Tuesday, September 22, 2015

தமிழ் உணர்வோடு தமிழர்கள் வாழ - தமிழ் உணர்வை தொடர்ந்து நிலைநாட்ட திருக்குறளை போற்றி புகழ்ந்து நாம் வாழவேண்டும்; அதுதான் திருவள்ளுவருக்கு செய்கின்ற கடமையாகும்!

தமிழ் உணர்வோடு தமிழர்கள் வாழ - தமிழ் உணர்வை தொடர்ந்து நிலைநாட்ட
திருக்குறளை போற்றி புகழ்ந்து நாம் வாழவேண்டும்; அதுதான் திருவள்ளுவருக்கு செய்கின்ற கடமையாகும்!
தந்தை பெரியார் 137 ஆவது பிறந்த நாள் விழாவில் தி.மு.க. பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் உரை
சென்னை, செப். 21- தமிழ் உணர்வோடு தமிழர்கள் வாழ, தமிழ் உணர்வை தொடர்ந்து நிலை நாட்ட, அய்யா அவர்கள் சொன்னதைப்போல - பெரியார் அவர்கள் சொன்னதைப்போல, திருக்குறளை நாம் போற்றி, புகழ்ந்து என்றைக்கும் நம்முடைய உள்ளத்திலே கொண்டு நாம் வாழப் பழகவேண்டும்; 
அப்படி வாழப் பழகுவதுதான் வள்ளுவருக்குச் செய்கின்ற உண்மையான கடமை என்று இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் உரையாற்றினார் 17.9.2015 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற தந்தை பெரியார் 137 ஆவது பிறந்த நாள் விழா - பெரியார் களஞ்சியம் தொகுதி 37 திருக்குறள் - வள்ளுவர் நூல் வெளி யீட்டு விழாவில் தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
நம்முடைய லட்சியத்திற்குத் துணையாக விளங்குவது  திருக்குறள்!
உங்களையெல்லாம் பார்க்கின்றபோது திருவள்ளுவர் மறுபடியும் பிறந்திருக்கிறாரோ என்கிற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது. திருவள்ளுவரை நாம் போற்றுகிறோம் என்று சொன்னாலும்கூட, நாம் போற்றுவது, அவ்வப்போது போற்று வது, ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு பிரச்சினைக்காக அதனைப் போற்றுவது, இன்னும் சொல்லப்போனால், திருவள்ளுவருடைய திருக்குறள் நமக்கு ஒரு பெரிய ஆதரவாக, துணையாக, நம்முடைய லட்சியத்திற்குத் துணையாக விளங்குவது.
அப்படிப்பட்ட திருக்குறளை நம்முடைய மக்கள் உணரவேண்டிய முறையில் உணரவில்லை. தெளிய வேண்டிய முறையில் தெளியவில்லை. அதனுடைய கருத் துகளில் மாறுபாடுகள் இருந்தாலும், அந்தக் கருத்துக்களிலே எந்தக் கருத்தை மக்களிடம் எடுத்துச் சொல்வதன்மூலமாக அந்தக் கருத்துக்கு மரியாதை கிடைக்கும்; ஒரு சிறப்பு கிடைக்கும் என்று நாம் எண்ணிப் பார்க்கவில்லை.
இலக்கியங்களுக்கெல்லாம் முன்னோடி நூலாக விளங்குகிறது திருக்குறள்!
நீங்கள் ஆழமாக எண்ணிப் பார்த்தால், தொல்காப் பியம் எப்படி தமிழுக்கு முதல் நூலோ - அதுபோல் திருக் குறளும் முதல் நூல். தொல்காப்பியம் எப்படி தமிழுக்கு முதல் நூலாக, முதன்முதலாக எழுதப்பட்ட நூலாக நமக்கு இன்றைய தினம் கிடைக்கின்ற நூல்களிலே மிகப் பழைய நூலாக தொல்காப்பியம் அமைந்திருப்பதைப்போல, திருக் குறள் எழுதப்பட்ட நூல்களிலே மிகத் தொன்மையானதாக - மற்ற இலக்கியங்களுக்கெல்லாம் முன்னோடி நூலாக விளங்குகிறது.
அதனை நம் மக்கள் முன்னோடி நூல் - முதல் நூல் - கருத்துக்களிலே தெளிவு ஏற்படுத்துகின்ற நூல் - அப் படிப்பட்ட நூலை நாம் போற்றவேண்டிய முறையில் போற்றவேண்டும். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டு மானால், தொல் காப்பியத்தைப்பற்றி - அதன் பழைமை யைச் சொல்கின்றவர்கள் பாணினி அவனுடைய இலக் கணம் எப்பொழுது தோன்றியதோ, அதற்கு முன்னாலே தொல்காப்பிய நூல் தோன்றியது என்று சொல்லப்பட் டாலும், அது உண்மையல்ல. தொல்காப்பியம் தோன்றி, அதனுடைய இலக்கணம் தோன்றி, பல நூற்றாண்டுகள் கழித்துதான் பாணினியினுடைய சமஸ்கிருத இலக்கணம் பிறந்திருக்கிறது என்பார்கள்.
அப்படி ஒப்புக்கொள்ளாதவர்கள்கூட, அந்தப் பாணினி இலக்கணம் தமிழில் தோன்றிய இலக்கணங் களுக்கு பின்னாலே அந்த இலக்கணம் தோன்றியது என் பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தமிழில் உள்ள அருமையான ஆழமான கருத்துக்களைக் கொண்ட அந்தத் தொல்காப் பியத்திற்கு அந்தப் பாணினி இலக்கணம் எந்த வகையிலும் இலக்கணமாகாது. வடமொழியில் பாணினி இலக்கணமும், தொல்காப்பியமும் சமத்துவம் உடையது என்கிற கருத்தைக் கூட, வட மொழியில் தொல்காப்பியத்தை இயற்றியவர்கள், அதே நேரத்தில், தென்மொழியில் தமிழில் இலக்கணம் அமைந் தால், அது அதற்குச் சமமாகும் என்று கருதியதுதான்.
தமிழ் மொழி இலக்கணம் மற்ற எல்லா மொழி இலக்கணங்களுக்கும் முந்தையது
ஒரு சிறிய உவமையைச் சொல்ல விரும்புகிறேன். இலக்கணங்களில் தமிழ் இலக்கணம், சமஸ்கிருதம் இலக்கணம், இன்னொரு மொழி இலக்கணம் என்பதைவிட, இலக்கணங்கள் மொத்தமாகக் கருதப்பட்டால், அது திராவிட இலக்கணம்தான். அதனுடைய தொன்மையாது? வள்ளுவர் சொல்கிறபோது, மிக அழுத்தமாக சொன்ன ஒரு கருத்து, மொழி இலக்கணங்களிலேயே தமிழ் மொழி இலக்கணம் மற்ற எல்லா மொழி இலக்கணங்களுக்கும் முந்தையது. அந்த சிறப்பை உணராத முறையில் பல பேர் நடந்துகொள்கிறார்கள்.
தமிழ் முதல் மொழி - தமிழ் இலக்கணம் முதன் முதலில் தோன்றிய இலக்கணம். அதைச் சொல்கிறபோது, தமிழில் உள்ள எழுத்துக்கள்தான் சமஸ்கிருத எழுத்துக் களாக எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்படி எடுத்துக்கொள் ளப்பட்ட  அறம், பொருள், இன்பம் என்று நாம் சொல்வதற் குப் பதிலாக, அறம், பொருள், இன்பம் என்பதைச் சேர்த்து, நான்கு பொருளாக அதனை வளர்த்துப் பேசுகிறவர்கள், இந்தத் தமிழில் உள்ள இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு சொன்னதில்லை.
ஆகவே, எந்த வகையில் பார்த்தாலும், தமிழ் மொழியினுடைய பெருமை, தமிழ் மொழியினுடைய சிறப்பு அதற்குக் குறையாக வடமொழியில் பல கருத்துகளைக் கொண்டு வந்து திணிக்கின்ற முறையில், தமிழ் மொழியில், வடமொழியில் உள்ள கருத்துக்களைத் திணிக்கின்ற முறையில் பல கருத்துக்கள் வந்தன.
திருக்குறளைவிட மூலமான நூல் தமிழுக்கு வேறில்லை
எனவே, அந்த வகையில் ஆழ்ந்து எண்ணிப் பார்த் தால், நான் உங்களையெல்லாம் கேட்டுக்கொள்கிறேன். திருக்குறளைவிட மூலமான நூல் தமிழுக்கு வேறில்லை. திருக்குறளைவிட மூலமான நூல் தமிழில் வேறு இல்லை என்று சொல்கிறபோது, தமிழ் உணர்வை எடுத்துக்காட்டு கின்ற நூல். தமிழ் என்கிற அந்த உணர்ச்சியை, தமிழ் என் கிற நினைப்போடு சேர்த்து சொல்லக்கூடிய - அப்படிப் பட்ட ஒரு நூல் திருக்குறளைத் தவிர வேறு இல்லை.
இன்னொன்றை நீங்கள் எண்ணிப் பார்த்தால், திருக் குறளை ஆழமாக, தந்தை பெரியாரைப்போல அதனை அலசி அலசிப் பார்க்கக்கூடிய பெரியவர்களாக இருந்தால், அந்தத் திருக்குறள் - மற்றவர்கள் சொன்ன கருத்துகளை யெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, மிகச் சிறந்த தமிழ் உணர்ச்சியை அந்தத் திருக்குறளில் காண முடியும்.
ஆகவே நான் உங்களையெல்லாம் கேட்டுக்கொள் வது, திருக்குறளை பெரியார் பார்த்த அந்தப் பார்வையில் பார்த்தால்தான், அதனுடைய சிறப்பு புலனாகும்.
பெரியாரிடமிருந்து விலகிப் பார்ப்பது தமிழர்களுடைய மானத்தை, தமிழர்களுடைய உரிமையைப் பறிப்பதாக இருக்கும்
பெரியார் பார்த்த பார்வையில் பார்க்காமல், வேறு பார்வையில் பார்த்தால், அதனுடைய கருத்து, வடமொழி யில் உள்ள அந்தக் கருத்து - தமிழர்களுக்கு ஈடு கொடுக் கக்கூடிய கருத்து - அந்தக் கருத்து தமிழர்களுடைய மானத்தை, தமிழர்களுடைய உரிமையைப் பறிப்பதாக இருக்கும்.
எனவே, அவற்றை எதிர்த்து, தமிழ் உணர்வோடு தமிழர்கள் வாழ, தமிழ் உணர்வை தொடர்ந்து நிலை நாட்ட, அய்யா அவர்கள் சொன்னதைப்போல - பெரியார் அவர்கள் சொன்னதைப்போல, திருக்குறளை நாம் போற்றி, புகழ்ந்து என்றைக்கும் நம்முடைய உள்ளத்திலே கொண்டு நாம் வாழப் பழகவேண்டும்; அப்படி வாழப் பழகுவதுதான் வள்ளுவருக்குச் செய்கின்ற உண்மையான கடமை என்று கூறி, நான் என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு தி.மு.க. பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் உரையாற்றினார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

