Tuesday, May 3, 2011

தட்டிக் கேட்க ஆள் இல்லையா?

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான பொதுக் குழுவின் அறிக்கைபற்றி சர்ச்சை இப்பொழுது நாட்டில் தலைதூக்கி நிற்கிறது. பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக இருக்கக்கூடியவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆவார்.

நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஒன்று தேவையில்லை; பொதுக் கணக்குக் குழுதான் விசாரணை நடத்தும் அதிகாரம் படைத்ததாயிற்றே என்ற கருத்துக்கூட தொடக்கத்தில் எழுந்தது. அதனை ஏற்றுக் கொள்வது போலக்கூட முரளி மனோகர் ஜோஷி கருத்துத் தெரிவித்ததுண்டு.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்தான் தலைவராக இருப்பார்; பொதுக் கணக்குக் குழுவிற்கோ எதிர்க்கட்சிக்காரர் தலைவராக இருப்பார் என்று சொல்லப்பட்ட போதும், பா.ஜ.க. உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள்  நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைத்தே தீர வேண்டும் என்று வலியுறுத்தி, நாடாளுமன்றத்தையே நடக்கவிடாமல் நிலை குலையச் செய்து விட்டனர். அரசும் அதனை ஏற்றுக் கொண்டு நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஒன்றையும் அமைத்து விட்டது.

பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக இருக்கக் கூடிய பா.ஜ.க.வைச் சேர்ந்த முரளி மனோகர் ஜோஷி ஆப்பினை அசைத்துவிட்ட  குரங்கின் நிலைக்கு ஆளாகி விட்டார்.

21 உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் குழுவில் 11 பேர் - குழுத் தலைவரின் அறிக்கைக்கு எதிராகத் திரண்டு விட்டனர்.

ஆண்டு வருமானம் ஒன்பதாயிரம் பெறும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது பிறப்பிக்கப்பட்ட ஆணையை திராவிடர் கழகம் எதிர்த்து, ஒத்தக் கருத்துள்ள சமூகநீதியாளர்களை ஒன்று திரட்டி வீதிக்கு வந்து போராடியது - வெற்றியும் பெற்றது. 

அதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி அம்பாசங்கர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அதில் குழுத் தலைவரின் அறிக்கைக்கும் உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தன்னிச்சையாகக் குழுத் தலைவர் அறிக்கையினை அளித்தார்.

திராவிடர் கழகம் சென்னைப் பெரியார் திடலில் மாநாடு ஒன்றினைக் கூட்டி, குழுத் தலைவர் அம்பாசங்கரின் அறிக்கையினை ஏற்கக் கூடாது என்று வலியுறுத்தியது; தீர்மானமும் நிறைவேற்றியது.

அதனை முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களும் ஏற்றுக் கொண்டு, அம்பா சங்கர் அளித்த அறிக்கையினை ஏற்க மறுத்து, புதிய ஆணை ஒன்றைப் பிறப்பித்தார்.  2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைப் பிரச்சினை தொடர்பான முரளி மனோகர் ஜோஷியின் அறிக்கைக்கும் அந்த நிலைதான் ஏற்படப் போகிறது; ஏற்படவும் வேண்டும்.

முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் சுட்டிக் காட்டியதுபோல ஜனநாயகத்தைப் பற்றி வாய் நீளம் காட்டும் பா.ஜ.க. - தன் நடவடிக்கையில் அதற்கு மதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டாமா?

மாறுபடும் உறுப்பினர்களின் கருத்துகளை அறிக்கையின் பின் இணைப்பில் சேர்த்திருக்க வேண்டாமா? மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி பேசும் கட்சியைச் சேர்ந்தவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள்.

பொதுக் கூட்ட மேடையில் பேசுவதுபோல அரசியல் நெடியோடு அறிக்கையை வெளியிடுவது - இதுபோன்ற குழுக்களை பொருளற்றதாக ஆக்கிவிடத்தான் செய்யும்.

இதில் இன்னொன்றும் முக்கியமானது - பொதுக் கணக்குக் குழுவால் அதிகார பூர்வமாக அறிக்கை வெளியிடப்படாத நிலையில், அதன் அறிக்கை எப்படி ஊடகங்களில் வெளிவந்தது? அதற்கான பொறுப்பை ஏற்று, குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜோஷி விலகி இருக்க வேண்டாமா?

2ஜி தொடர்பான தலைமைத் தணிக்கைக் குழுவின் அறிக்கையும் நாடாளுமன்றத்தில் வைக்கப்படுவதற்கு முன்பாக ஏடுகளில் கசிந்தது. இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டதுண்டா?

இத்தகைய உத்தமப் புத்திரர்கள் தான் ஊழலைப் பற்றிப் பேசுகிறார்கள்; சட்டத்தின் ஆட்சிபற்றி சத்தம் போட்டுக் குரல் கொடுக்கிறார்கள்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் செத்தவன் கையில் வெற்றிலை கொடுத்ததுபோல நடந்து கொள்வதுதான் இதற்கெல்லாம் காரணம்.

தட்டிக் கேட்க ஆள் இல்லை என்றால், தம்பி (பா.ஜ.க.) சண்ட பிரசண்டம் செய்ய மாட்டானா?

பத்திரிகை


இன்று உலகப் பத்திரிகை நாள். பத்திரிகை மக்களின் கண்களுக்குக் காட்சியாகவும், கருத்துக்குத் தீனியாகவும் இருக்க வேண்டியவை.

ஆனால் நம் நாட்டுப் பத்திரிகைகள் எந்தத் தரத்தைச் சேர்ந்தவை? நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் பத்திரிகையும் ஒன்று என்றார் பகுத் தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.
அதில் என்ன சந்தேகம்?

வெகு காலத்திற்கு முன்பு கூடப் போக வேண் டாம். மகர தீபம் என்பது உண்மையல்ல; செயற்கை யானதுதான்; தேவசம்  போர்டு ஏற்பாடு செய்தபடி அரசு ஊழியர்கள்தான் பொன்னம்பலமேட்டுப் பகுதியில் தீபம் ஏற்று கிறார்கள் என்று தேவசம் போர்டே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறது. அதே நேரத்தில் மகர ஜோதி என்பது இயற்கையானது என்றும் கூறி இருக்கிறது.

பொதுவாக இந்த இரண்டு தகவல்களும் பல ஏடுகளில் வெளிவந்தி ருக்க, தினமலர் (26-4-2011) எப்படி தலைப்புப் போடுகிறது தெரியுமா?

இயற்கையானது மகரஜோதி

என்று தலைப்புப் போடு கிறது - சரி, போட்டுத் தொலையட்டும்.

மகரதீபம் செயற்கையா னதுதான்; மனிதர்களால் ஏற்றப்படுவதுதான்; அதற்கு தெய்வீக சந்தியி ருக்கிறது என்று தேவசம் போர்டு ஒரு போதும் சொன்னதில்லை என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அதி காரப் பூர்வமாக கூறப்பட் டுள்ளதே - அது குறித்து ஒரு வரி இல்லையே ஏன்? இருட்டடிப்பு ஏன்?

நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் பத்திரிகையும் ஒன்று என்று தந்தை பெரியார் கூறியதன் நுண்பொருள் இப்பொழுது விளங்கி இருக்குமே!

விஞ்ஞானத்தை வளர்க்க வேண்டிய ஊட கங்கள் இன்னும் ராசி பலன்களை வெளியிட்டு, மக்களை மடமைக் குழியில் தள்ளி மண்போட்டு மூடு கிறதே. இதைவிட மனிதர் களுக்குச் செய்யக் கூடிய பெருங்கேடு ஒன்று இருக்க முடியுமா?

அதே நேரத்தில் தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட ஏடுகளின் நேர்த்தியும், நேர்மையும் எத்தகையது!

குடிஅரசு இதழின் பக்கங்களை 16 ஆகக் குறைக்க வேண்டிய கட் டாயம் ஏற்பட்டது. இத னால் கட்டுரைகளும், செய்திகளும் வெளியிடு வது பாதிக்கப்படக் கூடாதே என்பதற்காக, விளம்பரங்களைப் பாதி அளவாகக் குறைத்துக் கொண்டு விளம்பரம் தந்தவர்களுக்குப் பெரியார் வருத்தம் தெரி வித்தார். (பெரியார் ஈ.வெ.ரா. - ஆறு. அழகப்பன் - சாகித்திய அகாதெமி வெளியீடு, பக்கம் 60)

பத்திரிகை உலகில் இந்த நேர்மையைக் கடைப் பிடித்தவர் பெரியார் அல் லாமல் வேறு யார்? குடிஅரசு விடுதலை  புரட்சி,  பகுத்தறிவு, உண்மை இவை தந்தை பெரியார் சூட்டிய தனித் தமிழ்ப் பெயர்கள். தமி ழுக்குப் பெரியார் என்ன செய்தார் என்று வினவும் அரைகுறைகளுக்கும் இந்தப் பெயர்களே பதில்!

- மயிலாடன்

Monday, May 2, 2011

முதல் அமைச்சர் கலைஞரின் பதில்கள்


சோவின் நயவஞ்சகம்  தேர்தல் ஆணையத்தின் மாறுபட்ட செயல்பாடுகள்
ஜெயலலிதாவின் வாய்தா ஜாலம்
2ஜி - பா.ஜ.க.வின் ஜனநாயக விரோதப் போக்குகள்
சென்னை, மே 3- 2ஜி அலைக்கற்றைத் தொடர்பான பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி யின் ஜனநாயக நெறிமுறைக்கு எதிரான நடவடிக்கைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து முதல் அமைச்சர் கலைஞர் எழுதியிருப்பதாவது:

கேள்வி :-  துக்ளக் சோ ராம சாமி  அவர்கள், இந்தப் பொதுத் தேர்தலில் ஜெயலலிதா தலைமை யிலான அ.தி.மு.க. தான் வெற்றி பெற வேண்டுமென்று ஆசைப் படுகிறாரே?

சோவின் பழைய கதை!

