Friday, May 4, 2012

வெள்ளுடைவேந்தர்


சர் தியாகராயர் தோன்றி திராவிடப் பெருங்குடி மக்களுக்குத் தலைமை பூண்டு, அவர்களின் தன்னு ணர்வுக்கு வழிகோலி, அவர்களின் வாழ்வில் இருந்து வந்த அடிமைத்தனத்தை அகற்றப்பாடுபட்டு, சமுதாயத் துறை, பொருளாதாரத்துறை, அரசியல் துறை ஆகியவற்றில் நல்லிடம் பெற்றிட உழைத்தார். நமது பண்டைப் பெருமைகளையும் அவரால் உணர முடிந்தது. அன்று தியாகராயர் திராவிடப் பெருங்குடி மக்கள் முன்னேற வேண்டுமென்று பாடுபட்டதன் பலனை இன்று காண்கிறோம்.
தியாகராயர் பெரும் செல்வந்தர், பணம் படைத்தவர். தியாகராயர் விரும்பினால் வியாபாரத் தின் மூலம் பல லட்சம் ஈட்டி இருக்கலாம்.
அவர் விரும்பியிருந்தால் சென்னையிலே பெரும் பாலான இடங்களைச் சொந்தமாக வாங்கியிருக்க இயலும்.
அவர் இவைகளையெல்லாம் பெரிதாக மதிக்க வில்லை. தம்முடைய சமூகத் தொண்டைத்தான் ஒரு பொருட்டாக மதித்தார். திராவிட சமூகத்தில் ஒரு பெரிய விழிப்புணர்ச்சியை உண்டாக்கினார். அரசிய லிலே நம்மவர்கள் முதலிடம் பெற வேண்டுமென்று அவர் விரும்பினார். தியாகராயர் போக பாக்கியத்தை விட்டுத் தாமாகவே கல்லும் முள்ளும் காட்டாறும், கருங்குழியும் நிரம்பிய பாதை வழியே செல்லத் தொடங்கினார்.
அவர் களத்திலே தூவிய விதை நன்றாக வளர்ந்திருக்கிறது. அவர் பறக்க விட்ட சமுதாயப் புரட்சிக் கொடியின் கீழ் நின்றுதான் இன்று பணியாற்றி வருகிறோம் என்றார் அறிஞர் அண்ணா. அந்தப் பெருமகனார் வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயர் அவர்களின் 161ஆவது ஆண்டு பிறந்த நாள் இந்நாள் (1852).
காங்கிரஸ்காரர் ஆக இருந்த ஆன்மீகவாதி, மாநகர தந்தை - சட்டப் பேரவை  உறுப்பினர், பல்வேறு பொது நிறுவனங்களின் தலைவர் என்ற பன்முகப் பெருமை கொண்ட சீலர் இவர்.
இன்றைக்குப் பார்ப்பனர் அல்லாதார் சமூக நிலை, கல்வி வேலை வாய்ப்பு, பொருளாதாரம், அரசியல் என்று பல தளங்களிலும் செம்மாந்து நிற்கின்றனர். தமிழ்நாட்டைப் பாரீர்! என்று பல மாநிலத்தவர்களும் பெருமையுடன் கூறும் அளவுக்குத் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்பதற்குக் காரணம் திராவிடர் இயக்கம் தன்மான இயக்கமே!
அதற்கு ஒருவர் கடைக்கால் போட்டார் என்றால் அது என்ன சாதாரணமா! இன்றளவுக்கும்கூட பார்ப்பனர்கள் திராவிடர் இயக்கத் தலைவர்களை நினைக்கும் தொறும், நினைக்கும் தொறும்  நரநர வென்று பற்களைக் கடிக்கின்றனர் - ஆத்திரத்தின் உச்சியில் குடியேறி அனல் கக்குகின்றனர் என்றால் அதற்குக் காரணம் என்ன? பார்ப்பனர்களின் ஏக போகத்தில் இருந்த ஆதிக்கம் அனைத்தையும் பறிமுதல் செய்து, சகல மக்களுக்கும் விநியோகம் செய்த சமதர்ம நோக் குடைய சீலர் இவர்!
அனுபவித்தவர்கள் அல்லவா? ஆத்திரப்படத்தான் செய்வார்கள். அதே நேரத்தில் அவர்களின் உழைப்பால் நலன் பல பெற்று வளமுடன் வாழ்வை நடத்தும் நம் மக்களின் நிலை என்ன? மனப்பான்மை என்ன?
