Friday, February 3, 2012

அண்ணா நினைவு நாள் சிந்தனை!


இன்று அறிஞர் அண்ணா அவர்களின் 43ஆம் ஆண்டு நினைவு நாள். இது ஒன்றும் சடங்காச் சரியமான நாள் அல்ல.

திராவிடர் மக்களின் வரலாற்றில் புதிய தன்மான அத்தியாயத்தை, சமதர்ம சகாப்தத்தை, சமூகநீதி சரித்திரத்தை உருவாக்கிய திராவிடர் இயக்கம் அதன் தன்னிகரில்லாத மிகப் பெரிய புரட்சியாளர் தந்தை பெரியார் அவர்களின் கொள்கை வழி நின்று, புத்தாக்கச் சமூகத்தை உருவாக்க தமது ஆற்றல் வாய்ந்த பேச்சாற்றலையும், எழுத்தாற்றலையும் சுழல விட்ட ஒரு தலைவரின் மறைந்த நாள் இந்நாள்.

அண்ணா அவர்கள் அரசியலில் நுழைந்திருக்க லாம்; சட்டமன்றத்திற்குச் சென்றிருக்கலாம்; இத்துறையில் காலடி பதித்தவர்கள் பகுத்தறிவின் அடிப்படையில், முடை நாற்றமெடுக்கும் மூட நாற்றங் களை எதிர்க்கும் தன்மையில் சிந்திப்பது. இயங்குவது என்பது எளிதிற் காணக் கிடைக்காத ஒன்றாகும்.

அண்ணா அவர்களைப் பொருத்தவரையில், ஆட்சியைக் கருவியாகப் பயன்படுத்தி சமுதாய மாற்றத்திற்கான சட்டங்களை உருவாக்கியவர். இவற்றிற்கு முன்னுரிமை கொடுத்தவர்.

1) அரசுப் பணிமனைகளில் கடவுள், மதப் படங்களை நீக்குதல்.

2) சுயமரியாதைத் திருமணத்துக்குச் சட்ட வடிவம்.

3) சென்னை மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயரிடல்.

4) இந்திக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை - தமிழ், ஆங்கிலத்திற்கு மட்டுமே 
இடம் உண்டு.

மிகக் குறுகிய காலந்தான் முதல் அமைச்சர் பொறுப்பை வகித்தவர் என்றாலும், வரலாற்றில் என்றென்றும் நிலைக்கத்தக்க சாதனைகளை யல்லவா பொறித்துள்ளார்.

ஒருபடி மேலே சென்று இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கைதான் என்று சட்டப் பேரவையிலேயே பிரகடனப்படுத்தி விட்டாரே!

இந்த அறிவிப்புக்குள் அனைத்தும் அடங்கி விடவில்லையா?

சட்டமன்றத்துக்குச் செல்லாத தமக்காக வாக்குக் கேட்காத ஒரு தலைவருக்குக் காணிக்கை, ஓர் ஆட்சி என்று அறிவிக்கப்பட்டது - இதுவரை எங்கும் கேள்விப்பட்டிராத புதுமையாகும். அந்தப் புதுமையைச் செய்தவர் அறிஞர் அண்ணா அவர்களே ஆவார்.

ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகும்கூட, பெரியார் ஆணையிட்டால் மீண்டும் அந்தச் சமூகப் பணிகளில், பகுத்தறிவுப் பிரச்சாரப் பணியில் ஈடுபடத் தயார் என்று தன் உள்ளத்தைத் திறந்து காட்டிய திராவிடர் இயக்கச் செம்மல் அண்ணா அவர்கள்.

இன்றைக்குப் பெரும்பாலும் அண்ணா ஓர் அரசியல் வாதி என்பது போன்ற தோற்றம் அளிக்கப்பட்டு வருகிறதே தவிர - (இது வெறும் மேலோட்டமான பார்வையே!) அவர்தம் ஆழமான சமூகப் பார்வை  - சிந்தனையோட்டம் குறிப்பிடத்தக்க வகையில் வெளிப்படுத்தப்படவில்லை.

அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், உருவத்தை கொடியிலும் பறக்கவிட்டுள்ள ஓர் அரசியல் கட்சி தான் தமிழ்நாட்டை இப்பொழுது ஆண்டு கொண் டுள்ளது. ஆனால், அண்ணாவின் அடிப்படைக் கொள்கைக்கு நேர் எதிரான சிந்தனைகள் - செயல் கள்தான் இரண்டு தண்டவாளங்களாக உள்ளன.

எடுத்துக்காட்டாக, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் பிறப்பு என்ற தமிழ்ப் பண்பாட்டு அடையாளத்தை ஒரு திராவிட இயக்க அரசியல் கட்சி (திமுக) சட்டம் செய்த நிலையில், அண்ணாவின் பெயரைத் தாங்கிய இன்னொரு அரசியல் கட்சி (அ.இ.அ.தி.மு.க.) தனிச் சட்டம் இயற்றி, அதனை ரத்து செய்கிறது என்றால் இது எத்தகைய கேலிக் கூத்து என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

புத்த மார்க்கத்தில் ஏற்பட்ட ஊடுருவல் - இப்பொழுது திராவிடர் என்ற பெயரைத் தாங்கியுள்ள அமைப்பிலும் நடந்திருக்கிறது.

