Monday, January 30, 2012

சனீஸ்வர சக்தி - சயண்டிபிக் பீலா


"என்னங்க சயன்ஸ்? சக்திக்கு முன்னாடி எதுவும் நிற்க முடியலையே?
எந்த சக்தி?
சனி பகவானோட சக்தியைத்தான் சொல்றேன். நாசா காரன் அனுப்பிச்ச சேட்டிலைட்டே சனி பகவான் சக்தியினால் நின்னு போயிடுதாம் சார்! எல்லா பேப்பர்லயும் வந்திருக்கே... அமெரிக்காகாரனே ஒத்துனுட்டான் சார்.. தந்தியில பார்க்கல நீங்க?

என்று வழக்கமாக தினமலரைப் பரிந்துரைக்கும் மாமாக்கள் தினத்தந்தியைச் சுட்டிக் காட்டிச் சொல்லும்படி ஒரு செய்தி வெளிவந்தது.
அப்படியென்ன புதுமையான செய்தி என்று யோசித்துப் பார்த்தால் தெரியும் எலி அம்மணமாக ஓடும் கதை!
அமெரிக்க செயற்கைக்கோள்களைத் திணற வைத்த திருநள்ளாறு சனி பகவான் என்று ஒரு செய்தி அண்மையில் தினத்தந்தியில் வெளிவந்தது. இது நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு என்ற தலைப்பில் பரவி வந்த பிரபல மின்னஞ்சல்! இதென்னடா கொடுமையா இருக்கு? திருநள்ளாறு மட்டுமா தண்ணி காட்டுது..? எல்லா ஊரும்தான் தண்ணி காட்டுது..!  தண்ணீரை மட்டுமா காட்டுது? என்னென்ன வளங்கள், கனிமங்கள் இருக்கு-ன்னு நாசா மட்டுமில்ல எல்லா நாடுகளும் அனுப்புற செயற்கைக் கோள்களும்தான் காட்டுது! படத்தோட காட்டுது! என்று யோசித்துவிட்டு தலைப்பைத் தாண்டி உள்ளே போனால்தான் தெரியும் தண்ணி காட்டுவது யாருக்கு? என்று! (வேறு யாருக்கு? படிக்கும் வாசகர்களுக்குத்தான்).
அளந்துவிடப்பட்டிருக்கும் அந்தக் கதையை முழுமையாகப் போட்டு பக்கத்தை வீணடிக்க விரும்பாததால் கதைச் சுருக்கம் மட்டும் இங்கே: உலகில் எண்ணற்ற செயற்கைக்கோள்கள் இருக்கின்றன. அவை இந்தியாவின் திருநள்ளாறு கோவிலைக் கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்து நின்று மீண்டும் இயங்குகின்றன. ஆனால் செயற்கைக்கோளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இதை அறிந்த நாசா விஞ்ஞானிகள் திருநள்ளாறு வந்து ஆய்வு செய்தும் ஒன்றும் புரியாததால், சனி பகவானின் சக்தியை வியந்து வணங்கிச் சென்றார் கள். நீங்கள் சனிபகவானை வணங்கிவிட்டீட் களாஆஆஆ? இடையிடையே மானே, தேனே, பொன்மானே எல்லாம் போட்டு வந்தது அந்தச் செய்தி.
இந்தத் தகவல் உண்மையா என்பதைப் பார்க்கும் முன்பு, அது எப்படிப் பரவியது என்பதைப் பார்ப்போம். 2011 டிசம்பர் இறுதியில் தினத்தந்தியில் இந்தச் செய்தி வெளியானது. அதற்கு ஓரிரு வாரங்கள் முன்னதாக ராணி வார இதழில் வெளியானது. அதற்கும் கொஞ்சம் முன்னால் நவம்பர் மாதத்தில் இணைய தளங்களில், முகநூல், மின்னஞ்சல் போன்றவற்றில் பரப்பப்பட்டது. ஓஹோ.. அப்படியென்றால் இந்தப் பிரச்சினை அண்மைக் காலத்தில்தான் நாசாவால் வெளியிடப்பட்டிருக்கும் என்று யோசிக்கிறீர்களா? இல்லை... ஏனெனில் அதற்கு முன்பு 2011-ன் தொடக்க நாட்களில் தமிழ் பிராமின்ஸ் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு, ஒரு ரவுண்ட் பரவவிடப்பட்டிருக்கிறது இந்த மின்னஞ்சல். ஓஹோ.. அப்போ 2011 தான் என்று முடிவெடுத்துவிடாதீர்கள். 2009இ-ல் ஒரு சிலரால்; 2008இ-ல் ஒரு சிலரால், 2007-இல் ஒரு சிலரால் அவ்வப்போது வெளியிடப்பட்டிருக்கிறது.
