Sunday, April 12, 2015

மாட்டிறைச்சி சாப்பிடுவது அவமானம் உடையது அல்ல - தந்தை பெரியார்

- தந்தை பெரியார்
நான் இந்தப் பக்கத்தில் எப்போது வந்தாலும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி ஏற் படுத்திக்கொண்டு எனக்குப் பெருமை அளிப்பதையே காரியமாகக் கொண்டு வருகிறார்கள்.  இந்தத் தடவை இப்படி கோழிப் பண்ணையைத் திறந்து வைக்கும் பணியினை அளித்துள்ளார்கள்.
கோழிப்பண்ணை என்று சொன் னாலே தானிய விவசாயம் போல இது வும் ஒரு உணவுப் பண்ட விவசாயம் ஆகும். மற்ற தானியம் காய்கறிகள், உணவுக்கு எப்படிப் பயன்படுகின்றதோ அதுபோலவே கோழியும் உணவுக்காகப் பயன்படுகின்றது. கோழி முட்டை இடு கின்றது. குஞ்சு பொரிப்பது எல்லாம் மனிதன் உணவுக்காகவே பயன்படு கின்றது.
இயற்கையின் தத்துவம் எப்படி இருந்தாலும் உற்பத்தி பொருள்கள் ஜீவன்கள் எல்லாம் மனிதனுடைய உணவுக்குத்தான் பயன்படுகின்றது. மனிதன் ஒருவனைத் தவிர, அனேகமாக எல்லா ஜீவராசிகளும் உணவுக்குத் தான் பயன்படுகின்றது ஒன்றை ஒன்று தின்று வாழ்கின்றன அப்படி ஒன்றை ஒன்று தின்று வாழ்வது ஏன் என்று சொல்லத் தெரியாது.
சிலர் கடவுள் செயல் என்பார்கள். இது உண்மையாக இருக்குமானால் கடவுளைப்போல அயோக்கியன் வேறு இல்லை. கடவுளைக் கருணாமூர்த்தி தயாபரன் என்கின்றார்கள். ஆனால், தினம் தினம் லட்சக்கணக்கில் மாடு, பன்றி, ஆடு, கோழி, மீன் முதலியன கொல்லப்பட்டு தின்னப்படுகின்றன.
இதற்கெல்லாம் கடவுள்தான் காரணம் என்று ஆகிவிடுமே. எனவே, கடவுள் பற்றிய எண்ணம் கருத்து எல்லாம் பொய் யானதாகும். உலகப்பரப்பில் 350க்கு மேற்பட்ட கோடி மக்கள் உள்ளார்கள். இதல் 230 கோடி மக்கள் மாமிசம் சாப் பிடும் மக்கள் ஆவார்கள். இந்தியாவில் தான் 10, 15 கோடிகள் வாயளவில் மாமிசம் சாப்பிடாதவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் இருக்கின்றார்கள்.
உண்மையாக மாமிசம் தின்னாத வர்கள் 2 கோடி கூட இருக்க மாட் டார்கள். நம் நாட்டில் கோழி சாப்பிடு வான் மீன் சாப்பிடுவான். மாடு சாப்பிட மாட்டேன் என்பான். மாடு சாப்பிடுவான் பன்றி இறைச்சி சாப்பிடமாட்டேன் என்பான் இப்படியே ஒவ்வொன்றை விட்டு வேறு ஒன்றை சாப்பிடக் கூடிய வர்களும் உள்ளார்கள்.
நம் நாட்டில் இந்துக்கள் என்னும் கூட்டத்தில் சிலர் மாடு தின்பது இல்லை சில கூட்டத்தார் சாப்பிடுகின்றார்கள். உலகில் எங்கும் மாடு சாப்பிடுகின் றார்கள். நமது நாட்டில் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் மாடு சாப்பிடுகின்றார்கள் மற்றும் அநேக ஜாதியார் மாடு சாப்பிடு கின்றார்கள்.
நான் விடுதலை பொங்கல் மலரில் மக்களின் உணவு விஷயமாக ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அதில் மனிதனுக்கு கிரமமான உணவு மாமிசம்தான் சும்மா அதைவிட்டுவிட்டு பழக்கவழக்கத்தை உத்தேசித்து அதனை ஒதுக்குகின்றார்கள். அதிலும் மாடு தின்பதை ஒதுக்குகின்றார்கள். இதனால் மக்கள் பலவீனர்களாகத்தான் ஆகின்றார்கள்.
மக்கள் விவசாயப் பண்ணை வைத்துக்கொண்டு தானியங் களை உற்பத்திப் பண்ணுவதுபோல மாட்டுப்பண்ணைகள் வைத்து நல்ல வண்ணம் வளர்த்துப் பெருக்க வேண்டும். பசுவை பாலுக்கு வைத்துக்கொண்டு காளை மாடுகளை உணவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எழுதியுள்ளேன்.
மேல்நாடுகளில் மாட்டை உணவுக்குத் தான் பயன்படுத்துகின்றார்கள். உழவுக்கு மாட்டைப் பயன்படுத்துவது கிடையாது. முன்பு குதிரையைத் தான் பயன்படுத்தி னார்கள். இன்று இயந்திரம் மூலம் உழவு செய்கின்றார்கள்!
மேல்நாட்டார் மனஉறுதியுடனும் சுறு சுறுப்புடனும் இருப்பதற்கு அவர்களின் உணவுமுறைதான் காரணம் ஆகும். நாம் சுத்த சோம்பேறிகளாகவும் மன உறுதி யற்றவர்களாகவும் இருக்கக் காரணம் நமது சத்தில்லா உணவுமுறைதான் ஆகும்.
சைனாக்காரனையும், மலாய்க்காரனை யும், ஜப்பானியனையும் எடுத்துக் கொண் டால் அவன் சாப்பிடாத மாமிசமே கிடை யாது. மாடு, பன்றி மட்டுமல்ல பாம்பு, பல்லி, ஓணான் முதலியவைகளையும் சாப்பிடு வான். அவன்கள் எல்லாம் சிறந்த உடல் வலிமை உள்ளவர்களாக விளங்குகின் றார்கள்.
