Saturday, December 25, 2010

இனியாவது உணருவாரா?

காங்கிரஸ்காரர்கள் என்பவர்கள் 100-க்கு 99 முக்காலே மூன்றுவீசம் பேரும் பொய், புரட்டு, சூழ்ச்சி, தந்திரம், சமயத்துக்குத் தகுந்தபடி சரணம் போட்டுக்கொள்வது ஆகிய குணங்களையே கொள்கையாகவும், திட்டமாகவும் வைத்து அதற்கு நீதியும், சத்தியமும் என்று பெயர் கொடுத்து காங்கிரஸ் காரியத்தை அதாவது தங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள் என்கின்ற அபிப்பிராயமானது நமக்கு நாளுக்கு நாள் பலப்படுவதுடன் வளர்ந்து கொண்டே வருகிறது.
பாமர மக்களை ஏமாற்றுவதற்கென்று செய்யப்படும் சூழ்ச்சிகளை இன்றைய காங்கிரஸ் பிரச்சாரத்தின் பயனாய் மக்கள் அறிய முடியாமல் இருந்தாலும் கூட அதற்கும் ஓர் அளவு, மானம் வெட்கமோ, மனிதத்தன்மையோ இல்லாமல் போய்விட்டதை வெளியாக்காமல் இருக்க முடியவில்லை.
இந்த 5,6 மாத காலத்தில் தமிழ்நாட்டில் ஸ்தலஸ்தாபனங்களுக்குப் பல தேர்தல்கள் நடந்திருக்கின்றன. அவற்றிற்காக ஒவ்வொரு ஊரிலும் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்றும், காங்கிரசுக்காரர், காங்கிரசுக்காரர்களல்லாதார், என்றும் சொல்லப்பட்ட பிரிவுகளின் பேரால் தேர்தல்கள் நடந்தன. அவற்றுள் ஜெயித்தால் காங்கிரசுக்கு ஜெயம் என்ற கொட்டை எழுத்தில் போட்டுக் கொள்ளுவதும், தோற்றால் உப்புக் கண்டம் (காய்ந்த மாமிசத் துண்டு) பறி கொடுத்த பார்ப்பனத்தி போல் வாயடைத்துக் கொள்ளுவது மான காரியங்களைச் செய்து வந்தது யாவரும் அறிந்ததாகும்.
உதாரணமாக சிறிது நாள்களுக்கு முன் சென்னையில் தோழர்கள் ஒரு கோயாங்கா அவர்களுக்கும், ஒரு நாயுடு அவர்களுக்கும் நடந்த தேர்தலில் கோயாங்காவை காங்கிரஸ். கட்சிக் காரராக்கி நாயுடுவை ஜஸ்டிஸ் கட்சிக்காரராக்கி காங்கிரஸ்காரர் எல்லோரும் தோழர்கள் சத்தியமூர்த்தி அய்யர், ராஜகோபாலாச்சாரியார், பாஷ்யம் அய்யங்கார், கிருஷ்ணசாமி சாஸ்திரியார் என்பவர்கள் உள்பட இந்து, சுதேசமித்திரன் உள்பட எல்லாப் பார்ப்பனர்களும், தோழர் கோயாங்கா காங்கிரஸ் அபேட்சகர் என்று ஜனங்களை நம்பும்படிச் செய்து பிரச்சாரம் செய்தார்கள்.
கடைசியில் கோயாங்கா அவர்கள் பதினாயிரக் கணக்கான ரூபாய் நஷ்டப்பட்டும், தோல்வி அடைந்ததும், தோழர் கோயாங்கா காங்கிரஸ்காரர் அல்ல என்று சொல்லிவிட்டார்கள். இதுபோல் பல காரியங்கள் செய்துவந்தும் சமீபத்தில் - இந்தவாரத்தில் நவம்பர் 9ஆம் தேதி சேலத்தில் நடந்த முனிசிபல் எலக்சனில் தோழர் வெங்கிடப்ப செட்டியார் அபேட்சகர் ஸ்தானமானது காங்கிரஸ் சின் பேரால் நிறுத்தப்பட்டு தோழர் அய்யாசாமி செட்டியார் பார்ப்பனர் அல்லாதார் சார்பாய் (ஜஸ்டிஸ் கட்சி சார்பாய்) நிறுத்தப்பட்டு காங்கிரஸ் தோழர் ராஜகோபாலாச்சாரியார் உள்பட அன்று சேலத்துக்கு வந்து வெங்கிடப்ப செட்டியாருக்காக எவ்வளவோ பாடுபட்டும் வெங்கிடப்ப செட்டி யாருக்கு 8 ஓட்டும் அய்யாசாமி செட்டியாருக்கு 25 ஓட்டும் கிடைத்து பாதாள தோல்வி அடைந்து விட்டார் என்கிற சேதி தெரிந்ததும் வெங்கிடப்ப செட்டியார் காங்கிரஸ் அபேட்சகரல்ல என்று தோழர் ராஜகோபாலாச்சாரியார் முதற்கொண்டு எல்லாப் பார்ப்பனப் பத்திரிகைகாரர்களும் சொல்லிவிட்டார்கள் என்றால் இவர்களது பல்ட்டிக்கும், சமயத்துக்குத் தகுந்தபடி நடந்து கொள்ளுவதற்கும் வேறு என்ன சாட்சி வேண்டும் என்று கேட்கின்றோம்.
தோழர்கள் வெங்கிடப்ப செட்டியார், சடகோப முதலியார் ஆகிய இரு அபேட்சகர்களை காங்கிரஸ் அபேட்சகர்களாக வைத்து காங்கிரஸ்காரர்கள் அது அல்லாத பார்ப்பனர்கள் என்பவர்களுள்பட பெரிய கூட்டம் கூடி ரகசிய ஓட்டெடுத்து காங்கிரஸ் சார்பாகவும், பார்ப்பனர்கள் சார்பாகவும் தோழர் வெங்கிடப்ப செட்டியாரை நிறுத்தி காங்கிரசின் பேரால், காந்தியின் பேரால் கவுன்சிலர்களிடம் முழங்கால் முறிய நடந்து கடைசியில் பாதாள தோல்வி ஏற்பட்டதும் வெங்கிடப்ப செட்டியார் காங்கிரஸ்காரர் அல்ல என்று சொல்லிவிட்டால் காங்கிரசுக்கு இருக்கும் நேர்மை, சத்தியம், நீதி ஆகிய குணங்களுக்கு வேறு எதை ஒப்பிடுவது என்பது நமக்கு விளங்கவில்லை. தோழர் வெங்கிடப்ப செட்டியார் அவர்கள் காங்கிரஸ்சில் 15 வருஷ காலமாய் இருந்து வருபவர். அவர் கதர் உடுத்தி வருபவர்; பார்ப்பனர்கள் பூதேவர்கள் என்பதை ஒப்புக் கொண்டு பார்ப்பனரல்லா தார்களையும் ஜஸ்டிஸ் கட்சியாரையும் இணை யில்லாக் கேவலமாய் பேசி வந்தவர் - வருகிறவர்; பார்ப்பன நாகரிகம் ஆச்சார அனுஷ்டானங்கள், கோயில், குளம், பக்தி, பிராமண விஸ்வாசம் ஆகியவைகளில் இணையற்றவர். இப்படி இருந்தும் அவருக்குத் தோல்வி ஏற்பட்டவுடன் அடியோடு அவரை ஜனங்கள் கேவலமாய் நினைக்கும்படியும் அவர் தோல்விக்கு சிலராவது பரிதாபப்படாமல் இருக்கும்படிக்கும் காங்கிரஸ்காரர் அல்லாததால் அவர் தோல்வி அடைந்தது சரிதான் என்று நினைக்கும்படிக்கும், சொல்லும்படிக்கும் செய்து விட்டார்கள் என்றால், இந்தப் பார்ப்பனரை நம்புபவர்கள் சமயத்தில் கைவிடப்பட்டு விடுவார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும் என்று கேட்கின்றோம்.
வெற்றி தோல்வி இயற்கை. பணச்செலவும் சூழ்ச்சியும் நேர்மையற்ற காரியங்களும் காலித் தனமும் செய்தவர்களுக்கே பெரிதும் வெற்றி ஏற்படுவது என்பது சகஜம். வெற்றி தோல்வியில் மனிதனுடையவோ, கட்சியுடையவோ, மேன்மையோ, நாணயமோ பாதிக்கப்பட்டு விடுவதில்லை.
இதுவரை பலகட்சி தோல்வியடைந்தும் பலகட்சி வெற்றியடைந்தும் வந்திருக்கின்றது என்றாலும் அதனாலேயே பெரிய மாறுதல்கள் ஏற்பட்டு விடவும் இல்லை; எந்தக் கட்சியும் முழுகிப் போய்விடவு மில்லை.
ஆனால் கண்ணியமாய் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் இந்தப்படி உடனுக்குடன் அந்தர் பல்டி அடிப்பதென்றால் இவர்களுள் நாணயமும் சுயமரியாதையும் உள்ள மக்கள் எப்படி நெருங்கு கிறார்கள் என்பதுதான் நமக்கு விளங்கவில்லை. இனியாவது தோழர் வெங்கிடப்ப செட்டியார் அவர்கள் பார்ப்பனர்களுடையவும், காங்கிரஸ் காரர்கள் என்பவர்களுடையவும் யோக்கியதையை உணர வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்.
- பகுத்தறிவு - துணைத்தலையங்கம் - 11.11.1934