அந்தப் புன்னகை என்று கவுதமப் புத்தரைப்பற்றி அண்ணாவும் எழுதியுள்ளாரே!
அசல் எது, போலி எது என்பதை உணர்ந்து நடந்து கொள்வதுதான் அண்ணா நினைவு நாளுக்குப் பெருமை சேர்ப்பதாகும்.
வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா!!

Thursday, February 2, 2012

ராஜபக்சே குழைத்துப் போட்ட நாமம்!


இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கை சென்றார். சாதித்து வந்தார் என்று டாம் டாம் அடிக்கப்பட்டது. இலங்கை அதிபர் சில வாக்குறுதிகளைக் கொடுத்து விட்டார். இலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் 13ஆவது சட்டத் திருத்தம் செய்யப்பட்டு விட்டது. இதன் மூலம் நீண்ட நாள் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது என்று கூடப் பேசப்பட்டது.
இலங்கை அதிபர் ராஜபக்சேவைப்பற்றித் தெரிந் திருக்கும் எவருக்கும் - வழக்கம் போன்ற ஏமாற்றுத்தனம் தான் இது என்பது தெரியும். இந்தியாவுக்கும் இதில் அனுபவம் உண்டு என்றாலும், நம்மை ஏமாற்றுவதற்காகவும் ராஜ தந்திரத்தில் இந்தியா கெட்டிக்காரத் தன்மை உடையது என்று ஊர் உலகத்தை நம்பச் செய்வதற்கும் சிலவற்றை இந்தியா சொல்ல வேண்டிய  நிர்ப்பந்தம் இருக்கிறது. அதன் வெளிப்பாடே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் அறிக்கையும் கருத்துத் தெரிவிப்பும் ஆகும்.
எஸ்.எம். கிருஷ்ணா இலங்கை சென்று வந்த ஒரு சில நாட்களிலேயே இலங்கை அதிபர் ராஜபக்சே, தன் வழக்கமான சுய புத்தியைக் காட்டிக் கொண்டு விட்டார்.
கொழும்பு நகரில் ராஜபக்சே நேற்று முதல் நாள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது என்ன?
13ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றம் தான் முடிவு செய்யும், அனைத்துக் கட்சி உறுப்பினர்களும், இக்குழுவில் இடம் பெற் றுள்ளனர். தமிழ்த் தேசியக் கட்சி உறுப்பினர்கள் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவர். எனினும் உச்சநீதிமன்றம் தான் இவ்விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கும் என்று கூறியிருக்கிறார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் உறுதி அளித்தபோது இந்த சட்டப் பிரச்சினைகள் எல்லாம் இலங்கை அதிபருக்குத் தெரியவே தெரியாதா?
ராஜபக்சே இரட்டை நாக்குப் பேர் வழி என்பதை அறிந்தவர்கள். இப்படிப் பேட்டி கொடுத்திருப்பது கண்டு ஆச்சரியப்பட மாட்டார்கள்.
1987இல் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போடப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய பூமியான வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைப்பது என்று அந்த ஒப்பந்தத்தில் கூட ஒப்புக்கொள்ளப்பட்டு இருந்தது.
ஆட்சிப் பொறுப்புக்கு வந்த சந்திரிகா அம்மை யாரோ, ரணில் விக்ரமசிங்கோ இதில் கையை வைக்கத் துணியவில்லை. ஆனால், ராஜபக்சே என்ன செய்தார்?
ராஜபக்சேவின் கைப்பாவை என்று கூறப்பட்ட இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி சரத்சில்வா மூலம் அதற்கு வேட்டு வைத்தார்.
சிங்கள வெறி அமைப்பான ஜே.வி.பி. எப்பொழுதோ தொடுத்த வடக்கு - கிழக்கு மாகாண இணைப்புத் தவறு என்ற வழக்குக்கு உயிரூட்டி அந்த வகையில் ஒரு தீர்ப்பும் பெறப்பட்டது (2006 அக்டோபர்)
இரண்டு நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ஒரு தலைப்பட்சமாக ஒரு நாட்டின் நீதிமன்றம் ரத்து செய்ய முடியுமா? இதுகுறித்து இந்தியா எப்பொழுதாவது எதிர்ப்பைக் குறைந்தபட்சம் பதிவு செய்ததாவது உண்டா?
இந்தத் தீர்ப்பைப் பெற்ற கையோடு, அவசர அவசர மாக, கிழக்கு மாகாணத்துக்குத் தேர்தல் நடத்தி, விடுதலைப்புலிகளின் முதுகில் குத்திய கருணா என்னும் தன் கையாளின் குழுவைச் சேர்ந்த பிள்ளை யான் என்பவரைப் பிடித்து வைத்த  பிள்ளையார் போன்று முதல் அமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்து உலகை ஏமாற்றவில்லையா?
இப்பொழுது உண்மை நிலை என்ன? வடக்கு, கிழக்கு என்னும் தமிழர்களின் பாரம்பரிய பூமியில் சிங்களக் குடியேற்றத்தை சிங்கள அரசே முன்னின்று நடத்தி, இலங்கைத் தீவில் தமிழர்கள் என்ற ஒரு தனி இனம் உண்டு என்ற சரித்திரத்தையே அழித்து முடிக்கும் வேலை நடந்து முடிந்து விட்டதே!
இதில் சிங்களவர்களுக்கு எவ்வளவு திருப்தியோ, அதைவிடக் கூடுதல் திருப்தி உள்ளுக்குள் இந்தியா வுக்கும் உண்டு. காரணம் பாதிக்கப்பட்டு இருப்பவர் கள் தமிழர்கள் ஆயிற்றே!
ராஜபக்சேவின் பேட்டிக்கு இந்தியாவின் பதில் என்ன? எங்கே பார்ப்போம்!

