Tuesday, May 23, 2017

தந்தை பெரியார் சொன்ன மாற்று உணவு முறையே நோய்களைக் குணப்படுத்தும் “பேலியோ’’ உணவுமுறை!

ஆய்வுகள் தொடரப்படவேண்டியதும் அவசியமாகும்


சென்னை, மே 22- மக்களிடையே மிக வேகமாக பரவிவரும் பேலியோ உணவு முறை பற்றிய விளக்கவுரைக்கூட்டம் பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் நடைபெற்றது. இந்த உணவுமுறையா னது 1930ஆம் ஆண்டுகளிலேயே தந்தை பெரியார் அவர்கள் வேறு முறையில் சொல்லியிருக்கின்றார் என்பது குறிப் பிடத்தக்கது. ஆய்வுகள் தொடரப்பட வேண்டும்.
 
வரலாறு படைக்கும் பெரியார் நூலக வாசகர் வட்டம்!

பெரியார் நூலக வாசகர் வட்டம் 1.1-.1978இல் தொடங்கப்பட்டது. இவ் வமைப்பு 40ஆவது ஆண்டில் அடி யெடுத்து வைத்துள்ளது. இது எந்த சூழ்நிலையிலும் இடைநிற்காமல் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்த அமைப்பின் 2238 ஆவது நிகழ்ச் சியாக, இன்று உலகமெங்கும் பரபரப் பாக பேசப்பட்டும், ஏற்றுக்கொள்ளப் பட்டும் வருகிற “பேலியோ’’ உணவு முறை பற்றிய ஒரு கருத்தரங்கம் பெரி யார் திடலில் உள்ள அன்னை மணி யம்மையார் குளுமை அரங்கத்தில், ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது. வாசகர் வட் டத்தின் பொருளாளர் சேரன் அவர்கள் 18-.5.-2017 அன்று மாலை சரியாக 7 மணிக்குத் தொடங்கி வைத்தார். நிகழ்ச் சிக்கு திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர். கலிபூங்குன்றன் தலை மையேற்று சிறப்பித்தார். சிறப்புரை நிகழ்த்த வருகை தந்திருக்கும் சங்கர்(ஜி) அவர்களை உடுமலை வடிவேல் அறிமுகம் செய்துவைத்துப் பேசினார். பா.மணியம்மை அவர்கள் நன்றியுரை வழங்கினார். சிறப்புரையாளருக்கு துணைத் தலைவர் கவிஞர். கலிபூங் குன்றன் அவர்கள் ஆடைபோர்த்தி இயக்க நூல்களைக் கொடுத்து மரியாதை செய்தார்.

தந்தை பெரியாரின் தொலைநோக்கு!

அறிமுவுரைக்குப்பின்னர் கவிஞர் தலைமையுரையை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், திருச்சி தோழர் வி.சி. வில்வம் அவர்கள் இந்த உணவுமுறை யைப் பற்றி சிலமாதங்களுக்கு முன்னர் தனது கவனத்திற்கு கொண்டுவந்தபோது தான் பெரிதாக இதில் ஆர்வம் காட்ட வில்லை என்று குறிப்பிட்டுவிட்டு, காரணம்? அதற்கு ஆதாரம் வேண்டு மல்லவா? என்று அவரே இரட்டைக் கேள்விகளைக் கேட்டு, அதற்கு அவரே பதிலும் சொன்னார். அதாவது, திரா விடர் கழகத்தின் திருவாரூர் தோழர் ஒருவரை சமீபத்தில் தான் ஒரு கழக நிகழ்ச்சியில் சந்தித்ததாகவும், இந்த உணவு முறையைக் கைக்கொண்டு தனது அதிகளவிலான எடையைக் குறைத்துவிட்டதால், அவரே அவரது தம்பியைப்போல இருந்ததை தான் நேரில் கண்டு வியந்து அப்படியே அவ ரிடம் சொன்னதாகவும், மற்றொரு கழ கத் தோழர் சர்க்கரை நோய் காரணமாக தொடர்ந்து இன்சுலின் ஊசி போட்டுக் கொண்டிருந்தவர் இந்த பேலியோ உணவு முறையைப் பின்பற்றியவுடன், ஊசி போடுவதை அறவே நிறுத்திக் கொண்டதையும் குறிப்பிட்டு வியந்தார். அதைவிடவும் அவர் வியப்படைந்த ஒன்றைப் பற்றியும் குறிப்பிட்டார். அதாவது இன்றைக்கு பிரபலமாகியுள்ள இந்த உணவு முறையைப்பற்றி தந்தை பெரியார் 1930 ஆம் ஆண்டுகளிலேயே போகிற போக்கில் குறிப்பிட்டிருப்பது தான் அந்த வியப்புக்குக் காரணம்!

புறக்கணித்தவர்களும் ஏற்கும் மாற்று உணவுமுறை!

