Tuesday, June 23, 2015

மீண்டும் போலியோவா?

உத்தரப்பிரதேச மாநிலம், பரித்பூர்(பரேலி மாவட் டம்) பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தை களின் ரத்தமாதிரியைப் பரிசோதித்த போது போலியோ வைரஸ் கிருமி தாக்கி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாவட்டத்தில் உள்ள மீரஞ்கஞ்ச், பரித்பூர், நவாப்கஞ்ச், பஹேரி, கேசர்பூர், ரிதோரா, காலாப்பூர் போன்ற தாலுக்காக்களில் உள்ள குழந்தை களிடமிருந்து பெற்ற மாதிரிகளில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உடலில் போலியோ வைரஸ் கிருமித் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதை உறுதி செய்ய அனைத்து மாதிரிகளும் மும்பை மற்றும் அய்தராபாத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கூறிய தகவல் அதிர்ச்சியளிக்கிறது.  கடந்த வாரம் பரேலி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கால்வலி, முடக்குவாத பாதிப்பு, போன்றவைகள் உள்ளதாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இது குறித்து உடனடியாக உலக சுகாதார அமைப்பிற்கு தகவல் அளிக்கப்பட்டுவிட்டது.  தகவல் தெரிவிக்கப்பட்ட உடன் 6 சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு வருகை தந்தது, அவர்கள் மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறும் குழந்தைகளை முழுமையாக பரிசோதனை செய்தபோது அந்தக்குழந்தைகளை போலியோ வைரஸ்  கிருமி பாதித்த அடையாளம் உள்ளதாக தெரிவித்தனர். 
இதனை அடுத்து மாவட்டம் முழுவதிலுமுள்ள 15 வயதிற்குட்பட்ட ஆயிரம் குழந்தைகளிடம் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று பரிசோதனை நடத்தினர். இந்த சோதனையில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ வைரஸ் கிருமித்தொற்று இருப்பது தெரிய வந்தது. தற்போது 460 சோதனை முடிவுகள் வெளியாகி யுள்ளன. இதில் 200 மாதிரிகளில் போலியோ வைரஸ் கிருமித் தொற்று இருப்பதாக தெரிகிறது. இன்னும் 600-க்கும் மேற்பட்ட மாதிரிகளின் சோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது என்று தெரிகிறது.
நிலைமை இப்படி இருக்க, மத்திய சுகாதாரத்துறை வேறு மாதிரி அறிக்கை வெளியிட்டுள்ளது, அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் பரேலி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்குக் கால் வலி மற்றும் வலுவின்மை போன்ற காரணங்களால் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இவர்களுக்குப் போலியோ நோய் தாக்கி இருக்குமா என்று உறுதியாக கூறமுடியாது. இருப்பினும் சிகிச்சையை மேற்கொள்ளவும் மேலும் இதே போல் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீண்டும் பரிசோத னைக்கு ஆட்படுத்தவும் நடவடிக்கைகள் மேற் கொள் ளப்பட்டு வருகின்றன.  இது யாரை ஏமாற்றும் வேலை?  2010-ஆம் ஆண்டு இதே மாவட்டத்தில் உள்ள பமூரா என்ற கிராமத்தில் இறுதியாக போலியோ நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக் கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து 3 ஆண்டுகள் போலியோ நோய் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதனால் இந்தியாவை போலியோ நோய் இல்லாத நாடாக உலக சுகாதார அமைப்பு  அறிவித்திருந்தது.   
மோடி அரசு ஆட்சிக்கு வந்தில் இருந்து சுகாதாரத் துறைக்குத் தேவையான நிதியை குறைத்து விட்டது. முக்கியமாக தொற்றுநோயான எலும்புருக்கி நோய் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை நிறுத்திவைத்தது இதேபோல் போலியோ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போலியோ தடுப்பு மருந்து குறித்த தெருமுனைப் பிரச்சாரங்களை முழுமையாக தடை செய்து விட்டது.   
ஆரம்ப சுகாதார நிலையங்களில் போலியோ நோய் தடுப்பு மருந்துகளுக்கு என்று இருந்த சிறப்பு மருத்துவப் பிரிவை ரத்து செய்து பொது மருத்துவ நோயாளி களுக்கான சிகிச்சையாக மாற்றப்பட்டது.இதனால் போலியோவிற்கென்று தனிப்பட்ட கவனம் மருத்துவர் களால் செலுத்த முடியாமல் போனதால் இந்த நிலை உருவாகியுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 
  நாடு முழுவதும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் அங்கன்வாடிகளுக்கான நிதியை மாநிலங்களே திரட்டிக் கொள்ள வேண்டும் என்று கூறி நிதிநிலை அறிக்கையில் நிதியை வழங்காமல் நிறுத்தியது மோடி  அரசு. ஏற்கெனவே குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் அரியானா போன்ற மாநிலங்களில் ஊட்டச்சத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில் உபி-யில் போலியோ நோய் பரவும் செய்தி போலியோ இல்லாத நாடு இந்தியா என்ற நிலையில் மாற்றம் வர வாய்ப்புள்ளது.
இவ்வளவு பிரச்சினைகள் நடந்த பிறகும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நாடா, பிகார் தேர்தலில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளார். பிரதமர் மோடியோ யோகாவில் மூழ்கியுள்ளார். மக்கள் நல் வாழ்வுத் துறைக்காக மற்ற மற்ற நாடுகள் ஒதுக்கும் தொகையோடு ஒப்பிடும் பொழுது இந்தியா பின் தங்கியே உள்ளது. சீனா 3%, ருசியா 3.8%, நேபாளம்கூட 2.2%, ஆனால் இந்தியாவிலோ வெறும் 1.3% சுகாதாரத்துக்காக ரூ.35,163 கோடியிலிருந்து ரூ.29.653 அரசு குறைத்து விட்டது.
ஒரு நாட்டின் முதுகெலும்புப் பிரச்சினையில் எவ்வளவு அலட்சியமாக பிஜேபி அரசு இருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாமே. உயிர் காக்கும் மருந்துகளின் விலையும் இந்த ஆட்சியில் பல மடங்கு உயர்த்தப்பட்டு விட்டது.
அதே நேரத்தில் கங்கையைச் சுத்தப்படுத்த 20 ஆயிரம் கோடி ரூபாயைக் கொட்டி அழப் போகிறார்களாம். நோய் வருவது அவாள் அவாள் தலையெழுத்து - கர்மப் பலன் என்று இந்துத்துவாவின் தத்துவார்த் தத்தை சொன்னாலும், சொல்லுவார்கள் - யார் கண்டது?
போலியோ நோய் இல்லாத நாடு என்ற தைரியத்தில் இந்திய மக்கள் நிம்மதியாக இருந்தனர். மோடி ஆட்சியில் அதற்கும் ஆபத்து வந்து விட்டது. இது ஓர் அபாயகரமான நிலையே!

யோகா திராவிடர் கலையே! ஆரியர்களுடையது அல்ல!

