Saturday, November 5, 2016

‘‘ஜெய் ஸ்ரீராம்!’’ ‘‘ஜெய் பெரியார் ராமசாமி!’’

‘ஜெய் ஸ்ரீராம்’, ‘ஜெய் ஸ்ரீராம்’ இப்படி ஒரு கோஷம்! தெருவில் போகும் குப்பனும், சுப்பனும் போட்ட கோஷமல்ல இது. ஒரு பிரதமர்தான் - ஆம்! நரேந்திர மோடிதான் தோள்களைத் தூக்கி தொண் டையைக் கனைத்து மிகப்பெரியதோர் முழக்கத்தைப் போட்டுத் தள்ளியுள்ளார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது சத்திய பிரமாணம் எடுத்து பிரதமர் நாற்காலியில் சட்டமாக அமர்ந்தவர் இவர்.
அந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பிலேயே அனைவர் கண்களிலும் படும்வண்ணம் பட்டுத் தெறித்ததுபோல, சில வாசகங்கள் பிரகாசித்துக் கொண் டுள்ளன.
இந்தியா ‘‘செக்குலர்’’, ‘‘சோசலிஸ்ட்’’ நாடு என்ற சொற்கள் மகத்தானவை - அரசமைப்புச் சட்டத்தில் இது கண்கள் போன்று ஜொலிப்பவை.
சமதர்ம, மதச்சார்பற்ற தன்மை கொண் டது என்பதே இதன் பொருள்.
பிரதமர் மோடிக்கு இது தெரியாதா? ஏன் தெரியாது? தெரியும், நன்றாகவே தெரியும்.
தெரிந்திருந்தும் இவற்றிற்கு எதிராக ஒரு பிரதமரால் எப்படி கோஷம் போட முடிந்தது?
ஆம்! அவர் இந்தியாவுக்கான பிரத மரல்ல; இந்து ராஜ்ஜியத்துக்கான பிரதமர்; இதோ பேசுகிறார் கேண்மின்! கேண்மின்!
11.10.2016, செவ்வாய்க்கிழமை லக் னோவில் நடை பெற்ற தசரா விழாவில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அவர் தனது உரையின் தொடக்கத்திலும், பேச்சை முடிக்கும் போதும், ‘‘ஜெய் ஸ்ரீ ராம்’’ என்று முழக்கமிட்டார். அத்துடன் நில்லாமல் அவர், அந்த முழக்கம் ஒவ்வொரு வீட் டிற்கும் சென்றடையும் வகையில் உரக்கக் குரல் கொடுக்கவேண்டுமென்று கேட்டுக் கொண்டார். மேலும் தனது உரையிலே ராமரின் சிறப்புப்பற்றியெல்லாம் எடுத்து ரைத்தார்.  அந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ராமரின் வில் அம்பு, அனுமனின் கதாயுதம் மற்றும் விஷ்ணு வின் சின்னமான சுதர்சனச் சக்கரமும் நினைவுப் பரிசுகளாக அளிக்கப்பட்டுள் ளன. மொத்தத்தில் ‘‘இந்து சாம்ராஜ்யம்’’ என்ற கற்பனையில் அனைத்தும் அன்று நடந்தேறின. இவையெல்லாம் உத்தரப் பிரதேசத் தேர்தலை மனதிலே வைத்து, பிரதமர் நடத்திய அரசியல்
தேர்தல் பிரச்சாரம் என்றே கருதப்படுகிறது.
இந்தத் தகவல்கள் எல்லாம் மறுநாள் ஏடுகளில் முக்கிய இடம்பெற்றுச் சிரித்தன.
உண்மையைத்தான் உரக்கக் கூவி இருக்கிறார் இந்த உதாரண புருடர். பா.ஜ.க. வின் கொள்கை என்ன? சங் பரிவார்களின் எழுதப்படாத சட்டம் என்ன?
ராமராஜ்ஜியத்தை அமைப்பதுதானே - அதனை மக்களவையின் தேர்தல்போது உத்தரப்பிரதேச வாரணாசியில் வக்கணை யாகப் பேசியவர்தானே இந்த நரேந்திர மோடி.
‘‘நாட்டிலேயே அதிகமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்டது உத்தரப்பிரதேசம். ‘‘நீங்கள் ஒரு நாள் சரியான அரசை தேர்வு செய்வீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அப்படி தேர்வு செய்வீர்கள் என்றால், அன்றுதான் ராமராஜ்ஜியம் நடைமுறைக்கு வரும்’’ (20.2.2013) என்று பேசினாரே!
சூத்திரனான சம்பூகன் தவமிருந்தான் என்பதனால் அவனை வாள் கொண்டு வெட்டி ஆனந்தப் பண் பாடியவன்தானே அந்த அயோத்தி ராமன்.
அன்றைக்குக் கல்வி என்பது தவம் தான். அந்தத் தவத்தைச் சூத்திரன் செய் யக்கூடாதே - அது வருண தருமத்துக்கு வைரியாயிற்றே!
வருணக்கலப்போ - வருண தருமத்தை மீறிய தொழிலையோ செய்தால் தண்டத் தைக் கொண்டு தலையையும் சீவலாம் என்பதுதானே மனுதர்மம் - கீதாசிரியரின் உபதேசத்தின் சாரமும் அதுதானே!
வருண தருமத்தைப் படைத்தவன்தான் நான். படைத்தவனாகிய நானே நினைத் தாலும் அதனை மாற்றி அமைக்க முடியாது என்று ஆரிய தாசனான கிருஷ்ணன் கிறுக்கி வைத்ததுதானே கீதை!
அன்றைக்குக் கல்வி என்பது தவமாக இருந்தது; அதனை ஒரு சூத்திரன் செய்த போது மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமன் வாளால் வெட்டினான்.
இன்றைக்குச் சூத்திரர்களும், பஞ்சமர் களும் கல்வி பயில  ஆரம்பித்துவிட்டனர். இன்று வாள் கொண்டு வெட்ட முடியுமா மோடியால்? (குஜராத்தில் சிறுபான்மை இன மக்களை அவ்வாறு செய்யவில்லையா என்று கேட்கலாம், அது வேறு செய்தி).
வேறு வழியில் வீழ்த்தலாம்; அதுதான் புதிய கல்வி - சமஸ்கிருதத்தைப் படிக்க வேண்டும் என்ற சட்டம், இந்தியைப் பயில வேண்டும் என்ற வீம்பு.
குருகுலக் கல்வி என்னும் குலக்கல்வித் திட்டத் திணிப்பு.
நுழைவுத் தேர்வு என்னும் நுட்பமான தடைச் சுவர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ரோகித் வெமுலாவைத் தற் கொலைக்குத் தூண்டியது யார்? டில்லிப் பல்கலைக் கழகத்தின் கன்னையா குமார் விரட்டி விரட்டி நோகடிக்கப்படுவது எதைக் காட்டுகிறது?
அய்.அய்.டி.,களில் சேரும் தாழ்த் தப்பட்ட மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட இருபால் மாணவர்களும் இடை நிறுத்தங் களின் பின்னணி என்ன? அவர்களின் தற்கொலை எண்ணிக்கை பெருகிக் கொண்டிருப்பதன் மர்ம முடிச்சு எது?
மாட்டுக்கறி தடை செய்யப்பட்டது எதன் அடிப்படையில்? பசுவதைத் தடை சட்டம் எதைக் காட்டுகிறது?
செத்த பசு மாட்டின் தோலை உரித்த தாழ்த்தப்பட்டவர்கள் கொல்லப்படுவது - அன்றைய சம்பூக வதையின் தொடர்ச்சி தானே!
‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கோஷத்துக்குள் பொதிந்து கிடக்கும் உட்கூறுகள் வெவ்வேறு வடி வங்களில் செயல்பாட்டுக்கு வர ஆரம் பித்துவிட்டனவே! அவற்றைப் புரிந்து கொள்ளாததுதான் நம்முடைய தவறே தவிர, அவர்கள்  அவர்களின் சம்பூக வதை வேலையை ஆரம்பித்துவிட்டார்களே!
முஸ்லிம் பெரியவர் வீட்டில் மாட்டுக் கறி இருந்தது என்று பொய்யாகக் கூறி, அவர் அடித்துக் கொல்லப்படவில்லையா? கொன்ற குற்றவாளி சிறையில் செத்தான் - அவனுக்குத் தேசியக் கொடி போர்த்தி யல்லவா இறுதி ஊர்வலத்தை நடத்தி இருக்கின்றனர்.
இந்தியாவின் இந்தக் கோணல் குரூரப் புத்தி - உலகெல்லாம் சிரிப்பாய் சிரிக்கிறதே!
அமெரிக்க அதிபர் இடித்துச் சொல்லவில்லையா?
இந்தியாவில் அமெரிக்க அதிபர் மூன்று நாள் சுற்றுப்பயணம் ஒன்றைச் சிறப்பாக மேற்கொண்டார். நிறைவாக மூன்றாம் நாள் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பேசினார். டில்லி சிரிபோர்ட் ஆடிட் டோரியத்தில்தான் அந்த நிகழ்ச்சி நடந்தது. அப்பொழுது அமெரிக்க அதிபர் அழுத்த மாக ஒன்றைப் பதிவு செய்தார்.
மத ரீதியாகப் பிளவுபடாமல் இருக்கும் வரை இந்தியா தொடர்ந்து முன்னேறும் என்றார். இதைவிட நாகரிகமாக எப்படி ‘இடித்துக்’ காட்ட முடியும்? அதுவும் இந்தி யாவின் தலைநகரிலேயே இந்தியாவின் தற்கால நிலையைத் தலையில் குட்டி அல்லவா சொல்லியிருக்கிறார் (28.1.2015).
அமெரிக்கத் தலைநகரமான வாசிங் டனில் இந்திய நாட்டின் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. அவ்விழாவில் தன் வாழ்விணையர் மிச்சேலுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்துகொண்டார். அப்பொழுது இந்தியாவில் அவர் மேற் கொண்ட சுற்றுப்பயணம் பற்றிப் பேசியது என்ன? (5.2.2015).
‘‘இந்தியா ஓர் ஆச்சரியப்படத்தக்க மிகவும் அழகான நாடு. அங்கு பல்வேறு வேற்றுமைகள் காணப்படுகின்றன. இந்தி யாவில் அனைத்து வகையான மத நம்பிக் கைகள், சடங்குகள், விழாக்கள் உள்ளிட் டவை நீண்ட காலமாக நடந்து வருகின்றன. இவற்றின்மீதுள்ள தங்களது நம்பிக்கை, மரபு காரணமாக ஒரு சாரார் மற்றவர் களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தினால், இந்தியாவில் மத சகிப்புத் தன்மை இல் லாததைக் காண நேரிட்டால், அந்நாட் டுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த காந்தியே அதிர்ச்சி அடைந்திருப்பார்’’ என்றாரே - இதுதான் இந்தியா - உலக நாடுகளில் ‘பாரதப் புண்ணிய பூமியின்’ அழுக்குப் படிந்த அருவருப்பான முகம்.
துணைக் குடியரசுத் தலைவரின் துடிப்பு
‘‘நமது நாட்டின் அரசமைப்புச் சட்டம் நமது புனித நூல் போன்றதாகும். தனி மனித உரிமைக்கு அதிக மதிப்பு கொடுக்கப்பட் டுள்ளது. ஆனால், தற்போது நடந்துவரும் சம்பவங்கள் மிகவும் கவலைக்குரியதாக மாறி வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு மனநோயாளி ஒருவரை பாகிஸ்தான் தீவிரவாதி என்று கூறி, ஊரே சேர்ந்து அடித்துக் கொன்றனர். இந்தப் பரபரப்பு அடங்குமுன் தாதரி நிகழ்வு நடந்துள்ளது. மிகவும் துயரமான நிகழ்வு. நமது மனதைக் கேளுங்கள் - இதுபோன்ற நிகழ்வுகளை நாம் அனுமதிக்கலாமா? இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும்போது நமது ஒற்றுமை மற்றும் சகிப்புத் தன்மை கேள்விக்குறி யாகிறது’’ என்றார்.
உத்தரப்பிரதேச மாநிலம் தாதரியில் முஸ்லிம் பெரியவர் ஒருவர் வீட்டில் பசு மாட்டுக்கறி இருந்தது என்று கற்பித்து, ஊர்க் கோவில் மணியை அடித்து, ஊர் மக்களை ஒன்றுகூட்டிப் படுகொலை செய்தனரே பாதகர்கள்.
அந்தக் கொடூரத்தைக் குறித்து இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன் சாரி அவர்கள் உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் நாகரியைச் சேர்ந்த மூத்த மாநிலங்களவை உறுப்பினர் நரேஷ் அகர்வால் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி யில் குறிப்பிட்ட மேலே கண்ட கருத்து முக்கியமானது அல்லவா (2.10.2015).
குடியரசுத் தலைவர்  வைத்த குட்டு!
இதே கருத்தை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் குறிப்பிட் டது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவர் தம் வாழ்வில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பாக, ‘‘தேசிய வாத குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி’’ என்ற நூல் குடியரசுத் தலைவர் மாளிகை யில் வெளியிடப்பட்டது (7.10.2015). அந் நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர்,
‘‘நாட்டின் பன்முகத் தன்மை, அமைதி, சகிப்புத் தன்மைக்கு இழுக்கு ஏற்படும் எந்த ஒரு நிகழ்வுக்கும் அரசு இடம் தரக்கூடாது’’ என்று இடித்துக் கூறினாரே!
அமெரிக்க குடியரசுத் தலைவரும், இந்தியக் குடியரசுத் தலைவரும் இந்திய ஆட்சியின் போக்கை விமர்சித்திருக் கிறார்கள் - விசனப்பட்டிருக்கிறார்கள். அவர்கள்மீது எந்த முத்திரையைக் குத்த உத்தேசம்?
அய்யய்யோ, ராம ராஜ்ஜியமா என்று அலறுவதில் அர்த்தம் இல்லை. இந்த ராம ராஜ்ஜியம் என்ற கோட்பாட்டை வீழ்த்தும் ஒரே வாள்தான் உண்டு. அதுதான், அந்த ராமனுக்கே சாமியான பெரியார் ராமசாமி என்னும் தத்துவப் போர்வாள்!
ஜெய் ஸ்ரீராமுக்குப் பதிலடி ‘‘ஜெய் பெரியார் ராமசாமி!’’ என்பதே!