தொடர்ந்து சிறப்புப் பேச்சாளர் சங்கர் (எ) சங்கர்ஜி, இந்த உணவுமுறை பற்றிய வரலாற்றை அமெரிக்காவில் வசிக்கும் நியாண்டர் செல்வனில் தொடங்கி சுருக்கமாக எடுத்துரைத்தார். 
பிறகு இன்றைய நிலையில் எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் ஆண்டு முழுவதும், 24 மணி நேரமும் தங்கள் பணிநேரம்போக இந்த உணவு முறை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற் படுத்தி வருவதாகவும், அதனால் இன்று சுமார் 4 லட்சம் பேருக்கு மேல் இந்த உணவுமுறைக்கு மாறியுள்ளதா கவும், அதற்குரிய பலன்களைப் பெற் றுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த உணவுமுறைக்கு முதலில் இரத்தபரி சோதனை செய்து அதன் அடிப்படையில்தான் உணவு பரிந்துரைக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார். மனித இனம் வரலாற்றில் மாமிசம் சாப்பிட்டது வரையில் மனிதன் இன்றைக்கிருப்பது போன்ற நோய்கள் இல்லாமல்தான் வாழ்ந்திருக்கிறான். இந்த தானிய உணவுகளுக்கு மாறியபிறகுதான் நோய்கள் அதிகரித்தன என்பதைப்பற்றி விளக்கினார்.
 தொடக்கத்தில் கவிஞர். கலிபூங் குன்றன் அவர்கள் வியந்ததைப்போலவே நாங்களும் இதுகுறித்து நிறைய வியந்திருக்கிறோம். ஆனால் இன்று எங்களுக்கு இது சாதாரணமாக ஆகி விட்டது. இதனால் பலனடைந்தவர்கள் பலரும் நாள்தோறும் இதுகுறித்து முக நூலில் பதிவிட்டு வருவதாகவும் அதை அனைவரும் பார்க்கலாம் என்றும் சொல்லிவிட்டு, முக்கியமாக ஒன்றைக் குறிப்பிடவேண்டும் என்று பெண்க ளுக்கு இருக்கும் ஏராளமன நோய்க ளுக்கு இது அருமருந்தாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டு அதைப்பற்றிய விளக்கங்களை அரங்கத்தினர்முன் எடுத்துவைத்தார். அனைத்திற்கும் மக்கள் கைதட்டி வரவேற்புத் தெரிவித்தனர்.
 இதற்காக தொடக்கத்தில் தாங்கள் ஏராளமான விமர்சனங்களுக்கு ஆளான தாகவும், அப்படி தங்களை விமர்சனம் செய்தவர்களே இன்று தங்கள் குழுவில் இணைந்து பயன்பெற்று இதைப்பற்றி பிரச்சாரம் செய்துவருவதாகவும் குறிப் பிட்டார். இதுவரையில் பின்பற்றி வந் துள்ள உணவுமுறையால்தான் மனித னுக்கு பலவிதமான நோய்கள் வருவா தாகவும், பகுத்தறிவுப்படி மனிதன் வாழ்வாதாகயிருந்தால் நம் உடலுக்கு எது சரியான உணவு என்பதை ஆய்வு செய்து உண்ணவேண்டும். அதுதான் இந்த பேலியோ உணவுமுறை என்று எளிமையாக விளக்கினார். 
இது தொடர் பான கூடுதல் தகவல்களைப் பெறுவற்கு முகநூலில் தங்கள் குழுவின் முகவரி யைக் குறிப்பிட்டார். அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றோர் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதில்களை அளித் தார். விற்பனை செய்வதற்காகவே கொண்டுவரப்பட்டிருந்த புத்தகங்களை விருப்பத்துடன் மக்கள் ஏராளமாக வாங்கிச்சென்றனர்.

இந்துத்துவத்திற்கு எதிரான உணவுமுறை!

இறுதியாக பா.மணியம்மை தனது நன்றியுரையில், “மாட்டுக்கறியைச் சாப் பிட்டால் இந்து மதத்திற்கு விரோத மென்று காட்டுமிராண்டிகள் மாதிரி மதவாதிகள் மக்களைக் கொல்லும் இந்த காலகட்டத்தில் மாட்டுக்கறியை மாத்திரமல்ல, எல்லாவகையான கறியையும் சாப்பிடச் சொல்லும் இந்த உணவுமுறை மிகவும் சிறப்பானது.
’’ என்று கூறினார். நிகழ்ச்சியில் கழகத்தின் வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் குமாரதேவன், பெரியார் களம் தலைவர் இறைவி, பண்பொளி, கண்ணப்பன், திவாரி, பெரியார் பிஞ்சு நனிபூட்கை, கோவி.கோபால், பூவை செல்வி, திருக்குறள் இளங்கோவன், பொறியாளர் பத்மநாபன், தொழிலாளர் அணி மாநிலச் செயலாளர் செல்வராஜ், பெரியார் மாணாக்கன், தொண்டறம் ஆகியோரோடு ஏராளமான வாசகர் வட்டத் தோழர்கள் மற்றும் பொதுமக் களும் அரங்கு நிறையும் அளவுக்குக் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

மாநில உரிமைகளைப் பறிக்கும் மற்றொரு முயற்சி!

