Wednesday, June 6, 2012

மீண்டும் நுழைவுத் தேர்வா? தமிழ்நாடு முழுவதும் 12 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்!


தமிழர் தலைவர் விடுத்துள்ள மிக முக்கிய அறிக்கை


இந்தியா முழுவதற்கும் ஒரே கல்விக் கொள்கை, ஒரே நுழைவுத் தேர்வு என்பது போன்ற கூட்டாட்சித் தத்துவத்திற்கே உலை வைக்கும் திட்டத்தை மத்திய மனித வள அமைச்சகம் செய்வதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கை வருமாறு:
கல்வி என்பது முன்பு மாநிலப் பட்டியலில் (State List) அரசியல் சட்டக் கர்த்தாக்களால் வைக்கப் பட்டது - நீண்ட ஆலோசனைக்குப் பிறகு.
ஆனால், எந்தவித கலந்தாலோசனைக்கும் இடம்தராது, நெருக்கடிகால நிலை அமுலில் இருந்தபோது, 1976 இல், இது திடீரென்று நாடாளுமன்றத்திலோ, மாநிலங்கள் கருத் தறிந்தோ - இது ஏதும் நடைபெறாமல், அது பொதுப் பட்டியலுக்கு (Concurrent List) மாற்றப் பட்டது.
உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்பட்ட பிறகும்...
இப்போது இந்தியா முழுவதற்கும் ஒரே கல்விக் கொள்கை, ஒரே நுழைவுத் தேர்வு என்பது போன்ற கூட்டாட்சித் தத்துவத்திற்கே உலை வைக்கும் திட்டத்தை மத்திய மனித வள அமைச்சகம் செய்வது தவறான நிலைப்பாடாகும். மறைமுகமாக மாநிலப் பட்டியலை மத்தியப் பட்டியலுக்குக் கொண்டுவரும் மகாசூழ்ச்சியாகும்.
ஏற்கெனவே தமிழ்நாடு அரசு - தி.மு.க. அரசு எதிர்த்து அதை ஒழித்து தனி ஏற்பாட்டினை சட்ட ரீதியாக செய்தும், அது உச்சநீதிமன்றத்தால்கூட ஏற்கப்பட்டது.
கபில்சிபலின் பிடிவாதம்
இப்போது கபில்சிபல் பிடிவாதமாக இதை அறிவித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. நுழைவுத் தேர்வை ரத்து செய்வதன் மூலமாகத்தான் தமிழ்நாட்டில் பெற்றோர்கள் நிம்மதி அடைந்தனர்; கிராமப்புற மாணவர் களுக்கும், ஏழை, எளிய மாணவர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன!
மீண்டும் இந்த ஏற்பாட்டின்மூலம் ஒருவகை பன்முக கலாச்சாரம், மொழி, கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றம் இவைகளுக்கு ஆப்பு அடிக்கப்படுகிறது!
தமிழக முதலமைச்சரும் எதிர்த்துள்ளார்
இதனை முழு மூச்சாக எதிர்த்து தடுத்து நிறுத்தவேண்டியது - கட்சி வேறுபாடுகளைத் தாண்டிய முக்கிய கடமையாகும்!
தமிழ்நாடு அரசுக்கும் இதில் முக்கிய கடமை உள்ளது. முதலமைச்சர் அவர்களும் இந்த நுழைவுத் தேர்வு ஏற்பாட்டை எதிர்த்துள்ளார் எனினும், இப்போது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.
எனவே, உடனடியாக அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும், கல்வியாளர்களும் இந்தப் பிரச்சினை - தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தைக் கெடுக்கும் இந்த ஏற்பாட்டினை - கையில் எடுத்து, தங்களது பலத்த எதிர்ப்பைக் காட்டி, இந்தப் புதிய சதித் திட்டத்தை ஒழிக்க முன்வரவேண்டும்!
திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
இதைக் கண்டித்து வருகிற 12.6.2012 செவ்வாய் அன்று மாவட்டத் தலைநகரங் களில் திராவிடர் மாணவர்கள், இளைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்நடத்துவார்கள்.
ஒத்த கருத்துள்ளவர்களும் இதில் இணைந்து கொள்ளலாம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Tuesday, June 5, 2012

