Saturday, February 23, 2013

காவிரி நீர்ப் பிரச்சினையில் முதற்கட்ட வெற்றியே!


போக்குவரத்து நெரிசல் குறைந்து பத்திரமாகப் பயணம் செய்யலாம்  வெளிநாடுகளில், வடமாநிலங்களிலும் இம்முறை பின்பற்றப்படுகிறதே!
காவிரி நீர் பிரச்சினை யில் தற்போது நமக்குக் கிடைத்துள்ளது முதற்கட்ட வெற்றிதான் - இதனைத் தொடர்ந்து மத்திய அரசு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளைப் பொறுத்துத்தான் முழு வெற்றி வந்தாகவேண்டும்; இதற்காக ஒருமித்த குர லில் மத்திய அரசை வலி யுறுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
1. முதன் முதலாக காவிரி நடுவர் மன்றம் என்ற ஒன்று அமைத்துத் தீர்வு காண தமிழக அரசு முயற்சி எடுக்கவேண்டும் என்று எம்.ஜி.ஆர். முதல மைச்சராக இருந்த அ.தி. மு.க. அரசு கூட்டிய சர்வ கட்சிக் கூட்டத்தில் (19.2.1980) எடுத்து வைத்தது திராவிடர் கழகமே! (ஆவண ஆதாரம் உண்டு).
2. காவிரி நீர்ப் பங்கீட்டுக்கு என அமெரிக்கா - கனடா போன்ற நாடுகளில் உள்ள நதி நீர்ப் பங்கீடு குறித்து, அங்குள்ள சுதந்திர நிபுணர்களைக் கொண்ட அமைப்பான டெனசி நதி பள்ளத்தாக்கு ஆணையம் (Tenasy River Valley Authority CVA) போன்ற ஒன்றை நிரந்தர தீர்வுக்காக நிரந்தரமாக அமைக்கவேண்டும் என்று மத்திய அரசினை வற்புறுத்திட வேண்டும் என்ற ஆலோசனையை காவிரி சம்பந்தப்பட்ட அச்சர்வ கட்சிக் கூட்டத்தில் முன்வைத்தது திராவிடர் கழகம்.
3. காவிரி நடுவர் மன்றம் அமைக்க கலைஞர் தலைமை யில் 1989 இல் அமைந்த தி.மு.க. ஆட்சி - அன்றைய பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களிடம் வற்புறுத்தி, அதனைப் பெற்ற பெருமையும் வழங்கிய கொடையும் முறையே தி.முக..வுக்கும், வி.பி. சிங் அவர்களின் தேசிய முன்னணி ஆட்சிக்கும் உரியதாகும்.
4. இந்தியஅரசியல் சட்டத்தின் 262 ஆம் பிரிவின்படி, நதிநீர்ப் பங்கீடு சம்பந்தமாக மாநிலங்களுக்கிடையே ஏற்படும் தாவாவை தீர்த்து வைக்க, நதிநீர் சம்பந்தமாக மாநிலங்களுக்கிடையே ஏற்படும் வழக்குகளைத் தீர்க்கும் சட்டம் (The Inter State Water Disputes Act) 1956 (33 of 1956) என்பதில் உள்ள 11 ஆவது செக்ஷன்படி உச்சநீதிமன்றத்திற்கேகூட நதிநீர்ப் பங்கீடு வழக்குகளை நடுவர் மன்றம் விசாரித்த நிலையில், தீர்ப்புக் கூற அதிகாரம் கிடையாது.
ஆனால், அதன் செக்ஷன் 4-ன்படி,  மத்திய அரசு அதன் சட்டக் கடமையை நிறைவேற்றிடவேண்டும்என்று ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் அதற்கு உண்டு.
இந்த அடிப்படையிலேயே, கருநாடக அரசு தொடக்க முதலே செய்த அத்தனை சட்டவிரோத அடாவடித்தனங் களையும் தாண்டி, காவிரி நடுவர் நீதிமன்றம் 2007 பிப்ரவரி மாதத்தில் அதன் இறுதித் தீர்ப்பை வழங்கியது.
5. 1990 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி காவிரி நடுவர் மன்றம் அமைந்த பிறகு அடுத்த 1991 ஆம் ஆண்டின் ஜூன் 25 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு இடைக்காலத் தீர்ப்பாக 205 டி.எம்.சி. தண்ணீரை கருநாடகம் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டும் என்று நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது. (இதனைக் கூட இதுவரை கருநாடக அரசு தவறாமல் வழங்கி தமிழக விவசாயிகளின் வாழ்வா தாரத்தைக் காப்பாற்றிட உதவியதா என்றால் இல்லை).
