Thursday, November 1, 2012

மதிமயக்கம் என்பது இதுதானோ?


- ஊசி மிளகாய் -


தினமணி நாளேட்டின் கார்ட்டூனிஸ்ட் மதி அவர்கள் உளுந்தூர்பேட்டை அருகில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒரு கிளைபோல நடத்தப்பட்டு வருகிற ஸ்ரீ சாரதா ஆஸ்ரமத்தில் பேசும்போது பெரிய பெரிய தத்துவங்களையும், அருளுபதேசங் களையும் கூட உதிர்த்திருக்கிறார்! தினமணியில் (23.10.2012) படத்துடன் வெளிவந்துள்ளது.


தாய்மையின் பெருமையை இந்து மதம் எவ்வளவு உயர்த்தியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது என்று சிலாகித்திருக்கிறார் - கேலி சித்திரக்காரர்.

பெண்களைப் பாப யோனிகள் என்று வர்ணித்த பகவான் ஸ்ரீகிருஷ்ணன் அவதரித்த மதம் எது மதி அவர்களே? கண்ணனின் கீதை தானே அதைச் சொல்லுகிறது?

அதுமட்டுமா? பாரதத்தில் இன்னும் எப்படி யெல்லாம் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதைப் படிக்கவேண்டாமா?

தாய்மையை ஹிந்து மதம் மதித்திருந்தால் அவதார புருஷன் இராமன் தனது மனைவியை தீக்குளிக்க வைத்திருப்பானா? இவன் கால் பட்டவுடன் கற்பைப் பறிகொடுத்த அகலிகைக்கு சாப விமோசனம் வரும்போது, இன்னொரு காலின்மூலம் எளிதில் சீதையை கற்பு திரும்பிய வராக சந்தேகத்திற்கு அப்பால் ஆக்கியிருக் கலாமே - நெருப்பில் குளித்துவரக் கட்டளை தேவையில்லையே!

நிறைமாத கர்ப்பணி சீதையை காட்டுக் கனுப்பிய இராமனைக் கடவுள் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் இராமாயணம் தானே இந்து மத இதிகாசம் எல்லாம்?

இதுமட்டும் பழைய காலத்தைவிட்டுத் தள்ளுங்கள் எங்கள் மாதாஜிக்களை பாருங்கள் என்று ஹிந்து மத இதோபதேசம் செய்யும் மதி மன்னர்களே!

இராஜஸ்தானத்தில் கணவன் இறந்தவுடன் 26 வயது கூட நிரம்பாத ரூப்கன்வார் எனும் பெண்ணை கணவனுடன் வலுக்கட்டாயமாகக் கட்டி, எரித்துக் கொன்று, தாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கனவு காணும் பா.ஜ.க. ஆட்சியில் - சதிமாதா கோவில் கட்டி  வழிபடும் ஸ்தலமாக்கியுள்ளார்களே, அதுதான் ஹிந்து மதம் தாய்மையைப் போற்றுவதற்கான அடையாளமா?

திருவிளையாடல் புராணத்தில் தன் தாயையே மனைவியாக அனுபவித்த (அருவருப்பான கதை) பார்ப்பனனுக்கு மோட்சம் கொடுத்த மாபாதகம் தீர்த்த படலம் பற்றி படித்துள்ளீர்களா?

அதையும் தாங்கள் ஓவியமாக்கலாமே! இன்னொரு கருத்திலும் சர்வமதவாதியாகத் தன்னைக் காட்டிக் கொள்ள முயன்றுள்ளார்.

கிறிஸ்துவப் பாதிரியார் ஒருவர் சொன்னாராம், தமிழ் இறைமொழி; ஆங்கிலம் வர்த்தக மொழி என்று. இறைமொழியான தமிழ், வர்த்தக மொழியான ஆங்கிலம் இரண்டையும் நாம் புறக்கணித்துவிட முடியாது!

நாம் இறைவனிடம் தாய்மொழியான தமிழில் வேண்டுகிறோம். கீதையில் கிருஷ்ணன் கூறியதுபோல், கடமையைச் செய்யவேண்டும்; அதற்கான பலனை இறைவன் கொடுப்பான் என்று கூறுபவர்; கிருஷ்ணன் எந்தக் கடமையைச் செய்ய இப்படி உபதேசித்தான் என்பதை கீதையின் மறுபக்கம் புத்தகம் ஒன்றை வாங்கிப் படித்தால் புரியும்!

இறைமொழியாக தமிழில் கோவிலில் மந்திரங்கள் சொல்லக் கூடாது என்று கூறி உங்கள் தினமணி ஏட்டில் - 20.10.2012 (நான்கு நாள்களுக்கு முன்பு) கோவில்களில் தமிழ்; காந்திஜி கூறியதென்ன? என்று ஒரு கட்டு ரையை நடுப்பக்கத்தில் வெளியிட்டு, சமஸ் கிருதத்தில் மந்திரம் கோவில் வழிபாடு இருக்க வேண்டும்; தமிழ் வேண்டும் என்று கூறுவது கூடாது.

கோவில் பூஜைகள், குட முழுக்கு, வாழ்வியல் சடங்குகள் அனைத்தையும் தமிழ் மயமாக்கும் முயற்சியில் இப்போது ஆத்திகத் தமிழ்ப் பெருந்தகைகள் தமிழ் வழிபாட்டு வெற்றி விழா என்ற பெயரில் இறங்கியுள்ளனர்!

சங்ககாலத் தமிழ்ப் புலவர்களோ, சைவ சமயத் திருக்குரவர்கள் நால்வருமோ அல்லது வேறு யாருமோ வடமொழி வழிபாட்டை ஆட்சேபித்த தாகக் கூட தகவல்கள் இல்லை. பிற மாநிலங் களில் தாய்மொழி அபிமானிகளோ, மலை யாளிகளோ, கன்னடியர்களோ, தெலுங்கர்களோ கூட தாய்மொழியில்தான் வழிபாடு வேண்டும் என்று வாதாடவில்லை என்று கூறி, காந்திஜியைத் துணைக்கு அழைத்தனர். கோவில்களைப்பற்றி அவை விபச்சார விடுதிகள் என்று சொன்னவர் காந்தியார் என்பதை வசதியாக மறைத்துவிட்டு, அதை உங்கள் ஏடு மகிழ்ச்சி பொங்க - தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதை மறுத்து மகிழ்ந்ததைப்போல வெளியிட்டுள்ளது!