திரைப்பார்வை - வயசுப் பிள்ளைகளோடு பெற்றோரும் பார்க்க வேண்டிய வழக்கு எண் : 18/9


- சமா.இளவரசன்
தப்பித்தவறி ஒரு நல்ல படம் வந்துவிட்டால், அதை மக்கள் ரசித்து வெற்றி தந்துவிட்டால், அதைத் தொடர்ந்து அது டிரண்ட் என்று உருவாகி எங்கே நமது கமர்சியல் படங்களுக்கு வரவேற்பு இல்லாமல் போய்விடுமோ என்ற பயம் எப்போதுமே தமிழ் சினிமா வியாபாரிகளுக்கு உண்டு. திடீரென்று நடிகர்கள் நல்ல படங்களில் நடிக்கத் தொடங்கி அது தொடர்ந்து விட்டால் என்னாவது? நமக்குத் தெரிந்த மசாலாக்களை எப்படி மக்கள் மண்டையில் அரைப்பது என்ற கவலையெல்லாம் அவர்களை வாட்டி வதைக்கும். அதனால் தான் 1987களில் ரஜினியும், கமலும் நல்ல படங்களைத் தேடி கொஞ்சம் நகர்ந்த பொழுதும், பின்னாளில் விக்ரம் அது போல் செய்யத் தொடங்கியபோதும் தெளிவாக அவர்களை கமர்சியல் பக்கம் நகர்த்தி வைத்துக் கொண்டது. இந்தச் சதிச் சிந்தனையின் கோரத்தை நம்மால் வழக்கு எண் 18/9  திரைப்படத்தின் மீதான கருத்துப் பரப்பலில் புரிந்துகொள்ள முடிந்தது. மாற்றுசினிமாவை நோக்கிய தடத்திலும், மக்கள் ரசிக்கத்தகுந்த சில இனிப்புகளைத் தடவி தெளிவாக மக்களைச் சேரும் விதத்தில் வழங்குவதிலும், அதனையும் மிகக் குறைந்த செலவில் படமாக்கிக் காட்டுவதிலும் திறமையோடிருக்கும் பாலாஜி சக்திவேலின் மீதும், அவரது படைப்புகளின் மீதும் அத்தனை வன்மம் இருக்கிறது திரைப்படத்தைக் கலையாகப் பார்க்காத தமிழ் சினிமா வியாபாரிகளுக்கு!
கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக இப்படம் ஒன்னும் விக்கல போலிருக்கே..., தேறலையாமே, படு மோசமா இருக்காம்.. சுத்தமா தேறலையாம் செகண்ட் ஹாஃப்.. காசை வீணடிச்சிட்டாங்க என்றும், படம் வெளிவந்து மக்கள் வரவேற்பைப் பெற்ற பிறகும் கூட அதெல்லாம் ரொம்ப நாள் ஓடாதுங்க... என்றும் இவர்கள் செய்த பிரச்சாரத்தை தேர்தல் பிரச்சாரத்தில் கூடப் பார்க்க முடியாது. இந்த வியாபாரிகள் வீசிய சேறுகளையெல்லாம் பற்றி கவலைபடாமல் தன் பாணியில் பிறருக்கும் வழிகாட்டும் வண்ணம் படம் தந்திருக்கிறார் வழக்கு எண் 18/9 -ன் இயக்குநர்.
*****
அன்றாடம் செய்தித்தாள்களில் பார்ப்பதனால் கிட்டத்தட்ட சர்வ சாதாரண நிகழ்வாகிவிட்ட செய்திகளைத் தான் உறைக்கும்படி சொல்லியிருக் கிறார் பாலாஜி சக்திவேல். அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றினுள் ஆசிட் வீச்சினால் கொடூரமாகத் தாக்கப்பட்ட ஓர் இளம்பெண் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்படுகிறாள். அவளுக்கு சிகிச்சை நடந்துகொண்டிருக்கும் அதே நேரம் அப்பெண்ணின் தாயாரிடம் விசாரணை செய்கிறது காவல்துறை. பிளாட்பாரக் கடையில் வேலை பார்க்கும் ஒரு பையன் தான் அடிக்கடி தன் பெண்ணிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருக்கிறான் என்று அந்த பெண்ணின் தாய் சொல்ல, அவனை மெதுவாக அழைத்து விசாரிக்கத் தொடங்குகிறது போலீஸ். நடந்தது என்னவென்றே தெரியாத வேலு என்ற அந்த இளைஞன் தன் வாழ்க்கையைச் சொல்ல படம் விரிகிறது.
பிளாட் போட்டு விற்கப்பட்டுவிட்ட விவசாய நிலங்களுக்கு மத்தியில்,  கடன் வாங்கி விவசாயம் செய்து நட்டப்பட்ட ஒடுக்கப்பட்ட ஏழை விவசாயியான தன் தந்தையின் கடனை அடைப்பதற்காக குழந்தைத் தொழிலாளியாக வட இந்தியாவில் பணியாற்றியவன் வேலு. பெற்றோர் இறந்த தகவலும் கூட தன்னிடம் மறைக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டதை அறிந்து அங்கிருந்து தப்பி, சென்னை வந்து சேர்கிறான். ஒரு பாலியல் தொழிலாளியின் உதவியுடன் தெருவோர சாப்பாட்டுக் கடையில் வேலைக்குச் சேர்ந்து அங்கேயே தங்கி, தன் பிழைப்பை நடத்தும் வேலுவுக்கும், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீட்டுவேலைக்குச் செல்லும் இளம்பெண் ஜோதிக்கும் நிகழும் யதார்த்தமான மோதலும், பின்னர் ஜோதியின் நற்குணம் கண்டு வேலுவுக்கு ஒரு தலையான காதலும் உருவாகிறது. எதற்காக அழைக்கப்பட்டோம் என்றே தெரியாமல் தன்னுடைய வாழ்க்கையை காவல்துறை விசாரணையில் சொல்லிவிட்டு வேலு காத்திருக்க, அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பள்ளி மாணவி ஆர்த்தி, இவ்வழக்கு தொடர்பாக, தான் சொல்ல வேண்டியிருப்பதாகக் கூறி சில தகவல்களைச் சொல்லுகிறாள்.
இப்போது கதை பன்னிரண்டாம வகுப்புப் படிக்கும் ஆர்த்தி, அவள் இருக்கும் குடியிருப்பில் வசிக்கும் மற்றொரு இளைஞன் தினேஷ் ஆகியோரை மய்யப்படுத்திச் செல்கிறது. தனியார் பள்ளி உரிமையாளரான பெண் ஒருவரின் மகன் தினேஷ், தனது பகட்டு, பணக்காரத்தனம் இவற்றைக் காட்டியும், செல்போன் பரிசளித்தும் ஆர்த்தியை மடக்க முயற்சிக்க, உடன் படிக்கும் வட இந்திய மாணவியோ, பணக்காரப் பையன்னு சொல்ற... இப்போதைக்கு ஓகே சொல்லு.. பிடிச்சிருந்தா கண்டினியூ பண்ணு... இல்லைன்னா கட் பண்ணிடு என்று அவனைக் காதலிக்கச் சொல்லி தூண்டிவிட்டும் மாட்டாமலிருக்கிறாள் ஆர்த்தி. பின்னர் தனிமையில் கடற்கரைக்கு அழைத்துச் சென்று, தான் நேர்மையானவன் என்பது போல் தினேஷ் செய்யும் பாவனைகளில் மயங்கும் ஆர்த்தி, தானும் காதலிப்பதாகச் சொல்ல யத்தனிக்கிறாள். அப்போது தினேஷின் செல்பேசியில் தான் ஆபாசமாகப் படம் பிடிக்கப்பட்டிருப்பதும், அதேபோல் பல காட்சிகள் இருப்பதையும் கண்டு நடுங்கி, அவனிடமிருந்து உடனடியாக விலகுகிறாள். அவளிடம் தன்னுடைய செல்பேசியின் நினைவு அட்டை மாட்டி விட்டதையும், தன்னைப் பற்றி அவள் தெரிந்து கொண்டுவிட்டாள் என்பதையும் உணரும் தினேஷ் அவளைக் கொல்ல முயற்சிக்கிறான். ஓரிரு முயற்சிகளில் அவள் தப்பிவிட, ஆசிட் வீசி தாக்குகிறான். இந்தத் தாக்குதலில் தான் ஆர்த்திக்கு பதிலாக தவறுதலாக ஜோதி மாட்டிக் கொள்கிறாள்.
இந்தத் தகவல்களை ஆர்த்தி காவல்துறையிடம் விவரித்து தினேஷ் தான் உண்மைக் குற்றவாளி என்பதை எடுத்துக் கூறுகிறாள். ஆனால் அரசியல்வாதிகளின் அனுசரணையும் பணமும் படைத்த தினேஷின் அம்மாவிடமிருந்து பணத்தைக் கறந்து, தினேஷை விடுவிக்கத் திட்டமிடுகிறார் காவல்துறை அதிகாரி குமரவேல். ஜோதிக்கு ஏற்பட்டுள்ள தாக்குதலைக் கண்டு கதறும் வேலுவிடம், ஜோதிக்கு மருத்துவம் செய்ய ஆகும் செலவை தினேஷிடமிருந்து தான் பெற்றுத் தந்து அவளைக் குணப்படுத்துவதாகவும், அதற்குப் பிரதிபலனாக குற்றத்தை வேலு ஒப்புக் கொள்ளவேண்டும் என்று நயவஞ்சகமாகப் பேசி வேலுவைக் குற்றவாளியாக்கி சிறைக்கு அனுப்பிவிடுகிறார் காவல்துறை அதிகாரி.