தினமணி அய்யர்வாளும் - வால்களும்!

தந்தை பெரியார் நினைவு நாளில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அய்யா அவர்களின் சிந்தனைகளை, கொள்கைகளைப் பரப்பும் நாளாகவும், கூர்தீட்டிக் கொள்ளும் நாளாகவும், உறுதி எடுக்கும் நாளாகவும் கடைப்பிடிக்கின் றனர்.

சென்னையில் திராவிடர் கழகத் தலைமை இடத்தில் நூல்கள் வெளியீட்டு விழாவும், கருத்தரங்கமும் நடைபெற்றன. தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகத் தோழர்கள் தந்தை பெரியார் நினைவு நாளில் கொள்கை வழிப்பட்ட செயல்பாடு களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வரலாற்றுக் குறிப்பு நாளில் - பச்சை ஆர்.எஸ்.எஸ்.காரரும், திருவாளர் சோ ராமசாமியின் சீடருமான ஒருவரை ஆசிரியராகக் கொண்ட பார்ப்பன நாளேடு ஒன்று தந்தை பெரியார் நினைவு நாளைக் கொச்சைப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறது. இயக்கத்திலிருந்து ஒழுங்கு கட்டுப்பாட்டின் அடிப்படையில் வெளியேற்றப்பட்ட சிலரை இதற்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

இதுபோன்றவர்கள் தமிழகத்தில் மலிவாகக் கிடைப்பார்கள் என்பதுதான் தெரிந்த செய்தியாயிற்றே!

தந்தை பெரியார் இறுதியாகப் பயன் படுத்திய வேன் புத்தூரில் உள்ள பெரியார் மாளிகை வளாகத்தில் குப்பைபோல கிடக்கிறதாம் - அடடே, பெரியாரின் வேன் மீது இந்த ஆர்.எஸ்.எஸ். பத்திரிகைக் காரருக்கு எவ்வளவு பெரிய அக்கறை - எத்தகைய கரிசனம்!

திருச்சி பெரியார் மாளிகையில் பெரியார் வேன் ஒன்றும் குப்பை போல கிடக்கவில்லை. அதற்கென்று ஷெட் ஏற் பாடு செய்யப்பட்டு, அதில்தான் நிறுத்தப் பட்டுப் பொதுமக்கள் பார்வைக்கு வைக் கப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் நேரில் போய்ப் பார்த்துக் கொள்ளலாம். அந்த ஷெட்டின் முகப்பில் தந்தை பெரியார் இறுதியாகப் பயணம் செய்த வேன் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் பக்கத்திலேயே அய்யா - அம்மா படிப்பகம் இருக்கிறது.

இதில் உள்ள பார்ப்பனத்தனம் என்ன தெரியுமா? அந்த எழுத்துகள் தெரியா மலும், பக்கத்தில் உள்ள படிப்பகத்தை மறைத்தும் நிழற்படத்தை வெளியிட் டுள்ளது.

அதேநேரத்தில் பெரியார் சர்வீஸ் ஸ்டேஷன் என்ற பெயர்ப் பலகை தெரியும் வகையில் அந்தப் படத்தை வெளியிட்டு பார், பார்! பெரியார் கடைசியாகப் பயன் படுத்திய வேன் எப்படி இருக்கிறது? பெரியார் சர்வீஸ் ஸ்டேஷன் எப்படி இருக் கிறது? என்று விளையாட்டு காட்டுகிறது. இதில் என்ன பெரிய பிரச்சினை இருக் கிறது? பெரியார் வேன் பெரியார் மாளிகை யில் இருக்க வேண்டிய இடத்தில் பத்திர மாக இருக்கிறது - சர்வீஸ் ஸ்டேஷன் இருக்கவேண்டிய இடத்தில் இருக்கிறது. இதில் எந்தப் புதிரைக் கண்டுபிடித்துவிட் டார் இந்தப் புதிய பூணூல் வாஸ் கோடகாமா?

பெரியார் கற்றுத் தந்த புத்தி என்று ஒன்று இருக்கிறது. பார்ப்பான் ஒரு பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொள்கிறான் என்றால், அதுவும் தந்தை பெரியார் பற்றிப் பேச வருகிறான் என்றால், அதில் ஏதோ வஞ்சகம் இருக்கிறது, வன்மம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டாமா?

தந்தை பெரியார் மீதோ, அவர்தம் கொள்கை மீதோ - இந்தத் தினமணிப் பார்ப்பானுக்கு என்ன அக்கறை?

தந்தை பெரியார் சொல்லுவார் - இராமாயணத்தில் இராமனுக்கென்று இருந்த சொந்தப் படை என்ன? ஒன்றும் கிடையாது - வானரப் படையைக் கொண்டே இராவணனை எதிர்த்துச் சண்டை போட்டான்; ஒரு பார்ப்பனர் இராமாயணத்தில் செத்தான் இல்லை என்பார்கள்.

பார்ப்பனர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இராமாயணத் தைப் படித்துக் கொள்ளவேண்டும் என்று சர்.சி.பி. இராமசாமி அய்யர் சொன்னது தான் இப்பொழுது நினைவிற்கு வரு கிறது.

