாத்தளையில் புதைக்கப்பட்டி ருக்கலாம். தற்போது கண்டெ டுக்கப்பட்ட 150 எலும்புக் கூடுகளுக்குள் எனது மகன் களின் எலும்புக் கூடும் இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது. அதனால் டி.என்.ஏ. சோதனை நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
1989ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை ராணுவத்தில் இருந்து விலகிய கோத்தபாய ராஜபக்சே அமெரிக்கா சென்று விட்டார். அங்கே கிரீன் கார்ட்டை எடுத்துக்கொண்ட அவர், தனது சகோதரரான மகிந்த ராஜபக்சே தீவிர அர சியலில் இறங்கிய பின்னரே இலங்கைக்கு திரும்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Tuesday, April 16, 2013

கணவனே ஆனாலும் குற்றம் குற்றமே!


பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்பு  சட்டமுன் வரைவு மக்களவையில் 19.3.2013 அன்று நிறைவேற்றப்பட்டது. இதன்படி பாலியல் குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுவோருக்கு ஆயுள் சிறை அல்லது மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொந்தரவு செய்யும் நோக்கில் பெண்களைப் பின்தொடர்வது, பாலியல் நோக்கத்துடன் பார்ப்பது, அமிலம் வீசுவது உள்ளிட்ட குற்றங்களுக்கான தண்டனைகள்   கடுமையாக்கப்பட்டுள்ளன. இருவரும் சம்மதத்துடன் பாலியல் உறவு கொள்வதற்கான வயது வரம்பு 16 ஆக குறைக்கப்படவில்லை. 18 ஆகவே நீடிக்கிறது.

ஏற்கெனவே பாலியல் வன்முறை வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்கள் மீண்டும் அதே போன்ற குற்றத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும். தொந்தரவு தரும் நோக்குடன் பெண்களைப் பின்தொடர்வது, பாலியல் நோக்கத்துடன் பார்ப்பது போன்ற குற்றங்களில் இரண்டாவது முறையில் ஈடுபடுவோர் ஜாமீனில் வெளியே வர முடியாது.
அமிலம் வீசுவது மிகக் கடுமையான குற்றம், இதில் பாதிக்கப்படுபவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள எதிர் நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு என்று சட்ட முன்வரைவில் கூறப்பட்டுள்ளது.  பாலியல் வன்முறைக்கு உள்பட்டவர்கள், அமிலத் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு மருத்துவமனைகள் முதல் உதவி மற்றும் சிகிச்சையை இலவசமாக மேற்கொள்ள வேண்டும். சிகிச்சை அளிக்க மறுத்தால் தண்டனை அளிக்கப்படும். பெண்களைப் பின் தொடர்வது, பாலியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது போன்றன முதல்முறையாக தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளன. இப்படி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள சூழ்நிலையில், பெண்களின் மீதான வன்முறை எப்படி இருக்கிறது என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. மாறிவரும் சமுதாயச் சூழ்நிலையில், பாலுறவு பற்றிய கருத்துகள் பலதரப்பட்டவையாக உள்ளன.
வன்புணர்வு மட்டும் அல்லாமல், மனைவியுடன் கொள்ளும் உறவுகூட அவள் சம்மதத்துடன்தான் நடைபெற வேண்டும்; இல்லையேல், அது குற்றமாகக் கருதப்பட வேண்டும் என்ற குரல்களும் உரத்துக் கேட்கின்றன.
பெண்ணானவள் தனித்து ஆண் துணையில்லாமல் வாழ முடியாது; மனுநீதியின்பால் வகுக்கப்பட்ட எல்லாச் சட்டங்களும் ஒழிக்கப்பட வேண்டும். அவளது கணவனுடன்கூட பாலுறவிற்கு மறுத்துரைக்கும் உரிமைகள் அவளுக்குண்டு. அவளது மனக்குமுறல்களை எடுத்துரைக்க அவளுக்கு உரிமை உண்டு. அவள் மதிக்கப்பட வேண்டும். இந்தியர்கள் பெண்களை ஒரு பொருளாகத்தான் நடத்துகிறார்களேயொழிய, ஒரு மனித உருவாக நடத்துவதில்லை. அவளால், தந்தை, கணவன் அல்லது மகன் ஆகியோரது பாதுகாப்பின்றி சுதந்திரமாக வாழமுடியும் என்று முன்னாள் பெண்களுக்கான அமைப்பின் தலைவரான (Former Chairperson Womens’ Commission) ஆர். ராமாத்தாள் கூறியுள்ளார்.
