Monday, February 4, 2013

பிராமணர்கள் காய்கறி உணவாளர்கள் (Vegetarians)ஆனது எப்போது?


- ஊசி மிளகாய்
விஸ்வரூபம் படத்தில் வரும் பிரச்சினைக் குரிய சில காட்சிகள் பற்றி இஸ்லாமியருக்கும், படத் தயாரிப்பாளருக்கும் இடையே ஓர் ஒப்பந்தம்  ஏற்பட்டு, இனி படம் வெளிவரத் தடையில்லை என்ற ஒரு சூழ்நிலை வந்து, அரசும் தடை யுத்தரவை ரத்து செய்துள்ளது. இப்போது, திடீரென கிடப்பது கிடக்கட்டும்; கிழவியைத் தூக்கி மணையில் வை என்பதுபோல், திடீ ரென்று தமிழ்நாடு பிராமணர் சங்கத்தவருக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்து சென்னை காவல்துறை ஆணையரிடம் இவாள் தங்களது சங்கத்தின் சார்பில், பிராமண  சமூகத்தின் கலாச்சாரத்தைக் கேலி செய்வதுபோல் சில காட்சிகள், சில வசனங்கள் விஸ்வரூபம் படத்தில் உள்ளன என்று புகார் மனு கொடுத்து அக்காட்சிகளை நீக்கிவிட வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர்!
அந்தக் காட்சி என்னனாண்ணு  அவாள்  சொல்றான்னு நோக்குத் தெரியுமோ?
நடிகர் கமல்ஹாசன் திரைக்கதை இயக்கத்தில் வெளிவர உள்ள விஸ்வரூபம் படத்தில் எங்களது பிராமண சமூகத்தின் கலாச்சாரத்தைக் கேலி செய்வதுபோல் சில காட்சி வசனங்கள் உள்ளன.
அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் பார்த்த பலர்; கதாநாயகி பிராமண சமூகத்தைச் சார்ந்த பெண் என்றும், ஒரு காட்சியில் கமல் அவளுக்கு மாமிசம் சமைத்துக் கொடுப்பது போலவும் இருப்பதாக எங்களிடம் கூறினர்.
இது திரைக்கதைக்குத் தேவையற்றது. இந்தக் காட்சிகள் பிராமண சமூகத்தின் பழக்க வழக்கங்களை கொச்சைப்படுத்துவதுபோல் உள்ளது. எனவே நீக்க வேண்டும், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்!
பிராமண சமூகத்துப் பெரியவாள்களே, சின்னவாள்களே, உங்களுக்கு உங்களது பாரம்பரியம் கலாச்சாரம் என்ன என்பது மறந்துவிட்டதா?
வேதம், சதபத பிரமாணம், இராமாயணம், மஹாபாரதம் - இத்தியாதி இத்தியாதி உங்கள் கலாச்சாரத்திற்கு வேர்கள் தானே?
யாகக் கலாச்சாரம் ஆரியக் கலாச் சாரம்தானே! அவை அத்தனையிலும் யாகத்தில் பசுக்களையும், பிராணிகளையும், குதிரைகளை யும் வெட்டி கொன்று அப்படிக்கூட இல்லாமல் ஆடுகளின் அவிர்ப் பாகங்களுக்காக, அவற்றின் விதைகளை அழுத்தி ஹிம்சித்து (அப்போதுதான் உறுப்புகளின் சுவை குன்றாமல் இருக்குமாம்; என்னே மாமிச ருசி!) உயிர்களைக் கொன்று யாகம் நடத்தும் முறை சிவானந்த சரஸ்வதி எழுதிய ஞானசூரியன் அட்டைப் படத்தில் அப்படியே போடப்பட்டுள்ளதே - அதை ஏன் பிராமண சங்கத்தவர்கள் வசதியாக மறந்து விட்டார்கள்?
பார்ப்பனர்கள் காய்கறி சாப்பிடும் பழக்கத்தை, மகாவீரர், புத்தர் ஆகிய சமண, பவுத்தப் பிரச்சாரங்களுக்குப் பிறகுதான் என்பதை எவராது மறுக்க முடியுமா? (இந்துமதம் எங்கே போகிறது? - அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் - காண்க பக்கம் 25-26)
வால்மீகி இராமாயணத்தில் எத்தனை வகை மாமிசத்தை காட்டில் சாப்பிட்டான் ஸ்ரீராமபிரான் என்பதை எந்த பிராமணர் சங்க நிருவாகியாவது மறுக்க முடியுமா?
மஹாபாரதத்திலும் பார்ப்பனர்கள் இறைச்சி -மாமிசம் சாப்பிடும் காட்சிகள் இல்லையா?
அது அப்போது; இப்போது அப்படி இல்லை என்றாவது சங்கத்தவர் மறுக்க முடியுமா? காலஞ்சென்ற இதயம் பேசுகிறது மணியன் தனது வெளிநாட்டுச் சுற்றுப் பயண அனுபவங்களைப்பற்றி எழுதி வந்த போது, ஒரு செய்தியைக் குறிப்பிடத் தவறவில்லை.
அமெரிக்காவில் இவரை வரவேற்ற பார்ப்பன நண்பர், இவருக்கு காய்கறி சாப்பாடு போட்டுவிட்டு, அவர் மாட்டு  மாமிசம் - (க்ஷநநக) பசு மாட்டிறைச்சியை  வறுத்து  சாப்பிட்டபோது,  மணியன் ஏன் ஓய், நீர் இப்படி மாட்டிறைச்சியை (பீப்பை) சாப்பிடலாமோ? என்று கேட்டபோது, அவர், மிஸ்டர் மணியன், நான் சாப்பிடுவது இந்தியாவின் ழடிடல ஊடிற இந்திய புனித பசு அல்ல; மாறாக அமெரிக்க ஊடிற பசு மாமிசம்தான். இந்தியன் ஊடிற தானே சாப்பிடக் கூடாது என்று சொன்னது இவரைத் தூக்கி வாரிப் போட்டது என்று கூறியுள்ளார்!
இன்றும் முட்டை, கோழிக்கறி,  ஆட்டுக்கறி, மீன் இவற்றை பார்ப்பனர்கள் சாப்பிடும் பழக்கமில்லை என்று கூறி விட முடியுமா பி.சங்க.பிரமுகர்களால்?
அவ்வளவு தூரம் போவானேன்? மேற்கு வங்கத்திற்குச் சென்று விஜிட்டேரியன் ஹோட் டல்களில் உணவு உண்ணட்டுமே!
அங்கே மீனே விஜிட்டேரியன் அய்ட்டம் தானே?
பேனர்ஜி,  முக்கர்ஜி, சட்டர்ஜி என்ற ஜியில் முடியும் அத்தனை வங்கத்துப் பார்ப்பனர்களும் மற்றும் அடுத்த பெரிய ஜாதியான காயஸ் தர்களும் மீன் உணவை சர்வ சாதாரணமாக சாப்பிடுகின்றனரே அங்கே!
எனவே இப்படி குறுக்கு வழியில் பி. சங்கத் திற்கு  விளம்பரம் தேட முயற்சிப்பது நல்லதோ!
இந்து மதக் கடவுள்கள் பல மிலிட்டரி ஓட்டல் கடவுள்கள்தானே?