மதி அவர்களே, நீங்கள் தினமணியில் எந்தக் கட்சி? தமிழா, சமஸ்கிருதமா? அல்லது இறைவன் விட்ட வழியா?

மதியை மதிக்கலாம்; ஆனால், பரிதாபத்திற் குரிய மதியின் மதி, மதிக்கக் கூடிய நிலையில் இல்லையே!

அந்தோ பரிதாபம்!!

அந்தக் கலாச்சாரம் எது?




நமது பொருளாதாரத்தின் அடிப்படைக் கலாச்சாரம் என்பது பற்றி ஆர்.எஸ்.எஸ். ஆலோசகரும் கோயங்கா வீட்டுக் கணக்கப்பிள்ளை என்று பொதுவாக அறியப்பட்ட வருமான திருவாளர் எஸ். குருமூர்த்தி பேசி இருக்கிறார். அவர் பேசிய இடமோ டில்லியில் உள்ள பி.ஜே.பி. யின் தலைமை அலுவலகம் (20.10.2012). பி.ஜே.பி.யின் முக்கிய தலைவரான எல்.கே. அத்வானி, பி.ஜே.பி.யின் தேசியத் தலைவர் நிதின் கட்காரி முதலியோரும் பங்கு கொண்டுள்ளனர். 1) இந்தியாவுக்கு வருகை தராத இந்தியாவைப்பற்றி குறைவாக அறிந்த அறிஞர்களான காரல்மார்க்ஸ், மாக்ஸ் வெப்பர், ஜான் கால்பிரைத் போன்ற அறிஞர்களால் உருவாக்கப்பட்டவை என்பது குருமூர்த்தி அய்யரின் குற்றப் பத்திரிகையின் முதல் அம்சமாகும்.

ஒரு நாட்டைப் பற்றி அறிய வேண்டுமானால் அந்த நாட்டுக்கு நேரில் வருகை தந்திருக்க வேண்டும் என்றால் பல நாடுகளின் பொருளா தாரம், சமூகச் சூழல் ஆகியவைபற்றி எழுதுபவர்கள், விமர்சனம் செய்ப வர்கள் எல்லாம் சம்பந்தப்பட்ட நாடு களுக்குச் சென்று வந்தவர்கள்தானா?

இந்தியாவின் இந்துமதம்பற்றி காரல் மார்க்ஸ் விமர்சித்ததுண்டு. இப்படி இந்து மதத்தின் அடி மடியில் கை வைத்து விட்டால் போதும்; இந்தப் பூதேவர்களுக்கு வெட வெடப்பும், ஆத்திரமும் பொங்கி எழுந்து விடும்.

மார்க்சும், எங்கல்சும் இந்தியாவைப் பற்றி 28 கட்டுரைகள் எழுதியுள்ளனர்.

மார்க்சின் காலனியாதிக்கம் எனும் நூலில் மார்க்சு குறிப்பிடுவது முக்கிய மானது.

சமூக நோக்கில் பார்த்தால் இந்துஸ்தானம் கிழக்கிந்திய அயர் லாந்தை ஒத்திருக்கிறது. இத்தாலி சிற்றின்ப வேட்கை நிறைந்ததாக இருக்கிறது. இத்தாலியும் அயர் லாந்தும் கலந்த ஒரு வினோதமான கலப்பாகவே இந்துஸ்தானம் தோன்றுகிறது. சிற்றின்ப வேட்கை யும், துன்பமும் நிறைந்துள்ள ஒரு உலகமாக அது இருக்கிறது. இங்குள்ள மதமும் சிற்றின்பத்தின் சிறப்பை சிலாகிக்கும் போதே திடீரென்று தன்னையே சித்திர வதை செய்துகொள்ளும் சன்னி யாசத்தையும் ஆதரிப்பதாக இருக்கிறது என்று படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

குடியானவர்களின் வாழ்க் கையைச் சித்திரிக்கும் இந்தச் சிறு கிராம அமைப்புகள் சிறியவை களாக இருந்தாலும் அவர்கள் கீழை நாட்டுச் சர்வாதிகாரத்தின் அடித்தளங்களாக இருந்தன.  அவை மனித அறிவை மூடநம் பிக்கை என்ற சிறு போர்வைக் குள்ளேயே முடக்கி வைத்தன. இதனால் அவர்களது சரித்திர கால வீர உணர்வும், சிறப்புகளும் அழிந்து போயின. இந்த அமைப் புகள் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும், தங்களைத் தாங்களே பெருமையோடு பார்த்துக் கொண்டன. சாம்ராஜ்ஜியங்கள் அழிந்தாலும் நகரங்களில் பயங்கரப் படுகொலை நடந்தாலும், எவ்வளவு கொடுமையான நிகழ்ச்சிகள் நடந்தாலும், அவற்றைப் பற்றி இந்தக் கிராமங்கள் கவலைப்படவே யில்லை. எனவே ஆதிக்கவாதி களின் பிடியில் இக்கிராமங்கள் எளிதில் விழுந்தன. கண்ணிய மில்லாத தேக்கமடைந்து சோம்ப லாகிக் கிடந்த இந்தக் கிராமங் கள்தான் கொலைகளை மதச் சடங் குகள் என்ற பேரில் ஆதரித்தன என்பதை நாம் மறக்கக் கூடாது.

இந்தக் கிராம சமூகங்களில் சாதி வேற்றுமையும், அடிமைத்தனமும் வளர்ந்து கெட்டு விட்டன. அவை மனிதனை சூழ்நிலைகளின் அதிபதியாக மாற்றுவதற்குப் பதிலாக சூழ்நிலைகளின் அடிமைகளாக மாற்றிவிட்டன. கண் மூடித்தனமாக இயற்கையைத் துதித்தன. இயற்கை யான தன் சக்தியால் வென்று அதைப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதன் இங்கே தாழ்ந்து போய் இயற்கைக்கு முன்னால் குரங்குக் கும், பசுவுக்கும் மண்டியிட்டு வணங்கினான் என்பதை நாம் பார்க்க வேண்டும். (நூல் பக்கம் 40-_41)

இப்படி மார்க்ஸ் இந்தியாவை - அதன் இந்துத்துவப் பிற்போக்குத் தன்மைகளைக் கூர்மையாக அம் பலப்படுத்தினால் குருமூர்த்திகளால் எப்படி சீரணித்துக் கொள்ள முடியும்?