2007-இல் இருந்து பரப்பப்படும் இந்தத் தகவலுக்கு அந்த மூலக் கட்டுரை ஆதாரமாகச் சொல்வது 2005-_2006 வாக்கில் ஜூனியர் விகடனில் வெளியானதாகச் சொல்லப்படும் செய்தி. இப்போது புரிந்திருக்குமே இதன் உண்மைத் தன்மை! 2005-_2006 வாக்கில் என்று குத்துமதிப்பாகச் சொல்லி, எந்த செயற்கைக்கோள் என்று தெளிவாகச் சொல்லாமல், எப்போதோ நாசா அதிகாரிகள் வந்தார்கள் என்று பொத்தாம்பொதுவாக அள்ளிவிடும் பீலாதான் இந்த வதந்தியின் மூலம்!
அப்படி ஒரு வேளை 2005_-2006இ-ல் இந்தத் தகவல் வெளிவந்து அது உண்மையாயிருக்குமானால் விட்டிருப்பார்களா ஜோசியக்கார, இந்துப் பிரச்சாரக, கதாகலட்சேப, இந்துமுன்னணி வகையறாக்கள்? மெதுமெதுவாக கசியவிடப்பட்டு, உறுதியான செய்தி என்பதுபோல் பரப்பப்படும் வதந்திதான் தினத்தந்தியில் வெளிவந்துள்ளது. இன்று இரவு தூங்கினால் கல்லாக மாறிவிடுவீர்கள் என வந்த செல்பேசித் தகவலால் இரவு முழுவதும் தூங்காமல் சாலையில் விழித்திருந்த மக்கள் வாழும் நாடு இது! (ஜனவரி 2, 2012 - உத்திரப்பிரதேசம்) ஒரு வேளை இப்படி ஒரு அற்புதம் நடக்கும் வாய்ப்பு அந்தக் கோவிலுக்கு இருக்குமானால் விட்டுவைத்திருப்பார்களா?
எந்த செயற்கைக்கோள் பாதிக்கப்பட்டது? எப்போது பாதிக்கப்பட்டது? இது குறித்து நாசா என்ன சொல்லியிருக்கிறது? அதற்கான ஆதாரம் என்ன? நாசா விஞ்ஞானிகள் என்ன ஆராய்ச்சி செய்தார்கள்? எப்போது செய்தார்கள்? எந்தக் கேள்விக்காவது தெளிவான பதில் உண்டா?
சரி, செய்தியோ, வதந்தியோ...இதில் கூறப்பட்டுள்ளது போல் நடக்க சாத்தியமுள்ளதா என்பதைப் பற்றிச் சிந்திப்போம்!
ஒன்று மட்டும் உண்மை - இந்த வதந்தியைப் பரப்பியவர்களுக்கு செயற்கைக்கோளைப் பற்றியும் தெரியவில்லை; சனிக்கோளைப் பற்றியும் தெரியவில்லை.
தற்போது பூமியைச் சுற்றிய நமது வான்வெளிப்பகுதியில் 23000 முதல் 26000 வரையிலான மனிதன் அனுப்பிய தற்போது செயல்படும், செயல்படாத செயற்கைக்கோள்கள், செயலிழந்த பாகங்கள், ராக்கெட் உள்ளிட்ட பொருட்கள் சுற்றிவருகின்றன. செயற்கைக்கோள்கள் இயங்கும்விதம் மிக எளிதான நியூட்டனின் விதி! ஒன்றையொன்று முட்டிக் கொள்ளாமல், ஈர்ப்பு விசையின் காரணமாக இயங்கிவரும் இயற்கைக் கோள்களைப் போலத்தான் செயற்கைக்கோள்களும் செயல்படுகின்றன. மய்ய விலக்குவிசை என்று சிறு வயதில் படித்திருப்போம். எதிர் எதிராக கையைப் பிடித்துக் கொண்டு இருவர் சுற்றி விளையாடும்போது ஒருவரின் பிடி தளர்ந்தால் என்ன நடக்கும்? அதுதான் நடக்கும் செயற்கைக்கோள் ஸ்தம்பித்தால்! நிலைநிறுத்தப்பட்ட தனது சுற்றுப்பாதையிலிருந்து ஏதோ ஒரு விசை செயற்கைக்கோளை நிறுத்துமேயாயின் அது பூமியின் காற்று மண்டலத்திற்குள் வேகமாகக் கீழறங்கத் தொடங்கும். பிறகு கல்பனா சாவ்லா மறைந்த கொலம்பியா விண்வெளி ஓடத்திற்கு என்ன நேர்ந்ததோ அதே போல எரிந்து துகள்களாகிவிடும்.
மூன்று வினாடி ஸ்தம்பித்தால் தனது சுற்றுப்பாதையிலிருந்து இறங்கும் இடைவெளியை செயற்கைக்கோளால் மீண்டும் எட்டமுடியாது. அதை, சரியான இடத்தில் உந்தித் தள்ளுவதற்கு ராக்கெட் இருக்காது.
இதையெல்லாம் கேட்கத் தொடங்கியது உடனே சிலர் ஸ்தம்பிப்பது என்றால் சுற்றிக் கொண்டேதான் இருக்கும்; அதில் பிரச்சினை இல்லை; அதனுடைய கருவிகள் இயங்காமல் இருக்கும் என்று சமாளிப்பார்கள். அப்போதே இவர்களின் குட்டு வெளிப்பட்டுவிடும். ஸ்தம்பிக்கிறது என்பவர்கள் கருவிகள் இயங்காது என்று இறங்கிவருவார்கள். அப்புறம் அப்படியே கருவிகள் இயங்குகிறதோ இல்லையோ, திருநள்ளாறிலிருந்து வெளிப்படும் கதிர்கள் விண்ணைக் கடந்து சென்று செயற்கைக்கோளை அடைவதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்றெல்லாம் தரை டிக்கெட்டுக்கு இறங்கிவருவார்கள்.