யோகா திராவிடர் கலையே! ஆரியர்களுடையது அல்ல!
சூழ்ச்சியால், தங்கள் கலையாக்கிக் கொண்டனர்

பெங்களூரு மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல அதிரடி!
பெங்களூரு ஜூன் 23_ யோகக்கலை திராவிடக் கலாச்சாரம் கொடுத்த கொடையாகும், அதை ஆரியர்கள் சூழ்ச்சி செய்து தனதாக்கிக் கொண் டார்கள்  என்று, நிடுமா முடி மடத்தின் மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல சுவாமிகள் தெரிவித்தார்.
பெங்களூரு நகரில் திங்களன்று நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் நிடுமாமுடி மடத் தின் மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது யோகா குறித்து அவர் கூறியதாவது:  யோகா கலை என்பது வாழ்வியல் தொடர்பான ஒன்று இது சிந்துவெளி நாகரிகத்தில் இருந்து தொடர்ச்சியாக திராவிட நாகரிகம் உள்ள இடங்கள் அனைத்திலும் வியாபித் திருந்தது. இது ஒரு தனிப் பட்ட இந்து மதத் துற வியோ அல்லது முனிவர் களோ வழங்கியது அல்ல, யோகாவிற்கும் ஆரிய வேத கலாச்சாரத்திற்கும் எள்ளளவும் தொடர் பில்லை. ஆரியர்கள் திரா விடர்களின் இந்த வாழ் வியல் கலையை தங்கள தாக்கிக் கொண்டனர். பிறகு அதனுடன் வேத ஸ்லோகங்களை இணைத்து அதை வேதகால கலையைப் போல் மாற்றிவிட்டனர்.   யோகா என்பது இந்து மத முனிவர்கள் அல்லது குருக்கள் கொண்டு வந்த கலை என்று தற்போது அதிகம் பேசப்பட்டு வரு கிறது. ஆனால் இது முழுவதும் பொய்யான ஒன்றாகும். யோகா கலையை வேதகாலத்தில் கற்றுக்கொண்டவர்கள் தங்களது மாணவர்களுக்கு இந்தக்கலை குறித்த பொய்யான தகவலைக் கூறிவைத்தனர். இந்த பொய்த்தகவல் காரண மாக பிற்காலத்தில் இது வேதமதம் தொடர்புடைய தாக மக்கள் நினைத்துக் கொண்டனர்.   யோகா என்பது மதம் தொடர்பானது அல்ல; இது மனித குலத்திற்குத் தேவையான நல்ல ஒரு மென்மையான உடற் பயிற்சியாகும். மனவளம் பெறவும் யோகா மிகவும் உதவியாக இருக்கும்.
ஆனால், தற்போது சிலர் யோகா பயிற்சிக்கு மதச்சாயம் பூசி, பணம் பார்க்கும் தொழிலாக  மாற்றிவிட்டனர். யோகாவின் மூலம் பணம் பார்ப்பவர்களால் எப்படி மக்களைத் தெளிவாக வைத்திருக்க முடியும்? இந்துத்துவ அமைப் புகள் வலுக்கட்டாயமாக யோகாவை பிறரிடம் திணிக்க முயற்சிக்கிறது. இந்துத்துவ அமைப்பு களின் பிடியில் இருந்து யோகா விடுதலை பெற்று அனைவரிடமும் போய்ச் சேரவேண்டும் என்று, நிடுமாமுடி மடத்தின் மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அடையாறு பகுதியில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு முனைவர் அதிரடி அன்பழகன் சிறப்புரை

அடையாறு பகுதியில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு
முனைவர் அதிரடி அன்பழகன் சிறப்புரை



சென்னை அடையாறில் 18.6.2015 அன்று நடைபெற்ற 230ஆவது திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் முனைவர் அதிரடி க.அன்பழகன் சிறப்புரையாற்றினார். உடன் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர்.

சென்னை, ஜுன் 22_ தென்சென்னை மாவட் டம் அடையாறு பகுதி திரா விடர் கழகத்தின் சார்பில் 18.6.2015 அன்று அடை யாறு தொலைத்தொடர் பகம் அருகில் 230ஆவது திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு மணித் துரை தலைமையில் நடை பெற்றது.

தென்சென்னை மாவட் டத் தலைவர் இரா.வில்வ நாதன், மாவட்டச் செய லாளர் செ.ரா.பார்த்தசா ரதி, பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க. நடராசன், ஓட்டுநர்கள் அசோக், ராஜி, கோ.வீ. இராகவன், சா.தாமோ தரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.சண்முகப் பிரியன் வரவேற்றார். அடையாறு பகுதி திராவிடர் கழகத்தின் சார் பில் திராவிடர் விழிப் புணர்வு மாநாட்டை நடத்திட தமிழக அரசின் காவல்துறை அனுமதி மறுத்ததன் காரணமாக இம்மாநாடு ஒத்திவைக்கப் பட்டு அதைத்தொடர்ந்து திராவிடர் கழக வழக்கு ரைஞர் அணியின் சட்டப் போராட்டத்துக்குப் பின்னர் நீதிமன்றத்தின் அனுமதிபெற்ற பிறகு இம்மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது. மேலும், புரட்சிக்கவிஞர் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையும் இணைத்து திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு சிறப்புற நடைபெற்றது.

மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு  என் னாரெசு பெரியார், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் தலைமைக் கழகப் பேச்சாளர் செ.தமிழ் சாக்ரட்டீசு எழுச்சிமிக்க உரையைத் தொடர்ந்து தலைமைக் கழகப் பேச் சாளர் முனைவர்  அதிரடி க.அன்பழகன் சிறப்புரை ஆற்றினார்.

ஒரு கோடி அறிவிப்பு

சிறப்புரையில் குறிப் பிடும்போது, புரட்சிக் கவிஞர்  பாரதிதாசன் பிறந்த நாளும் இணைக் கப்பட்டு மிகச்சிறப்பாக இந்த மாநாடு நடைபெறு கிறது. இந்த மாநாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டு விட்டது. அந்தத் தடையை கழகத்தின் வழக்குரைஞர் கள் நீதிமன்றம் சென்று உடைத்து நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பின் அடிப் படையிலே இந்த மாநாடு நடைபெறுகிறது. எனவே, நீதிமன்றத்துக்கு, சிறப் பான தீர்ப்பைத் தந்து நீதியை நிலைநாட்டிய நீதி யரசருக்கு இந்த மாநாடு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஆரியர்களின் சூழ்ச்சி களால் கல்வியைப் பெற முடியாமல் திராவிடர்கள் காலங்காலமாக அடக்கப் பட்டு வந்தார்கள். ஆனால் தந்தை பெரியார் உழைப் புக்குப்பிறகு தற்பொழுது அனைவருமே கல்வி உரிமை பெற்று முன் னேற்றங்களை அடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆரியப் பார்ப்பனர் இனத்தவர்களில் இரு பாலரிலும் கையெழுத்துப் போடத்தெரியாதவர்கள் என்று ஒரேயொருவரை அழைத்துவந்தால் ஒரு கோடி ரூபாய் அளிப்ப தாக அறிவித்ததுடன், அதே நேரத்தில் திராவிட இனத்தவர்கள் இன்னமும் கையெழுத்துப் போடத் தெரியாதவர்கள் இருந் தால் ஒரு ரூபாய்கூட அளிப்பதாக கூற மாட் டேன். ஏனென்றால், ஆரி யத்தால் கல்வி உரிமை பெறாத ஏராளமாக இருக் கும் முதியவர்களை கொண்டு வந்துவிடுவார்கள் என்று அதிரடி அன்பழகன் பேசும் போது குறிப் பிட்டார்.

மேலும் அவர் பேசுகை யில், தகுதி, திறமை பேசும் பார்ப்பன வகுப்பிலிருந்து ஒருவர்கூட அண்மையில் வெளியான மருத்துவக் கல்விக்கான முதல் தகுதி யிடங்களில் தேர்வாக வில்லை. ஆனால், வாய்ப்பு அளிக்கப்பட்டபின்னர் தாழ்த்தப்பட்டவர், பிற் படுத்தப்பட்டவர் என்று நம்முடைய திராவிட இனத்தவர்கள்  கட்ஆப் 200க்கு 200 மதிப்பெண் கள்பெற்று திறமைகளு டன் இருக்கிறார்கள் என் பதை நிரூபித்துவருகிறார் கள். முற்றிலும் கண் பார்வை இழந்த மாற் றுத்திறனாளிப் பெண் அய்.எப்.எஸ் தேர்ச்சி பெற்று சாதனை படைத் துள்ளார். சி.ஏ. படிப்பில் உளுந்தூர்ப்பேட்டையை அடுத்துள்ள சங்கராபுரத் தில் ஆட்டோ ஓட்டுநரான மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் இந்தியாவிலேயே முதலிடம் பெற்று சாதித்துள்ளார்.