தமிழ் சினிமாவின் கமர்சியல் படங்கள் என்று சொல்லப்படுவனவற்றிற்கு ஏற்ற கதை. ஒன்றுக்கு இரண்டாகக் காதல். அதுவும் இளமை துள்ளும் பள்ளி வயதினரின் காதல். போதாக்குறைக்கு செல்பேசியில் ஆபாசப்படம், கிளுகிளு எம்.எம்.எஸ். என்று கவர்ச்சிக்கும் பஞ்சமில்லாத கதைக் களம். இதை வைத்துக் கொண்டு அள்ளிவிடலாம் காசை! அவிழ்த்துவிடலாம் அனைத்தையும்! அதற்குக் காரணம் இருக்கவே இருக்கிறது கதையில்! கதைக்கு தேவையென்றால் நான் எப்படியும் நடிப்பேன் என்று நடிகையையும் பேச வைத்து விளம்பரம் செய்துவிடலாம். இத்தனை வசதிகள் இருந்தும் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற இடத்தில் தான் முழுநிறைவான கைத்தட்டலைப் பெறுகிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். அவரது இந்த முயற்சிக்கு தன்னுடைய முதலைப் போட்டு, பொறுமையாகக் காத்திருந்து நல்ல படத்தைத் தயாரித்திருக்கும் இயக்குநர் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு நிச்சயம் நெஞ்சார்ந்த பாராட்டுதல்களைச் சொல்லவேண்டும். ஒரு படத்தில் சமூகத்திற்கு தேவையான இத்தனை செய்திகளா? பட்டா போடப்படும் விவசாய நிலங்கள், கடன் தொல்லையால் சிறுநீரகத்தை விற்கும் அவலம், குழந்தைத் தொழிலாளர் கொடுமைகள், அழிந்து வரும் கூத்துக்கலை, நசிந்து வரும் கூத்துக் கலைஞர்கள்,  இளம் பிராயத்தினரின் பாலியல் ஈர்ப்பு, கையில் செல்பேசியுடனே அலையும் பிஞ்சுகளின் மனதில் தோன்றும் விபரீதம், செல்பேசி அவசியம் எனக் கருத வைக்கும் உலகமயமாக்கல் உருவாக்கியிருக்கும் நடுத்தரவர்க்க மனநிலை, காதல் என்ற கவர்ச்சியான வார்த்தை, அது உருவாக்கும் மாயத்தோற்றம், தனியார் பள்ளிகளின் கல்விக் கொள்ளை, அரசியல் ஆதிக்கம், எளிய மக்களின் மீது பொய் வழக்குகளப் போட்டு அவர்களைக் குற்றவாளிகளாக்கும் காவல்துறையின் கேடுகெட்ட போக்கு... இன்னும் துளித்துளியாய் நறுக்கென்று ஊசி போல் எத்தனை செய்திகள்! ஆனால் இதில் எதுவும் திணிக்கப்பட்டது போல் தெரியாமல், கருத்து சொல்வது போல் அமையாமல் வெகு இயல்பாக நம் மனதில் பதியவைக்கும் வண்ணம் உருவாக்கியிருப்பதில் தெரிகிறது திரைக்கதையின் வலு. பள்ளிக் கொள்ளை பெண்ணின் அறையில் பின்புறத்தில் இருக்கும் சாமியார் நித்தியின் படம் மங்கலாகக் காட்டப்பட்டாலும், ஒரே புகைப்படத்தை வைத்து அந்த கதாபாத்திரத்தின் தன்மையை உணர்த்திவிட்டார்கள். காதலை மறுக்கும் பெண்ணா? அடிறா அவள... உதை டா அவள.. விட்றா அவள... என்றோ, வேணாம் மச்சான்... வேணாம் இந்த பொண்ணுங்க காதலு... என்றோ தண்ணியடித்து திட்டிவிட்டு மட்டையாவதும், ஒய் திஸ் கொலவெறி என்று பெண்ணின் மீது குற்றங்களைச் சுமத்தித் திரிவதும் பெண்களைக் காயப்படுத்தி இளைஞர்களைக் குஷிப்படுத்த, (வேறு வழியில்லாமல்) திரைத்துறையினர் செய்யும் மினிமம் ஆசிட் வீச்சுகள். ஆனால் தமிழகத்தின் அன்றாட செய்திகளில் காதலை மறுத்த பெண்ணுக்குக் கத்திக்குத்தி, கழுத்தறுப்பு, ஆசிட் வீச்சு என்று வருபவை எல்லாம் கொஞ்சம் சீரியஸ் அட்டெம்ப்ட், அவ்வளவுதான். மற்றபடி இவற்றுக்கும் அவற்றுக்கும் என்ன வித்தியாசம்? காதலிப்பதும், காதலை மறுப்பதும் ஏன் என்பதையோ, அது தனிப்பட்ட விருப்பம் என்பதையோ, அதற்கான காரணிகள் குறித்தோ என்றுமே தமிழ் சினிமா பேசியதில்லை. அவற்றை நாமும் இளைஞர்களுக்கு சொல்லித் தருவதில்லை. இப்போதெல்லாம் 25, 30 வயதினரின் காதல், கல்லூரிக் காதல்கள் கூட சொல்லபப்டுவதில்லை படங்களில். அதெல்லாம் பழையதாகிவிட்டது.
பள்ளிக் காலத்து காதல் தான்! அது ஏற்படுத்தும் விளைவு எப்படியிருக்கும் என்பதை நாம் செய்திகளின் வழியாக உணரமுடிகிறதல்லவா? இந்த அவலங்களையும், அது குறித்து நாம் கொள்ள வேண்டிய கவலைகளையும் தான் எடுத்துக் காட்டுகிறது இந்தப் படம். மண்ணின் வாழ்க்கையைப் பதிவு செய்கிறேன். மண்ணின் மைந்தர்களைப் பதிவு செய்கிறேன் அந்தந்த பகுதிகளின் உயர்ஜாதி என்று தங்களை நம்பிக் கொண்டிருப்போரின் வாழ்க்கை தான் இது வரை தமிழ் சினிமாவில் பதிவுசெய்யப்பட்டி ருக்கிறது. அதேபோல சென்னையைப் பதிவு செய்கிறேன்.. வட சென்னை மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்கிறேன் என்று வெறும் கத்தி, கபடா, சைக்கிள் செயின் அளவிலான கழுத்துச் சங்கிலிகளைப் பதிவு செய்துவிட்டு, சென்னை மீதான பயத்தைத் தோற்றுவித்திருக் கிறார்கள் தமிழ் சினிமாக்காரர்கள். ஆனால் அவர்கள் பதிவு செய்யத்தவறியது சென்னையில் அருகருகே அமைந்திருக்கும் இரு வேறுபட்ட மக்களின் வாழ்நிலை. பிளாட்பார வாழ்க்கை என்பது சென்னையின் மிக முக்கியமான அங்கம். தமிழகத்தின் ஏதேதோ பகுதிகளிலிருந்து வேலைக்காக வந்து, பிளாட்பாரங்களையே வசிப்பிடமாகக் கொண்டவர்களும், அதே பிளாட்பாரங்களையொட்டியே பளிங்கு மாளிகைகளுக்குள் சொகுசாக வாழ்பவர்களும் நிறைந்த விசித்திரக் கலவைதான் சென்னை. தனது காதல் திரைப்படத்தில் மதுரையினை வெகு இயல்பாக பதிவு செய்த இயக்குநர் பாலாஜி சக்திவேலின் வழக்கு எண்: 18/9 சென்னையின் இந்த விசித்திரக் கலவையைப் படமாக்கியிருக்கிறது. ஆனால் கடந்த படத்தைப் போலவே களத்தைப் பதிவு செய்தல் என்பது இயக்குநரின் முக்கியமான குறிக்கோளாக இல்லாவிட்டாலும், இயல்பான கதையோட்டத்தினாலும், அதற்கேற்ற பின்புலங்களைத் தெளிவாக உருவாக்கியிருப்பதாலும் தானாகவே களம் சரியாகப் பதிவாகிவிடுகிறது.
திரைப்படம் என்றாலே பலமுறை பார்த்த முகங்களுக்குள் புதிய கதாபாத்திரங்களைப் பொருத்திக் கொண்டு பார்க்கும் கஷ்டம் இருக்கும். ஆனால் நாயகன், நாயகி தொடங்கி படத்தின் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் புதுமுகங்களைத் தேர்வு செய்து, அவர்களைத் திறம்பட நடிக்கவும் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நடிகரும் அவர்களுக்குரியதை தெரிந்து செய்திருக்கிறார்கள். குறிப்பாக கூத்துக் கலைஞன் சின்னச்சாமியாக வரும் சிறுவன், இன்ஸ்பெக்டர் குமாரவேல், ஜோதியின் தாய், பாலியல் தொழிலாளி ரோஸி என்று துணைக் கதாபாத்திரத் தேர்விலும் அத்தனை நேர்த்தி. படத்தை இன்றைய புதிய தொழில்நுட்ப வசதிகளோடு டிஜிட்டல் முறையில் தெளிவாக பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன், உறுத்தாத பாடலையும் பொருத்தமான பின்னணி இசையையும் வழங்கிய பிரசன்னா ஆகியோரோடு, படத்தொகுப்பாளராக அறிமுகமாகியிருக்கும் கோபி கிருஷ்ணாவும் படத்தின் மிரட்டலான புதுமையான ஆக்கத்திற்கு பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். பாலாஜி சக்திவேல் என்ற இந்த இயக்குநரின் மீது தமிழ்த்திரை ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கை உண்டு. காதலைக் கொண்டாடியவர்கள் இந்த வழக்கு எண்ணையும் நம்பிக்கையோடு எதிர் கொண்டார்கள் என்பதைத் தான் இப்படத்தின் வெற்றி நமக்கு உணர்த்துகிறது. நல்ல படங்களைத் தர போராடலாம்; காலம் எடுத்துக் கொள்ளலாம்; மக்கள் காத்திருப்பார்கள் என்பதை நமது படைப்பாளிகளுக்கும் இப்படம் சொல்கிறது.
ஊருக்கு உழைச்சு உழைச்சு வீணாப்போனது தான் மிச்சம் என்று ஜோதியின் தந்தை குறித்து அவளது தாய் சலித்துக் கொள்ளும்போது, தந்தையின் படத்துக்கருகில் கம்யூனிசப் புத்தகங்கள் காட்டப்படுகின்றன. இது எதற்கு என்று தொடக்கத்தில் ஒன்றும் புரியாதவர்களுக்கு, கடைசியில் ஜோதியின் செயலுக்கு அடிப்படை உணர்வான போராட்ட குணத்துக்குக் காரணம் இதுவே என்பதை உணர்த்துவதும் இயக்குநரின் சிந்தனையை நமக்குக் காட்டுகிறது. அதைவிட இன்றைய சூழலில் ஏன் முற்போக்குக் கருத்துகளும், போராட்ட உணர்வும் அடித்தட்டு மக்களுக்கு அவசியமாகிறது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். குறிப்பாக பதின் பருவத்தில் இருக்கும் பள்ளி மாணவ, மாணவிகளிடம் இவ்விசயங்களைப் பேசத் தயங்கும் பெற்றோர் இருக்கும் நம் சமூகத்தில் அவசியம் அழைத்துச் செல்ல வேண்டிய படம். இனிமேலாவது அத்தகைய மௌனங்களைக் கலைத்து விட்டு அவர்களிடம் இயல்பாகப் பேசிட வேண்டும் என்று நேரடியாகச் சொல்லாவிட்டாலும் அதன் அவசியத்தை உணர்த்தும் படம்.