இது குறித்து எழுதியுள்ள ஒரு வலைப்பதிவர் (aalunga.blogspot.com) சரியான கேள்வி ஒன்றைக் கேட்டுள்ளார். மின்னணுக் கருவிகள் மட்டும் இயங்காது என்றால் செயற்கைக்கோளிலிருந்து படமெடுக்கும் கருவியும் செயல்படாது அல்லவா? கூகிள் மேப் தளங்களில் பிறகெப்படி திருநள்ளாறு கோவிலின் படங்கள் கிடைக்கின்றன? என்று!
அப்படி கதிர் வீச்சு வெளிப்பட்டு, செயற்கைக்கோள்கள் இயங்காது என்ப தெல்லாம் இருக்கட்டும். செயற்கைக்கோளையே செயலிழக்க வைக்கும் திருநள்ளாறு பவர் பிளாண்ட் பக்கத்தில் இருக்கும் டிஷ் ஆண்டனாக் களை என்ன செயல்பட அனுமதிக்கிறது? செயற் கைக்கோளே இயங்காது என்றால் செயற்கைக் கோளிலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி களின் கதி என்ன? அங்கே தொலைக்காட்சிகள் எதுவும் இல்லையா? அவை இயங்குவதில்லையா? யாரும் பார்ப்பதில்லையா? செல்பேசிகளின் கதி என்ன? இவர்கள் சொல்வதைப் பார்த்தால் அணு உலைக் கதிர்வீச்சு ஆபத்துக்கு முன்பு இதற்காகப் போராட வேண்டும் போலிருக்கிறதே! சரி சனிக்கோளைப் பற்றிப் பார்ப்போம். சனி பெயர்கிறதா? சனிக்கோள் ஏதோ ஓரிடத்திலேயே நின்று கொண்டிருந்துவிட்டு கிரிக்கெட்டில் ஒரு ஓவர் முடிந்ததும் பிட்ச் அம்பயர், லெக் அம்பயராக இடம்பெயர்வதைப் போல அல்லவா சனிப்பெயர்ச்சிக்காரர்கள் சொல்கிறார்கள்? அது தொடர்ந்து சுற்றி நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது தனது சுற்றுவட்டப் பாதையில். திருநள்ளாறு கோவிலின் மீது மட்டும் கண்ணுக்குத் தெரியாத கருநீலக் கதிர்கள் விழுந்துகொண்டே இருக்கிறதாம். ஒரு வேளை அந்த இடத்தில் வானத்துக் கூரையில் ஓட்டை இருக்குமோ? அப்படியென்றால்   கதிர்கள் விழும் இடம் ஆபத்தானதல்லவா? ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து கருநீலக் கதிர்கள் பாய்ந்துவிடக் கூடாது. அது மனித குலத்திற்கு ஆபத்து என்றுதானே அறிவியல் உலகம் அதைத் தடுக்கப் போராடுகிறது?
திருநள்ளாறில் சனீஸ்வர பகவான் கோவில் இருப்பதால் அங்கு கருநீலக்கதிர்கள் விழுகின்றன என்றால், அங்கே மனிதர்கள் செல்லலாமா? அந்தக் கதிர்களை நிறுத்த அக்கோவிலை இடித்துத் தள்ளிவிட வேண்டாமா?
கொஞ்ச நஞ்சம் தெரிந்திருக்கும் அறிவியல் சொற்களைத் தெரிந்து வைத்துக் கொண்டு கதைகட்டி, கோவிலுக்குப் பெருமை தேடி, அறிவுக்குப் பாடை கட்டுகிறார்களே! அறிவியலை வளர்ச்சிக்குப் பயன்படுத்தாமல், அறிவியலின் பெயராலேயே மூடக் கருத்துகளைப் பரப்ப வல்லவா பயன்படுத்திக் கொண் டிருக்கிறார்கள். அறிவியலார்கள் என்ன சொல்கிறார்கள்?