கலைஞர் :-  தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால், அந்தத் தீர்ப்பை நீங்கள் முழு மனதுடன் ஏற்றுக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு; ஏற்றுக் கொள்வேன்.  வேறுவழி?  ஆனால் அந்த ஏற்பில், முழு மனது என்ன, கால் மனதுகூட இருக்காது.  மக்கள், மாற்றத்தை விரும்புகிறார் கள் என்பது தெளிவாகத் தெரிகிற போது, முடிவு வேறு விதமாக அமைந்தால், அதை எப்படி முழு மனதாக ஏற்க முடியும்? என்று சோ மிகவும் ஆதங்கத்துடன் அங்க லாய்த்துப் பதிலளித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு, ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன் றில், தேர்தலுக்குப் பிறகு நடத்திய ஆய்வு, தி.மு.க. கூட்டணி முன்னணியில் இருப்பதைக் காட்டு வதாக விளக்கியபோது, சோ ராம சாமி அவர்கள், தி.மு.க. முன்னணி யில் உள்ளது என்பதை ஏற்க மறுத்ததோடு; ஜெயலலிதா வெற்றி பெற வேண்டும் என்று ஜெயலலிதா வைப் பாராட்டிப் பதிலுரைத்தார்.  14.1.2002 அன்று  சென்னையில் துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சி யில், சோ ராமசாமி அவர்கள், இப்போது டான்சி உட்பட அய்ந்து வழக்குகளில் ஜெயலலிதா விடுதலை செய்யப் பட்டிருக்கிறார். 

விடுதலை என்று தீர்ப்பு வந்து விட்டதாலேயே ஜெயலலிதா நிரபராதி என்று சொல்ல மாட் டேன். 1991-1996 ஆண்டுகளில் பதவி வகித்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ஊழல் நடந்தது உண்மையே. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் போட்ட வழக்குகளை பொய் வழக்கு என்றும் கூறமாட்டேன். 

அ.தி.மு.க. ஆட்சியில் அதிக அளவுக்கு ஊழல் நடந்தது என்பது மறுக்க முடியாது.  அப்படி நான் குற்றம் சாற்றியதில் எந்தத் தவறும் இல்லை.  குற்றச்சாற்று நிரூபிக்கப் படாததால் விடுதலை செய்யப் பட்டிருக்கிறார்.  அவ்வளவுதான் என்று பேசியதை, இப்போது அவருக்கும், அவரது வாசகர்களுக் கும் நினைவுபடுத்துவது பொருத் தமாக இருக்கும் என்று கருது கிறேன்.  ஜெயலலிதா ஊழல் குற்றம் புரிந்தவர் என்றும், அ.தி.மு.க. ஆட்சி ஊழல் ஆட்சி என்றும் சாடிய அதே சோ ராமசாமிதான், இன்றைக்கு ஜெயலலிதாவுக்கு வக் காலத்து வாங்கி, அ.தி.மு.க. ஆட்சி வரவேண்டுமென்று எண்ணுகிறார்.

எண்ணங்கள் குதிரைகளானால், எண்ணிய நேரத்தில் காத தூரம் பறக்கலாம் என்பது பழமொழி யல்லவா? முழு மனதென்ன, கால் மனதென்ன - மனதையே காலால் மிதித்து நசுக்கி விட்டவர்களுக்கு; நாளொரு சிந்தனை - பொழுதொரு பேச்சு என்ற நயவஞ்சகப் போக்கு இருப்பதில் என்ன ஆச்சரியம்?

பா.ஜ.க.வின் ஜனநாயக நெறிமுறை இதுதானா?

கேள்வி :-  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பிரச்சினை சம்மந்தமான பொதுக் கணக்குக் குழு அறிக்கை யினை, நாடாளுமன்றத்தின்  சபாநாயகருக்கு, திரு.முரளி மனோகர் ஜோஷி அனுப்பி வைத்துள்ளதாகச் செய்தி வந்துள்ளதே?

கலைஞர் :-  இந்தப் பிரச்சினை சம்மந்தமாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர் திரு.முரளி மனோகர் ஜோஷி அவர்கள் தலைமையிலான நாடாளு மன்றத்தின் பொதுக் கணக்குக் குழு விசாரணை செய்தது. இந்தக் குழுவின் அறிக்கை நாடாளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பே, பத்திரிகைகளுக்கு வெளியானது குறித்து ஏற்பட்ட சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை.  21 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவின் 11 உறுப்பினர்கள் அறிக்கையை நிராகரித்து விட் டனர்.

எனினும், பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் திரு.முரளி மனோகர் ஜோஷி, அறிக் கையை நாடாளுமன்றத் தலைவர் மீரா குமார் அவர்களுக்கு அனுப்பி வைத்து விட்டார்.  திரு.முரளி மனோகர் ஜோஷி வகித்துவந்த பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் எனும் பதவிக் காலம் 30.4.2011 உடன் முடிவடைந்து விட்டது.  அவருடைய பதவிக் காலம் முடிவடைந்தாலும், அவருக்குப் பிறகு, அவருடைய கட்சிக்காரர்தான் அந்தப் பொறுப்புக்கு வருவார் என்ற நாடாளு மன்ற நடைமுறையின்படி, திரு.முரளி மனோகர் ஜோஷி அவர்களையே மீண்டும் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக நியமனம் செய்து, நாடாளு மன்ற சபாநாயகர் மீரா குமார் அறிவித்துள்ளார்.

திரு.முரளி மனோகர் ஜோஷி அவர்கள் அனுப்பி வைத்துள்ள அறிக்கை குறித்து பல்வேறு வகையான சர்ச்சைகளும், சந்தேகங்களும் எழுந் துள்ளன. குழுவின் வரைவு அறிக்கையின் நகல் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு, அதன்மீது பத்திவாரியாக உறுப்பினர்களின் கருத்து கேட்கப்பட்டிருக்க வேண்டும்.  அந்த அறிக்கையில் ஏதாவது ஒரு பகுதியோ அல்லது முழுவதுமோ தங்களுக்கு ஏற்புடையது இல்லை என்று உறுப்பினர்கள் கருதினால், அதைப் பற்றி தனித்தனியாக அதே அறிக்கையில் பிற்சேர்க் கையாக பதிவு செய்து கொள்ளலாம். 

குற்றம் சாற்றப்பட்ட வர்களை அழைத்து பொதுக் கணக்குக் குழு விசாரித்திருக்க வேண்டும். குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட வேண்டும் என்பதுதான் நடைமுறை. மாறாக, நாடாளுமன்றத் தலைவருக்கு அனுப்பப்பட் டுள்ளது.  அறிக்கை மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்து, அதனை ஏற்றுக் கொள்வதும், நிராகரித்து விடுவதும், பெரும்பான்மை உறுப்பி னர்களைப் பொறுத்ததாகும்.  திரு.முரளி மனோகர் ஜோஷி பத்திரிகை யாளர்கள் சந்திப்பின்போது, பல உறுப்பினர்கள் வாக்கெடுப்பு வேண்டு மென்றார்கள். சிலர் அதை எதிர்த்தார்கள். எண்ணிக்கை முக்கியமானதல்ல; பின்பற்றக்கூடிய செயல்முறைதான் முக்கியமானதாகும்.  பெரும் பான்மை என்பதன் அடிப்படையில் என்னுடைய நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டியதில்லை.

அறிக்கையினை பெரும் பான்மையினர் என்போர் நிராகரித்து விட முடியாது. (Several members had demanded a division, but some others had opposed it too.  The numbers are not important, the process is.    I don’t have to go by a majority - They cannot reject the report) என்று சொன்னதாக, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் திரு.பவன்குமார் பன்சால் அவர்கள் தெரிவித் திருக்கிறார்.  பா.ஜ.க.வின் மூத்த தலைவரான திரு.முரளி மனோகர் ஜோஷி அப்படிச் சொல்லி யிருந்தால், ஜனநாயகத்தின்மீது அவருக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதைக் காட்டும்.  ஜனநாயகம் என்பது எண்ணத்தை மட்டுமல்ல; எண்ணிக்கையையும் அடிப்படை யாகக் கொண்டதாகும்.

அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி, நாடாளுமன்ற நடவடிக்கைகளையே முடக்கியவர்கள் பா.ஜ.க.வினர்.  அப்படிப்பட்டவர்கள் ஜனநாயக நெறிமுறைகளுக்கும், நாடாளுமன்ற மரபுகளுக் கும் மாறாக, பொதுக் கணக்குக் குழு விவகாரத்தில் நடந்து கொண்டது எப்படி என்பதைத்தான் நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள விரும்பு கிறார்கள். 

இப்போது நடந்துள்ள நிகழ்ச்சிகளை யெல்லாம் பார்க்கும்போது, நாடாளுமன்ற நடை முறைகளைப் பின்பற்றுவதைவிட; அறிக்கையை வேகமாகத் தயாரித்து, அதிலுள்ள அம்சங்களை  வெளியிடும் அவசரம் மட்டுமே தெரிகிறது.

இந்த விவகாரத்தில், சபாநாயகர் முடிவெடுப்பார்; அவரது முடிவை அரசு ஏற்கும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.கபில் சிபல் அவர்கள் கருத்து தெரிவித் திருப்பதையும்;   திரு.முரளி மனோகர் ஜோஷி அவர்களே மீண்டும் பொதுக் கணக்குக் குழுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருப்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.  என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

90 வயதிலும் படிப்பு


கேள்வி :- கேரளாவில், 90 வயதான மூதாட்டி ஒருவர் நான்காம் வகுப்பு தேர்வு எழுதியதாக வெளிவந்த செய்தியைப் பார்த்தீர்களா?

கலைஞர் :- கேரள மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி பாத்திமா பீவி என்பவர், சிறுவயதில் கல்வி கற்க முடியாத நிலை இருந்ததால், தற்போது வயது முதிர்ந்து, 90அய் எட்டிய நிலையிலும் நான்காம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ளார்.  குறைந்தபட்சம் நான்காம் வகுப்பு தேறியிருந்தால் மட்டுமே, அரசின் பல்வேறு சலுகைகளைப் பெறமுடியும் என்ற நிபந்தனை உள்ளதால், அதுவும் தேர்வு எழுத அந்த மூதாட்டிக்கு உந்து சக்தியாக இருந்திருக்கிறது. 

இந்த வயதில் தேர்வு எழுத வேண்டுமென்ற ஆர்வம் காட்டிய பாத்திமா பீவியை நாம் பாராட்டி ஆகவேண்டும். அதனால்தான் அய்யன் திருவள் ளுவர், கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ? என்று கல்வியின் அரிய சிறப்பினை அழகாகச் சொல்லி யிருக்கிறார்.  கேள்வி :- 12ஆம் அய்ந்தாண்டுத் திட்டத்திற்கான வரைவினை தயாரிப்பதற்குரிய முயற்சிகள் தொடங்கி விட்டதாக செய்திகள் வருகின்றனவே?