மார்க்சு சொன்னது சரியா? தவறா? என்று சர்ச்சை செய்வதற்குப் பதிலாக ஒரேயடியாக - அவர் வெளிநாட்டுக் காரர் என்பதும், இந்தியாவை நேரில் பார்த்திராதவர் என்றும் புறந் தள்ளப் பார்ப்பது ஒரு வகையான தப்பிக்கும் தந்திரமாகும் _ இயலாமையும் ஆகும்.

இந்தியாவுக்கு வந்து இந்தியாவின் வருண தர்மத்தையும் பிற்போக்குத் தனங்களையும் பார்ப்பன ஆதிக் கத்தையும் நேரில் எழுதியவர்களின் கருத்துக்களையாவது இவர்கள் ஏற்றுக் கொண்டவர்களா என்றால் அதுவும் இல்லை. அப்படி எழுதியவர்கள் கிறித்தவர்கள் என்று மத முத்திரை குத்தி  அப்பொழுதும் தப்பிக்கும் வழியைத்தான் பார்க்கிறார்கள்; இது பார்ப்பனர்களுக்கே உரித்தான தந்திர உபாயம் என்பதை உணர்க!

2. மேலை நாடுகளில் சொல்லப் படும் சிவில் சொசைட்டி என்பது கேளிக்கை நிலையம் (கிளப்) போன்றது. ஆனால், நமது சமூகம் என்பது வேறானது இந்த சமூக முறைதான் ஒரு காலத்தில் கழிவு நிறைந்த இடமான சூரத் நகரத்தை வைரம் வெட்டும் தொழில் நகரமாக உருவாக்கியது. உலகம் முழுவதும் உள்ள 
10 வகையான வைரங்களில் 9 வகையான வைரங்கள் சவுராஷ் டிராவில் வெட்டப்படுகின்றன.

சிவில் சொசைட்டியில் உறவுகள் என்பது ஒப்பந்தம் ஆகும். அந்த சொசைட்டி ஒப்பந்தத்தின் அடிப் படையில் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் நமது அரசியல் சட்டமும் உருவாக்கப்பட்டது. எங்கெல்லாம் குடும்ப உறவுகளும், சமூக உறவுகளும் பரம்பரியமாகக் காக்கப்படுகின்றனவோ அங்கெல்லாம் அரசுகள் செய்ய வேண்டியதை சமூகங்களே செய்கின்றன. நம் நாட்டிலுள்ள சேமிக்கும் பழக்கம் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் கணவன் மனைவி, குழந்தைகள் பராமரிப்பு என அனைத்தும் ஒப்பந்தங்களின் அடிப்படையிலானவை. அது போன்ற நாடுகளில் செயல்படுத்தப்படும் பொருளாதார கொள்கைகளை நம் நாட்டில் இறக்குமதி செய்வது எப்படி பொருத்தமாக இருக்கும்? என்ற வினாவையும் தொடுத்துள்ளார் ஆடிட்டர் குருமூர்த்தி.

இது அப்பட்டமான பார்ப்பனீய ஆர்.எஸ்.எஸ். சிந்தனையின் பிரசவ மாகும்.

சூரத் நகரம் வைரத் தொழிற் சாலையாக ஒளிர்வதற்குக் காரணம் இந்து சமூக அமைப்பின் பாரம்பரியக் கலாச்சாரமாம்.

அப்படியானால் இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் வளர்ந்து வரும் தொழிற்சாலைகள் எந்த வகைக் கலாச்சாரத்துக்குச் சொந்தமானவை?

கோலார் தங்கச் சுரங்கத்துக்கு எந்தக் கலாச்சாரம் உத்தரவாதம் கொடுத்ததாம்?
அரசுகள் செய்ய வேண்டியதை இங்கு சமூகங்கள் செய்கிறதாமே! இங்குள்ள சமுதாயம் என்பது என்ன? ஜாதீய கட்டுமானம்தானே!

ஜாதீயக் கட்டுமானத்தில் சமுதாய உறவுகள் உண்டா? சமுதாய உறவு களைத் தகர்ப்பதுதானே இந்துத் துவாவின் ஜாதீய அமைப்பு? தீண்டாமை நிலவும் ஒரு சமூக அமைப்புகள் சமூக உறவு எங்கிருந்து குதிக்கும்? நகர சுத்தித் தொழில் எந்தச் சமூக உறவுகளின் அடிப்படையில் நடைபெறுகிறது? இந்த அடிப்படைப் பணியைச் செய்வதற்கு குறிப்பிட்ட ஜாதியினருடன் சமூக உறவுகளின் அடிப்படையில் இணைந்து பணி செய்வோர் உண்டா?

இங்குள்ள சமூக உறவுகள் எப்படி இருக்கின்றன? வறுமைக் கோட்டுக் கும் கீழ் உழலுவோர் எந்த ஜாதியினர்?

தாழ்த்தப்பட்ட மக்களில் 86.25 விழுக்காட்டினர் நிலமற்றவர்களாக இருப்பது எந்த அடிப்படையில்? விவசாயக் கூலிகளாகப் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பது ஏன்? இதில் 48 விழுக்காட்டினர் கடனாளிகளாக இருப்பதும்தான். சமுக உறவுகள் பாரம்பரியமாகப் பாதுகாக்கப் பட்டதன் இலட்சணமா?

பாரம்பரிய உறவுக் கலாச்சாரம் என்று திருவாளர் குருமூர்த்தி சொல்லுவது மறைமுகமான ஜாதீய கட்டுமானத்தைத் தானே?

உண்மையைச் சொல்லப் போனால் தாழ்த்தப்பட்டவர்கள் வறுமையின் பிடியில் சிக்கிக் கிடப்பதற்கே காரணமே ஜாதியின் அடிப்படையில் நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டதுதானே ஒதுக்கப்பட்டதுதானே!