பகுத்தறிவில்லாதவன் காட்டுமிராண்டியே!


திருக்குறளில் காணப்படும் மூடச் சொற்கள்

1. ஆதிபகவன், 2. வாலறிவன், 3. மலர்மிசை ஏகி னான், 4. இறைவன், 5. அய்ந்தவித்தான், 6. அற வாழியந்தணன், 7. எண் குணத்தான், 8. தாள் தொழல், 9. அடி சேர்தல், 10. நிலமிசை நீடு வாழ்தல்.

11. இருவினை, 12. பிறவாழி, 13. தாளை வணங்காத் தலை, 14. அமிழ்தம், 15. பூசனை, 16. வானோர், 17, நீத்தார், 18. துறந்தார், 19. இருமை, 20. வரன் என்னும் வைப்பு.
21. இந்திரன், 22. நிறைமொழி, 23. மறைமொழி, 24. அந்தணர், 25. சிவிகை பொறுத்தானோடூர்ந்தா னிடை அறமறிதல், 26. இயல்புடை மூவர், 27. இறந்தார், 28. தென்புலத்தார், 29. தெய்வம், 30. வானுறையும் தெய்வம்.
31. புத்தேளிர்வாழு முலகு, 32. புதல்வர், 33. ஏழு பிறப்பு, 34. சாவா மருந்து, 35. அமரர், 36. ஆரிருள், 37. அளறு, 38. ஒத்து, 39. பார்ப்பான், 40. செய்யவள்.

41. தவ்வை, 42. திரு, 43. மேலுலகம், 44. இன்னா உலகம், 45. அவ்வுலகம், 46. இலர் பலர், 47. அவிர் சொரிதல், 48. வேட்டல், 49. உயர்ந்த உலகம், 50. வையத்தின் வானம் நணிய துடைத்து.

51. ஈண்டு வாரா நெறி, 52. எழுமையும் ஏமாப் புடைத்து, 53. குடம்பை, 54. புக்கில், 55. பற்றற்றான், 56. ஊழ், 57. ஆ கூழ், 58. போ கூழ், 59. இழ ஊழ், 60. வகுத்த வகை.
61. மேற் பிறந்தார், 62. கீழ்ப் பிறந்தார், 63. அவி யுணவு, 64. குலம், 65. குடி, 66. குடும்பம், 67. எச்சம், 68. அந்தணர் நூல், 69. அறு தொழிலோர், 70. நூல் மறுப்பர்.
71. துறந்தார் படிவம், 72. அடியளந்தான், 73. மாமுகடி, 74. தாமரையினாள், 75. மந்திரி, 76. அலகை, 77. பேய், 78. உலகியற்றியான், 79. தேவர், 80. இமை யார், 81. அணங்கு, 82. தாமரைக் கண்ணானுலகு.

இவற்றில் சிலவற்றிற்கு பகுத்தறிவுப்படி பொருள் கூறுவதானாலும் அதற்கு எவ்வகையிலும் இடம் இல்லாத இன்றைய அனுபவத்திற்கும், காட்சிக்கும் ஒத்து வராத பல சொற்களுக்கு பகுத்தறிவாளர் என்ன சமாதானம் சொல்லக் கூடும்? வள்ளுவர் மாத்திரமல்ல; தொல்காப்பியர் மாத்திரமல்ல மற்றும் அக்காலத்திய எல்லா மக்களிடையேயும் மூட நம்பிக்கையும், காட்டு மிராண்டித் தன்மை கொண்ட கருத்துகளும், உணர்வு களும் இருந்தே வந்திருக்கின்றன.

ஆகவே, காட்டுமிராண்டித் தன்மை, மூட நம்பிக் கை பகுத்தறிவற்றத் தன்மை என்பவை பழங்காலத்தில் ஏதோ ஒருவர், இருவர் நீங்கலாக எல்லா மக்களிடத் திலும் இயற்கையாய் இருந்து வந்த தன்மைகளே ஆகும். இன்றைக்கு தமிழரிலேயே 100-க்கு 90 பேர்  படித்த புலவர் மேதாவிகள்  உட்பட காட்டுமிராண்டி களாய் காட்டுமிராண்டிக் கொள்கைக்கும், நடப்புக்கும் ஆட்பட்டவர்களாய் சமாதானம் சொல்ல முடியா விட்டால், சுத்த காலிகள் போன்ற முரட்டு சுபாவ முடையவர் களாயிருந்து குடிபோதையில் ஆழ்ந்த வர்கள்  போல பேசுகிறார்கள் என்றால், நடிக்கிறார்கள் என்றால், இன்றைய நிலையை நினைத்துக்கூட பார்க்க முடியாத காட்டு மிராண்டிக் காலத்தில் மக்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை எவ்வளவு குறைந்த அறிவுள்ளவர்களும் நினைத்துப் பார்த்தால் நன்கு விளங்கும்.

இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் என்ன வென்றால், தமிழை காட்டுமிராண்டி மொழியென்றும், தமிழ் இலக்கியங்கள் சமய நூல்கள் காட்டுமிராண்டி களால் காட்டுமிராண்டிக் காலத்தில் கற்பிக்கப்பட் டவை என்றும், நான் சொல்லுவதை மறுக்கிறவர்கள் போல தங்களைக் காட்டிக் கொள்ள என்னை வைபவர்கள், மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களாக தங்களைக் காட்டிக் கொள்பவர்களில் ஒரு நபர் கூட எதனால் இந்தப்படி 40 - 50 ஆண்டுகளாக சொல்லி வருகிறேன் என்று நான் ஆதாரங்களோடு சொல் கிறேனோ அவற்றிற்கு ஒன்றுக்குக் கூட, ஒருவர் கூட சமாதானம் சொல்லி என்னை வையாமல் போதையில் ஆழ்ந்தவர்கள் போல வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்.