இந்நிலையில், இறுதித் தீர்ப்பு 2007 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வழங்கியுள் ளதில்,
ஓடிவரும் நீரின் மொத்த அளவு    - 740 டி.எம்.சி.
இதில் தமிழ்நாட்டிற்குரிய பங்கு    - 419 டி.எம்.சி.
கருநாடகத்திற்கு    - 270 டி.எம்.சி.
கேரளாவிற்கு    - 30 டி.எம்.சி.
புதுவைக்கு    - 7 டி.எம்.சி.
சுற்றுச்சூழலை பாதுகாக்க    - 10 டி.எம்.சி.
இந்த இறுதித் தீர்ப்பு வெளியான 6 ஆண்டுகள் கழித்து, அதுவும் உச்சநீதி மன்றம் மத்திய அரசிடம் கேள்வி மேல் கேள்விகளை தலையில் குட்டுவதுபோல் குட்டிக் கேட்ட பிறகே, இறுதி கெடுவுக்கு முதல் நாள் பிப்ரவரி 19 ஆம் தேதி யன்றுதான் வெளியிட்டது என்பது மத்திய அரசுக்குப் பெருமை தருவதல்ல.
இடையில் கருநாடகத்தில் வரவிருக் கும் சட்டமன்றத் தேர்தல் என்ற அரசியல் கண்ணோட்டம் அதன் தவக்கத்திற்குரிய முக்கிய காரணமாக இருந்திருக்கக் கூடும்.
வழமையான மத்திய அரசின் காலந்தாழ்ந்த செயலாக்கத்தின்மூலம், அதற்குரிய முழு நன்றி - பாராட்டைத் தமிழக மக்களிடம் பெற இயலாத நிலை.
நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசு தனது கெசட்டில் வெளி யிடுவது என்பது அரசியல் சட்டப்படி ஆற்றிடவேண்டிய சட்டக் கட்டாயம் ஆகும். அதனைச் செய்ய வைக்கவே வழக்கு, மக்கள் - விவசாயிகள் போராட்டம் தேவை என்பது விசித்திர மானதொன்றாகும்.
6. கெசட்டில் வெளியிடப்பட்ட நிலை யில், இது எனது வெற்றி என்று முதல மைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் பெருமைப்படுகிறார்; அதில் யாருக்கும் சங்கடம் இல்லை. அதேநேரத்தில், தொடக்கம்முதல் இதற்காகக் குரல் கொடுத்தவர்கள், போராடியவர்கள் அனைவரின் பங்கினைப் புறந்தள்ளு வதோ, இருட்டடிப்பதோ சரியல்ல! அதே நேரத்தில், இந்த முக்கிய வாழ்வாதார காவிரி நீர்ப் பிரச்சினையில் முந்தைய எம்.ஜி.ஆர்., கலைஞர் அரசுகள் கூட்டியது போல அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, அவருடன் தோழமையாக உள்ள கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகள் உள்பட பலரும் கேட்டும் அவர் கூட்ட மறுத்தது இதனால்தானோ என்று எண்ண வேண்டியுள்ளது.
கருநாடகத்தில் ஷெட்டர் அரசு மூச்சுக்காற்றுக்காக வென்டிலேட்டரில் இருக்கும் அரசு என்றாலும்கூட, இது வரை இந்தப் பிரச்சினைக்காக பத்து முறை சர்வகட்சிக் கூட்டங்கள், அனைத் துத் தலைவர்களுடன் பிரதமரை டில்லி சென்று சந்தித்து வற்புறுத்தியது முதலிய பல வகையிலும் நடந்துகொண்ட முறை சுட்டிக்காட்டப்படவேண்டும்.
என்றாலும் அனைத்துத் தமிழ்நாட்டுக் கட்சிகளும்  (தனித்தனியாகவேனும்) குரல் கொடுத்தன; வாதாடின - நாடாளு மன்றத்திலும், வெளியிலும்; எனவே, இது அனைத்துக் கட்சிகளின் வெற்றி என் பதைவிட, தமிழ்நாட்டு மக்கள் அனை வருக்கும் கிடைத்த - காலந்தாழ்ந்த வெற்றியாகும். இதற்குக் காரணமான அத்தனைப் பேருக்கும் இந்த வெற்றியில் உரிமை கொண்டாட பாத்தியதை உண்டு. இப்போதுஅந்த ஆராய்ச்சி முக்கியமல்ல.
அதைவிட  அடுத்த கட்டம்தான் மிக முக்கியமானது.
7. இந்த இறுதித் தீர்வுப்படி நிரந்தர மாக காவிரி நீர்ப் பங்கீடு செய்ய இரண்டு முக்கிய அமைப்புகளை அமைக்க வேண்டியது மத்திய அரசின் முக்கிய கடமையாகும்.