50 ஆண்டு காலத்திற்கு முன்பாக பார்ப்பனர்கள் மட்டுமே  மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், நீதிபதி கள், காவல்துறை உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள் என்கிற நிலை இருந்தது, தந்தைபெரியார் ஆற்றிய அரும்பெரும்பணிகளுக்குப் பின்னர் அனைத்து இடங் களிலும் நம் ஆட்கள் வந் துள்ளார்கள். இவைகளுக்கு காரணம் தந்தை பெரியார். திராவிடர்கழகத்தின் பணி. தந்தை பெரியார் என் கிற தலைவர் பாடுபட்ட தால், எவ்வளவு பெரிய புரட்சிகள் நடைபெற்ற தால், எவ்வளவோ பெரிய மாற்றங்கள் நடைபெற் றுள்ளன. பத்தாம்வகுப் பில் 41பேர் மாநிலத்தில் 500க்கு 499 மதிப்பெண் கள் பெற்றுள்ளனர். இது எவ்வளவு பெரிய சாதனை? ஆகவே, திராவிடர்கள் விழிப்புணர்வு பெற வேண் டும் என்பதற்காகவே இந்த மாநாடு என்று குறிப் பிட்டார். முன்னதாக வட மாவட்டங்களின் மாநில அமைப்பு செயலாளர் வெ. ஞானசேகரன், சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், வழக் குரைஞர் ம.வீ.அருள் மொழி உள்பட பலர் உரையாற்றினார்கள்.

கலந்துகொண்டவர்கள்


வழக்குரைஞர் ஆ.வீர மர்த்தினி, தென்சென்னை இளைஞரணித் தலைவர் கு.செல்வேந்திரன், வட சென்னை மாவட்டச் செயலாளர் தே.ஒளிவண் ணன், சைதை தென்றல், பெரியார் களம் இறைவி, மு.பவானி, தரமணி மஞ்சு நாதன், கலையரசன், க. தமிழ்செல்வன், பெரியார் சேகர், மயிலை பொறியா ளர் ஈ.குமார், செ.இராமச் சந்திரன், முத்துராஜ், அ.செல்வராசன், விசு, முகிலன், திருமலை, ச. துணைவேந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ச.சந்தோஷ், நன்றி கூறினார்.

எதிலும் அளவறிந்து வாழ்வோம் (2)

எதுவும் அளவுடன் இருப்பதே எல்லா வகையிலும் வாழ்க்கையின் சிறப்புக்கு வரப்பு கட்டியதாகும். என்பதை சனிக்கிழமையன்று (20.5.2015) வெளிவந்த வாழ்வியல் சிந்தனைக் கட்டுரை கூறியது.
மேற்கொண்டும் சிந்திப்போமா? அளவுடன் இருப்பதுடன் அதே நேரத்தில் குறையாமலும் பார்த்துக் கொள்வது அச்சிறப்பிற்கு மேலும் சீர் சேர்க்கக் கூடியதாகும்.
இதற்கு ஆங்கிலத்தில் ‘Optimum’  என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துகின்றனர்  ‘Optimum Level’  என்றெல்லாம் கூடக் கூறுவர்.
எது இரண்டு நிலைகளுக்கும் நடுவில், பொருத்த மாகவும் மிகாமலும், குறையாமலும் அமைந்து நல்ல பயனையும் விளைவையும் தருமோ அதுவே அந்த போதிய அளவுத் திறன் (Optimum) ஆகும்!
உடலில் உள்ள ஒவ்வொரு சத்தும்கூட இப்படி மிகவும் - அதிகமாகவும் கூடாது; அதே நேரத்தில் சீரான - போதிய தேவை அளவைவிட - குறைந்து விடவும் கூடாது!
எடுத்துக்காட்டாக நம் உடலில் இருக்கும் சத்துக் களின் அளவையேகூட  காட்டலாம்!
உப்பு (Sodium)ச் சத்து நமக்கு அதிகமாகக் கூடாது; அதே நேரத்தில் மிகவும், குறையவும்  கூடாது. அதிகமானால் சிறுநீரகத்தைப் பாதிக்கும் என்பர் மருத்துவர்கள்.
குறைந்து போனால் அது பல நேரங்களில் மூளையின் இரத்த ஓட்டத்தைக்கூட பாதித்து, பேசுவது, செயல்படுவது போன்றவற்றினைக்கூட தடுத்து விடும் என்பதையும் புரிந்து கொண்டால் உப்புக்குப் பெறாத விஷயம் என்ற சொற்றொ டரைக்கூடத் தயங்கித்தான் இனி நாம் பயன் படுத்துவோம் - இல்லையா?
இரத்தத்தில் சர்க்கரை அளவும்கூட இது போலத்தான்!
சர்க்கரை நோயாளிகள் - சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் இன்சூலின் ஊசி போடுவதோ (Type I) அல்லது மருந்து எடுத்துக் கொள்ளும்போதோ (Type II)கூட சர்க்கரை அளவினை திடீரெனச் சரிந்து விட்டால் அது பற்பல நேரங்களில் மாரடைப்பில் கொண்டு போய் நிறுத்தி விடக் கூடும்.
‘Hyper’  என்றால் அதிகம் - மிகை
‘Hypo’ என்றால் அளவு குறைதல் என்பதாகும்.
நம் உடலேகூட நமது வாழ்க்கைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும்  நல்லாசான்; நம்மில் பலரும் கூர்ந்து கவனஞ் செலுத்தி மனதைப் பக்குவப்படுத்த அதனையே படித்துக் கொண்டு வாழலாமே!
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்        (குறள் - 479)
பொருள்: தனக்குள்ள பொருளின் அளவைத் தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப வாழாதவனுடைய வாழ்க்கையானது, முதலில் வசதி உள்ளது போலத் தோற்றமளித்துப் பின்னர் அந்தத் தோற்றமும் இல்லாமல், கெட்டுப் போய் விடும்.
உடம்பிலிருந்து எல்லாவற்றிலுமே அளவறிந்து- அளவு குன்றாமலும், மிகாமலும் வாழ்ந்தால் பின்னால் வலியோ, வம்போ ஏற்படவே ஏற்படாது.
இதே அதிகாரத்தில் வள்ளுவர் கூறிய மற்ற இரண்டு குறள்களும்கூட நம் அனைவருக்குமே வாழ்நாள் வாழ்க்கைப் பாடங்கள் ஆகும்!
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்   (குறள் - 475)
பொருள்: மிக மெல்லியதான மயில் இறகுகள் ஏற்றப்பட்ட வண்டியேயானாலும்கூட, அந்த இறகு களை அளவுக்கு மீறிய வகையில் மிகுதியாக வண்டி யில் ஏற்றினால், அந்த வண்டியின் அச்சு, ஒரு கட்டத் தில் பளு தாங்க முடியாமல் முறிந்து போய் விடும்.
எளிய உவமை! அரிய உண்மைப் போதனை!!
அடுத்த மற்றொரு குறள்; அதே அதிகாரத்தில்,
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதியாகி விடும்         (குறள் - 476)
பொருள்: ஒரு மரக்கிளையின் நுனி வரை சென்றவர் அதற்கு அப்பாலும் ஏற முயலுவாரே யானால்; அம்முயற்சி, அவரது உயிருக்கு அழிவைத் தந்து விடும்.
குறைந்த உயரத்திலிருந்து வீழ்ந்தால் அடிகூட சற்றுக் குறைவாக இருக்கும்; ஆளைக் காப்பாற்றி விடலாம்; ஆனால் மிக உயரத்திலிருந்து வீழ்ந்தால் அடியும் பலமாக, உயிர்  பிழைக்கும் வாய்ப்பும் அரிதாகி விடக் கூடுமே! இல்லையா?
அதிகாரத்திற்கு வந்து தலைகால் புரியாமல்  ஆடும் நுனிக்கொம்பர்களுக்கு பிரான்சிஸ் பேகன் என்ற ஆங்கில எழுத்தாளர் ஓர் அரிய உண்மையை நினைவூட்டினார்!
கீழே விழுகின்றவரை அந்த நுனிக்கொம்பர் களுக்கு இது விளங்காது, விளங்கவே விளங்காது; விழுந்து உயிருக்குப் போராடிடும் நிலைமைக்குப் பின்னரே அது விளங்கும்.
அப்போது விளங்கி யாருக்குப் பயன்?
“Power Corrupts;
Absolute Power;
Corrupts Absolutely”
ஆட்சி - அதிகாரம் - கெடுக்கும்; அதிகமான செல்வாக்குப் படைத்த ஆட்சி - அதிகாரமோ - முழுமையாக - தேற முடி யாத அளவு அவர்களைக் கெடுக்கும் என்றார்!
எனவே, அளவுடன் தூக்கம், அளவுடன் செலவு, அளவுடன் மகிழ்ச்சி, புகழ் எல்லாம் கொண்டு மகிழ்ச்சி ஊற்று வற்றாத வாழ்க்கை வாழக் கற்றுக் கொள்ளுவோம்!