12ஆம் அய்ந்தாண்டுத் திட்டம்


கலைஞர் :- 2012-2017ஆம் ஆண்டுகளுக்கான 12ஆம் அய்ந்தாண்டுத் திட்டத்திற்குரிய பணிகள் தொடங்கி விட்டன.  இந்தத் திட்டம் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அதற்கான அணுகுமுறை அறிக்கையைத் தயாரித் திடும் முயற்சியில் மத்திய திட்டக்குழு ஈடுபட்டி ருக்கிறது.

அய்ந்தாண்டுத் திட்டங்களுக்கான வரைவுகளைத் தயாரிப்பதில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறைகளிலிருந்து சற்று விலகி, அனைவரும் பாராட்டத்தக்க ஒரு மாற்றத்தை மத்திய திட்டக் குழு உருவாக்கியிருக்கிறது.  அதன்படி, தொடக்கம் முதலே மத்திய மாநில அரசுகளை மட்டுமல்லாமல், திட்டம் தயாரிப்பதில் ஈடுபாடும், அனுபவமும் உள்ள பொதுமக்கள், பேராசிரியர்கள், பொருளாதார நிபுணர்கள், அரசியல் பார்வையாளர்கள் என அனைவருடனும் கலந்தாலோசனை செய்யத் திட்டக் குழு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்க ஒரு மாறுதலாகும்.  இப்படிச் செய்வதால் திட்டம் தயாரிப்பதில் அனைவரையும் இணைத்துக் கொள்ள வும், பல்வேறு வகையான கருத்துக்களை அறிந்து கவனத்தில் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

தேர்தல் ஆணையமும் மாநிலத்துக்கொரு செயல்முறையும்

கேள்வி :- தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி களைப் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்கள் பேசியிருக்கிறாரே?

கலைஞர் :- தேர்தல் நடந்த 5 மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்.   மற்ற மாநிலங்களில் கட்சித் தொண்டர்கள், கட்சியின் சின்னம் பொறித்த தொப்பி அணிந்திருந்தனர்.  மேலும், பிளக்ஸ் பேனர், பொதுக்கூட்டம் என அனைத்தும் நடந்தன.  ஆனால், தமிழகத்தில் மட்டும் தேர்தல் ஆணையம் அதிக கெடுபிடி விதித்துள்ளது.  ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதி முறைகளை தேர்தல் ஆணையம் கடைப்பிடித் துள்ளது.  இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக் கப்படும் என்று திரு.ப.சிதம்பரம் அவர்கள் சிவகங்கையில் பேசியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.

தமிழகத்தில் எத்தகைய கெடுபிடிகள் -  காவல்துறை நடவடிக்கைகள், தேடுதல் வேட்டைகள், ஜனநாயக நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவதில் விதிக்கப்பட்ட வரையறைகள் -  தேர்தல் ஆணை யத்தால் கடைப்பிடிக்கப்பட்டன என்பதை அனை வரும் அறிவர். தேர்தல் ஆணையம் இந்திய அரச மைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு. தேர்தல் ஆணையம் என்பது விருப்பு வெறுப்புகளை அகற்றி, அனைவருக்கும் பொதுவாகவும், நடுநிலையோடும் செயல்பட வேண்டிய ஓர் அமைப்பாகும். ஒவ்வொரு மாநிலத் திலும் வெவ்வேறு அளவுகோல்களை தேர்தல் ஆணையம் கடைப்பிடித்திடக் கூடாது என்பதே சிதம்பரம் அவர்களின் கருத்தாகும். 

தேர்தல் ஆணையத்திற்கான அதிகாரங்கள் வரைய றுக்கப்பட்டு, முறைப்படுத்த வேண்டு மென்பதில், அரசியல் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு இருக்க முடியாது.  ஒரே அமைப்பு, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நடைமுறையைப் பின்பற்றுவது என்பது ஜனநாயகத்தை வளப் படுத்துவதற்கு உதவாது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள எந்தவொரு அமைப்பும், கடிவாள மின்றி ஓடுவதை அரசமைப்புச் சட்டம் அனுமதிக்க வில்லை. திரு.ப.சிதம்பரம் அவர்கள் சுட்டிக்காட்டி இருப்பதைப் போல நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிப்பதுடன், இதுகுறித்து அரசமைப்புச் சட்ட நிபுணர்களையும் கலந்தாலோசித்து முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜனநாயகத்தின் மீதும், நமது அரசமைப்புச் சட்டத்தின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ள அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். மத்திய உள்துறை அமைச்சரின் கருத்து; உதாசீனப்படுத்தக் கூடியதல்ல!

கேள்வி :-2ஜி அலைக்கற்றைப் பிரச்சினை சம்மந்தமாக கழகத்தின் உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் குறித்து ஜெயலலிதா மனம்போன போக்கில் விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே?

கலைஞர் :-    சாத்தான் வேதம் ஓதுகிறது என்ற முதுமொழி யாருக்குப் பொருந்துகிறதோ இல் லையோ, ஜெயலலிதா அம்மையாருக்குப் பெரிதும் பொருந்தும்.  எந்தப் பிரச்சினையைப் பற்றி கருத்து தெரிவித்தாலும், தன்னை எல்லாவித சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டவர் என்பதைப் போலவும், தூய்மை, வாய்மை இவற்றின் உருவகம் என்பதைப் போலவும், அறநெறிகளின் இருப்பிடம் என்பதைப் போலவும் கற்பனை செய்துகொண்டு; பிறர்மீது சேறு வாரி இறைப்பதில் அந்த அம்மையார் மிகவும் கைதேர்ந்தவர் என்பதைத் தமிழக மக்கள் நன்கறிவர்.

27.4.2011 அன்று எனது தலைமையில் நடைபெற்ற கழகத்தின் உயர்நிலைச் செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தைப் பற்றி, கடைந்தெடுத்த தனது தீய எண்ணத்தின் வெளிப்பாடாக  அறிக்கை ஒன்றை ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

அலைக்கற்றை ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தில் -  பூதத்தைப் பூனைக்குட்டி விழுங்கி விட்டதாகக் கூறுவதுபோல, அனுமானமாக பல கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி விட்டதாக இந்தியாவின் தலைமை கணக்காயர் தெரிவித்தது முதலாக, இந்தப் பிரச்சினையில் அரசியல் சதுரங்கம் ஆடுவதற்கு ஓர் ஆதிக்க வட்டாரம் தொடர்ந்து முயற்சித்து வருவதை நாடறியும் என்றும்; தி.மு.க. தலைமை மீது பழி சுமத்துவதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பாகக் கருதி, தொடர்ந்து பல ஏடுகளும், ஊடகங்களும் செய்தி பரப்பி வருவதுடன், இதை ஓர் அரசியல் பிரச்சினையாக்கி, அய்க்கிய முற்போக்குக் கூட்டணியினரிடையே அவநம்பிக்கையை உருவாக்கிடவும், பிரச்சினையைப் பெரிது படுத்தி, மாறுபாடுகளை வளர்த்து கூட்டணியை உடைக்கும் நோக்கத்துடனேயே செயல்பட்டு வருகின்றன என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள் ளதைத் திரித்தும், திசைதிருப்பும் வகையிலும் ஜெயலலிதா விமர்சனம் செய்துள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இழப்பு எவ்வளவு என்பதை அறுதியிட்டு உறுதியாக இதுவரை யாராலும் அளவிட்டுக் கூற இயல வில்லை. 

1 இலட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என்று தனது அறிக்கையிலே சொன்ன தலைமைக் கணக்காயர், நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் முன் விசாரணைக்காக ஆஜரானபோது, ஆதாரம் ஏதுமின்றி அனுமானத்தின் அடிப் படையிலேதான் இந்த இழப்பைச் சொல்லியி ருப்பதாக உறுதிப்படுத்தினார்; வெவ்வேறு கோணத்தில் இழப்பு ஏதேனும் ஏற்பட்டிருக்குமா என்று கணக்கிட்டுப் பார்த்ததாகவும், அதிலே ஒரு கோணத்தில், வெறும் 57 ஆயிரத்து 666 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே அரசுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரியவந்தது என்றும் கூறியிருக்கிறார்.   மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த பா.ஜ. க.வைச் சேர்ந்த அருண் ஷோரி அவர்கள், வெறும் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குத்தான் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று சொல்லியிருக்கிறார். 

புலன் விசாரணை செய்து, குற்றப் பத்திரிக்கைகளை தாக்கல் செய்துள்ள சி.பி.அய்.,  22 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குத்தான் இழப்பு என்று குறிப் பிட்டிருக்கிறது.  நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த முரளி மனோகர் ஜோஷி அவர்களோ 1 இலட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு என்று சொல்லியிருக்கிறார்.  இப்படி ஒவ்வொருவரும் தங்கள் அறிவுக்கும், கற்பனைக்கும் ஏற்ப இழப்பின் அளவை சொல்லியிருக்கிறார்கள்.  இப்படி கருத்தியலான (Notional)ஒன்றை வைத்துக் கொண்டு, ஊதி ஊதிப் பெரிதாக்கும் முயற்சியில் - கழகத்தின் மீது தூசி விழுந்தாலும், அதைத் தூணாக்கும் நடவடிக்கையில் - இன்றைக்கு ஜெயலலிதாவைப் போலவே ஒருசில அரசியல்வாதிகளும், நாளேடு களும், ஊடகங்களும் எத்தனிக்கின்றன என்பதற்கு நிரூபணங்கள் எதுவும் தேவையில்லை.

ஒருசில நாளேடுகளையும், ஊடகங்களையும் தொடர்ந்து படித்தாலும், பார்த்தாலும், இதனை எளிதில் புரிந்து கொள்ளலாம்.   அவர்களது நோக்கமெல்லாம் எப்படியாவது இந்தப் பிரச்சினையைப் பயன் படுத்திக் கொண்டு, அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து தி.மு.க.வை தனிமைப்படுத்தி, அழித்துவிட வேண்டும் என்பதுதான்.