இராமாயண அருங்காட்சியகம் - மோடிக்கு மிஞ்சப் போவது என்ன?

கேள்வி: ஹிந்துக்களின் ஓட்டைப் பெறுவதற்காகவே இராமா யண அருங்காட்சியகம் அமைப்பது போன்ற செயல்களில் மோடி அரசு ஈடுபடுகிறது. இது கடுமையான கண்டனத்துக்குரியது என்கிறாரே, கலைஞர்?
பதில்: ராமரை இழிவுபடுத்திப் பேசியும்கூட ஹிந்துக்களின் ஓட்டைப் பெற முடியும் என்று காட்டியவர் கலைஞர். அவர் போய் இப்படிப் பேசக்கூடாது. ஹிந்துக்களின் மத நம்பிக்கை வேறு; அவர்களுடைய அரசியல் வேறு. ஆகையால், இராமாயண மியூசியம் அமைப்பதற்கும், ஹிந்துக்களின் ஓட்டைப் பெறுவதற்கும் சம்பந்தம் இல்லை (‘துக்ளக்‘, 9.11.2016).
சாமர்த்தியமாகப் பதில் எழுதுவதாக ‘துக்ளக்‘குக்கு நினைப்புப் போலும்! யாருக்காக  ‘துக்ளக்‘ வக்காலத்து வாங்குகிறதோ, அவர் யார்? அவர் எந்தத் தத்துவத்துக்குப் பிரதிநிதி?
அயோத்தியில் ராமன் கோவிலை இடித்த கூட்டத்தின் பிரதி நிதியல்லவா? ராமராஜ்ஜியம் அமைப்போம் என்று மக்களவைத் தேர்தல் பொதுக்கூட்டத்தில் வாரணாசியில் பேசியவர் அல்லவா? ‘ஜெய் ஸ்ரீராம்!’ என்று சில நாட்களுக்குமுன் ராம் லீலா நிகழ்ச்சியில் முழக்கமிட்டவர் அல்லவா?
அப்படிப்பட்டவர், பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த இடத்தி லேயே ராமன் கோவிலைக் கட்டுவோம் என்று சொல்லுகிற கூட்டத்தின் முக்கிய தளகர்த்தரான நரேந்திர மோடி, அதே அயோத்தியில் இராமாயண மியூசியம் அமைப்போம் என்று சொல்லுவது எந்த அடிப்படையில்?
கோவணம் கட்டாத கோலி விளையாடும் சிறு பையனுக்குத் தெரிந்த தகவல்கூட திருவாளர் ‘சோ’ ராமசாமிக்குத் தெரியாதா? ஏன் தெரியாது? நன்றாகவே தெரியும். தெரிந்திருந்தும் வல்லடிப் பேசும் போக்கு என்பது பார்ப்பனர்களின் பாரம்பரியக் குணம்தானே!
ராமன் என்பவன் யார்? இந்து மதத்தில் காக்கும் கடவுள் என்று கூறப்படும் மகாவிஷ்ணுவின் அவதாரம் அல்லவா!
பிருகு முனிவருடைய மனைவியை மகாவிஷ்ணு கொன்றதால், பிருகு முனிவரின் சாபத்தால் மனித வடிவத்தில் ராமனாகப் பிறந்து மனைவியை இழந்து பரிதவிக்கவேண்டும் என்ற நிலை.
Powered by Greatadsசலந்தரசுரனின் மனைவியாகிய பிருந்தையைப் புணரவேண் டும் என்று மகாவிஷ்ணு ஆவல் கொண்டான். சலந்தரசுரன் இறந்த நிலையில், அவனின் உடலில் விஷ்ணு புகுந்துகொண்டு பிருந்தையை சில நாள் அனுபவித்து வந்தான். உண்மையை உணர்ந்த பிருந்தை மகாவிஷ்ணுவுக்கு சாபம் விடுகிறாள். “நீ மனிதனாகப் பிறந்து உன் மனைவியை மாற்றான் கவர்ந்து அனுபவிக்கவேண்டும்‘’ என்று சாபமிடுகிறாள். பின் தீக்குளித்து அப்பெண் தன் உடலைச் சாம்பலாக்கினாள். அந்தச் சாம்பலில் மகாவிஷ்ணு புரண்டான். அதன்பின் அந்த சாம்பலில் முளைத்த துளசியை அணிந்து மயக்கம் தீர்ந்தான் மகாவிஷ்ணு என்று ஸ்கந்த புராணம் ‘தக்க காண்டம்‘ 23 ஆம் அத்தியாயம் கூறுகிறது.
இராமன் பிறப்புக்கு இவ்வளவுக் கேவலமான புராணம் இருக் கின்றது. உத்தேசிக்கப்பட்டுள்ள இராமாயண அருங்காட்சியகத்தில் ராமன் பிறப்புக்குக் காரணமான இதனை ஓவியமாகத் தீட்டு வார்களா?
ஒரு புராணக் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதேன்?
இராமாயணம், மகாபாரத, இதிகாசங்களாக இருந்தாலும் சரி, பதினெண் புராணங்களாக இருந்தாலும் சரி, அவற்றில் வரும் அசுரன் என்பவர்கள் எல்லாம் திராவிடர்களே என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறி இருக்கிறார்களே!
‘‘தென் இந்தியாவில் இருந்த மக்களேதான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும், அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்’’ என்று கூறியிருப்பது இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பிரச்சாரம் செய்து வந்த சாட்சாத் விவேகானந்தர்தான்! (‘‘சுவாமி விவேகானந்தர் அவர்களது சொற்பொழிவுகளும், கட்டுரைகளும்‘’ - ‘‘இராமாயணம்‘’ எனும் தலைப்பில் பக்கம் 587-589).
‘‘இராமாயணத்தில் தென்னிந்தியா (திராவிட தேசம்) தஸ் யூக்கள் என்ற ராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது. இவர் கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர் களைப்போலவே நாகரிகமடைந்தவர்களாய் இருந்தார்கள்’’ (பி.டி.சீனிவாச அய்யங்கார் எழுதிய ‘‘இந்திய சரித்திரம் முதல் பாகம்‘’ - பக்கம் 10).
இன்னும் என்ன ஆதாரங்கள் தேவை? விவேகானந்தர் முதல் அய்யங்கார் வரை சொல்லியாயிற்று. அன்று தொடங்கிய ஆரியர் - திராவிடர் போராட்டம் தொடர்ந்துகொண்டே தானிருக்கிறது.
அயோத்தியில் இராமாயண அருங்காட்சியகம் அமைப்பது என்றால், அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆரியர்களின் நாகரிகத்தை வரலாறாக நிலை நிறுத்துவதற்கான ஏற்பாடு, சூழ்ச்சி என்பதாக திராவிடர்களாகிய நாங்கள் கருதமாட்டோமா?
நடப்பது மதச்சார்பற்ற அரசா - இல்லை ஆரியர்களின் நாகரிகத்தை நிலைநாட்டுவதற்கான பார்ப்பன ஆதிபத்திய அரசா?
அன்றைக்கு ராமனுக்கு, விபீடணர்களும், சுக்ரீவன்களும் கிடைத்ததுபோல, இன்றைக்கு  ஆரியப் பார்ப்பனர்களுக்கு மோடி கிடைத்திருக்கிறார் என்றுதானே கொள்ளவேண்டும்.
நியாயமாக மோடி ராமனின் எதிர்த்திசையில் நின்றிருக்க வேண்டும். விபீடணனுக்கு ஆழ்வார் பட்டம் கிடைத்து, ராஜ்ஜி யமும் கிட்டியதுபோல, மோடிக்குக் கிடைத்திருக்கிறது என்பதுதான் வரலாற்றின் சுழற்சியாகும்.
சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்று தொல் பொருள் ஆய்வு அறிஞர்கள் எல்லாம் (அய்ராவதம் மகாதேவன் உட்பட) ஒருமனதாகக் கூறியும், வாஜ்பேயி  பிரதமராக இருந்த போது  அன்றைய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி ஏற்பாட்டில், திராவிடர்களின் எருதை, கணினிமூலம் குதிரையாகக் காட்டி, குதிரை என்பது ஆரிய நாகரிகத்துக்குச் சொந்தம் என்று புரட்டல் வேலையில் ஈடுபடவில்லையா?
நரேந்திர மோடிகளே, நீங்கள் என்னதான் ஆரியத்திற்குத் துணை போனாலும் உங்களுக்கு வரலாற்றில் விஞ்சி இருப்பது சூத்திரப்பட்டமே என்பதை மறவாதீர்.
வேண்டாம், இந்த இராமாயண அருங்காட்சியக வேலை யெல்லாம் என்பதே நமது அழுத்தமான வேண்டுகோள்!