வன்புணர்வு என்றால் என்ன? இந்திய தண்டனைச் சட்டம் 375ஆவது பிரிவு வன்புணர்வு பற்றிச் சொல்கிறது.
1. அவளுடைய விருப்பத்திற்கு மாறாக,
2. அவளுடைய சம்மதம் இன்றி,
3. அவளுக்குப் பிடித்த ஒருவரின் மரண பயம் காட்டியோ, துன்புறுத்தியோ சம்மதம் பெறுதல்,
4. அவள் சட்டப்படி மணந்து கொண்டுள்ள கணவன் அல்ல என்று தெரிந்திருந்தும், அவள் அவனைக் கணவன் என்று நம்பி இருக்கும் சமயத்தில், அவளுடைய சம்மதத்துடன்,
5. அவள் சரியான மனநிலையில் இல்லாதிருக்கும்போதோ அல்லது போதை வயப்பட்டிருக்கும்போதோ அவளது சம்மதத்துடன்,
6. அவள் 16 வயதுக்குட்பட்டிருக்கும் பட்சத்தில், அவளது சம்மதம் இருந்தாலும், இல்லாவிட்டாலும்,
அவை வன்புணர்வாகக் கருதப்படும்.
ஆனால், பதினைந்து வயது நிரம்பாதிருக்கும் மனைவியுடன் அவள் கணவன் கொள்ளும் உறவானது, வன்புணர்வாக மாட்டாது-. (இந்தக் கருத்தானது மறுதளிக்கப்பட வேண்டும்; மாற்றப்பட வேண்டும்.)
ஒரு மனிதன் யாரையாவது தாக்கினால், அது, தண்டனைக்குரிய குற்றமாகும். அவன் அதே செயலை மனைவியிடம் செய்யும்போதும், அது கொடுஞ்செயல்தானே!
ஒரு மனிதன் ஒருவரைக் கடும் வார்த்தைகளால் வைது, காயப்படுத்தினால், அது தண்டனைக்குரியது.
அதேபோலத்தான் ஒருவன் தன் மனைவியைப் பொதுஇடத்திலோ அல்லது வீட்டிலோ வையும்போது அது கொடுஞ்செயலாகிறது.
குடும்பக் கொடுமைச் சட்டத்தின் கீழ் (Domestic Violence Act) தண்டனைக்குரியதே.
ஒரு மனிதன் ஒருவரை சைகையின் மூலம் அச்சுறுத்தினால், அது குற்றமாகும். அதுபோலவே, அவன் மனைவியைப் பயமுறுத்தினாலும் அது குற்றமே.
அதைப்போலவே, மற்றொரு பெண் அல்லது சிறுமியுடன் உறவுகொள்வது தண்டனைச் சட்டம் 376ஆவது பிரிவின்படி தண்டிக்கத்தக்க குற்றமாகும். அதைப்போலத்தான் மனைவியைக் கட்டாயப்படுத்தித் தன்னுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு கணவன் செய்தலும் ஆகும்.
சம்மதத்துடன் உறவு கொள்ளும்போது, எதுவும் குற்றமல்ல; சம்மதம் இல்லாதபோது அச்செயல், அந்த நபர் சிறுமியாகவோ, வேறொரு பெண்ணாகவோ அல்லது மனைவியாகவோ இருந்தாலுமே, குற்றமாகி விடுகிறது. அதுவே நாட்டின் சட்டம். உடலுறவின்போது, பெண் அதில் தன்னைத் தொடர்புபடுத்திக்  கொள்ளாதபோது, அது கணவனேயாக இருந்தாலும், அவளைத் துன்புறுத்தி, அதன் காரணமாக கட்டாயத்தினால் அவள் இணங்கியிருந்தாலும்கூட அச்செயலின் விளைவாக அவளுக்கு வலி, கேடு மற்றும் விருப்பத்துக்கு மாறாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது காரணமாக அது வன்புணர்ச்சிபாற் கொண்டு வரப்பட வேண்டும்.
உடலுறவிற்கு அணுகும்போது, மனைவி மறுதளித்தால் அதற்கான மாற்று, அவளிடமிருந்து தள்ளி இருத்தல் அல்லது மணமுறிவு பெறுதலே ஆகும். அதற்காக அவன் அவளை எவ்வழியிலும் கட்டாயப்படுத்தக் கூடாது.