இதோ ஒரு எளிமை - இனிமை - மண வரவேற்பு விழா!

20.9.2015 அன்று காலை வந்த நாளேடு ஒன்றில், கர்நாடக அரசு, திருமணங்களை எளிமையாக நடத் துங்கள் - விவசாயிகள் கடன் தொல் லையாலும், ஏழ்மை, வறுமை, எதிர் பார்த்த வருவாய் இன்மையாலும், விரக்தியடைந்து தற்கொலைகளில் ஈடுபடுகிறார்கள். வறட்சி அவர்களை வாட்டுகிறது.
இந்நிலையில் விவசாயிகளே ஆடம்பரமாகத் திருமணங்களை நடத் தாதீர்கள்; கடன் வாங்கி திருமணங் களை நடத்தாதீர்கள் என்று சுற்றறிக்கை விடுத்துள்ளது!
இது வரவேற்கத்தக்க ஒன்றாகும். திருமணங்களும், வரவேற்புகளும், ஏராளமான தடபுடல் செலவில், ஆடம் பரம் வழிந்தோடும் வகையிலும், செல்வத்தின் செல்வாக்கு, சமையல் விருந்தில் காலையிலேயே 3 இனிப் புகள், பகல் இரவு விருந்தில்  4 இனிப் புகள் (அய்ஸ்கிரீம் உட்பட) இத்தியாதி! இத்தியாதி!!
அழைப்பிதழ்களை விதவிதமாக, ஒலிகளை உள்ளடக்கி நேரில் அழைப் பது, நாயன இசை உள்பட எத்தனையோ விதம், ரூபாய் 100-க்கு மேலாகக் கூட இதற்கு (ஒரு அழைப்பிற்கு இவ்வளவு செலவு என்ற டம்பாச்சாரித்தனம்!) ஆகியிருக்கலாம்.
அழைக்கப்படுபவர்கள் எவரும் அழைப்புகளை கண்ணாடிச் சட்டம் போட்டு நிரந்தரமாகத் தங்கள் வீடுகளில் தொங்க விடவா செய்கிறார்கள்? இல் லையே, பின் ஏன் இந்த வீண் ஜம்பம்? செல்வச் செருக்கின் வெளிச்சம்!
தந்தை பெரியார் அவர்கள் சிக் கனத்தின் அவசியம்பற்றி பேசியவர் மட்டுமல்ல, செயலில் செய்து காட்டியவர்; அவரது வாழ்வு நெறியே எளிமையும், சிக்கனமும், பகுத்தறிவும் தானே!
19.9.2015 அன்று மாலை  பிரபல மூத்த கம்யூனிஸ்ட் தலைவர், முதுபெரும் கொள்கை வீரர், தோழர் ஆர். நல்ல கண்ணு அவர்களது பெயரன் பொறியாளர் ப.சதிஷ்குமார் M.E. அவர்களுக்கும், பொறியாளர் ர. பாலபாரதி M.E. அவர் களுக்கும் நடைபெற்ற மணவிழா வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன்!
அங்கே கண்ட காட்சி எளிமையின் இனிமையாக அமைந்திருந்தது!
சென்னை சைதாப்பேட்டை தாடண் டர் நகரில் உள்ள மாநகராட்சியின் கலைஞர் திருமணக் கூடத்தில் மாடியில் நிகழ்ச்சி; கீழே உணவுக் கூடம். எவ்வித ஆடம்பரமும் இன்றி, வழி நெடுக கம்யூனிஸ்ட் கட்சிக் கொடிகள், வழிகாட்டி வருவோருக்கு உதவின!
இரவு சுமார் 7.15 மணிக்கு நான் சென்றேன். எளிய மேடை இருபுறமும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியின், கொடி களும், பதாகைகளும்.
மணமக்கள் கற்ற பொறியாளர்கள், பொருத்தமான வாழ்விணையர்கள்! இரு வரும் பொறியியல் (முதுநிலை) பட்டதாரிகள்.
சுமார் 700 பேர் (ஆண் பெண் இரு பாலரும்) வந்திருந்து உண்மை அன் புள்ளத்தோடு வாழ்த்திச் சென்றனர். தோழர் ஆர்.என்.கே. அவர்களைப் போலவே எளிமை இந்த வரவேற்பிலும் எல்லோரையும் ஆட் கொண்டது! பின் பற்ற வேண்டியது!! பெண்கள் உட்பட தோழர்கள் வந்தோரை, தோழர் முத் தரசன் கீழே நின்று நுழைவு வாயிலில் வரவேற்று அழைக்க,
அங்கே தோழர் அய்யா நல்ல கண்ணு, தோழர் தா. பாண்டியன், சி.மகேந்திரன், வீரபாண்டியன், ஏழுமலை போன்ற தோழர்கள் அழைத்துச் சென்று, மண மக்களுக்கு வாழ்த்துச் சொல்ல உதவினர்.
திரும்பும்போது எல்லோருக்கும் நன்றி கூறும் ஒரு கையடக்கப் பை! அதில் புரட்சி சின்னம் உள்ளே  ஆலன் உட்ஸ் எழுதிய சோசலிசம் என்ற நூலும், ஒரு எழுதுகோல் மணமக்கள் பெயர் பொறித்தது.
எத்தனையோ திருமண வரவேற் புகள் என்ற ஆடம்பரப் பாலைவனத் தில், எளிமையே இனிமை - எடுத்துக் காட்டு என்ற ஒயாசிஸ் இந்த மண வரவேற்பு!
நூல் அளிப்பதை சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகம் முன் னோடியாக இருந்து தாம்பூல முறை யில் புரட்சி செய்தது; தோழர்களும் இப்படிப்பட்ட முறையைக் கடைப் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது!
வசதியிருந்தாலும் வாரி இறைக்க வேண்டுமா என்ன? அதை கல்வி, மருத்துவத் தொண்டறத்திற்கு உதவி மணமக்கள் பெயரைப் போடலாமே!
வாழ்க மணமக்கள் - வருக இந்த எளிமை இனிமை.
தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

பிஜேபியின் சாணிப் புத்தி


மத்தியிலும், சில மாநிலங்களிலும் பிஜேபி ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததும் போதும் மக்கள்                     அனுபவிக்குதுயரங்களும் போதும் - போதும் என்கிற நிலைக்குக் கீழிறக்கத்திற்கு வேக வேகமாகச சென்று கொண்டு இருக்கிறது.
மாட்டுக்கறியைச் சாப்பிடக் கூடாது என்றார்கள் - அதனைத் தொடர்ந்து இப்பொழுது அரசு மருத்துவ மனைகளில் கிருமிகளைக் கொல்லுவதற்கு (Disinfectant) கிருமி நாசினியாக இதுவரை விஞ்ஞான ரீதியாகப் பயன்படுத்தி வந்த பினைல் டெட்டால் போன்ற மருந்து களுக்குப் பதிலாக மாட்டு மூத்திரத்தை (அதில்கூட பசு மூத்திரத்தை) பயன்படுத்த வேண்டும் என்று ராஜஸ் தானில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பிஜேபி அரசு சுற்றறிக்கை விட்டுள்ளது என்பது மிகப் பெரிய அதிர்ச் சியான செய்தியாகும். முதற்கட்டமாக ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப் படுமாம்.