நாளேடுகள் எப்படிப்பட்ட எல்லை வரைக்கும் சென்றுவிட்டன என்பதை உணர்த்திட, இன்றைய நாளேடு ஒன்றி லிருந்து உதாரணம் ஒன்றைக் காட்டட்டுமா? இன்றைய தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரையில், The air in his Gopalapuram fortress resembles that of a big unwieldy family preparing for an impending funeral’’ (பெரியதொரு குடும்பம் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்வதைப் போன்று கோபாலபுரம் கோட்டை தோற்றமளிக் கிறது) என்று எழுதியிருக்கிறார்கள். அவர்களது எண்ணம் எந்த அளவுக்கு கீழ்த்தரமானது, இழிவானது, விபரீதமானது என்பதை நான் விளக்கிடத் தேவையில்லை.

இப்படியெல்லாம் நாளேடுகளும், ஊடகங்களும் வேலிகளைத் தாண்டும்போது, அரசியல் சதுரங்கம் -  ஆதிக்க வட்டாரம் என்று விமர்சிப்பதில் என்ன குறை சொல்ல முடியும்? மனசாட்சியைத் தொட்டுப் பார்த்தால், அப்படிப்பட்டவர்களது உள்நோக்க மும், நச்சு எண்ணமும் நன்றாகப் புரியுமே! கலைஞர் தொலைக்காட்சி தொடங்குவதற்கு நிதி ஆதாரம் எங்கிருந்து வந்தது என்று ஜெயலலிதா கேட்டி ருக்கிறார்.  சன் டி.வியில் என் மனைவி தயாளு அம்மாள் பெற்றிருந்த 20 சதவிகித உரிமையை முழுவதுமாக விட்டுக் கொடுத்ததன் மூலம் 100 கோடி ரூபாய் கிடைத்தது என்ற விவரங் களையெல்லாம் 2008ஆம் ஆண்டிலேயே நான் வெளியிட்டிருந்தேன்; அதை என் குடும்பத் தாருக்குப் பிரித்துக் கொடுத்ததையும் விபரமாகக் குறிப்பிட்டிருந்தேன்.

ஜெயலலிதாவின் கதை என்ன?

ஜெயலலிதா தன்னை மிகப்பெரும் வழக்கறி ஞராகக் கற்பனை செய்துகொண்டு, நிறைய கேள்வி களைக் கேட்டிருக்கிறார்.  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அவைகளுக்கெல்லாம் இப்போது பதில் சொல்வது சட்டப்படி சரியாக இருக்காது.  ஜெயலலிதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 1.7.1991 அன்று அவரிடமிருந்த சொத்து களின் மதிப்பு 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 957 ரூபாய்.  அய்ந்தாண்டுகள் ஆட்சி செய்தபிறகு, 30.4.1996.ல் ஜெயலலிதாவின் சொத்துக்களின் மதிப்பு 66 கோடியே 44 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய்.  ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவித்த வழக்கு, 1997ஆம் ஆண்டிலிருந்து கடந்த 14 ஆண்டுகளாக நடை பெற்று வருகிறது.  அதைப்போலவே, பிறந்தநாள் நன்கொடையாக வந்த 2 லட்சம் டாலர்களை, தனது சொந்தக் கணக்கில் வரவு வைத்துக்கொண்டதால், சி.பி.அய். தொடர்ந்த வழக்கு, 1997ஆம் ஆண்டி லிருந்து கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்குகளில் ஜெயலலிதா ஆஜ ராகாமல், ஒவ்வொரு தடவையும் ஏதாவது கற்பனையான காரணங்களின் அடிப்படையில் வாய்தாவுக்கு மேல் வாய்தா பெற்று, வழக்குகள் முடிவு பெற்று தீர்ப்புகள் வழங்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக கடந்த 14 ஆண்டுகளாக இழுத் தடித்து வருகிறார். வழக்குகளைச் சட்டப்படி நீதிமன்றத்தில் சந்தித்து நிரபராதி என்று நிரூபித்துக் காட்டுவேன் என்று அடிக்கடி சண்டமாருதம் செய்யும் ஜெயலலிதா, இந்த வழக்குகளைத் தொடர்ந்து 14 ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருப்பதேன்? என்பதை நடுநிலையாளர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நிறைவுப் பகுதி முக்கியமானது.  இந்த வழக்கிலும் உண்மையை நிலைநாட்ட முடியும் என்று நம்புவதுடன், அதற்குரிய சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்வதே நம் கடமை என்று இந்த உயர்மட்டக் குழு தீர்மானித்து, அதற்குரிய நட வடிக்கைகளை மேற்கொள்வதென முடிவெடுக் கிறது என்று தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளது.

கழகம், ஜெயலலிதாவைப் போல் அல்லாது, சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு, இந்த வழக்கு வளையத்திலிருந்தும் நிச்சயமாக வெளியே வரும். 

கேள்வி :- தமிழ்நாட்டில் மின் வெட்டைப் பற்றித் தொடர்ந்து ஏடுகள் எழுதுகின்றனவே?

தமிழ்நாட்டில் மட்டும்தான் மின்வெட்டா?

கலைஞர் :-  மின்வெட்டு என்பது தமிழ்நாட்டில் மாத்திரம் நிலவக்கூடிய ஒன்றல்ல.  இந்தியாவில் பல மாநிலங்களிலும் இதே நிலைதான் இன்றளவும் நீடித்து வருகிறது.  கூடுதலாகத் தேவைப்படும் மின்சாரத்தை அதிகச் செலவானாலும் வாங்குவதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் முயற்சி செய்தாலும் கூட, அந்த முயற்சியில் முழு அளவுக்கு வெற்றிபெற முடியாமல் இருப்பதற்குக் காரணம் வேறு மாநி லங்களிலும் உபரி மின்சாரம் இல்லை என்பதுதான்.  நேற்று முன்தினம்கூட நாளேடுகளில் செய்தி ஒன்று வந்தது.  கடந்த 5 ஆண்டுகளாக மிகச் சிறப்பான முறையில் நிருவாகம் நடைபெற்று வருவதாகச் சொல்லப்படும் பீகார் மாநிலத்தில் கூட, மின்தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.  பீகார் மாநி லத்தில் பன்னிரெண்டுக்கும் மேலான நகரங்களில் மின்தட்டுப்பாடு காரணமாகத் தொடர்ந்து குழப்பமான நிலைமை ஏற்பட்டு வருகிறது. 

பல நாட்களாக மின்சார விநியோகமே இல்லை; எங்களால் அதைப் பொறுத்துக்கொள்ள முடிய வில்லை என்று பொதுமக்கள் கூக்குரல் எழுப்பும் அளவுக்கு பீகாரில் மின்தட்டுப்பாடு.  தமிழகத்தைப் பொறுத்தவரை இனி வருங்காலத்தில் மின்சார நிலைமை நிச்சயமாகச் சீராகும். தமிழகத்தில், 2011-2012ஆம் ஆண்டில் 14 ஆயிரத்து 224 மெகாவாட்டும், 2012-2013ஆம் ஆண்டில் 15 ஆயிரத்து 517 மெகாவாட்டும், 2013-2014ஆம் ஆண்டில் 16 ஆயிரத்து 927 மெகாவாட்டும் மின் தேவை இருக்குமென மத்திய மின்துறை ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.  இப்படி வளரும் மின் தேவையை கருத்திலேகொண்டு, மின் உற்பத்தித் திறனைக் கூட்டுவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ளும் என்றும் இன்றைய அரசு உறுதியளித்துள்ளது.

கேள்வி :- மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயை அனுமதிக்கக் கூடாது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் இராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறாரே?

கலைஞர் :- மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் சம்மந்தமாக 2010ஆம் ஆண்டிலேயே என்னுடைய கருத்தை வெளியிட்டிருக்கிறேன்.  25.1.2010 அன்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களை அவரது இல்லத்தில் பூவுலகின் நண் பர்கள் அமைப்பின் தலைவர் டாக்டர் சிவராமன், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்கத் தலைவர் திரு.ஆர்.செல்வம், நிருவாகி டாக்டர் ஜீவானந்தம், பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பின் அமைப்பாளர் நடிகை திருமதி.ரோகிணி, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழுத் தலைவர் திருமதி ஷீலு, பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பின் அமைப்பாளர்கள் திருமதி.சங்கீதா, திரு.ராம் ஆகியோர் சந்தித்து, மரபணு மாற்றுக் கத்தரிக்காயை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டனர். 

அவர்களின் மனுவினை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் கலைஞர் அதுபற்றி அரசு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காது என்றும், வேளாண்மைத் துறை அமைச்சர் இதுகுறித்து சட்டப் பேரவையில் விளக்கமாகக் கூறியுள்ளார் என்றும் சுட்டிக்காட்டியதுடன் - எந்தவொரு அதிகாரியும் தமிழக அரசு முடிவெடுக்கும் வரையில் இதனை விற்கவோ, பயிரிடவோ அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியிருப்பதாக அவர்களிடம் தெரிவித்தார் என்று குறிப்பிட்டதை நினைவு படுத்துகிறேன்.

-இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் பதிலளித்தார்

அய்.நா. அமைத்த வல்லுநர் குழு என்ன சொல்கிறது? - 2


பொறுப்பேற்பது என்ற இலங்கை அரசின் கருத்து அனைத்துலக தரத்துக்கு ஒத்தவையாக இல்லை என்ற முடிவுக்கு இக் குழு வந்துள்ளது. உரிமை மீறல்கள் பற்றிய குற்றச் சாற்றுகளுக்கு உண்மையான நோக் கத்துடன் நிவாரணம் அளிக்கவும்,  பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் மற்றும் கவுரவம் ஆகியவற்றைத் தங்களின் பொறுப்பேற்றுக் கொள்ளும் நடவடிக்கையின் அணுகுமுறையில் மய்யமாக வைக்கவும் அரசு முன்வராத வரையில், இலங்கை அரசு மேற் கொள்ளும் நடவடிக்கைகள் அனைத் தும் அனைத்துலக எதிர்பார்ப்பு களுக்கு ஏற்ப இருக்கத் தவறிவிடும்.

பாடம் கற்றுக்கொண்டு பரிகாரம் தேடும் ஆணையம்
பயனுள்ள வகையில் செயல்படவில்லை


பாடம் கற்றுக்கொண்டு பரிகாரம் தேடுவதற்கான ஆணையம்   அமைக்கப்பட்டது, சிறீலங்கா வின் போராட்டம் பற்றி தேசிய அளவி லான ஒரு விவாதம், பேச்சு வார்த்தை நடத்துவதற்குக் கிடைத்த பயன் நிறைந்த ஒரு வாய்ப்பாகும்.