அந்த மாபெரும் தலைவர்களுக்கு நன்றி பாராட்டுகிறோமா? எந்தக் கொள்கை நம்மை மேலே உயர்த்தியதோ, அந்தக் கொள்கையை நினைத்துப் பார்க்கிறோமா? அந்தக் கொள்கைகளைப் பெரும் பாலான தமிழர்கள் கடைப்பிடிக்கின்றனரா? தங்கள் வாரிசுகளுக்குச் சொல்லிக் கொடுக்கின்றனரா?
அதே நேரத்தில் நம் இன எதிரிகளின் சிந்தனைகள் எப்படி இருக்கின்றன? அவர்கள் எதை நோக்கிக் கவண் வீசுகிறார்கள் என்பதையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டாமா?
நண்பன் யார்? பகைவன் யார்? என்பதைக்கூட அடையாளம் கண்டு, விழிப்போடு இல்லாவிட்டால் மீண்டும் ஆதிக்கவாதிகள் குதிரை சவாரி செய்யக் காத்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்!
இன்னும் ஜாதி ஒழிந்துவிடவில்லை; இன்னும் நமக்குள் விகிதாசார உரிமைகள் வந்து சேரவில்லை. இன்னும் மொழி இனப் பண்பாட்டு அடையாளங்கள் மீது எதிர் பண்பாடு சவாரி செய்து கொண்டு தானிருக்கிறது.
இவற்றை எல்லாம் நம்மை வாழ வைத்த தலைவர்களின் பிறந்த நாளில் - நினைவு நாளில் ஒருமுறை அசைப் போட்டுப் பார்க்க வேண்டாமா? சூளுரைகளை மேற்கொள்ள வேண்டாமா?
பார்ப்பனர்களைப் பார்த்தாவது பாடம் கற்றுக் கொள்ள வேண்டாமா?
வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் பிறந்த நாளில் இனவுணர்வைக் கூர் தீட்டிக் கொள்வோம். பெற வேண்டிய உரிமைகளை மீட்டெடுக்க உறுதி கொள்வோம். வாழ்க தியாகராயர்!
வாழ்க தந்தை பெரியார்!!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Thursday, May 3, 2012

மக்கள் போராட்டம் - மாவோயிஸ்டுகள் துப்பாக்கி ஏந்தக் காரணமென்ன?


  • கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், விடுதலையாவதில் மகிழ்ச்சி
  • மக்கள் போராட்டம் - மாவோயிஸ்டுகள் துப்பாக்கி ஏந்தக் காரணமென்ன?
ஒரு பக்கம் ஏழ்மை, வறுமை - மறுபக்கம் புதுப்புது கோடீஸ்வரர்கள்
அரசுகளின் அணுகுமுறையில் புது நோக்கு புதுப் போக்குத் தேவை

மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழர் தலைவர் வேண்டுகோள்

மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால்மேனன் இன்று விடுதலையாகிறார் என்பதில் மகிழ்ச்சி. மாவோயிஸ்டுகள் ஏன் துப்பாக்கியைத் தூக்கினர்? ஒரு புறம் கனிம வளங்களால் பகற் கொள்ளை கோடீசுவரர்கள். மற்றொருபுறம் ஏழை, எளிய மக்களின் வாழ்வுக்கு சட்ட பூர்வமான சரியான பரிகாரம் காணப்படவிலலை. 5 லட்சம் மக்கள் கூடி தீர்மானம் நிறைவேற்றி னாலும் அதைப்பற்றி அரசு கண்டு கொள் வதில்லை. சாலை மறியல், பேருந்து மறியல் என்றால் மட்டுமே ஓடி வருகிறார்கள் அதி காரிகள், ஆட்சியாளர்கள். உலகமயம், தாராள மயம், தனியார் மயம் இவற்றை மறுபரிசீலனை பண்ண வேண்டாமா? ஆள் தூக்கிச் சட்டம் தடுப்புச் சாதனமாகாது. மத்திய மாநில அரசுகளின் அணுகுமுறையில் புதுநோக்கு, புதுபோக்குத் தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:
மாவட்ட ஆட்சியர் விடுவிக்கப்படுகிறார்
அனைத்து மனிதநேயர்களாலும் மிகவும் கவலையோடு எதிர்பார்க்கப்பட்ட சட்டீஷ்கர் மாநில சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ்பால்மேனன் அய்.ஏ.எஸ். அவர்கள், மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டு, கடந்த 10 நாள் களுக்கு மேல் வனப்பகுதியில் வைக்கப்பட்டு இன்று அவர்களால் விடுவிக்கப்படுகின்றார் என்பது நல்ல செய்தி.
மாவோயிஸ்டுகளுடன் பொதுவானவர்களும், அந்த அரசு சார்பானவர்களின் பிரதிநிதிகளும் கலந்து பேசி, அவர்கள் விடுத்த சில கோரிக்கைகளை, நிபந்தனைகளை ஏற்று, மாவட்ட ஆட்சியர் விடுவிக்கப்படுகிறார்! மகிழ்ச்சிக்குரிய நிகழ்ச்சி.