‘‘தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியலமைப்புச் சட்ட அதிகாரம் வழங்கும் 123- ஆவது சட்டத் திருத்த மசோதாவை வரவேற்கிறோம். ஆனால், அம்மசோதாவின் சில பிரிவுகள் மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கும்வகையில் அமைந்துள்ளன’’ என்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
அவரது பேட்டி
1. தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத் துக்கு அரசியலமைப்புச் சட்ட அதிகாரம் வழங்கும் மசோதாவை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
பிற்படுத்தப்பட்டோர் வாக்கு வங்கியை மனதில் வைத்தும்கூட இந்தத் திருத்தத்தைப் பிரதமர் மோடி கொண்டுவந்திருக்கலாம். ஆனால், திராவிடர் கழகமும் இன்ன பிற சமூகநீதி அமைப்புகளும் இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறோம். எனவே, இந்தச் சட்டத் திருத்தத்தை வரவேற்கிறோம். ஆனால், இச்சட்டத் திருத்தத்தில் சில விஷயங்கள் மோசமானவை. அதில் முக்கியமானது, மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கும், மாநில அரசுகளுக்கும் அதிகாரம் இல்லாத அளவுக்கு அனைத்து அதிகாரங்களுமே குடியரசுத் தலைவரிடம் கொடுக்கப்பட இருப்பதுதான். குடியரசுத் தலைவர் முடிவுசெய்வார் என்றால், அந்த அதிகாரத்தை மத்திய அரசே எடுத்துக்கொள்கிறது என்பதுதான் அர்த்தம். எனவே, மாநிலங்கள் உரிமை பறிக்கப்படுமோ என்ற அச்சத்துக்கு இடமளிக்காதவகையில், எந் தெந்தப் பகுதிகள் பிரச்சினைக்கு உரியவையாக இருக்கின்றனவோ அவற்றை விட்டுவிட்டு, இச்சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும்.
2. தற்போது செயல்பட்டுவரும் பிற்படுத்தப்பட் டோருக்கான தேசிய ஆணையத்தின் செயல் பாடுகள் திருப்தி அளிக்கவில்லையா?
மண்டல் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையிலான அரசாணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்திரா சஹானி வழக்கில் வழங்கப் பட்ட தீர்ப்பின்படி, 1994-இல்தான் மாநில அளவிலும் மத்தியிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக ஆணை யங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், அவற்றுக்கு அரசியலமைப்புச் சட்ட அதிகாரம் இல்லை என் பதால், வெறுமனே ஆலோசனை சொல்கிற அமைப்பாகத்தான் அவை இருந்துவருகின்றன. தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மரபினர் ஆணை யங்களைப் போல அவற்றால் முழு அதிகாரத்தோடு செயல்பட முடியவில்லை.
3. சட்டத் திருத்தத்தின் எந்தெந்தப் பிரிவுகள் பிரச்சினைக்குரியவை எனக் கருதுகிறீர்கள்?
அரசியலமைப்புச் சட்ட அதிகாரம் வழங்கப் படுவதில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மரபினர் ஆணையங்களுக்கு உள்ளது போன்று பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுக்கான திட்டமிடுதல் மற்றும் ஆலோசனை வழங்குதல் அதிகாரத்தைப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அளிக்கும் பிரிவுகள் மசோதாவில் நீக்கப்பட்டுள்ளன. அந்தப் பிரிவுகள் சேர்க்கப்பட வேண்டும். பிற்படுத்தப் பட்டோருக்கான மத்திய பட்டியலில் புதிதாக ஒரு பிரிவினரைச் சேர்க்கவோ, நீக்கவோ உள்ள அதிகாரம் மாநில அரசின் வேண்டுகோளின் பேரிலேயே அமைய வேண்டும். மாநில அரசின் வேண்டுதல் இல்லாமல் தன்னிச்சையாக, ஆலோசனை என்ற பெயரில் அந்த அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் பிரிவு நீக்கப்பட வேண்டும். மாநிலப் பட்டியலுக்கான அதிகாரம் மாநில அரசுகளிடமே நீடித்திட வேண்டும். அதற்கான விதிகள் மசோதாவில் இடம்பெறவில்லை. அதற்கான புதிய விதிகள் சேர்க்கப்பட வேண்டும். மேலும், மத்திய - மாநில ஆணையங்கள் நீதிபதியின் தலைமையில் செயல்பட வேண்டும் என்ற பிரிவுகளைத் தற்போது நீக்கியிருக்கிறார்கள். எனவே, யார் வேண்டுமானாலும், ஆணையத்தின் தலைவராக வரலாம் என்ற வாய்ப்பும் இருக்கிறது. இது தவறானது. எனவே, இத்தகைய பிரிவுகள் எல்லாம் நீக்கப்பட வேண்டும்.
4. அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா -123 ஏற்கெனவே மக்களவையில் நிறைவேற் றப்பட்டுள்ள நிலையில், அம்மசோதாவில் திருத் தம் செய்யும் கோரிக்கை ஏற்கப்பட வாய்ப்பு இருக்கிறதா?
மக்களவையில் பாஜகவுக்குப் பெரும்பான்மை இருக்கிற காரணத்தாலேயே ஒரே நாளில் அதிக விவாதங்கள் இல்லாமலேயே அதை நிறைவேற்றிவிட்டார்கள். ஆனால், மாநிலங்களவையில் பாஜக வுக்குப் பெரும்பான்மை இல்லை. எனவே, இந்தக் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இதே கருத்தை மே 15 இல் மாநிலங் களவைத் தெரிவுக் குழுவின் முன்னாலும் நான் எடுத்துக் கூறியிருக்கிறேன்.
5. மத்திய அரசின் நடவடிக்கை என்றாலே சந் தேகக் கண்ணோட்டத்தோடு பார்ப்பது சரிதானா?
மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, பொதுப் பட்டியலுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. கல்வித் துறையில் மத்திய அரசு எடுக்கும் முடி வையே மாநிலங்கள் பின்பற்றியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இதற்கு ‘நீட்’ தேர்வே ஓர் உதாரணம். இந்நிலையில், தற் போது பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களில் மாநிலங்களுக்கு உள்ள உரிமைகளையும் பறிப்ப தற்கு முயற்சிக்கிறது மத்திய அரசு. கூட்டாட்சித் தத்துவத்துக்குப் பதிலாக ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே தேர்வு என்று ஒற்றையாட்சி முறையை இந்த ஆட்சி வலியுறுத்துகிறதோ என்று தோன்றுகிறது.
- புவி
நன்றி: ‘தமிழ் இந்து’, 22.5.2017