முலாயம்சிங்கின் மோசமான கண்ணோட்டம்!


தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசியல்வாதி கள் எத்தகைய வாக்குறுதிகளையெல்லாம் கொடுக் கிறார்கள்? அறிவுக்குப் பொருந்தும்படியாகவும், யதார்த்தக் கண்ணோட்டத்திலும் வாக்குறுதிகள் கொடுக்கப்பட வேண்டுமே தவிர, கண்களை மூடிக் கொண்டு, நகைப்புக்கு இடமான வாக்குறுதிகளைக் கொடுப்பது, ஜனநாயக அமைப்பையே கேலிக்கு உட்படுத்துவதாகும்.
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சித் தலை வரும், அம்மாநில முன்னாள் முதலமைச்சருமான முலாயம்சிங், கற்பழிக்கப்பட்ட பெண்களுக்கு அரசுப் பணி அளிக்கப்படும் என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவது அறவே ஒழிக்கப் படும்; தண்டனை விதிக்கக்கூடிய கடும் சட்டம் கொண்டு வரப்படும் - பெண்களுக்குத் தற்காப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தால், அதனைப் புரிந்துகொள்ள முடியும்.
வேலை வாய்ப்பு என்பது நாட்டின் மிக முக்கியப் பிரச்சினையாகும். வேலை வாய்ப்பு எப்பொழுது கிடைக்கும், எப்பொழுது கிடைக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் இருபாலரும் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
வேலை வாய்ப்பு என்பதை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்ற கருத்தும் இருக்கிறது. இந்த வகை யில் திராவிடர் கழகம் பேரணிகளையும், மாநாடுகளை யும், போராட்டங்களையும் நடத்தி வந்திருக்கிறது; நடத்தவும் காத்திருக்கிறது.
வேலை வாய்ப்புகள் கிட்டாமையால் இளைஞர்கள் விரக்தி அடைந்து விடுகின்றனர்; வன்முறைக் காதலர் களாகவும் ஆகக்கூடிய ஆபத்தும் இருக்கிறது என்று சமூக இயலாளர்கள் தங்கள் கருத்தாகக் கூறியுள் ளனர்.
இத்தகைய முக்கியமான வேலை வாய்ப்பினை ஒரு கொச்சைத்தனமான - அநாகரிகமான, பெண்களை மானபங்கப்படுத்துகின்ற ஒரு செயலோடு இணைப் பது எப்படி? இதுபோன்ற சிந்தனை ஏற்பட்டதே கூட அருவருப்பான ஒன்றாகும்.
தங்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைப்பதற்காக, பெண்கள் தாங்கள் கற்பழிக்கப்படவேண்டும் என்று எதிர்பார்க்கவேண்டுமா?
இந்த நாட்டிலே வேலை வாய்ப்பு இந்த வகையில் தான் கிடைக்கவேண்டும் என்ற நிலை உருவாக்கப் படலாமா?
முலாயம்சிங்கின் மிகக் கேவலமான இந்த அறி விப்பு கடும் கண்டனத்துக்கும், விமர்சனத்துக்கும் ஆளானது வரவேற்கத்தக்கதாகும். அரசியல் கட்சி களும், பெண்களின் அமைப்புகளும் தத்தம் கண்டனங் களை வெளிப்படுத்தி இருக்கின்றன.
வேறு வழியில்லாமல் சமாஜ்வாடிக் கட்சியின் தலை வர் முலாயம்சிங்கும் தன் அறிவிப்பினை விலக்கிக் கொண்டுவிட்டார் - அதுவரை நல்லதே!
இந்த நாட்டில் கற்பு என்றால், அது பெண்களுக்குத் தான்; ஆண்களுக்கு அப்படி எல்லாம் ஒன்று கிடை யாது என்று ஆணாதிக்க மனப்பான்மையோடும், எழுதப்படாத சட்டத்தோடும், மனத்தோடும் இருப்பது கண்கூடு.
விபச்சாரத் தடுப்பு வழக்குக்கூட இந்த நாட்டில் பெண்களுக்குத்தான் தண்டனை என்று வைத்திருந் தனர்; அண்மைக்காலத்தில்தான் ஆண் - பெண் என்ற இருபாலரும் அதில் சம்பந்தப்பட்டிருப்பதால், இருவருக்கும் தண்டனை உண்டு என்று ஆக்கப் பட்டுள்ளது.
இந்தியாவில் மக்களிடத்தில் பதிந்துள்ள இந்துத் துவா மனப்பான்மையும் இதுபோன்ற சிந்தனைக்கு முக்கிய காரணமாகும்.
ஆண்களுக்கு நிகராக 50 சதவிகித இட ஒதுக் கீடு- கல்வி வேலைவாய்ப்புகளில் பெற்றிடவும், சட்ட மன்றங்களில், நாடாளுமன்றத்தில் சம அளவு இட ஒதுக்கீடும் அளித்திட மனம் வரவில்லை; ஆனால், பெண்கள் கற்பழிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட பெண் மாற்றுத் திறனாளி என்கிற கண்ணோட்டத்தோடு இரக்க உணர்வின் அடிப்படையில் வேலை வாய்ப்பு அளிக்கும் எண்ணம் மிகவும் மோசமானது; பெண்களை இழிவு கண்கொண்டு பார்ப்பதாகும் - இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதே!
இதுபோன்ற சிந்தனைகள், இதுவே கடைசியாக இருக்கவேண்டும் என்று பெண்கள் சமுதாயம் எச்சரிக்கை விடுக்கவும் முன்வரவேண்டும்.