திருமணமென்பது ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல்தான். அதற்கு அப்பால் யாதொன்றுமில்லை. திருமணமென்பது ஒரு வளர்ச்சி பெற வேண்டிய இணக்கம் (Sense)  தான். ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்வதற்குத்தான். ஒருவரை அடக்கித் துன்புறுத்த அல்ல. பல அவமானங்களையும், அடக்குமுறைகளையும் சந்திக்கும் பெண்ணிற்குத் திருமணம் ஒரு தண்டனையாக அமையக் கூடாது. அதுவும் வன்புணர்ச்சிக்கு இணையான வல்லுறவாக அது அமையக் கூடாது. ஆனால், இஸ்லாமியச் சட்டம் என்ன சொல்கிறது?
இஸ்லாமியச் சட்டப்படி (The Muslim Personal Law) பெண்ணிற்குத் தரவேண்டிய சீதனம் (மெகர்) கேட்கப்பட்டும்கூட கொடுக்கப்படாவிட்டால், மனைவி அவனைப் புறக்கணிக்கலாம்; சமைக்க மறுக்கலாம்; துணி துவைக்க மறுக்கலாம்; ஏன் எதையும் செய்ய மறுக்கலாம்; ஆனால், அவள் பாலுறவு வாழ்வை மறுக்க முடியாது. கணவன் அழைக்கும்போது அவள் போய்த்தான் ஆகவேண்டும்.
இது குறித்து தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர் மீனா கந்தசாமி, ஒரு பெண்ணுக்குப் பாலியல் விருப்பம் உண்டு என்று ஒப்புக்கொள்ளும்  சமுதாயம் மட்டுமே, அவளுக்குச் சில  நேரங்களில் அந்த விருப்பங்கள் இல்லை என்று ஒப்புக்கொள்ளும்.
இங்கே பெண்ணுக்கு அவள் ஆசையை வெளிப்படுத்தும் இடமும் இல்லை, வேண்டாம் என்று சொல்லிவிடக் கூடிய வாய்ப்பும் இல்லை என்று நடப்பு உண்மையை உடைத்துப் பேசுகிறார். இது குறித்த தனது கட்டுரை ஒன்றில் தான் குறிப்பிட்டுள்ள கருத்தைப் பின்வருமாறு எடுத்து வைக்கிறார். ஓர் இரவு நேரத்தில் கட்டாயப்படுத்தப்பட்ட உறவின் காரணமாக இரத்தப் போக்கு ஏற்பட்டு நீங்கள் மருத்துவமனைக்குச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
உங்கள் கணவர் அவரது ஆண் தன்மையை மீண்டும் ஒருமுறை நிரூபித்ததற்காக வாழ்த்துக் கூறும் புன்னகையை மருத்துவர் உதிர்ப்பதை எதிர்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு வேண்டியிருக்கும். இதற்காக நீதிமன்றம் செல்ல இயலாது. இந்திய குற்றவியல்/ஆண் குறியியல் சட்டத்தில் (Indian Penal/Penile Code) திருமண உறவில் பாலியல் வன்முறையின் மீது நடவடிக்கை எடுக்க பிரிவே இல்லை.  கடந்த டிசம்பரில், தில்லி மாவட்ட நீதிபதி ஜே.ஆர்.ஆர்யன் என்பவர் வழங்கிய தீர்ப்பு ஒன்றில், இந்திய குற்றவியல் சட்டம் திருமண உறவுக்குள் பாலியல் வன்முறை என்ற பார்வையையே ஏற்றுக் கொள்ளவில்லை. கட்டாயத்தினாலோ, தனது விருப்பத்திற்கு மாறாகவோ தன்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டார் என்று கணவன் மீது மனைவி புகார் தெரிவித்தாலும் அது குற்றமாகாது என்று தெரிவித்துள்ளார். சட்டபூர்வமாகச் சொல்வதானால் உன் கணவன் உன் உடலின் உரிமையாளன். திருமணம் என்பது இலவசப் பாலுறவுக்காக ஆணுக்குக் கிடைத்த லைசன்ஸ் மற்றும் திரும்பத் திரும்பச் செய்யப்படும் பாலியல் வன்முறையிலிருந்து தப்பிக்கும் வழி! என்கிறார் மீனா கந்தசாமி.
திருமணத்தை கிரிமினல் குற்றம் ஆக்க வேண்டும் என்ற பெரியார், பெண்ணின் பாலியல் தேர்வையும் 80 ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தினார். பெரியாரின் சிந்தனையை இன்று உலகம் பேசுகிறது.