ஆனால், அதன் உறுப்பினர்களில் சிலர் முரண்பட்ட நோக்கங்களில் ஆர்வம் கொண்டவர்களாக இருந்த தால் ஆணையத்தின் நோக்கம் சமரசப் படுத்திக் கொள்ளப் பட்டு, சுதந்திரம் மற்றும் நடுநிலைமை வகித்தல் என்ற முக்கியமான அனைத்துலக தரங் களுக்கு ஏற்றவாறு இந்த ஆணையம் செயல்படவில்லை.

அனைத்துலக மனிதநேய, மனித உரிமை சட்டங்களை பெரும் அளவில் மீறியதாகக் கூறப் பட்ட குற்றச் சாற்றுகளைப் பற்றி புலன் விசாரணை செய்து கண்டு பிடிக்கவோ  அல்லது பல பத்தாண்டு காலமாக தீராமல் நீடித்துவரும் இனப் போராட் டத்தின் அடிப்படைக் காரணங்களைக் கண்டு பிடித்து பரிசீலனை செய்யவோ  இயலும் அளவுக்கு இந்த ஆணையத் தின் பணியும், அது செயல்படும் முறையும் இருக்கவில்லை. போரின் இறுதிக் கட்டத்தின் போது என்ன நடந்தது என்பதைப் பற்றி உண்மையைக் கண்டறியும் நோக்கத் துடன் இந்த ஆணையம் செயல்பட வில்லை.

போரின்போது இரு பக்கத் தினரும் நிகழ்த்திய மோசமான மனித உரிமை மீறல்ககள் பற்றி முறையாகவும், விருப்பு வெறுப்பின்றி நடு நிலையாக வும் புலன் விசாரணை செய்ய இந்த ஆணையம்  முன்வரவில்லை. பாதிக்கப் பட்டவர்களின் துன்பங்களுக்கும் கவுரவத்திற்கும் முழு மரியாதை அளிக்கும் அணுகுமுறை ஒன்றினை இந்த ஆணையம் மேற்கொள்ள வில்லை. தனிப்பட்ட முறையில் தங் களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடிய சூழ்நிலையிலும் கூட சாட்சியம் அளிக்க முன் வந்தவர்களுக்குப் போதுமான பாது காப்பை இந்த ஆணையம் வழங்கவில்லை.

மொத்தத்தில்,   பொறுப்பேற்று நிவா ரணம் அளிக்கும் நடைமுறையை அனைத் துலக தரத்திற்கு ஏற்ற வகையில் பயன் நிறைந்த வகையில் பின்பற்றாத இந்த ஆணையம் முற்றிலும் தவறாக செயல்படுவ தாகவே அமைந்துவிட்டது.

நீதித்துறையும், ராணுவ நீதிமன்றங்களும் கூட
பயனுள்ள வகையில் செயல்படவில்லை



உரிமை மீறல்களுக்குப் பொறுப் பேற்று நிவாரணம் அளிக்கும் பணியில் நீதித் துறை ஒரு முக்கியமான பங்கை ஆற்ற வேண்டும். என்றாலும், இலங்கை நீதித் துறையின் கடந்த கால செயல்பாடுகள், தற்போதைய கட்டமைப்பு ஆகியவற்றைப் பரி சீலனை செய்ததன் அடிப்படையில்,  தற்போது நிலவும் அரசியல் சூழ் நிலையில் அதனால் நீதி வழங்க முடியும் என்ற நம்பிக்கை இந்தக் குழுவிற்கு சிறிதும் இல்லை. அதற் கான ஆற்றல் அதனிடம் இருந்தாலும், அதற்கான அரசியல் உறுதிப்பாடு இல்லாமல் போனதே அதன் காரண மாகும்.

குறிப்பாக, அதிகப்படியான அதிகாரங்கள் அதிபரிடம் குவிக்கப் பட்டுள்ளதால்,  அண்மைக் காலமாக அட்டார்னி ஜெனரல் பதவியின் சுதந்திரம் பலவீனப்படுத்தப்பட்டு விட்டது. மேலும்,  மனித உரிமைகளுக்கான உத்திரவாதம் அளிப்பதை நிலைநாட்டும்போது,  அலு வலர்கள் செய்த தவறுகளை சரிசெய்ய இயன்ற ஒரு நீதித்துறை நடைமுறை செயல் படுவதற்கு, நெருக்கடி நிலை சட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதும், அத்துடன்  தற்போதுள்ள தீவிர வாத தடுப்புச் சட்டத்தின்  நிலையும் சேர்ந்து முக்கியமான தடைகளாக விளங்குகின்றன.

அது போன்றே, போரின் இறுதிக் கட்டத்தின் போது நடைபெற்ற உரிமை மீறல் மற்றும் இதர குற்றச்சாற்றுகள் நம்பத்தக்கவை என்று அடையாளம் கண்ட போதும், ராணுவ நீதிமன்றங்கள்  பயன் நிறைந்த,   பொறுப்பேற்று நிவாரணம் அளிக் கும் ஒரு நடைமுறையைப்  பின்பற்ற வில்லை.

எண்ணற்ற மனித உரிமை மீறல் பிரச்சினைகளை விசாரிக்க கடந்த முப்பதாண்டு காலத்தில் விசாரணை ஆணையங்கள் பல நியமிக்கப்பட்டுள்ளன. முக்கியமான உண்மைகளைக் கண்டறியும் நோக்கத்தை அவற்றில் சில எட்டியுள்ளன என்றாலும், மொத்தத்தில் அவ்வாறு அடையாளம் காணப்பட்ட உரிமை மீறல்களுக்குப் பொறுப்பேற்று நிவாரணம் வழங்குவதில் ஒருங்கிணைந்த முறையில் செயல்பட இந்த விசாரணை ஆணையங் கள் தவறி விட்டன.

பல ஆணையங்கள் தங்களின் விசாரணை அறிக்கைகளைக் கூட தயாரித்து அளிக்கவில்லை. அப் படியே அறிக்கைகளை அளித்த வழக்கு களிலும், ஆணையத்தின் பரிந்துரைகள் எவையும் நடைமுறைப் படுத்தப்படவில்லை.

சிறீலங்காவின் மனித உரிமை ஆணை யமும் உரிமை மீறல்களுக்குப் பொறுப்பேற்று நிவாரணம் வழங்குவதில் குறிப்பிடத்தக்க பங்காற்ற இயலும்.  என்றாலும், காணாமல் போன குடிமக்களைப் பற்றிய வழக்கு களைக் கண்காணிப்பதிலும்,  காவலில் வைக்கப்பட்டிருக்கும் மக்களின் நலனைப் பேணுவதிலும் இந்த ஆணையத்துக்கு அரசியல் உறுதிப்பாடும், நிதிஆதாரங் களும் உள்ளதென்பது மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்று இந்தக் குழு நம்பி எதிர்பார்க்கிறது. ஆனால் அது முடியுமா என்பதில் இந்த குழு இன்னமும் சந்தேகம் கொண்டதாகவே உள்ளது.

உரிமை மீறல்களுக்குப் பொறுப்பேற்று
நிவாரணம்  வழங்குவதில் உள்ள இதர தடைகள்


நாட்டில் நீடித்த அமைதி நிலவுவதற்கு இடையூறு விளைவிக்கும், உரிமை மீறல் களுக்கு உண்மையாகப் பொறுப்பேற்று நிவாரணம் அளிக்கும் முயற்சிகளை முறியடிக்கும், தீர்க்கப்படாத சமகாலப் பிரச்சினைகள் பல இலங்கையில் உள்ளன என இந்தக் குழு காண் கிறது. அத்தகைய பிரச்சினைகளில் முக்கியமானவை வருமாறு:

1) அரசியல் அங்கீகாரத்திற்கும், சுயஆட்சி உரிமைக்குமான தமிழர் களின் விருப்பத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததும், இலங்கை அரசு பின்பற்றிய ராணுவ நடவடிக்கையின் காரணமாக பெருமளவு மனித உயிர் இழப்பு ஏற்பட்டதை  அரசு மறுப்பதும்.

2) இந்தப் போராட்டத்திற்கு மய்ய மாக விளங்கிய உண்மையான அல்லது கற்பனை செய்து கொள்ளப்பட்ட, இனத்தின் அடிப்படையில் அரசியல், சமூக, பொருளாதார களங்களில் ஒதுக்கிவைப்பது என்ற தற்போது பின்பற்றப் படும் கொள்கைகள்.

3) நெருக்கடி நிலை சட்டங்கள் மற்றும் தீவிரவாத தடுப்புச் சட்டம் மட்டுமல்லாமல் போர்க்கால நடவடிக்கை களையும் தொடர்வது, பழைய போராட்ட பகுதிகளைத் தொடர்ந்து ராணுவப் பகுதிகளாக அறி வித்து, துணை ராணுவப் படையை நிலை கொள்ளச் செய்து பயன்படுத்தி வருவது ஆகியவை அனைத்தும் அச்சமும் வன்முறையையும் நிறைந்த ஒரு சூழலைத் தொடரச் செய்வது.

4) ஜனநாயக ஆட்சிக் கொள் கைக்கு மாறாக, ஊடகங்களின் மீது கட்டுப்பாடுகளை விதித்தல், மக்களின் அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத் துதல்.

5) பல பத்தாண்டு காலமாக விடு தலைப்புலிகளுக்கு முக்கியமான தார்மீக மற்றும் பொருளளவிலான ஆதரவை அளித்து வந்த தமிழ் மக்களின் பங்கு. வன்னியில் நடந்த மனிதநேயமற்ற பேரழிவுக்கு விடுதலைப்புலிகளுக்கும் பங்குண்டு என்பதை அவர்களில் சிலர் ஒப்புக் கொள்ள மறுப்பது நீடித்த அமைதிக் கும், உரிமை மீறல்களுக்குப் பொறுப் பேற்று நிவாரணம் வழங்குவதில் மேலும் ஒரு தடையை ஏற்படுத்தி வருகிறது.
(தொடரும்)
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

அய்.நா. அமைத்த நிபுணர் குழு என்ன சொல்கிறது? - 1


(இலங்கைப் போரின்போது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள், நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் பற்றி அய்.நா. அமைத்த நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கை விவரம்)

இலங்கைப் போரின்போது இலங்கை ராணுவத்தினால்  இழைக்கப் பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை செய்வதற்காக, அய்க்கிய நாடுகள் அவை அமைத்த நிபுணர் குழு தனது விசாரணையை நடத்தி முடித்து 26-4-2011 அன்று தனது அறிக் கையை அய்.நா. பொதுச் செயலாள ரிடம் அளித்து உள்ளது.