1. காவிரி நதிநீர் நிர்வாக வாரியம் இதற்குத் தலைவர், இரண்டு முழு நேர உறுப்பினர்கள், இரண்டு பகுதி நேர உறுப்பினர்கள்,
மத்திய அரசே நியமிக்கவேண்டியது. இதன் தலைவருக்கு குறைந்தது 20 வருட அனுபவமும், தலைமைப் பொறியாளராக இருந்த அனுபவமும் இருக்கவேண்டியது அவசியம். மற்ற இருவரில் ஒருவர் நீர்ப் பாசனத் துறையில் 15 ஆண்டுகள் அனுபவமும், தலைமைப் பொறியாளராக பணியாற்றிய அனுபவமும் அவசியம். இன்னொருவர் விவசாயத் துறையிலிருந்து நியமிக்கப்படுவார்.
அரசிதழில் வெளியிடப்பட்ட அடுத்த 90 நாள்களுக்குள் இந்த அறிவிக்கை நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குமேல் அதனை முறைப்படுத்த ஒரு கண்காணிப்பு - முறைப்படுத்தும் கமிட்டி ஆகிய ஒன்றும் தேவை.
இவை இரண்டையும் உடனடியாக மத்திய அரசு - முந்தைய காலதாமதம் போல் இன்றி - நியமித்து, இப்பிரச்சி னையை சுதந்திரமாக முடிவு செய்ய அத்தகைய அமைப்புகளின் பொறுப்பில் விட - உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ளவேண்டும்.
முதல்கட்ட வெற்றிதான் - முழு வெற்றியல்ல!
இன்று காலை தமிழ்நாட்டு எம்.பி.,க் கள் பிரதமரிடம் சென்று, நன்றி தெரி வித்து, மேற்கொண்டு அமைப்புகள் அமைக்கக் கேட்டுக்கொண்ட நிலையில், பிரதமர் மன்மோகன்சிங், உடனே அமைப்பதாக உறுதியளித்துள்ளார் என்பது மகிழ்ச்சிக்குரியது - நன்றி!
ஒட்டுமொத்தமான குரலாக தமிழ் நாட்டு மக்கள், கட்சித் தலைவர்கள், எம்.பி.,க்கள் எல்லோரும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தாக வேண்டும்.
இந்த செயல்பாட்டைத் தடுத்து நிறுத் திட கருநாடகம் வரிந்து கட்டிக் கொண் டுள்ளது என்பதைப் பார்க்கையில், நாம் அடைந்துள்ள முதல் கட்ட வெற்றியையே முழு வெற்றிபோல் கருதி, ஏமாந்துவிடக் கூடாது.
2. இந்த இறுதித் தீர்ப்பின் விளைவு களை தெளிவாக விவசாயிகளும், தமிழக மக்களும் புரிந்து கொள்ளத் தவறக் கூடாது!
3. இந்த கெசட் வெளியாவதன்மூலம் ஏற்கெனவே 1892, 1924 ஆகிய ஆண்டு களில் சென்னை ராஜதானிக்கும், மைசூர் அரசுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந் தங்களே முடிவுக்கு வந்து புதிய நிலை சட்ட ரீதியாகப் பிறக்கிறது.
இதிலிருந்து பலர் கூறிய அபாண்டமும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. 1924 ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கவில்லை தி.மு.க. அரசு, எனவே ஒப்பந்தம் முடிந்ததற்கு தி.மு.க.வும், கலைஞரும் காரணம் என்று வெங்கட்ராமன்கள் முதல் இங்குள்ள பலரும் பேசிவந்த புரட்டு உடைந்துவிட்டது!
இனிமேல் உச்சநீதிமன்றத்திடம் சென்று முறையிட முடியாது என்பதாலும், கருநாடகத்திடம் எளிதில் நியாயம் கிடைக்காது என்பதாலும் நமது கவனம் - இரு அமைப்புகளையும் விரைந்து நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அழுத்தம், வற்புறுத்தலில் இருக்கவேண் டும். இது மிகமிக முக்கியம். மிகமிக அவசரம்!
சென்னை  
22.2.2013


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Friday, February 22, 2013

வீதியில் வீரப் பரம்பரை

- கி.தளபதிராஜ்

"தமிழ்த்தேசியத்திற்கு முன்னோடி  தமிழர்களின் பொற்காலம் என்று வர்ணிக்கப்படுற இராஜராஜனைப்பற்றிய கல்வெட்டு ஆராய்ச்சி மற்றும் வரலாற்று அறிஞர்களின் நூல்களைப் பார்க்கும்பொழுது இராஜராஜசோழன் ஆட்சி தமிழர்களின் பொற்கால ஆட்சியாக இருக்கவில்லை பார்ப்பனர்களுக்கே அது பொற்காலமாக விளங்கியிருக்கிறது என்பது தெளிவாகிறது!