சென்னையில் இரண்டரை வயது குழந்தை நரபலிக் கொடுமை!


இந்தோனேசியாவைப் போல ஜோதிடத்தைத் தடை செய்ய வேண்டும்
தமிழர் தலைவரின் அறிவார்ந்த வினா

சென்னையில் இரண்டரை வயது குழந்தை நரபலிக் கொடுமை!  இந்தோனேசியாவைப் போல ஜோதிடத்தைத் தடை செய்ய வேண்டும்
சென்னையில் இரண்டரை வயது குழந்தை நரபலி கொடுக்கப்பட்டது பற்றியும், ஜோதிடத்தை நம்பும் இது போன்ற கொடுமைகளை அனுமதிக்க லாமா? இந்தோனேசியாவைப் போல ஜோதிடத்தை தடை செய்தால் என்ன? ஊடகங்களுக்கும், தலைவர்களுக்கும் இதில் பொறுப்பு இல்லையா? எனும் அறி வார்ந்த வினாக்களைத் தொடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், அறிக்கை வருமாறு:
நேற்று முன் நாள் சென்னையில் வந்த செய்தி குழந்தை நரபலி என்ற கோர சம்பவம் நம் நெஞ்சங்களில் ரத்தக் கண்ணீர் வடியச் செய்யும் கொடுமையான, அநாகரிகமான, காட்டுமிராண்டிகளாக நம் மக்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்பதற்கான நிர்வாண அடையாளம் ஆகும்!
இரண்டரை வயது குழந்தை
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி செந்தில் - அவரது மனைவி கீதா; இவர்களின் இரண்டரை வயது பையன் விஷ்ணு.
9.4.2013 அன்று இவர்களது பக்கத்து வீட்டு மாடியில் இருந்த தண்ணீர் பேரலுக்குள் மூழ்கிக் கிடந்தான். அதைக் கண்ட உறவினர்கள் குழந்தையை மருத்துவனைக்கு உடனே எடுத்துச் சென்ற நிலையில், அக்குழந்தை வழியிலேயே இறந்து விட்டது.
குழந்தை விஷ்ணு தண்ணீருக்குள் விழுந்து, (விபத்தாக) இறந்துவிட்டதாக எண்ணி, பெற்றோர் -குடும்பத்தினர் அதன் உடலை எரித்து விட்டனர்.
பிறகுதான் உண்மை உலகுக்குத் தெரிய வந்தது!
அந்தக் குழந்தையை அவருடைய சின்ன பாட்டியான மகேஸ்வரி என்ற பெண், தண்ணீர்த் தொட்டியில் அமுக்கிக் கொலை செய்ததாக அக்கம் பக்கத்தாரிடம் அப்பகுதி யில் உள்ள ஜோசியர் ஒருவர் தெரிவித்துள்ளார்; அதன்பிறகு காவல் துறைக்குப் புகார் கொடுக் கப்பட்டது. மகேஸ்வரியை அழைத்து விசாரித்த போது, அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்!
அவர் அளித்த வாக்குமூலம் எப்படி மூடநம்பிக்கை நோய் நம் மக்களின் மூளையை அறவே அரித்துத் துளை போட்டுள்ளது - என்பதற்கான அப்பட்டமான சான்றாகும்.
குடுகுடுப்பைக்காரன் வேலை
7.4.2013 அன்று இரவு எங்கள் தெருவுக்கு வந்த ஒரு குடுகுடுப்பைக்காரனிடம் என் கையை நீட்டி, ஜோசியம்  பார்த்தேன். அப்போது எனக்கும் என் குடும்பத்திற்கும் யாரோ செய்வினை வைத்தாகத் தெரிவித்து, 2000 ரூபாய் கொடுத்தால் அதை அகற்றி விடுவதாக அந்த குடுகுடுப்பை ஜோசியன் சொன்னான்.
மறுநாள் அந்த குடுகுடுப்பைக்காரன் மந் திரித்த எலுமிச்சம் பழம், இரண்டு தாயத்து, குங்குமம் போன்ற பொருள்களைக் கொடுத்து தாயத்தை என்னையும், என் குழந்தையையும் கட்டிக் கொள்ளுமாறு கூறினான். குடு குடுப்பைக்காரன் என்னிடமிருந்து 1000 ரூபாய் பெற்றுக் கொண்டான்.
கொலை செய்தேன்!