முதல் பிற்படுத்தப்பட்டோர் நலன் ஆணையத்தின் தலைவராக இருந்த காகாகலேல்கர் மத்திய அரசிடம் அளித்த அறிக்கையில்  குறிப்பிட்டுள்ள கருத்து - குருமூர்த்தியின் கருத்தினைக் கருச் சிதைவு செய்யக் கூடியதாகும்.
ஜாதி அமைப்பானது உலகில் எங்கும் கிடையாது. இங்குதான் இருக் கிறது. பொருளாதார முன்னேற்றம் அடைந்தால் சமுதாய அமைப்பு மாற்றம் அடையும் -_ ஜாதி ஒழிந்து விடும் என்கின்றனர் சிலர்.

அந்த வாதம் தவறானதாகும். ஜாதி காரணமாகத்தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வி இல்லை உணவு இல்லை; உடை இல்லை, இது பொருளாதார, அமைப்பினால் வந்தது என்பது தவறு. ஜாதி அமைப்பினால் தான் பொருளாதார வேறுபாடு இருந்து வருவது உண்மையாகும்.

பொருளாதாரத்தினால் பின்னடைந்து நிற்பது ஜாதியினால் ஏற்பட்ட விளைவே தவிர ஜாதி தோன்றுவ தற்குரிய காரணம் அல்ல என்றாரே காகாகலேல்கர்

குருமூர்த்தி பெருமைப்படும் ஜாதியின் அடிப்படையிலான பாரம்பரிய சமூக உறவு எவ்வளவுப் பெரிய ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பது  இன்னொரு பார்ப் பனரான காகாகலேல்கரே மறுக் கிறாரே!

இந்தியா ஒரு விவசாய நாடு என்று சொல்லப்படுகிறது. அந்த விவசாயத்தைப் பாவ தொழில் என்று சொல்லுவது திரு. குருமூர்த்தி தூக்கிப் பிடிக்கும் இந்து சமூக சாஸ்திர மான மனுதர்மம் (அத்தியாயம் - 10; சுலோகம் 84)

பார்ப்பனீய இந்துக் கலாச்சாரம் என்பது இந்தக் கதியில் இருக்கும் பொழுது அதனைத் தலைகீழாகப் புரட்டிச் சொல்ல குருமூர்த்தி போன்ற பார்ப்பனர்களால்தான் முடியும்.

- மின்சாரம்-

புரோகிதன்


கோயில் கருவறைக்குள் பார்ப்பனர்கள் மட்டுமே செல்ல முடியும். அவர்கள் தான் அர்ச்சனை  செய்ய உரிமை பெற்றவர்கள் - தகுதி உடையவர்கள் - ஆகமங்கள் அப்படித்தான் கூறுகின்றன என்று வக்கணைப் பேசும் பார்ப்பனர்களைக் காண முடிகிறது. உச்சநீதிமன்றம் வரை சென்று இந்த வகையில் வாதாடுகிறார்கள்.

தந்தை பெரியார் பொதுக் கூட்டத்தில்கூட சொல்லு வார் ராத்திரி பூராவும் மாமா வேலை செய்துவிட்டு, காலை யில் அர்ச்சகனாகப் பணி யாற்றுகிறானே! என்று கூறுவதுண்டு.

இப்பொழுது அதையும் தாண்டி புரோகிதப் பார்ப் பனர்களும், அர்ச்சகப் பார்ப் பனர்களும் தனி ஒழுக்கம் ஏதுமின்றி தண்ணீர் ஒழுக் கத்தில் மிதந்து கொண்டு இருக்கிறார்கள்.

பவானி கூடுதல் துறை யில் இறந்தவர்களுக்காக ஆத்மா(?) சாந்தி அடைய பரிகாரப் பூஜைகள் (திவசம், கருமாதி முதலியன) நடத்தப் பட்டு வருகிறது.

அங்கு புரோகிதராக இருந்து வந்தவர் தம்மிடம் வந்த திருப்பூர் குடும்பத்தினரை மற்றொரு புரோகிதரான சீனிவாசன் என்பவரிடம் அனுப்பி வைத்தார்.

அந்தப் புரோகிதப் பார்ப் பான் சரியான குடி போதை யில் பெருங்குடி மகனாக உருண்டு கிடந்திருக்கிறார்.

இறந்து போன தங்கள் பெற்றோர்களுக்கு தடபுட லாக விருந்து பார்சலை அனுப்ப வந்த திருப்பூர் குடும்பத்தினர் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். விஷயம் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் நடராஜ் என்பவருக்குச் சென்றது.
அதனைத் தொடர்ந்து இரு புரோகிதப் பார்ப்பனர் களையும் அந்த அதிகாரி தற்காலிக வேலை   நீக்கம் (Suspension) செய்துள் ளார்.
(ஆதாரம்: மாலை மலர் ஈரோடு பதிப்பு - 29.10.2012 முதல் பக்கம்)

குடிக்கும் - பார்ப்பானுக் கும் நெருக்கமான உறவு உண்டு என்பது தெரிந்தது தான். அவர்கள் சுரா பானம் குடித்ததனால் சுரர் என்று அழைக்கப்பட்டனர். திராவி டர்கள் குடியை மறுத்ததால் அசுரர் (சுரர் என்பதற்கு எதிர்ப்பதம்) என்று புராணங் களிலும், வேதங்களிலும் எழுதி வைத்து விட்டனர்.

இது புரியாமல் குடிகாரப் பார்ப்பனர்களாகிய சுரர் களை ஒழுக்கவான் என்றும், குடிக்க மறுத்த மக்களை அசுரர்கள் என்றும் கூறி அவர்கள் ஒழுக்கம் கெட்டவர் போலவும் தலைகீழாகப் புரட்டிவிட்டனர்.(பகுத்தறிவைப் பயன்படுத்தாவிட்டால் இதுபோன்ற புரட்டல் உருட் டல்களுக்குப் பலியாக வேண்டியதுதான்)

காஞ்சீபுரத்தில் மச்சேஸ்வரர் கோயிலில் அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதன் கோயிலுக்கு வந்த பெண்க ளிடம் கர்ப்பக் கிரகத்திலேயே உடலுறவு கொண்டான்; அவற்றைப் படம் பிடித்தும் வைத்திருந்தான் என்பதும் சாதாரணமா?