பார்ப்பனர்களை சேனாதிபதிகளாகவும், அவைத்தலைவர்களாகவும், அரியனையேற்றி அழகு பார்த்தவன் இராஜராஜன்! களப்பிரர்கள் காலத்தில் காயடிக்கப்பட்ட பார்ப்பன மேலாதிக்கம், மீண்டும் தலைவிரித்தாடியது இராஜராஜன் காலத்தில்! வரலாற்று பெருமையாக சொல்லிகொண்டிருக்கும் தஞ்சைப்பெரிய கோவிலை எழுப்பும் பணியில் தான் புண்ணியம் தேடிக்கொள்வதற்காக இராஜராஜன் அப்பாவி மக்களை வாட்டி வதைத்திருக்கிறான்!
அடிமைகள்!
சோழர்காலத்தில் அடிமை முறை இருந்ததை பல்வேறு கல்வெட்டுகள் சுட்டிக்காட்டுகின்றன.தாசியின் மக்கள்,பெற்றோரால் விற்கப்பட்டவர் போன்ற பலவகையான அடிமைகள்!.பொருளைப்போன்றே இந்த அடிமைகளும் விற்பனை மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.விற்கப்படும் அடிமைகளுக்கு மாட்டைப்போல் சூட்டுக்கோல் அடையாளங்கள் இடப்பட்டிருக்கிறது. பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் ஆள்விலை பிரமான இசைவுச்சீட்டு என்று சொல்லப்பட்டிருக்கிறது. பல்லாயிரம் அடிமைகளை கொடுமைப்படுத்தி அவர்கள் உழைப்பில் தஞ்சை பெரிய கோவிலை எழுப்பி புண்ணியம் தேடிக்கொண்டான் இராஜராஜன்!
கோவிலில் பணிபுரிந்தவர்களின் நிலங்கள் கூட பறிமுதல் செய்யப்பட்டு கோவில் நிலங்களாக மாற்றப்பட்டிருக்கிறது. தங்கள் நிலங்களை பறிகொடுத்தவர்கள் அரசை எதிர்த்து தீ குளித்த செய்தியை புஞ்சை செப்பேடுகள் கூறுகின்றன.
கோவிலில் பணிபுரிவதற்கென்று பெண்களை நியமனம் செய்தான் இராஜராஜன். தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் நானூறுக்கும் மேற்பட்ட பெண்களை நியமித்திருந்தான். அவர்களுக்கு திருமணம் செய்துகொள்ளும் உரிமை முற்றிலுமாக மறுக்கப்பட்டிருந்தது. அவர்கள் தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டனர். கோவில் தளத்தைச் சுற்றி தேவரடியார்களுகென்று தனிக்குடியிருப்பு பகுதியை ஏற்படுத்தி அவை தளிச்சேரி என பெயரிடப்பட்டது.
உலகமகா தேவியார், சோழமாதேவியார், அபிமான வல்லியார், திரைலோக்கிய மாதேவியார், பஞ்சவன் மாதேவியார், பிருதிவி மாதேவியார்,இலாட மாதேவியார், மீனவன் மாதேவியார், நக்கன் தில்லை அழகியார், காடன் தொடங்கியார், கூந்தன் விரானியார், இளங்கோன் பிச்சியார், என 15 க்கு மேற்பட்ட மனைவிமார்களை வைத்திருந்தவன் இராஜராஜன்!
வடமொழிக்கு வாழ்வு !
சோழர் காலத்தில் தென்னாற்காடு மாவட்டம் எண்ணாயிரம் எனும் ஊர் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டு அங்கு வடமொழிகென்றே தனிக்கல்லூரி உருவாக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைத்து செலவுத்தொகையும் அரசால் மானியமாக வழங்கப்பட்டது.அங்கு பயிற்று வித்த ஆசிரியர்கள், பயின்ற மாணவர்கள் அனைவரும் பார்ப்பனர்களே! இக்கல்லூரிக்கென 300 ஏக்கர் நிலம் தானமாக அரசனால் வழங்கப்பட்டது.
இதே போன்று வடாற்காடு மாவட்டம் கப்பலூர் கிராமத்திலும், செங்கற்பட்டு மாவட்டம் ஆனூரிலும் வடமொழி பாடசாலைகள் நிறுவப்பட்டன. புராணங்கள், இதிகாசங்கள், சோமசித்தாந்தம், ராமானுஜ பாடியம், மீமாம்ச வியாக்ரணம் போன்ற வடமொழி இலக்கியங்களே அங்கு பயிற்றுவிக்கப்பட்டன.