நாம் சக்தி குறைந்தவர்களாவும், மன உறுதியற்றவர்களாகவும், சோம்பேறிகளாக வும் இருக்கக் காரணம் நமது அரிசி உணவுதான். அரிசி சும்மா மனிதனை சாகாமல் வைத்திருக்குமே ஒழிய வலிவு உடையவர்களாக இருக்க உதவாது. அதில் சத்து இருக்காது. மற்ற காய்கறிகளிலும் அவ்வளவாக சத்து அதிகம் இராது.
இதன் காரணமாகத்தான் தொழிலாளர் கள் கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை முதலியன சாப்பிட்டு வந்தார்கள். அவர் களும் அரிசி சாப்பிட ஆரம்பித்து சோம் பேறியாகி விட்டார்கள்.
அரிசியும் காய்கறியும் சோம்பேறியாக ஊரார் உழைப்பை உண்டு வாழக் கூடிய வர்களுக்கு வேண்டுமானால் பொருந்துமே ஒழிய உழைப்பாளிக்கு ஏற்றதல்ல.
அரிசி உணவு தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், வங்கம், பஞ்சாப்பில் ஒரு பகுதி இப்படி சில பாகத்தில்தான் சாப்பிடுகின் றார்கள். மற்ற பகுதி மக்கள் எல்லாம் கோதுமையே சாப்பிடுகிறார்கள். கோதுமை அரிசியைவிட சத்து அதிகம் உள்ளது.
அரிசி சோறு சாப்பிட குழம்பு பொறியல் ரசம் மோர் முதலியன வேண்டியுள்ளது. இதற்கு நேரமெனக்கேடு அதிகம் ஆகும். கோதுமை உணவுக்கு பக்குவமுறையும் கம்மி அதற்கு தொட்டுக்கொள்ள ஏதோ கூட்டு ஒன்று தயார் செய்து கொள்ளுவான்.
நாம் நல்ல அளவு இன்று மாமிசம் சாப்பிடுகின்றவர்களாக இல்லை. ஏழை வாரத்திற்கு ஒரு தடவை சாப்பிட்டால் அதுவே அதிசயம். பணக்காரன் இரண்டு தடவை சாப்பிடுவான். சாப்பிடும் அளவும் மிகக் கொஞ்சம்  அரிசி சோறு மிகுதியாக வும், மாமிசம் கொஞ்சமாகவும் தான் இருக்கும். மேல் நாட்டில் உணவில் பெரும் அளவு மாமிசமும் குறைந்த அளவுதான் கோதுமையும் சேர்த்துக் கொள்ளுவான்.
நமது நாட்டில் கோழி மாமிசமானது ஆட்டுக்கறியைவிட அதிக விலையாக உள்ளது. ஆனால், மக்கள் சல்லிசில் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய மாட்டு மாமி சத்தை உண்ண மறுக்கின்றார்கள்.
தோழர்களே! பார்ப்பனர்கள் எல்லாம் மாடு எருமை தின்றவர்கள் ஆவர். இராமா யணம் பாரதம் மனுதர்மம் பார்த்தாலே தெரியும் யாராவது விருந்தாளி வந்தால் கன்றுக்குட்டியை அறுத்துத்தான் விருந்து வைத்ததாகக் காணலாம்.
பிறகு எப்படியோ, அதனை பார்ப்பான் விட்டு விட்டு சாப்பிடுகின்ற நம்மவர்களை கீழ்மக்கள் என்று கூறி விட்டான்.
30, 40 ஆண்டுகளுக்கு முன்னமேயே சிலர் மாடு சாப்பிட வேண்டும் என்று கூறியிருக்கின்றார்கள். நாமும் காய்கறி அரிசி உணவைக் குறைத்துக் கொண்டு மாட்டு மாமிச, உணவைத் தாராளமாக சாப்பிட வேண்டும். மலிவு விலையில் கிடைக்க பெரிய பெரிய மாட்டுப் பண்ணைகள் ஏற்படுத்த வேண்டும். மாடு தின்பது பாவம் அல்ல.
அப்படியே பாவம் என்றாலும், கோழித் தின்பதில் எவ்வளவு பாவமோ அவ்வளவு பாவம் தான் மாடு தின்றாலும் ஆகும். நமது சாமிக்கே மாடு, எருமை, கோழி, பன்றி முதலியன காவு கொடுத்துக் கொண்டுதானே வருகின் றார்கள்.
மாடு சாப்பிடுவது அவமானம் உடையது அல்ல. கோழிப் பண்ணை வருமானம் கொடுக்கக் கூடியது. நல்ல சத்துள்ள உணவு அதன் முட்டை முதற்கொண்டு இன்று கிராக்கியாகி விட்டது. முட்டை விலை முன்பு டசன் 3 அணா விற்றது. இன்று ஒரு முட்டை 20 காசு, 25 காசு விற்கின்றது. ஏழை மக்கள் எப்படி வாங்கி தாராளமாக உண்ணமுடியும்?
அரிசி விலை இறங்கினால் பார்ப்பானுக் குத்தான் நல்லது. இப்படிப்பட்ட பண்டங் களுக்கு விலை இறங்கினால் நமக்கெல் லாம் நல்லது.
ஊருக்கு ஊர் 10 பண்ணைக்கு குறை வில்லாமல் கோழிப்பண்ணை ஏற்பட வேண்டும். 500க்கும் கம்மி இல்லாமல் ஒவ்வொரு பண்ணையிலும் முட்டை உற்பத்தியாகவேண்டும். உயர்ந்த ஜாதிக் கோழிகளை வாங்கிப் பெருக்க வேண்டும். அரசாங்கமும் தாராளமாக இம்மாதிரியான காரியங்களுக்கு உதவி செய்கின்றார்கள்.
இந்த நாட்டில் பார்ப்பான் உணவுக்கு ஆக போராட ஆள் உள்ளது. நமது உணவுக்குப் பாடுபட ஆள் இல்லை. நான் சொன்னால் அவன் அப்படித்தான் சொல்லுவான் என்று எண்ணுகின்றார்கள்.
மக்கள் தாராளமாக மாட்டுக்கறி முதலிய இறைச்சி சாப்பிட்டு பலசாலியாக ஆகவேண்டும் என்று எடுத்துரைத்தார்கள்.
21.1.64 அன்று மதுரை அனுமந்தபட்டி கோழிப்பண்ணை திறப்பு விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய உரை.
விடுதலை 03.02.1964