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

உ.பி.யில் சாமியார் ஆளும் பி.ஜே.பி. ஆட்சி இதுதான்! தாழ்த்தப் பட்டோரைத் தாக்கிய உயர்ஜாதிக் கும்பல்!

டில்லியை கிடுகிடுக்க வைத்த தாழ்த்தப்பட்டோர் போராட்டம்!
50 ஆயிரம் தலித்துகள் நீலத் தொப்பியணிந்து போர் முழக்கம்!

புதுடில்லி, மே22 உத்தரப்பிரதேச மாநிலத்தில் சகரன்பூரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக நடைபெற்றவன்முறைகளைக்கண்டித்துடில்லி ஜந்தர்மந்தரில்நேற்று(21.5.2017)நடைபெற்ற மாபெரும் கண்டனக் கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட வர்கள், இளைஞர்கள், செயற்பாட்டாளர்கள் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.
தாழ்த்தப்பட்டவர்களுக்குஎதிரான வன்முறைகளைக் கண்டித்து தாழ்த்தப்பட்டவர் களின் உரிமைகளுககாகப் போராடி வருகின்ற  பீம் ஆர்மி  எனும் தாழ்த்தப்பட்டோருக்கான தொண்டறப்படையின் சார்பில் கண்டன விளக் கப் பொதுக்கூட்டம் டில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்றது.
டில்லியில் கண்டன ஊர்வலம் நடத்த டில்லி காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.
இளம் வழக்குரைஞர் சந்திரசேகர் தலைமையில் உயர்ஜாதியினரின் ஆதிக்கத்தை எதிர்த்து நடை பெற்ற கண்டனப் போராட்டத்தின் விளக்கக் கூட்டத்தில் பீம் ஆர்மியின் தாழ்த்தப்பட்டவர்கள் ஒற்றுமைப்பணி என்கிற திட்டத்தின்கீழ் நீல உடை அணிந்து ஏராளமானவர்கள் ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக திரண்டிருந்தார்கள்.
டில்லி ஜந்தர் மந்தர் பகுதி முழுவதும்  ஜெய் பீம்  ஒலி முழக்கம் நிரம்பியிருந்தது. மேற்கு உத்தரப்பிரதேசம் மற்றும் டில்லி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இளைஞர்கள் தலித் சங்கர்ஷ் மோர்ச்சா, யுவ சக்தி தள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிலிருந்து திரண்டிருந்தார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம் சகரன்பூர் பகுதி யில் உயர் ஜாதி பார்ப்பனர்களான தாக்கூர் வகுப்பைச் சேர்ந்தவரான மகாராணா பிரதாப் பிறந்த நாள்விழா கொண்டாடுவதாகக் கூறி, அப்போது தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டனர்.
5.5.2017அன்றுவன்முறையின்போது,தாக்கூர் வகுப்பைச் சேர்ந்த கும்பல் தாழ்த்தப்பட்டவர்
களின்25வீடுகளைதீக்கிரையாக்கியது.தாழ்த்தப்பட்டவர்கள் 15 பேர் படுகாயம் அடைந் தார்கள்.9.5.2017அன்றுகாவல்துறைக்கும்,போராட் டக்காரர்களுககும் இடையே மோதல் வெடித்தது.
சந்திரசேகர் இதுகுறித்து பேசுகையில், ஒடுக்கு முறைக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம். ஆயிரக்கணக்கில் கிளர்ந்தெழுவோம். ஆர்.எஸ்.எஸ்-. இந்து வலது சாரிகள் நூற்றாண்டுகளாக எங்களை ஒடுக்கி வருகிறார்கள். ஆனாலும், நாங்கள் பலவீனமடைந்துவிடவில்லை.
பாதிப்புக்குள்ளாகின்ற தாழ்த்தப்பட்டவர்கள் தொலைபேசி, வாட்ஸ்அப் சமூக ஊடகங்களின் மூலமாக ஒடுக்குமுறைகள் குறித்து வெளிப்படுத்த வேண்டும்என்றும்கூறியுள்ளோம்என்று பேசினார்.
உத்தரபிரதேசம் மாநிலம், சகரன்பூரில் மே 5 ஆம் தேதி உயர் சமூகத்தினரான தாக்குர் மக்கள் நடத்திய பேரணியின் போது ஒலிபெருக்கி மிகவும் சத்தமாக ஒலிபரப்பப்பட்டதாக தெரிகிறது. இதற்கு அப்பகுதி தலித் சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறு, வன்முறையாக வெடித்தது.
இந்த வன்முறை சம்பவத்தில் ஒருவர் பலியானார். 15-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சகரன்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சகரன்பூர் நகரில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து தலைநகர் டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தலித் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட் டத்தில் சுமார் 50 ஆயிரம் தலித்கள் பங்கேற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தலையில் நீல நிற தொப்பிகளை அணிந்து இருந்தனர். பீம் படை என்ற அமைப்பின்கீழ் இந்த போராட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தாக்குதல் சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவா ரணம் வழங்கவேண்டும், தாக்குதலில் ஈடு பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற 3 கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Friday, April 7, 2017