ஆளுநர் உரை


நிதி நிலை அறிக்கைக்கு முன்னதாக, ஆண்டுத் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்பது ஒரு சம்பிரதாயம் ஆகும். உண்மையைச் சொல்லப்போனால், இது ஆளுநர் படிக்கும் உரை அவ்வளவுதான் - மற்றபடி அரசு தயாரித்துக் கொடுக்கும் ஓர் அறிக்கையைத்தான் ஆளுநர் படிக்கிறார்.
கடந்த முறை ஆட்சிக்கு வந்தபோது ஆளுநர் படிக்கும் ஆங்கில உரையை சட்டப் பேரவைத் தலைவர், தமிழில் படிக்காதது பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியது; இந்த முறை தவிர்க்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
புதிய ஆளுநர் மேதகு ரோசைய்யா அவர்கள் நேற்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் படித்த அறிக்கையில் குறிப்பிடத்தக்கது, தானே புயலால் அடியோடு பெயர்த்து எறியப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். திட்டமாகும். இதற்காக அரசு செலவழிக்க இருக்கும் தொகை ரூபாய் ஓராயிரம் கோடியாகும்.
இந்த மிகப் பெரிய திட்டம் சரியாக நிறைவேற்றப்படு மானால், மிகப் பெரிய பலனை பாதிக் கப்பட்ட மக்களுக்கு அளிக்கும் என்பதில் அய்யமில்லை.
தி.மு.க. ஆட்சியில்  குடிசைகளுக்குப் பதிலாக கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான கணக்கீடுகள் எடுக்கப்பட்டு, அதனை உறுதிப்படுத்தும் வகையில் அடையாள உறுதிச் சீட்டும் (Token) பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டு விட்டது.
தி.மு.க. ஆட்சியைத் தொடர்ந்து எட்டு மாதங்களுக்கு முன்பு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அ.இ.அ.தி.மு.க. அரசு அந்தத் திட்டத்தைக் கைவிட்டு, சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இன்னும் அது குறித்த தொடக்கத்தைக் காணவில்லை.
தமிழ்நாட்டின் மின்பற்றாக்குறையைப் போக்கும் வகையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகரில் மோனோ ரயில்வே திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையான திட்டம் குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. மெட்ரோ திட்டம்தான் சிறந்தது என்று தொழில் நுட்பம் தெரிந்த அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதுவும் முந்தைய திமுக ஆட்சி கொண்டு வந்தது என்பதற்காக மெட்ரோ திட்டத்திற்குப் பதிலாக மோனோ திட்டம் என்றால், அது தவிர்க்கப்படுவது நல்லது. ஏனெனில், போக்குவரத்துச் சிக்கலின் இரும்புப் பிடியில் சென்னை பெருநகரம் விழி பிதுங்கி நிற்கும் நிலையில், இந்த மிக முக்கியமான திட்டத்தில் அரசியல்பார்வை நுழையாமல் இருக்க வேண்டும் என்பதே நமது விழைவு.
ஆளுநர் உரையில் எல்லா வகையான நுழைவுத் தேர்வுகளும் கூடாது என்று சொல்லப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதும், வரவேற்கத்தக்கதாகும். கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்று தானடித்த  மூப்பாக மத்திய அரசு நடந்து கொள்வது தடுக்கப்பட்டே தீர வேண்டிய ஒன்றாகும். கச்சத் தீவைத் திரும்பப் பெற வேண்டும் என்பதும் நல்ல முடிவாகும்.
ஆளுநரின் உரை குறித்து அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளே சில முக்கிய குறைகளைச் சுட்டிக் காட்டியுள்ளன. அவற்றில் அரசு கவனம் செலுத்திடுவது அவசியமாகும்.
முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க. சில முக்கிய காரணங்களின் அடிப்படையில் ஆளுநர் உரையைப் புறக்கணித்துள்ளது. நாட்டில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்று தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டு இருப்பது மிகவும் முக்கியமானதாகும்.
பட்டப் பகலில் பிரதான சாலையில் வங்கிக் கொள்ளை நடந்திருக்கிறது. கொலை, கொள்ளைகள், குழந்தைகள் கடத்தல் என்பது அன்றாட தகவல்களாகி விட்டன.
இன்று காலை ஏடுகளில் வெளி வந்துள்ள ஒரே நாளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதற்கு அடையாளம்! மதுரவாயல் அருகே மூவரைக் கட்டிப் போட்டு 22 லட்சம் ரூபாய் கொள்ளை, புது வண்ணையில் கோவில் பாதுகாப்புப் பெட்டகம் உடைக்கப்பட்டு வெள்ளிக் கிரீடம், தங்கத் தாலி திருட்டு, திருவொற்றியூரில் தகராறைத் தட்டிக் கேட்ட வாலிபருக்கு கத்திக் குத்து, தூத்துக்குடியில் அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு, ஆம்பூர் அருகே நகை அடகுக் கடையில் இரண்டு கோடி ரூபாய் கொள்ளை, ஓசூரில் பட்டப்பகலில் தலைமை ஆசிரியரை மிரட்டி 40 சவரன் நகை கொள்ளை; பெரிய பாளையத்தில் மின் கம்பத்தில் கட்டி வைத்து லாரி ஓட்டுநர் எரித்துக் கொலை, செங்கற்பட்டையடுத்த எம்.என். குப்பத்தில் அ.தி.மு.க. பிரமுகர் தலை துண்டித்துக் கொலை இன்று காலையில் வந்த ஏடுகளில் இடம் பெற்ற தகவல்கள் இவை.
ஒரு ஆட்சி செம்மையாக நடைபெறுகிறதா, இல்லையா என்பதற்கு சட்ட ஒழுங்கின் நிலைதான் முக்கியமான அளவுகோலாகும். அந்த வகையில் இன்றைய அரசு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.
முதல் அமைச்சர்  பொறுப்பில்தான் உள்துறை இருக்கிறது - இதில் கவனம் தேவை! தேவை!!