Wednesday, November 2, 2016

பொது சிவில் சட்டம் - சில கேள்விகள்

சென்னை காமராசர் அரங்கத்தில் நடைபெற்ற (29.10.2016) பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் தெளிவாக்கப்பட்டுள்ள கருத்துகளும், தகவல்களும் முக்கியத்துவம்வாய்ந்தவையே.
(1) பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட முயற்சிக்கும், பொது சிவில் சட்டத்தை நோக்கிய சில கேள்விகள் உண்டு. மற்ற மதத்தை நோக்கி செலுத்தப்படும் பார்வைக்கு முன்னதாக பி.ஜே.பி. அமைக்கத் துடிக்கும் இந்து ராஷ்டிரத்துக்கான இந்தச் சட்டத்தில் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?
(அ) பிறப்பின் அடிப்படையில் பேதப்படுத்தும் இந்து மதத்தின் வருணாசிரமம் - ஜாதிக்குத் தடை வருமா?
(ஆ) சுடுகாடு - இடுகாடுகூட பொதுவாக இல்லாமல் இன்னும் ஜாதி அடிப்படையிலான இடங்கள் இருக்கின்றனவே - அவற்றைத் தடை செய்து இந்துக்கள் அனைவருக்கும் ஒரே சுடுகாடு - இடுகாடு உருவாக்கப்படுமா?
(இ) இந்து மதத்துக்குள் முரண்பட்ட பல்வேறு பிரிவுகள் இருக்கின்றனவே அவையெல்லாம் அகற்றப்பட்டு ஒரே கோட்பாடு - சீரமைப்புக்குள் கொண்டுவரப்படுமா?
எடுத்துக்காட்டாக பல்வேறு திருமண முறைகள் ஒழிக்கப் பட்டு, ஒரே மாதிரியாக ஏற்படுத்தப்படுமா?
(ஈ) இந்து மதத்துக்குள்ளே சில பிரிவினர்களிடையே பலதார திருமணங்கள் உண்டே - அவையும் தடுக்கப்படுமா?
(உ) இந்துக்களுக்குள் உணவுப் பழக்கவழக்கங்கள் பலவகைப்பட்ட முறைகளில் உள்ளனவே - வடகிழக்கு மாநிலங்களில் மாட்டுக்கறி, நாய்க்கறி உணவுப் பழக்கவழக்கங்கள் முக்கியமாக உண்டே!
மாட்டுக்கறித் தடை விதிப்பை அப்பகுதிகளிலும் முற்றாகச் செய்யும் நோக்கம் பின்வாங்கப்படுமா?
(ஊ) இந்து மதக் கோவில்களில் அர்ச்சகர்களாக பார்ப் பனர்கள் மட்டுமே வர முடியும் என்ற நிலை ஒழிக்கப்பட்டு, இந்து மதத்தைச் சேர்ந்த எந்தப் பிரிவினரும் அதற்குரிய பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகராகும் உரிமை வழங்கப்படுமா?
(எ) இந்து மத வேதங்கள், சாஸ்திர நூல்கள், (மனுதர்மம் உள்பட)உபநிஷத்துகள்,இதிகாசங்கள்,புராணங்கள்எனப்படு பவைகளில் ஜாதியை ஆதரித்தும், பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர் அல்லாதாரை சூத்திர்கள் என்றும், அசுரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும், பெண்களைப் பாவ யோனி யில் பிறந்தவர்கள் என்றும் எழுதப்பட்டுள்ளதே - இந்த அவமரியாதையை அகற்றும் நோக்கத்திலும், அனைவரும் சமத்துவம் என்ற ஒரே பொது நிலைக்குக் கொண்டு வரும் நோக்கத்திலும் அவையெல்லாம் தடை செய்யப்படுமா?
(ஏ) இந்தியா முழுவதற்கும் மது விலக்குச் சட்டம் கொண்டுவரப்படுமா?
(அய்) புதிய கல்வித் திட்டம் ஒன்றைக் கொண்டு வருவதாக உத்தேசித்துள்ளார்களே - அந்தத் திட்டம் பொது சிவில் சட்டத் திற்கு விரோதமான தன்மையில் இருக்குமாதலால் அத்திட்டம் கைவிடப்படுமா?
புதிய கல்வித் திட்டத்தின் முகவுரையில் இந்திய நாட்டின் குருகுலக் கல்வி, வேதக் கல்வி அடிப்படையில் குரு - சிஷ்ய உன்னதமான உறவு என்றெல்லாம் கூறப்பட்டுள்ளதே - இப்பொழுது கொண்டுவர உத்தேசித்துள்ள பொது சிவில் சட்டத்துக்கு இந்தக் கல்வி முறை எந்த வகையில் உகந்ததாக இருக்க முடியும்?
(ஒ) இந்தியாவில் பல்வேறு கல்வி முறைகள் இருக்கின்றனவே சி.பி.எஸ்.இ., செகண்டரிஸ்கூல், மெட்ரிகுலேசன், அங்கன்வாடி என்றெல்லாம்  பல்வேறு வகையான கல்விக் கூடங்களும், கல்வித் திட்டங்களும் நடைமுறையில் உள்ளனவே இவை யெல்லாம் ஒழிக்கப்பட்டு இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான கல்வி கொண்டுவரப்படுமா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் முறையாகப் பதிலும், விளக்கமும் தெளிவோடு சொல்லியதற்குப் பிறகு, பொது சிவில் சட்டம்பற்றிய கருத்துக் கூறுமாறு பொதுமக்களைக் கேட்பதுதானே பொருத்தமாக இருக்க முடியும்?
இன்னொரு முக்கிய கேள்வி இருக்கிறது. இந்து மதத் துக்குள் தாங்கள் துவிஜாதி (இரு பிறப்பாளர்) தாங்கள் பிர்ம்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள், மற்றவர்கள் எல்லாம் பிர்ம்மாவின் காலில் இருந்து பிறந்தவர்கள் என்பதை அறிவிக்கும் தகவல் பலகையாகக் காட்சியளிக்கும் பூணூலுக்குத் தடை விதிக்கப்படுமா?
முஸ்லிம் மதத்தில் பெண்கள் உரிமைப் பாதிக்கப்பட்டுக் கிடக்கிறார்கள் - அவர்களை மீட்டெடுக்கவேண்டும் என்று  பிரதமர் நரேந்திர மோடி கவலையுடன் கூறியிருப்பதை ‘வரவேற்கிறோம்.’  பெண்கள் எந்த மதத்தின்கீழ், எந்தப் பதாகையின்கீழ் பாதிக்கப்பட்டாலும் குரல் கொடுக்கவேண் டியதுதான். கல்வி வளர்ச்சியை ஊக்கப்படுத்த ஊக்கப்படுத்த எந்த மதத் தடைகளையும் தகர்த்துக் கொண்டு உரிமை மறுக்கப் பட்டவர்கள் கொந்தளித்து எழவே செய்வார்கள். அந்தக் கல்வி, அறிவுத் திசையை செப்பனிடுவதாகவும் இருக்க வேண்டும்.
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் முஸ்லிம் பெண்கள் பர்தா முக்காடு அணிந்து வருவது அனேக மாக முற்றாக மறைந்துவிட்டது. இந்து மதத்திலும்கூட சில பிரிவுகளில் அது இருந்துதான் வருகிறது. தலாக் முறைகூட சிலநாடுகளில் கடைபிடிக்கவில்லைதான்.
இந்த முறை இந்தியாவில் இருப்பதால் எல்லா முசுலிம் வீடுகளிலும் இது அன்றாடம் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பதற்கான விவரங்கள் கிடையாது!
நூற்றுக்கு நூறு கல்வியைக் கொடுங்கள்- உரிமைகள் எந்த மதத்தில் மறுக்கப்பட்டாலும் கல்வியின் எழுச்சிக்குமுன் மறுப்புகள் மரித்துப் போய்விடும். அடிப்படையைச் செய்யாமல், இலைகளையும், கிளைகளையும் வெட்டிக் கொண்டிருக்கவேண்டாமே!
14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் 10 ஆண்டுகளில் கட்டாய கல்வி, அகில இந்திய அளவில் மதுவிலக்கு என்று கூடத்தான் இந்திய அரசமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் எல்லாம் கவனம் செலுத்தாமல், பொது சிவில் சட்டம்தான் முக்கியம் என்று பி.ஜே.பி. சொல்லும்போது, அச்சமும், அய்யமும் கைகோர்க்கின்றன என்பது உண்மையே!