அந்த இராமாயண யுக்தியை அனுசரித்தே இந்த மூன்று பேர்களைப் பிடித்து தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு, அவர் விட்டுச் சென்ற பணிகளை வீரியத்துடனும், விவேகத்துடனும் நடத்தி வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருக்கும் திராவிடர் கழகத் தலைவர்மீது சேறு வாரி இறைக்கச் செய்கிறது ஒரு பார்ப்பன ஏடு என்றால், இதன் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பெரியார் என்ற வார்த்தையை உச்சரித்தால் மட்டும் போதாது. ஒரு பார்ப்பன ஏடு எந்த நோக்கத்தில் தங்களைக் கையாளாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்கிற அடிப்படையைக் கூடப் புரிந்துகொள்ள முடியாதவர்கள், ஒரு காலத்தில் எப்படித்தான் கறுப்புச் சட்டை போட்டுக்கொண்டு கழகத்தில் இருந்தனர் என்கிற கேள்வியைத்தான் எழுப்புகிறது.

எப்படியோ விளம்பரம் கிடைத்து விட்டது - போட்டோவும் வெளிவந்து விட்டது பார்ப்பன ஏட்டில் - அதுபோதும் என்கிற மலிவான நிலைக்கு ஆளான வர்களைக் கண்டு பரிதாபப்படத்தான் வேண்டியுள்ளது.

அய்யயோ பெரியார் சொத்துகளை விற்கிறார்கள், விற்கிறார்கள் என்று மாரடித்து ஒப்பாரி வைக்கிறார்கள்.

தந்தை பெரியார் விட்டுச் சென்ற சொத்துகள் என்ன? பெரியார் மறை விற்குப் பிறகு அவை வளர்ந்திருக்கிறதா - தேய்ந்து இருக்கிறதா என்பது கருத்துக் குருடர்களைத் தவிர மற்றவர் கள் அனைவருக்குமே தெரிந்த விடயம்.

பெரியார் திடலில் நடிகவேள் ராதா மன்றம் எப்படி இருந்தது? இப்பொழுது அது எப்படி இருக்கிறது? விடுதலைப் பணிமனை எப்படி இருந்தது - இப்பொழுது அதன் பொலிவு என்ன?

விடுதலை அச்சுக்கூடம் எப்படி இருந்தது? இப்பொழுது எந்த அளவுக்கு நவீன மயமாகி உள்ளது? விடுதலை யின் அச்சும், வடிவமும் எப்படி இருந்தது? (விடுதலையைப் படிப்பதற்கே ஒரு தனிப் பயிற்சி வேண்டும் என்ற நிலைதான் அன்று) இப்பொழுது அதன் எழிலும், தெளிவும் வாசகர்களை எப்படிக் கவர்ந் திருக்கிறது. உண்மை இதழும் அப்படியே!

தந்தை பெரியார் காலத்தில் வெளி வந்த இயக்க வெளியீடுகளையும், இப்பொழுது வெளிவரும் வெளியீடு களையும் ஒப்பிட்டுப் பார்க்கட்டும். அறிவு நாணயம் உள்ளவர்கள் உண்மையை ஒப்புக்கொள்வார்கள்.

டில்லியில் கம்பீரமாக நிற்கும் பெரியார் மய்யம் எதிரிகளையும், துரோகிகளையும் பார்த்து எள்ளி நகையாடும். டில்லியில் பெரியார் மய்யம் கொள்கிறார் என்றால், தினமணிக் கூட்டத்துக்கு நெரி கட்டுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது; விபீடணர்களுக்கு வாந்தியும், பேதியும் ஏற்படுவானேன்?

பெரியார் படிப்பகங்கள்பற்றியெல்லாம் கிறுக்கி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி களிலும் நிரந்தரமான கான்கிரீட் கட்டடங்களாக அவை உருமாறியிருக் கின்றன என்ற உண்மையைக் கூடத் தெரியாமல், உளறுகிறார்களே, என்ன செய்ய! புதிய இடங்களில்தான் எத் தனை எத்தனை பெரியார் படிப்பகங்கள் - நூலகங்கள்!

பெரியார் திடலில் இயங்கும் நூலகம் - ஆய்வகம் உலகத் தரத்தில் ஓங்கி நிற்கிறதே! 52333 நூல்கள் அணி வகுக்கின்றனவே - தமிழர் தலைவர் அரிதில் சேர்த்து வைத்த தமது சொந்த 10,277 நூல்களை அளித்து உதவி னாரே! பன்னாட்டைச் சேர்ந்தவர்களும் ஆய்வுக்காக இங்கே தானே வந்து கொண்டிருக்கின்றனர்!

வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்று எழுதலாமா?

ஒரு பெரியார் மய்யத்தை பி.ஜே.பி. ஆட்சியில் இடித்தார்கள் என்றால், அதன் பலன் என்ன? ஒன்றுக்குப் பதில் இரண்டு பெரியார் மய்யங்கள் - புதுடில்லியில்.

பெரியார் மய்யத்தின் அருமை - அதனால் ஏற்படப் போகும் விளைவு பார்ப்பனர்களுக்கும், சங் பரிவார்க் கூட்டத்துக்கும் நன்கு தெரிந்திருக் கிறது. பெரியார் அங்கு சுற்றி இங்கு சுற்றி இந்தியாவின் தலைநகரான டில்லிக்கே வந்துவிட்டாரே என்கிற ஆத்திரப் புயலில் அவதிப்படுகிறார்கள்.

இவர்களுக்கு என்ன வந்தது? பெரியார் மய்யம் இடிக்கப்பட்டபோது ஒருக்கால் - இவர்களும் லட்டு சாப் பிட்டு இருப்பார்களோ!

நாகம்மையார் குழந்தைகள் இல் லத்தின் பழைய நிலையையும், புதிய பொலிவையும் பார்த்துப் பூரித்துப் போகிறார்கள்; பொறாமைக்காரர்களோ புழுங்கிச் சாகிறார்கள்.

சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் தமது கவிதை (ஒரு துளி வானம் ஒரு துளி பூமி!) நூல் விற்பனை இலாபத்தை நாகம்மையார் இல்லத்திற்கு அளித்து மகிழ்ந்தார். நல்லவர்கள் பாராட்டு கிறார்கள்; நல்லவர்களாக இருக்க முடியாதவர்கள் தங்களின் அருங் குணங்களைக் காட்டிக் கொள்கி றார்கள், அவ்வளவுதான்!

ஒவ்வொரு காலகட்டத்திலும் இயக் கத்தால் விளம்பரம் ஆனவர்கள். அவ்வப்போது துரோகிகள் ஆகாமல் தப்பிக்க முடியாதவர்களாகவே ஆகி யிருக்கின்றனர். தமிழர்களின் யோக் கியதை இதுதான் போலும்!

தந்தை பெரியார், அன்னை மணி யம்மையார் ஆகியோரின் மறைவிற்குப் பிறகு கழகத்தின் பணிகள், தமிழர் தலைவர் தலைமையில் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கின்ற சாதனை கள் அளப்பரியன.

திராவிடர் கழகம் - பெரியார் திடல் விடுதலை என்ன வழிகாட்டுகிறதோ அதுதான் உண்மையான பெரியார் பாட்டை என்பது உலகம் பூராவும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று.