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் 10 நாள்கள் இடைநீக்க


சட்டப் பேரவையில் இன்று 
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் 10 நாள்கள் இடைநீக்கம் தி.மு.க., தே.மு.தி.க., சி.பி.அய், சி.பி.எம். உறுப்பினர்கள் வெளிநடப்பு
சென்னை, பிப். 2- அவை மரபுகளை மீறிய தாக எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்தை சட்டப் பேரவையிலி ருந்து 10 நாள்கள் இடைநீக்கம் செய்வதாக சட்டமன்றத்தில் சட்டப் பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார் அறிவித் தார். இதனைக் கண் டித்து தி.மு.க., தே.மு.தி.க., சி.பி.அய்., சி.பி.எம். உறுப் பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டமன்றத்தில் இன்று (2.2.2012) கேள்வி நேரம் முடிந்தவுடன் பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார் அவை உரிமைக்குழுவின் தலை வர் தனபால் அறிக்கை அளிப்பார் என தெரி வித்தார். இதையடுத்து பேரவைத் துணைத் தலைவரும், அவை உரிமைக் குழுவின் தலை வருமான தனபால் அவர் கள் அவை உரிமைக் குழுவின் அறிக்கையை அளிக்கிறேன் என தெரிவித்தார்.
இதையடுத்து பேரவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவை விதி 229(ஆ) படி இன்றே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் படவேண் டும் என கேட்டுக் கொண்டார். இதை யடுத்து இத்தீர்மா னத்தை அவை முன்னவர் கொண்டு வந்தார். பின் னர் இந்தத் தீர்மானம் பேரவைத் தலைவரால் எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அப்பொழுது எதிர்க் கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்தி ரன் இந்தத் தீர்மானத் தின்மீது கருத்து சொல்ல அவை உறுப்பினர் களுக்கு உரிமை உண்டு. இத்தீர்மானம் அவை யின் சொத்து. எனவே கருத்துச் சொல்ல உரிமை உண்டு என்றார். இதையடுத்து அவை உரிமைக் குழுவின் தீர் மானத்தை   தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், சி.பி.எம்., சி.பி.அய். சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்த் தனர்.
இருப்பினும் அத்தீர் மானம் கொண்டு வரப் பட்டு பேரவைத் தலை வர் நிறைவேற்றி பேர வைத் தலைவர் டி.ஜெய குமார் கூறியதாவது:
இன்று பேரவை முன்னவர் அவர்கள் கொண்டு வந்து அவை யில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி எதிர்க் கட்சித் தலைவர் விஜய காந்த் இந்த சட்ட மன்றக் கூட்டத்திலும், அடுத்த சட்டமன்ற கூட் டத்திலும் இன்றிலிருந்து தொடர்ந்து 10 நாள்கள் வரை அவை நடவடிக் கைகளிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறார்.
இக்காலத்தில் விஜய காந்த் அவர்கள் எதிர்க் கட்சித் தலைவர் என்ற முறையிலும் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறை யிலும் வழங்கப்பட் டுள்ள எந்தவித ஆதாயத் தையும், ஊதியத்தையும், சலுகைகளையும் தகுதி களையும் பெறமுடி யாது. 1.2.2012 அன்று அவைக்கு வந்திருந்து, அவை நடவடிக்கை களுக்கு குந்தகம் விளை வித்த தேமுதிக சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை, உரி மையை வரும் காலங் களில் முறை கேடாக பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்ற உத்தரவாதத்துடன் அவர்களை மன்னித்து இனி பேரவையின் கண் ணியத்தையும், கட்டுப் பாட்டையும் காப்ப தற்கு உறுதுணையாக இருந்து இதுபோன்ற சூழ்நிலை திரும்பவும் எழாது பார்த்துக் கொள்ள வேண்டும். தற்போது அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மேற் கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட் டால் கடுமையான தண் டனைக்கு ஆட்பட வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கையுடன் அவர்கள் மீதான உரிமை மீறல் பிரச்சினை இத்துடன் விட்டுவிடப் படுகிறது என பேரவைத் தலைவர் டி.ஜெயக் குமார் அறிவித்தார்.
பேரவைத் தலைவர் இதை அறிவித்ததும், இதைக் கண்டித்து தேமுதிக, திமுக, சிபிஎம், சிபிஅய் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.