அழைக்கிறது பெரியார் திடல்!

அண்ணல் அம்பேத்கர்
பிறந்த நாளில் (ஏப்ரல் 14)
புரட்சிப் பெண்கள்
படைத்திடும்
புறநானூறு
தாலியாம் தாலி!
யாருக்கு?
பெண்ணுக்கு மட்டுமாம்
கல்யாணம் ஆயிற்றா என்று
அடையாளம் காட்டவாம்!
ஆணுக்கு அடையாளம்
எங்கே என்றால்
அடேயப்பா
ஆவேசத்தைப் பாருங்கள்
மீசையின் துடிப்பின்
வேகத்தைக் கேளுங்கள்
அவனுக்கென்ன
ஆண் பிள்ளை
ஆயிரம் பெண்களோடு
சுற்றுவானாம்
அதைக் கேட்க நீ யார்
என்ற ஆணவம்!
அந்தக் காலம்
மலையேறி விட்டது அப்பனே!
என்று காட்ட
மானமிகு
மங்கையர் வருகிறார்
உரிமை முரசொலித்து!
அடிமைத் தளையாம்
தாலியை அகற்றிட
இணையரோடு வருகிறார்
இணையில்லா
இலட்சிய மங்கையர்!
தாலியறுப்பல்ல - அகற்றம்!
ஆனாலும் உண்மை
ஆண் எஜமானன்
பெண் அடிமை எனும்
ஆரியக் கலாச்சாரத்தின்
ஆணி வேரை அறுக்கும்
அனல்வாதம்
பெண்ணென்றால்
துரோகச் சிந்தை என்றும்
படுக்கையறைப் பாவையென்றும்
பிதற்றும் மனுதர்மத்துக்குப்
பேரிடி காத்திருக்கிறது.
பெரியார் திடலுக்கு
வாருங்கள்
பெரியார் சகாப்தம்
பெண்டீரே!
மற்றொன்று கேளிர்
மாட்டிறைச்சிக்குத் தடையாம்
மாட்டிலும் பசு
கோமாதாவாம்!
உண்ணக் கூடாதாம்
உறுமுகின்றன
உதவாக் கறைகள்!
கோமாதாவை
கூட்டம் கூட்டமாக
உண்ட
வேதியக் கூட்டம்
கூறுகிறது கூசாமல்!
அன்று யாகத் தீயில்
ஆவினத்தைப் பொசுக்கி
கண்டங்களைத் தின்றிட
அடித்துக் கொண்ட
ஆரியக் கூட்டம்
பசப்புகிறது இன்று!
கோமாதா கூச்சல் போடும்
குல்லூகக் கூட்டத்திற்கு
ஒரே ஒரு கேள்வி
அந்த மாதா செத்தால்
தூக்க வேண்டியது தானே?
அதற்கு மட்டும் எங்கள்
தோழன்தான் கிடைத்தானா?
ஒரு வேளை
புல் போட்டாயா?
குளத்திற்கு ஓட்டிச் சென்று
குளிப்பாட்டியதுண்டா?
பால் கறந்தாயா?
பால் கறந்து
பக்குவம் செய்து கொடுத்தால்
வெண்ணெயும் தயிருமாய்
வெட்டுவதுதானே
உங்கள் வேலை?
இனி எடுபடாது உங்கள்
ஏமாற்று வேலை
ஈரோட்டுப் பூகம்பத்
தோளின்மீது
இன்று எங்கள் இனம்!
உரசிப் பார்க்க
ஆசைப்பட வேண்டாம்!
கிடைச் சிங்கதோடு
கீரைத் தண்டுகள் மோத வேண்டாம்
எருமையைச்
சாப்பிடலாமாம்
எருமை கறுப்பு என்பதால்
இழிவோ!
இதிலும் வருணாசிரமமோ!
எலி கத்தி
புலியா அஞ்சும்?
கோழி குரல் கொடுத்தா
கொல் யானை  பதுங்கும்?
இந்து முன்னணி கத்தி
எழுச்சிக் கூடல்
கருஞ்சட்டையா
பின்வாங்கும்?
வாருங்கள் தோழர்காள்!
மாட்டுக்கறி உண்டு
பலமாய்க் குரல்
கொடுப்போம்!
பஞ்சாங்கக் குப்பைகள்
பறக்கட்டும் -
பாய்ந்து வருக பகுத்தறிவுப் பெரும்படையே!
திராவிடப் புலியின் வாலை
சீண்ட ஆசையாம் -
தீண்டட்டும் பார்ப்போம்!
தினவெடுத்தால்
நாம் என்ன செய்ய?