தமிழ்த்தேசிய சூரர்களால் தமிழ்தேசியத்தின் பிதாமகன் என்று சித்தரிக்கப்படும் இராஜராஜன் காலத்தில் தமிழ் மொழிக்கென எந்த ஒரு தனித்த பாடசாலையும் நிறுவப்பட்டதாக தெரியவில்லை!.
வலங்கை இடங்கை குல வேறுபாடு ராஜராஜன் காலத்தில் ஓங்கியிருந்தது.இந்த இரண்டு பிரிவுகளிலும் இடம்பெறாத தங்களை மேன்மக்களாக கருதிகொண்டிருந்த பார்ப்பனக்கூட்டம் வலங்கைப் பிரிவினரை ஏவிவிட்டு இடங்கைப் பிரிவினருக்கு எதிராகதொடர்ந்து கலகம் விளைவித்தது. இந்தக் கொடுமையைத் தாங்க இயலாமல், இடங்கை ஜாதியினர் ஒன்றுகூடி கண்டனத் தீர்மானம் இயற்றியதோடு,அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிகழ்ச்சிகள் நித்த வினோத வளநாட்டுக் காந்தார நாட்டைச்சேர்ந்த இராஜமகேந்திர சதுர்வேதி மங்கலம் கிராமத்தில் (நித்த வினோத வளநாடு என்பது தற்போதைய பாபநாசம் நன்னிலம் பகுதிகள்) நடைபெற்றுள்ளது.
பார்ப்பனர்களை எதிர்த்து கலகம் செய்பவர்களுக்கு இருபதினாயிரம் காசுகள் தண்டம் விதிக்கப்பட்டு கட்டத்தவறியவர்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறன.
கிராமங்களில் குடவோலைமுறை இருந்தது. கிராமங்கள் பல குடும்புகளாக பிரிக்கப்பட்டு, குடும்பின் சார்பில்  ஒரு ஆண் மகன் பிரதிநிதியாக நியமிக்கப்படுவான். அவனுக்கு குறைந்த பட்சம் 1/4 வேலி நிலம் சொந்தமாக இருக்கவேண்டும். பார்ப்பனர்களுக்கோ 1/8 வேலி நிலம் இருந்தாலே போதும் என சலுகை காட்டப்பட்டது. அப்படி குடும்பின் சார்பில் நியமிக்கப்படும் பெயர்கள் தனித்தனியாக துண்டு காகிதத்தில் எழுதி ஒரு குடத்தில் இட்டு குலுக்கள் முறையில் சபையின் அங்கத்தினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த சலுகையாலும் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் அவ்வப்போது தானமாக வழங்கப்பட்டு வந்ததாலும், கிராமசபை அங்கத்தினராக பெரும்பாலும் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்திவந்தனர்.
வேளாண்மக்களும்,பார்ப்பனர்களும் அதிகம் வசித்த கிராமங்களில் இரண்டு சபைகள் தனித்தனியாக இயங்கிவந்தன.பார்ப்பனர்களின்  விருப்பப்படி அத்தகைய கிராமங்களை ஒரே சபையின் கீழ் கொண்டுவரத் திட்டமிட்டான் இராஜராஜன். வேளாண் மக்கள் தங்கள் நிலங்களை பார்ப்பனர்களுக்கு விற்றுவிட வேண்டும் என்று உத்தரவிட்டு அதை நிறைவேற்றும் பொருட்டு அதிகாரிகளையும் நியமித்தான்.