எதில் பரிசோதனை? நோய் வாய்ப்பட்ட மக்களின் உயிரோடு விளையாடிப் பார்க்க விரும்புகிறார்களா? இது ஒரு வகையான விஷப் பரிட்சை Acid Test)
அல்லவா!
இந்த மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்திய காரணத் தால் நோயாளிகள் தொற்றுநோய்க்கு ஆளாகி மரணிக்க நேர்ந்தால் அதற்கான பொறுப்பினை ராஜஸ்தான் அரசு ஏற்றுக் கொள்ளுமா? அப்படியே ஏற்றுக் கொண்டாலும் போன உயிரைத் திருப்பிக் கொடுப்பார்களா?
அரசாங்கங்கள் ஒன்றைத் தயாராக வைத்துக் கொண்டிருக்கின்றன. எதற்கெடுத்தாலும் இழப்பீடு என்பதுதான் அந்தக் கை வந்தகலை!
எதையும் விலை பேசி விடலாம் என்பது எவ் வளவுக் கேவலமானது மனித உயிரைத் துச்சமாகக் கருதக் கூடியது.
1870ஆம் ஆண்டிலே என்ன நடந்தது? இந்தியக் கிராமங்களில் குழந்தைகளுக்குத் தொடர்ந்து சுவாசம் தொடர்பான கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுவதற்குக் காரணமே வீடுகளில் தெளிக்கப்படும் சாணமும், மாட்டு மூத்திரமும்தான் என்று அறிவியல் ரீதியாகக் கண்டறியப்பட்டு, மாட்டுச் சாணத்தையும், மாட்டு மூத்திரத்தையும் தவிர்க்குமாறு ஆங்கில அரசு விளம்பரங்கள் மூலமாகவே நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
பிஜேபி ஆளும் ராஜஸ்தான் அரசு மேற்கொள்ள விருக்கும் இந்த அஞ்ஞான நடவடிக்கையில் மருத் துவத் துறை உடனடியாக தலையிட்டாக வேண்டும்; ஏனெனில் இது மக்களின் வாழ்க்கைப் பிரச்சினை உயிர்ப் பிரச்சினை.
இவர்கள் மேற்கொள்ளும் இந்த முறையை விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அது வரை மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு அறுவைச் சிகிச்சைப் பிரிவுகளில் மாட்டு மூத்திரத்தைத் தெளிப்பதைத் தடை செய்ய வேண்டும்.
பிஜேபியின் அபிமான சாமியாரான ராம்தேவ் என்பவர் ஒரு மருந்தை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வந்தார். அவர் உற்பத்தி செய்யும் அந்த மருந்தை வாங்கிச் சாப்பிட்டால் ஆண் குழந்தை பிறக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்டது. இது விஞ்ஞானப் பூர்வமான வகையில் ஏற்றுக் கொள்ளப் படக் கூடிய ஒன்றா?
செவ்வாய்க் கோளில் தண்ணீர் இருக்கிறது. பனி உறைந்த நிலை காணப்படுகிறது - எனவே மனிதர்கள் வசிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது - நிலா உலகில் வாழலாம் என்கிற அளவுக்கு அறிவியல் உச்ச நிலை யில் உலா வரும் கால கட்டத்தில் இப்பொழுது போய், மாட்டுச் சாணி, மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்துங்கள் என்று சொல்லுவது - மனிதன் இன்னும் காட்டு விலங் காண்டிக் காலத்தில் சஞ்சரிக்க ஆசைப்படுவதாகத்தான் பொருள்படும்.
பக்ரா நங்கல் அணை கட்டப்பட்டு, அதற்கான திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் - இவைதாம் நமது உண்மையான கோவில்கள் மற்றவையல்ல  - நாம் விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று கூறியதோடு அவர் நிற்கவில்லை We are not living in the Cow Dung Age
(நாம் சாணியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்க வில்லை என்று) - நம்மிடையே நிலவும் மூடநம்பிக்கைப் புத்தியையும் ஒரு தட்டுத் தட்டி விட்டார்.
நேரு போன்ற பிரதமர் இருந்த இடத்தில் தான் மாட்டு மூத்திரப் புத்தியோடு ஆட்சிக் கட்டிலில் அமர்பவர்களும் இருக்கிறார்களே, என்ன சொல்ல!
இவ்வளவுக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51A(h) ) பிரிவு மக்களிடையே விஞ்ஞான மனப் பான்மையை வளர்ப்பது- ஒவ்வொரு குடி மகனின் கடமை என்று வலியுறுத்துகிறது. ஆனால் பிஜேபி ஆட் சியாளரோ மாட்டு மூத்திரத்திலும் மாட்டுச் சாணியிலும் விஞ்ஞானத்தைத் தேடிக் கொண்டு திரிகிறார்கள்.
பொதுவாக இந்துத்துவாவாதிகள் என்பவர்கள் பழைமை விரும்பிகள்தான் முற்போக்கான பாதையில் அவர்களின் சிந்தனைகள் பயணிக்காது.
மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய் என்று மாட்டிலிருந்து கிடைக்கும் அய்ந்து பொருள் களையும் ஒரு கலக்குக் கலக்கி அதற்குப் பஞ்சகவ்யம் என்ற நாமகரணமும் சூட்டி, பக்தி நோயால் பாதிக்கப் பட்ட மக்களை பார்ப்பனப் புரோகிதர்கள் குடிக்கச் செய் வதில்லையா! அப்படிக் குடிப்பவர்களிடம் தட்சிணை யையும் கணிசமான அளவுக்குக் கறந்து கொள்வ தில்லையா!
விவேகானந்தர் ஒரு முறை இந்துத்துவாவாதி களைப் பார்த்துக் கூறியதுபோல பசுவைத் தாயாகக் கொண்டவர்களுக்கு அந்த மாட்டுப் புத்தி தானே இருக்கும்?
மக்களிடம் பகுத்தறிவுச் சிந்தனை இல்லை என்றால் மிகப் பெரிய ஆபத்துதான் - வீண் சங்கடங்கள் தான்