தாயத்தைக் கட்டிய சிறிது நேரத்திலேயே நான் சுயநினைவை இழந்தேன். குழந்தை விஷ்ணுவைப் பார்க்கும்போது எனக்கு ஆத்திரமாக இருந்தது. (எனக்கும் செந்தில் குடும்பத்திற்கும் மன வேறுபாடு இருந்தது. என்றாலும் குழந்தை விஷ்ணு என்னிடம் வந்துதான் விளையாடிக் கொண்டிருப்பான்) கொலை செய்து விடலாம் என்று தோன்றியது.  9.4.2013 அன்று நான், குழந்தையை அழைத்து வந்து வீட்டிலிருந்த தண்ணீர் தொட்டிக்குள் அமுக்கிக் கொலை செய்ய முயற்சித்தேன், மூச்சுத் திணறி உயிருக்குப் போராடினான். உடனே குழந்தையைத் தூக்கிக் கொண்டு பக்கத்து வீட்டு மாடிக்குச் சென்று அங் கிருந்த தண்ணீர் பேரலில் குழந்தையைத் தலைகீழாகப் போட்டு விட்டு தவறி விழுந்த தாக நாடகம் ஆடினேன். அனைவரும் அதை நம்பினர் (சுயநினைவை இழந்தேன் என்பதும் நாடகத்தின் ஓர் அங்கம்தானோ!)
மகேஸ்வரி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தை விஷ்ணு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது அவன் முகம், கை, கால்களில் காயங்கள் இருந்ததாக,  நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.
மகேஸ்வரி தோஷம் கழிக்கும் நோக்கத் தில் குழந்தையைக் கொலை செய்திருக்கலாம் என்று அந்தப் பகுதியில்  உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் ஆதங்கம்
இதுபற்றி நேற்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மிக உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு பெரியார் எப்போதும் தேவைப்படுவது ஏன் என்பதை இதன் மூலம் நெக்குருக வர்ணித்துள்ளார்கள்!
21ஆம் நூற்றாண்டிலா வாழுகிறோம் என்ற பொருள் பொதிந்த கேள்வியினை பொறி தட்டும்படிக் கேட்டுள்ளார்கள்!
நமது அரசியல் சட்ட அடிப்படைக் கடமைகளில் ஒன்று 51A(h) பிரிவின்கீழ், அறிவியல் மனப்பான்மையை மனிதநேயத்தை ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கும் மனப் பாங்கை ஊக்குவிப்பது, வளர்ப்பது சீர்திருத்தை வலியுறுத்துவது என்று உள்ளது?
இதை அமைச்சர்கள் பொதுத் தலைவர் களில் தொடங்கி, சாதாரண குடிமக்கள் வரை எதிர்ப்பவர்கள் எத்தனை பேர்?
வெறும் ஏட்டுச் சுரைக்காய் எழுத்துக் கள்தானே இவை?
1976இல் செங்கற்பட்டில்
தமிழ்நாட்டில் முன்பு செங்கற்பட்டில் ஒரு நரபலி (1976இல்) அதன்பிறகு பெரம்பலூரில் பள்ளி மாணவியைக் கொன்ற நிகழ்வு, இப்போது இப்படி என்று குறைவான அளவு என்றாலும் பெரியார் மண்ணில் - அதுவும் 21ஆம் நூற் றாண்டில் இப்படி நடக்கலாமா?
ஜோசியங்கள், யாகங்கள் நடத்துவோர், காவி வேட கபடதாரிகள், மூடநம்பிக்கை மோசடி பேர் வழிகள் இவர்களையெல்லாம் தனிச் சட்டம் கொண்டு வந்து உள்ளே தள்ள வேண்டாமா? ஊடகங்களுக்கும் இதில் பொறுப்பில்லையா? அரசியல் தலைவர்கள் மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கிறார்களே!
இங்கிலாந்து நாட்டு தலைவர் மார்கரெட் தாட்சருக்கே, கைபார்த்து, எலுமிச்சம் பழம் தந்து, ஏமாற்றிய சந்திரா சாமி கதையும், அவரை அவரிடம் அழைத்துச் சென்று அறிமுகப் படுத்திய நட்வர்சிங் அய் இங்கிலாந்து நாட்டுக்கான இந்தியத் தூதுவரும் பற்றி அண்மையில் ஒரு ஏட்டில் வெளிவந்த கட்டுரை எதைக் காட்டுகிறது? வெளிநாட்டுக் கும் இம்மோசடி மூடநம்பிக்கை வியாபாரம் ஏற்றமதி ஆகி விட்டது என்பதைத்தானே!