திராவிட இயக்கம் 100 பகுதி-1

சந்தி சிரிக்கும் சாமியார்கள்


- இளையமகன்
மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்
திண்ணகத் திருவாலலாயருள்
பெண்ணகத்து எழில் சாக்கியர் பேயமண்
பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே!  - -
- திருஞானசம்பந்தர்
கற்பழிக்க அருள்வேண்டிய திருஞானசம்பந்தரால் 1400 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டதாக கூறப்படும் மதுரை ஆதீன மடத்தில்தான் சர்ச்சை சுழல்கிறது. ஏன் இந்த சர்ச்சை? சிடி புகழ் நித்தியானந்தா  மதுரை ஆதீனத்தின் 293வது தலைவராக  நியமிக்கப்பட்டிருக்கிறார். நியிமித்தது  292வது நடப்பு மதுரை  ஆதீனம்.  இந்த அறிவிப்பையடுத்து நித்தியானந்தா 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். திருவாளர் 292 வது ஆதினமோ பதிலுக்கு தங்கச் செங்கோல் வழங்கி, நித்திக்கு தங்க கிரீடத்தையும் சூட்டினார்.  அதற்கு பிறகு பேட்டியளித்த மதுரை  ஆதீனம் அருணகிரி, திருஞான சம்பந்தரால் 1500 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட மதுரை  ஆதீனத்தை, எனக்குப் பிறகு யார் கண்ணியமாக(!) கண்காணிக்கப் போகிறார்கள் என்ற கவலையில் பல நாட்கள் தூக்கமின்றி தவித்தேன். அப்படி சிந்தனையுடன் ஒரு நாள் இரவு தூங்கியபோது, சிவபெருமான் என் கனவில்  தோன்றி, நித்தியானந்தாதான் உனக்கு சரியான வாரிசு என்று சொன்னார். அதன்பிறகு பெங்களூரு ஆசிரமத்திற்கு வந்து பழகிப்பார்த்தேன்; அவரும் என்னை மதுரையில் வந்து பார்த்தார். அவருடைய ஆசிரமத்தில் ஆண்கள், பெண்கள் அனைவரும் தங்களை மறந்தபடி ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். நானும் நேற்று அவர்களோடு சேர்ந்து  ஆடினேன். அடடா ஆதீனமே  ஆடுதே என ஆச்சர்யமாக பார்த்தார்கள். இப்படித்தான் எலோரும் ஜாலியாக இருக்க வேண்டும். சொத்துக்களை நிர்வகிப்பது குறித்து பேசுகையில் 1250 ஏக்கர் நிலத்தையும், கோவில்களையும் நித்தியானந்தாவே நிர்வகிப்பார். எனவே நீங்கள் அனைவரும் அவரை  ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்தா ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் என்று அழைக்க வேண்டும் என்றிருக்கிறார். (6.5.12 ஜூனியர் விகடன்)