அரசு அதிகாரிகளின் தற்கொலைப் பட்டியல் நீண்டு கொண்டே இருப்பது தமிழக அரசுக்குப் பெருமை சேர்ப்பதாகாது!

அரசு அதிகாரிகளின் தற்கொலைப் பட்டியல்  நீண்டு கொண்டே இருப்பது தமிழக அரசுக்குப் பெருமை சேர்ப்பதாகாது!

தமிழர் தலைவர் பேட்டி
நாகுடி, செப்.21- தமிழக அரசு அதிகாரிகளின் தற்கொலைப் பட்டியல் நீண்டு கொண்டே செல்வது இந்த அரசுக்குப் பெருமை சேர்ப்பதாகாது என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
20.9.2015 அன்று புதுக்கோட்டை மாவட்டம் நாகுடியில்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
மத்திய அரசுக்கு வலியுறுத்தவேண்டும்!
நடுவர் மன்றத் தீர்ப்பின்படி நம்முடைய காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான நீர்வரத்து கருநாடக அரசு மறுத்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், கருநாடக அரசைப் பார்த்து ஒவ்வொரு முறையும் நாம் மனு போட்டு கேட்டுக் கொண்டிருப்பதைவிட, அடிப்படையில் தெளிவாக செய்யவேண்டியது - தமிழகத்தில் உள்ள அத்துணை கட்சிகளும் சேர்ந்து தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு செய்தி, ஏன் இன்னமும் டில்லி மேல்முறையீட்டு மன்றத்தை - உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்து, பல ஆண்டுகள் ஆன பிறகும்கூட, அதனை இன்னமும் நடைமுறைக்குக் கொண்டு வராமல் மத்திய அரசு இருக்கவேண்டும்? இதனை வலியுறுத்த அத்துணை இயக்க நண்பர்களும், தலைவர்களும் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
இதனை வலியுறுத்தினாலே, அதனுடைய கடமையை அது தாராளமாகச் செய்யும். அந்த வாய்ப்பை உரு வாக்கவேண்டும்.
அமெரிக்காவிற்கும் மற்ற நாடுகளுக்கும் அழுத்தம் தரவேண்டும்!
அதுபோலவே, ஈழத்தில் நடந்த இனப்படு கொலையைப்பற்றி விசாரிக்க சர்வதேச விசாரணை  தேவை. தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் அவர் களால் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மற்ற கட்சித் தலைவர்களால் வரவேற்கப்பட்ட சூழ்நிலையில், மத்திய அரசு அமெரிக்காவிற்கும் மற்ற நாடுகளுக்கும் அழுத்தம் தரக்கூடிய அளவிற்கு, அய்.நா. சபையில், மனித உரிமை அமைப்பில் அதற்கு வேண்டிய உரிய முயற்சியை எடுக்கவேண்டும்.
ஏற்கெனவே முதலமைச்சர் அவர்கள் சட்டப் பேரவையில் நிறைவேற்றிய அந்தத் தீர்மானத்தில், அய்ந்து முறை பல்வேறு செய்திகளைச் சொல்லியிருக்கிறோம் என்று சொன்னார்கள். அய்ந்து முறை பல்வேறு செய்திகளைச் சொல்லியிருந்தாலும், எது செயல்படுத்தப் பட்டிருக்கிறது என்பது இன்னும் தெரியாத சூழ்நிலை இருக்கிறது. ஆகவே, அந்த சூழ்நிலைக்கு அழுத்தம் தரக்கூடிய கடமை நம் எல்லோருக்கும் உண்டு. ஆகவே, இந்தப் பிரச்சினையில் மீண்டும் மீண்டும் கடிதம், தீர்மானங்களோடு நிறுத்திவிடாமல், மத்திய அரசுக்கு அனைவரும் ஒத்த குரலில் அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்பது மிகமிக முக்கியமாகும்.
பகுத்தறிவு பூமியில் நரபலியா...?
அதுபோன்று, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நரபலி என்கிற சொல்லைக் கேட்கும்போதே அருவருப்பாக இருக்கின்றது. இந்தப் பகுத்தறிவு பூமியில் இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டிருப்பது மிகமிக வேதனைக்கும், வெட் கப்படக்கூடிய  சூழ்நிலையாகும். இதற்குரிய நடவடிக் கைகளை தெளிவாக எடுக்கவேண்டிய கடமை மாநில அரசுக்கு இருக்கிறது. அதற்காகப் பதில் சொல்லவேண்டிய கடமையும் இருக்கிறது. அதனை உறுதியாகச் செய்ய வேண்டும். நாடு போகின்ற போக்கில், மிகத் தெளிவாக இந்தச் செய்திகளை உருவாக்கிக் காட்டவேண்டியது மிகப்பெரிய பொறுப்பாகும்.
அரசு அதிகாரிகள் தற்கொலை
மாநில அரசு அதிகாரிகள் தற்கொலை பட்டியல் நீண்டு கொண்டே இருப்பது இந்த அரசுக்குப் பெருமை தருவ தல்ல. எனவே, அதற்குத் தகுந்த விளக்கமும், மாற்றமும் தேவை. அதுகுறித்து மக்களுக்கு ஒரு தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது அவசியமாகும்.
கட்சி மாறுதலைத் தடுக்காத சட்டம் இருக்கும்வரை...
செய்தியாளர்:தேர்தல் நெருங்கி விட்டாலே,  திராவிட கட்சியில் உள்ளவர்கள் கட்சி
மாறுகிறார்களே அதுபற்றி...?
தமிழர் தலைவர்: கட்சி மாறுதலைத் தடுக்காத சட்டம் இருக்கின்ற வரையில், கட்சிகள் மாறுகிறார்கள். கட்சி மாறுவது கூடாது என்று சொன்னால், கட்சிகளை உரு வாக்குவார்கள்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Thursday, September 10, 2015