நமது சமயம், நமது கடவுள்கள், அவற்றின் நடப்பு கள், அவற்றிற்குண்டான கதைகள் அதை ஆதாரமாக வைத்துக் கொண்டாடும் பண்டிகைகள், பிரார்த் தனைகள், பூசைகள் வேண்டுதல்கள் இவற்றிற்காக  செய்யும் செலவுகள் முதலியவை எல்லாம் காட்டு மிராண்டிக் காலத்து காட்டுமிராண்டிகள் செய்கை என்று சொல்லி வருகிறேனே. என்னை வைபவர்களில் யார் இதற்கு சமாதானம் சொல்லி என்னை வைதார்கள்? வைகிறார்கள்?

எனவே, முதலாவது காட்டுமிராண்டி என்று ஒருவரைச் சொல்ல வேண்டுமானால், காரணம் சொல்லாமல், சமாதானம் சொல்லாமல் என்னை வைகிறவர்கள். அதனால் பலனடையலாம் என்று கருதுபவர்கள் ஆகியவர்களை அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களையே முதலில் காட்டுமிராண்டி என்று நான் சொல்லுகிறேன்.

காட்டுமிராண்டி என்றால் யார்? அறிவில்லாதவன் பகுத்தறிவில்லாதவன் இரண்டும். இருந்தும் சிந்திக் காதவன் சிந்திக்காமலே குறை கூறுபவன் ஆகிய வர்கள் காட்டுமிராண்டி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் பொருள்.

மனிதனுக்கு வெட்கம், மானம் ஏற்படும்படி கண்டித்து வலியுறுத்திக் கூறத் தகுதியுள்ள மக்கள் போதியவர்கள். இல்லாததனாலேயே நம் மனித சமுதாயத்தில் 100-க்கு 90 பேர்கள் படித்தவர்கள், மேதாவிகள், புலவர்கள், பெரிய வர்கள், மதவாதிகள், பக்தர்கள் என்பவர்களில் இவ்வளவு காட்டுமிராண்டிகள் இருக்க நேர்ந்தது. அது மாத்திரமல்லாமல், சிலர் தங்கள் பிழைப்புக்காகவும், சுயநலத்துக்காகவும் நம்மை வைவதன் மூலம் கண்டுபிடிப்பதன் மூலம் தாங்கள் காட்டு மிராண்டி களாகத் துணியவும் நேர்ந்தது.

மனிதன் என்றால் பகுத்தறிவுவாதிதான். அதில் லாத மற்றவன் எவனானாலும் காட்டுமிராண்டிதான். பொதுவான முன்னேற்ற வளர்ச்சி காரணமாகவே இவ்வளவு துணிவோடு சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது. மறுப்புக்களை புனித தன்மையோடு யார் எழுதி அனுப்பினாலும் அவற்றை வெளியிட்டு எனக்குத் தெரிந்த சமாதானம் சொல்ல ஆயத்தமாய் இருந்து கொண்டு தான் என் கருத்தை வெளியிட்டு வருகிறேன்.

(பெரியார் எழுதிய தலையங்கம் - விடுதலை 3.11.1967)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

இனிவரும் உலகத்தில் கடவுள்கதி!



(இனிவரும் உலகம் என்ற நூல் தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்டு 1944-ஆம் ஆண்டு மூன்றாவது பதிப்பு வெளியாகியுள்ளது. அதில் கடவுள் தன்மையையும், மோட்ச - நரகத்தின் புரட்டுகளையும், எதிர்கால பகுத்தறிவு உலகத்தின் சிறப்பையும் விளக்கியுள்ள பகுதியையே நேயர்கள் சிந்தனைக்காகக் கீழே தருகிறோம். -ஆர்.)

இனிவரும் உலகத்தில் கடவுள் தன்மை எப்படி இருக்கும் என்று அறிய மக்கள் கண்டிப்பாக ஆசைப் படாமல் இருக்க மாட்டார்கள். அதைச்சற்று இங்கு ஆராய்வோம்.

கடவுள் தானாக யாருக்கும் தோன்றுவதில்லை. பெரியோர்களால் சிறார்களுக்குப் போதிக்கப்பட் டும், காட்டப்பட்டுமே தோற்றமான எண்ணமும் உருவகமு மாகும். ஆனதால் இனிவரும் உலகத்தில் கடவுளைப் பற்றி போதிக்கிறவர்களும், காட்டிக் கொடுப்பவர்களும் மறைந்து விடுவார்கள். யாராவது இருந்தாலும் அவர்களுக்கும் கடவுள் மறக்கப்பட்டுப் போகும்.

ஏனெனில், கடவுளை நினைக்க மனிதனுக்கு ஏதாவது ஒரு அவசியம் இருந்தால்தானே நினைப்பான்? சகல காரண காரியங்களுக்கும் மனிதனுக்கு விவரம் தெரிந்து விடுவதாகவும் சகல தேவைகளும் மனித னுக்கு கஷ்டப்படாமல் பூர்த்தியாகவும் இருந்தால், ஒரு மனிதனுக்குக் கடவுளைக் கற்பித்துக் கொள்ளவோ நினைத்துக் கொள்ளவோ அவசியம் ஏன் ஏற்படும்?

மனிதன் உயிரோடு இருக்குமிடமே அவனுக்கு மோட்சமாய்க் காணப்படுமானால் விஞ்ஞானப் பெருக்கம் ஏற்பட்ட இடத்தில் கடவுள் சிந்தனைக்கு இடம் இருக் காது.

சாதாரணமாக மனிதனுக்கு இன்று கடவுள் நிச்சயத் திற்கு ஒரே ஒரு காரணம் தானே சொல்லப்படுகிறது? அக்காரணம் என்னவென்றால், இந்த உலகத் தோற்றத் துக்கு காரணம் என்ன? காரண பூதமாக இருப்பது எது? அதுதான் கடவுள் என்று சொல்லப்படுகின்றது.