தமிழ் இந்துக்கு மறுப்பு


சமஸ்கிருதமயமான சமஸ்
- கவிஞர் கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
"அடுத்த நூற்றாண்டுக்கான திராவிட இயக்கம் எப்படி இருக்க வேண்டும்?" எனும் தலைப்பில் தோழர் சமஸ் 'தி இந்து' (தமிழ்) ஏட்டில் நேற்று (5.4.2017) கட்டுரை ஒன்றைத் தீட்டியுள்ளார்.
திராவிடர் இயக்கத்துக்குக் கருத்துதானம் செய்ய முன் வந்துள்ளார்.
எந்தத் தளத்தில் நின்று கொண்டு என்பதுதான் முக்கியம். பார்ப்பனர்களுக்கு வக்காலத்துப் போட்டு என்னென்ன வார்த்தைகளை எல்லாமோ போட்டு ஓர் அவியலைத் தயாரித்துக் கொடுத்துள்ளார்.
"ஆரியர் - திராவிடர் கருத்தைத் தாண்டி, சமகால இந்திய அரசியலில் திராவிட" எனும் சொல்லுக்கான பொருத்தப்பாடு என்ன? ஒரு காலத்தில் தோராயமாக தென்னிந்தியாவைக் குறிப்பிட்ட சொல் அது. இந்தப் பிராந்தியத்தைத் தனி நாடாக அங்கீகரித்து, ஆங்கிலேயர்கள் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று கேட்டபோது, அதற்கு அர்த்தம் இருந்தது. இன்றைக்கு"  - என்று கட்டுரை தொடங்கப்பட்டுள்ளது.
திராவிடர் என்ற ஓர் இனம் இல்லை, கிடையவே கிடையாது என்பது தோழர் சமஸின் ஊர்ஜிதமா? திராவிடர் என்ற இனச் சொல் திராவிடர் இயக்கத்தால் கண்டுபிடிக்கப்பட்ட சொல்லா?
ஒரு காலத்தில் தோராயமாக தென்னிந்தியாவைக் குறிப்பிடும் சொல்லாம். அப்படியானால் மொகஞ்சதாரோ, ஹரப்பா என்பதெல்லாம் திராவிடர் நாகரிகம் என்பதும், நாகர்கள் திராவிடர்களே என்றும் அண்ணல் அம்பேத்கர் சொன்னதெல்லாம் கற்பனைக் கதை என்கிறாரா?
மனுதர்ம சாஸ்திரத்திலும், வேதத்திலும்கூட திராவிட என்ற சொற்கள் இடம் பெற்றதும் அந்தப் பொருளில் தானா? தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு உள்ளிட்ட மொழிகள் திராவிட மொழிக் குடும்பம் என்று மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், பரிதிமாற்கலைஞர் போன்ற ஆய்வாளர்கள் சொன்னதற்கெல்லாம் அடிப் படை கிடையாது என்பதுதான் அறிஞர் சமஸின் இந்த முடிவா?
இந்தியத் தேசிய பாடலில் இடம் பெற்ற 'திராவிட' என்பதை எல்லாம்கூட நீக்கிட வேண்டும் என்கிற அளவுக்குக் கூட அவரின் பேனா நாக்கு நீளும் போலும்.
திராவிட மொழி ஆய்வு அறிஞர் மறைந்த வி.அய். சுப்பிரமணியம் அவர்கள் திராவிடக் கலைக் களஞ்சியத்தைத் தயாரித்து ஒரு நகலை அன்றைய மத்திய மனிதவளத் துறை அமைச்சர் முரளிமனோகர் ஜோஷியிடம் (பிஜேபி) கொடுத்தபோது அந்த திராவிட என்பதை எடுத்து விடலாமே என்று சொன்ன பொழுது - சட்டென்று "தேசிய கீதத்திலிருந்து திராவிடத்தை எடுத்து விட்டால், நானும் நீக்கிவிடத் தயார்தான்" என்று முகத்துக்கு எதிரே சொல்லவில்லையா? முரளி மனோகர் ஜோஷியின் இடத்தைக் கொஞ்சம் கடன் வாங்கி சமஸ் பேச வேண்டிய அவசியம் என்ன வந்தது என்றுதான் தெரியவில்லை.
இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டமே என்றும், அதில் கூறப்பட்டுள்ள ராட்ச தர்கள், அரக்கர்கள், குரங்குகள், கரடிகள் என்பவை எல்லாம் திராவிடர்களே என்று தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவுமா கண்டுபிடித்துக் கூறினார்கள்? இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்பி வந்த விவேகானந்தர், ஜவகர்லால் நேரு, பி.டி. சீனிவாசய்யங்கார் போன்றவர்கள் எழுதியுள்ளதற்கு எந்த உள் நோக்கத்தை சமஸ் வைத்திருக்கிறாரோ நாம் அறியோம்.
"இந்தி மேலாதிக்கத்தை எதிர்க்கும் நாம், திராவிட அரசியல் கருத்தாக்கம் என்பது மறைமுகமாகத் தமிழ் மேலாதிக்கத்தை முன் வைக்கும் அரசியல் என்பதை ஏன் உணர மறுக்கிறோம்?" என்று கேட்கிறார்.
இதைவிட ஒரு சிறுபிள்ளைத்தனமான கருத்து ஒன்று இருக்கவே முடியாது. தமிழ்நாட்டில் தாய்மொழியான தமிழுக்குத் தான் முதலிடம் என்பது ஆதிக்க மனப்பான்மையா? எங்களை எந்த மொழியும் ஆதிக்கம் செய்யக் கூடாது என்பது ஆதிக்க மனப்பான்மையா? ஆமாம் சமசுக்கு என்னாச்சு? அய்யோ பாவம்!
முதலாளிகளை எதிர்த்துத் தொழிலாளர்கள் உரிமை கோரினால் - அது தொழிலாளிகளின் ஆதிக்க மனப்பான்மை என்று கூறுவாரா? ஜாதி ஆதிக்க வாதிகளை எதிர்த்து தாழ்த்தப்பட்ட மக்கள் போராடினால் அதற்குப் பெயர் தாழ்த்தப்பட்டோர் மேலாதிக்கக் கோட்பாடா?
நம்முடைய அண்டை மாநிலங்களில் திராவிட அரசியல் முழக்கம் இல்லை - அப்படி இருக்கும் பொழுது எதற்குத் திராவிடம் என்று கேள்வி எழுப்புகிறார்.
திராவிடர் என்பது ஓர் இனத்தின் பெயர்; யார் எங்கு குடியிருந்தாலும் இந்தப் பெயர் எப்படி மாற்றம் அடையும்?
ஒரு குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் பிரிந்து சென்றார்கள் என்பதற்காக அந்தக் குடும்பப் பெயர் இல்லை என்று ஆகி விடுமா? அப்பன் பெயர் தான் மாறுமா?
அறிஞர் அண்ணா அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராகச் சென்றபோது அவர் ஆற்றிய அந்த முதல் உரையிலேயே 'நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன். அப்படி நான் சொல்லுவதால் வங்காளிக்கோ மற்றவர்களுக்கோ எதிரானவன் அல்ல!' என்று சொன்னாரே - அண்ணாவை வேறு இடங்களில் எடுத்துக் காட்டும் கட்டுரையாளர் இந்த இடத்தை வசதியாக மறந்தது ஏன்? அல்லது மறைப்பது ஏன்?
ஒரு தாயிடமிருந்து கிளைத்த மொழியினர் என்றாலும் தென்னிந்தியாவில் இன்று தமிழர்கள் தலைமைக்கு யார் காத்திருக்கிறார்கள் என்று கேட்கிறார்.
இதன் மூலம் திராவிடர் என்பது தாய்க்குரிய இடம் என்பதை அவரை அறியாமலேயே ஒப்புக் கொண்டு விட்டாரே!
"அந்த அளவிலேதான் நாமும் சொல்லுகிறோம் - மொழி வாரி மாநிலம் என்று அமைந்து விட்ட பிறகு அந்தந்த மாநிலம் அதற்குரிய தலைமைத்துவத்தோடு செயல்படும் என்பது பால பாடம்.
மேற்கு வங்கத்தினர் தங்களை வங்காளிகள் என்று சொல்லிக் கொண்டால், பங்களாதேசையும் ஆதிக்கம் செய்ய விரும்புகிறார்கள் என்று பொருள் படுமா?