அப்படியெல்லாம் உண்மையில் செயற்கைக் கோள்களுக்குப் பாதிப்பு நடக்கிறதா என்று பேஸ்புக்_-கில் கேட்கப்பட்ட கேள்விக்கு 2011 அக்டோபர் 12 அன்று பதில் அளித்த அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள், “no, to the best of my knowledge it is not true” (என்னுடைய அறிவுக்கெட்டிய வரையில் அது உண்மையில்லை) என்று தெளிவாக பதில் சொல்லியிருக்கிறார். அறிவியல் வளர்ந்துள்ள இந்தக் காலகட்டத்திலேயே இப்படிக் கதைகளை அள்ளிவிடும் இந்தக் கும்பல், அறிவியல் விழிப்புணர்வில்லாத காலத்தில் எப்படியெல்லாம் அள்ளிவிட்டிருக்கும்? வெறுமனே கதையை மட்டும் சொல்லிவிட்டுப் போய்விடமுடியாது. அதற்கொரு அறிவியல் முலாம் பூச வேண்டும் என்ற நிலை பக்தியாளர்களுக்கு வந்திருப்பதே பகுத்தறிவாளர்களின் முதல் கட்ட வெற்றி! அறிவியலால் நிரூபிக்கப்பட வேண்டும் என்ற கட்டாயத்திற்கு அவர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால், எந்தக் காலத்திலும் மூடக் கருத்துகளை அறிவியல் ஏற்காது. பகுத்தறிவு இறுதி வெற்றியைப் பெற்றே தீரும்.

Sunday, January 29, 2012

பெரியார் எழுதிய - பதிப்பித்த நூல்கள்


(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை)
நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்.
தந்தை பெரியார் கருத்தாளர் என்பது அறியப்பட்ட உண்மை என்றாலும், அவர் எழுத்தாளர் அல்லர் என்று சொல்ல முடியாது; அன்னை நாகம்மையார் மறைந்த போதும், ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் மறைந்தபோதும் அவர் எழுதிய எழுத்துகள் இரங்கல் இலக்கிய வரலாற்றில் என்றென்றுமே பேசப்படும்.
தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட குடிஅரசு இதழின் 16 ஆம் ஆண்டு தொடக்க இதழில் (18.8.1940, பக்கம் 10) எழுதும் அவர் சிங்க நடை இதோ:
பயங்கரமான பாதை!
பயமா அது என்னை என்ன செய்யும்?
சறுக்கு நிலம்! சந்திரனில்லா இரவு!!
காலை ஊன்றி நடப்பேன்!
கண்ணை அகலத் திறந்து பார்ப்பேன்!
பசியும், தாகமும் வாட்டும்
கிடைத்ததைப் புசிப்பேன் -
புதர்களிலிருந்து பலர் வெளிவந்து தாக்குவர்!
நான் கோழையல்ல!!
உனக்கு முன் பலர் இப்படித்தான் சென்று மாண்டனர்!!
நானும் அந்த வழியே செல்லுகிறேன் உயிர் வெல்லமல்ல!
நீ வெற்றி பெறுவது கஷ்டம்!
நான் என் கடமையைச் செய்கிறேன்!
உருவகமாக எழுதப்பட்ட தந்தை பெரியாரின் இந்த எழுத்துக்களில் துடிக்கும் துணிவை, வீரத்தை மனக்கண் முன் காண்கிறோமே!
எதைச் சொன்னாலும், எழுதினா லும் அவை பெரியாரின் தனித் தன்மையான சுய சிந்தனைகளாகும்.
தன்னைப்பற்றி பெரியார் சொல் கிறார்:
நான் எனது கொள்கைக்கு - பேச்சுக்கு எந்த மேற்கோளையும் காட்டி விளக்குபவன் அல்ல. அப்படி அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று தேடித் திரிபவர்களின் செயல் அறிவுடைமை ஆகாது. ஆனால், நான் கூறிய கருத்துக்கு ஆதரவாக இன்னாரும் கூறியுள்ளார் என்று எடுத்துக்காட்ட வேண்டுமே அல் லாது, இன்ன இன்னார் இன்ன இன்ன கூறியுள்ளார் - ஆகவே நான் கூறுகிறேன் என்று எடுத்துக்காட்டக் கூடாது. (விடுதலை, 26.2.1961)
என்று கூறும் தன்னிலை விளக் கத்தைக் கவனிக்கத் தவறக்கூடாது.
தந்தை பெரியார் அவர்களை அறிந்தவர்களுக்கு இச்சொற்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தாது.
சென்னை சட்டக் கல்லூரியின் இயக்குநரும், பிற்காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியுமான ஏ.எஸ்.பி. அய்யர் - தந்தை பெரியார் கலந்துகொண்ட சென்னை சட்டக் கல்லூரி முத்தமிழ் விழாவுக்குத் தலைமை ஏற்றபோது சொன்ன கருத்துக் கணிப்பு முக்கியமானது (10.2.1960).
கீழை நாடுகளைப்பற்றி பெர்ட் ரண்ட் ரசல் ஒரு நூலில் எழுதும் போது, இங்குள்ளவர்கள் எதை எழுதினாலும், பேசினாலும் மேற் கோள்காட்டிப் பேசுவதுதான் வழக்கம். தனது கருத்து என்று வெளியிட மிகவும் தயங்குவார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். நான் அறிந்தவரையில் மேற்கோள் காட்டிப் பேசாமல் தன் அறிவையே முன்னி றுத்திப் பேசும் தனித்த சிந்தனை யாளர் பெரியார் ஒருவர்தான் என்று குறிப்பிட்டார் நீதிபதி ஏ.எஸ்.பி. அய்யர் அவர்கள்.
