Saturday, March 9, 2013

வைகோ - ஓர் அலசல்! - 1


நிஜப்புலியும்-வேஷப் புலியும்!
- கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம் -
டெசோ மீண்டும் புத்துயிர் பெற்று, கடந்த சில மாதங்களாக இடைவிடாமல் இலங்கைத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகள் காரணமாகத்தான் இன்று இந்த முற்றுகைப் போராட்டம் - இந்தளவிற்கு வெற்றிகரமாக நடைபெற்றது. வேறு சிலரும் ஈழத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அந்தப் போராட்டங்களுக்கும் எங்களுடைய ஆதரவு உண்டு.
- டெசோ தலைவர் தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை, 6.3.2013, முரசொலி
இங்கே மேடைகள் பலவாயினும் குரல் ஒன்றே என்று தமிழர்கள் கட்சி, ஜாதி, மதம் இவற்றைத் தாண்டி ஒரு குரலில் ஈழத் தமிழர் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு முழு மூச்சும் குடிசெய்வார்க்கில்லை பருவம் என்ற குறள்வழி பணியாற்றி எஞ்சிய தமிழர்மீதான பண்பாட்டுப் படையெடுப் பினை முறியடித்திடும் வகையில் ஒத்த குரல் கொடுப்போம்!
- டெசோ உறுப்பினர், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை, விடுதலை, 16.2.2013
ஈழத் தமிழர்மீது உள்ளபடியே அக்கறை உள்ளவர்கள் இந்த வகையில் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் - செயல் திட்டங்களை வகுத்துக் களத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள்.
இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்கான முயற்சிகளில் டெசோ ஆக்கப்பூர்வமாக பல்வேறு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டு வருகிறது.
சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் முன் முற்றுகைப் போராட்டத்தையும் (5.3.2013) நடத் தியது. காவல் துறையே கைது செய்ய முடியாமல் திணறும் அளவுக்குப் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு போர்க் குரல் கொடுத்தனர். புலிகளாக மாறிய தமிழர்களின்  சீற்றக்குரல் எங்கும் எதிரொ லித்தது.
அதன் ஈரம் காயும் முன்பாகவே - அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் மாநாடு ஒன்றினை இந்தியாவின் தலைநகரில் டெசோ இன்று ஒழுங்கு செய்கிறது.
நாடாளுமன்றம் நடந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இதன் முக்கியத்துவம் எத்தகையது என்பதை - ஆத்திரத்தை முன்னிறுத்தாமல் அறிவுவயப் பட்டுச் சிந்திப்பவர்கள் மிகத் துல்லியமாக உணர் வார்கள்!
ஜெனிவாவில் அமெரிக்கத் தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ள காலகட்டம்வரை - இந்திய அரசுக்கு மேலும் மேலும் ஓர் அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்ற உள்ளத் துடிப்பில் வரும் 12 ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்தத்திற்கு டெசோ அழைப்புக் கொடுத்துள்ளது.
நரி வலம் போனால் என்ன? இடம் போனால் என்ன? மேலே விழுந்து கடிக்காமல் இருந்தால் போதும் என்கிற மாதிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் முழு வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் அள வுக்குக் கடமை உணர்ச்சியற்றவராக இருந்தால்கூடப் பரவாயில்லை - அந்த வேலை நிறுத்தத்தைக் கொச் சைப்படுத்தாமல் இருக்கக் கூடாதா? ராஜபக்சேவின் காதுகளில் குளிர்தென்றலை உலவவிடும் ஒரு வேலையில் இவர் ஏன் ஈடுபடவேண்டும்?