உழைத்து, உழைத்து ஓடாய் போனவர்கள் வாழும் நாட்டில். வறுமைக்கு வாழ்க்கைப் பட்டவர்களை பெரும்பான்மையாக கொண்டு வாழும் நாட்டில், இன்னும் மக்களை சேரியில் இருத்தி வைப்பதும், வாயில் மலம் திணிப்பதும், மலம் அள்ளுவதற்கென்றே ஒரு குறிப்பிட்ட சாதியார்களை மட்டும் கட்டாயமாக பணிக்கும் இந்த நாட்டில் கோடியாய் பணப்பரிமாற்றம் நடக்கிறது, மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப் பட்டு யார் கண்காணிப்புமின்றி கைமாறுகிறது. இதைக் குறித்து தட்டிக்கேட்க வக்கில்லாதவர்கள், சைவ வேளாளர் சமூகத்தை சார்ந்தவர்தான் மடத்திற்கு வரவேண்டும், நித்தியானந்தா சைவவேளாளர் இல்லை என்கிறார் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் தலைவர் கணபதி சந்தானம். இன்னொருவர் நித்தியானந்தா மண்டையிலிருந்து மயிரை மழிக்கவில்லை. ஆகையால் அவர் தகுதியற்றவர் என்கிறார்.
இந்துக்கள் அனைவரும் ஒரே சமூகம் என்பதுபோலும், சாதிய ஏற்றத்தாழ்வுகளை கயமைத்தனத்தோடு மறைத்துவிட்டு கிறித்துவ, இஸ்லாமியர், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக வன்மத்தை வளர்த்தே அரசியலில் சுகம் காண துடிப்பவர்கள், புராணங்கள்  முழுக்க ஆபாச குப்பைகளை வைத்துக் கொண்டும், ஒழுக்க கேட்டையே பண்பாடாய் வைத்துக் கொண்டு ஊருக்கு ஒழுக்கம் கற்பிக்க முனையும் இந்து மதவெறி அமைப்புகளுக்கு நித்தியானந்தா தொண்டையில் சிக்கிய முள்ளைப்போல பெரிய இடைஞ்சலாக இருந்திருக்க வேண்டும். பெரிய மனப்போராட்டத்தை தந்திருக்க வேண்டும். இல்லையென்றால், அயோத்தியில் இராமர் பாலம் கட்டும் அதிஉயர்(!) பிரச்சினையை பற்றி பேசிய வாய்கள், மதுரை ஆதீனமாக மிகப்பொருத்தமாக நித்தியானந்தா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு  இத்தனை  எதிர்ப்புகள் பதிவாகியிருக்காது.  இந்து மக்கள் கட்சி நித்தியானந்தாவை மதுரை ஆதீன பதவியிலிருந்து கீழிறக்கும் வரை போராடப் போவதாக அறிவித்திருந்தது. இன்னும் கூடுதலாக மதுரை மடத்திற்குள் புகுந்து சிவனை வழிபடுவோமென்று வேறு எச்சரிக்கை(!) செய்திருக்கின்றனர். இதைக்கண்டு சீற்றம் கொண்டோ, சிறிய/பெரிய அளவில் பணம் பெற்றோ கொஞ்சமும் வெட்கமின்றி தென்னாடு முன்னேற்ற கழக தலைவர் சரவணன் என்பவர், நித்தியானந்தா நியமனத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது, அவரின் நியமனத்தை எதிர்த்து பேரணி நடத்துபவர்களுக்கு, எதிராக நான் பேரணி நடத்துவேன் என்று முனங்கியிருக்கிறார்.
தொலைக்காட்சிகளிலெல்லாம் தமிழ், தமிழ் என்று முழங்கும் நெல்லை கண்ணன் நித்தியானந்தா நியமனத்தை தடைச்செய்ய உயிரை கூட  கொடுப்பேன் என்கிறார். யாரும் இது சமூக பற்று  என்று கொள்ள வேண்டாம். இந்த சீற்றத்திற்கான காரணம் சைவ சாதி வெறிதான். இதுபோதாதென்று அங்கங்கு மடங்கள் என்னும் கடைவிரித்து தமிழ் வளர்ப்பதாய் கூறிக் கொண்டு தொப்பை வளர்த்து சொகுசாய் வாழும் அனைத்து மடாதிபதிகளின் கூட்டம், நித்தியானந்தாவை மடாதிபதியாக நியமனம் செய்ததை, 10 நாளில் திரும்பப் பெற வேண்டும் என்கிறது. இதற்கெல்லாம் அசராமல் பதிலளித்த நித்தியானந்தா, என் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய ஆதீனங்கள் அவர்களுடைய அறையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ரகசிய கேமராக்கள் வைப்பார்களா? நான் அதை வைக்க தயார். அப்போது தெரியும் பாலியல் குற்றச்சாட்டில் யார் சிக்குகிறார்கள் என்று பார்ப்போம்.
மக்கள் சொத்தை கொள்ளையடிக்கிறார்கள் என்றுதான் நீதிகட்சி 1930களில் பல கோவில்களை அரசுடைமையாக்கியது. இன்று வீடியோ கண்காணிப்பில்லாமல்தான் இந்த மடங்களின் போலி புனிதம் காக்கப்படுகிறது என்று சொல்லாமல் சொல்கிறார் நித்தியானந்தா.
வழக்குகளிலிருந்து தப்பிக்கவே இந்த செட்டப்
நித்தியானந்தாவின் நியமனத்தின் மீது தொடர்ந்து விமர்சனம் வரவும் அருணகிரியார் ஒரு பேட்டியளித்திருந்தார், அதில், ஆதீனமாக உள்ள நித்தியானந்தா இனிமேல் கோர்ட், போலீஸ் நிலையங்களுக்கு செல்லக்கூடாது. செல்லவும் மாட்டார். அவர்மீது உள்ள பாலியல் புகார் பற்றி யாரும் பேசக்கூடாது என்று கூறியுள்ளார்.  ஆக, தன் மீதான வழக்குகளிலிருந்து தப்பிக்கவே இப்படியான நியமனத்தை வலிந்து நித்தியானந்தா பெற்றிருப்பதாக யூகிப்பது தவறாக இருக்க முடியாதென்றே தோன்றுகிறது.
மேற்சொன்ன நித்தியானந்தா எதிர்ப்புக்கெல்லாம் ஆதரவாக பேரதிர்ப்பை ஜகத்குரு ஜெயேந்திரர் தெரிவித்திருந்தார்.
ரஞ்சிதா என்ற பெண் எப்போதும் நித்தியானந்தாவுடன் உள்ளார். அவர் கூடவேதான் இருப்பேன்னு சொல்லி கூடவே இருக்காங்க. இதுவும் ஆன்மிகத்திற்கு எதிரானது. திருஞான சம்பந்தர் வழியில் வந்த பெருமைவாய்ந்த மடத்திற்கு நித்தியானந்தா, ரஞ்சிதாவுடன் வருவது பெருத்த அவமானம். ரூ.1 கோடி லஞ்சமாக கொடுத்தே நித்தியானந்தா முடி சூட்டிக்கொண்டார். எனவே ஆதின மடத்தில் இருந்து நித்தியானந்தாவை உடனே வெளியேற்ற வேண்டும்.
கொஞ்சம் கூட வெட்கமேயில்லாமல் தன் மீது பாலியல் புகார் உள்பட சங்கர் ராமன் கொலை வழக்கு கூட உள்ளது, இந்த அயோக்கியத்தனங் களுக்கெல்லாம் சீனியர்  என்ற உணர்வேயில்லாமல் என்னை விடுத்து நித்தியானந்தாவை எப்படி தேர்ந்தெடுக்கலாமென்ற கோபம் வந்தாலும் வந்திருக்கலாம். ஆனால், இந்த எதிர்ப்பு அறிக்கைக்கு சில நாட்களுக்கு முன்பாகத்தான் சங்கரமடத் திலிருந்து ஒரு அறிக்கை வந்தது.
சுவாமி நித்யானந்தா நியமனத்தில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் எந்தவித ஆதரவோ அல்லது எதிர்ப்போ தெரிவிக்கவில்லை என்பதை இந்த அறிக்கையின் மூலம் தெரியப் படுத்துகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், விடுதலையில் வந்த செய்திகள் ஜெயேந்திரர் கவனத்திற்கு செல்லவும், எதிர்ப்பு என்னும் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என்பது தனிக்கதை. ஜகத்குருவின் நேர்மையின்  யோக்கியதை  இந்த அளவில்தான் உள்ளது.
ஆனால், நித்தியானந்தா விடுவாரா? இந்து மதத்தை அம்பலப்படுத்துவதில் அவர் காட்டும் முனைப்பை நம்மால் ரசிக்காமலும் இருக்க முடியவில்லை.
ரஞ்சிதாவுடன் இருக்கும் நித்தியானந்தாவை மதுரை ஆதினமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சங்கராச்சாரியார் கூறியிருக்கிறார். ஆனால் என் மீது எந்த கொலை வழக்கும் இல்லை. அவர் மீது கொலை வழக்கு உள்ளது. குற்ற பின்னணி உள்ள அவர் என்னை பற்றி குற்றம் சொல்ல அருகதை இல்லை. அவர்தான் போதை ஊசி போட்டு காஞ்சி பெரியவரை கொன்றார். நான் மதுரை ஆதினத்துக்கு எந்த ஊசியும் போடவில்லை.
ஜெயேந்திரர் யோக்கியனாகும் முயற்சிக்கு மேற்கண்டவாறு நித்தி பதிலளித்ததும், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், தன்னை நித்தி மொத்தமாக அம்பலப்படுத்திவிடக்கூடுமென்று சமாதானத்தூது அனுப்பியிருக்கிறார். சமாதானத்தூது அனுப்பிய இந்த ஜெகத் குருவின் யோக்கியதையை நம் வாசகர்களுக்கு மீண்டும் நினைவூட்ட அனுராதா ரமணன் ஒரு பத்திரிக்கை பேட்டியில் அம்பலப்படுத்திய செய்திகளிலிருந்து ஒரு பத்தி மட்டும் கீழே தரப்படுகிறது
சில ஆண்டுகளுக்கு முன் சங்கர மடத்திலிருந்து என்னை அழைப்பதாக சங்கர மடத்திற்கு நெருக்கமான ஒரு பெண் என்னை அழைத்தார். காஞ்சி சங்கராச்சாரியார்களை தெய்வமாக நினைக்கும் குடும்பத்திலிருந்து வந்தவள் நான். எனவே தெய்வமே என்னை அழைத்துள்ளதாக எனது தந்தை சந்தோஷப்பட்டார். உடனே செல்லுமாறு என்னைஅனுப்பி வைத்தார். நானும் மிகவும் சந்தோஷமான மன நிலையில் அந்தப் பெண்மணியுடன் காஞ்சிபுரம் சென்றேன். சங்கர மடம் சார்பில் தொடங்கப்படவுள்ள அம்மா என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றுவது தொடர்பாக என்னுடன் ஜெயேந்திரர் பேசினார். அவர் பேசியவற்றில் சிலவற்றை எனது குறிப்பேட்டில் நான் எழுதிக் கொண்டிருந்தேன். தற்செயலாக நான்நிமிர்ந்து பார்த்தபோது, என்னை அழைத்து வந்த பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார் ஜெயேந்திரர். அவர்கள் இருவரும் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு செய்த அசிங்கம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. அதிலிருந்து நான் சுதாரிப்பதற்குள், ஆன்மீகவாதியாக பேசிக் கொண்டிருந்த ஜெயேந்திரர் ஆபாசமாக பேசத்தொடங்கினார். அறுவறுப்பான சிரிப்புடன் அவர் என்னிடம் பேசிய வார்த்தைகள் மிகவும் அநாகரீகமானவை. அந்தப் பெண்மணியைப் போலவே என்னையும் ஒத்துழைப்பு தருமாறு அவர் கேட்டுக் கொண்டார். அதிர்ந்து போன நான் சட்டென எழுந்து விட்டேன். சீ, நீயும் ஒரு மனுஷனா என்று வேகமாக கேட்டவாறே அங்கிருந்து கிளம்ப எத்தனித்தேன். உடனே அதிர்ந்த ஜெயேந்திரர், முன் கூட்டியே இவளிடம் (என்னிடம்) எல்லாவற்றையும் கூறவில்லையா என்று அந்தப் பெண்ணிடம் ஆவேசமாக கேட்டார். அவர் இல்லை என்றவுடன், மிகவும் அசிங்கமான வார்த்தைகளால் அந்தப் பெண்மணியை திட்டினார். பின்னர் அதே வேகத்தில் என்னிடம் திரும்பி, என்னுடன் ஒத்துழைத்துப் போனால் நல்லது. இங்கு நடந்தவற்றைவெளியில் கூற நினைத்தால், உனக்கும் 10 ஆண்களுக்கும் தொடர்பு உள்ளதாக கதை கட்டி உன் வாழ்க்கையையே சீரழித்து விடுவேன் என்று மிரட்டினார். புருசனை இழந்த நீ என்ன விதவைக் கோலத்திலேயா இருக்கே... பூவும் பொட்டுமாகத்தானே இருக்கே என்று கூறியவாறே என் உடலை வர்ணிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த அசிங்கத்தில் கூனிக் குறுகிப் போன நான் அங்கிருந்து எப்படியோ திரும்பி விட்டேன் என்று தனக்கு நேர்ந்த அவமானத்தை வெளியிட்டிருந்தார்.  இப்படிப்பட்ட ஜெயேந்திரரின் விமர்சனத்தை சர்வ சாதாரணமாக எதிர்கொணடார் நித்தியானந்தா.
ஜெயேந்திரரது பாலியல் கூத்துக்களை அம்பலப்படுத்தியதால்தான் சங்கரராமன்  கொல்லப்பட்டார். சங்கராச்சாரியின் கூலிப்படை கோவிலில் வைத்தே கொன்றது. என்பதுதான் குற்றச்சாட்டு. அதன்மீதுதான் வழக்கு நடக்கிறது. தேவநாதனது கருவறை செக்ஸ் சி.டி தோற்றுவித்த அதிர்வலைகள் கூட வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த கொடூரத்திற்கு ஏற்படவில்லை. தேவநாதன் கூட பக்தர்களின் நம்பிக்கையைத்தான் இழிவுபடுத்தினார். ஜெயேந்திரரோ, பக்தர்கள் தன்னை கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக சங்கர ராமன் கொலை செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டால் புதுச்சேரி நீதிமன்றப்படிகளில் நிற்கிறார். சங்கரமடத்தின் மானம் கைய்யில் தண்டத்தோடு நடந்துகொண்டிருக்கிறது. இதை குறித்தெல்லாம் கேட்க வக்கில்லாத இந்துத்துவ அமைப்புகள்தான் நித்தியானந்தாவை கேள்வி கேட்கின்றன. நித்தியானந்தாவை  ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என்பதல்ல நம் கேள்வி. பார்ப்பானைவிட பார்ப்பனியத்தைத் தாங்கிப்பிடித்துக் கொண்டு அரதப்பழசான இந்து மதத்தை அறிவியலின் துணையோடு இன்றைய கார்ப்பொரேட் கலாச்சார இந்துக்களைக் கவரும் நித்தியானந்தா உள்ளபடியே மிகவும் ஆபத்தானவர் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. அதேநேரத்தில் இந்து மதத்தின் உயிர் நாடியான ஜாதிமுறையைக் காக்கும் பணிகளில் ஒன்றான மடங்களைக் காக்க இந்த இந்துத்துவாக்கள் துடிப்பது ஏன்? எல்லோரும் இந்துக்கள் தான் என்று வெட்கமின்றி சொல்லிக்கொண்டே ஆதீன மடத்திற்கு சென்று வழிபடுவேன் என்று உறுமும் அறிக்கை விடும் நபர்களால் சங்கர மடத்திற்குள் சென்று இவர் கோவணத்தை அவிழ்க்க முடியவில்லை. இந்து மதக்காவலர்களாக வேடம் பூணுபவர்கள் முதலில் உள்நுழைய வேண்டியது சங்கரமடத்தில். துணிச்சல் இருக்கிறதா? இல்லையா? பூணூல் தடுக்கிறதா? உங்கள் மதத்தின் பெருமை சீரழிந்துவிடுமா? சீரழிய என்ன இருக்கிறது. சீரழிந்த மதத்தில் சீரழிய என்ன இருக்கிறது. அழியத்தான் கொஞ்சம் உங்கள் மதம் மீதமிருக்கிறது.