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் இடஒதுக்கீடு கிடையாதா?

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரே பல்கலைக் கழகம் மத்திய அரசின் சார்பில் இயங்கும் மத்திய பல்கலைக் கழகமாகும். புதுச்சேரி காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டுப் பகுதியில் 780 ஏக்கர் பரப்பளவில், விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு 1985இல் தொடங்கப்பட்டது.
இந்தியா முழுமையும் மட்டுமல்ல; வெளிநாடுகளில் இருந்தும்கூட வந்து படிக்கின்றனர்; இவ்வாறு 6500 இருபால் மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். இப்பல் கலைக் கழகத்தில் 87 கல்லூரிகள் இணைக்கப்பட்டும் உள்ளன. புதுச்சேரி மாநிலம் என்று சொல்கிறபோது புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என்று பல பிரிவுகளிலும் வாழும் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வெகு நாட்களாக இருந்துவருகிறது; மாணவர்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.
துணைவேந்தராக டாக்டர் ஞானம் அவர்கள் வந்தபோது 25 சதவீத இடஒதுக்கீட்டை அப்பல்கலைக் கழகத்தில் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தார். 71 பட்ட மேற்படிப்புகள் இப்பல்கலைக் கழகத்தில் இருந்தாலும் 18 படிப்புகளுக்கு மட்டுமேதான் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது.
51 முனைவர் பட்ட (பி.எச்.டி.) ஆய்வுப் படிப்பிலோ இடஒதுக்கீடு அறவே கிடையாது. இதுகுறித்து பேராசிரியர் முனைவர் இராமதாஸ் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு ஒன்றைப் பல்கலைக் கழகமே நியமித்து அறிக்கையினைக் கோரியது.
பல்கலைக் கழகத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துப் பிரிவுப் படிப்புகளிலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று அந்த ஆய்வுக் குழு அறிக்கை கூறியது. இதில் வேடிக்கை என்னவென்றால் பல்கலைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையை அந்தப் பல்கலைக் கழக நிருவாகமே நிராகரித்த கொடுமையாகும்.
பொதுவாக ஒன்றை முடிவு செய்து கொள்ள வேண்டும். மத்திய அரசு சம்பந்தப்படுத்தப்பட்ட எந்த நிறுவனமும், அமைப்பும் பெரும்பாலும் அவை பார்ப்பனிய ஆதிக்கப்புரி தர்பாராகவே இருக்கும். 
 சட்டப்படி இடஒதுக்கீடு இல்லை என்று மத்திய அரசு சொல்ல முடியுமா என்றால் சட்டப்படி அவ்வாறு கூற முடியாது. மத்திய அரசுத் துறைகளில் கல்வி, வேலை வாய்ப்பில் 27 சதவீத இடஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்டவர் களுக்கும், 15 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஏழரை சதவீதம் மலைவாழ் மக்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் சட்டப்படியான நிலைப்பாடாகும். 
அப்படி இருக்கும் பொழுது பல்கலைக் கழக நிருவாகம் தானடித்த மூப்பாக நடந்து கொள்வது எப்படி? 
ஏற்கெனவே புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தின் தமிழ் விரோத நடவடிக்கையை எதிர்த்து திராவிடர் கழகம் போராட்டத்தில் ஈடுபட்டதுண்டு; மறுபடியும் அதற்கு மேற்பட்ட போராட்டத்தை நடத்திட திராவிடர் கழகம் என்றைக்கும் தயாராகவே இருக்கிறது. காரணம் திராவிடர் கழகம் சமூக நீதிக்கு உரத்தக் குரல் கொடுத்து போராடிக் கொண்டிருக்கும் சமூகப் புரட்சி அமைப்பாகும். 
மண்டல் குழுப் பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் அகில இந்திய அளவில் 42 மாநாடுகளையும் 16 போராட்டங்களையும் நடத்தி, தன் வரலாற்றுக் கடமையைத் திராவிடர் கழகம் செய்து வந்திருக்கிறது. அதன் விளைச்சல்தான் மத்திய அரசு கல்வி, மற்றும் வேலை வாய்ப்பில் 27 சதவீத இடஒதுக்கீடு கிடைத்திட உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தைப் பொறுத்த வரையில் பேராசிரியர் முனைவர் இராமதாசு அவர்கள் தலைமையிலான மூவர் குழு அளித்த பரிந்துரையைக் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்து விட்டு, மறுபடியும் ஆறு பேர் கொண்ட குழு ஒன்றும் இடஒதுக்கீடு தொடர்பாக அமைக்கப்பட்டது. அந்தக் குழுவும் இடஒதுக்கீடு கொடுக் கக் கூடாது என்று சொல்லவில்லை; மத்திய அரசின் அனுமதியைப் பெற்று தாராளமாக இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தலாம் என்றுதான் கூறியுள்ளது.
மத்திய அரசு இதுவரை அதற்கான பச்சைக் கொடியைக் காட்டவில்லை; கல்வியாண்டு தொடங்கப் பட்ட நிலையில், இதுவரை மத்திய அரசின் ஆணை கிடைக்கப் பெறாத நிலையில், இவ்வாண்டில் இடஒதுக்கீடு என்னும் சமூகநீதிக்கு வாய்ப்பு இல்லாமலேயே தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட இருபால் மாணவர்களும் பெரும் மன உளைச்சல்களுக்கு ஆளாகியுள்ளனர். துணைவேந்தரும், நிருவாக குழுவும் நினைத் திருந்தால் பேராசிரியர் முனைவர் இராமதாஸ் அவர்கள் தலைமையிலான மூவர் ஆய்வுக் குழு அளித்த அறிக் கையின் அடிப்படையிலேயே இடஒதுக்கீட்டைத் தாராள மாக செயல்படுத்தி இருக்கலாம்; இதற்கு முன்னோடியாக இதே பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக இருந்த டாக்டர் ஞானம் அவர்களே வழிகாட்டியும் இருக்கிறார்கள். பெரும்பாலும் மத்திய பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களாக நியமிக்கப்படுபவர்கள் பார்ப்பனர்களாகவே இருந்து வருகிறார்கள். இந்நிலையில் இடஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டைப் போடுவதைத் தங்களின் பரிசுத்த ரத்த ஓட்டக் கடமையாகவே கருதிக் கொண்டுள்ளனர்.  அகில இந்திய அளவில் துணைவேந்தர்களை நியமிக்கும்போது அதில்கூட சமூகநீதி - இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண் டும் என்ற உரிமைக் குரலைக் கொடுக்க வேண்டியவர் களாகவே இருக்கிறோம்.
மத்திய அரசுத் துறைகளில் சில குறிப்பிட்ட துறைகள் இடஒதுக்கீடு முறையிலிருந்து விதி விலக்கு அளிக்கப்படும் சூழ்ச்சியும் உள்ளன; இதனை எதிர்த்துத் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியதுண்டு - அதற்கான மசோதாவை அய்க்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலம் முடிவுறும் தறுவாயில் அவசர அவசரமாக மாநிலங்கள வையில் தாக்கல் செய்யப்பட்ட சூழ்ச்சியைத் திராவிடர் கழகம்தான் அம்பலப்படுத்தியது அதற்காகப் போராட் டமும் நடத்தப்பட்டது. மக்களவைக்கு கொண்டு வரப் படவில்லை.
எந்த ஒரு சிறு வாய்ப்புகள் கிடைத்தாலும் பார்ப் பனர்கள் அதிகார நிலையில் இருக்கும் எந்த இடத்திலி ருந்தும் இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்து கொண்டு தானிருக்கும். கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் நின்று சமூகநீதிக் கண்ணோட்டத்தோடு போராடுவோம் வாரீர் என்று திராவிடர் கழகம் அன்பு அழைப்பை விடுக்கிறது. தமிழ்நாட்டைப் போல புதுச்சேரி மாநிலத்திலும் 69 சதவீத இடஒதுக்கீட்டு உரிமைகளைப்  பெற போராடுவோம்  - வெற்றி பெறுவோம்!