ஈழத் தமிழர் பிரச்சினை என்பதை பொன் முட்டை யிடும் வாத்து - அது தங்களின் பிதுரார்ஜிதச் சொத்து - அது ஒரு கைமுதல் - அது தங்களை விட்டுப் பறிபோய்விடக் கூடாது என்கிற தன்னல வெறி இதில் தலைதூக்குகிறதே தவிர, பிரச்சினையின்மீது ஆழ்ந்த கவலை இருப்பதன் அடிப்படையில் அல்ல.
எதையும் அரசியல்படுத்துவது என்பது ஏற்புடைய தல்ல. தி.மு.க. ஆட்சியின்போது முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்கூட (14.10.2008) கலந்துகொள்ளாதவர்தானே வைகோ? அப்பொழுதே அதுபற்றி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சுட்டிக்காட்டி அறிக்கை விட்டாரே! (11.10.2008) ஈழத் தமிழர் பிரச்சினைக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவர் - போராடுபவர் ம.தி.மு.க. பொதுச்செய லாளர்.
இந்த நிலையில், ஒரு அரசு கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு, தம் கட்சியின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் எடுத்துக் கூறுவது அடிப்படைக் கடமையும், அவசியமும் அல் லவா? ஜனநாயக அமைப்பின்கீழ் வாழ்ந்து கொண் டிருக்கும் நாம் ஒரு அரசு கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குச் சென்று கருத்துகளை எடுத்துக் கூறி, இந்த வகையில் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் என்று கூறும் கடமையைச் செய்யாவிட்டால், உயிர் போன்ற ஈழத் தமிழர் பிரச்சினையில் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது ஆகாதா? என்று தாய்க் கழகத்தின் தலைவர் என்ற முறையில் ஒரு சேய்க் கழகத்தின் பொதுச்செய லாளருக்கு அறிக்கை வெளியிட்டாரே - அதனைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாமல் - அதனை விஷம் தோய்ந்த ஒன்றாக வருணித்தவர்தான் இந்த ஆத்திரக்காரர்.
இதில் இன்னும் குறிப்பிடத்தக்கது ஒன்றுண்டு. கலைஞர் அவர்களின் தலைமையிலான ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் போன்றவர்கள் தமிழ்நாடு அரசின் செயல்பாட்டை வரவேற்று அறிக்கை வெளியிட்ட நிலையில், அரசனை விஞ்சிய விசுவாசிகள்போல இங் குள்ளோர் குதித்தார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும்.
நிஜப்புலியும் - வேஷப் புலியும்!
நிஜப் புலிகளைவிட வேஷம் போட்ட புலிகள் அதிகம் குதிக்கும் என்பார் தந்தை பெரியார். அதுதான் இந்த நேரத்தில் நினைவிற்கு வருகிறது.
டெசோ மீண்டும் தொடங்கப்பட்டு அதன் தொடர்ச்சி யான அலை அலையான செயல்பாடுகள் உலகத் தமி ழர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டன.
டெசோ மாநாடு; அய்.நா. மன்றத்திலும், மனித உரிமைக் கழகத்திலும் அதன் தீர்மானங்கள் நேரில் ஒப்படைத்து அளிக்கப்பட்ட விளக்கங்கள், வெளிநாட்டுத் தூதர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டியது. கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்; டில்லியில் டெசோ சார்பில் அனைத்துக் கட்சி மாநாடு - வரும் 12 ஆம் தேதி பொது வேலை நிறுத்தம்.
அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தி யாவை ஆதரிக்கச் செய்தது - இப்பொழுது இரண்டாம் முறையாகவும் அத்திசையில் நம்பத்தகுந்த வெற்றி முனைகள் -
இவையெல்லாம் ஈழத் தமிழர்ப் பிரச்சினை என்பது எமக்கே சொந்தம் என்று தொழில் நடத்திக் கொண்டி ருந்தவர்களின் தலைகளில் இடியை இறக்கி விட்டது - அதனுடைய ஒட்டுமொத்த ஒப்பாரிதான் - அவலக்குரல் தான் குறுக்குச்சால் ஓட்டுவதாகும்.
இந்திய அரசு இதில் சரியாக நடக்கவில்லை - அதிருப்தி தரக் கூடியதாக உள்ளது என்று சொல்லிக் கொண்டாலும், அந்த அரசிடம்தான், பிரதமரிடம்தான் கோரிக்கைகளைத் திரும்பத் திரும்ப வைக்கவேண்டி யுள்ளது - இதனை வைகோ போன்றவர்கள் செய்த தில்லையா?
ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று கூடப் பெயர் வைக்க முடியாமல் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று பெயர் சூட்டிக் கொண்டவர்கள் சிந்திக்க வேண்டாமா?
மானமிகு கலைஞர் அவர்களைக் கறுப்புப் பட்டியலில் வைத்து, ஜெயலலிதாவை பொன் பேழையில் வைத்து, இவர்தான் ஈழத் தமிழர்களின் விடியல் என்று பேச ஆரம்பித்திருக்கும் தலைவர்களே, ஜெயலலிதாவின் கடந்தகால நிலைப்பாடு என்ன? செயல்பாடுகள் என்ன?
ஈழத் தமிழர்களை ஜெயலலிதா காப்பார், அவர் களுக்காக வாதாடுவார் என்றெல்லாம் அரசியல் - தேர்தல் நோக்கோடு பரப்புரை செய்கிறார்களே - சில அரசியல் கட்சித் தலைவர்கள் - கூட்டணி உறவுக்காக உண்மையை மறைக்கிறார்களே! உண்மையிலேயே இந்த ஜெயலலிதா யார்? அவரின் உண்மை உருவம் என்ன?
ஜெயலலிதாவை ஜெயலலிதா மூலமே இதோ படம் பிடித்துக் காட்டுகிறோம்.
16.4.2002 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானம் இதோ:
மாண்புமிகு செல்வி ஜெயலலிதா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தற்போது ஸ்ரீலங்காவில் நடைபெற்று வரும் செயல்கள், குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், சர்வதேச பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்தது குறித்து இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். அந்தச் செயல்கள் அனைத்துமே இந்திய நாட்டின் பாது காப்பிற்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாகச் சம்பந்தம் உள்ளவை. இவை குறித்து தமிழக மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளார்கள். இந்தப் பேரவையில் அங்கம் வகிக்கும் பல்வேறு உறுப்பினர்களும் தங் களுடைய கவலையைத் தெரிவித்து இங்கே பேசியுள்ளார்கள்.
- இவ்வாறு செல்வி ஜெயலலிதா சட்டப் பேரவையில் உரையாற்றினாரே!
16.4.2002 அன்று தமிழ்நாடு சட்டப்பேர வை யில் முதலமைச்சர் ஜெயலலிதா முன் மொழிந்த தீர்மானம் வருமாறு:
நான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோதெல்லாம் இந்திய அரசாங்கத்தை ஸ்ரீலங்கா அரசுடன் தொடர்பு கொண்டு பயங்கரவாத அமைப்பான எல்.டி.டி.ஈ.யின் தலைவரான பிரபாகரனை ஸ்ரீலங்கா நாட்டிலிருந்து இங்கே கொண்டு வந்து சேர்த்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீதிமன்றத்தின்முன் நிறுத்தவேண்டுமென திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
20.9.1991 ஆம் தேதியிட்ட எனது கடிதத்தில், அப்போது மாண்புமிகு பாரதப் பிரதமராக இருந்த திரு. பி.வி. நரசிம்மராவ் அவர்களை, தேவைப்படும் பட்சத்தில் ஸ்ரீலங்கா அர சினுடைய அனுமதி பெற்று நம்முடைய இராணுவத்தை அனுப்பியேனும், பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிற்குக் கொண்டுவர வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். முன்னாள் பிரதமர், அமரர் திரு. ராஜீவ்காந்தியின் படுகொலையைப் புரிந்தமைக்காக விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை இந்திய நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டுமெனக் கோரியிருந்தேன்.
அதன் பின்னர் பலமுறை இதே கோரிக்கையை வலியுறுத் தினேன். அப்போது பாரதப் பிரதமராக இருந்த திரு.பி.வி. நரசிம்மராவ் அவர்களின் அரசு, இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, 1995 இல் Interpol-International Criminal Police Commission  அமைப்பின் வாயிலாக பிரபாகரனை கைது செய்ய Red Corner Notice வழங்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் எதுவும் நடக்கவில்லை.