இலங்கை ராணுவம் பெரும் அளவில் போர்க்குற்றங்கள் புரிந்துள்ள தாகவும், மனித உரிமை மீறல்களைச் செய்திருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவித்திருப்பது உலகெங்கும், குறிப்பாக தமிழ்நாட்டில் பெரும் பதற் றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி யுள்ளது. ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசினை அய்க்கிய நாடு கள் நீதிமன்றம் விசாரித்து தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கட்சி பாகுபாடு இன்றி அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அமைப் புகளும்  போராட்டங்கள், ஆர்ப்பாட் டங்களை நடத்தி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

அய்.நா.வின் நிபுணர் குழு அளித் துள்ள அறிக்கையில் என்னதான் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை சுருக்கமாக இப்போது பார்க்கலாம். இந்தக் குழுவின் அறிக்கையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் கீழே மொழி மாற்றம் செய்யப்பட்டு அளிக்கப்படுகிறது.

குழுவின் பணி பற்றிய திட்டம்

குழுவிற்கு அளிக்கப்பட்ட பணியில் உண்மையைக் கண்டறிவது அல்லது புலன் விசாரணை செய்வது என்பது அடங்காது. பல மனித உரிமை ஒப்பந் தங்களில் சிறீலங்கா கையொப்ப மிட்டுள்ளது என்பதால், அனைத்துலக மனிதநேய, மனித உரிமை சட்ட மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்து தண்டிக்கக் கடமைப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற  நீடித்த போரின் சோக விளைவுகளால் துன்பமடைந்தவர்களின் உரிமைகள் மற்றும் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று இக் குழு ஆலோசனை தெரிவித்துள்ளது. பொதுவாகப் போர்களின் போது, பெண்கள், குழந்தைகள், முதியோர் பெரிதும் துன்பத்திற்கு உள்ளாவார்கள் என்ற நியதிக்கு இலங்கையும் விதிவிலக்காக இருக்கவில்லை.

உண்மையாக இருக்கும் என்று கருதப்படும் குற்றச்சாற்றுகள்


அனைத்துலக மனித நேய  மற்றும் அனைத்துலக மனித உரிமை சட்டங் கள் பெரும் அளவில் இலங்கை அரசி னால் மீறப்பட்டுள்ளன. அக்குற்றங் களில் சில போர்க் குற்றங்கள் மற்றும் மனிதஇனத்துக்கு எதிரான குற்றங் கள் என்று கருதப்படத் தக்கவை.

2008 செப்டம்பர் மற்றும் 2009 மே 19 ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், வன்னிப் பகுதியில்  தனது ராணுவ நடவ டிக்கைகளை தீவிரப்படுத்திய இலங்கை அரசு பெரும் அளவில் பரந்த நிலப் பரப்பில்  விமானம் மற்றும் கவச வாகனங்களின் மூலம் குண்டுகள் போட்டதனால் போருக்குத் தொடர்பற்ற அப்பாவி பொது மக்கள் பெரும் எண்ணிக்கையில் கொல் லப்பட்டனர்.  வன்னி மக்களை முழுவதுமாக அடக்கி ஒடுக்கும் வகையில் இந்த ராணுவ நடவடிக்கை அமைந்திருந்தது.

போர் நடக்கும் பகுதியின் அளவு நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டு வந்த நிலையில், 330,000 பொதுமக்கள் அப்பகுதியில் சிக்கிக்கொண்டு ராணுவத்தின் குண்டு வீச்சில் இருந்து தப்பிக்க இங்கும் அங்கும் ஓடிச் சென்றனர். அரசோ ஊடகங் களையும், மற்ற விமர்சகர்களையும் அச் சுறுத்தி எந்தச் செய்தியையும் அவர்கள் வெளியிட்டுவிடாதபடி பார்த்துக் கொண் டது. அரசின் வெள்ளை வேன்களில் மக்கள் கடத்திச் செல்லப்பட்டனர்;  அப்படிக் கடத்திச் செல்லப்பட்டவர்கள் காணா மலேயே போயினர். பெரும்பாலான பொது மக்களின் சாவு போரின் இறுதிக் கட்டத்தின் போது அரசு ராணுவத்தினால்  போடப்பட்ட குண்டுகளினால் நேர்ந்தவைதான்.

மருத்துவமனைகள்மீது குண்டு மழை பொழிந்த இலங்கை அரசு முன்னிலையில் இருந்த மருத்துவ மனைகள் மீதும் அரசு அடிக்கடி குண்டு மழை பொழிந்தது. வன்னியில் இருந்த அனைத்து மருத்துவமனைகள் மீதும் விமானம் மூலமும், கவசவாகனங்கள் மூலமும் குண்டுகள் வீசப்பட்டன. அவற் றில் சில மருத்துவமனைகள் தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாகின. இத்த னைக்கும் அந்த இடத்தில் மருத்துவமனை உள்ளது என்பது அரசுக்கு நன்றாகவே தெரியும்.

பொதுமக்களுக்கு உணவு, மருந்துகள் கிடைக்காமல் அரசு பார்த்துக் கொண்டது

போர்ப் பகுதியில் இருந்த பொது மக்களுக்கான உணவு, மருந்து போன்ற மனிதநேய உதவிகள் கிடைக்காதபடி அரசு பார்த்துக் கொண்டது, ஏற்கெனவே மக்கள் பட்டு வந்த துன்பத்தைப் பெருக்குவதாக அமைந்தது. இதற்காக போர்ப் பகுதியில் இருக்கும் பொதுமக்களின் எண்ணிக் கையை அரசு வேண்டுமென்றே குறைத்துக் கூறியது. 2009 ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தில் பத்தாயிரக்கணக் கான மக்கள் உயிரிழந்தனர். இறுதிக்கட்டப் போரின் போது ஒருசில நாட்களில் நடந்த படுகொலையில் பொது மக்களில் பலர் அடையாளம் தெரியாதபடி இறந்து போயினர்.

சந்தேகப்பட்டவர்கள் எந்தவித விசாரணையுமின்றி கொல்லப்பட்டனர்

போர் முடிந்த பிறகு, போர்ப் பகுதியை விட்டு உயிர் பிழைத்து வந்த மக்களுக்கு உணவு, மருந்து மற்றும் இதர அடிப்படை வசதிகளை அளிக்காமல் அரசு மேலும் அவர்களைத் துன்புறுத்தியது. அவ்வாறு உயிர் பிழைத்து வந்த பொதுமக்களில் விடுதலைப் புலிகள் இருக்கிறார்களா என்று சோதனை செய்யும் பணி வெளிப் படையாகவோ, வெளியாட்கள் காணும் படியோ நடைபெறவில்லை.

சந்தேகத்தின் மீது பொதுமக்களிடமிருந்து பிரித்து வைக்கப் பட்டவர்கள் எந்த வித விசாரணை யுமின்றி கொல்லப்பட்டனர். பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளா யினர். மற்றவர்கள் காணாமலேயே போய் விட்டனர். இந்த விவரங்களெல்லாம் பாடம்  கற்றுக்கொண்டு பரிகாரம் தேடுவதற்கான ஆணையத்தின் (Lessons Learnt and Reconciliation Commission)  முன் சாட்சியம் அளித்தபோது காணாமல் போனவர்களின் மனைவிகளும், உறவினர் களும் கூறியவையாகும்.

புலம் பெயர்ந்த மக்கள் அனைவரும் கம்பி வேலியிடப்பட்ட முகாம்களில் அடைக்கப்பட்டனர். இந்த முகாம்களில் கணக்கில்லாமல் மக்கள் கால்நடைகளைப் போல் அடைக்கப்பட்டதால் அவர்களின் நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்தது. அடிப்படை தேவைகளான தண்ணீர், உணவு, மருந்து போதுமான அளவில் வழங்கப்படவில்லை. சமூக பொருளாதார உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டன. இதன் காரணமாக பலர் தேவையின்றி உயிரிழக்க நேர்ந்தது. இந்த முகாம்களில் இருந்த மக்களில் சிலர் விசா ரணை என்ற பெயரில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

லங்கை  அரசின் மனித உரிமை மீறல்களை விசாரணைக் குழு வகைப்படுத்திக் கூறியுள்ளது

மொத்தத்தில், இலங்கை அரசு கீழ்க் கண்ட அய்ந்து தலைப்புகளிலான உரிமை மீறல்களைச் செய்துள்ளது என்ற குற்றச்சாற்றுகள் உண்மையானவை என்று இந்தக் குழு கண்டுபிடித்துள்ளது.

1) பரவலாக குண்டுகள் வீசியதன் மூலம் போருக்கு தொடர்பற்ற பொது மக்களைக் கொன்றது.

2) மருத்துவமனைகள் மற்றும் மனித நேய அமைப்புகள் மீது குண்டு வீசியது.

3)  மனிதாபிமான உதவிகளைச் செய்ய மறுத்தது.

4) போரின்போது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பி உயிர் பிழைத்தவர்கள் ஆகிய வர்களின் மனித உரிமைகள் மீறப்பட் டுள்ளன. இம்மக்களில் புலம் பெயர்ந்த பொது மக்களும், விடுதலைப் புலிகள் என்று சந்தேகப்பட்ட மக்களும் அடங்குவர்.

5) போர் நடக்கும் எல்லைக்கு வெளியே நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள். ஊடகத் தினர் மற்றும் அரசை விமர்சித்த மற்றவர் களும் இதில் அடங்குவர்.

மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பேற்று நடவடிக்கை மேற்கொள்வது

அனைத்துலக மனிதநேய அல்லது மனித உரிமை சட்ட மீறல்களுக்குப் பொறுப்பேற்று நடவடிக்கை மேற்கொள்வது ஒருவர் தனது விருப்பத்தின்படி மேற் கொள்வது அல்லது மேற்கொள்ளாமல் இருக்கக் கூடியதல்ல. உள்நாட்டு, அனைத் துலக சட்டங்களின்படி அது ஒரு கடமை யாகும். இந்த சட்ட மீறல்கள் பற்றி தீவிர மான விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவற்றிற்குப் பொறுப்பானவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும், இலங்கை ராணுவ தளபதிகளோ அல்லது மூத்த அரசு அதிகாரிகளோ, யாராக இருந்தாலும் அவர்கள் மீது  அனைத்துலக சட்டங்கள் படி குற்றம் சுமத்தப்பட்டு குற்றவியல் வழக்கு தொடரப் படவேண்டும்.

உரிமை மீறல்களில் தனக்கு உள்ள பங்கு, பொறுப்பை அரசு ஒப்புக் கொள்ள வேண்டும்

இவ்வாறு உரிமை மீறல்களுக்குப் பொறுப்பேற்பது என்பதில் உண்மை யைக் கண்டறிவது, பாதிக்கப்பட்டவர் களுக்கு நியாயம் வழங்குவது, அவர்களுக்குப் பரிகாரம் செய்வது ஆகியவையும் அடங்கும்.

குடிமக்களின் உரிமைகள் மீறப்பட்டதில் தனக்கும் பங்கும் பொறுப்பும் உண்டு என்பதை அரசு ஒப்புக் கொள்வதும் இதில் அடங் கும். அய்க்கிய நாடுகள் அவையின் கொள்கையைக் கருத்தில் கொண்டு, பொறுப்பேற்று நடவடிக்கை எடுப்பது என்பது, அனைவருக்கும் பொருந்தும் ஒரே மாதிரியானதாக இருக்க வேண் டும் என்றோ அல்லது அயல்நாடுகளில் கடைபிடிப்பது போன்று இருக்க வேண்டும் என்றோ  இந்தக் குழு கூறவரவில்லை.

அதற்கு மாறாக,  தேசிய மதிப்பீடுகள், பெரும்பாலான குடிமக்கள் பங்கேற்பு, அவர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்கும்  நடைமுறை அமைய வேண்டியதன் தேவையை இக்குழு வலியுறுத்துகிறது.

என்றாலும், இந்த தேசிய நடை முறையும் அனைத்துலக தரத்துக்கு ஏற்றதாக இருக்க வேண்டியது அவசி யம்.

எனவே  பொறுப்பேற்று நட வடிக்கை மேற்கொள்ளும் சிறிலங்கா வின் அரசின் நடைமுறை அனைத் துலக தரம் மற்றும் ஒப்பிடத் தக்க அனுபவங்கள் ஆகியவற்றின்படி மதிப்பிடப்படுவதுடன்,  இறுதிக்கட்டப் போரின் போது பாதிக்கப்பட்டவர்கள் உண்மையை அறிவதற்கும், நியா யத்தைப் பெறுவதற்கும், பரிகாரங்கள் பெறுவதற்கும் தங்களுக்கு உள்ள உரிமைகளை அறிந்துகொள்வதற்கு எந்த அளவுக்கு அனுமதிக்கப்படு கிறார்கள் என்பதை வைத்தும் மதிப்பிடப்படும்.

உரிமை மீறல்களுக்குப் பொறுப்பேற்று நிவாரணம் வழங்கும் இலங்கை அரசின் நடைமுறை தவறானது

முன்னிருந்த நிலையை ஏற் படுத்தும் வகையில் நீதி வழங்குவதை வலியுறுத்தி உரிமை மீறல்களுக்குப் பொறுப்பேற்று பாதிக்கப்பட்டவர் களுக்கான பரிகாரங்களை  வழங்கு வதில் ஒரு சமநிலையைக் கடைப்பிடிக்க விரும்புவதாக அரசு தெரிவித்துள்ளது. முன்னிருந்த நிலையை ஏற்படுத்தித் தரும் நீதி மற்றும் தண்டிக்கும் நீதி ஆகியவற்றிடையே ஒன்றைத் தேர்ந் தெடுப்பது என்று கூறுவது ஒரு தவறான பகுப்புக்கு வழிகோலிவிடும். இரண்டுமே தேவையானவைதான்.

உண்மை, நீதி மற்றும் நிவாரணம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்டவர்களை மய்யமாகக் கொண்டு உண்மையாகப் பொறுப் பேற்பதில் தீவிரவாதத்திலிருந்து குடிமக்களைப் பாதுகாக்க முன்பிருந்த அரசுக் கொள்கைகள் தவறிவிட்டன என்ற குழப்பமான அரசியல் பொறுப்புக் கண்ணோட்டத்தை  அளிப்பதால்,  முன்னிருந்த நிலையிலான நீதி வழங் குவது என்ற அரசின் கருத்து தவ றானது என்று இக்குழு கருதுகிறது.
(தொடரும்)
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

2ஜி அலைக்கற்றை இழப்பு: ஆளாளுக்கு கற்பனையாக ஒவ்வொன்றைச் சொல்வதா?


முதலமைச்சர் கலைஞர் சாட்டையடி கேள்வி

சென்னை, மே.2- 2ஜி அலைக்கற்றை பிரச்சினை யில், ஜெயலலிதாவைப்போல் அல்லாது, இந்த வழக்கு வளையத்தில் இருந்து தி.மு.க. நிச்சயம் வெளியே வரும் என்று முதல்-அமைச்சர் கலைஞர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, முதல்-அமைச்சர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி:-2ஜி அலைக்கற்றை பிரச்சினை சம்பந்த மாக கழகத்தின் உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து ஜெயலலிதா மனம் போன போக்கில் விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே?

பதில்:-எந்தப் பிரச்சினையைப் பற்றி கருத்து தெரிவித்தாலும், தன்னை எல்லாவித சந்தேகத் திற்கும் அப்பாற்பட்டவர் என்பதைப்போலவும், தூய்மை, வாய்மை இவற்றின் உருவகம் என்பதைப் போலவும், அறநெறிகளின் இருப்பிடம் என்பதைப் போலவும் கற்பனை செய்து கொண்டு; பிறர் மீது சேறு வாரி இறைப்பதில் அந்த அம்மையார் மிகவும் கைதேர்ந்தவர் என்பதை தமிழக மக்கள் நன்கறிவர்.

27-4-2011 அன்று எனது தலைமையில் நடை பெற்ற கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தைப் பற்றி, கடைந்தெடுத்த தனது தீய எண்ணத்தின் வெளிப்பாடாக அறிக்கை ஒன்றை ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

அலைக்கற்றை ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தில்-``பூதத்தை பூனைக் குட்டி விழுங்கிவிட்டதாக கூறுவதுபோல, அனு மானமாக பல கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி விட்டதாக இந்தியாவின் தலைமை கணக்காயர் தெரிவித்தது முதலாக, இந்தப் பிரச்சினையில் அரசியல் சதுரங்கம் ஆடுவதற்கு ஓர் ஆதிக்க வட்டாரம் தொடர்ந்து முயற்சித்து வருவதை நாடறியும்'' என்றும்;

``தி.மு.க. தலைமை மீது பழி சுமத்துவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பாக கருதி, தொடர்ந்து பல ஏடுகளும், ஊடகங்களும் செய்தி பரப்பி வருவதுடன், இதை ஓர் அரசியல் பிரச்சினையாக்கி, அய்க்கிய முற்போக்கு கூட்டணி யினரிடையே அவநம்பிக்கையை உருவாக்கிடவும், பிரச்சினையை பெரிதுபடுத்தி, மாறுபாடுகளை வளர்த்து கூட்டணியை உடைக்கும் நோக்கத்து டனேயே செயல்பட்டு வருகின்றன'' என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை திரித்தும், திசை திருப்பும் வகையிலும் ஜெயலலிதா விமர்சனம் செய்துள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இழப்பு எவ்வளவு என்பதை அறுதியிட்டு உறுதியாக இதுவரை யாராலும் அளவிட்டுக்கூற இயல வில்லை. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என்று தனது அறிக்கையிலே சொன்ன தலைமைக் கணக்காயர், நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் முன் விசாரணைக்காக ஆஜரானபோது,

ஆதாரம் ஏதுமின்றி அனுமானத்தின் அடிப்படை யிலேதான் இந்த இழப்பைச் சொல்லியிருப்பதாக உறுதிப் படுத்தினார்; வெவ்வேறு கோணத்தில் இழப்பு ஏதேனும் ஏற்பட்டிருக்குமா என்று கணக் கிட்டுப் பார்த்ததாகவும், அதிலே ஒரு கோணத்தில், வெறும் 57 ஆயிரத்து 666 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே அரசுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரியவந்தது என்றும் கூறியிருக்கிறார்.

மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்ச ராக இருந்த பா.ஜ.க.வை சேர்ந்த அருண் ஷோரி வெறும் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குத்தான் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று சொல்லியிருக் கிறார். புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரி கைகளை தாக்கல் செய்துள்ள சி.பி.அய்., 22 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குத்தான் இழப்பு என்று குறிப்பிட்டிருக்கிறது.

நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் தலைவர் பா.ஜ.க.வை சேர்ந்த முரளி மனோகர் ஜோஷியோ ஒரு லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு என்று சொல்லியிருக்கிறார். இப்படி ஒவ்வொருவரும் தங்கள் அறிவுக்கும், கற்பனைக்கும் ஏற்ப இழப்பின் அளவை சொல்லியிருக்கிறார்கள்.

ஊதி ஊதிப் பெரிதாக்க...

இப்படி ``கருத்தியலான'' ஒன்றை வைத்துக் கொண்டு, ஊதி ஊதிப் பெரிதாக்கும் முயற்சியில்- கழகத்தின் மீது தூசி விழுந்தாலும், அதைத் தூணாக் கும் நடவடிக்கையில்-இன்றைக்கு ஜெயலலிதாவைப் போலவே ஒருசில அரசியல்வாதிகளும், நாளேடு களும், ஊடகங்களும் எத்தனிக்கின்றன என்பதற்கு நிரூபணங்கள் எதுவும் தேவையில்லை.

ஒருசில நாளேடுகளையும், ஊடகங்களையும் தொடர்ந்து படித்தாலும், பார்த்தாலும், இதனை எளிதில் புரிந்து கொள்ளலாம். அவர்களது நோக்க மெல்லாம் எப்படியாவது இந்த பிரச்சினையை பயன்படுத்திக்கொண்டு, அய்க்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க.வை தனிமைப்படுத்தி, அழித்துவிட வேண்டும் என்பதுதான்.