தவறான அணுகுமுறை
பல வடமாநிலங்களிலும், ஆந்திரா போன்ற மாநிலத்திலும், மாவோயிஸ்டுகள் வசம் பல மலைப் பகுதி மாவட்டங்கள் சென்றதற்கு என்ன காரணம்?
இதை வெறும் சட்டம், ஒழுங்குபிரச்சினையாகவே அரசுகள் (மத்திய - மாநில அரசுகள்) கருதி, நடவடிக்கை களில் ஈடுபட்டு, அவ்வப்போது சில தற்காலிக கோரிக்கை களை விட்டுக் கொடுத்தும், பிரச்சினைகள் தீர்ந்து விட்டதைப் போல நடந்து கொள்ளுவது தவறான அணுகு முறையாகும்.
மூல காரணம் பற்றி ஆராய்ந்து
நோய்நாடி, நோய் முதல் நாடும் அணுகுமுறையே தேவை. நக்சல் பிரச்சினை - மாவோயிஸ்டுகளின் வளர்ச்சி என்பதற்குரிய மூல காரணங்கள் பற்றிய ஆழமான புரிந்துணர்வு அதற்கேற்ற கொள்கை முடிவு மாற்றங்களும் தான் நிரந்தரப் பரிகாரமாக முடியும்.
சத்நாம் என்பவர் எழுதியுள்ள வனம் எழுதும் வரலாறு - மாவோயிஸ்ட்  கொரில்லாக்களுடன் என்ற ஒரு நூல் அண்மையில் படிக்க நேர்ந்தபோது, எவரும் இப்பிரச் சினைகளின் மூல வேர் எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஏற்கெனவே பல முறை நாம் எடுத்து வைத்த கருத்துக்கள் இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.
ஊடகங்களின் திசை திருப்பல்
மக்களின் பிரச்சினைகள் முளைவிடும்போதே, அரசு களின் காதுகளும், கண்களும் அவற்றை அலட்சியப் படுத்தி, பாராமுகம், கேளாக் காதுடன் நடந்து கொள்ளுவதே இதனை வளர்த்தெடுக்கும் விதைகளாகும்!
இன்றைய ஊடகங்களும், சரியான மக்கள் பணி செய்பவர்களாக இல்லாமல், முதலாளிகளின் பாதுகாப்புக் கேடயமாகவும், ஆதிக்கச் சக்திகளின் பாசறையாகவும் இருப்பதால், உண்மையைத் திசை திருப்பி விடுகின்றன!
அய்ந்து லட்சம் மக்கள் கூடி, அமைதியாக அரசின் முடிவு தவறு, மக்கள் விரோதம் என்று தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்பினால் அத்தீர்மானம் குப்பைக் கூடைக்குத்தான் செல்லுகிறது.
அதே நேரத்தில் ஒரு 500 அல்லது 5000 பேரும் கூடி, பேருந்து மறியல், சாலை மறியல், ரகளை முதலியன நடத்தினால் உடனே அரசு அதிகாரிகள் ஓடோடி வருகின்றனர் தற்காலிகத் தீர்வு கண்டு - சமாதானம் பேசி, முடித்து விட்டதாக கருதிப் போய் விடுகின்றனர்!
பசி, பஞ்சம், பட்டினிதான் மிச்சம்
உண்மையான குறைபாடுகளுக்கு நிரந்தர நியாயமான பரிகாரம் தேடிட, அரசுகள் கிராமப்புறங்களையும், மலைவாழ் மக்களையும் அவர்களது வாழ்வுரிமைக்கும் முன்னுரிமை, முக்கியத்துவம் தர முன்வர வேண்டும்.
சுதந்தரம் பெற்று 65 ஆண்டுகளாகியும் அந்த மக்களின் வறுமை, பசி, பஞ்சம், பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் அகன்று சுபிட்ச வாழ்வுக்கு அவர்கள் சொந்தக்காரர் களாக்கப்படவே இல்லை. பழைய தாய் வழிச் சமுதாயம் மறைந்து, தனி முதலாளித்துவ சமுதாயம் வந்ததோடு, ஆதிக்கவாதிகளின் சுரண்டல் தொடர்ந்த வண்ணம் உள்ளது!
ஏமாற்றமும், வேதனையும் ஏற்பட்டதால்தான்!