இறைச்சி உணவிற்கு மும்பையில் தடையா?

மும்பையில் ஜைன மதத்தினரின் நோன்புக் காலத்தில் மும்பை, தானே மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்  இம்மாதம் 10 முதல் 18 ஆம் தேதிவரை மாமிச உணவுகள் முற்றிலும் விற்கக்கூடாது என்று மும்பை, தானே மாநகராட்சி சுற்றறிக்கை விட்டுள்ளது.   மும்பை தானே நகரில் பெரும் தொழில் நிறுவனங்களை நடத்திவரும் ஜைன மதத்தினர் வெறும் 1.3  விழுக்காடு மட்டுமே வாழ்கின்றனர்.  
செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதிமுதல் 18 ஆம் தேதிவரை ஜைனர்களுக்கான நோன்பு நாட்கள் ஆகும். இந்த நோன்பு நாட்களை முன்னிட்டு மும்பை மற்றும் தானே மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆடு வெட்டுதல், கோழி வெட்டுதல், இவற்றின் இறைச்சியை விற்பது, பொது இடங்களில் அசைவ உணவு பரிமாறுவது, அசைவ உணவுகளை வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து மும்பை மற்றும் தானே மாநகராட்சிக்கு கொண்டு வருவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. 
இந்த தடை உத்தரவு குறித்து மும்பை, தானே மாநகராட்சி நிர்வாகத்தினர் கூறியுள்ளதாவது, பெருகிவரும் ஜைன மக்களின் விருப்பத்தையும், கோரிக்கையையும் நிறைவேற்றவே இந்த தடை விதிக்கப்படுவதாகவும் இதை மீறி இறைச்சி விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள குரோஷி இன மக்கள், இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் நாங்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும். ஏற்கனவே மாட்டிறைச்சித் தடையால் எங்களில் பெரும் பாலானோர் வேலைவாய்ப்பை இழந்து  தவிக்கின்றனர். இந்த நிலையில் இது போன்ற தடைகளால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவோம், இந்தத் தடையை நீக்க வேண்டும் என மும்பை மேயரை சந்தித்து முறையிடுவோம் எனக் கூறினர்.
அப்படி மேயர் எங்களது கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாடவேண்டிவரும்.  போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மும்பை மாநகராட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை சரியானதல்ல என்று கூறிய அவர்கள்  சீக்கியர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள் அனைவருமே இங்கு சிறுபான்மை இனத்தவர்கள்தான். நாம் அவர்கள் அனைவருக்கும் மதிப்பளிக்க வேண்டும். இந்நிலையில், அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என கட்டுப்படுத்தும் இந்த தடையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினர்.
ஜெயின் சமூகத்தினர் மண்ணுக்குக் கீழே விளையும் எந்தப் பொருளையும் உண்ண மாட்டார்கள். அதற்காக அவற்றையும் தடை செய்வார்களோ!
சிவசேனா கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சஞ்சய் ரவுத் கூறியபோது குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை மட்டும் திருப்திப்படுத்த நினைக்காமல் அரசியலமைப்புச் சட்டத்துக்கு மதிப்பளித்து மும்பை மாநகராட்சியின் நிர்வாகம் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
மும்பை, தானே இரண்டு மாநகராட்சிகளையும் சிவசேனா, பாஜக கூட்டணி நிர்வாகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மாநிலத்தில் ஏற்கனவே மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது. சட்டத்தை மீறினால் 5 ஆண்டுகள் சிறை 10 ஆயிரம் ரூபாய் அபராதம்  விதிக்கப்படும். அந்தத் தடையின் காரணமாக பல்லாயிரக்கணக் கான தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையில் மண்ணள்ளிப் போடப்பட்டு விட்டது. இப்பொழுது போதும் போதாதற்கு மாட்டிறைச்சி மட்டுமல்ல. 9 நாட்களுக்கு ஆடு, கோழி, மீன் என்று கூறப்படும் எந்த அசைவு உணவும் பயன்படுத்தப்படக் கூடாது; அதற்கான தொழிலை நடத்தக் கூடாது என்பது கடைந்தெடுத்த காட்டு விலங்காண்டித்தனமான அடக்கு முறை அராஜக ஆணையாகும்.
உணவுப் பழக்கம் என்பது தனி மனிதரின் உரிமையைச் சேர்ந்தது. அதில் மூக்கினை நுழைக்க யாருக்கும் உரிமை வழங்கப்படவில்லை.
குடிமக்களின் மூன்று வேளை உணவுக்கு உத்தர வாதம் செய்ய வக்கற்ற அரசு, தனி மனிதன் உண்ணக் கூடிய உணவு விடயத்தில் அத்துமீறி நுழைவது சட்ட விரோதமும், மனித விரோதமும் ஆகும்.
மத்திய பிஜேபி ஆட்சி வந்ததும் வராததுமாக அது தன்னுடைய ஹிந்துத்துவா நாற்றமெடுத்த நிகழ்ச்சி நிரலை வலுக்கட்டாயமாகத் திணிப்பதிலேயே மூர்க்கத் தனத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது.
வெகு மக்கள் கிளர்ச்சியின் மூலமாகத்தான் இந்த ஹிந்துத்துவா பாசிச சக்திகளை அடக்க முடியும். மிதிக்க மிதிக்க புழுவும் புலியாகும் என்பது இயற்கை நியதி;  அதனை பிஜேபியும் அதன் சங்பரிவார்களும் உணரத் தவறினால் அதற்கான விலையைக் கொடுத்தே தீர வேண்டும் என்று எச்சரிக்கின்றோம்.
மாட்டிறைச்சித் தடையை அகில இந்திய அளவில் கொண்டு வரும் திட்டத்தை மத்திய அரசு விரிவு படுத்தும்போது இதன் தன்மை என்னவென்று அப் பொழுது கண்டிப்பாகவே புரிந்து விடும்.