- கவிஞர் கலி. பூங்குன்றன்

Saturday, April 11, 2015

சென்னை பெரியார் திடலில் நடப்பது தாலி அகற்றும் நிகழ்வே தவிர போராட்டமல்ல!

அண்ணல் அம்பேத்கர் 125ஆம் ஆண்டு பிறந்த நாளில்

சென்னை பெரியார் திடலில் நடப்பது தாலி அகற்றும் நிகழ்வே தவிர போராட்டமல்ல!

பெண்ணுரிமை அடிப்படையில் தானாக முன்வந்து

தாலியை அகற்றிக் கொள்வது சட்டப்படியானதே!

வழக்கு வரும்போது நீதிமன்றத்தில் முறைப்படி சந்திப்போம்! தமிழர் தலைவர் அறிக்கை

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் (ஏப்ரல் 14 காலை) சென்னை பெரியார் திடலில் நடக்க இருக்கும் தாலி அகற்றும் நிகழ்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பெரியார் திடலில் நடைபெற உள்ள அந்த நிகழ்ச்சியின் சட்டப்படி யான கொள்கைப்படியான நிலையை எடுத்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

 
14ஆம் தேதி தாலி அகற்றும் நிகழ்ச்சி

திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு எதிரான புகார்மீது வழக்குப் பதிவு,
வேப்பேரி போலீசுக்கு, அய்க்கோர்ட் உத்தரவு, என்று தலைப்புகளிட்ட  ஒரு செய்தி தினத்தந்தி (11.4.2015) நாளேட்டில் வெளி வந்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

 அதில் ஒரு நபர் அகில இந்திய இந்து மகாசபையின் மாநிலத் துணைத் தலைவராம்; இன்னும் ஒரு வழக்குரைஞர் உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் அளித்துள்ளனர்.

கடந்த 6ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் வீரமணிக்கு எதிராக நான் புகார் மனுவை அளித்துள்ளேன்.

அதில் (செய்தியில் உள்ளபடி)

திராவிடர் கழகத்தின்  தலைவர் கி. வீரமணி வருகிற 14ஆம் தேதி தன்னுடைய ஆதரவாளர்களைக் கொண்டு தாலி அகற்றம் என்ற நிகழ்ச்சியை நடத்திட  திட்டமிட்டு அறிவித்துள்ளார்.

பெண்களுக்கு மன வேதனை அளிக்கும் அவரது செயல்பாட்டை, தடுத்து நிறுத்த வேண்டும். இதுகுறித்து கடந்த 6ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்க வில்லை. எனவே என்னுடைய புகார் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் இந்த மனுக்களையெல்லாம் தன்னுடைய சேம்பரில்   வைத்து நேற்று விசாரித்தார்!

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மனுதாரர்கள் புகாரை போலீஸ் கமிஷனரிடம் கொடுத்துள்ளனர். அவர்கள், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ் பெக்டரிடம் தான் இந்த புகாரைக் கொடுக்க வேண்டும். அந்தப் புகாரில் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு ஆரம்பக் கட்ட முகாந்திரம் இருந்தால், லலிதாகுமாரி வழக்கில்  சுப்ரீம்கோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படை யில், வேப்பேரி - போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் என்று  செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை காவல்துறை ஆணையருக்கு இதற்கு முன்பே கழகத்தின் சார்பில் தகவல்

நாம் இதற்கு முன்னாலேயே சென்னை போலீஸ் கமிஷனருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் வரும் 14ஆம் தேதி நடைபெறவிருக்கும் அண்ணல் அம்பேத் கரின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை வெகு சிறப்புடன் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்துவது என்றும் அதில் பெண்ணுரிமை, உண்ணுரிமை, கருத்து ரிமைகள் வலியுறுத்தும் நிகழ்ச்சிகளும் இடம் பெறும் என்றும் அது பெரியார் திடலில் நடைபெறும் என்றும் முறைப்படி கடிதம் கொடுத்துள்ளோம். (30.3.2015).

 ஏனிந்த அறிவிப்பு?

ஒரு தொலைக்காட்சி தாலி பற்றிய ஒரு விவாதத்தை ஒளிபரப்பக் கூடாது என்று அச்சுறுத்தப்பட்டது;  இந்துத்துவ மதவெறியர்கள் உள்ளே புகுந்து பணியாளர்களை அடித்தனர். காமிராவை உடைத்தனர்.

பிறகு அவ்வலு வலகத்தை நோக்கி டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளை வீசி அச்சுறுத்தி, தாலிபற்றிய நிகழ்ச்சியை ஒளிபரப்ப விடாமல் மிரட்டி, கருத்துரிமையைத் தடுத்ததை எதிர்த்து, சென்னையில் நடந்த பல கட்சியினர் தலைவர்கள் கூட்டத்தில் பலத்த கண்டனம் எழுந்தது. அதில் கலந்து கொண்ட தாய்மார்களும் முற்போக்குச் சிந்தனை கொண்ட பெண்களும், தாலிகளைப் பொறுத்த வரை ஒரு அடிமைச் சின்னம், அதை அகற்றிக் கொள்வ தாகவும், அதன் மூலம் எங்களது கருத்துரிமையைப் பாதுகாக்க விழைகிறோம் என்றும் என்னை சந்தித்துக் கூறிய நிலையில், அம்பேத்கர் விழாவையொட்டி அதில் தாங்களே விருப்பப்பட்டு முன்வரும் பெண்கள் - தாலியை அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதைத் திட்டமிட்டே சிலர் தாலி அறுப்புப் போராட் டம் என்று விஷமத்தனமாகத் தலைப்பிட்டு, தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.