இந்தத் தலைமை, அமைப்பின் மூலம் தான் தந்தை பெரியார் என்ற அங்கீ காரத்தோடு காரியங்களைச் சாதித்துக் கொடுக்க முடியும்; தமிழர்களின் உரிமை களை மீட்டுக் கொடுக்க முடியும்; சமூகநீதிக் கொடியை வெற்றிகரமாகப் பறக்க விட முடியும்; பகுத்தறிவுப் பணியை வலுவாகச் செய்ய முடியும் என்பது உறுதி செய்யப்பட்டு விட்ட ஒன்று. தினமணிகள் நற்சான்று கொடுக்கத் தேவையில்லை.

கிராமப் பிரச்சாரம், கல்வி நிறுவனங் கள் முன் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம், புத்தகக் கண்காட்சி, பெரியார் நகர்வுப் புத்தகச் சந்தை, பெரியாரியல் பயிற்சி முகாம்கள், குழந்தைகள் பழகு முகாம், சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம், பெரியார் சமூகக் காப்பு அணி, பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தின் சார்பில் சடுகுடுப் போட்டிகள், தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்கள், உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனி பேச்சுப் போட்டி; தலா முதல் பரிசு ஒரு லட்சம்; இரண்டாம் பரிசு 75 ஆயிரம்; மூன்றாம் பரிசு 50 ஆயிரம்; 2010 இல் மாணவ, மாணவிகள் பங்கேற்பு 20 ஆயிரம்.

பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை, பெரியார் திரை குறும்படப் போட்டி, பெரியார் வலைக்காட்சி, திரா விடர் வரலாற்று ஆய்வு மய்யம் உருவாக் கம், தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி விழா (புரட்சிக்கவிஞர் விழா), முத்தமிழ் மன்ற விழா,

பெரியார் திரைப்படம் சாதாரணமா? (தெலுங்கிலும் வெளிவந்துவிட்டது). உலகப் புகழ்பெற்ற நாத்திக நெறி நூலான கடவுள் ஒரு பொய் நம்பிக்கை (கூந ழுடின னுநடரளடி லெ சுஉயசன னுயறமளே) என்ற பெயரில் தமிழில் வெளியிடும் உரிமை பெற்று வெளியிடப்பட்டது.

குடியரசுத் தொகுப்பு இதுவரை 25.

4 பக்கங்களாக வெளிவந்த விடுதலை இப்பொழுது எட்டுப் பக்கங்கள்;

சென்னையில் மட்டும் இருந்த பதிப்பு, மேலும் திருச்சியிலும் ஒரு பதிப்பு.

தந்தை பெரியார் காலத்தில் மாதம் ஒரு முறை வெளிவந்த உண்மை இதழ் இப்பொழுது மாதம் இருமுறை.

நிறுத்தப்பட்ட தி மாடர்ன் ரேசன லிஸ்ட் மீண்டும் தொடங்கி வெளிவருதல்;

புதிதாகக் குழந்தைகளுக்காகப் பெரியார் பிஞ்சு மாதப் பத்திரிகை.

அலை அலையான மாநாடுகள்; அண்மைக் காலத்தில் மட்டும் சென்னை யில் மாணவர் கழக மாநாடு; மதுரையில் மாணவர் கழக மாநாடு; கரூர், வாலாஜா, சீர்காழி, திருப்பத்தூர், திருவரங்கம் திராவிடர் எழுச்சி மாநாடுகள்;

இந்தியப் பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் (ஃபெரா) 7 ஆவது இந்திய மாநாடு - சென்னையில்!

ஒரு ஆறு மாத காலத்துக்குள் இத் தனை இத்தனை மாநாடுகளையும், மாநாடுகளை ஒட்டிய மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணிகளையும் திராவிடர் கழகத்தைத் தவிர வேறு எந்த அமைப்பு கள் நடத்தியுள்ளன என்று சவால் விட்டுக் கேட்கிறோம்.

போராட்டங்கள்தான் கொஞ்சமா, நஞ்சமா?

ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான ஆர்ப்பாட்டம் (16.2.2010).

மத்திய அரசின் புதிய கல்வி மசோ தாவை எதிர்த்து திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் சென்னையில் பேரணி (23.2.2010).

சாமியர்களின் கயமத்தனங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் (11.3.2010).

ஜாதிவாரிக் கணக்கெடுப்பைக் கோரி மத்திய அரசை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டம் (10.5.2010).

சேது சமுத்திரக் கால்வாய்த் திட் டத்தை உடனடியாகச் செயல்படுத்தக் கோரி ரயில் மறியல் போராட்டம் (5.6.2010).

என்.எல்.சி. பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது என்று நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் (30.6.2010).

தமிழக மீனவர்கள் சிங்களவர்களால் தாக்கப்படுவதைக் கண்டித்து

நாகப்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் (14.7.2010).

நாடாளுமன்ற முடக்கத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் (10.12.2010).

நுழைவுத் தேர்வை எதிர்த்து மாவட்டத் தலைநகரங்களில் கழக மாணவரணி - இளைஞரணி சார்பில் வரும் 29 ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம். இப்படி அலை அலையாகப் போராட்ட நிகழ்ச்சிகள்! சாதனைகள்தான் கொஞ்சமா?

எம்.ஜி.ஆர். காலத்தில் கொண்டுவரப்பட்ட வருமான வரம்பு ஆணை ஒழிக்கப்பட்டதற்கு யார் காரணம்? அதன் விளைவாக 49 சதவிகிதமாக இருந்து வந்த இட ஒதுக்கீட்டின் சதவிகிதம் 68 ஆக உயர்ந்ததற்குக் காரணம் யாருடைய முயற்சி?

பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசுத் துறைகளில் இட ஒதுக்கீடு அறவேயில்லை என்பதை மாற்றி, மண்டல் குழுப் பரிந்துரைப்படி 27 சதவிகித இட ஒதுக்கீடு இந்தியா முழுமையும் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத் திடக் காரணமாக இருந்தது யார்?

(42 மாநாடுகள், 16 போராட்டங்களை திராவிடர் கழகம் நடத்தியுள்ளது!).

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை (கலைஞர் அவர்கள் 5 ஆவது முறையாக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நிலையில், மீண்டும் இதற்காக மசோதா நிறைவேற்றம் - உச்சநீதிமன்ற முட்டுக்கட்டையால் தீர்ப்பின் தாமதத்தால் நிலுவையில் நிற்கிறது).

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு.

சிதம்பரம் நடராஜன் கோயில், தீட்சதர்ப் பார்ப்பனர்கள் கையிலிருந்து இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.

(பேரணியையும், பொதுக்கூட்டத்தையும் கழகம் நடத்தியது!).

இவ்வளவையும் தொகுத்துப் பார்த்தால், இவை நடைபெறுவதற்குக் காரணமாக இருந்த கழகத் தினருக்கே மலைப்பாகத் தோன்றுகிறது!

பார்ப்பனர்களுக்கு இதன் தன்மை நன்கு புரிந்தே இருக்கிறது. அதனால்தான் பழனியில் மாநாடு கூட்டி தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களைப் பார்ப்பனர்கள் பாடை கட்டித் தூக்கிச் சென்றனர். இதுதான் முக்கியமான அளவுகோல்.