அண்மையில் நிறைவேற்றப்பட்ட 2002 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்புச் சட்டம், Prevention of Terrorism Act, 2002-இன்கீழ் இந்திய அரசாங்கம் விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்து இந்திய மக்களை நிம்மதியடையச் செய்தது. அந்தப் பயங்கரவாத அமைப்பினால், அண்மைக் காலங்களில் விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்ட சில பிரச்சினைகளில் மத்திய அரசாங்கம் மவுனம் காத்து வருவது எங்களுக்குக் கவலை அளிக்கிறது.
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் திரு. ராஜீவ்காந்தி அவர்களின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் இலங்கை விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபா கரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்று இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சார்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனு மதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது.
- இவ்வாறு சட்டப்பேரவையிலேயே தீர்மானத்தை நிறைவேற்றியவர்தான் ஜெயலலிதா.
தமிழகத்தில் அமைதி நிலவவும், இந்தியாவின் இறையாண்மை காக்கப்படவும், பயங்கரவாத இயக்கமான தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட வேண்டும் என்று 1991 ஆம் ஆண்டு நான் தமிழக முதல மைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, மத்திய அரசை வலி யுறுத்தினேன். என்னுடைய பெருமுயற்சியின் காரண மாகத்தான் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம் 14.5.1992 அன்று மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.
அந்த இயக்கத்தின்மீதான தடை இன்றுவரை தொடரு கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக வி. பிரபாகரன் அறிவிக்கப்பட்டுள்ளார் (நமது எம்.ஜி.ஆர்., 23.10.2008, பக்கம் 1). (ம.தி.மு.க. பொதுக் குழுவில் (9.4.2009) விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கவேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றியுள்ளார்களே - இதற்கு என்ன பதில் சொல் வார்கள்? விடுதலைப்புலிகள் இயக்கம் என்னால்தான் தடை செய்யப்பட்டது என்று கித்தாப்புப் பேசும் அம்மையாரிடம் அல்லவா அடைக்கலம் தேடுகின்றனர்).
தற்போது பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்ற அசட்டுத் தைரியத்தில் சிலர் பகிரங்கமாகவே தேச விரோத கருத்துகளைப் பேச ஆரம்பித்துவிட்டனர். பொடா இல்லாவிட்டாலும், சட்ட விரோதமான நடவடிக்கைகளை தற்போதுள்ள சட்ட விரோதமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், நடவடிக்கை எடுக்க மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சருக்கு மனமில்லை. எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் விடுதலைப்புலிகள் ஆதரவான பேச்சுகள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன.
- ஜெயலலிதா அறிக்கை
(நமது எம்.ஜி.ஆர். ஏடு, 23.10.2008).
இதன்மூலம் என்ன தெரிகிறது? ஜெயலலிதா ஆட்சியில் இருந்தால் விடுதலைப்புலிகளைப்பற்றிப் பேச முடியாது. கலைஞர் ஆட்சியில் இருந்தால் பேச முடிகிறது. இதற்குப் பிறகும் ஜெயலலிதாவுக்கு ஜெ போடுவோரை என்னவென்று கூறுவது?
கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதுதான் பொதுக் கூட்டம் போட முடிகிறது. பேரணி நடத்த முடிகிறது. போராட்டங்களை நடத்த முடிகிறது என்பதை நன்கு தெரிந்திருந்தும் ஜெயலலிதாவைப் போற்றுவதும், கலைஞரைத் தூற்றுவதும் அறிவார்ந்த செயல்தானா? உண்மையிலே ஈழத் தமிழர்கள்மீது அக்கறையிருந்தால் விரோதியை நண்பராகவும், நண்பரை விரோதியாகவும் கருதுவார்களா?
இந்தியா தலையிடக்கூடாதாம்!
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட (14.10.2008) தீர்மானத்தைப் பார்த்தால், விடுதலைப்புலி களுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடைபெறும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை அய்ந்து முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்துகொள்ளாதது விந்தையாக உள்ளது.
இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், பின்னர் நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளாது.
- ஜெயலலிதா 
(நமது எம்.ஜி.ஆர்., 16.10.2008).
போரை நிறுத்தவேண்டும் என்பதன்மூலம் கருணா நிதி விடுதலைப் புலிகள் அமைப்பை காப்பாற்றுவதற் கான முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார். இது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல.
ஈழப் போரை நிறுத்த இந்தியா தலையிட வேண்டும் என்று ஜெயலலிதாவுடன் குழுப் பாட்டுப் பாடும் கட்சிகளும் கூறுகின்றன. ஜெயலலிதாவோ என்ன சொல்லுகிறார்? அப்படி தலையிட்டால், இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் என்கிறார். இந்த ஜெயலலிதாவுடன் தான் இவர்கள் கூட்டாம் - குழம்பாம் - பொரியலாம் - ரசமாம் - துவையலாம் - குருமாவாம்!
அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தானாம்!
கேள்வி: ஈழத் தமிழர்கள் போரில் கொல்லப்படு கிறார்களே?
ஜெயலலிதா பதில்: அங்கு இன்னும் ஈழம் அமையவில்லை. இலங்கைத் தமிழர்கள் என்பதுதான் அரசியல் ரீதியில், அலுவல் ரீதியாகச் சொல்லப்படுகிறது. இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை இராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப் படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் - போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப் படுகிறார்கள். ஆனால், இன்று இலங்கையில் என்ன நடக்கிறது என்றால், இலங்கைத் தமிழர்களைப் பாது காப்பான இடத்திற்குச் செல்லவிடாமல் விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
- ஜெ.ஜெயலலிதா 
(நமது எம்.ஜி.ஆர், 18.1.2009)
இலங்கை ராஜபக்சேவின் உடன்பிறந்த சகோதரி யாக அல்லவா ஜெயலலிதா பேசுகிறார்? ஈழத் தமிழர் கள் படுகொலை செய்யப்படுவதை சகஜம் என்ற சொல் லால் நியாயப்படுத்துகிறாரே - இவருக்குப் பராக்குப் பாடுவோர் ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்ப வர்களா - இல்லையா?
சண்டை நடைபெறும்போது அப்பாவி மக்கள் தாக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது.
- கருணா அம்மன் 
(ஜூனியர் விகடன், பேட்டி 1.2.2009)
போரில் பொது மக்களின் உயிரிழப்புகள் தவிர்க்க முடியாதவை
இப்படி கூறியிருப்பவர் இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.
(ஈழச்சுதந்திரன் நவம்பர் 2008 பக்கம் 15)
இதையேதான் இங்குள்ள ஜெயலலிதாவும் கூறுகிறார்.
இவர்தான் ஈழத் தமிழர்களுக்காகப் போராடுகிறா ராம் - ஈழத் தமிழர்களுக்காக டெசோ காணும் கலைஞர் நாடகமாடுகிறாராம் - (வைகோ, ஆனந்தவிகடன் பேட்டி, 6.3.2013) இன்னும் இருக்கிறது.
(வளரும்)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Friday, March 8, 2013