ஒரு சி.டி
விரைவில் நித்தி பற்றி குறும்படம் ஒன்று எடுக்க இருக்கிறாராம் நடிகை ரஞ்சிதா. ஏற்கெனவே எடுத்த குறும்படம் தான் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறதே. அதற்குள் அடுத்த குறும்படமா? என்று குதூகலித்து கமெண்ட் போடுகிறார்கள் இணையதள இளைஞர்கள்.
ஒரு இடி!
நித்தியானந்தா ரஞ்சிதா என்ற பெண்ணோடு சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று ஜெயேந்திரர் கொடுத்த அறிக்கைக்கு நித்தி பதில் சொல்வது ஒரு புறம் என்றால், என்னைப் பற்றிப் பேச ஜெயேந்திரருக்குத் தகுதியில்லை என்று ரஞ்சிதா விட்ட அறிக்கை சங்கர மடத்துக்குக் கிடைத்த இடி. சபாஷ்! சரியான போட்டி! எங்கே பார்ப்போம். ஒவ்வொருவரின் வண்டவாளங் களையும் தண்டவாளத்தில் ஏற்றி, மாறி மாறி உங்களை நம்பும் மடப் பதர்களுக்கு நீங்களே விளக்கத்தையும் கொடுத்து விடுங்கள். எங்கள் பணி கொஞ்சம் குறையும்.