Wednesday, February 1, 2012

பைபிள் கூறும் உண்மைகள்


பாவத்தைப் போக்க வந்த பரமபிதா
- ஆய்வாளன்
லகிலுள்ள மக்கள் அனைவரையும் உலுக்கி எடுக்கும் வார்த்தை ஒன்று உண்டானால் அது பாவம் என்பதாகும். அது ஒருவனைப் பிடித்துக் கொண்டால் அவன் பாவியாகிவிடுகின்றான். அப்படிப்பட்ட பாவம் உலகத்தில் எப்போது தோன்றியது? எப்படித் தோன்றியது? அதை விரட்டுவது எப்படி என்ற விவரங்கள் உலகின் பெரும்பான்மையான மக்களுக்குத் தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த விவரங்கள் பைபிளிலேயே இருக்கின்றது என்ற உண்மை எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லாததால், எல்லோருமே தெரிந்து கொள்ளும்படிச் செய்வது அவசியமாகின்றது. முழுமையாகத் தெரிந்து கொள்ள தேவன் உலகத்தைப் படைத்த ஆதிகாலத்திலிருந்தே வரவேண்டும்.
(பேதுரு 3:5) பூர்வ காலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயின.
இறைவனாகிய தேவன் ஆதிநாளிலே பூமியையும், சூரியனையும், சந்திரனையும், நீரையும், காற்றையும் படைத்தார். பூமியில் வாழ்வதற்கு ஆதாம், ஏவாள் என்று பெயரிடப்பட்ட ஆண், பெண் இருவரையும் படைத்தார். பூமியிலே அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதற்காக கார்டன் ஆப் ஈடன் (Garden of Eden) என்ற தோட்டத்தையும் உருவாக்கி அதில் அவர்களை ஆனந்தமாக வாழும்படிச் செய்தார் சில நிபந்தனைகளுடன்.
ஆதாம், ஏவாள் இருவருக்கும் இறைவன் விதித்த நிபந்தனைகள் என்ன என்று பார்ப்போம். அவர்கள் இருவரும் தோட்டத்திலோ, உலகின் மற்ற பகுதிக்கோ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால், இறைவனால் அமைக்கப்பட்ட கார்டன் ஆப் ஈடன் என்ற தோட்டத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திலே உள்ள ஒரு குறிப்பிட்ட மரத்தின் கனியை மட்டும் சாப்பிடக்கூடாது. மேலும், அந்தக் கனி இருக்கும் மரத்தின் அருகில்கூட போகக் கூடாது என்று நிபந்தனையாக மட்டுமல்லாது கட்டளையாகவும் கூறியிருந்தார்.
ஆண்டவனின் ஆணைப்படியே நடந்து ஆனந்தமாக வாழ்ந்து வந்தார்கள் தேவனால் படைக்கப்படாத சாத்தானைக் காணும் வரை.
சாத்தானின் ஏமாற்று வார்த்தைகளில் சிக்கிய ஆதாமும், ஏவாளும் தேவனுடைய கட்டளைப்படி நடக்காமல், எந்தக் கனியைக் கண்டிப்பாகச் சாப்பிடக்கூடாது என்று தேவன் கட்டளை யிட்டிருந்தாரோ அந்தக் கனியை இருவரும் சாப்பிட்டார்கள். பழத்தைச் சாப்பிட்ட மறுவிநாடியே பாவம் அவர்கள் இருவரையும் பிடித்துக் கொண்டது. மேலும், அவர்கள் இருவரும் பாவிகள் ஆகிவிட்டனர். இந்தப் பாவமானது அவர்கள் இருவரோடு மட்டும் விடாமல், ஆதாம், ஏவாள் இருவருக்கும் பிறந்த அவர்களின் சந்ததியினரையும் தொடர்ந்து பிடித்துக் கொண்டது. இதனால் ஆதாம், ஏவாளுக்குப் பின் தோன்றிய உலக மக்கள் அனைவரையும் பாவம் பிடித்து பாவிகளாக மாறினார்கள்.
பாவம் என்றால் என்ன? அது எப்போது எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு விடை இப்பொழுது எல்லோருக்கும் நன்றாக, தெளிவாக விளங்கியிருக்கும். உலகில் இப்படித் தோன்றிய பாவத்தைப் போக்கவே இயேசு பூமிக்கு வந்தார்.
1. மத்தேயு (1:15) பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார். அவர்களில் பிரதான பாவி நான்.
இப்படியாக உலகில் தோன்றிய பாவத்தினால் ஜனங்கள் பாவியாகி விட்டதால், அந்தப் பாவிகளைக் காப்பாற்றவே இயேசு உலகிற்கு வந்தார் என்பதனைப் பைபிள் மூலம் தெளிவாகத் தெரிந்து கொள்கின்றோம். ஆதாமையும், ஏவாளையும் அவர்களால் உண்டான உலக மக்கள் அனைவரையும் பாவியாக்கியது அவர்கள் சாப்பிட்ட பழத்தினால் அல்லவா. அப்படியானால் அவர்கள் சாப்பிட்ட பழத்தில் என்னதான் மகிமை இருக்கின்றது. இதனுடைய மகத்துவம்தான் என்ன? மர்மம்தான் என்ன என்பதையும் நாம் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆதாம், ஏவாள் இருவரும் சாப்பிட்ட பழத்தின் பெயர் ஆங்கிலத்தில் புரூட் ஆப் நாலெட்ஜ் (Fruit of knowledge), தமிழில் அறிவுக் கனி என்பதாகும்.