தேவை அறிவியல் மனப்பான்மை
உடனடியாக, இந்தோனேஷியா நாட்டில் ஜோதிடத்தைத் தடை செய்ததுபோல மத்திய மாநில அரசுகள் ஜோதிடத்தை தடை செய்ய முன்வர வேண்டும்.
இவற்றைத் தலைமை தாங்கி நடத்துவோரே இந்த மூடநம்பிக்கை ஜோசிய அடிமைகளாக இருக்கும் நிலையில் இது சாத்தியமா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், நிரந்தர அறிவியல் மனபான்மை ஓங்கிட இத்தகைய மூடநம்பிக்கை முட்புதர்களை அழித்திட வேண்டும் பகுத்தறிவு மனிதநேயப் பூங்காக் களை உருவாக்க வேண்டும்.
தனி மகேஸ்வரிகளைத் தண்டித்தால் மட்டும் பிரச்சினைகள் தீர்ந்து விடாது; நோய் நாடி நோய் முதல் நாடிட வேண்டும். அரசுகள் கடமை தவறலாமா?

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை, 15.4.2013

Monday, April 15, 2013

மோடிமஸ்தான் பராக்! பராக்!!


மோடியைப் பிரதமருக்கான வேட் பாளராக முன்னிறுத்துவோர் யார்?
பார்ப்பன பனியா கூட்டம்தான் இதன் பின்னணியில் இருக்கிறது.
பார்ப்பனர் கூட்டம் பின்புலத்தில் ஏன் இருக்கிறது? இந்துத்துவா கொடியைப் பறக்க விட மோடியால் தான் முடியும் - இந்துத்துவா கொடி ஏறினால்தான் மனுதர்ம சாம்ராஜ்யம் உருவாகும்.
மனு தர்மம் வந்தால்தான் பிரம்மாவின் நெற்றியில் பிறந்ததாகக் கூறி வந்தார்களே, அப்படி பிறந்த பிராமணர்களுக்காகத்தான் இந்தப் பூலோகமே படைக்கப்பட்டது என்று நம்பப்பட்டதே, அந்தப் பொற்காலம் பூக்க வேண்டும் என்பதிலே பூதேவர் களான பார்ப்பனர்கள் மிதந்து கொண்டிருக்கிறார்கள்!
நரேந்திரமோடி பார்ப்பனர் அல்லவே; - அப்படி இருக்கும் பொழுது அவரை ஏன் ஆரியம் தூக்கிப் பிடிக்கிறது என்ற கேள்வி எழுலாம்.
இந்த இடத்தில்தான் ஆரியத்தின் தந்திரப் பொறி வஞ்சகமாக ஒளிந் திருக்கிறது.
பார்ப்பனராக இருந்து ஒருவர் அதனைச் செய்யும்போது அது எளிதில் அம்பலப்படுத்தபட்டு விடும்.
பார்பார், பார்ப்பனப் புத்தியை! பார்ப்பன உணர்வோடு செயல்படும் சூழ்ச்சிகளைப் பாரீர் பாரீர்! என்ற எளி தாக பொது மக்களை பார்ப்பனர் களுக்கு எதிராகக் கிளப்பிவிட முடியும்.
அதே வேலையை மோடியைப் போன்ற பார்ப்பனர் அல்லாதார் செய் யும்போது அப்படி ஒரு குற்றச்சாற்றை எளிதில் வைக்க முடியாதல்லவா! உணர வைப்பது எளிதல்லவே!
அப்படியே குற்றம் சொன்னாலும் அந்த இடத்தில் பார்ப்பனர் இருக்கும் பொழுது வைக்கப்படும் குற்றச்சாட்டு அளவுக்கு வலிமை பெறாது!
இந்த தந்திரம் தான் மோடியை முன்னிறுத்துவதில் இருக்கக் கூடியதாகும்.
தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்களே நிஜப் புலியைவிட வேஷம் போட்ட புலி அதிகமாக குதிக்கும் என்று; தான் உண்மையான புலியல்ல என்று வேஷம் போட்ட புலிக்குத் தெரியும். ஆகையால், நம்மை சந்தேகப்படுவார்களே என்ற எண்ணத்தால் அதிகமாகக் குதிக்கும்.
மோடியும் அப்படிதான் நடந்து கொண்டு வருகிறார்; பிராமணர் நம் சமூகத்துக்கு எவ்வளவோ சாதித்துக் கொடுத்திருக்கிறார்கள் என்றுகூட சொன்னதுண்டு.