அம்மக்களின் வாழ்வாதாரம் இயற்கையின் பசுமை; அவை பகற்கொள்ளையடிக்கப்படுகின்ற நிலை! மலைகளும், பாறைகளும், மண் வளங்களும் பறிக்கப்பட்டு, சுரண்டப்படுகின்றதைக் கண்டு ஏமாற்றமும், வேதனையும் கொண்ட மக்களிடையே வெடிப்பதுதான் இந்த, வேகமான நிலை! விபரீதமானதாக மாறுவதற்கும் அதுவே காரணம்.
மேலே குறிப்பிட்ட அந்த நூலுக்கு வனம் எழுதும் வரலாறு முன்னுரை எழுதியுள்ள தோழர் பிரசன்னா கூறுகிறார்.
மக்களுக்கான போராட்டங்கள் அனைத்தையும், மக்கள் விரோதப் போராட்டங்களாக மக்களின் மனதில் பதியச் செய்யும் வேலையையே இன்றைய வெகு ஜன ஊடகங்கள் செய்து வருகின்றன
கவர்ஸ்டோரி சுடச்சுட வெளிவருகிறது
அடர்ந்த காடுகளைப் பொட்டல் வெளிகளாக்கிய பிறகு பொட்டல் வெளிகளைச் சுரங்கங்களாக்கி, ஏக போகக் கொள்ளையில் ஈடுபடும் டாட்டாக்களும், மிட்டல்களும், வேதாந்தாக்களும், கூலிப்படைகளைக் கொண்டு பழங்குடியினரைக் காடுகளிலிருந்து விரட்டு வதும், காவல்துறை கார்ப்பரேட்டுகளின் சீருடையணிந்த கூலிப்படையாகச் செயல்படுவதை வெகுஜன ஊடகங்கள் உச்சரிக்க மறுக்கும் உண்மைகள். தங்கள்மீது நிகழ்த் தப்படும் கொடுமைகளுக்கு எதி ராக ஒரு பழங்குடி, தனக்காக அரசியலையும், ஆயுதத்தையும் கையிலெடுத்தவுடன், மாவோ யிஸ்டுகளைப் பற்றிய கவர் ஸ்டோரி சுடச்சுட வெளி வருகிறது!
இந்நிலை மாற வேண்டாமா? மாற்றப்பட வேண்டமா? அரசின் உலகமயம், தாராளமயம், தனி யார்மயக் கொள்கைகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப் பட வேண்டாமா?
போராடும் அந்த மலைவாழ் மக்களுக்கு வன்முறை என்பது வழிபாட்டுக்குரிய சிந்தனையுமல்ல ஆகக் கடைசியாக அவர்களுக்குக் கிடைத்த ஒரு வழி முறைதான் அது
துப்பாக்கியைத் தூக்குவது
அவர்கள் துப்பாக்கியைத் தொழுது கொண்டிருக்க வில்லை; பழங்குடி மக்களின் வாழ்வில் கல்வியையும், தற்சார்பையும், உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வருவதற்காக தங்களையே இழந்து போராடும் தோழர்கள் என்றுதான் அவர்கள் வரவேற்கின்றனர்!
அன்னக்காவடிகள் - புதியகோடீசுவரர்கள்
ஒடிசா மாநிலத்தின் கனிமவளங்கள், மற்றும் பல மாநிலங்கள் கர்நாடகம் உட்பட சுரண்டி சுரண்டி அன்னக் காவடிகள் எல்லாம் புதிய கோடீசுவரர்களாகி 100 சி, 2000 சி என்றும், ஸ்விஸ் வங்கிகளிலும் தேர்தலில் வாக்கு வங்கிக்கு மொத்த விலை நிர்ணயிப்பதுமான இந்த வெட்கக்கேடான ஜனநாயகத்தில் இதற்கு சட்ட பூர்வமான சரியான பரிகாரம்,  கொள்கை முடிவுகள் ஒடுக்கப்பட்ட மக்கள் நலம் சார்ந்ததாக அமைதல் வேண்டும். ஆள் தூக்கிச் சட்டங்கள் இதற்குத் தடுப்புச் சாதனமாகாது.
புது நோக்கு - புதுப் போக்கு
அணுகுமுறையில் புதுநோக்கு புதுப்போக்குத் தேவை. காய்ந்த வயிற்றில்தான் கம்யூனிசம் பிறக்கிறது. மறக்க வேண்டாம். இதை எண்ணி ஏற்றமுறு பரிகாரம் காணுவீர்!

கி.வீரமணி 
தலைவர், 
திராவிடர் கழகம்

Wednesday, May 2, 2012

தீட்சிதர் வீட்டில்


இது விடுதலையின் தலைப்பு அல்ல - அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாடு இதழில் எழுதிய முதற்பக்கக் கட்டுரையின் தலைப்பு.