மார்ச் 8-இல் மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்?



அது என்ன மகளிர் தினம்? மார்ச் 8_ஆம் தேதிக்கும் மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டுப் பெண்கள் வர்க்கமே அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்தப் பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது.
சர்வதேச பெண்கள் தினம் என்று ஒருநாள் வருவதற்குக் காரணமே இந்த உழைக்கும் பெண் வர்க்கம் தான் என்பது தங்கமுலாம் பூசப்படாத உண்மை!
மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறி வோம். ஆனால், எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்? சற்று வரலாறு களில் பின்னோக்கித் தேடினால் வியப் பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் (அரசனின் ஆலோ சனை குழுக்களில்) என்று கோரிக்கை களை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிசில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்! ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதி-லிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்!

கிளர்ச்சிகள் என்றால் அதன் தீவிரம் புரிவதற்கு, அடுப்பூதும் பெண்கள், இடுப்பொடியப் பாடுபடும் பெண்கள்  கிடைத்த ஆயுதங்-
களைக் கையில் எடுத்துக் கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர்.

புயலாகக் கிளம்பிய பெண்ணித்தை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, "இவர் களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும்" ஆர்ப்பாட்டத் தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.

ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள முழக்கங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது!

அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர்.

இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக் குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர் களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி அய்ரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட் டங்களில் ஈடுபட்டனர்!

தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங் கியது. இ
த்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்ட நாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.
பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாளாகும்! அந்த மார்ச் 8 ஆம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.

அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயார்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிருவாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது.

1857 இல் நியூயார்க் நகரில் உழைக் கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். பெண்களின் முதல் குரல் ஒலிக்கத் தொடங்கியது பொன்னாள்! தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப் புகள் தோன்றின.

1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட் டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால் தான் உரி மைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் சர்வ தேச பெண்கள் மாநாடு கிளாரா தலைமையில் கூடியது.

அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில அய்ரோப்பிய நாடு களிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.

இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 அய் நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்!

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பிய பெண்கள் ஜெர்மனியில் பெண்கள் வாக்குரிமை கேட்டு மில்லியன் துண்டுப் பிரசுரங்களை நாடெங்கும் விநியோகித்தனர்.

ஜெர்மனியில் மகளிர் தொடங்கி வைத்த போராட்டங்கள், ஆர்ப்பாட் டங்கள் உலகெங்கும் மகளிர் தங்கள் பிரச்சினைகளுக்காக போராட வேண்டும்; போராடினால் தான் உரிமை களைப் பெற முடியும் என்று எண்ணத் தலைப்பட்டு போராடத் தொடங்கினர்!

அன்று தொடங்கிய போராட்டம் இன்றும் பல விதங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. காலத்தின் தேவைக் கேற்ப மகளிர் தங்களின் சவால்களை முன்வைத்துப் போராடி வருகின்றனர்!

பொறுமைக்கும் எல்லை உண்டே!