இந்த யோக்கிதையில் உள்ள பார்ப்பனர்கள் கர்ப்பக் கிரகத்தில் உள்ள சாமி சிலைகளைத் தொடலாமாம்; அர்ச்சனை செய்யலாமாம்; முறைப்படி பயிற்சி பெற்ற பார்ப்பனர் அல்லாதார் ஒழுக்கவாதிகளாக இருந்தா லும் பிறப்பின் காரணமாக கர்ப்பக் கிரகத்திற்குள் போகக் கூடாதாம்! அப்படி போனால் சாமிக்குத் தீட்டுப் பட்டு விடுமாம். இந்தப் பார்ப் பனீய பம்மாத்தை உடைத்து எறிய வேண்டாமா?
  - மயிலாடன்

தீபாவளியும் - அவதாரங்களும்!


மகாவிஷ்ணு எனும் இந்துக் கடவுள் திருமால் எனவும் கூறப்படுகிறது. இந்தக் கடவுளை இந்து மதத்தின் மற்றொரு பிரி-வினரான சைவர் ஏற்றுக் கொள்-வது கிடையாது. பல கடவுள் மதம் என்பதால் இந்தக் கோளாறு. விஷ்ணு பத்து அவ-தாரங்கள் எடுத்தது. - ஒன்பது முடிந்து-விட்-டது.- ஒன்று மீதி உள்ளது. - அது கல்கி அவதாரம் - என்றெல்லாம் புரா-ணங்களில் எழுதப்பட்டுள்ளன என்கிறார்கள்.

நாம்தான் வேதங்களைப் படிக்-கக்-கூடாது. நாம் படிப்பதற்காகத்-தான் புராணங்களே எழுதப்பட்-டன. அப்படி 18 புராணங்கள் எழுதப்பட்டன. இவை தவிர துணைப் புராணங்கள் 18 உள்ளன. இவற்-றில் கருட புராணம் என்பது மெயின் புராணங்களில் ஒன்று. 

அதன்படி திருமால் இதுவரை 21 அவ தாரங்கள் எடுத்திருக்கிறது. 22 ஆம் அவதாரத்தை இனிமேல் தான்  எடுக்க வேண்டும். அதுதான் கல்கி அவதாரம். யாரோ ஒரு எத்தன் கல்கி அவ-தாரம் _ தான் என்று கூறிப் பெண்-களையும், பெற்றோரையும் ஏமாற்றிப் பிழைத்து வருகிறான். ஆந்திரா, மராட்டியம் உள்பட பல மாநிலங்களில் பல வழக்குகள் அவன் மீது.

முதல் அவதாரம் மச்சாவதாரம். - முதல் முதலில் நீரில்தான் ஜீவராசிகள் (உயிரிகள்) தோன்றின என அறிவியல் கூறுகிறது.- இரண்-டாம் அவதாரம் ஆமை.- இது நீரிலும், நிலத்திலும் வாழக் கூடி-யது. -  மூன்றாம் அவதாரம் பன்றி. இது விலங்கு. - நான்காம் அவதாரம் நரசிம்மம். -பாதி விலங்கு, பாதி மனி-தன் - பின்னர் வாமன அவதாரம் - (குள்ளப் பார்ப்பனன்) என்று வரிசைப்படுத்தி அறிவியலோடு தொடர்புபடுத்தித் தம் மூடக் கற்பனையை நியாயப்படுத்த பக்திக் குமுதம், பக்தி விக-டன், காமகோடி, ஆன்மீகம்_- அருள்சோதி என்றெல்-லாம் பார்ப்பனர் ஏடுகளில் எழுதி வருகிறார்களே! அவை பொய்.

கருட புராணப்படி முதல் அவ தாரம் குமாரன், பிரம்மச்சாரி, தவம் செய்தார். இரண்டாம் அவதாரம் வராகம்,- மூன்றாம் அவதாரம் தேவ ரிஷி,- நான்காம் அவதாரம் நரநாரா யணன் - இப்படியே போய்... பத்தாம் அவதாரம்தான் மீன் - பதினொன்-றாம் அவதாரம்தான் ஆமை - 14 ஆம் அவ தாரம் நரசிம்மம் - 15 ஆம் அவதாரம் வாமனன் -16 ஆம் அவதாரம் பரசு ராமன். - 19 ஆம் அவதாரம் இராமன் - 20 ஆம் அவதாரம் கிருஷ்ணன் - 21 ஆம் அவதாரம் புத்தர் - 22 ஆம் அவதாரம் கல்கி (எதிர்-காலத்தில் எடுக்குமாம்) என ஆகிறது.

பூவுலகை மீட்கத்தான் வராக (பன்றி) அவதாரமாம். நியாயப்படி பார்த்தால் விஷ்ணு புராணத்தில்-தான் அதன் அவ-தாரங்கள் பற்றி எழுதியிருக்க வேண்டும். மாறாகக் கருட புராணத்தில் எழுதப்பட்-டுள்ளது. ஏன்? சரி, விட்டுவிட்டுப் பன்றி-யின் கதையைப் பார்ப்போம். அதுதானே தீபாவளியின் கதை!

பன்றியின் கதைதான் வராக புராணம். பன்றியே_- விஷ்ணுவே_- பூமாதேவிக்குச்  சொன்னதாம். பிரளய முடிவில் இருட்டில் மூழ்கி இருந்த உலகை வராகம் உயர்த்தி வெளிக் கொண்டு வந்ததாம். பிரம்மனால் படைக்கப்பட்ட ஆதி ரிஷிகளில் காஷ்ய-பன்,- அதிதி தம்-பதிகளின் புத்திரன், விசு-வாஸ்-வனன். அவன்தான் சூரியன் என்-கிறது பிரம்ம புராணம். முதல் புராணத்-திலேயே சூரியனை அறி-முகப்படுத்திவிட்டு 15 ஆம் புரா-ணத்தில் பூமி இருட்டில் இருந்தது என எழுதினால்... என்னய்யா முரண்பாடு?