இதைக் கண்டித்து ஊடகங்களுக்கு, சில நாள்களுக்கு முன்பு கழகத்தின் சார்பில் அறிவிப்பு ஒன்றினை அனுப்பிய நிலையில் (1.4.2015) அவர்கள் அறுப்பு என்பதை மாற்றிக் கொண்டனர்.

சில விஷமிகளும், மதவெறியர்களும்,இதை வைத்து விளம்பரம் தேடிட முனையும் சில வெட்டி ஆசாமிகளும், இன்னமும்  அறுப்பு அறுப்பு என்றும், போராட்டம் என்றும் எழுதி வருகின்றனர்.

இது தாலி அறுப்பும் அல்ல. (மதச் சடங்கு செய்வோர் தான் பெண்களை விதவையாக்கச் செய்யும் செயல் அது)  போராட்டமும் அல்ல!

இந்து மத உணர்வைப் புண்படுத்துவதாக உள்ளது என்று சிலர் பேசுவது, எழுதுவது, புகாரில் கூறுவது ஒன்று அறியாமை அல்லது விஷமத்தனமே!

காரணம், தாலி கட்டாது திருமணம் செய்ய இந்து திருமணச் சட்டத் திருத்தமாகத்தான் (Act No.21 of 1967 - Hindu Marriage Act 1955 - -  இது போலவே புதுச்சேரி அரசும் சட்டத் திருத்தம் செய்துள்ளது - சிங்கப்பூர், மலேசியாவிலும்கூட சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என்று ஆக்கப்பட்டுள்ளது) அறிஞர் அண்ணா முதலமைச்சரான நிலையில், ஏகமனதாக சட்டமன்றத்தில் சுயமரியாதைத் திருமண சட்டம் நிறைவேறியதோடு, பின்னோக்கி, முன்பு நடந்த சுயமரியாதைத் திருமணங் களும் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்துக்கள் மனம் புண்படுகிறது என்ற வாதம் பொய்யானது. புரட்டானது - பொருளற்றது.

காரணம் ஹிந்து மதத்தில் - வேத மதத்தில் இப்படி ஒரு சடங்கே இல்லை.
இது போராட்டமும் அல்ல. பெண்ணுரிமைப் பெம் மானான டாக்டர்அம்பேத்கர் 125ஆம் ஆண்டு விழா  அன்று.

பெண்கள் தாங்களே - எவ்வித கட்டாயமோ, நிர்ப்பந்தமோ, இன்றி, தெளிவான துணிவான உணர்வுடன் முன் வந்து நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளுகின்றனர்.
இது அவர்களது தனி மனித சுதந்திரம்! இதைப்பறிக்க - தடுக்க எவருக்கும் சட்டப்படியும், நியாயப்படியும் உரிமை இல்லை.

எங்களது வற்புறுத்துதலோ, அல்லது தவறான ஈர்ப்போ (Lure)
கூட கிடையாது.


சுயமரியாதைத் திருமணத்தில் தாலி கட்டாயமல்ல!

அறிஞர் அண்ணா ஆட்சியில் தந்தை பெரியார் விருப்பப்படி நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமண செல்லுபடிச் சட்டத்தில் தாலி அணிந்து கொள்ளாத திருமணமும் சட்டப்படி செல்லும் என்று கூறப்பட்டுள்ளதே!


சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாது

இதுதான் நமது விளக்கம்; எந்தவித ஆர்ப்பாட்டம், அமளி இன்றி, அம்பேத்கர் 125ஆம் ஆண்டு விழா பெரியார் திடலில் நடைபெறும்; எங்களால் எந்தச் சட்டம் ஒழுங்கு பிரச்சினையோ, அமைதியின்மையோ ஏற்படாது என்பது உறுதி!

ஆனால், இதற்கிடையில் ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த இராம. கோபாலன்  நாங்கள் அன்றைக்கு (14 அன்று) என்ன செய்வோம் என்று இப்போது சொல்ல மாட்டேன் ஒன்று நடக்கும் இப்போது சொன்னால் போலீஸ் என்னைப் பிடித்துக் கொண்டு போய் விடும் என்றும் கூறியுள்ளார். இத்தகவல் மூலம் கலவரம்  - வன்முறையை அவர்கள் நம்பியுள்ளனர் என்பது தெளிவாகிறது.

வழக்கம்போல் திராவிடர் கழகத் தொண்டர்கள் தோழர்கள் எவ்வளவு உணர்ச்சி வயப்பட்டாலும் கட்டுப்பாடு காத்து நடந்து கொள்ளுவார்கள்.

இந்து மதம் என்பதில் பார்ப்பனப் பெண்கள் உட்பட பலர் அணிவதில்லை என்பதும் மறுக்க முடியாது.

கட்டுப்பாடுள்ள ஒரு இயக்கம் இது! சட்டப்படி நமக்குள்ள உரிமையை எவரும் பறிக்க முயன்றால் அவர்கள் தோல்வியை அடைவர். அதனை உரிய முறையிலும் சந்திப்போம்.  இது உறுதி!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
11.4.2015, சென்னை

சென்னை புத்தகச் சங்கமம் - 2015 ஏப்ரல் 13 முதல் 23 வரை




Thursday, April 9, 2015

நாடு எங்கே செல்லுகிறது?

குஜராத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து முஸ்லீம்களுக்கு எதிரான மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக இந்துக்கள் வாழும் பகுதியில் உள்ள முஸ்லீம்கள் தங்களது வீட்டை விற்றுவிட்டு வேறு இடங்களுக்கு இடம் பெயர ஆரம்பித்துள்ளனர்.