நாடாளுமன்றத்தில் நேற்று இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து தி.மு.க., அ.இ.அ. தி.மு.க. உறுப்பினர்கள் குரல் கொடுத்துள்ளனர்.
இது ஒன்றும் அரசியல் பிரச்சினையல்ல; இன்னும் சொல்லப் போனால் வெறும் தமிழர்கள் பிரச்சினை மட்டுமல்ல; தேசியக் கண்ணோட்டம் கண்ணோட்டம் என்று கூறுகிறார்களே - அதன்படிப் பார்த்தால்கூட இந்திய மீனவர்கள் இன்னொரு நாட்டு அரசால் தாக்கப்படும் பிரச்சினை. மற்றொரு வகையில் பார்த்தால் இது மனித உரிமைப் பிரச்சினை!
இதுவரை எத்தனைத் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப் பட்டனர் என்பதைத் துல்லியமாக எடுத்துச் சொல்ல முடியாத அளவுக்குத் தொடர் கொலைகள் - கொள்ளைகள் - தாக்குதல்கள் - இழப்புகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். நேற்று மட்டுமல்ல; இதே இந்திய நாடாளு மன்றத்தில் எத்தனையோ முறை கிளப்பப்பட்ட பிரச்சினை!
கடலில் கோடு போட்டு மீன்பிடிக்க வேண்டும் என்று சொல்லுவதெல்லாம் எத்தகைய பிற்போக்குத்தனம்? இவ்வளவுக்கும் இந்திய அரசோ, இலங்கை அரசோ கூறும் அந்தக் கடல் எல்லைக் கோட்டின் பின்னணி என்ன?
இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவை யாருக்கும் தெரியாமல் கை உறைப் போட்டு அதிகாரிகள் மத்தியில் காதும் காதும் வைத்தாற்போல எதையோ எழுதிக் கொண்டு, கச்சத்தீவு பகுதியில் - தமிழ்நாட்டுக்குரிய கச்சத் தீவுப்பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கக் கூடாது என்று கட்டளை இடுவார்களேயானால், இதனைவிட பெரிய வஞ்சகம் வேறு ஒன்று இருக்க முடியுமா?
தமிழ்நாட்டைச் சேர்ந்த கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததே முதல் தவறு. குதிரை கீழே தள்ளியதோடு மட்டுமல்லாமல், குழியையும் பறித்த கதையாக அல்லவா இருக்கிறது?
நாட்டுப்பற்றைப்பற்றி எல்லாம் உச்சக் குரலில் தான் கதறுகிறார்கள். இந்தியாவில் தமிழ்நாட்டுக்குள் கச்சத்தீவை இன்னொரு நாட்டுக்கு யுத்தம் இல்லாமல், சத்தம் இல்லாமல் இருட்டில் தூக்கிக் கொடுத்தது எத்தனைக் கேரட் நாட்டுப்பற்று?
பட்டுப் புடவையை இரவல் கொடுத்த பெண்மணி, ஈச்சம்பாயைத் தூக்கிக் கொண்டு பட்டுப் புடவையை இரவல் பெற்றுக் கட்டிக் கொண்ட பெண்மணி செல்லும் இடமெல்லாம் ஓடுவதைப் போல் அல்லவா இந்தக் கதை இருக்கிறது?
உலகில் உள்ள மீனவர்களெல்லாம் கடலில் சென்று மீன் பிடிக்கிறார்களே, எல்லைகளைக் கடந்து அங்கெல்லாம் படுகொலைகளா நடக்கின்றன? பறிமுதலா நடக்கிறது?
ஜப்பானும், கொரியாவும் தமக்கு இடையில் உள்ள கடல் பகுதியில் இரு நாடுகளும் மீன்பிடிக்க வழி செய்து கொள்ளவில்லையா?
நார்வே, சுவீடன், ஃபின்லாந்து, ருசியா ஆகிய நாடுகளிடையேயும்கூட எல்லைகளைத் தாண்டி மீன் பிடிக்கும் உரிமங்கள் உண்டு.
இங்கு என்னடா என்றால் நமக்கென்று இருந்து வந்த பகுதிகளில் சென்று மீன்பிடிக்கக் கூட உரிமை இல்லை என்றால் தமிழர்களை இந்திய அரசு எந்த கண் கொண்டு பார்க்கிறது என்ற கேள்வி எழாதா? உங்களுக்கு யார் தோழர்கள்? இலங்கை  அரசா, இந்தியாவின் தென் பகுதியில் உள்ள தமிழர்களா என்று மாநிலங்களவையில் தி.மு.க.வைச் சேர்ந்த திருச்சி சிவா அவர்கள் எழுப்பிய வினா அர்த்தமுள்ளது.
எதற்கும் ஓர் எல்லை உண்டு என்பதை இன்னும்கூடப் பொறுமையாகத்தான் சொல் லிக் கொண்டு இருக்கிறோம் - அந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டே!

அடையாளம் காண்பீர் இவர்தான் சங்கராச்சாரியார்!