திருக்குறளைப்பற்றி சொல்லும் பொழுதுகூட நான் சொன்ன கருத்தை திருவள்ளுவர் சொன்னார் என்று சொல்வாரே தவிர திருவள்ளு வர் கருத்தைத்தான் நான் சொல்லு கிறேன் என்று சொல்லமாட்டார் சிந்தனைச் சிற்பியான பெரியார்.
பேச்சு என்று எடுத்துக் கொண் டாலும், பெரியாருக்கு நிகர் பெரி யார்தான்.
கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர் கள் மிக நேர்த்தியாக தந்தை பெரி யார் அவர்களின் பேச்சை படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் இராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டும்தான் மூன்று மணி நேரம் உட்கார்ந்து கேட்க முடிவுமென்று தயங்காமல் கூறுவேன். அவர் உலகானுபவம் என்னும் கலாசாலையில் முற்று முணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளும், உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக் கின்றனவோ நானறியேன் என்று தந்தை பெரியார் அவர்களின் பேச்சுக் குறித்து கல்கி கூறியுள் ளார்.
பத்திரிகைத் துறையில் பழுத்த அனுபவசாலி பெரி யார்; 1925 ஆம் ஆண்டி லேயே குடிஅரசு இதழைத் தொடங்கி நடத்தியவர்; ஒரு கட்டத்தில் அனைத்தையும் அவரே எழுதிக் குவித்த நிலைகள் உண்டு.
அவரால் தோற்றுவிக் கப்பட்ட ஏடுகளின், இதழ் களின் பெயர்கள் தனித் தமிழ் மட்டுமல்ல; தனித்தன்மையும் கொண்டவையாகும்.
குடிஅரசு, பகுத்தறிவு, புரட்சி, விடுதலை, உண்மை என்ற பெயர்கள் அதனைப் பறைசாற்றும்.
வணிக நோக்குக்காக அவர் ஏடு நடத்தியது கிடையாது. கருத்துப் பிரச்சாரம்தான் அதன் முதன்மையான நோக்கமாகும்.
நீங்கள் எந்தப் புத்தகத்தைப் படித்தால்தான் என்ன பயன்?
படிப்பு என்பது அறிவு உண்டா வதற்கு. ஆனால், நீங்கள் படிக்கும் புத்தகம் எல்லாம் மடமை வளர்ப் புக்கும், மூடநம்பிக்கை ஏற்படவும் பயன்படுகிறது. அதனால்தான் இன்றும் நம் மக்கள் பகுத்தறிவற்று இருக்கிறார்கள்...
நீங்கள் குடிஅரசு பதிப்பகப் புத்தகங்களை வாங்கிப் படித்தால் கட்டாயம் பகுத்தறிவுவாதி ஆகிவிடு வீர்கள்.
இந்தப் புத்தகம் மதம், ஜாதி, நாடு, அரசியல் துறைகளில், அவற்றில் உள்ள புரட்டுகளை விளக்கி, உங் களைப் பகுத்தறிவுவாதிகளாக ஆக்கும். விலை மிகமிக மலிவுக்கு பொது நலத்தை முன்னிட்டு, நட்டத்திற்குப் பதிப்பிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார் பெரியார் (1962).
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் மற்றும் திராவிடர் கழக வெளியீடுகள் இன்றுவரைகூட இந்த அடிப்படைத் தடத்தில்தான் பயணிக் கின்றன.
கருத்துப் பிரச்சார இலாபம்தான் இந்த வெளியீடு களைக் கொண்டு வருவதன் அடிப்படை நோக்கமாகும்.
பெரியார் அவர்கள் பொதுக்கூட் டங்களில் பேசி முடித்து, வாகனத்தில் ஏறும்போது அவர் கேட்கும் முதல் கேள்வி, இன்றைக்கு எவ்வளவு ரூபாய்க்குப் புத்தகங்கள் விற்றன? என்பதுதான் அந்தக் கேள்வி.
பெருங்கூட்டம் இருந்து நூல்கள் விற்பனை குறைவாக இருந்தால், அவர் கருத்து பிரயோசனமற்ற கூட்டம்; மக்கள் கூட்டம் குறைவாக இருந்து நூல்கள் விற்பனை அதிகமாக இருந்தால், பயனுள்ள கூட்டம் என்பது அய்யாவின் கணிப்பு!
நூல்கள் பரவுதல் மூலம்தான் மக்கள் மத்தியில் கருத்துப் போய்ச் சேரும் என்பது பெரியார் அவர்களின் கருத்துக் கணிப்பாகும்.
இலட்சியத்தை நிறைவேற்றுவதில் பெரியார் கண்ட இயக்கத்தின் அணுகுமுறைதான் இரண்டு.
ஒன்று பிரச்சாரம் - மற்றொன்று போராட்டம். சுவர் கடிகாரத்தின் நடுத்தண்டு அசைவது போன்றது அது.
பெரியார் பேசி, எழுதி வெளிவந்த நூல்கள் நீண்ட பட்டியலுக்கு உரிய வையாகும்.