அய்யா சொன்னதும் - கலைஞர் சொல்வதும்!


கவிஞர் கலி. பூங்குன்றன்
பொதுச் செயலாளர், திராவிடர்கழகம்
இனி கண்ணீர்த் துளிகள் தங்களின் கட்சி தேர்தலுக்குப் பிறகு இந்த நாட்டில் உலவ வேண்டுமானால், பார்ப்பன வெறுப்புச் சாதனத்தைத்தான் கைத்தடியாகப் பிடித்துக் கொள்ள வேண்டியவர்கள் ஆவார்கள். இந்தக் காரியத்துக்காக என்னை அணுகலாம். நானும் ஆதரவளிக்கலாம். எனக்குச் சமுதாயத்துறையில் பார்ப்பனர்களைத் தவிர வேறுயாரும் எதிரிகளல்லர்
(விடுதலை 1.1.1962) என்றார் இனவுரிமைக் காவலராம் தந்தை பெரியார்.
தி.மு.க.வை ஒரு கட்டத்தில் சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்த ராஜாஜி அவர்கள் 1967 தேர்தலில் ஆதரித்திருந் தாலும், பூணூலைப் பிடித்துக் கொண்டு உதய சூரியனுக்கு வாக்களியுங்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருந்தாலும், பார்ப்பனர்கள் உண்மையான திராவிட இயக்க அரசியல் கட்சியான தி.மு.க.வின் மீது நல்லெண்ணம் கொண்டவர் களல்லர்.
1967 தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று, அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சர் ஆன நிலையில், திரா விடர் இயக்கத்தின் ஆரிய எதிர்ப்புக் கொள்கையைத் துடைத்து எறிந்து விடலாம் என்று மனப்பால் குடித்தனர்.
தி.மு.க. பெரியார் என்ற பழம் பெருங்காயம் இருந்த பாண்டம்; அதனைத் துடைத்தெறிந்து விட்டேன் என்றார் ஆச்சாரியார்.
ஆனாலும் என்ன நடந்தது? ஆட்சி ஏற்ற அண்ணா, அய்யா பெரியாரை நோக்கித்தான் விரைந்தார்.
எங்களின் தேனிலவு முறிந்துவிட்டது என்று ஆச்சாரியார் ஒப்புக் கொள்ளும் அளவுக்கு, அண்ணாவின் குறுகிய கால ஆட்சியின் செயல்பாடுகள் - திராவிடர் இனவுணர்வின் பாங்கில் பூத்துக் குலுங்கி விட்டன.
அடுத்த தேர்தலிலேயே ஆச்சாரியார் தம் அரசியல் எதிரியான காமராசர் அவர்களை இணைத்துக் கொண்டு தி.மு.க.வை எதிர்த்து, அதிலும் தோல்வி கண்டார்.
அந்த 1971 பொதுத் தேர்தல் சேலத்தில் திராவிடர் கழகம் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின் அடிப்படையில் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டமாகவே மிகவும் வெளிப்படை யாகவே நடைபெற்றது.
அந்தத் தேர்தல் முடிவு தி.மு.க.வுக்கு அபார வெற்றியைத் தந்தது - தமிழ் மண் தந்தை பெரியாரின் ஆரிய எதிர்ப்புத் திராவிட மண் என்பதை மற்றொரு முறை உலக அரங்கிற்கு மணி அடித்து அறிவித்து விட்டது. இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கையாக்கப்பட்டது என்று முதல் அமைச்சர் அண்ணா சட்டப் பேரவையில் பிரகடனப்படுத்தினார். இது சூத்திரர் களால், சூத்திரர்களுக்காக ஆளப்படும் அரசு என்று முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் கம்பீரமாக அறிவித்ததும் எந்த அடிப்படையில் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் தந்தை பெரியார் 1962-இல் கூறிய கருத்தின் அருமையும் அவசியமும் அப்பட்டமாக விளங்கும்.
கடந்தமுறை ஆட்சிக்கு வந்த மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் முத்திரை பொறித்த சில திட்டங்கள் கவனத்துக்கு உரியவை.
1. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று இரண்டாவது முறையாக அதே கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றிக் கொடுத்த தீர்மானம்!
2. கோயில்களில் தமிழிலும் அர்ச் சனை என்பதில் உள்ள உம் என்பது (உம்மை இழிவுச் சிறப்பு) தூக்கி எறியப்பட்டது.
3. தீட்சதர்களின் ஆதிக்கத்தில் பன்னூறு ஆண்டுகாலம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சிதம்பரம் நட ராசன் கோயிலை அரசின் அதிகாரத் துக்குள் கொண்டு வந்தது.
4. வள்ளலார் உருவாக்கிய கொள் கைக்கு முரணாக வடலூர் சத்திய ஞானசபையில் உருவ வழிபாட்டு முறை களைத் திணித்து ஆட்டம் போட்டு வந்த ஆரியப் பார்ப்பனரை வெளியேற்றியது.
5) தமிழ் செம்மொழி என்பதை அங்கீகரிக்கச் செய்தது. 6)  சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடுக்கு வழி வகை செய்தது.
7) நீண்டகாலத்திற்குப் பிறகு, பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கச் செய்தது.
8) நுழைவுத் தேர்வை ஒழித்தது - இவை எல்லாம் பார்ப்பனர்களின் கண்ணோட்டத்தில் திராவிடர் இயக்கச் சார்பானவை - பார்ப்பனர் எதிர்ப்பை அடிப்படையில் கருவாகக் கொண்டவை.
இதனை மிகவும் நுணுக்கமாகப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் பார்ப்பனர்கள் (நம், மக்களுக்குத் தான் இதில் தடுமாற்றம்!)
சில பூணூல்கள் சேர்ந்து திமுக ஆட்சியை ஒழித்து விட்டனர் என்று கலைஞர் அவர்களே வெளிப்படையாகவே கூறும் நிலையைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பார்ப்பன ஊடகங்கள் கலைஞர் அவர்களையும், தி.மு.க.வையும் கொச்சைப் படுத்துவதற்கு அளவு இல்லாமல் போய் விட்டது.
ஒவ்வொருவார துக்ளக் இதழைப் புரட்டினாலும் அன்றாடம் வெளிவரும் தினமணி தினமலர்கள்மீது கண் ணோட்டம்  செலுத்தினாலும் ஆரியப் பார்ப்பனர்களின்  அளவிறந்த கொட் டத்தை அறிந்து கொள்ளலாம்.
மானமிகு கலைஞர் அவர்களும் ஆரியப் பார்ப்பனர்களை எதிர்கொள்ளத் தயாராகி விட்டார்.  மனுதர்மத்துக்கு மறு பிறவி கிடையாது என்று அவர் எழுதினார்; திராவிடர் தோழர்களே ஞான சூரியனைப் படியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார் என்பதெல்லாம் இதற்கான அத் தாட்சிகள்! பரம்பரைப் போர் என்றும் தேர்தல் நேரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பட்டவர்த்தனமாகவும் அறிவித்தாரே - எதிர்கொள்வோம் என்று தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பதிலடி கொடுக்கவில்லையா?
இப்பொழுது 1962 இல் தந்தை பெரியார் அவர்கள் கணித்ததை தொலை நோக்காகக் கூறியதை ஒரு முறை அசை போட்டுப் பார்க்கலாம்.
இவ்வளவுக்கும் 1962-ஆம் ஆண்டு என்பது திராவிடர் கழகத்துக்கும் தி.மு.க.வுக்கும் சுமூகமான உறவு இல்லாத ஒரு கால கட்டம்! அந்த நிலையிலேயே தி.மு.க. எதிர்காலத்தில் பார்ப்பனர் எதிர்ப்பைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும் என்று கூறினார்.
அதற்காகத் தன்னை தி.மு.க. அணுகும் என்றும், அதற்கு நான் உதவக் கூடும் என்றும்  தந்தை பெரியார்கூறியது - இதோ நம் கண்முன் நடந்து கொண்டிருக்கும் பிரத்தியட்ச சாட்சிகள்.
இதனை ஒவ்வொரு உண்மையான திராவிடர் இயக்கத் தொண்டரும் உணரும் வகையில் செயல்பட வேண்டும். திராவிடர் இயக்க அடிப்படைச் சித்தாந் தம் ஊட்டப்பட வேண்டும்.
மானமிகு கலைஞர் அவர்களின் 89ஆம் ஆண்டு பிறந்த நாளில் திராவிடர் இயக்கம் புது உத்வேகத்தோடு தோள் தூக்கி போர்க் குணத்தோடு நடைபோட உறுதி மேற்கொள்ள வேண்டும். எதிரிகள் தயாராகி விட்டார்கள்!
தயாராக வேண்டியது நாம்தான்!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Friday, June 1, 2012

குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஏ.பி.ஜே.அப்துல் கலாமை நிறுத்த வேண்டும்


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை
இந்திய நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் பற்றிய விவாதம் அரசியல் களத்தில் சூடு பிடித்திருக்கும் நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் உயர்திரு ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களையே இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம் என்ற கருத்தை வெளியிட்டு திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அடுத்த குடியரசுத் தலைவர் வேட்பாளரை எதிர் அணியாக இருக்கும் ஒரு தரப்பு அறிவித்துவிட்ட நிலையில் (முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா) ஆளும் கூட்டணியாகிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) இன்னும் தனது வேட்பாளரை ஆய்வு செய்து கொண்டிருக்கும் நிலையே தொடர்கிறது.

பா.ஜ.க. வின் உட்கட்சி சண்டையும், பூசல்களும் கோஷ்டி கானங்களும் அது தனது செல்வாக்கினை கொஞ்சம் கொஞ்சமாக பற்பல மாநிலங்களிலும் இழந்து வருகின்ற நிலையே நீடிக்கிறது.

அயக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக பிரபல விஞ்ஞானியும், இளைஞர்களின் உள்ளங்களையெல்லாம் கொள்ளை கொண்ட பொறியாளர், மேனாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களையே தமது வேட்பாளராக அறிவிக்கலாமே. அதனை பல எதிர்க் கட்சி வட்டாரங்களும்  கூடி வரவேற்று ஆதரவு தருவதற்கு முன்வரக்கூடும்.

தமிழ்நாட்டுக்காரருக்கு முன்பு வட மாநிலத்தவர் ஒரு பெண்மணி - அம்மையார் பதவி வாய்ப்பைப் பெற்றார். தமிழ்நாட்டின் தி.மு.க.வின் - பங்கு அதன் தலைவர் கலைஞர் அவர்களின் செயலாக்கம் மிகவும் குறிப்பிடத் தக்கதாக அமைந்தது.

பிரச்சினை ஏதும் இல்லாமல் அவரது பதவிக் காலம் முடிவடையும் நிலையில், இப்போது தேவைப்படுவது ஒரு பொதுநிலையில் பல கட்சியினராலும், கட்சிக்கு அப்பாற்பட்டவராகவும் இருப்பதோடு, மனசாட்சியை அடகு வைத்துவிடாதவராக, ஓர்ந்து கண்ணோடாது, தேர்ந்து முடிவு செய்யும் சமன் செய்து சீர்தூக்கும் துலாக்கோல் போன்றவரே முழுத் தகுதியானவர் ஆவார்!

அவருடைய கனிந்த அனுபவ அடிப்படையில் உலகத்தின் பார்வையை வெகுவாக ஈர்த்த சர்வதேசப் புகழ் பெற்றவர், ஒரு சிறுபான்மைச் சமூகத்தவரானவர்; அனைத்துத் தரப்புடனும் அன்போடு, பண்போடு பழகும் பான்மையர் மேதகு ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் ஆவார்கள்!

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைக்குரிய நாடான நமது நாட்டின் மக்களால் விரும்பப் படுபவர் என்ற முத்திரை பெற்றவர். ஆளும் கூட்டணியின் பொது வேட்பாளராகவே அறிவித்தால், வெற்றியும் எளிது; விவேகமான பொதுமை நிறைந்த முடிவாக அமையவும் கூடும்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியும் அதன் தலைமையும், தோழமைக் கட்சிகளும் இவரை வேட்பாளராக்க முயற்சித்தல் சிறப்பானதாக அமையும்.

வேண்டுகோளாக இதனை விடுக்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்


தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...