எப்பொழுது? இன்றைக்கு 70 ஆண்டு களுக்கு முன்பு (19-4-1942). இன்னும் சொல்லப்போனால் இந்தத் தலைப்பு அண்ணாவுக்குக் கூட சொந்தமானதல்ல.
1942 ஏப்ரல் 11, 12 நாள்களில் திரு வாளர் நடராச பெருமான் நடனமாடிக் கொண்டிருக்கும் தில்லையிலே - ஆம் - அந்தச் சிதம்பரத்திலே ஜஸ்டிஸ் சுய மரியாதை மாநாடுகள் நடைபெற்றன.
அந்த மாநாட்டுக்கு நன்றியுரை கூறவந்த இயக்கவீரர் எஸ்.வி.லிங்கம் அவர்கள் நன்றி உரை நவில வந்தபோது பயன்படுத்திய வாசகம் அது!
சிதம்பரத்திலே ஜஸ்டிஸ் சுயமரி யாதை மாநாடு நடப்பது என்றால், அது தீட்சதர் வீட்டிலே ஆதி திராவிடர்களுக் குக் கல்யாணம் போன்றது என்றாராம்.
அதே தலைப்பை வைத்துதான் சிதம்பரத்தில் நடைபெற்ற அவ்விரு நாள் மாநாடுகள் குறித்து அண்ணா அவர்கள் அவருக்கே உரித்தான நடையிலே கட்டுரை தீட்டினார்.
அந்த மாநாட்டுக்கு தலைமை வகித்த ஊ.பி.அ. சவுந்தரபாண்டியனார் அவர்கள் சொன்ன ஒரு தகவல் ஆச்சரியமானதா? அதிர்ச்சி ஊட்டக்கூடியதா? என்பது வாசகர்களின் பக்குவத்தைப் பொருத்தது.
சர் ஸ்டர்போர்டு கிரிப்ஸ்  என்பவர் இங்கிலாந்தின் அரசியல் தலைவர்களுள் முக்கியமானவர் - தொழிற் கட்சியைச் சேர்ந்தவர்.
இரண்டாம் உலகப் போர் நடந்து முடிந்த போது இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிப்பது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்திக்க டில்லி வந்திருந் தார்.
நீதிக்கட்சியின் தலைவர் என்ற முறையில் தந்தை பெரியாரும், ஊ.பி.அ. சவுந்தரபாண்டியனாரும் சென்றனர். கிரிப்ஸை சந்திக்க வருகின்றவர்களை யெல்லாம் படம் எடுக்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அவ்வாறே கிரிப்சைச் சந்தித்த தலைவர்களையெல்லாம் படம் எடுத்து ஏடுகளுக்குக் கொடுத்து வந்தனர்.
பெரியாரும், சவுந்தரபாண்டியனாரும் கிரிப்சைச் சந்திக்கச் சென்றபோது படம் எடுக்க வந்தவர்கள் - வந்தவர்கள் யார் என்று தெரிந்த நிலையில் படம் எடுக்காது சென்றுவிட்டனர். அதனைத்தான் சவுந் தர பாண்டியனார் சிதம்பரம் மாநாட்டின் தலைமையுரையில் சொன்னார்.
ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் ஆரியர்கள் தமது இயல்பை, குரோதத்தை, விஷமத்தை, விட அவர்கள் தயாரில்லை.
அந்த மனப்பான்மை பார்ப்பனர்களை விட்டு இன்று வரை கூட ஓடி ஒளிந்துவிட வில்லை. காலம்தான் ஓடியிருக்கிறதே தவிர, காட்சிகள்தான் மாறியிருக்கிறதே தவிர, பார்ப்பனர்களைப் பொருத்தவரை கருத்துக்களில் ஏதும் மாற்றம் ஏற்பட்டு விடவில்லை.
இன்னும் சொல்லப்போனால் அந்தக் கருத்துக்கள்  கறுத்த காழ்ப்புணர்ச்சி என்னும் கனல் கட்டிகளைக் கக்கிக் கொண்டுதானிருக்கின்றன.
தமிழ் செம்மொழி என்று அரசு அறி வித்தால் ஆத்திரப்படத்தானே செய் கிறார்கள்? தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அரசு சட்டம் செய்தால் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பார்ப்பனர்களுக்கு இல்லையே.
சமூக நீதி என்று சொல்லும்போது சண்டைக்கு வரும் குணம் இன்னும் மாறிடவில்லையே.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச் சகர் உரிமை என்றால் அதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்திற்குச் செல்வதும் பார்ப்பனர்கள்தானே!