அறிவு விருந்து
கடவுள் மறுப்புத் தத்துவம்
வைக்கம் வீரர் சொற்பொழிவு
இராமாயண ஆபாசம் (முதற்பதிப்பு)
கர்ப்ப ஆட்சி
ஈ.வெ.ரா. இலங்கை உபந்யாசம்
ஈ.வெ.ரா. சீர்திருத்த மாநாட்டு உபந்யாசம்
சமதர்ம உபந்யாசம்
சோஷியலிசம்
சோதிடப் புரட்டு
பொதுவுடைமைத் தத்துவங்கள்
பெண் ஏன் அடிமையானாள்?
தமிழர் - தமிழ்நாடு - தமிழர் பண்பாடு
பிரகிருதிவாதம்
மதம் என்றால் என்ன?
குடிஅரசுக் கலம்பகம் (முதற்பாகம்)
சோதிட ஆராய்ச்சி
தமிழ்நாடு தமிழருக்கே!
திருவாரூர் மாநாட்டுத் தலைமையுரை
இனிவரும் உலகம்
இராமாயணப் பாத்திரங்கள்
தமிழ் இசை நடிப்புக் கலைகள்
கிராமச் சீர்திருத்தம்
உண்மைத் தொழிலாளி யார்?
தொழிலாளியின் இலட்சியம் என்ன?
இன இழிவு நீங்க இஸ்லாமே நன் மருந்து
தத்துவ விளக்கம்
விழாவும் நாமும்
தில்லையில் பெரியார்
சுயமரியாதை இயக்கத்தைத் தோற்று வித்தது - ஏன்?
திராவிடர் கழக இலட்சியம்
திராவிடர் ஆரியர் உண்மை
மொழி - எழுத்து
தூத்துக்குடி மாகாண மாநாட்டுத் தலைமை உரை
இந்திப் போர் முரசு (பெரியார் ஈ.வெ.ரா. மற்றும் தலைவர்கள்)
மொழியாராய்ச்சி
திருக்குறளும் திராவிடர் கழகமும்
மேல்நாடும் கீழ்நாடும்
புரட்டு, இமாலயப் புரட்டு!
புரட்சிக்கு அழைப்பு
முதலாளி தொழிலாளி ஒற்றுமைப் பிரச்சினை
சிந்தனைத் திரட்டு
கடவுள்
புராண ஆபாசங்கள்
அய்க்கோர்ட் அவதூறு வழக்கில் பெரியார் ஸ்டேட்மெண்ட்டும் தீர்ப்பும்
சித்திரபுத்திரன் எழுதுகிறார்
போர்ச் சங்கு
வெளியேறு!
நாடகமும், சினிமாவும் நாட்டை நாசமாக்குகின்றன
சுயமரியாதைத் திருமணம் ஏன்?
வாழ்க்கைத் துணைநலம்
நீதி கெட்டது யாரால்?
சித்திரபுத்திரன் கட்டுரைகள்
ஜனநாயகம்
அறிவுச் சுடர்
வாழ்க்கைத் துணைநலம்
தாய்ப் பால் பைத்தியம்
ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள்
அய்க்கோர்ட்டின் நீதிப்போக்கு (இரு பாகங்கள்)
தமிழ்நாடா? திராவிட நாடா?
மனுநீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி
ஆச்சாரியார் ஆத்திரம்
தீண்டாமையை ஒழித்தது யார்?
மறுத்தலும் பகுத்தறிவும்
கழகமும் துரோகமும்
புராணம்
மதுவிலக்கின் இரகசியங்கள்
தமிழருக்குச் சோதனை காலம்
ஏன் இல்லை - எல்லோருக்கும் கல்வி, உணவு, உடை, வீடு?
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி
அறிவுச் சுடர்
மதச் சார்பின்மையும், நமது அரசும்
கடவுளும், மனிதனும்
கடவுள் குழப்பம்
நமது இன்றைய நிலையும் - பரிகாரமும்
புத்த நெறி
சுயநலம் பிற நலம்
கடவுள் ஒரு கற்பனையே!
பெரியார் பேசுகிறார்
கோயில் பகிஷ்காரம் ஏன்?
உயர் எண்ணங்கள்
பெரியாரின் மரண சாசனம் (இறுதிச் சொற்பொழிவு) - என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு.
பெரியார் பதிப்பித்த நூல்கள்
ஞானசூரியன்
இந்தியாவின் குறைபாடுகள் Temple Entry (English)
லெனினும் மதமும்
கடவுளும், பிரபஞ்சமும்
கைவல்யம் அல்லது கலைக்கியானம்
இராமாயண ஆராய்ச்சி
பாரத ஆராய்ச்சி
மேயோ கூற்று மெய்யா, பொய்யா?
இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு
சுயமரியாதைப் பாடல்
சுயமரியாதைத் தாலாட்டு
பர்னாட்ஷா உபந்யாசம்
போல்ஷ்விக் முறை
மதப் புரட்சி (ஜோசப் மெக்கேல் - மொழி பெயர்ப்பு)
முன்னேற்றத்திற்கு மதம் முட்டுக்கட்டை
மதம் மக்களுக்குச் செய்த நன்மை என்ன?