இது விஞ்ஞானிகளுக்கு சுலபத்தில் அற்றுப் போன விஷயம் பஞ்சபூதங்களின் சேர்க்கையே உலகம் என்பர். நம்முடைய வாழ்வில் நாம் எதைக் கடவுள் செயல் என்று உண்மையாய்க் கருதுகிறோம்? நம் அனுபவத்திற்கு வந்த ஒவ்வொன்றுக்கும் நாம் சமாதானம் தெரிந்து கொள்கிறோம்; தெரியாதவற்றை தெரியாது என்று ஒப்புக் கொள்கிறோம். தெரிந்ததை தெரிந்தது என்று சொல்லுகிறோம். இதுவேதான் உலக நடப்புக்கும் கொள்ள வேண்டிய முறையாகும். ஒரு சமயம் உலக நடப்புக்குக் காரணம் தெரியாவிட்டாலும், அதற்காக ஒரு காரியத்துக்கும் ஆகாத தேவையில்லாத கடவுளை எவனும் வணங்க மாட்டான்.

புதிய உலகத்தில் மோட்ச, நரகத்துக்கு இடம் இருக்காது; நன்மை, தீமை செய்ய இடமிருந்தால்தானே மோட்சமும், நரகமும் வேண்டும்? எவருக்கும் யாருடைய நன்மையும் தேவையிருக்காது. புத்திக் கோளாறு இருந்தால் ஒழிய, ஒருவனுக்கு ஒருவன் தீமை செய்ய மாட்டான். ஒழுக்கக் கேட்டுக்கும் இடமிருக்காது. இப்படிப்பட்ட நிலையில் மோட்ச, நரகத்துக்கு வேலை ஏது? ஆள் ஏது?

எனவே, இப்படிப்பட்ட நிலை புதிய உலகத்தில் தோன்றியே தீரும். தோன்றாவிட்டாலும் இனிவரும் சங்கதிகள் அடைந்த மாறுதல்களைக் காண வேண்டுமென்றும். இவைகளால் உலகில் மக்களை இப்போது வாட்டி வரும் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வாழ்க்கை என்றால் பெருஞ்சுமை என்று சலித்துக் கொண்டும் வாழ்க்கை என்றால் போராட்டம் என்று திகைத்துக் கொண்டும் இருக்கிற நிலைமை போய்.

வாழ்க்கை என்றால் மக்களின் இன்ப உரிமை என்ற நிலைமை உண்டாக வேண்டுமென்னும் ஆவலுடன் பணியாற்றி வருவார்கள்.

நம்மால் என்ன ஆகும்? அவனின்றி ஓரணுவும் அசையாதே! என்று வாய் வேதாந்தம் பேச மாட் டார்கள். நம் கண்முன் காணப்படும் குறைபாடுகளைப் போக்க நாம் எப்படி உழைக்க வேண்டும் என்பதே அவர்களின் கவலையாகவும், அவர்களின் எண்ண மாகவும் இருக்கும். எப்போதோ, யாரோ, எதற்காகவோ எழுதி வைத்த ஏட்டின் அளவோடு நிற்க மாட்டார்கள். சுயசிந்தனையோடு கூடியதாகவே அவர்களின் செயல்கள் இருக்கும் மனித அறிவீனத்தினால் விளைந்த வேதனைகளை மனித அறிவினாலேயே நீக்கிவிட முடியும் என்ற ஆசையும், நம்பிக்கையும் கொண்டு உழைப்பார்கள்.
அவர்களின் தொண்டு; மனித சமுதாயத்தை நாளுக்கு நாள் முன்னுக்குக் கொண்டு வந்தவண் ணமாகவே இருக்கும் சுய சிந்தனைக்கு இலாயக்கற்ற வர்களே இந்த மாறுதல்களைக் கண்டு மிரள்வதும், காலம் வரவரக் கெட்டுப் போச்சு என்று கதறுவதுமாக இருப்பார்கள்.

இன்றைய மக்களிலே பலருக்கு பழமையிலே இருக்கும் மோசம் அறிவையே பாழ் செய்து விடு கிறது. புதிய உலகத் தோற்ற வேகத்தைத் தடை செய்து விடுகிறது. பழைய முறைப்படி உள்ள அமைப்பு களால் இலாபமடையும் கூட்டம் புதிய அமைப்பு ஏற்படுவதைத் தடுக்க முயற்சிப்பது இயற்கை. ஆனாலும், பாமரரின் ஞானசூன்யம், அறியாமை, சுயநலக்காரரின் எதிர்ப்பு எனும் இரண்டு பெரிய விரோதிகளைக் கண்டு கலங்காமல் வேலை செய்வோரே. இனிவரும் உலக சிற்பிகளாக முடியும். அந்த சிற்பிகளின் கூட்டத்திலே நாமும் சேர்ந்து நம்மாலான காரியத்தைச் செய்ய வேண்டுமென்று வாலிபர்கள் பகுத்தறிவாளர்கள் ஆசைப்பட்டு உழைக்க முன்வர வேண்டுகிறேன்.
- (விடுதலை 7.1.1968)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Sunday, February 3, 2013

காந்தியார் படுகொலைபற்றி கடல் அளவு தகவல்கள்!


தமிழர் தலைவரின் சங்கநாதம்! காந்தியார் படுகொலைபற்றி கடல் அளவு தகவல்கள்!




காந்தியார் அவர்களின் நினைவு நாளையொட்டி (30.1.1948) சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் மதவெறிக் கண்டனப் பொதுக்கூட்டம் - சிறப்புக் கூட்டம் நேற்று (1.2.2013) வெள்ளி இரவு 7 மணிக்கு நடைபெற்றது.

கலி. பூங்குன்றன் தொடக்கவுரை

திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் அனைவரையும் வரவேற்று தொடக்கவுரை ஆற்றினார்.

அவர் தமதுரையில் காந்தியார் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமான இந்துத்துவா என்னும் மதவெறி இன்றுவரை வெவ்வேறு வடிவங்களில் நடமாடிக் கொண்டுதானிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், பிராமண சங்கம், பாரதீய ஜனதா என்று பல்வேறு பெயர்களில் இருந்து கொண்டுதானி ருக்கின்றது.