ஜெகத் குரு - லோகக் குரு என்றெல்லாம் விளம்பரக் காற்றை அடைத்து வானத்தில் பட்டமாகப் பறக்க விடுகின்றார்களே பார்ப்பனர்கள் - அவர் களின் யோக்கியதை, குணநலன்கள், சுபாவங்கள் எந்தத் தகுதியில் இருக்கின்றன என்பதை ஒரே ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
1992 டிசம்பர் 6இல் உலக நாடுகளின் மத்தியில் பாரத புண்ணிய பூமி என்கிறார்களே - இந்த இந்தியா தலை கவிழ்ந்து நின்றது.
450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களான முசுலிம் மக்களின் வழிபாட்டுத்தலமான பாபர் மசூதியை அயோத்தியில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள், பி.ஜே.பி. தலைவர்கள் உட்பட சங்பரிவார்க் கும்பலை சேர்ந்தவர்கள் ஒரு பட்டப் பகலில் அடித்து நொறுக்கினார்கள்.
அதற்காக அன்று முதல் இன்று வரை அவர்கள் வெட்கப்பட்டவர்களும் அல்லர் - மன்னிப்புக் கோரிய வர்களும் அல்லர்.
ஒரு கட்டத்தில் அந்தக் குற்றத்தில் சம்பந்தப் பட்டவர்கள் மத்திய அமைச்சர்களாக இருக்கலாமா என்ற கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் ஏற்பட்டது.
அப்பொழுது காஞ்சி சங்கராச்சாரியாரும் (சங்கரராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி) என்ன சொன்னார் தெரியுமா?
அயோத்தியில் கட்டடத்தை இடித்தது கிரிமினல் நடவடிக்கை என்று கூற முடியாது. இதற்காக மத்திய அமைச்சர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை (தினமணி 27.11.2000) என்று கூறியவர்தான்.
அப்படிப்பட்டவர் இப்பொழுது இன்னொன்றையும் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
இந்துக்கள் ஒற்றுமையாக இருந்தால் அயோத்தி யில் ராமன் கோயில் கட்டலாம் என்று சொல்லி யுள்ளார். பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் 21 ஆண்டுகள் ஓடிய நிலையிலும் இதுவரை தண்டிக் கப்படாத காரணத்தால் ஜெயேந்திரர் போன்றவர் களால் இப்படி எல்லாம் துணிவாக பேச முடிகிறது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்பொழுது, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயில் கட்டுவது குறித்து சங்கராச்சாரியார் என்று சொல்லப்படுபவர் பேசுகிறார் என்றால், இது நீதிமன்ற அவமதிப்பு என்பது ஒருபுறம் இருக்கட்டும்; எவ்வளவு இந்து மத வெறி பிடித்த ஆசாமியாக சங்கராச் சாரியார் என்று சொல்லப்படுபவர்களே இருக்கின் றனர் என்பது விளங்கவில்லையா!?
ஒரு கட்டத்திலே காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்மார்த்தர் - ராமன் கோயில் என்பது வைணவர்களுக்குச் சம்பந்தப்பட்டது; இதில் இவர் தலையிடக் கூடாது என்று சங்பரிவார் வட்டாரத் திலிருந்து குரல் கிளம்பியுள்ளது. அதை எல்லாம் பொருட்படுத்தக் கூடியவர்களா ஜெயேந்திரர் போன்ற பூணூல்வாதிகள்?
இந்தக் கூத்தில் இவர்கள் உலகில் அமைதி நிலவ அடிக்கடி யாகங்களை நடத்துகிறவர்கள். இன்னொரு மதக்காரரின் வழிபாட்டுத் தலத்தை இடிப்பது - அதன் காரணமாக நாடு தழுவிய அளவில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் படுகொலைக்கு ஆளாவது என்பதெல்லாம் இன்னொருபுறத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.
உலகில் அமைதியும், சாந்தமும் தவழ்ந்திட யாகம் செய்பவர்களின் யோக்கியதை இதுதானா?
கடவுளுக்குமேலே பிராமணன் என்று சொன் னவர் தான் இந்த ஜெயேந்திரர்; இதன் மூலம் எப்படிப் பட்ட பார்ப்பன வெறியர் என்பது விளங்கவில்லையா? (9.10.2002).
நூறு விவேகானந்தர்களுக்கு மேலே நான் போய்விட்டேன்! என்று சொன்ன தலைக்கனம் படைத்தவரும் இவரே!
என்னதான் விவேகானந்தரின் 150ஆம் ஜெயந்தி என்று கூறி இந்துத்துவாவைப் பரப்பும் வேலையில் பார்ப்பனர் ஈடுபட்டாலும், விவேகானந்தர் சூத்திரர் தானே! அதனை மனதில் வைத்துக் கொண்டு தான் ஜெயேந்திர சரஸ்வதி நூறு விவேகானந்தர்களுக்கு மேல் தான் சென்று விட்டதாகக் கூறுகிறார் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.
சங்கரமடம் என்றாலும் சரி, பார்ப்பனர் சங்கம் என்றாலும் சரி, ஆர்.எஸ்.எஸ்., என்றாலும் சரி, பிஜேபி என்று கூறிக் கொண்டாலும் சரி எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். அந்தக் குட்டை என்பது பார்ப்பனர்கள் என்பதையும் மறக்க வேண்டாம் - மறக்கவேண்டாம்!

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...