கிரிப்ஸ் காலத்திலும் சரி, அதற்கு முன் கிருஷ்ண பகவான் கிறுக்கியதாகக் கூறப்படும் கீதை காலத்திலும் சரி பார்ப்பனர்களின் கிரிமினல் குணம் மாறியதாகத் தெரியவில்லையே!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கள் சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கையகப்படுத்த முயற்சித்த போதெல்லாம், நீதி மன்றம் சென்று தடையாணையைப் பெற்றுக் கொண்டுதானே இருந்தார்கள்.
அதற்கொரு முடிவை ஏற்படுத்தியவர் முதல் அமைச்சராக வந்த மானமிகு கலைஞர் அவர்கள்தான். வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார்களே, யார் அப்பன் வீட்டுச் சொத்து போய்விட்டதாம். சிதம்பரம் நடராஜன் கோயில் கட்ட எந்த ஒரு பார்ப்பானும் ஒரு செங்கல் கூட எடுத்துக் கொடுத்தது கிடையாதே!
தமிழ் மன்னர்கள்தான் கட்டினார்கள். கரையான் புற்றெடுக்கக் கருநாகம் குடி கொண்டது போல தீட்சிதப் பார்ப்பனர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்களே!
கணக்கு வழக்குகள் சகலமும் அவாள் வயிற்றில்தானே அறுத்து வைக்கப்பட்டது.
அவர்கள் ஆக்கிரமிப்பில் நடராஜர் கோயில் இருந்தபோது அவர்கள் நீதி மன்றத்தில் கொடுத்த கணக்கு என்ன தெரியுமா?
ஆண்டு ஒன்றுக்கு வருமானம் : ரூ.37,199 செலவு ரூ. 37,000 போக மீதி இருப்பு ரூபாய் வெறும் 199 தானாம்!
கடவுளின் அருகிலேயே இருப்பவர் களாயிற்றே! அதுவும் தில்லை தீட்சதர்கள் யார் தெரியுமா? கைலாயத்திலிருந்து சிவ பெருமானாலேயே அழைத்து வரப்பட்ட வர்களாம்!
அப்படிப்பட்ட அந்தப் பார்ப்பனர் கள்தான் இப்படிப் பித்தலாட்டமாக நீதி மன்றத்தில் கணக்குக் கொடுத்தனர்.
இந்தப் பித்தலாட்டம் எப்பொழுது கிழிந்தது தெரியுமா? அரசின் கைகளுக்கு சிதம்பரம் கோயில் கிடைத்த 15 மாதங்களில் வருமானம் ரூ 25,12,485,
இதற்கு விளக்கமும் தேவையா?
இத்தகைய சிதம்பரத்தில்தான் வரும் ஏழாம் தேதியன்று எழுச்சியூட்டும் மாநாடு - இன முரசு கொட்டப் போகிறது.
சுவர் எல்லாம் மாநாட்டு விளம்பரங் கள்தான் - சுவரொட்டிகள்தான் - பதாகைகள்தான்.
நீண்ட இடைவெளிக்குப் பின் தில்லை யில் திராவிடர் கழகம் நடத்தவிருக்கும் பெரிய நிகழ்ச்சி.
டெசோ அதிகார பூர்வமாக அறி விக்கப்பட்டுள்ள நிலையில் முதல் மாநாடு சிதம்பரம் மாநாடுதான்.
கருஞ்சட்டைக் கடலே கர்ச்சனை செய்து வா! தில்லை, தீட்சிதர் வீடல்ல - தீரம் கொண்ட திராவிடர்தம் கோட்டம் என்பதை நிரூபிப்போம் வாரீர்! வாரீர்!!
- மின்சாரம்


தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

வெற்றியைத் தடுக்குமா எமகண்டம்?


நேர்முகத் தேர்வினை முடித்த முகில் வெயிலில் வியர்க்க விறுவிறுக்க வீட்டிற்கு வந்தான். வீட்டு வாயிலில் முகிலின் அப்பாவும் அவனது நண்பன் தமிழரசனின் அப்பாவும் பேசிக் கொண்டிருந்தனர்.
இந்த வேலையாவது மகனுக்குக் கிடைத்திருக்குமா என்ற ஆவலில் - ஏக்கத்தில், முகில் வேலை கிடைச்சிருச்சா என்றார். இல்லை அப்பா என்று சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றான் முகில்.
சரியான ராகு காலத்தில் வீட்டைவிட்டுச் சென்றால் போன காரியம் எப்படி உருப்படும்? பெரியவர்கள் சொல்வதைக் கேட்டால்தானே என்று புலம்பினார் செழியன்.