பாபர் மசூதியை இடித்தது அந்தச் சக்திதான். குஜ ராத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களான முசுலிம்கள் படுகொலை செய்யப்பட்டதற்குக் காரணம் அதே இந்துத்துவா மதவெறிதான்.
அந்த மதவெறி சக்தி அரசியலிலும் குடிகொண் டுள்ளது; நடக்க இருக்கும் 15 ஆவது மக்களவைத் தேர் தலிலும் அந்த மதவாத சக்திகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

அதை எதிர்கொள்ளும் ஒரு தத்துவத்திற்குப் பெயர் தான் தந்தை பெரியார். இந்தியா முழுமையும் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளும், தத்துவங்களும் தான் எதிரொலிக்கப் போகின்றன. நமது கழகத்தின் அருமையை உணரத்தான் போகிறார்கள் - இந்தியா முழுமையிலிருந்தும் நமது தலைவருக்கு அழைப்புகள் வந்த வண்ணம்தான் இருக்கும் என்று குறிப்பிட்டார்.
வாரி வழங்கினார் தமிழர் தலைவர்
தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் 90 மணித் துளிகள் வகுப்பறையில் பாடம் நடத்துவது போல புதுப்புதுத் தகவல்களை முனை மழுங்காமல் அடுக்கடுக்காகக் கூறிக்கொண்டே போனார்.


காந்தியார் படுகொலை செய்யப்பட்ட நிலையில், முசுலிம்தான் காந்தியாரைச் சுட்டுக் கொன்றான் என்ற தகவலைப் பார்ப்பனர்கள் பரப்புரை செய்தனர். அதன் காரணமாகத் தமிழ்நாட்டில் வாணியம்பாடி, திரு வண்ணாமலை, ஈரோடு போன்ற ஊர்களில் முசுலிம் கள் தாக்கப்பட்டனர்.

ஆனால், உண்மையில் காந்தியாரைப் படுகொலை செய்தவன் ஒரு இந்து என்று அகில இந்திய வானொலி மாலை 6 மணிக்கு அறிவித்தது (பார்ப்பனர் என்றுகூடச் சொல்லவில்லை).

மகாராட்டிரத்தில் புனே பகுதியில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர். வீடுகள் கொளுத்தப்பட்டன. பார்ப் பனர்களின் கல்விக் கூடங் கள் எரிக்கப்பட்டன. அவற்றை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்களையும் உள்ளே நுழையவிடவில்லை.

தடுத்தாட்கொண்டார் தந்தை பெரியார்

தமிழ்நாட்டிலும் அந்த நிலை ஏற்பட்டு இருக்கும். அன்றைய முதலமைச்சர் ஒழுக்க சீலர் ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் வானொலிமூலம் மக்களுக்கு அமைதியை ஏற்படுத்தித் தருமாறு தந்தை பெரியார் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
31.1.1948 அன்று மாலை 4 மணிக்கு வானொலியில் தந்தை பெரியார் அரியதோர் உரையை நிகழ்த்தினார்.
இந்த இழித்தரமான காரியத்திற்கு சுட்டவன் ஒருவனே பொறுப்பாளி என்று என்னால் கருத முடியவில்லை. இப்படிப்பட்ட பரிதாபகரமான முடிவானது - நமக்கு ஒரு படிப்பினையாகி, இப்படிப் பினை மூலமாவது இந்த நாட்டில் அரசியலின் பெயராலும், மத இயலின் பேராலும், இன இயலின் பேராலும், கருத்து வேற்றுமைக்காக கலவரங் களும், கேடுகளும், நாசங்களும், மூட நம்பிக்கைப் பிடிவாதங்களும் ஏற்படுவதற்குச் சிறிதும் வாய்ப் பில்லாமல், அறிவுடைமையோடும் வாழுபவர் களாக மக்கள் நடந்துகொள்வார்களேயானால், அதுவே பரிதாபகரமானதும், வெறுக்கத்தக்கது மான முடிவை எய்திய அப்பெரியாருக்கு நாம் காட்டும் மரியாதையும், நன்றியறிதலுமாகும்.

திராவிட மக்கள் இதையறிந்து எப்படிப்பட்ட நிலையிலும், அமைதியுடனும், சகிப்புத் தன்மை யுடனும் நடந்துகொள்ளவேண்டும் என்பது எனது விண்ணப்பம் என்று வானொலிமூலம் தந்தை பெரியார் கேட்டுக் கொண்டதன் காரணமாகத் தமிழ்நாட்டில் கலவரப் புயலுக்கு இடமில்லாமல் அமைதி தவழும் ஒரு நிலை ஏற்பட்டது என்பதை கழகத் தலைவர் விளக்கினார்.

(தந்தை பெரியார் நினைத்திருந்தால், கொஞ்சம் கண்ஜாடை காட்டியிருந்தால் தமிழ்நாட்டில் எத்தனை அக் கிரகாரங்கள் எரிந்திருக்கும்? எத்தனைப் பார்ப்பனர்கள்  படுகொலை செய்யப்பட்டு இருப்பார்கள் என்பதை இந்த இடத்தில் எண்ணிப் பார்ப்பார்களாக! வாழ்க தந்தை பெரியார்!)

அய்யா அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும்...

காந்தியார் மறைவையொட்டி தந்தை பெரியார் விடுதலையில் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்ற ஒவ்வொரு சொல்லும் எவ்வளவு ஆழமானது என்பதையும் விளக்கிப் பேசினார்.

காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்கின்ற சேதியானது, எனக்குக் கேட்டதும் சிறிதுகூட நம்ப முடியாததாகவே இருந்தது! இது உண்மைதான் என்ற நிலை ஏற்பட்டதும் மனம் பதறிவிட்டது. இந்தியாவும் பதறி இருக்கும். மதமும், வைதிகமும்தான் இக்கொலை பாதகத்துக்குத் தூண்டுகோலாய் இருந்திருக்கலாம் என்பது என் கருத்து. இக்கொலைக்குத் திரைமறைவில் பலமான சதி முயற்சி இருந்தே இருக்கவேண்டும். அதுவும் காந்தியார் எந்த மக்களுக்காகப் பாடுபட்டாரோ - உயிர் வாழ்ந்தாரோ அவர்களாலேயேதான் இச்சதிச் செயல் ஏற்பட்டிருக்கவேண்டும்.