அதாவது, உலகத்தைப் படைத்த தேவன் ஆதாம், ஏவாள் இருவரையும் படைக்கும் பொழுது அவர்கள் இருவரது அறிவையும் எடுத்து, அதைப் பழமாக்கி தோட்டத்திலுள்ள ஒரு மரத்திலே வைத்துவிட்டு ஆதாம், ஏவாள் இருவரையும் முட்டாள்களாக உலாவ விட்டிருந்தார். அவர்கள் இருவரும் சாத்தானின் பேச்சைக் கேட்டு அறிவுக்கனியைச் சாப்பிட்டதால் அறிவாளி ஆகிவிடுகிறார்கள்.
ஒரு மனிதன் அறிவாளியாக ஆவது என்பது இயேசுவின் கணிப்பின்படி பாவியாக ஆவது என்பதாகும். எனவேதான் இந்தப் பாவத்தைப் போக்கி, அதாவது அவர்களுடைய அறிவைப் போக்கி மனிதர்களை மீண்டும் பழைய நிலைக்கு, அதாவது அவர்களை முட்டாள்களாக மாற்றுவதற்காகவே இயேசு பூமிக்கு வந்தார் என்பது தெளிவாக நமக்குத் தெரிய வருகின்றது.
மத்தேயு (3:11) மனந்திரும்புத லுக்கென்று நான் ஜலத்தினால் ஞானஸ்நானங் கொடுக்கிறேன்.
ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுத்து மக்களிடமுள்ள பாவத்தைப் போக்குவதாகக் கூறி ஜனங்களிடையே பிரச்சாரத்தை ஆரம்பித்தார். பாவத்தைப் போக்கக்கூடிய ஞானஸ்நானம் என்றால் என்ன? ஜலத்தைக் கொண்டு ஞானஸ்நானம் செய்வது என்பது எப்படி என்ற கேள்வி எழக்கூடும்.
ஞானம் என்றால் அறிவு. ஸ்நானம் என்றால் கழுவுதல், குளிப்பாட்டுதல் என்று பொருள். ஒரு மனிதனுடைய பாவத்தைப் போக்க அதாவது அவனுடைய அறிவைப் போக்க, அவனுடைய அறிவை ஜலத்தினாலே கழுவி, குளிப்பாட்டி ஞானத்தை ஸ்நானம் செய்து முட்டாளாக்குவதுதான் இயேசு தேர்ந்தெடுத்த வழி. இதே முறைதான் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
எவ்வளவோ முயன்றும் இயேசுவால் பன்னிரெண்டு பேர்களை மட்டுமே சீடர்களாக ஆக்கி முழு முட்டாள்களாக மாற்ற முடிந்தது. பதிமூன்றாவது நபரான யூதாசை இயேசுவால் பாதிதான் முட்டாளாக மாற்ற முடிந்தது. பாதி அறிவாளியாக இருந்தான். பாதி அறிவாளியாக இருந்த யூதாஸ் இயேசுவின் செயலை பிலாத்து மன்னனிடம் காட்டிக் கொடுத்தான்.
மாற்கு (15:15) அப்பொழுது பிலாத்து இயேசுவை வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.
மாற்கு (15.24) அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்.
மாற்கு (15:37) இயேசு மகா சப்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.
பூமிக்கு வந்த நோக்கம் முழுமையாக முடிவடையாமல் இறக்க நேரிட்டதால், ஆவி வடிவமெடுத்து இயேசு தன்னுடைய பன்னிரெண்டு சீடர்களைச் சந்தித்து, தாம் பூமிக்கு வந்த நோக்கத்தை அவர்கள் மூலம் நிறைவேற்றுவதற்காக அவர்களிடம் வந்து கீழ்க்கண்டவாறு கட்டளையிடுகிறார்.
மத்தேயு (28:18) இயேசு சமீபத்தில் வந்து அவர்களை நோக்கி,
மத்தேயு (28:19) நீங்கள் புறப்பட்டுப் பேய், சகல ஜாதிகளையும், சீஷராக்கி அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து,
மத்தேயு (28:20) நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேஷம் பண்ணுங்கள்.
அவர்களுடைய ஞானத்தை ஸ்நானம் செய்து அவர்களுடைய பாவத்தை, அதாவது அறிவைப் போக்கி, புனிதர்களாக அதாவது முட்டாள்களாக மாற்றுங்கள். முட்டாள்களாக மாறிவிட்டார்களா? என்பதைக் கண்டுகொள்வதற்குச் சில வழிமுறைகளையும் கூறினார்.
மாற்கு (16:16) விசுவாசமுள்ளவனாகி ஞானஸ் நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்.
மாற்கு (16:17) விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்க ளாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்.
மாற்கு (16:18) சர்ப்பங்களை எடுப்பார்கள். சாவுக்கேதுவான யாதொன்றையும் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது.
மனிதர்களுக்கு அறிவை உண்டாக்கிய சாத்தானாகிய பிசாசுவை விரட்டியடிப்பார்கள். பாம்புகளைக் கையிலே பிடிக்கச் சொன்னாலும் பிடிப்பார்கள். சாவைத் தரக்கூடிய விஷத்தைக் குடித்தாலும் சாகமாட்டார்கள் என்று சொன்னாலும் நம்புவார்கள். இதில் எதையேனும் நம்ப மறுத்தால் அவர்களுடைய ஞானம் சரியாக ஸ்நானம் செய்யப்படவில்லை. அவர்கள் புனிதர்களாக அதாவது முட்டாள்களாக மாறவில்லை என்பதை நாம் எளிதாகக் கண்டு கொள்ளலாம் என்று இயேசு எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். அதன்பின்,