Saturday, June 20, 2015

நாட்டு நடப்புகள்

நாடாளுமன்றம், நீதிமன்றம், நிருவாகம், பத்திரிகை கள் இவை நான்கும் நாட்டின் தூண்கள் என்று சொல்லப்படுகின்றன. இவை நான்கும் நாணயமான முறையில் நடந்துகொள்ளுமேயானால், நாடும் ஒழுங் காக நாளும் பயணிக்கும் என்பதில் அய்யமில்லை.

ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்த நான்கும் நேர்மையான முறையில் நடக்கவில்லை என்பது நன்கு தெரிந்ததுதான்.

எல்லா அமைப்புகளையும்விட கூடுதலான அதிகாரம் படைத்த நீதிமன்றங்களே - ஏன் உச்சநீதி மன்றமே சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு நடக்கவில்லை என்கிறபோது, மற்றவற்றைப்பற்றிக் கேட்பானேன்?

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிமீதே வழக்குத் தொடுக்கப்பட்ட நிலை எல்லாம் உண்டே! சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒருவரே (ஜஸ்டிஸ் இராமச்சந்திர அய்யர்) தன் வயதை தன் பதிவேட்டில் (சர்வீஸ் ரிஜிஸ்டர்) திருத்தி மோசடி செய்து பதவியில் நீடிக்கவில்லையா?

தலைமை நீதிபதியே தவறு செய்யும்போது கடுமை யான அதிகபட்சத் தண்டனையை அல்லவா அளித்திருக்கவேண்டும்? வேலியே பயிரை மேய்வது எவ்வளவுப் பெரிய ஆபத்தானது!

ஆனால், என்ன நடந்தது? குடியரசுத் தலைவராக வும் ஒரு பார்ப்பனர் இருந்ததால், பூணூல் பாலங்கள், நீதிபதிக்கு ஒரு சொட்டு வேர்வைக்குக்கூட சேதாரம் இல்லாமல் வெளியில் அனுப்பிய பவித்திரம் சாதாரணமானதுதானா?
நீதித்துறை இப்படி என்றால், ஆட்சித்துறை எப்படி இருக்கிறது என்பதற்கு இப்பொழுது நடந்துகொண்டு இருக்கும் லலித் மோடி பிரச்சினை ஒன்றே ஒன்று போதாதா? அறிவிக்கப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் காதும் காதும் வைத்தாற் போல உதவி செய்வது எந்த வகையில் சரியானது?

நிருவாகத் துறையின் இலட்சணத்திற்கு ஓர் உதாரணம் அண்மையில் நடைபெற்ற அகில இந்திய மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு. கேள்வி - பதில்கள் குறுஞ்செய்திகளாக உலா வருகின்றன என்றால், மேலே என்ன சொல்லவேண்டும்?

பத்திரிகைகளைப்பற்றிக் கேட்கவே வேண்டாம்; அய்.பி.எல்.லில் பெரும் பணம் புழக்கத்தில் இருப்பதால், அதில் தவறுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததே என்று தினமணி இன்று தலையங்கத்திலேயே குறிப்பிட்டுள்ளதே.
நடுநிலையில் நின்று பேனா பிடிப்பதாகத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் துக்ளக் ஆசிரியர், சம்பந்தப்பட்டவர் பார்ப்பனர் என்றால், அவர் பேனா எப்படியெல்லாம் நாட்டியம் ஆடும்; கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, சிறையிலும் இருந்து வந்தவர்தானே அவாளுக்கு லோகக் குரு;  வழக்கு நடந்துகொண் டிருந்தபோது, சங்கராச்சாரியார் விஷயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது! என்று எழுதினாரா இல்லையா?

பக்தி, தாத்பர்யம், தார்மீகம்பற்றியெல்லாம் எச்சில் ஒழுகப் பேசுகிறார்களே - அந்தப் பக்தி லோகம் எப்படி இருக்கிறது? இன்றைய ஏடுகளில்கூட ஒரு சேதி வெளிவந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருநின்ற வூர் பக்தவத்சலப் பெருமாள் கோவிலின் அர்ச்சகர் மணிவண்ணன் - புதிய தேர் செய்வதாகக் கூறி, ரூ.60 லட்சம் கையாடல் என்று, தினமலரே செய்தி வெளியிடுகிறதே!

சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரி, தங்கும் இடத்தில் மதுபாட்டில்கள், விபச்சாரி வீட்டில் கைது என்றெல்லாம் செய்திகள் வெளிவரவில்லையா?

குஜராத் மாநில சவுமிய நாராயணசாமி கோவில் குருக்கள் குடியிருப்பில் விபச்சாரிகளுடன் குருக்கள் சல்லாபம் என்ற செய்தி பலான படங்களுடன் வெளிவரவில்லையா?

வெகுதூரம் போவானேன்? காஞ்சிபுரம் மச்சேந்திர நாதர் கோவில் குருக்கள் பார்ப்பான் தேவநாதன், கோவிலுக்குச் சாமி கும்பிட வந்த பெண்களைப் பாலியல் வெறிக்குப் பயன்படுத்தினான் என்ற தகவல் கள் பக்கம் பக்கமாக வெளிவரவில்லையா? இதுகுறித்து எந்தப் பார்ப்பன ஏடுகளாவது மூக்குச் சிந்தியது உண்டா?
பக்தி பெருகினால் ஒழுக்கம் பரவும் என்று சொல்லு வதெல்லாம் யாரை ஏமாற்ற? இன்னும் சொல்லப் போனால், பக்தி பெருகப் பெருகத்தான் ஒழுக்கக்கேடும் வால் முளைத்து, இறக்கைகள் முளைத்து வீறுகொண்டு விண்ணில் பறக்கின்றன.

12 ஆண்டுகள் பாவம் செய்து விட்டு 12 ஆவது ஆண்டு வரும் கும்பகோணம் மகாமகக் குளத்தில் குளித்துவிட்டால், பாவங்கள் பஞ்சாகப் பறந்து போய் விடும் என்றால், நாட்டில் ஒழுக்கக்கேடாக நடக்காதவன் பைத்தியக்காரனாகப் பார்க்கப்படமாட்டானா?