இது மிகமிக வெறுக்கத்தக்கக் காரியமாகும். இவரது காலி ஸ்தானம் எப்படிப் பூர்த்தி செய்யப்படும் என்பது ஒரு மாபெரும் பிரச்சினையே ஆகும். இப்பெரியாரின் இப்பரிதாபகரமான முடிவின் காரணமாக வாவது நாட்டில் இனி அரசியல், மத இயல் கருத்து வேற்றுமையும், கலவரங்களும் இல்லாமல் இருக்கும்படி மக்கள் நடந்துகொள்ளுவதே அவரை நாம் மரியாதை செய்வதாகும். (குடிஅரசு அறிக்கை, 31.1.1948)

தந்தை பெரியார் பயன்படுத்தியுள்ள ஒவ்வொரு சொல்லுமே ஆழமான அர்த்தம் பொதிந்ததாகும்.

புதிய நூல்கள் அறிமுகம்

இந்த உரையில் சில புதிய நூல்களைத் தமிழர் தலைவர் அறிமுகப்படுத்தினார். அதில் ஒன்று - சர்வோதய சங்கத்தைச் சேர்ந்த காந்தியவாதியான சு. வைத்யா (வயது 80) என்பவரால் எழுதப்பட்ட ஆங்கில நூல்.

காந்தியார் கொல்லப்பட்டதற்கு இந்துத்துவா சக்திகள் சொன்ன காரணங்கள் இரண்டு.

(1) பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்று நாடு பிரிவினைக்கு ஆதரவு தெரிவித்தது,

(2) இந்திய அரசு பாகிஸ்தானுக்கு முறைப்படி ரூ.55 கோடி கொடுக்க வேண்டும் என்று காந்தியார் கூறியது.

பத்துத் தடவை படுகொலை முயற்சிகள்

இந்த இரண்டும்தான் காந்தியார் படுகொலைக்குக் காரணமாகக் கூறப்பட்டா லும், அதற்குமுன் பத்துத் தடவை காந்தியாரைக் கொலை செய்வதற்கு அவர் கள் திட்டமிட்டார்கள்.  (அப்படி இருக்கும்போது இந்த இரு காரணங் கள்தான் காந்தியாரைக் கொலை செய்ததற்குக் கார ணமாக இருக்க முடியாது என்று அழுத்தமாகக் கூறி னார் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்) ஆறு முறை காந்தியாரைக் கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை ஆவணங் கள்மூலம் நிரூபிக்க முடியும்.

1934 இல் பூனா நகராட்சியில் காந்தியாருக்கு வர வேற்பு கொடுத்தபோது முதல் முயற்சி.

இதே கோட்சே 1944 இல்!


1944 ஆம் ஆண்டிலேயே இரண்டு முயற்சிகள். இதே நாதுராம் கோட்சே கத்தியுடன் காந்தியாரைக் கொலை செய்ய முயன்று தோற்றான்.
1944 ஜூன் 4 ஆம் தேதியன்று ரயில்மூலம் காந்தியார் பூனாவுக்குச் சென்றபோது ரயிலைக் கவிழ்க்க தண்ட வாளத்தில் மிகப்பெரிய பாறாங்கல்லை வைத்திருந்தனர். ஓட்டுநரின் விழிப்பால் அந்த விபத்துத் தவிர்க்கப்பட்டது.

1948 ஜனவரி 20 இல் கூட டில்லியில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் இந்து மதவெறி பிடித்த மதன்லால் பாவா என்பவன் காந்தியார்மீது வெடி குண்டு வீசினான். மயிரிழையில் காந்தியார் உயிர் தப்பினார்.

வணக்கம் கூறி வயிற்றை நோக்கிக் குண்டு!

அடுத்த பத்து நாள்களில்தான் ஜனவரி 30 அன்று பிரார்த்தனை மண்டபத்துக்கு வந்த காந்தியாரைப் பார்த்து வணக்கம் கூறி, இன்று பிரார்த்தனைக்கு நேரம் ஆகிவிட்டது அல்லவா? என்று கேட்டான். காந்தியார் புன்னகைத்து ஆமாம்! என்று கூறியவுடன் துப்பாக்கியை எடுத்து மூன்று முறை சுட்டான்.

பார்ப்பன கோட்சே!

முடிந்தது காந்தியாரின் வாழ்வு!

காங்கிரசானாலும், காந்தியார் ஆனாலும், கடவுளா னாலும் பார்ப்பனர்களுக்குத் தங்களுக்குப் பயன்பட்ட வரைதான் Use and Throw தான்.

வெள்ளைக்காரன் காப்பாற்றினான்- கொள்ளைக்காரன் தீர்த்துக் கட்டினான்
அந்நியன் வெள்ளைக்காரன் - அவர்களை எதிர்த் துப் போராட்டம் நடத்தினார் காந்தியார். ஆனால், அந்த வெள்ளைக்காரன் காந்தியாரைப் பாதுகாத்துக் கொடுத்தான். சுதந்திர இந்தியாவில் பார்ப்பானோ, காந்தியாரின் உயிரைக் குடித்துவிட்டானே என்று கழகத் தலைவர் சொன்னபோது, பார்வையாளர்கள்
மத்தியில் சுடுகாட்டு அமைதி!

காந்தியாரின் கொள்ளுப் பேரன்
கொட்டும் தகவல்கள்!
மற்றொரு முக்கிய நூலை தமிழர் தலைவர் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.

அந்த நூலின் பெயர்:

‘Let’s Kill Gandhi!
A Chronicle of His Last Days, The Conspiracy, Murder, Investigation and Trial’
எழுதியவர் டுஷார் ஏ. காந்தி - இவர் யார் தெரியுமா? காந்தியாரின் மகன் மணிலால் காந்தியின் மகன் என்பதுதான் சிறப்புச் செய்தி.
அந்த நூல் 2007 இல் சுரயீய  ஊடி வால் வெளி யிடப்பட்டது.

விலை ரூ.1000/-

இதுவரை தெரிந்திராத அதிரடியான தகவல்கள் அலை அலையாக இந்நூலில் புதைந்து கிடக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக வெளியிட்டார் கழகத் தலைவர்.