தினமணியின் பூணூல்தேள் கொடுக்கை நீட்டிக் கொண்டு அலைவதற்குக் காரணமே, தமிழர் தலைவர் தலைமையிலான திராவிடர் கழகத்தின் இத்தகு ஓய்வறியா மலை மலையான, அலை அலையான நடவடிக்கைகளே!

இந்தக் காரணத்துக்காகப் பார்ப்பனர்கள் ஆத்திரம் கொள்கிறார்கள் - கொச்சைப்படுத்துகிறார்கள் என்றால்,

கழகத்தால் வெளியேற்றப்பட்டவர்கள் கடை விரித்தேன் கொள்வாரில்லை; கட்டிக் கொண்டோம் என்ற வெறுமையில், இயலாமையில் பார்ப்பனர்களோடு கூட்டணி சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். விளம்பர சடகோபம் எத்தனை நாளைக்கு?

வெட்கம்! வெட்கம்!! மகா வெட்கம்!!!

1974 இல் மூன்று தொகுதிகளை வெளியிட்டு, அதற்குப்பின் 36 ஆண்டுகள் கழித்து அடுத்த பதிப்பைக் கொண்டு வந்த சாதனை சக்ரவர்த்தி ஒருவரும் சேர்ந்துகொண்டு மண்ணை வாரி இறைக்கிறார்.

அரசாங்கத்திடம் இடம் வாங்கி அறக்கட்டளை ஏற்படுத்தியுள்ளாரே - அரசிடம் எந்தக் காரணங்களைப் பணிகளைச் செய்வதற்கு இனாமாக இடம் வாங்கினாரோ அந்தப் பணிகள் நடைபெற்றுள்ளனவா என்ற கேள்வியை எழுப்பினால், அந்த டிரஸ்ட் அரசாங்கத்தின் கஜானாவுக்குள் முடங்கிவிடுமே!

திருச்சி அருகில் (நாத்திகக் கல்லூரிக்காக) அரசிடம் நிலம் வாங்கி தனிச் சொத்தாக்கி விற்றுக் கடன் கட்டப்பட்டதா இல்லையா?

தோழர்களே,

1971 நிலை தமிழ்நாட்டில் மீண்டும் சுழன்று வீசிக்கொண்டு இருக்கிறது.

2011 சட்டப் பேரவைத் தேர்தலும், 1971 தேர்தலின் மறு அச்சாக நடைபெற உள்ளது.

1971 தேர்தலில் இதே தினமணி அய்யப்பனையும், வினாயகனையும் வேண்டிக் கொள்ளவில்லையா - தி.மு.க. தோற்கவேண்டும் என்று!

அந்த நிலையை இப்பொழுதும் பார்ப்பனர்கள் கையில் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்!

மானமிகு கலைஞர் அவர்களும் ஆரியர் - திராவிடர் போராட்டத்தைச் சந்திக்கத் தயார் என்று தோள் தட்டிவிட்டார்!

ஆரியத்தின் படைக்கலன் வரிசையிலே தினமணி பூணூலை முறுக்கி முண்டா தட்டுகிறது.

இந்த நிலையில், திராவிடர் கழகத்தைக் கொச்சைப் படுத்தித் தீரவேண்டிய கட்டாயம் அதற்கு ஏற்பட்டு இருக்கிறது.

யுத்த இரகசியத்தில் எப்பொழுதும் அந்தக் கால இராமாயண சுக்ரீவன், விபீஷணன்கள், இந்தக் கால கருணாக்களும் தேவைப்படுவார்கள்.

அய்ந்தாம் படைதானே ஆரியத்துக்குத் தேவை. அதில் ஒரு கட்டம்தான் தினமணி கட்டுரையின் (24.12.2010) சாரமாகும்.

தினமணி அய்யர்வாளுக்கு வால்களும் கிடைத்திருக்கின்றன.

நமது செயல்பாடு என்கிற எரிமலை வீச்சுக்கு முன்னே இந்தப் பஞ்சு மூட்டைகள் எம்மாத்திரம்!

குறிப்பு: இன்று எனக்குள்ள குறையெல்லாம் தமிழர் சமுதாயத்தில் விபீஷணப் பரம்பரை வளர்ந்து வருவதுதான்.

- தந்தை பெரியார்

(விடுதலைமலர், 17.9.1969).