குறைந்த முதலீடு - கொள்ளை லாபம் என்றால், பலகீனமான மனிதன், அந்தப் பக்கம்தானே தாவுவான்!

இந்து மதமும், பார்ப்பன தர்பாரும் நாட்டில் நீடிக் கும்வரை நேர்மை, நடுநிலைமை, ஒழுக்கம் என்பதெல் லாம் குதிரைக் கொம்பே! ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் கோணல் புத்திதான் நடமாடும்.

இதைத் தந்தை பெரியார் உரைக்கல்லில் உரைத்துப் பார்த்து, பகுத்தறிவைக் கூர்தீட்டிப் பார்த்தால், உண்மைகளின் தன்மை வெளிச்சமாகவே தெரியும்!


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தோழர் ஆனைமுத்து அவர்களுக்கு....

தோழர் ஆனைமுத்து அவர்களுக்கு....


2017 இல் பெரியார் ஈ.வெ.ரா. வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழாவில் நாம் எல்லோரும் சந்திப்போம் - வே. ஆனைமுத்து என்று தேதி போடாத அறிக்கை ஒன்று கிடைக்கப் பெற்றது.

டாக்டர் ஜான்சனின் வரலாற்றை எழுதிய பாஸ்வெல் போல பெரியார் வாழ்க்கை வரலாற்றை எழுதப் போவதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

தாராளமாக எழுதுங்கள்; வரவேற்கலாம். பலரும் ஏற்கெனவே எழுதியும் இருக்கின்றனர். (உலகத் தலைவர் பெரியார் வரலாற்று நூலின் தொடர்ச்சியாக இறுதிப் பகுதிகள் இன்னும் சில மாதங்களில் திராவிடர் கழக வெளியீடாக வெளிவரவும் உள்ளது).

அதேநேரத்தில், சில முக்கிய கருத்துகளை இங்கு இதில் பதிவு செய்யவேண்டியிருக்கிறது.

இதற்குமுன் இவர் எழுதிய, வெளியிட்ட தகவல்களை வைத்துக்கொண்டு இதுபற்றிய கருத்தினை வெளியிட வேண்டிய அவசியமும் நமக்கு ஏற்பட்டுள்ளது.

1. தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு அன்னை மணியம்மையார் அவர்கள் திராவிடர் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்பார் என்பது திராவிடர் கழகத் தோழர்களுக்கு மட்டுமல்ல; தமிழ்நாட்டு மக்கள் அனை வருக்குமே தெரிந்த செய்தியாகும்.

ஆனாலும், டிசம்பர் 24 (1973) அன்று தந்தை பெரியார் மறைந்தார் என்றால், 1974 ஜனவரி 6 ஆம் தேதி திருச்சி பெரியார் மாளிகையில் கூடிய திராவிடர் கழகப் பொதுக்குழுவில் அன்னையார் முறைப்படி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது வரலாறு.

தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை அவர்கள் போட்டுத் தந்த பாதையில் எந்தவித சபலங் களுக்கும் ஆளாகாமல் சென்று முடிப்போம் என்று கழகத் தோழர்கள் அன்னை மணியம்மையார் தலைமை யில் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

அந்தப் பொதுக்குழுவில் தோழர் வே.ஆனைமுத்து அவர்களும் இருந்தவர்தான்.


தந்தை பெரியார் என்ற மேரு மலை சாய்ந்த நிலையில், தமிழ் மக்களின் மிகப்பெரிய வழிகாட்டி, பாதுகாவலர் கண்மூடிய சூழ்நிலையில், 
தந்தை பெரியார் அறிவுறுத்திய புத்தம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி

என்ற முறையில் பணியாற்றவேண்டிய தோழர் ஆனை முத்து அவர்கள், (முன்கூட்டியே திட்டமிட்டு) கழகத் தலைமையின்மீது சேற்றை வாரி இறைக்க ஆரம்பித்தார்.

12.11.1975 நாளிட்டு மணியம்மையாருக்குக் கடிதம் என்று எழுதி, அதன் நகலைக் கழகத் தோழர்களுக்கும் அனுப்பி வைத்தார்.

எத்தனையோ தோழர்கள் அதனை அவருக்கே திருப்பி அனுப்பி, தங்களின் கடும் அதிருப்தியினை வெளிப்படுத்திக் கொண்டார்கள். கடைசிக் கருஞ்சட்டைத் தோழன்வரை கட்டுப்பாடு என்னும் கவசம் அணிந்து அணிவகுத்து நின்ற நிலையில்,

பிரமுகரான தோழர் ஆனைமுத்து அவர்களோ அதற்கு எதிர்நிலையில் நின்றார் - கலகக் கொடி உயர்த்திப் பார்த்துத் தோல்வி அடைந்தார் என்பது இவ்விடத்தில் அழுத்தமாகக் குறிப் பிடத்தக்கதாகும். மிகுந்த தாராள மனப்பான்மையுடன் கிட்டத்தட்ட இரு ஆண்டுகள் பொறுத்திருந்து பார்த்து விட்டுதான், தோழர் ஆனைமுத்து அவர்கள்மீது கழகப் பொதுக்குழுவே ஒருமனதாக நடவடிக்கை எடுத்தது.

அவருக்காக ஒருவர்கூட பரிதாபப்பட்டுக்கூட வக்காலத்து வாங்கவில்லை (26.11.1975).

தந்தை பெரியார் 95 ஆண்டுகாலம் வாழ்ந்தமைக்கு அன்னை மணியம்மையார்தான் காரணம் என்பது எல்லோருக்குமே தெரியும். பெரியார் திருமணத்தைக் காரணம் காட்டி விலகிச் சென்ற அண்ணா அவர் களேகூட, பிற்காலத்தில் இதனை ஏற்றுக்கொண்டும் உள்ளார். ஏன் தந்தை பெரியார் அவர்களே வெளிப் படையாக எழுதியும் இருக்கிறார்கள்.

எனது நோய் சற்றுக் கடினமானதுதான்; எளிதில் குணமாகாது; மூத்திர வழியில் கற்கள் இருக் கின்றன. அவை கரைய மாதக்கணக்கில் காலமாகும். ஆபரேஷன் (அறுவைச் சிகிச்சை) தேவை இருந்தாலும், இருக்கலாம். ஆனாலும், நான் பயப்படவில்லை. எதற்கும் தயாராக இருக்கிறேன். மணியம்மையார் கவனிப்பும், உதவியும் அளவிடற் கரியது என்று தந்தை பெரியார் கைப்பட எழுதி இருப்பதற்குமேல் வேறு எவருடைய அத்தாட்சியும் தேவைப்படாது.

தோழர் ஆனைமுத்து அவர்கள் எழுதிய அந்தக் கடிதத்தில் தந்தை பெரியார் வைத்தியம் இல்லாமல் விடப்பட்டார் என்று அபாண்டமாக, எதிரிகளேகூட சொல்லத் துணியாத அபவாதத்தினை விஷமாகக் கக்கினார். தன்னுடைய இளமையையே தூக்கி எறிந்து, அய்யா வாழ்நாள் நீட்சிக்கே தன் வாழ்நாளை ஒப்படைத்த அன்னையார்மீது இப்படி ஓர் அபாண்டம் சுமத்தும் மனிதர்களும் இருந்தார்களே - என்ன சொல்ல! என்ன செய்ய!!

இத்தகைய மனப்பான்மை கொண்டவர் தந்தை பெரியார் முழு வரலாற்றை உள்ளபடியே எழுதுவாரா என்ற வினா எழுவது நியாயமே!

2. 2015 சிந்தனையாளன் பொங்கல் மலரில் நோபிள் கு.கோவிந்தராசனுடன் வே.ஆனைமுத்து முதன் முதலாகப் பதிவு செய்யப்படும் உண்மைகள் என்ற தலைப்பில் (பக்கங்கள் 206, 207, 208) வெளியிட்டுள்ள செய்திகள் - அபாண்டமாக பழி சுமத்துதல் - பொய்ப் பேசுதல், புனை சுருட்டு செய்தல் என்றால் எந்த எல்லைக் கும் செல்லக்கூடியவர் தோழர் ஆனைமுத்து என்பதற் கான எடுத்துக்காட்டாகும்.