(நாளை பார்ப்போம்)

- மின்சாரம் -

ஆளுநர் உரை


ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் உரை என்பது சம்பிரதாயமான ஒன்றே.
உரை ஆளுநரால் படிக்கப்படுகிறதே தவிர, உள்ளபடியே அரசு தயாரிக்கும் உரையைத்தான் அட்சரம் பிறழாமல் படிக்கிறார் என்பதுதான் உண்மை.
ஆளுநர் உரை - அடுத்து நிதி அமைச்சர் அளிக்கும் நிதி நிலை அறிக்கையின் முன்னோட் டம்தான்.
2013-2014ஆம் ஆண்டுக்கான திட்ட  ஒதுக்கீடு ரூ.28 ஆயிரம் கோடியிலிருந்து 37  ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரவேற்கத் தக்கதாகும்.
அதே நேரத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்புக்காகச் சொல்லப்பட்டுள்ள காரணங் கள் அலட்சியப்படுத்தக் கூடியவையல்ல.
கடந்தாண்டு தருமபுரியில் நடைபெற்றுள்ள - தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான நடவடிக் கைகள் குறித்து இவ்வரசின் அணுகுமுறை பற்றியோ, நிவாரண உதவி பற்றியோ - திட்ட வட்டமாகத் தெரிவிக்கப்படவில்லை.
நீர் இல்லாமையால் விவசாயத் தொழில் அறவே பாதிக்கப்பட்டு 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்பது சாதாரணமானதல்ல; அதுபற்றி கண்டு கொள்ளப்படவில்லை. விவசாயி களுக்கு நிவாரணம் அளிப்பது குறித்தும் எந்த விதமான குறிப்பும் கிடையாது. அதன் காரணமாக டெல்டா பகுதி விவசாயிகள் போராட்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டுக்கு மிக தேவைப்படும் சேது சமுத்திரத் திட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. அரசின் கருத்து ஏற்கெனவே தெரிந்த ஒன்றே. அதன் காரணமாகவே ஆளுநர் உரையில் அது இடம் பெறவில்லை. ஆனாலும் எதிர்க்கட்சி என்ற முறையில் அதனைச் சுட்டிக் காட்ட வேண்டிய கடமை இருக்கிற காரணத்தால் தங்கள் வெளி நடப்புக்கு அதனை ஒரு காரணமாக கூறியுள்ளனர்.
எல்.கே.ஜி. வகுப்புகளுக்கு மாணவர்களின் சேர்க்கை மே மாதத்திற்கு முன்பு நடைபெறக் கூடாது என்ற உத்தரவு பெரிதும் வரவேற்கத் தக்கதே!
வருந்தத் தக்கது - பண்பாட்டு மறுமலர்ச்சியின் கண்ணோட்டத்தில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று முந்தைய தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தைக் குறைகூறி இருக்கும் போக்கை என்னென்று சொல்லுவது! புராண ஆபாசக் கதை கொண்டதுதான் தமிழ் வருடங்களா? மகா மகா வெட்கக்கேடு!
1921ஆம் ஆண்டிலேயே தமிழ்  அறிஞர்கள் தெரிவித்த கருத்து - அதன்பின் திருச்சியில் நாவலர் சோம சுந்தரபாரதியார் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் தந்தை பெரியார் போன்றவர்கள் பங்கேற்று முடிவு செய்த ஒன்று;
உலகளவில் மலேசியாவின் கோலாலம்பூரில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்காகவே கூட்டப்பட்ட மாநாட்டின் முடிவு - இவற்றை எல்லாம் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்திருப்பது அசல் பார்ப்பனத்தனம் அல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்?
இன்னொரு அறிவிப்பை எண்ணிப் பார்த்தால் இந்த ஆட்சி அண்ணா பெயரையும் திராவிட என்ற இனச்சுட்டுப் பெயரையும் எப்படிக் கொச்சைப்படுத்துகிறது என்பதை எளிதிற் புரிந்து கொள்ளலாம்.
புதிதாக இந்த ஆண்டிலிருந்து கம்ப ராமாய ணத்தில் உயரிய கருத்துக்களைப் பரப்பும் சிறந்த அறிஞருக்குக் கம்பர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைவிட அண்ணா அவர்களை அவமதிக்க முடியாது.
கம்ப ராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று இரா.பி. சேதுப்பிள்ளை,  நாவலர் சோமசுந்தரபாரதியார் ஆகியோரோடு வாதிட்டு வென்றவர் அண்ணா.
அத்தகைய அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், உருவத்தைக் கொடியிலும் பொறித்துக் கொண்டுள்ள கட்சி - அதற்கு நேர் எதிராகச் செயல்படுவது அண்ணா பெயரை மோசடியாகப் பயன்படுத்திக் கொள்வதல்லாமல் வேறு என்ன வாம்?
அ.இ.அ.தி.மு.க.வில் அண்ணாமீதும், திராவிட இயக்க உணர்வின்மீதும் மதிப்பு வைத் துள்ள ஒரே ஒருவர் இருந்தால் அவர் மட்டுமாவது சிந்திக்கட்டும்!