பார்ப்பனர்களுக்கு பொன்னையும் பொருளையும், நிலபுலங்களையும் தானமாக வாரி வழங்கினான் இராஜராஜன்! பார்ப்பனர்களுக்கென்றே கிராமங்கள் பிரத்யேகமாக தானமாக வழங்கப்பட்டு, அகரம், அக்கிரஹாரம், சதுர்வேதிமங்கலம், பிரம்மதேயம் என்று அழைக்கப்பட்டன. அப்படி தானமாக வழங்கப்பட்ட பகுதியில் வசித்த பார்ப்பனர்களுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
கோவில்களில் பறிமாறப்படும் உணவுப்பந்திகளில் பார்ப்பனர்களுக்கு முதலிடம் தரப்பட்டது. தஞ்சைப் பெருவுடையார் கோவில் விமானத்தின் தெற்குப்பக்க சுவரில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில் காலம் 1014 சிறீஇராஜராஜன் -தஞ்சைப்பெருவுடையார் கோவிலுக்கு சோழமண்டலத்திலும்,பாண்டிய மண்டலத்திலும், தொண்டை நாடான ஜெயங்கொண்ட சோழமண்டலத்திலுமுள்ள பிரம்மதேயங்களை சேர்ந்தவர்கள் தங்கள் ஊரில் பண்டாரம் (பூசை) செய்வதற்கு பிராமணர்களையும், திருபரிசாரகம் (சமையல்) செய்வதற்கு மாணிகளையும் (திருமணம் ஆகாதவர்கள்) கணக்கு எழுத கரணர்களையும், சந்திர ஆரியர்கள் உள்ளவரை நியமிக்க அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பார்ப்பனர்கள் வாழும் பிரம்மதேயத்தில் வசிக்கக்கூடிய பார்ப்பனர்கள் மட்டுமே கடவுளுக்கு பூசை செய்ய கருவறைக்குள் அனுமதிக்கப்பட்டனர் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
கிராமசபைகளிலும் அரசின் முடிவுகளிலும் கூட பார்ப்பனர்களின் அதிகாரம் கொடி கட்டி யிருக்கிறது. அவர்களின் ஆலோசனைப்படியே தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
சூழ்ச்சியில் ஆட்சி!
இராஜராஜன், சுந்தர சோழனின் இரண்டாவது மகன்.தனது சித்தப்பா மதுராந்தக உத்தம சோழனின் துணைகொண்டு ஆட்சியில் இருந்த மூத்த சகோதரன் ஆதித்திய கரிகாலன் கதையை முடித்திருக்கிறான். அந்தப்பழி தன்மீது விழாமல் இருக்க உடனடியாக தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்காமல், தண்டிக்கப்படவேண்டிய உத்தமசோழன் அரியணை ஏற ஆதரவுக்கரம் நீட்டினான்பிராமணர்களுக்கு மரணதண்டனை அளித்தால் அரசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டாகும் என்று சொல்லி ஆதித்திய கரிகாலன் கொலையில் உத்தம சோழனுக்கு உறுதுணையாக இருந்த பார்ப்பனர்களையும் தப்பவிட்டான்.
தான் அரியணை ஏறுவதற்கு ஒரு வகையில் காரணமாக இருந்த பார்ப்பனர்களுக்கு மிகுந்த விசுவாசத்தோடு இருந்திருக்கிறான் இராஜராஜன்! பார்ப்பனர்களுக்கு பொற்கால வாழ்வளித்த சூத்திர இராஜராஜனை அவன் கட்டிய கோவிலுக்குள்ளேயே நுழைய அனுமதிக்காமல் வெளியேற்றியிருக்கிறது பார்ப்பனீயம்! இன்றளவும் பார்ப்பன அடிவருடிகளாக விளங்கிக் கொண்டிருக்கும் தமிழினத் துரோகிகளுக்கு தஞ்சை பெரியகோவில் வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் இராஜராஜசோழன் சிலை ஒரு பாடமாக அமையட்டும்!
ஆதாரநூல்கள்
தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்
-கே.கே.பிள்ளை
தமிழக வரலாறு
-மு.இராசமாணிக்கனார்
பிற்கால சோழர் சரிதம்
-சதாசிவ பண்டாரத்தார்
பார்ப்பனர்கள் சூழுச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும்
-புலவர் கோ.இமயவரம்பன்
தளிச்சேரி கல்வெட்டுகள்
-இரா.கலைகோவன்
சோழர்கள்
-கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
பொற்காலங்கள் ஒரு மார்க்ஸிய ஆய்வு
-ஆ.சிவசுப்ரமணியன்

Thursday, February 21, 2013

ஜெயலலிதாவை சிக்கலில் மாட்ட வைக்கும் நமது எம்.ஜி.ஆர்.


டாக்டர் நமது எம்.ஜி.ஆர். என்று ஒரு நாளேடு நடந்து வருகிறது. அது, அ.இ.அ.தி. மு.க.வின் அதிகாரபூர்வமான நாளேடாகும்.
அதில் கட்டுரை தீட்டுவோர், பெட்டிச் செய்தி வெளியிடுவோர் எழுதிவரும் விவரங்கள் - அக் கட்சியின் பொதுச்செயலாளரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தக் கூடி யவை. அவர்மீது எளிதாக எதிர் தரப்பினர் தாக்குதல் தொடுப்ப தற்கான வசதியைச் செய்து கொடுத்து வருகின்றனர். எத் தனையோ உண்டு - எடுத்துக் காட்டுக்கு இதோ ஒன்றே ஒன்று.