Monday, August 31, 2015

சட்டத்தின்மூலம் ஜாதியை ஒழித்து விட்டு ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று சொல்லட்டும்!

ஊன்றிப்  படித்து உண்மையை உணர்வீர்!
  • குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தை வைத்து ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்பதா?
  • ஆர்.எஸ்.எஸ். குருநாதர் கோல்வால்கர் ஞான கங்கையில் ஜாதி காப்பாற்றப்பட வேண்டும் என்கிறாரே!
  • சட்டத்தின்மூலம் ஜாதியை ஒழித்து விட்டு ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று சொல்லட்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள சமூக நீதிக்கான அறிக்கை

குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை  வெற்றிக்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி!

ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்போர் - சட்டப்படி ஜாதியை ஒழித்துவிட்டு, அதன்பிறகு அந்தக் கோரிக்கையை முன் வைக்கட்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

குஜராத்தில் அண்மையில் பட்டேல் ஜாதியினர் தாங்களும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கப் பட்டு, இடஒதுக்கீடு தர வேண்டும்; குஜராத் மக்கள் தொகையில் 15 விழுக்காடு தாங்கள் உள்ளதாகக் கூறி, மிகப் பெரிய கிளர்ச்சி நடத்தினர்.

குஜராத்தில் நடந்தது என்ன?

குஜராத் அரசு இதனை அடக்க முடியாத அளவுக்குச் சென்றதால், இராணுவத்தை அழைத்து அமைதி திரும்பும் நிலையை ஏற்படுத்த வேண்டியதாயிற்று.

150 பேருந்துகள் எரிக்கப்பட்டன; துப்பாக்கிச் சூடு! 10 உயிர்களுக்கு மேல் பலி! காவல்துறையின் அடக்குமுறை காரணமாக ஏற்பட்டது என்பது குஜராத் உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள செய்தி; பல ஊர்களில் ஊரடங்கு உத்தரவு.
சட்டம், ஒழுங்கு, வளர்ச்சி - எல்லாம் மாடல் குஜராத்திலேயே கேள்விக் குறியாயிற்று!

மோடியே புலம்புகிறார்

காந்தி பிறந்த மண்ணில் இப்படியா என்று பிரதமர் மோடியே புலம்பியுள்ளார்!
இதன் தாக்கமும், வேகமும் மற்ற வட மாநிலங்களிலும் பரவும் என்ற நிலை உள்ளது.

இதனை முன்னெடுத்து, அழைப்புக் கொடுக்க பட்டேல் ஜாதியைச் சேர்ந்த ஹார்திக்பட்டேல் என்ற 22 வயது இளைஞர் - பட்டிதார் அனாமத் அந்தோலன் சமிதி - என்ற ஓர் அமைப்பின் அமைப்பாளராக உள்ளார்.

ஹார்திக்பட்டேலின் குழப்பம்

அவருக்கு இடஒதுக்கீடு - சமூக நீதி பற்றிய முழுத் தெளிவு இல்லை என்பது பற்பல நேரங்களில் அவரது கருத்துக் குழப்பத்தின் மூலம் தெரிகிறது.

பட்டேல் சமூகத்திற்கு இடஒதுக்கீடு தேவை; அது கிடைக்கா விட்டால் யாருக்குமே கிடைக்காத அளவுக்கு அந்த இடஒதுக்கீடு அறவே ஒழிக்கப்படுதல் வேண்டும் என்று பேசுவது அவரது கருத்துக் குழப்பத்திற்குச் சரியான எடுத்துக்காட்டு.

(அவரே டில்லி பேட்டியில் - 30.8.2015) அதை மாற்றி OBC  பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் எங்களை இணைத்ததோடு இதைக் கோரும் மற்ற ஜாதியினரை இணைத்து ஒரு தேசீய முன்னணியை உருவாக்கும் என்றும் பேசியுள்ளார்)

எம்.ஜி. வைத்யா என்ன கூறுகிறார்?

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை விளக்கவாதியான எம்.ஜி. வைத்யா (என்ற பார்ப்பனர்) ராய்ப்பூரில் நேற்று உடனே செய்தி யாளர்கள் சந்திப்பில், (ஆதாரம்: 31.8.2015 ஹிந்து நாளேடு)
ஜாதி அடிப்படையில் தரும் இடஒதுக்கீடு (கல்வி, உத்தியோகங்களில்) உடனடியாக ஒழிக்கப்படல் வேண்டும்; ஏனெனில் இனி ஜாதியை அடிப்படையாகக் கொள்வது என்பது எவ்வகையிலும் பொருத்தமானது அல்ல என்று கூறுகிறார்.

இதன் மூலம்தான் இந்த இடஒதுக்கீடு போராட்டத் திட்டம் விதை எங்கே உருவானது என்ற நியாயமான சந்தேகம் நாட்டில் பல சமூகநீதிப் போராளிகளுக்கும் உண்டாவது இயல்புதானே!

ஜாதி ஒழிப்புக் கொள்கை ஆர்.எஸ்.எசுக்கு உண்டா?

ஆர்.எஸ்.எஸ். கருத்து - கொள்கை என்பது தெளிவாகிறது. அவர்களை நோக்கி நாம் சில

கேள்விகளை முன் வைக்க விரும்புகிறோம்:

(1) ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டினை ஒழிக்க வேண்டுமென்று  முழங்கும் ஆர்.எஸ்.எஸ்.,  ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்லத் தயங்குவதேன்?
 
ஜாதிபற்றி கோல்வால்கர்

சட்டம் போட்டு - ஜாதியை ஒழித்தால் -  ஜாதி அடிப்படை இடஒதுக்கீடு தானே ஒழிந்து விடுமே! அதற்கு ஆர்எஸ்.எஸ். தயாராகாது; சந்தேகமிருந்தால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தத்துவ கர்த்தா -  சர்சங்க் ஜாலக் முதன்மையர் கோல்வால்கரின் ஞான கங்கை (Bunch of Thoughts) நூலைப் படிக்கட்டும்.

நமது சமுதாயத்தின் மற்றொரு விசேஷ அம்சம் நான்கு வருண அமைப்பு ஆகும். இன்று அது ஜாதிவாதம் என்று கூறிக் கேலி செய்யப்படுகிறது. வருண அமைப்பு என்று கூறுவதே கேவலமானது என்று நம் மக்கள் எண்ணுகின்றனர். அந்த நால்வருண அமைப்பில் உருவாகிய சமூக அமைப்பினை, சமூக சமநீதிக்குப் புறம்பானது என்று தவறாக எண்ணுகின்றனர்.