Friday, December 24, 2010

தந்தை பெரியார் மறைந்தபோது தலைவர்கள் தந்தை பெரியார் பற்றி கூறியவை சில

தந்தை பெரியார் மறைந்தபோது தலைவர்கள் தந்தை பெரியார் பற்றி கூறியவை சில
குடியரசுத் தலைவர் வி.வி.கிரி
காலஞ்சென்ற திரு.ஈ.வெ.ராமசாமி நயம்மிக்கதோர் தலைவர், வீரம் மிக்கதோர் போராட்டக்காரர். அன் னாரது மறைவுச் செய்தி கேட்டு நான் மிக்க வருத்தமுறுகின்றேன். அவர் எப்பொழுதுமே சிறந்ததோர் போராட்டக்காரராக நிகழ்ந்திருக் கிறார். தேச விடுதலைக்கான போராட்டத்தில் அவர் முக்கியமான பங்கினை வகித்திருக்கிறார். பின்னர், அவர் முக்கியமான பங்கினை வகித்திருக்கிறார். பின்னர், அவர் தாம் கண்ட கருத்துக்கிசைய சமூக சீர்த் திருத்தங்களுக்காகத் தம்மை அர்ப் பணித்துக் கொண்டார். அன்னாரை இழந்து துயருறுகின்றவர்களுக்குத் தயவு செய்து எனது ஆழ்ந்த அனு தாபத்தைக் கூறுங்கள்.
பிரதமர் இந்திராகாந்தி
பெரியாரது மறைவுபற்றி அறிந்து துயருற்றேன். சர்ச்சைக்குரியனவற்றில் ஈடுபாடு கொண்டு, அதில் களிப்பெய் திய முனைப்பாற்றல் மிக்க மனிதர் அவர். ஏற்றுக் கொள்ளப்பட்ட பல கருத்துகளை எதிர்த்து அறைகூவி நின்றவர் அவர். அவருடன் சேர்ந்து பணியாற்றிய அவர் இயக்க ஊழியர் களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.
ஜெயப்பிரகாஷ் நாராயண் (சர்வோதயத் தலைவர்)
பெரியார் அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஜாதி மூட நம்பிக்கை களை முழுமூச்சாக எதிர்த்த பெருந்தலைவர்.
இந்தியாவில் அவரைப் போன்ற ஒரு தலைவரைப் பார்க்கவே முடியாது. கொடுமைக்கு எதிராகப் பெரும் போர் தொடுத்தவர் அவர்.
தமிழக ஆளுநர் கே.கே.ஷா
ஆர்வம் மிக்க சமூகச் சீர்த் திருத்தவாதியான திரு.ஈ.வெ.ராமசாமி யின் மறைவு குறித்து நான் பெரிதும் வருந்துகிறேன்.
தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர்
பெரியார் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டார். 95 ஆண்டுகள் வரை வாழ்ந்த அந்தப் பகுத்தறிவுச் சிங்கம், கடைசி மூச்சு வரை சமுதாயப் பணியை நடத்திய சரித்திரத்தை யாரும் மறக்க முடியாது. இன்று தமிழ்நாடு தன்மான உணர் வோடு தலைதூக்கி நிற்பதற்குக் காரணமாக இருந்த மாபெரும் தலைவர் அவர். அவரால் சமுதாய அந்தஸ்து பெற்ற லட்சோப லட்சம் மக்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மக்கள் இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாது. எங் களை எல்லாம் ஆளாக்கிய எங்கள் வழிகாட்டியின் இந்தப் பிரிவு பற்றி என்ன சொல்வதென்றே புரியாமல் திண்டாடுகின்றேன். இந்தியாவின் தலைசிறந்த சீர்த்திருத்தப் புரட்சிக் காரரை இழந்துவிட்டோம். அவர் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டார்; நாம் தொடர் வோம்.
டாக்டர் நாவலர் (கல்வித்துறை அமைச்சர்)
யாருக்கும் அஞ்சாமல், எதற்கும் அஞ்சாமல் தமிழகம் எங் கணும் வீர நடை போட்டு வந்த பகுத்தறிவுச் சிங்கம் இன்று சாய்ந்து விட்டது என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும். பெரும் துக்கத்தையும் அளிக்கின்றது.
பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்கள் நாட்டு விடுதலைப் போராட்டத்திலும், சமூகச் சீர்த் திருத்தக் கிளர்ச்சிகளிலும், மொழி யுரிமைப் போராட்டத்திலும் பங்கு கொண்டு அவர் புரிந்த சாதனைகள் பலவாகும்.
பொதுத்தொண்டு புரிபவர்களுக் குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக அவர் திகழ்ந்து வந்தார். பொதுவாக, தமிழ்ப் பெருங்குடி மக்களுக்குக் குறிப்பாகத் தமிழக அரசுக்கும் அவர் பெரும் துணையாக இருந்து அருந் தொண்டு ஆற்றி வந்தார். அவரது இழப்பு திராவிட முன்னேற்றக்கழ கத்துக்கு, ஆட்சிக்கும் பேரிழப்பு ஆகும்.
அவர் பரப்பிவந்த பகுத்தறிவு நெறியை, அறிவியலின் துணை கொண்டு தொடர்ந்து பரப்புவதில் ஈடுபடுவதுதான் நாம் அவருக்குக் காட்டக் கூடிய நன்றிக்கடனாகும்.
வளம்மிகுந்த தமிழ்நாடு, வளர வொட்டாமல் தடுத்து வருகின்ற மூடப்பழக்க வழக்கங்களையும் அவர் கூறிய அறிவுரைகளை ஏற்று, அவற்றை ஒழித்து, சிறந்த தமிழ கத்தைக் காண நாம் அனைவரும் ஈடுபடுவோமாக. வாழ்க பெரியார் புகழ்!
வெல்க அவருடைய பகுத்தறிவு நெறி!
கு.காமராஜர்
நமது நாட்டின் லட்சோப லட்சம் மக்களால், பெரியார் என்று பாசத்துடன் அழைக்கப் பட்டு வந்த திரு. ஈ.வெ. ராமசாமி இன்று நம்மைவிட்டு மறைந்தார். அன்னாரது மறைவு பொது வாழ்க்கைக்குப் பெரிய இழப்பு.
நாம் ஆர்வத்துடன் நம்பிய இலட்சியங்களுக்காக அவர் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலா கத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு பணி புரிந்துவந்தார்.
நமது நாட்டில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் சமூக விழிப்பு ஏற்பட அவர் ஆற்றிய பணி, அவர் வகித்த பாத்திரம் மிகப் பெரியது. அவர் ஒரு மாபெரும் தேச பக்தர்.
ஆரம்பத்தில் அவர் இந்திய தேசிய காங்கிரஸ் தீவிர உறுப்பி னராக இருந்து காந்தியார் துவக்கிய இயக்கங்களில் பங்கேற்றார்; பல முறை அவர் சிறையேகினார்.
பின்னர், தீவிரமான சமூக சீர் திருத்தப் பிரச்சாரப் பணியைத் தமக்கென வரித்துக் கொண்டார்.
பெரியார் நமது சமூகத்துக்கு ஆற்றிய சேவைகள் நம் மனத்தில் நீண்டநெடுங்காலம் நிலைத்து நிற்கும். தமது கருத்துகளைப் பயம் துளியுமின்றி எடுத்துக்கூறியவர் களில் பெரியாரும் ஒருவர். கடைசி வரை அவர் விடாமுயற்சியுடன் சலி யாத கடும் பணியில் ஈடுபட்டிருந் தார்.
அன்னாருக்கு எனது மரியாதை கலந்த இரங்கல்.
சி.சுப்பிரமணியம் (மத்திய தொழிலமைச்சர்)
தந்தை பெரியார் மறைவு பற்றி செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளேன். தமிழ்நாடு மட்டுமல்லாமல், மனித சமுதாயம் முழுமைக்குமே இது பெரும் இழப்பாகும்,
பி.இராமச்சந்திரன் (த.நா.கா.க.தலைவர்)
திராவிடர் கழகத்தின் தலைவர் திரு.ஈ.வெ.ராமசாமி அவர்களின் மறைவு இந்த நாட்டின் பொது வாழ்க்கையில் குறிப்பாக, தமிழ் நாட்டின் பொதுவாழ்க்கையில் மாபெரும் இழப்பாகும்.
அவர் தீவிர காங்கிரஸ்காரராக இருந்தார்; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பு வகித்திருக்கிறார்; விடு தலை இயக்கத்தின் முன்னணியில் அவர் இருந்தார்; அவர் வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறைச்சாலை ஏகினார்.
தேசத்தின் விடுதலைக்கும், சமூகச் சீர்த்திருத்தத்துக்குமாக வேண்டி நடத்திய போராட்டங்கள் அவரது பொதுவாழ்வில் நிரம்பியிருந்தன. தாழ்த்தப்பட்ட மக்களை முன் னேற்றுவதற்காக அவர் ஆற்றிய பணிகள் மக்களால் என்றும்
நினைவில் நிறுத்திக் கொள்ளப் படும்.
மறைந்த தலைவருக்கு நான் எனது மரியாதை கலந்த அஞ்சலி யைச் செலுத்துகிறேன்.
ம.பொ.சிவஞானம் (தமிழரசுக் கழகத் தலைவர்)
பெரியார் ஈ.வெ.ரா. உலகில் தோன்றிய சமுதாய சீர்திருத்தப் புரட்சியாளர்களில் தலைசிறந்த வராகத் திகழ்ந்தார். தனக்கெனப் புதிய சரித்திரம் படைத்து, உலக சரித்திர நாயகர்கள் வரிசையில் சிறப்பிடம் பெற்று விளங்கியவர் பெரியார்.