உண்மை நட்பைப்போல் பெறற்கரியது எது?

நம் வாழ்வில் பெறற்கரிய செல்வங் களில் முக்கியம் நல்ல நண்பர்கள்.
நட்புறவு என்பது இரத்த உறவை விட கெட்டியானது- மட்டுமல்ல; நெருக்கடி காலத்தில், துன்பத்தில் நாம் உழலும்போதும், துயரத்தில் மூழ் கும்போதும் நமக்கு ஆறுதல் அளிக்கும் மாமருந்து நட்புள்ளம் கொண்ட நல்ல நண்பர்களே என்பது மறுக்க முடியாத உண்மை!
பள்ளி, கல்லூரி இவைகளில் படித்த காலத்திலும், இன்றும் (கழகப் பணிகளில் மூழ்கியுள்ள இந்த காலகட்டத்திலும்) நட்புறவான நல்ல நண்பர்களிடம் மனந்திறந்து பேசுதலும், அவர்கள் தரும் ஆறுதல் வார்த்தைகளும், அன் பொழுக அவர்கள் அரவணைத்து ஆதரவு பொழிவதும் எத்தனையோ இடர்ப்பாடுகளிலிருந்து எம்மைக் காப் பாற்றி வருகின்றன!
பெறுதற்கு அரிய உண்மை அன்பு பொழியும் ஆழமான பண்புகளின் பெட்டகமான சிறந்த நண்பர்களை நாம் பெறும்போது, அள்ள அள்ளக் குறையாத கருவூலத்தையே பெற்றது போல் மகிழ்ச்சி அடைதல் வேண்டும்.
எனது உணர்வுகள் எப்போதும் அப்படித்தான். நமது உற்ற நண்பர் களுக்குத் துன்பமோ, நோயோ, தொல்லையோ, துயரமோ ஏற்படும் போதெல்லாம்  அது நம்மை, நம் உள்ளத்தை, நம் உடலைத் தாக்கிய உணர்வையே பெற்று, அதிலிருந்து வெளிவர முடியாத வேதனையை நான் அடைவதுண்டு.
கைம்மாறு கருதாத, தன்னலம் பேணாத நட்பு என்பதன் இலக்கணம் அதுதானே!
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு     (குறள் 781)
“நட்பைப் போல, ஒருவன் தனக்குச் செய்து கொள்வதற்கு அருமையான செயல்கள் என்று வேறு எவையும் இல்லை.அந்தநட்பினைப்போல எதிரிகளின் செயல்களைத் தடுப்பதற் குரிய அருமையான பாதுகாப்பு நட வடிக்கைகள் என்று வேறு எவற்றையும் சொல்வதற்கு இல்லை’’ என்பதே இதன் உரையாக்கம் ஆகும்!
அவர்கள் சம்பாதிக்கும் பொருளை வைத்துத்தான் இவ்வுலகில் மனிதர் களைப் பாராட்டுகிறார்கள் - எடை போட்டுப் பார்க்கிறார்கள்.
அது சரியான அளவுகோல் அல்ல! கொழுத்த சம்பளம் அவர் வகிக்கும் பதவிக்கே தவிர, அவரது பண்பிற்காக அல்ல; அவரது ‘‘மனிதத்தை’’ அளந்து நிர்ணயம் செய்த தொகை அல்ல அது!
அதுபோல, நல்ல நண்பர்களை -உயிர் நண்பர்களை - நாம் இழந்து தவிக்கும்போது, வெளியில் சொல்லொணாத் துன்பக் கணைகள் எம்மைத் துளைக்கும்!
அரும்பாடுபட்டு, தனக்குள்ள சிறிய நிலப்பரப்பில் விதைத்த, முற்றிய கதிர் அறுவடைக்குத் தயாராக இருக்கும் கட்டத்தில், திடீர்ச் சூறாவளியால் அது நாசமாக்கப்பட்டு, பயனற்று விழுகையில், அந்த ஏழை உழவனின் மனம் என்ன பாடுபடும்? அவனது துயரத்தைத் தான் வார்த்தைகளால் வடித்துவிட முடியுமா?
அதுபோல்தான் நமது பல ஆண்டு கால நட்பை - கண்களை திடீர் மின்னல் பறித்துப் போவதுபோல - பறித்துச் செல்லும்போது அந்த இழப்பு ஏற்படுத்திடும் சோகம் - துயரம் எப்படி வார்த்தைகளால் வர்ணிக்கப்பட முடியும்?
எனது பள்ளி, கல்லூரி கால நண் பர்களை நான் இழந்தபோதும், அவர்கள் என் கொள்கை, லட்சியங்களுக்கு மாறானவர்களாகவும், என்னால் கடு மையாகத் தாக்கப்படும் கொள்கைகளில் நம்பிக்கை உடையவர்களாகவும் இருந் தாலும், அவர்களின் பரஸ்பர நட்பு வற்றாத ஊற்றாகத்தான் இருந்தது!
இதுபோல பன்மடங்கு அதிகம் கழகத் தோழர்களை இழக்கும்போது.
நான் எண்ணி எண்ணிப் பார்க் கிறேன். தந்தை பெரியார் மணமக் களுக்கு அறிவுரை கூறுகையில்,
‘உற்ற நண்பர்களாக’ வாழுங்கள் என்பார்!
உறுதிமொழி எடுக்கச் சொல்லும் போதும் ‘உற்ற நண்பர்களாக வாழ் வோம்‘ என்று உறுதிமொழி கூறி, பின்பற்றச் சொல்லுவார்.
அதன் ஆழம், அருமை - பெருமை - தத்துவம் - பொருள் இந்த நட்புதான்! எதையும் எதிர்பார்க்காமல், வருவது துன்பம் என்று நமக்குத் தெரிவதற்குமுன்பு நமது உற்ற நண்பர்களுக்குத் தெரியும்போது, நமக்கு அவர்கள் தடுப்புக் கேடயமாய், காக்கும் கவசமாய்த் திகழுவார்கள் என்றும், ஆழமான நட்பு எப்படி பாதுகாப்பு ஆயுதமாகவும் பயன்படுகிறது என்றும் கூறும் வள்ளுவரின் கருத்தும், எளிதாக எதையும் எடுத்தியம்பும் தந்தை பெரி யாரின் விளக்கமும்பற்றியும் எண்ணி மகிழ்வோமாக!
உறுதியான நட்பினை - உண்மை யான நண்பர்கள் வட்டத்தை சுருக்கிக் கொள்ளாது பெருக்கிடுக! இன்பம் அதனைப் பெருக்கிடும்!
- கி.வீரமணி