Saturday, February 2, 2013

வர்ணாசிரமத்துக்கு வக்காலத்து வாங்கும் நவீன விபீஷனர்கள்


பார்ப்பனர்களுக்குத் துதி பாடும் விபீஷணர்கள் எப்போதுமே இருந்து வருபவர்கள்தான் என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.  ஆனால் இப்போது புறப்பட்டு இருக்கும் நவீன விபீடணர்கள் அனைவருக்கும் ஒரு படி மேலே போய் பார்ப்பனர்களுக்கு வால் பிடிப்பவர்களாக இருக்கிறார்கள்.
இந்தியாவில் ஜாதி அமைப்பு முறையை புகுத்தியவர்கள் ஆசியாவில் இருந்து புலம் பெயர்ந்து வந்து இந்தியாவில் குடியேறிய ஆரியர்கள்தான் என்பது அனைவரும் நன்கு அறிந்த, அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட  உண்மையாகும். இதற்கு ஆதாரமாக மனுதர்ம சாஸ்திரம் உள்ளது.  நான்கு வர்ணத்தவர்களாக மக்கள் முறையே பிரம்மாவின் நெற்றி, மார்பு, தொடை மற்றும்  பாதத்தில் இருந்து எவ்வாறு பிறந்தார்கள் என்று மனுதர்ம சாஸ்திரம் விரிவாகக் கூறுகிறது. இது அன்றி,  வர்ணமற்ற அவர்ணஸ்தவர்கள் என தாழ்த்தப்பட்ட பிரிவினரான பஞ்சமர், சண்டாளர்கள் பாகுபடுத்திக் காட்டப் பட்டுள்ளனர். அப்படி இருக்கும்போது ஜாதிய அமைப்பு முறை ஆரியர்களால் புகுத்தப்பட்டதல்ல; பண்டைய இந்தியாவின் பழங்குடி மக்களிடையே நிலவி வந்ததுதான் என்று இந்த நவீன விபீடணர்கள் கூறுவதற்கு ஆதாரமாகத் தாங்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றைச் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஆரியர்கள் நம் நாட்டுக்கு வருவதற்கு முன்னதாகவே 10,000 - 30,000 ஆண்டு களுக்கு முன்பு நம் நாட்டு பூர்வகுடி மக்களிடையே ஏற்றத் தாழ்வு கொண்ட ஜாதிய அமைப்பு நடைமுறை இருந்தது என்று இவர்கள் கூறுகின்றனர். இதற்காக அவர்கள் காட்டும் இரண்டு ஆதாரங்கள்.
1. தந்தையிடமிருந்து  மரபணு மூலம் ஆண் பாரம்பரிய வழியில்  ஜாதிய அமைப்பு முறை அவரது ஆண் சந்ததியினரிடையே தொடர்ந்து நிலை பெற்று வருவதாக அவர்கள் கூறுவது.
2. தந்தையிடமிருந்து மகன்களுக்கு மட்டுமே சீ குரோமோசோம்கள் செலுத்தப்படுகின்றன என்ற அறிவியல் உண்மை.
குழந்தைகளின் பாலியல் தன்மையை முடிவு செய்வது ஆண்களின் சீ  குரோமோசோம்கள் என்பதும்,  ஆண்களின் மரபணு மூலம் அவர்களின் உடற்கூறுகள், பண்புகள், குண நலன்கள், ஆற்றல்கள், திறமைகள் ஆகியவை அவர்களின் ஆண் சந்ததியினருக்கு செல்கிறது என்பதும் அறிவியல் உண்மைகள். ஆனால் இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு தென்னிந்திய பூர்வகுடி மக்களிடையே ஆரியர் வருவதற்கு முன்பு ஜாதிய அமைப்பு நடைமுறை நிலவி வந்தது என்று எப்படி கூறமுடியும் என்பது புரியவில்லை.
சீ குரோமோசோம்களும், மரபணுக்களும் ஆண்களின் மூலம் ஆண் வாரிசுகளுக்கு செல்கின்றன என்பது உலகில் உள்ள அனைத்து மாந்தருக்கும் பொதுவானது. தென்னிந்திய பழங்குடிமக்களுக்கு மட்டுமே உண்டானது அல்ல. ஜாதிய நடைமுறை உருவாகி, தொடர்வதில் இந்த சீ  குரோமோசோம் களுக்கும், மரபணுக்களுக்கும் ஏதேனும் பங்கு இருக்குமானால், அது உலகில் உள்ள அனைத்து மாந்தர்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டியவை அல்லவா? ஆனால் இந்தியாவில் அதுவும் ஆரியர்களின் வருகைக்குப் பின் மட்டுமே நிலவி வரும் ஜாதிய அமைப்பு நடைமுறை மற்ற நாடுகளில் ஏன் இல்லை என்பதை இந்த ஆய்வாளர்கள் விளக்க முன்வருவார்களா?
பழங்குடி மக்களின் சீ  குரோமோசோம்களையும், அவர் களது சமூக பழக்க வழக்கங்களையும் ஆய்வு செய்வதன் மூலம் மட்டுமே அவர்களிடையே ஜாதிய அமைப்பு நடைமுறை நிலவியது என்று எவ்வாறு கூறமுடியும்?
இந்தியாவில் ஜாதிய அமைப்பு நடைமுறையையப் புகுத்தியது ஆசியாவில் இருந்து புலம் பெயர்ந்து வந்து குடியேறிய ஆரியர்கள்தான் என்ற மெய்ப்பிக்கப்பட்ட, ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையை மறுத்துக் கூறுவதற்கு  இந்த ஆய்வாளர்கள் கூறும் காரணங்கள் கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பாருக்கு மதியில்லையா? என்பது போன்ற சங்கதிதான்.
இவர்கள் மேற்கொண்டது மனித இனப் பெருக்கத்தில் குரோமோசோம்களின் செயல்பாட்டைப் பற்றிய அறிவியல் ஆய்வும் அல்ல; மக்களிடையே நிலவும் சமூக மரபியல் ( சமூக பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் பற்றிய ஆய்வு இயல்) ஆய்வும் அல்ல. இவர்கள் மேற்கொண்டது, ஆரியர்கள் வருவதற்கு முன்பே இந்தியாவில் ஜாதிய அமைப்பு நடைமுறை இருந்தது என்பதை மெய்ப்பிப்பதற்கான வீண் முயற்சியே ஆகும்.
இவர் எனது உறவினர், இவர் அன்னியர் என்று கீழ் நிலை மக்கள் மட்டுமே கருதுவர்; பெருந்தன்மை கொண்ட மக்கள் உலக மக்கள் அனைவரையும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகப் பார்ப்பவர்கள் ஆவர் என்று  தோழர் பாலசுப்பிரமணியம் கருத்து தெரிவித்துள்ளார்.
சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை உட்கார்ந்து பாடியதால் தியாகபிரம்ம விழாக் கூடமே தீட்டாகிவிட்டது என்று கூறி, அந்த இடத்தைக் கழுவி,  தீட்டைக் கழித்த பிறகே அங்கு உட்கார்ந்து பாடுவோம் என்று சொன்னவர்கள் யார்? பார்ப்பன சங்கீத வித்வான்கள் அல்லவா?
தமிழில் பாடி வழிபட்டதாலேயே கோயில் தீட்டாகிவிட்டது என்று  காஞ்சி பெரியவர் கூறவில்லையா?
வ.வே.சு. அய்யர் நடத்திய குருகுலத்தில் மற்ற ஜாதி மாணவர்களுடன் சேர்ந்து உணவு அருந்தமாட்டோம் என்று  பார்ப்பன மாணவர்கள் கூறவில்லையா?
கும்பாபிஷேக செலவு முழுவதையும் கொடுத்த சர்.பிட்டி தியாகராயர் அவர்கள் கும்பாபிஷேக மேடைக்கு வருவதைத் தடுத்த பார்ப்பனப் பூசாரிகள் செயலை எதில் சேர்ப்பது?
- த.க.பாலகிருட்டிணன்

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...