உயிர் விடும்வரையில் தம்மு டைய குறிக்கோள்களில் பெரியார் கொண்டிருந்த உறுதியும், எதிர்ப் புக்கு அவர் ஈடுகொடுத்த தீரமும், இன்னொருவரை இணை சொல்ல முடியாது.
பெரியாரோடு தமிழக அரசியல் ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது.
தவத்திரு. குன்றக்குடி அடிகளார்
தமிழகத்தின் காவலர், புரட்சி கரமான சிந்தனையாளர் தலைவர் பெரியார் மறைந்தது இன்றைய தமிழகத்தில் ஈடுசெய்ய முடியாத இழப்பு. வாழ்நாள் பெரும் பகு தியை தலைவர் பெரியார் போல் பொதுப்பணியில் ஈடுபடுத்தியவர் அருமையிலும் அருமை. தமிழகத் தின் அரைநூற்றாண்டு வரலாற்றில் அவர் முத்திரை பதியாத துறையே இல்லை எனலாம். கலக்கமில்லாத, கருத்துப் பிடிப்பு, உண்மையான உழைப்பு அவருக்கே உரிய குண நலன்கள்.
தமிழன் என்ற இனஉணர்வை முன்னிலைப்படுத்தி, அயராது உழைத்த பெரியவர்; பழகுவதற்கு இனிய பண்பாளர்; கடுமையான கருத்து வேற்றுமை உடையவர் இருந்தும் கூட, அவர் காட்டிய கண்ணியம் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருப்போருக்கு எடுத்துக் காட்டாகும்.
தமிழர் என்ற இன உணர்வைத் தூண்டி வளர்த்து, அது செழித்து வளர்ந்து, பூத்துக் காய்க்கின்ற போது அவர் நம்மைவிட்டுப் பிரிந்து விட்டார். ஆயிரம் கருத்து வேற்றுமை இருந்தாலும் அவர் மனித குலத்தின் மீது கங்கு கரை யற்ற அன்புடையவர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது ஜாதி வேறு பாடற்ற சமுதாய அமைப்பு. தமிழர் இனத்தின் முன்னேற்றம் ஆகியவை அவர் நமக்கு வீட்டுச் சென்றிருக்கிற பணிகள். அந்தப் பணிகளைச் செய்து நிறைவேற்று வது தலைவர் பெரியாருக்குச் செய்யும் கடமையாகும்.
தமிழினத்தின் பகையைக் கண்டு, சிம்ம முழக்கம் செய்த ஒரு ஆன்மா ஓய்ந்துவிட்டது. ஆனால், அவர் ஏற்றி வைத்த விளக்கு, எடுத்துத் தந்த லட்சியம் ஓயாது பயணம் செய்யும்.
பி.இராமமூர்த்தி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்)
பெரியார் ஈ.வெ.ரா. தமிழ் நாட்டில் மட்டுமின்றி, இந்தியா பூராவிலும் தனித்தன்மை கொண்ட தலைவராகத் திகழ்ந்தார்.
அரசியலைப் பொறுத்த வரை யில் ஒருவருக்கு, அவருடன் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், அவர் நாட்டின் வைதிகத்தின் காழ்ப்பையும், வெறுப்பையும் தீரத் துடன் எதிர்த்து நின்று மக்களை ஒடுக்கிக் கேவல நிலையில் வைத் திருந்த ஜாதிக் கொடுமை, மூடநம் பிக்கை ஆகியவற்றையும் மக்களை நிரந்தரமாக அடிமைத்தளையில் வைத்திருக்க மக்களிடம் ஊட்டப் பட்ட கடவுள் நம்பிக்கையையும் எதிர்த்து சமூக நீதிக்காக 50 ஆண்டு களுக்கும் மேலாக அயராது போரா டியவர். இது இந்நாட்டின் வர லாற்றில் என்றென்றும் சிறப்பான அத்தியாய மாகத் திகழ்ந்துவரும், பிறப்பில் தாங்கள் உயர்ந்த குலத் தைச் சேர்ந்தவர்கள் என்று பிரா மண சமூகத்தினர் கருதிக் கொண் டதை பெரியார் எதிர்த்துப் போரா டினார். ஆனாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் காட்டியது கிடை யாது.
சமூக ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்கள், பெரியாரின் மறைவின் மூலம் சமூகக் கொடுமைக்கு எதி ராகப் போரிட்டு வந்த ஒரு மாபெரும் வீரரை இழந்து விட்டனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டு களாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சமூகச் சீர்த்திருத்த இயக்கம் துவக்கி நடத்திய பெரியார் மறைவு அதிர்ச்சி தரும் செய்தியாக உள்ளது.
எம்.ஜி.இராமச்சந்திரன் (அ.தி.மு.க.தலைவர்)
தமிழர் சமுதாயம் தனது பாது காவலனை இன, மொழி உயர் வுகளுக் காக அரசி யல், பொரு ளாதார விடு தலைக்காகப் போராடி, போராட்டத் திலேயே தனது வாழ் நாளின் பெரும் பகுதியைக் கழித்த விடுதலை வீரரை இன்றைக்கு இழந்து விட்டது.
இந்தியத் துணைக்கண்டம் ஒரு நூற்றாண்டு வரலாறு படைத்த பேராண்மையும், பேராற்றலும் மிக்க மாவீரர்களின் வரிசையிலே கடைசிச் சின்னத்தை இழந்துவிட்டது. திராவிடர் இயக்கத்திலே தங்களை ஒப்படைத்துக் கொண்ட லட்சோப லட்சம் குடும்பங்கள் தங்களது தந்தையை இழந்து தவித்து நிற்கிறது.
உலகம் ஓர் ஆற்றல் மிக்க சிந்த னையாளரை, மக்கள் சமுதாய வழி காட்டிகளில் ஒருவரை இழந்து விட்டது.
பரூக் மரைக்காயர் (புதுவை முதல்வர்)
தந்தை என்று உரிமையோடு அழைக்கப்பட்டு வந்த தனிப்பெருந் தமிழகத் தலைவர் தந்தை பெரியாரின் மறைவுச் செய்தி கேட்டு மீளாத் துயருற்றேன்.
தமிழ்ச் சமுதாயத்தின் அறிவுக் கண்ணைத் திறந்து மக்களிடையே மலிந்து கிடந்த மூடப்பழக்கவழக் கங்களையும், அர்த்தமற்ற வழிமுறை களையும் தூக்கி எறிந்து பகுத்தறிவு உணர்ச்சியைத் தோற்றுவித்த பெருமை பெரியாரையே சாரும்.
எண்ணற்ற இளம் தலைவர்களை உருவாக்கியும், சமுதாயத்தில் புதிய தோர் விழிப்புணர்ச்சியைத் தோற்று வித்தும், ஜாதியின் பெயரால் கொடு மைகளுக்கு ஆளான சமுதாயத்தின ருக்குப் புதுவாழ்வு தந்தும் பெரியார் என்ற தனி மனிதர் தமிழரின் வர லாற்றில் ஈடற்ற ஓர் சகாப்தமாகத் திகழ்கின்றார்.
வாழ்நாள் முழுமையும் சமுதாய சீர்த்திருத்தங்களுக்காகவே அர்ப்பணித்து, இறுதி வரையில் தான் நிறுவிய திராவிடர் கழகம் அரசிய லில் ஈடுபடாமல், சமுதாய முன் னேற்றத்துக்காகப் பாடுபட்டு வரும் நிகழ்ச்சி, இந்திய வரலாற்றிலேயே போற்றுதற்குரியதாகும்.
தந்தைபெரியாரின் மறைவு ஈடு செய்யமுடியாத பேரிழப்பு ஆகும். அவரது சீர்திருத்தக்கருத்துகளையும், சுயமரியாதை எண்ணங்களையும் மக்களிடையே பரப்புகின்ற நற்பணி யில் நம்மை மேலும் ஈடுபடுத்தி, பெரியாரின் அரிய நினைவுக்கு அஞ்சலி செலுத்துவோம்.
தந்தை பெரியாரின் இறப்பினால் வருந்துகின்ற எண்ணற்ற தமிழ் நெஞ் சங்களோடு நானும், என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
பக்தவத்சலம் (தமிழக முன்னாள் முதல்வர்)
யாரைப்பற்றியும், எதைப்பற்றி யும் என்ன நினைக்கிறாரோ அதை ஒளிக்காமல் சொல்லக்கூடிய அஞ்சா நெஞ்சம் படைத்தவர் ஈ.வெ.ரா.
பெரியார் ஒரு தனி மனிதரல்ல; அவர் ஒரு பெரிய ஸ்தாபனம்.
ஆரம்பகாலத்தில் பெரியார் காங் கிரசின் தீவிர தலைவராக இருந்தார். ராஜாஜியின் நெருங்கிய நண்பராக வும் இருந்துவந்தார்.
பெரியாரின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும்.
தேவராஜ் அர்ஸ் (கருநாடக முதல்வர்)
தமிழ்நாட்டு அரசியலில் பல் லாண்டு காலம் புரட்சிப் புயலாய் விளங்கியவர் பெரியார். அவர் பிரச் சாரம் செய்த எல்லாக் கொள்கை களையும் நாம் ஏற்கமுடியாமல் இருக்கலாம்; அவர் கையாண்ட வழி முறைகளையும் நாம் ஏற்கமுடியாமல் இருக்கலாம். என்றபோதிலும் ஏழை, எளியவர்களுக்காகவும், தாழ்த்தப் பட்ட மக்களுக்காகவும் அவர்காட் டிய இரக்க உணர்ச்சியைப் பாராட் டாமல் இருக்க முடியாது. இம் மக்களின் பொருளாதார, சமூக நிலை மேம்பாடடைய அவர் நடத்திய மாபெரும் போராட்டங்களைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.
பெரியார் இலட்சியத் தலைமை பூண்ட ஓர் நாயகன். தமது வாழ் நாளிலேயே காவிய நாயகனாகத் திகழ்ந்தவர்.