நவம்பர் 1: சிந்தனை!

இந்தியாவில், நவம்பர் ஒன்று (1956) மொழி வாரியாக மாநிலங்கள் உருவாக்கப்பட்ட முக்கியமான  நாள். இந்தியா என்பது ஒரு நாடல்ல, பல மாநிலங்கள் அடங்கிய ஒரு துணைக் கண்டம்.
அந்தந்த மாநிலத்தில் வாழும் மக்கள் - அவர்கள் சார்ந்த இனம், மொழி, பண்பாடு காக்கப்படவேண்டும் என்று எண்ணுவது இயல்பு. இந்தியா ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் என்று சொல்லிக் கொள்பவர்கள் மத்தியில் ஆட்சியில் இருப்பதால் இந்த நாளை முக்கியத்துவம் கொடுத்து கருத்துச் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
மொழிவாரி மாநிலம் என்றால் மொழி உணர்வு, இன உணர்வு, உரிமைகள் பிரச்சினை வரும் என்றுகூட தடுத்துப் பார்த்தார்கள். அவற்றையெல்லாம் முறியடித்துதான் மொழி வாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
இதற்கு மாற்றாக ‘‘தட்சிணப் பிரதேசம்‘’ என்று கூறி தென்னகத்தில் உள்ள மாநிலங்களை ஒருங்கிணைத்து அதன் அடிப்படையில் ஆட்சி அமைக்கலாம் என்றுகூடக் கூறப்பட்டதுண்டு. தமிழ்நாட்டில் எதிர்ப்புக் கிளம்பியது. இதற்காக பெங்களூரில் பிரதமர் நேரு, காமராசர் போன்ற வர்கள் கலந்து பேசியபோது, தட்சிணப் பிரதேசத்தைக் கைவிடுமாறு தமிழ்நாட்டிலிருந்து  பெரியார் கொடுத்த தந்தி அந்தத் திட்டத்தைக் கைவிடச் செய்தது.
சென்னை மாநிலமாக இருந்த பெயர் தமிழ்நாடு என்று மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை நமது நீண்ட கால கோரிக்கை - தியாகி சங்கரலிங்கனார் அதற்காக இரண்டரை மாதங்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார். அந்தப் பெருமகனாரை இந்த நேரத்தில் நினைவு கூர்வோம் - வீரவணக்கம் செலுத்துவோம்!
‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்கக் கோரி தந்தை பெரியார் அவர்கள் முதன்முதலில் எழுதி, வலியுறுத்தி வந்தார். அண்ணா முதலமைச்சராக இருந்த நிலையில், அதிகாரப்பூர்வமாக ‘‘தமிழ்நாடு’’ என்று பெயர் சூட்டினார்.
ஓர் இனம் என்றால், மொழியால், வழியால், விழியால் ஒன்றுபட்டு இருக்கவேண்டும். அதன் உரிமைகள் காப் பாற்றப்படவேண்டும்.
ஆனால், இன்றுகூட தமிழ்நாட்டுக் கோவில்களில் வழி பாட்டு மொழியாக தமிழ் இல்லை. தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்பது இழிந்த நிலை அல்லவா! அதுபோல தமிழ்நாட்டுக் கோவில்களில் தமிழன் அர்ச்சகனாக முடியாது.
தமிழ்நாட்டு உயர்நீதிமன்றத்தில் தமிழுக்கு இடம் இல்லை. அகில இந்தியத் தேர்வுகளை தமிழில் எழுத முடியாது. இந்திய ஆட்சி மொழிப் பட்டியலில் தமிழ் இல்லை. வழக்காடிகளுக்கு என்ன நடவடிக்கை என்பது புரிவதில்லை.
நவம்பர் முதல் தேதியைக் கொண்டாடும் அதே நேரத்தில், அந்த நாளுக்கான  அர்த்தம் முழுமைப் பெற்றுள்ளதா என்று சிந்திப்பதும், அதனை அடைய இலக்கு நோக்கி செயல் படுவதும் மிக முக்கியமானதாகும். அதனை நோக்கிப் பயணிப் போம் - செயல்படுவோம் - செய்து முடிப்போம்!
- கி.வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்.
சென்னை
1.11.2016

அரசு வசம் வந்த பிறகும் அண்ணாமலை பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரியில் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஏன்?

தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள அறிக்கை
அரசு வசம் வந்த பிறகும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரியில் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஏன்? என்று  வினா எழுப்பி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சிதம்பரம் - அண்ணாமலைப் பல்கலைக் கழகம் என்பது எங்களின் கல்வித் தாய் வீடு! அந்தப் பல்கலைக் கழகம் இல்லை என்றால், தென்னாற்காடு மாவட்டத்தில் கல்விக் கழனி செழித்திருக்காது. தங்களின் திரண்ட செல்வத்தை கோவில் குளங்களை உண்டாக்குவதற்குத்தான் நகரத்தார் பயன்படுத்தி வந்தனர். அதில் விலக்காக அரசர் அண்ணா மலைச் செட்டியார் அவர்கள்தான் கல்விக் கண்ணைத் திறக்கும் ஓர் அரிய தொண்டில் ஈடுபட்டார் - அரசர் முத்தையா செட்டியார் அவர்கள் அதனை மேலும் வளர்த்தார்.
அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டதே!
2013 ஆம் ஆண்டில் அரசுடைமையாக்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு ரூ.200 கோடி மானியமும் வழங்கி வருகிறது.
இப்பல்கலைக் கழகத்தில் உள்ள அரசர் முத்தையா மருத்துவக் கல்லூரியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் தனியார்ப் பல்கலைக் கழகமாக இருந்தபோது எந்தத் தொகையோ அதுவேதான் தொடர்ந்து கொண்டுள்ளது.
அரசு நடத்தும் பல்கலைக் கழகமாக மாறிய பிறகு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ளபடியான கட்டணத் தைத்தானே வசூலிக்கவேண்டும். ஆனால், அங்கு நடப்பது என்ன?
அரசர் முத்தையா மருத்துவக் கல்லூரி கட்டண விவரம்
எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு ரூ.5 லட்சத்து 54 ஆயிரம்
பல் மருத்துவ மாணவர்களுக்கு ரூ.3 லட்சத்து40 ஆயிரம்
முதுநிலை டிப்ளோமாவுக்கு ரூ.8 லட்சம்
முதுநிலை மருத்துவப் படிப்புக்கு ரூ.9.8 லட்சம்
மற்ற அரசுக் கல்லூரிகளில் கட்டண விவரம்
ஆனால், தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்லூரிகளில் கீழ்க்கண்டவாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ரூ.13,600
பல் மருத்துவப் படிப்புக்கு ரூ.11,600
முதுநிலை டிப்ளோமாவுக்கு ரூ.31,125
முதுநிலை மருத்துவப் படிப்புக்கு ரூ.42,025
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின்கீழ் இயங்கும் அரசர் முத்தையா மருத்துவக் கல்லூரி கட்டணத்தையும், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்படும் கட்டணத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், எத்தனை மடங்கு அதிகமாக அரசர் முத்தையா மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படுகிறது என்பது எளிதாகவே விளங்கும்.
ஏனிந்த இரட்டை அளவுகோல்? இதனால் பாதிக்கப் படுவோர் ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தானே!
தமிழக அரசு ஆவன செய்யட்டும்
பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் இவ் வாண்டு கிராமப்புற இருபால் மாணவர்கள்கூட அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு இந்த அதிகக் கட்டணம் பெருஞ்சுமையல்லவா?
நிர்வகிப்பதில்பொருளாதாரச்சுமை இருக்குமானால், அரசு கொடுக்கும் மானியத்தை அதிகரிக்கவேண்டுமே தவிர, பெற்றோர்களைத் தண்டிக்கலாமா? அது சரியா?
தமிழ்நாடுஅரசு இந்தப்பிரச்சினையில் உடனடி யாகத்  தலையிட்டு மற்ற அரசு கல்லூரி கட்டணத்தையே அண்ணாமலைப் பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரி யிலும் வசூலிக்க ஆணை பிறப்பிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.

கி.வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்.

28.10.2016
சென்னை

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா எதிர்த்து வந்த உதய் மின் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு இன்றைய தமிழக அரசு ஒப்புதல் அளித்தது ஏன்?