மத்தியில் மோடி அரசு வந்ததில் இருந்து சிறு பான்மை இனமக்கள்மீதான தாக்குதல்களும், மிரட் டல்களும் நாடு முழுவதும் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கின்றன, முக்கியமாக இந்து அமைப்புகள் நேரடியாக தெருக்களில் இறங்கி முஸ்லீம் வியாபார தலங்களைத் தாக்குவதும், முஸ்லீம்கள் பணிபுரியும் இடங்களில் சென்று அவர்களை மிரட்டுவதும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றன.

ஆங்கில பத்திரிகையான இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் கடந்த சில மாதங் களில் சுமார் 700 குடும்பங்கள் தங்களது வீடுகளை விற்றுவிட்டுச் சென்று விட்டதாகத் தெரிவித்துள்ளது.     குஜராத் மாநிலம் பாவ் நகரில் தொழிலதிபர் அலி அஸ்கர் என்பவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம்  பங்களா  வீடு ஒன்றை வாங்கியிருந்தார்.

 இந்த நிலை யில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு பிரவீன் தொகாடியா அந்தப்பகுதிக்குச் சென்று பொதுக்கூட்ட மேடையில், இந்தப் பகுதிக்கு முஸ்லீம்கள் வர தடைசெய்யப்பட வேண்டும். இங்கு சில முஸ்லீம்கள் பங்களாக்களை வாங்கி, குடியிருக்கிறார்கள். இவர்கள் வேண்டுமென்றால் பாகிஸ்தானுக்குச் சென்று  பங்களா வாங்கி குடியிருக்கட்டும், இங்கே இருக்கத் தேவையில்லை, ஆகையால் அவர்களின் வீட்டின் வெளியே காவிக்கொடி ஏற்றுங்கள், அவர்களுடன் பேச்சுவார்த்தை வைக்க வேண்டாம், இந்துக்களின் கடைக்குச் சாமான் வாங்க வந்தால் அவர்களை விரட்டுங்கள் என்று பேசியிருந்தார். இந்த பேச்சிற்காக அவர்மீது முதல் குற்ற அறிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

இந்துத்துவ சக்திகளின் தொடர் மிரட்டல் காரண மாக  அலிஅஸ்கர் தன்னுடைய பங்களாவை விற்று விட்டு வேறுபகுதிக்குச் சென்றுவிட்டார். இவ்விவகாரம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளதாவது: ஜனவரி மாதம் அலி அஸ்கர் தன்னுடைய பங்களாவை விற்க வேண்டிய நிர்ப்பந்தத் திற்கு ஆளானார், தினசரி அவரது பங்களாவின் முன்பு சமூக விரோதிகள் கேவலமான முறையில் நடந்து  கொள்கின்றனர்.

அவர் பங்களா சுவரில் தகாத வார்த் தைகளை எழுதிச் செல்கின்றனர். மேலும் மறைமுகமாக நகராட்சி நிர்வாகத்தில் உள்ள சிலர் அந்தப் பங்களா விற்கு செல்லும்  மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகளைத் தடுத்து வருகின்றனர். இது குறித்து புகார் கொடுக்கச் சென்றபோது பங் களாவைக் காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு போய் விடச் சொல்லுங்கள் என்று நேரடியாகவே காவல்துறை யிடம் உள்ளூர் அரசு நிர்வாகமும் கூறியதால் வேறு வழியின்றி அவர் பங்களாவை விற்கும் நிலைக்கு ஆளானார்.

இந்த நிலையில் பூமதி அசோசியேசன் என்ற நிறுவனம் அவரது பங்களாவை வாங்கியுள்ளது. இது உள்ளூர் இந்து அமைப்பின் தலைவர் ஒருவரின் நிறுவனமாகும், இந்தப் பங்களா மற்றும் அருகில் உள்ள பல்வேறு முஸ்லீம்களின் வீடுகள் தொடர்ந்து விற்றுவிட்டு வேறு இடங்களுக்குச் செல்கின்றனர். இவர்களை விரட்டுவதில் அந்த உள்ளூர் இந்து அமைப்பின் தலைவர் முனைப்புக் காட்டி வருகிறார். அதே நேரத்தில் முஸ்லீம்களின் வீடுகளையும் அவரே தனது பினாமி பெயரில் வாங்கிவருகிறார். என்று அந்த பத்திரிகையில் எழுதப்பட்டுள்ளது.

இந்தியா இந்துக்களின் நாடு; இந்தியாவில் வாழ் வோர் அனைவரும் இந்துக்களே என்று ஆர்.எஸ்.எஸ். தலைவரே கூறுகிறார். முஸ்லிம்கள் கிருஷ்ணனை வணங்க வேண்டும் என்றும் கிறிஸ்தவர்கள் ராமனை வணங்க வேண்டும்  என்றெல்லாம் மனம் போன போக்கில் உளறித் தள்ளுகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின்  வாழ்வு - கேள்விக்குறியாகி விட்டது.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தி யர்கள் வேலை வாய்ப்பைத் தேடிச் சென்று அங்கே தங்களின் வாழ்க்கைப் படகை ஓட்டி வருகின்றனர். இந்தியாவில் முஸ்லிம்களுக்கு அழுத்தம் கொடுத்தால், அதன் விளைவு வெளிநாடுகளில் வாழும் இந்தியர் களின் நிலை என்னாவாகும் என்று ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?

இந்துத்துவா வெறி இந்தியாவில் வாழும் மக்களுக்கு மட்டுமல்ல; வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும் ஆபத்தானதே - எச்சரிக்கை!
வெறி குறிப்பிட்ட நேரத்தில் சுகமாகத்தானிருக்கும் - அதன் விளைவு பெரும் விலையைக் கொடுக்கக் கூடியதாகவே இருக்கும் என்பதுதான் வரலாறு!



இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

மான்கறி சாப்பிட்ட ராமனும், சீதையும்

நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று, அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் கறி சாப்பிடக் கூடாதுன்னு தடை இருக்கே, 

அப்போது எங்கே போனார்கள் இவர்கள். வீரமணி போன்றவர்கள் மான்கறி விருந்து நடத்துவார்களா? என்று கேட்டிருக்கிறார் ஒரு அக்கிரகாரத்து அரை வேக்காடு.

இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களான ஏழை, எளிய மக்களின் உணவான மாட்டுக்கறியை, மத வெறியின் அடிப்படையில் தடைசெய்யும் போக்கை யும், அரிய உயிரினங்களைப் பாதுகாக்கும் நோக்கத் துடன் மான்கறி தடைசெய்யப்பட்டிருப்பதையும் ஒன்று போல காட்டும் புரட்டு இது என்பது சற்றேனும் சிந்திப்போருக்குத் தெரியும்.

எளிய மக்களின் சத்தான உணவு தடுக்கப்படுகிறதே என்ற கவலை நமக்கு! அதனால் மாட்டுக்கறியை தடை செய்யக் கூடாது என்கிறோம். எதிர்த்துக் குரல் கொடுக்கிறோம்.. போராடுகிறோம்!

ஆனால், அப்படி என்ன மான் கறியில் இவர் களுக்குப் பற்று என்று சிந்தித்தால், அப்போது வெளிப்படுகிறது குட்டு!

இந்துத்துவா கும்பலின் இஷ்ட தெய்வங்களான ராமனும், சீதையும் மான் கறியை எப்படியெல்லாம் விரும்பிப் புசித்தார்கள் என்பதை விவரிக்கிறது வால்மீகி ராமாயணம். மாரீசன் என்னும் மாய மானை விரும்பிக் கேட்டாரே வைதேகி. எதற்கென்று நினைக்கிறீர்கள்? தமிழ்ப்பட கதாநாயகிகள் போல கையில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கவா? அல்ல... அல்ல... அள்ளி எடுத்து அதன் கறியைச் சுவைப்பதற்காக!

கங்கைக் கரையிலும், யமுனைக் கரையிலும் ஏராளமாக மது உண்டும், புலால் புசித்தும் வாழ்ந்த சீதை விரும்பிய மான் கறியைக் கொண்டு வருவ தற்காகத் (அதனால் பின் விளைவுகள் வரும் என்று தெரிந்தும்) தான் மானைத் தேடிச் சென்றான் ராமன் என்று வால்மீகி ராமாயணத்திலிருந்து (3.42.21) ஆதாரம் காட்டுகிறார் The Righteous Rama
நூலின் ஆசிரியர் ப்ராக்கிண்டன்.

அது மட்டுமா, ராமனும் லட்சுமணனும் எந்தெந்த வகை மான்களைப் புசித்தனர் என்று வால்மீகி காட்டுகிறார் தெரியுமா? முதன்மையான நான்கு மான் இனங்களிலிருந்து ஒவ்வொன்றையும் வேட்டையாடிப் புசித்தனர். (அயோத்தியா காண்டம் 2 - 52 - 102).


Having hunted there four deer, namely Varaaha, Rishya, Prisata; and Mahaaruru (the four principal species of deer) and taking quickly the portions that were pure, being hungry as they were, Rama and Lakshmana reached a tree to take rest in the evening.

Alternative translation: Being famished, Rama, Lakshmana hunted and killed a boar, a Rishya animal (a white footed male antelope), a spotted deer and a great deer with black stripes and quickly partaking the pure meat reached atree by the evening to spend the night.

யமுனை நதிக்கரையில் ராமனும் லட்சுமணனும் மான் கறி சுவைத்ததைச் சொல்லுகிறது அயோத்தியா காண்டம் (2 - 55 -32/33)

Translation: Thereafter having travelled only a couple of miles the two brothers Rama and Lakshmana killed many consecrated deer and ate in the river-forest of Yamuna.

Alternative translation: After travelling a distance of two miles further in the forest on the bank of Yamuna, those two brothers slew deers worthy for sacrifice for food and ate them. Ayodhya Kanda 2-55-32/33
நாம் காட்டியிருப்பது ஒரு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே! அவர்கள் குடித்துக் களித்த மது வகைகள் பற்றியும், உண்டு மகிழ்ந்த கறி வகைகள் பற்றியும் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன.

இப்படி காவிக்கூட்டம் போற்றும் கடவுளர் சாப் பிட்ட மான் கறியைத் தடை செய்தால் அவர்களுக்குக் கோபம் வருவது இயற்கை தானே!

மான் கறி தடை செய்யப்பட்டிருப்பதில் மாற்றுக் கருத்து அக்கிரகாரத்தில் இருக்குமாயின் அவர்கள் தானே அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். கடவுளின் உணவு தடுக்கப்படுமானால் அதற்காகக் கொந்தளித்து அவர் தானே மான் கறி விருந்து நடத்த வேண்டும்? எதிர்பார்க்கிறோம்.... ஹெச்.ராஜா நடத்தும் மான் கறி விருந்து அறிவிப்பை!

Wednesday, April 8, 2015

ஆந்திரக் காட்டில் அப்பாவி தமிழர்கள் 20 பேர் சுட்டுக்கொலை - நெஞ்சைப் பிளக்கக் கூடியதாகும்

ஆந்திரக் காட்டில் அப்பாவி தமிழர்கள் 20 பேர் சுட்டுக்கொலை - நெஞ்சைப் பிளக்கக் கூடியதாகும்

உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியின்மூலம் மட்டுமே நீதிவிசாரணை நடத்திடவேண்டும்!

இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்)  தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!