இதே வராக (பன்றி) அவ-தாரத்-தைப் பற்றி விஷ்ணு புராணத்தில் என்ன எழுதி-யிருக்கிறார்கள், தெரியுமா? நீரின் மேல் தாமரை இலை மட்டும் மிதக்கக் கண்ட-தாம் விஷ்ணு. உடனே நீரில் குதித்து பூமி-தேவியை எடுத்ததாம். அதன் வேண்டு-கோளின்படி, வராக ரூபம் கொண்டு தனது கொம்பு நுனியில் பூமியை உயர எடுத்து (பாதாளத்திலிருந்து) அருளிய-தாம். (வெளிநாடுகளில் நீரில் குதித்து மூழ்கித் தன் மூக்கால் பந்தை உருட்டித் தள்ளி வேடிக்கை காட்டும், டால்ஃபின் மீன். புரா-ணத்தில் இதே வேடிக்கையைப் பன்றி காட்டியுள்ளது).

யோகிகள் எல்லாம் பன்றியைக் கும்-பிட்டு பூமியை உத்தரித்து சுகத்தினைக் கொடுத்து அருள் புரிய வேண்டும் எனக் கேட்டார்-களாம். உடனே பன்றி, பூமியைப் பழையபடியே நீரின் மீது நிறுத்தி அருள் புரிந்ததாம்.

 இதை  பெரிய திருமொழிப் பாசுரம்
ஏனாகி உலகிடந்து அன்று இரு-நிலனும்
பெருவிசும்பும் தாளாய பெரு-மான்
எனப் பாடுகிறது. பிறகு நர-காசுரன் எங்கே வருகிறான்?

கேசவ துதி பாடியதால் பூமாதேவியின் வேண்டுகோளை ஏற்று பன்றி உரு எடுத்து கட-லுக்குள் நுழைந்தார். இரண்யாட்-சத-னுடன் சண்டை போட்டு, அவனைக் கொன்று, பூமியை வெளிக் கொணர்ந்து விரித்தார் என்றுதான் வராக புராணம் கூறுகிறது.

பூமி தட்டை எனக்கூறிய முட்டாள்களால் எல்லாப் புராணங்களுமே எழுதப்-பட்டன. ஆகவே பூமியைச் சுருட்டினான் என்றும், கடலில் புகுந்தான் என்றும், பன்றி மீட்டது என்றும் கதை எழுதி வைத்துவிட்டார்கள்.

ஒவ்வொரு அவதாரம் எடுக்கும்-போதும் மகாலட்சுமி எனும் விஷ்ணுவின் மனைவி-யும் உடன் தோன்றி ஒரு கல்யாணம் செய்து கொள்ளுமாம். இதனால்தான் விளையாட்டு எனும் பொருள் கொண்ட கல்-யாணம் என்ற சொல் சூட்டப்பட்டதோ?

ஒரு மாநிலத்தில் வாமன அவ-தாரத்துடன் தொடர்புபடுத்திக் கதை கட்டி விட்டார்கள்.

ஒரு மாநிலத்தில் இராம அவதாரத்துடன் தொடர்புபடுத்திக் கதை கட்டி விட்டார்கள்.

ஒரு மாநிலத்தில் இராமன் ஜெயித்த நாள் எனக் கதை. ஒரு மாநிலத்தில் சீதை-யுடன் நாடு திரும்பும் நாள் எனக் கதை.

ஒரு மாநிலத்தில் கூர்ம (ஆமை) அவதாரத்துடன் தொடர்புபடுத்தி - விஷ்ணுவும் லட்சுமியும் கல்யாணம் செய்து கொண்ட நாள் எனக் கதை.

இந்து மதம் ஒன்றுதானே! ஏன் இந்து மதத்தின் விழாக்களின் கதைகள் ஒரே மாதிரி இல்லை? அவரவர் கற்பனைப்படி கதை-யளந்து கொண்டு விழா நடத்-துவது என்றால்...

புராணம் எழுதியவர்களுக்குப் புத்தி இல்லை என்றுதான் பொருள். பொய் சொல்வதற்கும்-கூடப் புத்திசாலித்தனம் தேவைப்-படுமே!  பலப்பல நபர்கள் பலப்-பல காலங்களில் எழுதிச் சேர்த்த கதை-கள்தான் புராணங்கள்!  அத்தனையும் பொய்ப் புளுகு மூட்டைகள். அம்மட்டே!

(விடுதலை, 19.10.2006)

பஞ்ச கச்சமும், உச்சிக்குடுமியும்!


தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோவில்களில் அர்ச்சகர்களாக இருக்கக் கூடியவர்கள், பார்ப்பனர் களின் பாரம்பரிய உடையான பஞ்ச கச்சம் கட்டி, உச்சிக்குடுமி வைத்துதான் கோவில் பணிகளைச் செய்யவேண்டும் என்று இந்து அறநிலையத் துறை ஆணை பிறப்பித்துள்ளது. இது ஒழுங்காகக் கடைப் பிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அனைத்து சார்நிலை அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளார் களாம்.

இதன்மூலம் இந்த ஆட்சி எதனை கட்டிக் காக்க விரும்புகிறது? இந்துக் கோவில்கள் என்றால் அது பார்ப்பனர்களுக்குரியது - அதன் செயல்பாடுகள் அனைத்தும் பார்ப்பனீய முறையில் மட்டுமே அமைய வேண்டும். பக்தர்கள் மனதிலும் இந்த நிலை உறுதிப் படுத்தப்படவேண்டும் என்பது இதன் பின்னணியில் இருக்கக் கூடிய மனவோட்டம் என்பதல்லாமல் வேறு என்னவாம்?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்கான மனித உரிமைப் போராட்டத்தை தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக அறிவித்துச் சென்றுள் ளார். அதற்காக பல்வேறு வடிவங்களில் திராவிடர் கழகம் போராடிக் கொண்டு இருக்கிறது. பிரச்சாரத்தையும் செய்துகொண்டு இருக்கிறது.

தந்தை பெரியார் அவர்களின் கட்டளையையேற்று தி.மு.க. அரசு சட்டம் செய்தது. தி.மு.க. ஆட்சியைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். அவர்களின் தலைமையில் அமைந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலும் அதன் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நீதிபதி மகராசன் தலைமையிலும், நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் தலை மையிலும் தனித்தனியாக ஆணையங்கள் அமைக்கப் பட்டு, அவற்றின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன; செல்வி ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுகூட, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்க கம்பரசன்பேட்டையில் இடம் தேர்வு செய்யப்பட்டதே!