உலக வரலாற்றில் முக்கியமான இனங்களில் திராவிடர் அடங்குவர். மானிட இன வர்ணனை Janography வல்லாரும் ஆதி மக்களினம் தோன்றிய இடங்களில் தென்னிந்தியாவும் ஒன்றெனக் கருதினர். தமிழ் மொழியை உருவாக்கி திராவிடர் வழிவழியே இந்நாட்டில் பிறந்து இந்நாட்டில் வாழ்ந்த ஆதி மக்களே! ('கலைக்களஞ்சியம்' தொகுதி 5 பக்.703-704).
என் இனப் பெயரை நான் சொல்லிக் கொண்டால் அது எப்படி எனக்குச் சுமையாகும்? என்னை ஈன்றவரை நான் தாயென்று சொல்லக் கூடாதா? தோழர் சமசுக்குத்தான் வெளிச்சம்.
திராவிடர் என்பது வெளித் தோற்றத்திற்கு இனப் பாகுபாட்டை வெளிப்படுத்துகிறதாம். அப்படியானால் எந்த இனமும், தன் இனப் பெயரைச் சொல்லக் கூடாது என்பதுதான் அவரின் கருத்தா?
ஆரிய ஜனதா கட்சி அல்லது இந்து ஜனதா கட்சி அல்லது என்றல்ல; பாரதிய ஜனதா கட்சி என்றே தன் அரசியல் முகத்துக்குப் பெயரிட்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். என்கிறார்.
கோணிப் பைக்குள்ளிலிருந்து பூனைக்குடி வெளியில் வந்தது என்று தந்தை பெரியார் கூறுவார். சமஸ் விடயத்தில் அது நடந்தே விட்டது.
ஆர்.எஸ்.எஸின் அடிப்படைக் கொள்கை மாநிலங் களே கூடாது என்பதுதான்;  ஒரே நாடு - அது பாரத நாடு; ஒரே கலாச்சாரம் - அது இந்துக் கலாச்சாரம்; ஒரே மொழி - சமஸ்கிருதம் என்கிற ஆர்.எஸ்.எஸ். குருநாதர் கோல்வால்கரின் சீடராக எப்பொழுது சமஸ் மாறினார் என்று தெரியவில்லை. விரைவில் அவர் உடை காவிமயமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
திராவிடர் என்று சொன்னால் இனத் துவேஷியாகப் பார்க்கப்படுமாம்.  பிராமணர்களை, திராவிட இயக்கம் உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டுமாம்.
திராவிடர் என்றால் இனத் துவேஷம் - பிராமணர் என்றால் மனிதநேயம் என்ற புதிய அகராதியைப் பூதேவர்களுக்காக உருவாக்கியிருக்கிறார் போலும்.
உன் சூத்திரப்பட்டம் ஒழிய பார்ப்பானை பிராமணன் என்று சொல்லாதே  என்று சொன்னவர் தந்தை பெரியார்.
உண்மையில் பிராமணன் என்று சொல்லுவதுதான் "துவேஷம்!"
அவன் பிராமணன் என்றால் நீ யார்? சூத்திரன் தானே? சூத்திரன் என்றால் இந்து வருண அமைப்பு - மனுதர்ம சாஸ்திரப்படி வேசி மகன்தானே, சந்தேகமே வேண்டாம்! சமஸ்கள் ஒரே ஒரு முறை மனு தர்மத்தை ஒரு புரட்டுப் புரட்டட்டும்! (அத்தியாயம் 8 சுலோகம் 415).
இது போதாது, கீதைதான் வேண்டும் என்றால், பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் (கீதை  அத்தியாயம் 9 சுலோகம் 32)  எனும் அத்தியாயத்தை பார்க்கட்டும். இந்த இரண்டும் பெருமைக்குரியவை என்று சமஸ்கள் வரித்துக் கொண்டால் நமக்கென்ன நோக்காடு!
பிராமண சமூகத்தை தமிழ் அரசியல் களத்தை விட்டே திராவிட இயக்கம் வெளியில் தள்ளி விட்டது. தமிழகத்தில் நடப்பு சட்டசபையில் ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே பிராமணர், இதுவும் அநீதியானதே! என்று மிகவும் துக்கப்படுகிறார்.