வருண அமைப்பில் தோன்றிய உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற  ஏற்றத் தாழ்வு உணர்வு சமீப காலத்தில் தோன்றியதாகும் என்று எழுதியுள்ளார் கோல்வால்கர்.

எவ்வளவு பெரிய கோணிப் புளுகு இது! மனு தர்மத்தை வெள்ளைக்காரனா எழுதினான்?

இவர்களின் சாஸ்திரங்கள் என்ன கூறுகின்றன?

மனுஸ்மிருதியில் எடுத்த எடுப்பில் முதலாவது அத்தியாயத்தில் 87ஆவது சுலோகத்தில் உள்ளது என்ன?

அந்தப் பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்று வதற்காக தன் முகம், தோள், துடை, பாதம் இவைகளினி ருந்து உண்டான பிராமண, க்ஷத்திரியர், வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கு மறுமைக்கு உபயோகமான கருமங்களை தனித்தனியாக பகுத்தார்.

 88வது சுலோக பதில்:

பிராமணனுக்கு ஓதுவித்தல்; ஓதல், யக்யம் செய்தல், தானங் கொடுத்தல், தானம் வாங்குதல் ஆகிய தொழிலை ஏற்படுத்தினர்.

91வது சுலோகத்தில்

சூத்திரனுக்கு இம்மூன்று வருணத்தாரும் பொறாமை இன்றி பணி செய்வதை முக்கியமான தருமமாக ஏற்படுத்தினார்.

இதன்படி கீழ்ஜாதி மக்களுக்கு காலங்காலமாய் கல்வி அதன் காரணமாய் வேலை வாய்ப்பு உரிமை மறுக்கப் பட்டதன் விளைவாக எழுந்த குரல் தான் பிறகு சமூகநீதி முழக்கமாய் மாறியது.

எல்லார்க்கும் எல்லாம் என்றால் இடஒதுக்கீடு தேவைப்படாது. இருப்பது குறைவானது; பசித்தவர்கள் அதிகம். யாருக்குத் தரப்படல் வேண்டும் என்பதற்கான பதில்தான் இடஒதுக்கீடு.

பசியேப்பக்காரனுக்கு முதல் பந்தி புளியேப்பக்காரனுக்குக் கடைசிப் பந்தி
இது எப்படி தவறாகும்?

உயர்ஜாதியினரால் சேவை என்ற முகமூடி போர்வையைப் போர்த்திக் கொண்டு ஹிந்து வருண தர்மத்தைத் தாங்கிப் பிடிக்கும் ஹிந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அதன் தலைவர் எப்படி ஜாதியை ஒழிக்கச் சொல்வார்?

ஜாதி வாரிக் கணக்கெடுப்பை வெளியிடாதது ஏன்?

(2) நாடு முழுவதும் முன்பு அரும்பாடுபட்டு முந்தைய அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசின் போது ஒப்புக் கொள்ள வைத்த ஜாதிவாரி கணக்கு - மக்கள் தொகைக் கணக்கு எடுக்கும்போது இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கையின்படி, எடுக்கப்பட்ட ஜாதிவாரி புள்ளி விவரத்தை - சென்சஸ் மக்கள் தொகை கணக்கீட்டை, பழைய சட்ட வரைமுறையின்படி அது ரிஜிஸ்டிரார் ஜெனரல் சுதந்தரமாக வெளியிட வேண்டிய கணக்கீட்டை, இம்முறை மோடி அரசு பிரதமர் அலுவலகம் மூலம் வெளியிட்டதே -சட்ட நடைமுறை விரோதச் செயல் அல்லவா! அதுவல்லாமல் முழுமையாக ஜாதி வாரியும் இணைத்து வெளியிடாமல் மதக் கணக்கினை மட்டும் வெளியிட வேண்டிய அவசரம் என்ன?

ஜாதிவாரியான கணக்கீடு வெளியிடாததற்கு தென்னை மரத்தில் ஏறியவன் புல் பிடுங்கப் போனதாகச் சொன்ன சமாதானம், போல தவறுகள் உள்ளன என்று ஏனோ தானோ வெண்டைக்காய் விளக்கம் எதற்கு? மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமையாகத் தானே வெளியிடப்பட வேண்டும்? இதனை பிரதமர் அலுவலகமா ஆணையிட்டு சில பகுதிகள் மட்டும் வெளியிட வேண்டும்?

எனவே, ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்ற ஆர்.எஸ்.எஸ். மாய்மாலம் சுத்தப் புரட்டு ஆகும்!

அரசியல் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதி என்ற சொல் இடம் பெற்றுள்ளதை அறியாதவர்களா இவர்கள்?

 அறியாமையா? தகிடு தத்தமா?

(3) தற்போதைய சமூகநீதி இடஒதுக்கீட்டுக் கால நிர்ணயம் இந்திய அரசியல் சட்டத்தில் கல்வி வேலை வாய்ப்பில் கிடையாது.

அரசியல் தேர்தலில் ரிசர்வ் தொகுதிக்குத்தான் 10 ஆண்டு முதலில் கூறி அது நீட்டிக்கப்பட்டு வருகிறது.

அதையும், காலநிர்ணயம் செய்யப்படாத கல்வி, வேலை வாய்ப்பையும் ஒன்றாகக் குழப்புவதும் ஒன்று அறியாமை; இன்றேல் திட்டமிட்டு தகிடுதத்தம்  புரிந்து கொள்ளுங்கள்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

31.8.2015,
சென்னை

Saturday, August 29, 2015

மதிய உணவுத் திட்டத்திலும் கை வைக்கும் மத்திய பிஜேபி அரசு.

இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பெரும் பணக்காரர்கள் - ஜாதியில் உயர்ந்த இடத்தில் இருக் கும் பார்ப்பனர்களின் கூட்டாட்சியாகவே நடைபெறுகிறது என்பது வெளிப்படை.

இந்த இரண்டு நிலைப்பாடுகளுமே ஏழை  எளிய மக்களுக்கும், சமூக நீதி தேவைப்படும் மக்களுக்கும் எதிரானதே.

ஓர் அரசின் முக்கிய கடமை அடிப்படைக் கல்வியை அனைவருக்கும் கொடுப்பதே! அந்த வகையில் தேவையான அனைத்து உதவிகளையும் ஆர்வமோடு செய்தாக வேண்டும். ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசின் சிந்தனையும், செயல்பாடும் எந்தத் திக்கு நோக்கி இருக்கிறது?

திடீரென்று ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. மாநிலங்களில் மிக முக்கியமாக செயல்பட்டு வரும் மதிய உணவுத் திட்டத்துக்காக வழங்கப்படும். மானியம் இல்லாத எரிவாயு உருளைக்கான உதவி நிதியை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன் பொருள் என்ன? வீட்டில் மதிய உணவுக்கு வழியில்லாத நிலையில், பள்ளிகளில் அளிக்கப்படும் ஏழை, எளிய மக்கள் வீட்டுப் பிள்ளைகளின் வயிற்றில் தடி கொண்டு தாக்கும் மனிதாபிமானமற்ற  குரூர மனப்பான் மையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள மட்டரகமான முடிவு இது என்பதல்லாமல் வேறு என்னவாம்?