 அனைத்து ஜாதியினருக்கும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் உரிய பயிற்சிகளும் அளிக்கப்பட்டு, அவர்களைப் பணியில் நியமனம் செய்யும் ஆணையைப் பிறப்பிக்கும் ஒரு காலகட்டத்தில், பார்ப் பனர்கள் தங்களுக்கே உரித்தான ஜாதீய ஆணவத் துடனும், கோவில்களில் உள்ள தங்களின் ஏகபோக ஆதிக்கம் எந்த வகையிலும் பறிபோய்விடக் கூடாது என்கிற பிடிவாதத்தின் அடிப்படையிலும் அவர்களின் ஆன்மீகக் குருவான சங்கராச்சாரியார், அரசியல் குரு வான சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) ஆகியோரின் அனுசரணையோடும், பரிந்துரைகளோடும் உச்சநீதிமன்றம் சென்று முடக்கினர்.

மீண்டும் அரசு ஆணைகள் பிறப்பிக்கும்போது, மீண்டும் உச்சநீதிமன்றம் சென்று முடக்குவதை தங்களின் பிழைப்பாகக் கொண்டுள்ளனர், செயல்பட்டும் வருகின்றனர்.

தங்களுக்கு இருக்கும் வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு பார்ப்பனர்கள் இடை இடையே முட்டுக்கட்டை போட்டாலும், அனைத்து ஜாதியினருக் கும் அர்ச்சகர் உரிமை கிடைக்கச் செய்யும் வரை திராவிடர் கழகம் ஓயப்போவதில்லை.

ஏற்கெனவே அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரையும் சேர்த்து 207 பேர்கள் பணியில் சேரத் தயாராகவே உள்ளனர். இத்தகு நிலையில், அர்ச்சகர்கள் பஞ்சகச்சம் கட்டியிருக்கவேண்டும். உச்சிக்குடுமி வைத்திருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறை ஆணை பிறப்பிப்பதன் நோக்கம் என்ன?

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம் நிறை வேறப் போவதில்லை - செயலுக்கும் வரப் போவதில்லை என்று முடிவு எடுத்துவிட்டார்களா? அப்படியே செயல்பாட்டுக்கு வந்தாலும் பார்ப்பனர்களைத் தவிர மற்ற ஜாதிக்காரர்களும்கூட பஞ்ச கச்சம்தான் கட்டவேண் டுமா? உச்சிக் குடுமியும் வைக்கவேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்படுமா?

உச்சிக்குடுமியும், பஞ்ச கச்சமும்தான் அர்ச்சகர் களின் அடையாளம் - அவை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று எந்த ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ளது? அப்படி சொல்லப்பட்டு இருந்தால் இதுவரை அதுபற்றி ஏன் அறிவுறுத்தப்படவில்லை - கட்டாயப்படுத்தப் படவில்லை? இந்தத் திடீர் ஞானோதயத்துக்கு என்ன பின்னணி?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறை பதில் அளிக்குமா? இந்து அறநிலையத் துறையின் இந்தச் சிந்தனை - முடிவு - போக்கு - உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைபற்றிய வழக்கில் நியாயமாக நடந்துகொள்ளுமா என்ற அய்யப் பாட்டை ஏற்படுத்தக் கூடியதல்லவா!

தைமுதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு முதல் நாள் என்ற சட்டத்தைப் புறந்தள்ளியது. விவேகானந்தர் இல்லத்தை 99 ஆண்டுகளுக்குக் குத்தகை விட்டது முதற்கொண்டு அ.இ.அ.தி.மு.க.வின் ஆட்சி பா.ஜ.க.வின் சாயலைக் கொண்டுள்ளது என்று கருத இடம் அளிக்கிறதே!


அண்ணா பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துவோர் யார்?
ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்ததற்காக வெற்றிச் சின்னமா? அல்ல - அது வெறிச் சின்னமே!
பி.ஜே.பி.
ராஜீவ் காந்தி கொலை: முக்கிய திருப்பம் எம்.கே. நாராயணன்மீது பார்வை!
தீபாவளியும் - அவதாரங்களும்!

ராஜீவ் காந்தி கொலை: முக்கிய திருப்பம் எம்.கே. நாராயணன்மீது பார்வை!



சென்னை, அக். 31- ராஜீவ் காந்தி படுகொலையில் முக்கிய வீடியோவை மறைத்ததன்மூலம் மத்திய உளவுப் பிரிவின்முன்னாள் இயக்குநரும், இன்றைய மேற்கு வங்க ஆளுநருமான எம்.கே. நாராயணன்மீது பார்வை திரும்பியுள்ளது.

சி.பி.அய். முன்னாள் அதிகாரி கே. ரகோத்தமன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவின் தலைமை விசாரணை அதிகாரி யாக இருந்தவர் கே.ரகோத்தமன். ராஜீவைக் கொல்ல நடைபெற்ற சதி: சி.பி.அய். ஆவணங்களில் இருந்து' (Conspiracy to Kill Rajiv Gandhi - From CBI files) என்ற புத்தகத்தில் அவர் இந்த பரபரப்பான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

சென்னை அருகே சிறீபெரும்புதூரில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

அவரது படுகொலைக்கு அடுத்த நாள் எம்.கே. நாராயணன் அன்றைய பிரதமரான சந்திரசேகருக்கு விடியோ ஆதாரம் தொடர்பாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

நாராயணனின் ரகசிய கடிதத்தில்...

ரகோத்தமன் தனது புத்தகத்தில் இணைத்துள்ள அந்தக் கடிதத்தின் விவரம்:
ராஜீவ் காந்தி பங்கேற்ற கூட்டத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மோசமாக இருந்தன. அங்கு தடுப்புகள் சரியாக அமைக்கப்படவில்லை. பொதுமக்கள் பகுதியிலிருந்து பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு யாரும் வருவதற்கு வாய்ப்புகள் இருந்தன.