ஏனிந்த அவல நிலை என்பது தோழர் சமஸ் அறிவாரா? அவர்களின் ஆதிக்க நுகத்தடியில் இந்தச் சமுதாயம் ஆண்டாண்டுக் காலமாக அழுந்திக் கிடந்தது. சற்றும் ஈவு இரக்கம் இல்லாமல் மதத்தில் பெயரால் பிறப்பின் பெயரால், தன் காலடிக்குள் புதைத்து வைத்திருந்தது. திராவிட இயக்கத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் வீறு கொண்டு எழுந்தார்கள் என்பதற்கான அடையாளமே இது. அதே நேரத்தில் திராவிட இயக்கத்தின் போர்வையில் பார்ப்பன அம்மையார் 15 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததை சமஸ் ஒப்புக் கொண்டு எழுதிய பிறகு இந்த 'அய்யோ பாவம்' எங்கிருந்து குதிக்கிறதாம்?
பார்ப்பனர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப 3 சதவீதம் பார்ப்பனர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று பெரியார் சொன்னதை எடுத்துக் காட்டியுள்ளார்.
அறிவு நாணயத்தோடு தோழர் சமஸ் கூறட்டும்; பார்ப்பனர் கல்வி, வேலை வாய்ப்புகளில் மூன்று சதவீதத்துக்கு மேல் இல்லை என்று கூற முன் வருவாரா?
பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி 20 சதவீதம் கேட்டார்களே, அவர்களை மூன்று சதவீதம் கேட்கச் செய்யட்டும் - பிரச்சினைக்கு அப்பொழுதே தீர்வு எட்டப்பட்டு விடுமே!
மூன்று சதவீதத்தினர் மூக்கு முட்ட அனுபவிப்பது தானே பிரச்சினைக்கே காரணம். இந்திய அளவில் அவர்களின் ஆதிக்க நிலை என்ன?
கோயில்களில் 100%, இந்திய ஊடகங்களில் 90%, மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சரவையில் அலுவலக செயலாளர்கள் 80%, அய்.ஏ.எஸ். 70%, அய்.பி.எஸ்.61% உச்சநீதிமன்ற நீதிபதிகள் 56%, மாநிலத் தலைமை செயலாளர் 54%, ஆளுநர்கள் 54%, மாநிலங்களவை உறுப்பினர்கள் 41%, மக்களவை உறுப்பினர்கள் 48%, மத்திய அமைச்சர் 36% (ஆதாரம்: லோக் சந்தா  - மராட்டிய ஏடு - 8.8.2016).
இதுதான் பார்ப்பனர்கள் பரிதாபமாக வீழ்ச்சி அடைந்துவிட்டனர் என்பதற்கு அடையாளமா?
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பொது மேலாளர் பதவிகள் 420 இல் தாழ்த்தப்பட்டவர் 3.9%, பிற்படுத்தப்பட்டோர் 1.19%, மலைவாழ் மக்கள் 1.42% என்ற நிலை எதை காட்டுகிறது?
மத்திய அரசு துறைகளில் பிற்படுத்தப்பட்டோர் 7 சதவீதத்தை இன்னும் தாண்டவில்லை. சுத்திகரிப்புப் பணிகளில்தான் அதிக இடம் பெற்றுள்ளனர் ('டைம்ஸ் ஆஃப் இந்தியா' 1.9.2010) என்பதிலிருந்து என்ன தெரிகிறது?
தனியார் நிறுவனங்களில் 9052 அதில் இயக்குநர் பதவிகளில் 8387 (92.6%) பேர் உயர் ஜாதியினர் என்பதை அறிந்து வைத்திருந்தால் கட்டுரையாளர் அக்ரகாரத்துக்காக மூக்கு சிந்துவாரா? அடிப்படை விவரங்கள் ஏதும் அறியாமல்,  ஆதாரங்களும் இல்லாமல் சில்லுக்கோடு விளையாட்டுக் கட்டுரைகளை எழுத வேண்டாம் தோழர் சமஸ்.
(நாளை பார்ப்போம்)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


Read more: http://viduthalai.in/headline/140817-2017-04-06-10-47-56.html#ixzz4dXcEUJPK

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...