பிரதமர் நாற்காலியில் அமரும் ஆசை மோடிக்கு அதிகமாகவே இருக்கிற காரணத்தாலும், பார்ப்பனர்கள் பனியாக்கள் கைகளில் தான் ஊடகங்களும், பண பலமும் இருக்கிற காரணத்தாலும் இவர்களைச் சிக்கெனப் பிடித்துக் கொள்ளும் யுக்தியும் மோடிக்கு உண்டு.
ஆக ஒருவர் இன்னொருவரால் பயன் அடையும்போது,  அதற்கான திட்டங்களும் செயல் முறைகளும் உருவாகத்தானே செய்யும்.
அதுவும் மோடி இருக்கிறாரே மோசடியான திட்டங்களை உருவாக்குவதில் மிகவும் கில்லாடி! செயற்கையாக, தன் பிம்பத்தை உயர்த்திக் காட்டும் வேலைகளைச் செய்வதில் கை தேர்ந்தவர். குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி சமூக இணைய தளங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அவரது டிவிட்டர் என்ற சமூக வலைதளத்தில் பத்து லட்சம்  பேர்  இணைந்திருக் கிறார்கள், அதுவும் அவர் கணக்கு துவங்கி குறுகிய காலத்தில் இது நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து மோடி கூறுகையில், இது வெறும் எண்ணிக்கை அல்ல மாறாக உங்களது அன்பு என்று பதிவு செய்திருந்தார். ஆனால் அவரது கணக்கில் 50 சதவீதம் போலி கணக்கு என்பது தற்போது தெரியவந்துள்ளது. லண்டனில், ஸ்டேட்டஸ் பீப்பிள்ஸ் என்ற இணையதள பொறியாளர்கள் குழு ஒன்று இது குறித்து ஆய்வு  செய்ததில் மோடியின் டிவிட்டர் கணக்கில் 50 சதவீதம் போலிப் பயனா ளர்கள் இருப்பதாக கூறியுள்ளார்கள்.
அதாவது அவரது கணக்கில் 46 சதவீதம் போலி கணக்கும், 41 சதவீதம் பேர் பயன்படுத்தப்படாத கணக்கா ளர்கள் எனவும் கூறியுள்ளனர். மீதமுள்ள 13 சதவீதம்  பேர் மட்டுமே உண்மையாக பின் தொடர்பவர்கள் என்பது தெரிகிறது.
மோடியின் டிவிட்டர் கணக்கு 2010 ஆம்  ஆண்டு வரை ஒரு லட்சம் பேர் இணைந்திருந்தனர். 2011 ஆம் ஆண்டு முடிவில் நான்கு இலட்சம் பேர் இணைந்திருந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களில் மட்டுமே அதிகமானவர்கள்  இணைந்திருப்ப தாக காணப்பட்டது. இப்போது அது போலித்தனமாக காட்டப்பட்டது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்று சொல்லுவது போல பா.ஜ.க. முன்னணி தலைவராக திகழும் மோடியின் மோசடி ஒட்டு மொத்த பா.ஜ.க.வுக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்!
மகா மகா யோக்கியர் - நாணயமான வர் திருவாளர் பரிசுத்தம் என்பது போன்ற ஒரு தோற்றத்தையும் உரு வாக்க பல திட்டங்களைக் கையில் வைத்துள்ளார்.
இவரது புகழ் உலகெங்கும் பரவி யிருப்பது போல பிரச்சாரம் செய் கின்றனர்.
அதுவும் சமீபத்தில் சாயம் வெளுத்துப் போய்விட்டது.
அமெரிக்காவின் சிகாகோவிலி ருந்து தொழில் அதிபர்கள் சிலரும் எம்.பி.க்கள் சிலரும் மோடியைச் சந்திக்க வந்தனர் - அழைப்புக் கொடுத் தனர் என்று ஒரு கதையைக் கட்டி விட்டனர்.
உண்மை என்னவென்றால் மோடியைச் சந்திக்க வந்தவர்கள் அல்லர் அவர்கள். சுற்றுலாப் பயணி களாக வந்தவர்கள் அதற்காக அவர்களிடமிருந்து பணமும் வசூலிக் கப்பட்டது. இந்த விவரங்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டன.
அமெரிக்கா தொடர்ந்து மோடிக்கு விசா அளிக்க மறுத்து வருகிறது, பிரிட்டனும் அந்த நிலையில் தான் இருக்கிறது.