செத்துப் போனவர்களைச் சாட்சியாக்கிப் பேசுவது கீழ்த்தரமான குணமாகும். அந்த வகையில், தனது போக் குக்கு அல்லது ஆசைக்கு பச்சைத் தமிழர் காமராசரையும் நோபிள் கு.கோவிந்தராசு அவர்களையும் தன் பொய்களுக்குத் துணையாக்கிக் கொள்ள முயற்சிக்கிறார்.

காமராசர் 2.10.1975 நண்பகல் மறைந்தார்.

நோபிளும், நானும் 30.9.1975 மாலையில் காமராசரை அவருடைய வீட்டில் நேர்காணல் செய்தோம். அவர் தலையில் ஒரு குட்டையைக் கட்டிக்கொண்டு, கால்களை பிரம்பு முக்காலி மேல் நீட்டிக்கொண்டு சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்தார். அந்த ஈன நிலையிலும் அரைமணிநேரம் உரையாடினார்.

காமராசர்: ஏம்பா? அய்யா டிரஸ்டு ஏற்படுத்தினாரே, அது என்ன?

வே.ஆனைமுத்து: என்னங்கய்யா வேணும்?

காமராசர்: யார், யாரு டிரஸ்டி?

வே.ஆனைமுத்து: மணியம்மா, வீரமணி, சம்பந்தம்...
காமராசர்: அப்புறம்...?

நான் எல்லாப் பெயர்களையும் சொல்லுகிற வரையில், அப்படிக் கேட்டுக்கொண்டே இருந்தார்.

காமராசர்: அப்போ, அந்த அம்மாவும், அந்தப் பையனும் வச்சதுதான் சட்டம்ணு சொல்லு. அய்யா தப்புப் பண்ணிட்டாருப்பா... தப்புப் பண்ணிட்டாருப்பா... தப்புப் பண்ணிட்டாருப்பா என, மூன்று தடவை சொன்னார்.

அந்த மாமேதை அடுத்த 40 மணிநேரத்தில் மறைந்தார்.

அன்று என்னுடன் இருந்த நோபிள், அடுத்து 20 ஆண்டுகள் இருந்தார் என்று சிந்தனையாளனில் கிறுக்கித் தள்ளியுள்ளார்.

அன்னை மணியம்மையார்மீதும், ஆசிரியர்மீதும் சேற்றைவாரி இறைக்கவேண்டும் என்பதற்காக உயிரோடு இல்லாத காமராசரைப் பயன்படுத்தித் தந்தை பெரியார் அவர்களைக் குறைகூறுவதைக் கவனிக்கவேண்டும்.

பெரியார் தப்புப் பண்ணிவிட்டார் என்று காமராசர் சொன்னதாக எழுதுவதன் பொருள் என்ன?

இன்னொரு வகையில் பார்த்தாலும் தந்தை பெரியார் மீது காமராசர் கொண்டிருந்த பற்றையும் மரியாதை யையும் அறிந்தவர்கள், காமராசர், பெரியாரைப்பற்றிக் குறைகூறினார் என்று காமராசர் மறைவுக்குப் பிறகு எழுதியிருப்பதைப் படிக்கும்பொழுது முகம் சுளிக்கத்தான் செய்வார்கள்.

காமராசர் எப்பொழுதுமே நிதானமாக வார்த்தைகளை எண்ணிப் பேசக்கூடியவர். ஓட்டை வாயரல்லர் - தோழர் ஆனைமுத்துவைப் போல.

தனது வக்கிரத்துக்காக மறைந்துபோன இருபெரும் தலைவர்களைப் பயன்படுத்தி எழுதுவது எந்த வகையில் சரி? எந்த வகையைச் சேர்ந்த பண்பாடு?

இதில் செத்துச் சுண்ணாம்பாகிப் போன, இன்னொரு வரையும் (நோபிள் கோவிந்தராசுலு) சாட்சிக்கு அழைத்து எழுதுகிறார். (தந்தை பெரியாரையும், காமராசரையும் கொச்சைப்படுத்துவதற்கு நம் இன எதிரிகள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்வதற்குத்தான் அம்பாகப் பயன் பட்டுள்ளார் தோழர் ஆனைமுத்து).


தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர்களுக்கும், காமராசர் அவர்களுக்குமிடையே இருந்த நெருக்கமும், ஆனை முத்து அவர்களிடத்தில் காமராசருக்கு இருந்த நெருக் கமும் ஒன்றா? அதிக அறிமுகமில்லாத ஒருவரிடத்தில் காமராசர் போன்ற முதிர்ச்சி பெற்ற பெருந்தலைவர்கள்,

அதுவும் தந்தை பெரியார் அவர்களால் பச்சைத் தமிழர் என்று அடையாளம் காட்டிய, மக்கள் மத்தியிலே உயர்ந்து நிற்பதற்குக் காரணமாக இருந்த தந்தை பெரியாரை, நீங்கள் காட்டிய பாதையில்தான் என் பயணம் என்று வெளிப்படையாகச் சொன்ன காமராசர், தந்தை பெரியார் தப்புப் பண்ணிவிட்டார் என்று கூறி இருப்பாரா? நிதானத்தில் உள்ளவர்களுக்கு விடை தெரியும்.

ஆனால், தோழர் ஆனைமுத்துக்கு?

இப்படிப்பட்ட குணமும், இயல்பும் கொண்ட ஒருவர், பெரியார் வாழ்க்கை வரலாறு ஒன்றை எழுதினால், அது உண்மையான வரலாறாக இருக்குமா?
செத்துப் போனவர்களை சாட்சிக்கு அழைப்பது என்று ஆரம்பித்தால், யாரைப்பற்றியும், யார் வேண்டுமானாலும் எந்த அளவுக்கும் தாறுமாறாக, மோசடியாக கொச்சைப் படுத்தி எப்படியும் எழுத முடியுமே! இது ஒரு தரம் தாழ்ந்த புத்தியாகும், யுக்தியுமாகும்.

3. தந்தை பெரியாரின் அறிவு நாணயம், தனி ஒழுக்கம், பொது ஒழுக்கம், சட்டத்திற்குக் கட்டுப்படும் தன்மை, நேர்மை இவை அனைத்தையும் குழிதோண்டிப் புதைக் கும் வகையில் மற்றொரு தவறான தகவலையும் பெரியாரின் அயல்நாட்டுக் குறிப்புகள் எனும் நூலில் XXIII ஆம் பக்கத்தில் பதிப்பாசிரியரின் முன்னுரையில் கீழ்க் கண்டவாறு (பதிப்பாசிரியர் வே.ஆனைமுத்து) எழுதி யுள்ளார்.

ஈ.வெ.ரா.வும், அவருடன் சென்ற எஸ்.இராமநாதன், இராமு என்கிற ஆர்.இராமசாமி ஆகியோரும் சோவியத் இரஷ்யாவுக்குப் போவதற்கான பயண அனுமதி (Passport) இன்றி இரகசியமாகவே 1932 இல் சோவியத்து இரஷ்யாவை அடைந்தனர் என்று தோழர் வே.ஆனைமுத்து குறிப்பிட்டுள்ளார்.
இது உண்மையா என்றால், பவானி ஜமக்காளத்தில் வடிகட்டி எடுக்கப்பட்ட பெரிய பொய்யும், புரட்டும், அபாண்டமும் ஆகும்.

கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில், தமிழக மக்களால் தந்தை பெரியார் என்று போற்றப்படும் ஒரு மாபெரும் யுகப் புரட்சியாளரைப்பற்றி எழுதுகிறோம் என்ற மதிப்பின்றி எடுத்தேன் - கவிழ்த்தேன் - எல்லாம் எனக்குத் தெரியும்! என்ற ஆணவத்தில் இப்படி எல்லாம் எழுதலாமா?

இதன் பொருள் என்ன? திருட்டுத்தனமாக பெரியார் பயணித்தார் என்பதுதானே!
உண்மை என்னவென்றால், தந்தை பெரியாரின் பாஸ்போர்ட், ரஷ்ய அரசு முத்திரையோடு ஆசிரியரிடம் இன்னும் இருக்கிறது என்பதுதான். சென்னையில் உள்ள சோவியத்து மய்யத்தில் நடைபெற்ற ரஷ்ய கலாச்சார மய்யத்து பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள், ரஷ்ய கான்சலேட் ஜெனரல், இந்து ராம் ஆகியோர் கலந்துகொண்ட அந்நிகழ்ச்சியில் அந்தப் பாஸ்போர்ட்டைக் காட்டி சிறப்புரையாற்றினாரே!

இரும்புத் திரைநாடு என்று ஒரு காலத்தில் சொல் லப்பட்ட ருசியாவுக்கு பாஸ்போர்ட்டு இல்லாமல் செல்ல முடியுமா? என்பதை சாதாரணமாக - பொது அறிவு உள்ள வர்கள் அறிவார்கள். ஆனால், தோழர் ஆனைமுத்து?

போதிய கவனமும், கவலையும், பொறுப்பும் எடுத்துக்கொண்டு குறிப்பிடவேண்டிய தகவலை, மக்கள் மத்தியில் மாபெரும் தலைவர்பற்றிக் கேவலமாக எடை போடும் வகையில் எழுதியவர்கள் எல்லாம் தந்தை பெரியார் வரலாற்றை எழுதப் போகிறார்களே என்று எண்ணும்போது துணுக்குற வேண்டியுள்ளது.

காரணம் - அண்ணா மொழியில் சொல்லவேண்டும் என்றால், தந்தை பெரியார் ஒரு சகாப்தம் - காலகட்டம் - திருப்பம்!

4. மற்றொரு பொய் மூட்டையையும் அவிழ்த்துக் கொட்டியுள்ளார்.

பெரியாரின் வரலாற்றை பல தொகுதிகளாக எழுதி வெளியிட விரும்புகிறேன். பெரியார் வாழ்ந்த காலத்தில் அவர் 1971-1972 இல் என்னிடம் ஒப்படைத்த எல்லா  அச்சிட்ட தரவுகளையும், 1975 இல் மணியம் மையாரிடம் திருப்பித் தந்துவிட்டேன் என்றும் எழுதியுள்ளார்!

பொய்யைத் தவிர வேறு எதையும் பேசுவதில்லை, எழுதுவதில்லை என்ற ஒரு முடிந்த முடிவுக்கு வந்து விட்டாற்போல தெரிகிறது.

இதுவும் உண்மையானதல்ல; எந்தத் தரவையும் அன்னை மணியம்மையார் அவர்களிடத்தில் திருப்பித் தரவில்லை என்பதை கழகத் தலைவரிடம் உறுதிப் படுத்திக் கொண்டே இதனை எழுதுகிறோம்.

தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு பல தரம் தாழ்ந்த அறிக்கைகளையும், நூலையும் எழுதி அவற்றின்மூலம் சுகம் காணும் மனிதராகவே முதியவர் ஆனைமுத்து அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
தோழர் திருவாரூர் திரு. கே.தங்கராசு அவர்கள் மறைந்தபோது முதலாவதாக கழகத் தோழர்களுடன் அவர் இல்லம் சென்று அவருடைய உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தி, குடும்பத்தாருக்கு இரங்கல் சொன்னவர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

மறுநாள் நடைபெற்ற (6.1.2014) இரங்கல் கூட்டத்தில் உண்மை தெரியாமல், உண்மையைத் தெரிந்துகொள்ளவும் ஆசைப்படாமல், அதற்கான பொறுப்புணர்ச்சியுமின்றி தோழர் தங்கராசு மறைவுக்குக்கூட வீரமணி வராதது நாகரிகமா?

சாவில்கூட குரோத உணர்ச்சியா? என்ற பாணியில் திராவிடர் கழகத் தலைவர்மீது அதீதமான வகையில் காழ்ப்புணர்ச்சியையும், வெறுப்பையும் வளர்த்துக்கொண்ட காரணத்தால், சகட்டுமேனிக்குப் பே(ஏ)சினாரே! அங்கிருந்த தோழர்கள் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக உண்மையைச் சொன்ன பிறகு, தலைகுனிந்து மனுஷன் உட்கார்ந்துவிட்டார்.

தந்தை பெரியார் சிந்தனை வேரில் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் கணித்துச் சூட்டப்பட்ட திராவிட என்ற இலட்சிய இனப் பண்பாட்டு வரலாற்றுச் சொல் லையும் தூக்கியெறிந்துவிட்டு, மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி என்று தந்தை பெரியாரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, கருப்புச் சட்டை அணிவதையும் தவிர்த்துவிட்டு,

பெரியார் வாழ்க்கை வரலாற்றை எழுதப் போகிறேன் என்று ஒருவர் சொல்கிறார் என்றால், முன்வருகிறார் என்றால், அந்த வரலாற்றில் உண்மை தன்மை, முழுமைத்தன்மை, கொள்கை மணம் எப்படி இருக்கும்? என்ற கேள்வி எழுமா - எழாதா?

விருப்பு வெறுப்பு அற்ற முறையில் மிகுந்த பொறுப் புணர்ச்சியோடு எழுதப்படவேண்டிய ஒரு சகாப்தத் தலைவரின் வரலாற்றை -

இவர் போன்றவர்கள் எழுதினால் என்னவாக இருக்கும் என்ற பொறுப்புணர்வும், தந்தை பெரியார்மீது கொண்ட மிகப்பெரிய மரியாதை உணர்வும்தான் இந்த மறுப்புக் கட்டுரைக்கான நோக்கமாகும்.

காரணம் தோழர் வே.ஆனைமுத்து அவர்களின் கடந்த கால நடவடிக்கைகள் அப்படி!


- கலி.பூங்குன்றன்
சென்னை    துணைத் தலைவர்,
19.6.2015    திராவிடர் கழகம்

பாஸ்போர்ட் இல்லாமல் பெரியார் ருசியா சென்றாரா?
பச்சையான பொய் - இதோ உண்மை ஆதாரங்கள்

தந்தை பெரியாருக்கு தாசில்தார் எழுதிய கடிதம்


வெளிநாடு செல்ல மாவட்ட ஆட்சியருக்கு முறைப்படி தந்தை பெரியார் விண்ணப்பித்தார். அதனை மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) வட்டாட்சியருக்கு (தாசில்தாருக்கு) அனுப்பி வைத்தார். அதன் அடிப்படையில் ஆய்வு செய்து தந்தை பெரியார் அவர்களுக்கு வட்டாட்சியர் எழுதிய கடிதம் (8.9.1931) இதோ:
மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி இக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகிறேன். தங்களுடன் அழைத்துச் செல்லப்படும் திரு.ஆர்.ராமசாமி அவர்களுக்கான செலவை தாங்களே ஏற்றுக்கொள்கிறீர்களா என்பதற்கான பதிலை கூடிய விரைவில் அனுப்பி வைத்தால், மிகவும் நன்றியுடையேன் என்று தாசில்தார் எஸ்.சுப்பராம அய்யர், தந்தை பெரியார் அவர்களுக்கு மிகுந்த மரியாதையுடன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதம் இதோ:

தந்தை பெரியார் அவர்களின் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) சோவியத் ருஷ்யாவின் விசா அனுமதி பகுதி (ரஷ்ய மொழியில்)

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...