நமது எம்.ஜி.ஆரில். இம் மாதம் 18 ஆம் தேதி பக்கம் நான்கில் ஒத்தக் குரல் கொடுத்து ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுப்போம்! என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கூறிவிட்டாராம்!
அடேயப்பா அண்ணா தி.மு.க. ஏடு எப்படி எல்லாம் எகிறிக் குதிக்கிறது?
டெசோ நாடகக் கம்பெனியாம்... விமர்சிக்கிறது அந்த ஏடு.
ஈழத் தமிழர் பிரச்சினையில் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் நிலைப்பாடு என்ன? இவரைப் போல இந்தப் பிரச்சினையில் சந்தர்ப்ப சதிராடும் வேறு ஒருவரைக் காட்ட முடியுமா?
இந்தியாவைத் தலையிட வைப்பதுபற்றி எல்லாம் பேச ஆரம்பித்துள்ளனரே - நியாயம்தான் - இந்தியா தலையிடவேண்டும்தான்!
ஆனால், செல்வி ஜெயலலிதாவின் நிலைப்பாடு என்ன?
அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட (14.10.2008) தீர்மானத்தைப் பார்த்தால், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடைபெறும் உள் நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை அய்ந்து முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது.
இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், பின்னர் நம் நாட்டு உள்விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளாது.
(டாக்டர் நமது எம்.ஜி.ஆர்., 16.10.2008).
அம்மையார் ஜெயலலிதாவின் இந்தக் கூற்றுக்கு அறிவு நாணயமான முறையில் பதில் சொல்லிவிட்டு, இந்தப் பிரச்சினையில் மேற்கொண்டு மூக்கை நுழைப்பதுதான் சரியாக இருக்க முடியும்.
பந்தை அடிக்க முடியாத பேர்வழி காலை அடிப்பது என்பது ஒரு வகை கோழைத்தனமாகும்.
ஈழத் தமிழர் பிரச்சினை - விடுதலைப் புலிகள்பற்றி பிரச்சினை பற்றி எல்லாம் தமிழர் விரோதமாக செல்வி ஜெயலலிதா எடுத்துக் கூறியவை எல்லாம் வண்டி வண்டியாக இருக்கின்றன.
கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய ஆசைப்பட்டால், அதன் விளைவு என்ன என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இடம் தெரியாமல் காலை வைக்க ஆசைப்படவேண்டாம்!
திராவிடர் கழகத்தின் மீதோ அதன் தலைவர் மீதோ அவதூறு பேச ஆரம்பித்தால், ஆயிரம் ஆயிரம் எதிர் அம்புகள் அம்பறாத் தூணியில் தயார்! தயார்!!
கூடுதல் தகவல் (Tail - Piece)
அத்தகைய பதிலடிகள் வரும்போது செல்வி ஜெயலலிதாவின் முரண் பாடுகளில் தமிழர் விரோத நடவடிக்கைகளும்தான் அம்பலப்படும் - அதன் விளைவு நமது எம்.ஜி.ஆர். ஏட்டின் இத்தகைய எழுத்தாளர்களுக்குத்தான் எதிர்விளைவை ஏற்படுத்தும். அம்மா சேதி தெரியும் அல்லவா!

ராஜ தர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பேயி சொன்னதற்கு என்ன பொருள்?


மோடியைப்பற்றி கட்ஜு விமர்சித்ததற்கு பதவி விலகச் சொல்லும் அருண்ஜெட்லிகள்


இலங்கைத்  தூதரகத்தை முற்றுகையிடுவோம், வாரீர்! பிப்ரவரி 28ஆம் தேதி போராட்டம்!
குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியைப் பற்றி பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு விமர்சனம் செய்ததற்காகப் பதவி விலக வேண் டும் என்று கூறும் அருண்ஜெட்லிகள், குஜராத் முதல்வர் மோடி ராஜதர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று அன்றைக்குப் பிரதமராக இருந்த நிலையில் வாஜ்பேயி சொன்னாரே, அதற்குப் பொருள் என்ன என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நமது நாடு ஒரு ஜனநாயக நாடு. கருத்துச் சுதந்திரத்தை அதன் அரசியல் சட்டம் அனுமதித்துள்ளது; அதைவிட, இந்திய அரசியல் சட்டத்தின் முக்கியப் பிரிவான அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) என்பதில் பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற பல உரிமைகள் குடிமக்களின் பிறப்புரிமையான ஜீவாதார உரிமையாகும். ஜனநாயகத்திற்கு அடையாளமே இது தான். இதற்கு மாறாக தங்களைப் பற்றி யாரும் விமர்சிக் கக் கூடாது, அப்படிப்பட்டவர்களை அடியோடு ஒழித்து விட வேண்டும் என்பது கடைந்தெடுத்த பாசீசம் ஆகும்!