செழியா, உனக்கு வேறு சிந்தனையே கிடையாதா? எப்பப் பார்த்தாலும் நாள் நட்சத்திரம் என்கிறாய். நேரத்தில் என்ன இருக்கிறது? திறமை இருந்தால் வேலை தானாக கிடைக்கப் போகிறது? முகில் இப்போது சென்ற நேர்முகத் தேர்வில் முகிலைவிடத் திறமையானவர்கள் வந்திருக்கக்கூடும். அதனால் நம் முகிலுக்கு இந்த வேலை கிடைக்காமல் போயிருக்கலாம். எனவே நாம் முகிலினை, உனது திறமையை இன்னும் வளர்த்து அடுத்த நேர்முகத் தேர்விற்குச் செல். நிச்சயம் வெற்றிபெறுவாய் என ஊக்கப்படுத்துவதை விட்டுவிட்டு... எந்தக் காலத்தில் இருக்கிறாய் நீ என்றார் தமிழரசனின் தந்தை செல்வம்.
நாளும் கோளும் நம்மை வழிநடத்திச் செல்கின்றன. எனவே நல்ல நேரம் பார்த்து எதையும் ஆரம்பிக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்களே என்றார் செழியன்.
எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை செழியா. முயற்சியும் திறமையும் இருந்தால் வெற்றி மேல் வெற்றி பெறலாம்.
கலியுகம் நடக்கிறது செல்வம். உன் போன்றவர்களைத் திருத்த முடியாதப்பா என்றவர், ஒரு பெரிய கம்பெனியிலிருந்து நாளை நேர்முகத் தேர்விற்கு வரச்சொல்லி முகிலுக்கு அழைப்பு வந்திருப்பதாகக் கூறினானே. தமிழுக்கும் வந்துள்ளதா? என்றார்.
ஆமாம், வந்திருப்பதாகக் கூறினான். இருவரும் சேர்ந்தே செல்லட்டும். வெற்றி பெற்று வரட்டும் என்றார் செல்வம். மறுநாள் காலையில் தமிழரசன் கிளம்பி முகிலின் வீட்டிற்கு வந்தான். வரவேற்ற முகிலின் அப்பா, அந்தக் கம்பெனியில் எத்தனை காலி இடங்கள் உள்ளன தமிழ் என்றதும் 2 இடங்கள் அங்கிள் என்றான். அந்த 2 இடங்களும் உங்கள் இருவருக்கே கிடைக்க எனது வாழ்த்துக்கள் என்றார். நன்றி சொல்லிய தமிழ், முகில் கிளம்பி வரவே கிளம்புறோம் அங்கிள் என எழுந்தான்.
தமிழ் இப்பொழுது மணி என்ன? என்றார். 8 அங்கிள் என்றதும், இன்று புதன்கிழமை, 9 மணி வரை எமகண்டம் உள்ளது. நேர்முகத் தேர்வு எத்தனை மணிக்கு? அங்கு செல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்ற வினாக்களை எழுப்பினார்.
அப்பா, 10 மணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் கம்பெனிக்குள் இருக்க வேண்டும். இங்கிருந்து 45 நிமிடத்திற்குள் கம்பெனியை அடைந்து விடலாம் என்றான் முகில்.
அப்படியெனில் 9 மணிக்குக் கிளம்புங்கள் என்றார். அங்கிள், போக்குவரத்து நெரிசலிருப்பின் என்ன செய்வது என்ற தமிழின் கேள்விக்கு, நல்ல நேரத்தில் செல்வதால் தடைகள் ஏதும் ஏற்படாது என்றார் செழியன்.
அங்கிள் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. கிளம்பியாச்சு, செல்கிறோம் என்றதும், உங்க அப்பாவைப் போலதான் நீயும் இருப்ப. நீ வேண்டுமானால் செல். முகில் 9 மணிக்குத்தான் கிளம்புவான் என்றார்.
9 மணிக்குக் கிளம்பிய முகில் பரபரப்பாக ஓடி வந்து பேருந்தைப் பிடித்தான். பேருந்து கிளம்பிய 10 நிமிடத்தில் ஏதோ பழுதினால் நின்றுவிட்டது. இறங்கிய முகில் ஆட்டோ பிடித்துச் சென்றான். போக்குவரத்து நெரிசலில்அனைத்து வாகனங்களும் தத்தளித்துக் கொண்டிருந்தன. முகில் தனது அவசர நிலையைக் கூறியதும் ஆட்டோ ஓட்டுநர் சந்துகளில் எல்லாம் சென்று ஒருவழியாக கம்பெனி வாயிலில் நிறுத்தினார்.
காவலாளியிடம் சென்று நேர்முகத் தேர்விற்கு வந்திருப்பதாகக் கூறினான் முகில். நேரம் முடிந்துவிட்டது சார். எல்லோரும் உள்ளே சென்றுவிட்டார்கள். இனி யாரும் வந்தால் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்பது மேலாளரின் உத்தரவு என்றார் காவலாளி.