லூக்கா (24:51) அவர்களை ஆசீர்வதிக்கையில் அவர்களை விட்டுப் பிரிந்து பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்.
மாற்கு (16:20) அவர்கள் புறப்பட்டுப் போய் எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள்.
கொர்த்தியர் (1:23) நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்.
ரோமர் (6:6) நாம் இனி பாவத்துக்கு ஊழியம் செய்யாதபடிக்கு
ரோமர் (6:12) சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக மாற்கு (1:4) யோவான் வனாந்திரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தான்.
மாற்கு (1:8) நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன் என்று பிரசங்கித்தான்.
இவ்வாறாக உலக முழுவதும் பல இடங்களையும் சுற்றி பல்வேறு விதமாகப் பிரசங்கம் செய்து அனைத்து ஜாதியிலும் அநேகம் பேருக்கு ஞானஸ்நானம் செய்து புனிதர்களாக அதாவது முட்டாள்களாக மாற்றினார்கள். தன் வாழ்நாளிலேயே இயேசுவால் பன்னிரெண்டு பேர்களை மட்டுமே பாவத்தைப் போக்கிப் புனிதர்களாக மாற்ற முடிந்தது. ஆனால், இயேசுவால் புனிதர்களாக மாற்றப்பட்ட பன்னிரெண்டு சீடர்களும் உலக முழுவதும் பெரும்பான்மையான மக்களைப் புனிதர்களாக, அதாவது முட்டாள்களாக மாற்றி இயேசுவுக்குள் பலப்படுத்தினார்கள். ஒருவன் ஸ்நானம் பெற்று முழுமையான இயேசுவின் விசுவாசியாக அதாவது கிறித்தவனாக மாறிவிட்டான் என்று சொன்னால் அவன் ஒரு முழு முட்டாளாக மாறிவிட்டான் என்றே அர்த்தம்.
ரோமர் (5:14) ஆதாம் முதல் மோசே வரைக்கும் ஆதாமின் மீறுதலுக்கொப்பாய் பாவஞ் செய்தவர்களையும் ஆட்கொண்டது.
1. யோவான் (3:8) பாவஞ் செய்கிறவன் பிசாசினாலுண்டாகிறான். ஏனெனில், பிசாசானவன் ஆதி முதல் பாவஞ் செய்கிறான். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். ரோமர் (16:20) சீக்கிரமாய் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப் போடுவார்.
ஆதியிலேயே சாத்தானுடைய செயல்பாடு களால் பூமியில் பாவம் உண்டாயிற்று. அந்தப் பாவத்தைப் போக்கவே இயேசு பிறந்து வர வேண்டியதாயிற்று. சாத்தானால் உண்டான ஞானத்தை, ஸ்நானம் செய்து ஒவ்வொருவருடைய பாவத்தை அதாவது அறிவைப் போக்கி அவர்களை இயேசுவுக்குள் பலப்படுத்தினாலும் ஞானஸ்நானம் பெற்றவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பாவியாகவே அதாவது அறிவாளியாகவே பிறக்க ஆரம்பித்து, இதனால் ஞானஸ்நானம் பெற்று கிறித்துவின் விசுவாசியாக மாறிய ஒவ்வொரு குடும்பத்தாரும் தங்களுக்குக் குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தையை சர்ச்சுக்குக் கொண்டு சென்று அந்தக் குழந்தையின் ஞானத்தை ஸ்நானம் செய்து அதனுடைய பாவத்தை - அறிவைப் போக்கி இயேசுவின் விசுவாசியாக்கி, கிறித்தவனாக மாற்றி வீட்டுக்குக் கொண்டுவரும் நிகழ்ச்சியானது தொடர்ந்து நடந்து வருகின்றது என்ற விஷயம் எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும். ஆதாம், ஏவாள் காலத்திலிருந்தே இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை உண்மையென்று பைபிளும் ஒப்புக் கொள்கின்றது. அப்படியானால், பாவத்தை - அறிவை நிரந்தரமாகப் போக்கும் வழிதான் என்ன? அறிவை உண்டாக்கிய சாத்தானை நசுக்கி அழிப்பதுதான் அதற்கு ஒரே தீர்வு. அப்படியானால் சாத்தானை அழிப்பதற்கு இயேசு மறுபடியும் பிறந்து வரவேண்டுமே.  அதுவும் சீக்கிரமாய் வரவேண்டுமே.
(வெளி 22:20) இவற்றைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும்.
சாத்தானை நிரந்தரமாக அழித்து, பூமியின் மேலுள்ளோரின் பாவத்தை அதாவது அறிவை நிரந்தரமாகப் போக்கி அவர்களை நிரந்தர முட்டாள்களாக மாற்றி இரட்சிக்க பரம பிதாவாகிய இயேசு மீண்டும் சீக்கிரமாய் பிறந்து வர தயார் ஆகிவிட்டார். பாவத்தை, அதாவது அறிவை நிரந்தரமாகப் போக்கிக் கொள்ள நீங்கள் தயாரா? இயேசுவே சீக்கிரமாய் வாரும். ஆமென்.
கிறித்தவர்களும், கிறித்தவ மதபோதகர்களும் மற்றவர்களைப் பாவிகளே என்று அழைப்பதற்கான காரணமும், இயேசு விரைவில் வருகிறார் என்று கூறுவதன் காரணமும் எல்லோருக்கும் புரிந்திருக்கும் என நம்புகிறோம்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...