பாதிரியும், பெண்களும், பாவமன்னிப்பும்
மதமும் விஞ்ஞான சாஸ்திரமும்
பிரபஞ்ச உற்பத்தி
நான் ஏன் கிறிஸ்தவனல்ல? (ரசல் - மொழி பெயர்ப்பு)
நான் சம்சயவாதி ஆனதேன்? - இங்கர்சால்
பகத்சிங்கின் நான் நாத்திகன் ஏன்? (ப. ஜீவானந்தம் மொழி பெயர்ப்பு)
பகுத்தறிவு அல்லது கத்தோலிக்க குருவின் மரண சாசனம் (மூன்று பாகங்கள்)
கைவல்ய சுவாமியார் கட்டுரைகள் (இரண்டு பாகங்கள்)
தமிழர் தலைவர் (பெரியார் வரலாறு)
சாதிக் குறி (தமிழ்)
Caste Mark 111  (ஆங்கிலம்)
Periyar - A Pen Portait (English)
பிர்லா மாளிகை மர்மங்கள்
சாதியை ஒழிக்க வழி
அப்பரும் சம்பந்தரும்
லெனினும் மதமும்
மார்க்ஸ் - ஏஞ்சல்ஸ் அறிக்கை
பொதுவுடைமை வினா-விடை
பலசரக்கு மூட்டை (குத்தூசி தொகுப்பு நூல்கள் - இரு பாகங்கள்)
அகத்தியர் ஆராய்ச்சி
மெய்ஞானமுறையும் மூட நம்பிக்கையும் (2 பாகங்கள்)
பெரிய புராண ஆராய்ச்சி
கோயில்கள் தோன்றியது ஏன்?
திருக்குறளும் - பெரியாரும்
நரகம் எங்கே இருக்கிறது?
கடவுள் தோன்றியது எப்படி? (இரண்டு பாகங்கள்)
கடவுளர் கதைகள்
உண்மை இந்து மதம் எது?
பேய் - பூதம் - பிசாசு
இரண்டு வழிகள்
பெரியார் ராமசாமி அவர்களைப் பற்றி....
மதப் புரட்சி
ஊழல் எங்கே? (நகர்வாலா மோசடி)
பகுத்தறிவு மணம்
கலியுக சமாதானம்
நமது குறிக்கோள்
இங்கர்சாலின் ஜீவிய சரித்திரம்
இந்தி எதிர்ப்புப் பாடல்கள்
காரல் மார்க்ஸ்
பஞ்சமா பாதகங்கள்
இராவணப் பெரியார்
சமதர்மக் கீதங்கள்
வால்டையரின் வாழ்க்கைச் சரிதம்
விவாக விடுதலை
இந்திய மாதா
இங்கர்சால் பொன்மொழிகள்
புராண ஆபாசங்கள்
கடவுளை நிந்திக்கும் கயவர்கள் யார்?
கோவில் பூனைகள் (கோவை கிழார்)
நமக்கு வேண்டியது எது? சுயராஜ்யமா? சமதர்ம ராஜ்யமா? (மூன்று பாகங்கள்)
பெரியாரும் - இராமலிங்கரும்
பெரியார் ஒரு சகாப்தம்
கடவுள் தோன்றியது எப்படி?
(ஆங்கிலத்தில் கிராண்ட் ஆலன் தமிழில் பேராசிரியர் வெள்ளையன் மொழி பெயர்ப்பு)
இன்னும் ஏராளம் உண்டு.
ஓர் இயக்கத்தின் கொள்கையைப் பரப்புவதற்காக ஒரு நிறுவனத்தை நிறுவி அவற்றின் சார்பாக வெளியீடு களைக் கொண்டு வந்து மக்கள் மத்தியில் பரப்பும் பணியைத் திட்ட மிட்டுச் செய்த ஏற்பாடு தந்தை பெரியார் அவர்களுக்கே உரித்தான தாகும். அவர் செய்து வைத்த ஏற் பாடுகள் இன்றுவரை தொடர்ந்து கொண்டு இருக்கின்றன - மேலும் செழுமைப்படுத்தப்பட்டும் உள்ளன.
தந்தை பெரியார் அவர்களின் வெளியீடுகள் இரண்டு வகை யானவை. உயர் எண்ணங்கள் மலரும் சோலை என்று புரட்சிக்கவிஞரால் போற்றப் பெற்ற பெரியார் அவர்களின் சுயசிந்தனைக் கருத்துக்களைக் கொண்டவை ஒருவகை.
எடுத்துக்காட்டாக, தத்துவ விளக்கம், மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதவாதம், இனிவரும் உலகம் போன்றவை.
சோதனைக் குழாய்க் குழந்தை யைப்பற்றி  விஞ்ஞானிகள்கூட கற் பனை செய்திராத காலகட்டத்தி லேயே 1938இல் சிந்தித்துச் சொன்ன சமூக விஞ்ஞானி - தொலைநோக் காளர் பெரியார்.
இன்னொரு வகை நூல்கள் - எதிரிகளின் ஆயுதங்களைக் கொண்டே எதிரிகளைத் தாக்கி அழிக்கும் ஆதாரங்களைக் கொண்ட நூற்கள்.