ஆந்திர மாநிலத்தில், ஆந்திர காவல்துறையினரால் அப்பாவித் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்; இதற்கு உடனடியாக உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியின்மூலம் நீதி விசாரணை நடத்திடவேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

காக்கை, குருவிகள் போல சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்

திருப்பதி அருகே சேஷாசலம் காட்டில், செம்மரம் வெட்டச் சென்றவர்களான தமிழ்நாட்டைச் சேர்ந்த, திருவண்ணாமலை, வேலூர், சேலம், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த அப்பாவித் தமிழர்கள் 12 பேர்கள் உள்பட, மொத்தம் 20 பேர்கள் காக்கை, குருவிகள் போல சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி - நம் நெஞ்சைப் பிளக்கும் செய்தியாகும்!

இது ஒரு அரச பயங்கரவாதம்!

அவர்கள் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட ஏழைக் கூலித் தொழிலாளர்கள்; தவறு செய்தவர்களை சட்டப்படி ஆந்திர அரசும், அந்தக் காவல்துறையும் தண்டிக்கவேண்டுமே தவிர, இப்படி என்கவுண்டர் என்று சொல்லி, திட்டமிட்டு சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்கள் தாக்கினார்கள் என்று பழி போடுவது, எவ்வகையில் ஏற்கத்தக்கது? தமிழர்கள் என்றால் நாதியற்ற மக்களா?

அண்டை மாநிலங்களில் இப்படிப்பட்ட அவலங்களும், அக்கிரமமான முறையில் உயிர்ப் பறிப்புகளும் ஏற்பட்டால், அதன் எதிர்வினை இங்கே தொடங்கப்பட்டால் என்னவாகும் என்று ஆந்திர அரசும், காவல்துறையும், முதலமைச்சரும் எண்ணிப் பார்க்கவேண்டாமா?

தமிழர்கள் என்று பார்ப்பதுகூட ஒருபுறம் இருக்கட்டும்; அவர்கள் மனிதர்கள் அல்லவா?

திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை!

மனித உயிர்களைப் பறிப்பது என்ன ஆந்திரக் காவல்துறைக்குப் பிள்ளை விளையாட்டா?

தவறு செய்தவர்கள் என்றால், அவர்கள் நீதிமன்றத்தின்முன் நிறுத்தப்படவேண்டுமே தவிர, இப்படி ஒரு பாசிசப் போக்கினை மேற்கொண்டிருப்பது எவ்வகையில் ஜனநாயகத்தில் ஏற்கத்தக்கது?

ஆந்திரக் காவல்துறை நினைத்திருந்தால் சம்மந்தப்பட்டவர்களை சுட்டுக்கொல்லாமல் சுற்றி வளைத்துக் கைது செய்திருக்க முடியாதா? சுட்டுத் தள்ளவேண்டும் என்ற மூர்க்கத்தனத்துடன்தான் திட்டமிட்டே இதில் செயல்பட்டுள்ளது என்பதில் சந்தேகமேயில்லை.

இது அப்பட்டமான படுகொலை என்று தமிழகக் காவல்துறை மாத்திரமல்ல; ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., அமைச்சர் சிந்தாமோகன் போன்றவர்களும், ஏனைய நடுநிலையாளர்களும் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை - (ஜாலியன் வாலாபாக் போன்ற) என்றே கூறியுள்ளனர்!

1. உடல்களுக்குப் பக்கத்தில் தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், அறுபடாத செருப்புகள் திட்டமிட்டு வைக்கப்பட்டவை - எல்லாம் ஜோடிக்கப்பட்டவை!

2. பழைய செம்மரக்கட்டைகளை உடல்களுக்கு அருகில் வைத்துள்ளனர்; அவை புதிதாக வெட்டப்பட்டவை அல்ல.

3. சுடப்பட்டவர்கள் 20 பேர்களும் நெற்றிப் பொட்டு, மார்பு பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வருகின்றன!

4. பெருங்கூட்டம், பெரும் கலவரங்களில்கூட முதலில் எடுத்த எடுப்பிலேயே, துப்பாக்கிச் சூடு என்று நடத்தி விடுவதில்லையே!

காவல்துறையினரைத் தாக்க வந்திருந்தால், அவர்களை அடக்க இப்படியா நெற்றிப் பொட்டில்; மார்பில் குறி வைத்துச் சுட முடியும்?

இந்த ஆந்திராவின் அத்தை - பாட்டிக் கதையை அறிவுள்ள எவரும் ஏற்கமாட்டார்கள்!

உடனடியாக இதற்கு உச்சநீதிமன்றம் அல்லது வெளிமாநில உயர்நீதிமன்ற நீதிபதியின்மூலம் நீதி விசாரணை நடத்திடவேண்டும்.

தமிழ்நாடு அரசும் - ஆந்திர அரசும் இழப்பீடு வழங்குக!

மனித உரிமை அமைப்புகள், ஆர்வலர்கள் இங்கு சட்ட நடவடிக்கைகளை ஆந்திரக் காவல்துறை, பொறுப்பாளர்கள்மீது தொடங்கவேண்டும்.

இவர்களுக்கு ஆந்திர அரசும், தமிழ்நாடு அரசும் பெருந்தொகைகளை, உயிர் இழந்த ஏழைத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்குத் தர முன்வரவேண்டும் (பணம் உயிருக்கு ஈடாகாது என்ற போதிலும்கூட, ஏழைக் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்கு அது ஓரளவு உதவக்கூடும்).

அண்டை மாநிலம், இப்படி நடந்துகொள்ளலாமா? உயிர் இழந்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழர்கள், தமிழ்நாட்டவர்கள், திருப்பதிக்குச் செல்வதை இனி புறக்கணிக்கவேண்டும்.

- கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை, 8.4.2015









குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...