இந்தியாவிலேயே இலவச உணவுத் திட்டத்தை (காலை சிற்றுண்டி) முதன் முதலாக அறிமுகப்படுத்தியது நீதிக் கட்சியே! பிட்டி தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்தபோது சென்னையில் குறிப்பிட்ட பகுதிகளில் அதனைச் செயல்படுத்திக் காட்டினார். (இலவச புத்தகம், உடை உட்பட) அதன் காரணமாக நடைபாதைகளில் வாழும் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள்கூடப் பள்ளிக்கு வரும் உந்துதல் உண்டாக்கப்பட்டது.

கல்வி வள்ளல் காமராசர் காலத்தில் அது மேலும் விரிவாக்கப்பட்டது; எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக வந்தபோதும், கலைஞர் அவர்கள் ஆட்சியின்போதும் மேலும் மேலும் கவனம் செலுத்தப்பட்டு சத்துணவுத் திட்டமாகப் பரிணாமம் பெற்றது என்பது தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் குறிப்பிடத்தக்க  - அடிக் கோடிட்டுக் காட்டத்தக்க செயல்பாடாகும்.

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் என்ற பெயரில் (1.7.1982) புதுப் பொலிவுடன் இத்திட்டம் வளர்ச்சி பெற்றது 2 முதல் 5 வயதுக்குட்பட்ட முன் பருவக் கல்வி பயிலும் குழந்தைகள் மற்றும் 5 முதல் 9 வயதுக்குட்பட்ட தொடக்கப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கும் இச்சத்துணவுத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. அரிசிச் சோறு, காய்கறிகள், பருப்பு உள்ளடக்கிய சத்துணவு வழங்கப்பட்டது. 1984 முதல் 10 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பயன் பெறும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டது.

1989 இல் ஆட்சிக்கு வந்த கலைஞர் அவர்களோ, அர்த்தமுள்ள சத்துணவுத் திட்டமாக வளர்த்தெடுத்தார் சத்துணவில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முட்டை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2001ஆம் ஆண்டில் கொண்டைக் கடலை பச்சைப் பயிறு, வேக வைத்த உருளைக்கிழங்கு வழங்கப்பட்டன. 2006ஆம் ஆண்டில் வாரம் மூன்று முட்டைகள் அளிக்கப்பட்டன. பின்னர் 5 முட்டைகளாகின. முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழமும் வழங்கப்பட்டது.

மதிய உணவுத் திட்டம் என்கிறபோது - இந்தியா விலேயே தமிழ்நாடு இத்திசையில் தனி அத்தியாயம் படைத்த பூமியாகும். தமிழ்நாடு அறிமுகப்படுத்திய இத்திட்டம்தான் இப்பொழுது இந்திய அளவிலே செயல்படுத்தப்படுகிறது. இந்த வளர்ச்சியைத் தடுப்பது தான் மத்திய அரசின் மனு நீதிக் கொள்கையா!?

14 வயது வரையில் அனைத்து இருபால் சிறுவர் களுக்கும் அடிப்படை  இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் 44ஆம் பிரிவு அடித்துக் கூறுகிறது. ஆனாலும் அது நிறை வேற்றப்படவில்லை; மறுபடியும் ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு அதே உறுதிமொழி மேற் கொள்ளப்பட்டது. இந்த அடிப்படைக் கடமைகூட நிறைவேற்றப்படாத நிலையில் மதிய உணவுத் திட்டத்தைக் கொல்லைப்புற வழியாக மத்திய பிஜேபி ஆட்சி முடக்குவது - ஒரு வகையான மனுதர்மச் சிந்தனையே!

வளர்ச்சி வளர்ச்சி என்று சொல்லி கடல் அளவுப் பிரச்சாரம் செய்து மக்களை மயக்கி ஆட்சிப் பீடம் ஏறிய நரேந்திரமோடி பள்ளிப் பிள்ளைகளின் கல்விக் கண்களைக் குத்துவது எந்த வகையில் நியாயமானது?
மதிய உணவு திட்டத்தால் இந்தியா முழுமையும் பலன் அடையும் மாணவர்கள் 10 கோடி உதவி பெறும் பள்ளிகளில் எண்ணிக்கை 11.67 லட்சமாகும்.

இதனை மேலும் வளர்க்க வேண்டிய ஓர் அரசு, அதனைக் குழி தோண்டிப் புதைக்க எத்தனிக்கலாமா? கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியைக்கூட இந்தப் பிஜேபி அரசு குறைத்து விட்டது என்பது கசப்பான - வெளிப் படுத்தித் தீர வேண்டிய உண்மையாகும்.

1966ஆம் ஆண்டு கோத்தாரி ஆணையம் மத்திய அரசின் மொத்த உற்பத்தியில் 6 விழுக்காடு ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறியது. ஆனால் அதிகபட்சமாக ஒரே ஒரு ஆண்டில் மட்டும்தான் 4.2 விழுக்காட்டை எட்டியது. பிஜேபி ஆட்சியில் கடந்த நிதியாண்டில் கல்விக்கான நிதி ரூ.4000 கோடி  குறைக்கப்பட்டது. இதனால் படிப்பில் இடை யில் நிற்கும் (Dropouts) மாணவர்களின் எண்ணிக்கை கூடுதல் ஆகும் ஆபத்து இருக்கிறது.

இவ்வளவுக்கும் கல்விக்கென்று அரசு தனி வரியையே வசூலிக்கிறது. மதிய உணவு திட்டத்திற்குக் கடந்த ஆண்டு ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. இவ் வாண்டோ வெறும் ரூ.9 ஆயிரம் கோடிதான் ஒதுக்கப்பட் டுள்ளது. இந்த நிலையில் மதிய உணவுக்கான எரிவாயு மானியத்தையும் நிறுத்துகிறது என்றால் இதன் பின்னணி என்ன?

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 6 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுக்கும் அரசுக்கு மதிய உணவுக்கான எரிவாயு மானியத்தினால் என்ன நெருக்கடி ஏற்படப் போகிறதாம்?

குழந்தைத் தொழிலாளர்கள் சட்டத்தில் ஏற்கனவே ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குலத் தொழிலைச் செய்தால் அது குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வராது என்று கூறப் பட்டுள்ளது. இதன் மூலம் ஆச்சாரியாரின் (ராஜாஜியின்) குலக் கல்வித் திட்டத்தை வேறு வழியில் அமல்படுத்த முனைந்துள்ளது.

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்கிற மனு தர்ம ஆட்சியை (பிஜேபியின் நோக்கமே இந்துத்துவா ஆட்சியை அமைப்பதுதானே!) மறைமுகமாகக் கொண்டு வருகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களே உரிமைப் போருக்குத் தயாராவீர்!

மத்திய அரசின் சமையல் எரிவாயு மானியம் ரத்து குறித்து தமிழ்நாடு அரசு வாயைத் திறக்காதது ஏன்? அரசு விளக்க வேண்டும்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...