எடுத்துக்காட்டாக தந்தை பெரி யார் அவர்களின் இராமாயணப் பாத் திரங்கள் மற்றும் இராமாயணக் குறிப் புகள். இதுவரை 50-க்கும் மேற்பட்ட பதிப்புகளாக இலட்சக்கணக்கில் மக்களிடம் போய்ச் சேர்ந்துள்ளன. இந்தியிலும், ஆங்கிலத்திலும், மராட் டியத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளி வந்துள்ளன.
இந்த நூலில் காணப்படும் ஆதா ரங்களை மூல நூல்களில் இருந்து எடுத்துக்காட்டி கூட்டங்களில் பெரியார் பேசுவார். அதன் விளைவு என்ன தெரியுமா? அந்த மூல நூல்களி லிருந்து அடுத்த பதிப்பில் மாற்றம் செய்யப் பட்டதும் உண்டு. அந்த மாற்றம் செய்யப் பட்ட நூல்களையும் பொதுக்கூட்ட மேடை களில் எடுத்துக்காட்டுவார்.
லாகூரில் ஜாட்-பட் தோடக் என்னும் ஜாதி ஒழிப்புச் சங்கம் நடைபெற்றது. அவர்கள் நடத்த இருந்த ஜாதி ஒழிப்பு மாநாட்டுக்குத் தலைமை வகிக்கும்படி அண்ணல் அம்பேத்கர் கேட்டுக்கொள்ளப் பட்டார். தலைமை உரையை எழுதி அனுப் பினார் அம்பேத்கர். அதில் கண்டுள்ள சில பகுதிகளை நீக்கி விடுமாறு அச்சங்கத் தார் கேட்டுக் கொண்டனர். அம்பேத்கர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தத் தலைமை உரையை, அம்பேத்கர் அவர் களிடமிருந்து ஜாதியை ஒழிக்கும் வழி என்னும் தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டவர் பெரியார். முதல் பதிப்பு 1936. பதினாறாம் பதிப்பாக 2010 இல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டது.
அம்பேத்கரின் கருத்துகள் தமிழ் நாட்டில் பெரும் அளவு பரவியதற்கு இந்நூல் முக்கிய காரணமாகும்.
இதழ் நடத்துவதில் பெரியார் கையாண்ட அறிவு  நாணயம் சாதாரணமானதல்ல.
திராவிடன் இதழுடன் குடிஅரசு இதழையும் தொய்வில்லாமல் கவனித்து வந்தார் பெரியார். குடிஅரசு விற்பனை வாரம்தோறும் பதினாயிரமாக உயர்ந்தது. அதனையும் அத்துடன் சேர்த்துத் திரா விடன் நாளிதழையும் அச்சிட வேண்டியி ருந்ததால், குடிஅரசு இதழின் பக்கங்கள் 16 ஆக குறைக்கவேண்டிய கட்டாயம் ஏற் பட்டது. இதனால் கட்டுரைகளும், செய்திகளும் வெளியிடுவது பாதிக்கப்படக் கூடாதே என்பதற்காக விளம்பரங்களைப் பாதி அளவாகக் குறைத்துக் கொண்டு விளம்பரம் தந்தவர்களுக்குப் பெரியார் வருத்தம் தெரிவித்தார். பெரியாரின் தொழில் நேர்மைக்கு இது ஒரு சான்று. விஷயங்களை நிறைவாகத் தரவேண்டும் என்பதற்காக யார்தான் விளம்பரங்களின் மூலம் வரும் வருமானத்தை இழக்க முன் வருவார்கள் தந்தை பெரியாரைத் தவிர?
ஏடுகளை நடத்தும்போது எந்த வகை யிலும் கொள்கை சமரசத்துக்கு இடம் தந்தவரல்லர் பெரியார் -அதுபற்றி அவர் என்ன சொல்லுகிறார்?
தமிழ் மக்களுக்குத் தேவையான சில கருத்துகளைச் சொல்லிப் பதிந்தாக வேண்டும். இன்று ஏற்றுக்கொள்ளா விட் டாலும், நாளை ஒரு நாள் ஏற்றுக்கொள் ளும் நிலை வரும். இக்கருத்துகளை சொல்லும் நிலையில், நான்தான் இருக் கிறேன். சொல்லவேண்டிய கருத்துகளை நானே எழுதி, நானே அச்சுக் கோர்த்து, நானே அச்சிட்டு, நானே படித்துக் கொள் ளும் நிலைக்குப் போனாலும் குடிஅரசை வெளியிட்டு, என் கருத்துகளை வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டியது எனது கடமை (குடிஅரசு, 10.6.1929) என்று கூறும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் இதழாளர் உலகிலும் - எவரும் நெருங்க முடியாத உயரத்தில் உயர் பண்புகளின் பெட்டகமாக ஒளி வீசிக் கொண்டிருக்கிறார்.
அவர்தம் 38 ஆம் ஆண்டு நினைவு நாளில் அம்மாபெரும் புரட்சியாளரின் சிந் தனைகளை வாசிப்போம் - சுவாசிப்போம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!








கவிஞர் கலி. பூங்குன்றன், 

பொதுச்செயலாளர்,
திராவிடர் கழகம்

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...