கொலையாளி (தனு) பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு, ராஜீவ் காந்தி வரும்போதுதான் வந்தாரா அல்லது அவரை வரவேற்க நின்றிருந்தவர்களுடன் ஏற்கெ னவே இருந்தாரா என்பது குறித்து தெரியவில்லை.

இது தொடர்பான விடியோ ஆதாரம் இப் போது ஆய்வுசெய்யப்பட்டு வருகிறது. அந்த கொலையாளியை அடையாளம் காண்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன என்று அந்தக் கடிதத்தில் நாராயணன் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த விடியோ ஆதாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினரிடம் எம்.கே. நாரா யணன் தகவல் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார் ரகோத்தமன்.

பொதுக் கூட்டம் நடைபெற இருந்த இடத்துக்கு ராஜீவ் காந்தி வந்த பிறகே தனு பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வந்ததாக தமிழ்நாடு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறீபெரும்புதூர் பொதுக்கூட்ட நிகழ்ச்சியைப் படம் பிடிப்பதற்காக உள்ளூர் விடியோகிராபர் ஒருவரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நியமித்தி ருந்தனர். நீதிபதி வர்மா கமிஷன் இந்த விடியோ தொடர்பாக குறிப்பிட்ட பிறகே சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு இதுகுறித்து தெரியவந்தது. சிறப்பு புலனாய்வுக் குழுவின் பார்வைக்கு இந்த விடியோ கொண்டுவரப்படாமல் மறைக்கப்பட்டுவிட்டது என்று ரகோத்தமன் நிருபர்களிடம் கூறினார்.
நீதிபதி வர்மா கமிஷனின் ஆவணங்களில் இருந்து இந்தக் கடிதத்தைக் கண்டெடுத்து அவர் தனது புத்தகத்தில் இணைத்துள்ளார்.

நாராயணன் மறைத்தது ஏன்?

இந்த வீடியோ ஆதாரத்தை மறைத்தது தொடர் பாக எம்.கே. நாராயணன் மீது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையைத் தொடங்கியது. ஆனால், எங்கள் குழுவின் தலைவர் கார்த்திகேயன் இந்த விசாரணையை நடத்த அனுமதிக்கவில்லை என்றும் ரகோத்தமன் கூறினார்.

இது தொடர்பாக, சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் கார்த்திகேயனிடம் கருத்து கேட்டபோது, புத்தகத்தைப் படித்த பிறகே இந்த விஷயம் குறித்து எதுவும் சொல்ல முடியும் என்றார்.

மேற்கு வங்க ஆளுநர் எம்.கே. நாராயணனின் கருத்தை அறிவதற்காக அவரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் சென்றுள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

பி.ஜே.பி.


மத்திய அமைச்சரான சிறீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கவிஞர்கள் கூட்டம் ஒன் றில் பேசும்போது, கிரிக் கெட் வெற்றி படிப்படியாக அலுத்துப் போய்விடும்; இது நாளாக, நாளாக மனைவியின் வசீகரம் குறைந்துவிடுவதைப் போன்றதாகும் என்று வக்கிரப் புத்தியோடு உளறியது - பெரும் புயலைக் கிளப்பிவிட்டது.

பொதுவாகவே இது ஓர் இந்து மதச் சிந்தனை யாகும். இந்து மதத்தில் எந்த இடத்தில் கைவைத் தாலும் இந்த வக்ரம்தான் படம் எடுத்தாடும். இந்து மதக் கடவுள்கள்பற்றிய புராணங்களும், இதி கா சங்களும்கூட இவற்றைத் தான் தூக்கிப் பிடிக்கும். ஓம் என்று சொன்னால் ஆண் - பெண் சேர்க்கை என்று கூறி, அதற்கு ஏகப்பட்ட தத்துவார்த்த வண்ணங்களைப் பூசுவார் கள். அதே பாணியில் தான் மத்திய அமைச்சர் பேசி இருக்கிறார்.

இதனை அரசியல் படுத்த விரும்பிய யோக் கியப் பொறுப்பு(?) மிக்க பா.ஜ.க. என்ன செய்தது தெரியுமா? அவனை அனுப்பாதே - அவன் கலகம் செய்துவிடுவான் - என்னை அனுப்பு செருப்பால் அடித்து வரு கிறேன்! என்று சொன்ன வன்போல நடந்துகொண் டுள்ளது பி.ஜே.பி.

அமைச்சரைக் கேலி செய்வது என்ற பெயரால் இந்தி திரைப்பட நடிகை ராக்கி சவந்து என்ப வரும், அமைச்சர் ஜெய்ஸ் வாலும் கல்யாண கோலத் தில் இருப்பதுபோன்ற காட்சியைக் கணினி மூலம் கிராபிக்ஸ் செய்த படத்தை சுவரொட்டி களாக அச்சிட்டு, கான் பூர் நகரம் முழுவதும் பி.ஜே.பி.யினர் ஒட்டி தங்களின் வக்கிர வழி சலை வெளிப்படுத்திக் கொண்டுவிட்டனர்.

தன்னை அவமானப் படுத்திய, அலங்கோல மாக சுவரொட்டி அடித்து ஒட்டியவர்கள்மீது கடு மையான விமர்சனங் களை முன்வைத்துள்ளார் நடிகை ராக்கி சவந்து..

எந்த அரசியலிலும் ஈடுபடாத என்னை ஏன் இப்படி அவமானப்படுத்து கிறீர்கள்? என்பதோடு நில்லாமல், பி.ஜே.பி.யில் அதிகாரபூர்வ உறுப்பினர் களாக ஏராளமான நடி கைகள் இருக்கிறார்களே - ஹேமாமாலினி இல் லையா? ஸ்மிருதி ராணி இல்லையா? அவர்கள் படத்தை இணைத்துப் போடவேண்டியதுதானே என்று வெடித்துக் கிளம்பிவிட்டார்.

அரசியலின் தகுதி எந்த அளவுக்குச் சாக் கடையாகி விட்டது; அதுவும் தார்மீகப் பண்பு கள் பற்றி வக்கணை பேசும் பி.ஜே.பி. எந்த அளவுக்கு வக்கிர மலக் குட்டையாகி இருக்கிறது பார்த்தீர்களா?   - மயிலாடன்

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...