உள்ளூரிலேயே டெல்லி பல்கலைக் கழகத்தில் பேசச் சென்றபோது மாண வர்கள் எதிர்த்துக் குரல் கொடுத்தனர். கொல்கத்தாவில் தொழில் அதிபர் கூட் டத்தில் கலந்து கொள்ள செல்கிறார். குஜராத் முதல் அமைச்சர் மோடி என்று முதல் நாள் செய்தி வருகிறது.
அந்த இடத்தில் தொழில் அதிபர் கள் கூட்டத்தை நடத்திட மம்தா அரசு அனுமதி மறுத்தது என்ற செய்தி வருகிறது.
உள்ளூரிலேயே விலை போகாத ஒன்றாக ஆகி விட்டார்.
இதுதான் உண்மையான நிலை ஊழலை ஒழிப்பதில் உத்தமர் என்று சொல்லுகிறார்களே அவர்களை நோக்கி ஒரே ஒரு கேள்வி மாநிலத்தில் ஊழலை ஒழிப்பதற்காக அமைக்கப்படும் லோக் அயுக்தா அமைப்பை உருவாக்குவதற்கு ஏன் மோடி தயங்க வேண்டும்?
அதற்குரிய நீதிபதியை நியமிப்பதில் ஏன் கால தாமதம் செய்ய வேண்டும்?.
நீதிபதியை நியமிக்க மோடி முன்வராத நிலையில் ஆளுநரே அதற்கான நீதிபதியை நியமித்தபோது அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்ற வர்தானே இந்த யோக்கிய சிகா மணியான குஜராத் முதல் அமைச்சர் மோடி! அதிலும் தோல்வியை வாங்கிக் கட்டிக் கொண்டார் என்பதுதான் பரிதாபம்!
இப்பொழுது தனக்குத்தானே ஒரு லோக் அயுக்தாவை ஏற்படுத்திக் கொண்டார்.
குஜராத்
குஜராத் சட்டசபையில், ஊழல் களை கண்காணிக்கும் அமைப்பான, புதிய லோக் ஆயுக்தா மசோதா, காங் கிரஸ் கட்சியின் பலத்த எதிர்ப்புக் கிடையே நிறைவேறியது.
குஜராத்தில், முதல்வர் தலைமை யிலான தேர்வுக் குழுவுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான லோக் ஆயுக்தா சட்ட திருத்த மசோதா, ஆளுநர் கமலா பெனிவாலின் பரிந் துரைக்காக, மாநில அரசு, கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன், அனுப்பியது. ஆனால், இதனை நிராகரித்த ஆளு நர், லோக் ஆயுக்தாவின் தலைவராக, நீதிபதி மேத்தாவை நியமித்தார்.
இதனை, குஜராத் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவையும் உறுதிபடுத்தின. லோக் ஆயுக்தா நீதிபதி தீர்ப்பே இறுதியானது என, உச்சநீதிமன்றமும் கூறியது. இந் நிலையில், மாநில முதல்வர் தலைமையிலான தேர்வுக் குழுவிற்கு அதிகாரமளிக்கும், சர்ச்சைக்குரிய புதிய லோக் ஆயுக்தா மசோதா, குஜராத் சட்டசபையில்,  பலத்த எதிர்ப்புக் கிடையே நிறைவேறியது.
தற்போதுள்ள லோக் ஆயுக்தா சட்டம் 1986இன் படி, மாநில ஆளுநர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோரது அதிகாரங்களைக் குறைத்து, நிறை வேற்றப்பட்டுள்ள இந்த மசோதா வலுவற்ற ஒரு அமைப்பாகும் என, சட்ட நிபுணர்கள் கருத்துத் தெரி வித்துள்ளனர்.
குஜராத் மாநில எதிர்க்கட்சித் தலைவர் சங்கர் சிங் வகேலா கூறுகை யில், ""மாநில அரசின் ஊழல்களை, நீதிபதி மேத்தா அம்பலப்படுத்தி விடுவார் என்று நரேந்திர மோடி தலைமையிலான அரசு பயப்படுகிறது,'' என்றார். இந்தியாவுக்குப் பிரதமராகத் துடிக்கும் பேர் வழியின் முகவிலாசம் இதுதான்.
இப்பொழுது சி.ஏ.ஜி. ஒரு புதுக்கரடியை அவிழ்த்து விட்டுள்ளது. மோடி ஆட்சியில் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்பதுதான் அந்தக் கரடி!
அந்தோ பாவம் நரேந்திர மோடி!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...