எதிர்பாராமல் தாமதம் ஏற்பட்டுவிட்டது. மேலாளரிடம் தெரிவித்து வாருங்கள். அவர் அனுமதி கொடுத்தால் உள்ளே அனுப்புங்கள் ப்ளீஸ் சார் என்று கெஞ்சினான் முகில்.
முகிலின் பரிதாபமான நிலையினைக் கண்டு மனம் இரங்கிய காவலாளி மேலாளரிடம் சென்று முறையிட அனுமதி கிடைத்தது. காவலாளிக்கு நன்றி சொல்லிவிட்டு உள்ளே சென்றான். நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டான்.
நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டோர் அனைவரும் முடிவிற்காகக் காத்திருந்தனர். அப்போது நிறுவனத்தின் தலைவர் வந்தார். அவரது உதவியாளர் கொடுத்த கோப்பினை வாங்கிக் கொண்டு பேசத் தொடங்கினார்.
இது ஒரு பன்னாட்டு நிறுவனம். திறமைக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும். நேர்முகத் தேர்வில் கலந்துகொண்ட அனைவருமே நல்ல முறையில் பதிலினைச் சொன்னீர்கள். எனினும் உங்களிலிருந்து எங்களுக்குத் தேவையான இருவரைத் தேர்வு செய்துள்ளோம். அவர்கள் யாரெனத் தெரிந்து கொள்ளும் ஆவலில் இருப்பீர்கள். தமிழரசன், பிரசன்னா.
எல்லோரும் நன்றாகப் பதில் சொன்னீர்கள் என்று சொல்லிவிட்டு நம்மை ஏன் தேர்வு செய்யவில்லை என்று மற்றவர்கள் நினைக்கும் வாய்ப்புள்ளது. ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு சிறிய தவறு காணப்பட்டது. இதனை ஏன் நான் சொல்கிறேன் என்றால், இனி நீங்கள்கலந்துகொள்ளும் நேர்முகத் தேர்வில் அந்தத் தவற்றினை நீக்கிக் கொள்ளலாம் அல்லவா அதனால்தான் என்றதும், சொல்லுங்கள் சார் திருத்திக் கொள்கிறோம் என்றனர் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டவர்கள்.
ஒவ்வொருவரின் பெயரினையும் கூறி தவற்றினைச் சுட்டி வந்த தலைவர் முகிலின் பெயரினைக் கூறியதும் பரபரப்பானான் முகில்.
முகில் தேர்வாகாததற்கு அவர் காலதாமதமாக வந்ததுதான் காரணமாக அமைந்துவிட்டது. திறமை, பணியில் ஒழுக்கம் முதலியவற்றுடன் காலத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது எங்கள் கம்பெனியின் குறிக்கோள்களுள் ஒன்று. நேரத்தை வீணடிப்பதை மிகப் பெரிய குற்றமாக நாங்கள் கருதுகிறோம். பல உலக நாடுகளின் வெற்றிக்கு அவர்கள் நேரத்தைச் சரியான முறையில் பயன்படுத்துவதுதான் காரணமாக அமைந்துள்ளது என்றார்.
தமிழரசனுக்கு வேலை கிடைத்ததை அறிந்த செழியன் செல்பேசியில் செல்வத்தைத் தொடர்பு கொண்டு வாழ்த்துக் கூறி, தமிழுக்கும் தனது வாழ்த்தைத் தெரிவிக்கச் சொன்னார். அப்போது செல்வம், முகிலுக்கும் வேலை கிடைத்திருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்றார். உடனே செழியன், என்ன செய்றது? முகிலுக்கு நேரம் சரியில்லை என்றார்.
செழியா, முகிலின் நேரம் சரியாகத்தான் இருந்தது. கிளம்பிய பிள்ளையை எமகண்டம்னு தடுத்து நிறுத்தின அதே எமகண்டத்தில்தான் தமிழரசன் கிளம்பிச் சென்றான். உனது மூடநம்பிக்கையால்தான் முகில் வெற்றி பெறவில்லை என்பதை இப்போதாவது உணர்ந்து உன்னைத் திருத்திக் கொள்.
ஒரு நாளின் எல்லா நேரமும் நல்ல நேரமே என்பதை உணர்ந்து நேரம் காலம் பார்க்காமல் முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி நம்மைத் தேடி வரும். முகில் திறமைசாலி. அடுத்த நேர்முகத்தேர்வில் வெற்றி பெறுவான். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்குத் தடைக்கற்களாக  பெற்றோர்களாகிய நாமே இருக்கக் கூடாது.
Share

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...