நாளேடுகள் எப்படிப்பட்ட எல்லை வரைக்கும் சென்றுவிட்டன என்பதை உணர்த்திட, இன்றைய நாளேடு ஒன்றில் இருந்து உதாரணம் ஒன்றை காட்டட்டுமா?. இன்றைய ``தி நியூ இன்டியன் எக்ஸ் பிரஸ்'' ஆங்கில நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரையில், ``பெரியதொரு குடும்பம் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்வதைப் போன்று கோபாலபுரம் கோட்டை தோற்றமளிக் கிறது'' என்று எழுதியிருக்கிறார்கள்.

அவர்களது எண்ணம் எந்த அளவுக்கு கீழ்த்தர மானது, இழிவானது, விபரீதமானது என்பதை நான் விளக்கிட தேவையில்லை. இப்படியெல்லாம் நாளேடுகளும், ஊடகங்களும் வேலிகளைத் தாண் டும்போது, அரசியல் சதுரங்கம்-ஆதிக்க வட்டாரம் என்று விமர்சிப்பதில் என்ன குறை சொல்ல முடியும்?. மனசாட்சியை தொட்டுப்பார்த்தால், அப்படிப்பட்டவர்களது உள்நோக்கமும், நச்சு எண்ணமும் நன்றாக புரியுமே.

கலைஞர் தொலைக்காட்சி தொடங்குவதற்கு நிதி ஆதாரம் எங்கிருந்து வந்தது என்று ஜெயலலிதா கேட்டிருக்கிறார். ``சன் டி.வி.''யில் என் மனைவி தயாளு அம்மாள் பெற்றிருந்த 20 சதவிகித உரிமையை முழுவதுமாக விட்டு கொடுத்ததன் மூலம் 100 கோடி ரூபாய் கிடைத்தது என்ற விவரங்களை எல்லாம் 2008ஆம் ஆண்டிலேயே நான் வெளியிட்டிருந்தேன்; அதை என் குடும்பத் தாருக்கு பிரித்துக்கொடுத்ததையும் விவரமாக குறிப்பிட்டிருந்தேன்.

ஜெயலலிதா தன்னை மிகப்பெரும் வழக்கறிஞ ராக கற்பனை செய்து கொண்டு, நிறைய கேள்வி களை கேட்டிருக்கிறார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு நடைபெற்று கொண்டிருப்பதால், அவைகளுக்கு எல்லாம் இப்போது பதில் சொல்வது சட்டப்படி சரியாக இருக்காது.

ஜெயலலிதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 1-7-1991 அன்று அவரிடமிருந்த சொத்துக்களின் மதிப்பு 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 957 ரூபாய். அய்ந்தாண்டுகள் ஆட்சி செய்தபிறகு, 30-4-1996இல் ஜெயலலிதாவின் சொத்துக்களின் மதிப்பு 66 கோடியே 44 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய். ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவித்த வழக்கு, 1997ஆம் ஆண்டில் இருந்து கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

அதைப்போலவே, பிறந்தநாள் நன்கொடையாக வந்த 2 லட்சம் டாலர்களை, தனது சொந்த கணக்கில் வரவு வைத்துக்கொண்டதால், சி.பி.அய். தொடர்ந்த வழக்கு, 1997ஆம் ஆண்டில் இருந்து கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் ஜெயலலிதா ஆஜராகாமல், ஒவ்வொரு தடவையும் ஏதாவது கற்பனையான காரணங்களின் அடிப்படையில் வாய்தாவுக்கு மேல் வாய்தா பெற்று, வழக்குகள் முடிவு பெற்று தீர்ப்புகள் வழங்கப்படுவதை தவிர்ப்பதற்காக கடந்த 14 ஆண்டுகளாக இழுத்தடித்து வருகிறார்.

சண்டமாருதம் செய்யும் ஜெயலலிதா

வழக்குகளை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்தித்து நிரபராதி என்று நிரூபித்துக்காட்டுவேன் என்று அடிக்கடி சண்டமாருதம் செய்யும் ஜெயலலிதா, இந்த வழக்குகளை தொடர்ந்து 14 ஆண்டுகளாக இழுத்தடித்து கொண்டிருப்பதேன்? என்பதை நடுநிலையாளர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நிறைவுப்பகுதி முக்கியமானது. ``இந்த வழக்கிலும் உண்மையை நிலைநாட்ட முடியும் என்று நம்புவதுடன், அதற் குரிய சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள் வதே நம் கடமை என்று இந்த உயர்மட்டக்குழு தீர்மானித்து,

அதற்குரிய நடவடிக்கைகளை மேற் கொள்வதென முடிவெடுக்கிறது'' என்று தீர்மானத் தில் சொல்லப்பட்டுள்ளது. கழகம், ஜெயலலிதா வைப்போல் அல்லாது, சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு, இந்த வழக்கு வளையத்தில் இருந்தும் நிச்சயமாக வெளியே வரும்.

- இவ்வாறு கூறியுள்ளார்.

இரு வேறு இந்தியாக்கள்!


இருவேறு இந்தியாக்கள் இருப்பது ஏன் என்று உச்ச நீதிமன்றம் அர்த்தம் மிக்க வினா ஒன்றை எழுப்பியுள்ளது.

நாட்டில் 36 சதவீதத்தினர் மட்டுமே வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். இவர்களுக்குத்தான் நியாய விலைப் பொருட்கள் அளிக்கப்படவேண்டும் என ஏழைகள் எண்ணிக்கை விவரத்தை திட்டக் குழு குறைத்து பட்டியலிட்டது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நாட்டில் பட்டினி சாவுகள் அதிகரித்து வரும் நிலையில் ஏழைகள் எண்ணிக்கையைக் குறைத்து மதிப்பிடுவதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர். இதே கேள்வியை உச்ச நீதிமன்றமும் எழுப்பியுள்ளது.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 36 சதவீதம் பேர்தான் வறுமையில் வாடும் ஏழைகள் என திட்டக் குழு எவ்வாறு கணக்கிட்டது என உச்சநீதிமன்ற அமர்வாய நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் திட்டக் குழுவை விளக்குமாறு கேட்டனர்.

ஏழை இந்தியர்கள், பணக்கார இந்தியர்கள் என இரண்டு இந்தியாவாக பிரிக்கமுடியாது. சக்தி வாய்ந்த நாடாக இந்தியா திகழ்கிறது என நீங்கள் கூறுகிறீர்கள். அதே நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டினிச் சாவுகள் ஏற்படுகின்றன. ஊட்டச் சத்துக் குறைபாடு முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என அமர்வாயம் அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரனிடம் கூறியது.

நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் பஞ்சத்தில் இறந்து கொண்டிருக்கும் போது போதிய அளவு உணவுப் பொருள்கள் தொகுப்பில் உள்ளது என மத்திய அரசு கூறுவது வேடிக்கையாகவும் உள்ளது என அமர்வாயம் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியது. இந்திய அரசு ஊட்டச் சத்துக்குறைபாட்டைக் குறைக்கவும் பொது விநியோக முறையை சீரமைக்கவும் உறுதி கொண்டுள்ளது என பராசரன் விளக்கியபோது, ஊட்டச்சத்துக் குறைபாடு எதனைக் குறிக்கிறது; 

அந்தக் குறைபாடு முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்று நீதிபதிகள் பத்திரிகைகளில் வெளிவந்த செய்தியான பயிர் விளைச்சல் அமோகம், தானியக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன என்ற செய்தியைக் குறிப்பிட்டனர். அதிக பயிர் உற்பத்தி மகிழ்ச்சியான விஷயம். அதனால் மக்கள் பயன் அடையவில்லை என்றால் அதனால் என்ன பயன் என்று அமர்வாயம் கூறியது. 1991 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு விவரத்தை வைத்துக் கொண்டு 2011 ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள 36 சதவீதம் பேர் ஏழைகள் என எப்படி முடிவு செய்ய முடியும் என்று நீதிமன்றம் கேட்டது.

இது ஒரு நியாயப் பூர்வமான வினாதான்.  பணக்காரர்கள் பட்டியல் ஒரு பக்கத்தில் வளர்ந்து கொண்டே போகிறது. இன்னொரு பக்கத்தில் ஏழைகளின் எண்ணிக்கை - வறுமைக் கோட்டுக்கு கீழே உழலும் மக்களும் வளர்ந்து கொண்டே போகின்றனர்.

நாள் ஒன்றுக்கு வெறும் 20 ரூபாய் வருவாய் ஈட்டக் கூடியவர்கள் 77 விழுக்காடு என்று கூறப்படுவது - ஆரோக்கியமான பொருளாதார நிலையாக இருக்க முடியுமா?

பன்னாட்டு பட்டினி அட்டவணையில் இந்தியா 66 ஆவது இடத்தில் இடம் பிடித்திருப்பது பெருமைக்கு உரியதுதானா?

50 சதவிகித மக்கள் இங்கு ஊட்டச் சத்துக் குறைவு உடையவர்களாக இருக்கின்றனர் என்று தேசிய மனித உரிமை ஆணைய  தலைவராக இருந்த நீதிபதி ராஜேந்திரபாபு கூறினார்.

பத்தாண்டுகளுக்குள் 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்று கூறப்பட்டது - எத்தனைப் பத்தாண்டுகள் உருண்டோடிவிட்டன.

உயிருள்ள மனிதன் உணவுக்கு அழுகிறான்; குந்த வீடில்லை. ஆனால் குழவிக் கல்லைக் குந்த வைத்து அதற்கு கோபுரங்களை எழுப்பி கோடிக்கணக்கில் சொத்துக்களைக் குவித்துக் கொண்டே இருக் கிறார்களே.

மக்களிடத்திலே மூடநம்பிக்கை மூலம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களைச் சுரண்டினரே இது பற்றியெல்லாம் நீதிபதிகள் வழிகாட்டும் தீர்ப்புகளை ஏன் சொல்லுவதில்லை.

இந்தியா வறுமையான நாடல்ல - வளங்கள் நிறைந்த நாடுதான். மக்கள் அறிவு மதக் குட்டையில் காய்ந்துகிடக்கிறது. அதைச் சரி செய்தால் நொடிப் பொழுதில் வளமைப் பூத்துக் குலுங்கும்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...