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா எதிர்த்து வந்த
உதய் மின் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு
இன்றைய தமிழக அரசு ஒப்புதல் அளித்தது ஏன்?
தமிழக அதிகாரம் மத்திய அரசின் கைக்குச் செல்லுகிறதா?
தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்ட அதிமுக்கியமான அறிக்கை
முதலமைச்சர் உடல் நலமோடு இருந்தபோது கடுமையாக எதிர்த்து வந்த, மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ‘உதய்’ மின் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு அ.தி.மு.க. அரசு ஒப்புதல் தந்தது ஏன்? தமிழக அரசின் அதிகாரங்கள் மெல்ல மெல்ல மத்திய அரசால் கபளிகரம் செய்யப்படுகின்றனவா என்ற அதி முக்கியமான வினாக்களை எழுப்பி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:
மிகவும் குறுகிய காலத்தில் பரபரப்பில்லாமல் மிகவும் அமைதியான முறையில் இரண்டு நடவடிக்கைகள் சமீப காலத்தில் நடந்துள்ளன.  பல்வேறு மாநில அரசு களின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துவரும் திட்டமான உதய் மின் திட்டத்திற்கு தமிழக அரசின் உடனடி ஒப்புதல், அதே போல் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் இந்த இரண்டு திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு திட்டங்களையும் முதல்வர் ஜெய லலிதா, மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி, கோவா முதல்வர் லட்சுமிகாந்த பாரிக்கர் மற்றும் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் போன்றோர் கடுமையாக எதிர்த்து வந்தனர். மம்தா இந்த திட்டத்தை நான் இருக்கும் வரை மேற்குவங்கத்தில் நடைபெற அனுமதிக்கமாட்டேன் என்று கூறிவிட்டார்.
முதல்வர் ஜெயலலிதா எதிர்த்தாரே!
ஜெயலலிதா தான் மருத்துவமனைக்குச் செல்லும் வரை அவர் இந்த இரண்டு திட்டங்களையும் கடுமையாக எதிர்த்துவந்தார். தமிழக அரசு இதை கடுமையாக எதிர்க்க காரணம் ‘‘மின் வாரியங்களின் மொத்த கடனில், 75 சதவீதத்தை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஏற்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு, ஒரு முறை மின் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும்; மின் நிலையங்களுக்கு தடையில்லாமல், அதிக நிலக்கரி வழங்கப்பட வேண்டும்‘’ என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளதேயாகும்.
முக்கியமாக உதய் திட்டத்தின் மூலம் எரிசக்தி துறை எளிமையாக்கம் என்ற பெயரில் தனியார் வங்கிகளிடம் மாநில அரசுகள் அதிக கடன் வாங்கவேண்டிய மறைமுக ஏற்பாட்டை மோடி அரசு திட்டமிட்டு செயல் படுத்தியுள்ளது,
மார்ச் 25, 2016 இல் புதுடில்லியில் ஒரு கருத்தரங்கில் பேசிய மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல்  “எங்களுடைய மோசமான அரசியல் எதிரிகள் கூட உதய் திட்டத்தை ஏற்றுக் கொள்ளுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அங்கு ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தவிர உதய் திட்டத்தை அம் மாநிலத்தில் அமல் படுத்துவதற்கான சாத்தியக் கூறு இல்லையென்றுதான் கருதுகிறேன்’’ என்று கூறினார். அப்படி இருக்கும்பொழுது தமிழக அரசின் முடிவில் தலைகீழ் மாற்றம் வந்தது எப்படி?
தமிழக அரசு ஏற்கவேண்டிய நிதிச் சுமை
இத்திட்டத்தின் படி தமிழக மின் வாரியத்தின் 81 ஆயிரத்து 782 கோடி ரூபாய் கடனில் 65 ஆயிரத்து 320 கோடி ரூபாயை இரண்டு தவணைகளில் தமிழக அரசு ஏற்க வேண்டியிருக்கும். மீதமுள்ள 16 ஆயிரத்து 462 கோடி ரூபாய்க்கு கடன் பத்திரங்களை வெளியிட வேண்டும். மேலும் வருங்காலத்தில் மின் வாரியம் எதிர்கொள்ளும் இழப்புகளையும், கடன் பத்திரங்களுக்கான வட்டியையும் தமிழக அரசே ஏற்க வேண்டும். இது சமாளிக்க முடியாத அளவுக்கான நிதி நெருக்கடி என்பதால் தமிழக அரசு எதிர்த்தது. மேலும் உதய் திட்டத்தின் படி ஒரு சில குறிப்பிட்ட தனியார் மின் உற்பத்தியாளர்களே பயன் பெறுவார்கள் .
ஆனால் திடீரென்று கடந்த 21 ஆம் தேதி டில்லியில் பியூஷ் கோயலை சந்தித்துப் பேசிய தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி அவர்கள் உதய் திட்டத்தில் தமிழக அரசு சேர்வதற்கு மாநிலத்தின் சம்மதத்தைத் தெரிவித்தார். ‘’இந்த சந்திப்பே அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது. திடீரென்று தான் அமைச்சர் தங்கமணியின் டில்லிப் பயணம் நிகழ்ந்தது. வழக்கமாக இது போன்ற பயணங்கள் நன்கு திட்டமிடப்படும். ஆனால், அமைச்சர் தங்கமணியின் பயணம் இந்த முறை அவசர கதியில் நிகழ்ந்ததுதான் ‘செப்படி வித்தை!‘
ஒதுக்கித் தள்ளப்பட முடியாத கேள்வி!
தமிழக அரசு இதற்கு முன்பு தான் எழுப்பிய எந்த ஆட்சேபணைகளுக்கும் என்ன பதில் மோடி அரசிடமிருந்து கிடைத்தது என்பதை தெளிவுபடுத்த வில்லை. உதய் திட்டத்தில் தமிழகம் சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் கூட இந்த சந்தேகத்தை எழுப்புகின்றனர்.
தேசிய உணவு பாதுகாப்புத் திட்ட எதிர்ப்பு என்னாயிற்று?
இதே போன்று அக்டோபர் 27 ஆம் தேதி இரவு தமிழக தலைமைச் செயலாளர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழகம் முழுவதிலும் அமல் படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இந்த திட்டத்தை 2013 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் அரசு அவசர சட்டமாகக் கொண்டு வந்த காலத்திலிருந்து முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்த்து வருகிறார். 2014 ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற பின் அவரை முதன்முறையாக சந்தித்த போதும், ஆகஸ்ட் 7, (2015) இல் சென்னையில் முதலமைச்சரை அவரது போயஸ் தோட்ட வீட்டில் மோடி சந்தித்த போதும், இந்தாண்டு மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் ஜூன் 14 ஆம் தேதி மோடியை டில்லியில் சந்தித்த போதும் முதலமைச்சர் கொடுத்த கோரிக்கை மனுக்களில் இந்த விஷயம் முக்கியமாக இடம் பெற்றிருந்தது. குறிப்பாக கடைசியாக மோடி யிடம் கொடுத்த மனுவில் உணவு பாதுகாப்பு சட்டத்திலிருந்து தமிழகத்துக்கு மட்டும் விலக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்றே தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது. இதில் முக்கியமாக இந்த சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து முதல் மூன்றாண்டுகளுக்கு மட்டுமே மானிய விலையில் மத்திய அரசு உணவுப் பொருட்களை மாநிலங்களுக்கு வழங்கும் என்று இருப்பதை 10 ஆண்டுகளுக்கு என்று மாற்ற வேண்டும் என்பதாகும்.
மேலும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களை முழுவதுமாக சரி பார்க்கும் வேலைகளும், பயனாளிகளின் விவரங் களை அவர்களின் ஆதார் எண்ணுடன் சேர்க்கும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிவடைந்தால் மட்டுமே உணவுப் பாது காப்பு சட்டத்தை அமல் படுத்த முடியும். எனவே காலக் கெடு வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் கோரப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது இந்த கோரிக்கைகள் என்ன வாயின என்று தெரிவிக்கப்படவில்லை. இதுதவிர தற்போது உணவுப் பாதுகாப்பு சட்டத்தை அமல் படுத்துவதால் தமிழகத்திற்கு கூடுதலாக 1,193.30 கோடி ரூபாய் செலவாகும் என்று அக்டோபர் 27 ஆம் தேதி அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே உதய் திட்டத்தில் வரும் கடன் நெருக்கடியுடன் சேர்த்து, இந்தக் கடன் நெருக்கடியும் ஒரே நேரத்தில் ஏற்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட நாலரை லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடனில் தள்ளாடிக் கொண்டிருக்கும் தமிழகத்திற்கு சகிக்கவே முடியாத கூடுதல் சுமைதான் இது!
இந்தச் சுமையை தமிழகம் எப்படி சமாளிக்கப் போகிறது என்பதற்கான எந்த விளக்கத்தையும் தமிழக அரசு இதுவரையில் தெரிவிக்கவில்லை. இந்த முடிவுகள் மாநில அமைச்சரவையின் முடிவு கள் என்று சொல்லப்பட்டாலும் இதற்கு முன்பு தமிழக அரசே கடுமையாகஎதிர்த்த நிலைப்பாடு என்னவாயிற்று? தமிழக அரசு விடுத்த கோரிக்கைக்கு மோடி தலைமையிலான அமைச்சரவை ஏதாவது விளக்கம் அளித்துள்ளதா? அப்படி ஒன்றுமே இல்லாத பட்சத்தில், தமிழக அரசை மேலும் நிதிச்சுமை மற்றும் தனியார் மயத்திற்குத் தள்ளவேண்டிய கட்டாய சூழலை உருவாக்கும். இந்த இரண்டு திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி கொடுத்து அதை உடனே அமலுக்குக் கொண்டுவந்தது ஏன்?
‘நீட்’ தேர்வுக்கு ஒப்புதலா?
சமீபத்தில் கல்விக்கொள்கை பற்றி டில்லியில் பேசிவிட்டுத்திரும்பிய கல்வி அமைச்சர் மா.பா.பாண்டியன் அவர்கள்  நல்ல பல கருத்துகளை எடுத்து ரைத்தார் என்று அனைவரும் பாராட்டினர். ஆனால், அவர் பேச்சில் ஒன்றை நமது ஊடகங்கள் கோடிட்டுக் காட்டவில்லை. அதாவது நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நடத்தும் என்று அதிர்ச்சி அறிவிப்பை வெளியிடுகிறார்.
நுழைவுத் தேர்வினை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தொடக்கம் முதலே எதிர்த்து வந்தார். ஏன்?  நுழைவுத் தேர்வு கூடாது என்று சட்டம் கூட அவர் ஆட்சியின்போது இயற்றப்பட்டதுண்டு - நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக அது தள்ளுபடி செய்யப்பட்டாலும், கலைஞர் அவர்களின் தலைமை யிலான ஆட்சியின்போது முறையாக சட்டம் இயற்றப் பட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது (2007). அதுமுதல்  தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு கிடையாது என்பது முக்கியமான - உறுதியான செய்தியாகும்.
தலைகீழாக இத்தகைய முடிவுகள் மாறியதற்கு என்ன காரணம்? முதலமைச்சர் உடல்நிலையினால் ஏற்பட்டிருக்கும் சூழலைப் பயன்படுத்தி  மத்திய அரசின் நிர்ப்பந்தம் என்ற பேச்சு அரசியல் வட்டாரங் களில் அடிபடுவதை புறக்கணித்துவிட முடியாதே!
தமிழகத்தில் அத்தனை எதிர்கட்சித் தலைவர்களும் ஒருசேர நுழைவுத்தேர்வு வேண்டாம் என்று கூறிக் கொண்டு இருக்கும் போது கல்வி அமைச்சர் மா.பா.பாண்டியன் தமிழக அரசு பயிற்சி வகுப்புகளை நடத்தும் என்று கூறியதன் பின்னணியில் மோடி அரசு செயல்படுகிறது என்றே கருத வேண்டியுள்ளது.
முதலமைச்சர் உடல்நலம் பாதிக்கப்பட்ட இந் நிலையில், தமிழக அமைச்சர்களின் போக்கின் மூலம் மெல்ல மெல்ல தமிழக அதிகாரம் மோடியின் கைகளுக்குச் சென்று கொண்டு இருப்பதாகவே தெரி கிறது. இந்த நிலை இல்லை என்று செயல்பாடுகள்மூலம் காட்டவேண்டிய கட்டாய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது! இருக்கிறது!! இருக்கிறது!!!

கி.வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்.

சென்னை
1.11.2016

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...