பன்மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் உள்ள பரந்து பட்ட துணைக் கண்டமான இந்நாட்டில், ஆர்.எஸ்.எஸ். பாரதீய ஜனதா போன்ற இந்துத்துவ அமைப்புகள் கூறுவதென்ன?
என் மதம் - ஹிந்துமதம்
என் மொழி - சமஸ்கிருதம்
என் கலாச்சாரம் - ஹிந்து கலாச்சாரம்
என்ற ஆரிய சனாதன கலாச்சாரம் - மற்றவர்கள் இதற்கு அடி பணிந்து சென்றால் எங்கள் ஹிந்து ராஷ்டிரத்தில் - இந்து நாட்டில் அவர்களுக்கு இடம் உண்டு; இல்லையேல் அவர்கள் வெளியேற்றப்பட வேண்டியவர்களே என்பது எதைக் காட்டுகிறது?
எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையிலேயே இவர்களது எக்காளம் எப்படி இருக்கிறது?
பொதுவானவரான பிரஸ் கவுன்சில் தலைவரான (ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி) ஜஸ்டீஸ் மார்க் கண்டேய கட்ஜு அவர்கள் மோடிபற்றி சில கருத்துகளைக் கூறி விட்டாராம்!
அதனால் உடனே அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, பதவியை விட்டு அவரை உடனடியாக விலக்க வேண்டுமாம்!
இப்படி யார் கூறுகிறார்? மாநிலங்கள் அவையின் பா.ஜ.க. தலைவரும் - எதிர்க்கட்சித் தலைவருமான அருண்ஜெட்லிதான். அருண்ஜெட்லி ஒரு பிரபல வழக்கறிஞர்; முன்னாள் சட்ட அமைச்சர். அவரே கருத்துச் சுதந்திரத்தில் எவ்வளவு ஈடுபாடு கொண்டவராக உள்ளார் பார்த்தீர்களா?
பிரஸ் கவுன்சில் தலைவராகி விட்டதாலேயே திரு. மார்க்கண்டேய கட்ஜு அவரது கருத்துரிமையைத் தியாகம் செய்து விட வேண்டுமா?
அவர் ஒன்றும் அரசியல் கருத்துக்களைக் கூறிட வில்லை. மோடிபற்றி சில கருத்துக்களைக் கூறியதால் அவர் உடனே பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்றால், இவர்கள் நாளை ஆட்சிக்கு வந்தால், நாட்டில் ஜனநாயகம் வாழுமா?
குஜராத்தில், மோடி முதல்வராக இருந்து மதக் கலவரங்கள் நடந்தபோது, இராணுவம் சென்றபோதுகூட அதனைச் செயல்படாமல் தடுத்த காரணமாகத்தானே, அன்றைய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பேயி அவர்கள், மோடிக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜதர்மம் என்று ஒன்று உள்ளது; அதன்படி ஆட்சியிலிருப்போர் எல்லோருக்கும் பாதுகாப்புக் கொடுக்கத் தவறக் கூடாது என்று கருத்தை உள்ளடக்கிக் கூறினாரே - அதற்கு அருண்ஜெட்லிகள் என்ன பதில் கூற முடியும்?
கட்ஜு கூறியதற்கு காய்ந்து விழுகிறவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதி மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டுக்  கூறினாரே - அப்பொழுது எங்கே போனார்கள் இந்த அருண்ஜெட்லிகள்? வளர்ச்சி என்றால் குஜராத்தில் ஏற்பட்ட தொழிற்சாலைகளும், சாலைகளும் மட்டும் தானா? மக்கள் மத ரீதியாகப் பிரிக்கப்பட்டு, குறி வைத்துக் கொன்று குவிக்கப்பட்டால், எரிக்கப்பட்டால், அது வளர்ச்சியா? வாழ்வா?
அதனால்தானே இன்னமும் அமெரிக்கா, மோடிக்கு விசா வழங்க மறுத்து வருகிறது?
சிறைச்சாலையில்கூட ஏ வகுப்பு உண்டு; வேளை தவறாமல் உணவு உண்டு;  வெளியில் கிடைக்காத பாதுகாப்பு உண்டு. அதற்காக சிறை வாழ்க்கையை வாழ எந்த சுதந்திர மனிதனாவது விரும்புவானா?
மோடிமீது கட்ஜு வைத்த குற்றச்சாற்று மிகவும் சரியானதே. விமர்சனத்தை சந்திக்க இயலாத கோழைகள் கூக்குரலிடுவதை அலட்சியப்படுத்த வேண்டும்.



இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...