கீழ்ப்பாக்கத்தில் ஊளையிடும் பார்ப்பன நரியே!

டில்லியில் இராசா விசாரணை - கோபாலபுரத்தில் திக், திக் என்ற அட்டைப் படத் தலைப்புப் போடும் கீழ்ப்பாக்கத் திலிருந்து ஊளையிடும் பார்ப்பன நரியே!
பல லட்சங்கள் சுவாகா மோசடி செய்ததாக குமுதம் ஆசிரியர் ஜவகர் பழனியப்பன் காவல்துறையிடம் கொடுத்த கிரிமினல் குற்றப் புகாரினால் அரண்டு திக் திக், பக், பக் என்று நடுநடுங்கி, எங்கே தன்னை கம்பி எண்ண வைத்து விடுவார்களோ என்று ஓடி ஓடி கோபாலபுரம் படிக்கட்டேறி, மானங்கெட காலில் விழுந்து கெஞ்சியது யார்?
காஞ்சி வரதராஜப் பெருமானா?
இல்லை இல்லை என
அப்போது திக் திக், பக் பக்கா? கீழ்ப்பாக்கம் வரதராஜ அய்யங்காரா?
இன்று மட்டும் திக், திக் தலைப்பா?
1976 நெருக்கடி நிலை காலம் என்ற இருண்ட காலத்திலேயே... கோபாலபுரம் திக் திக், பக் பக் இல்லையே, இப்போதா?
பொய்யைச் சொன்னாலும் பொருத்த மாகச் சொல்லவேண்டாமா?
அட வெட்கங்கெட்ட பூணூல்களே, உங்கள் கதை விரிவாக இனி வந்தால், ஊர் சிரிக்கும், உலகம் சிரிக்கும்! மல்லாந்து படுத்து மார்மீது எச்சில் துப்பும் புத்திசாலிகளே,
தொடங்கலாமா உங்கள் கதையை?

Wednesday, December 15, 2010

தமிழர் தலைவர் எச்சரிக்கை அறிக்கை!

அடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களை மனதிற்கொண்டு
எதிர்க்கட்சிகள் 2ஜி பிரச்சினையை எடுத்துக் கொண்டுள்ளனர்
அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக் (UPA) கட்சியினர் மறுப்பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும்
இல்லையேல் கடும் விலையைக் கொடுக்க நேரிடும்!
தமிழர் தலைவர் எச்சரிக்கை அறிக்கை!
சட்டமன்றத் தேர்தலை மனதிற்கொண்டு பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 2ஜி அலைக்கற்றைப் பிரச்சினையில் ஊழல் என்று கூறி மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை முடுக்கிவிட முனைந்துள்ளனர். இந்நிலையில், அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சியினர் (UPA) தனித்தனியாகவோ, கூட்டாகவோ தெருவில் இறங்கி மறுப் பிரச்சாரத்தை முடுக்கிவிடவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை வருமாறு:
2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற இரண்டாவது தலைமுறை வரிசை அலைக்கற்றை வழங்கப்பட்ட முறையை சாக்காகக் கொண்டு, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை கடந்த 22 நாள்களாக முடக்கி, கூச்சல் குழப்பத்தால் நடத்திய வெட்கக்கேடு மிகப்பெரிய அண்மைக்கால தேசிய அவமானமாகும்!
நாடாளுமன்ற முடக்கத்தால் 22 நாள் செலவு ரூ.146 கோடி
சுமார் 146 கோடி ரூபாய் பொருள் இழப்பு - மக்கள் வரிப்பணம் பாழானதோடு, சென்றால் திரும்பவே பெற முடியாத நாடாளுமன்ற விவாத காலத்தையும் இழந்துள்ளது இரு அவைகளும்!
இப்படி கூச்சல் - குழப்பம் செய்யவா மக்கள் இவர்களை அனுப்பினார்கள்?
ஊழலை ஒழிப்பதுதான் தங்கள் இலக்கு என்பது உண்மையானால், பொறுப்புள்ள எதிர்க்கட்சிகள் என்ன செய்திருக்கவேண்டும்?
பல்வேறு ஆதாரங்களை அங்கே தாக்கல் செய்து, அறிவார்ந்த ஆணித்தரமான வாதங்களை எடுத்துரைத்து, உலகமே அவைகளை அறியும்படிச் செய்திருந்தால், அது உண்மைகளை உலகுக்குப் புரிய வைக்கக் கூடியதாக இருந்திருக்கும்!
கிளிப்பிள்ளைப் பேச்சு!
வெறும் கிளிப் பிள்ளைகளைப் போல சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி ஜே.பி.சி. (JPC) என்ற நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை நியமிக்கவேண்டும் என்றே பிடிவாதம் காட்டினர்.
இதற்கு முன்னால், நடைபெற்ற கூட்டுக் குழு விசாரணைகளில் எதிலும் குற்றமிழைத்தோர் சரியாக அடையாளம் காட்டப்பட்டதோ, தண்டனை பெற வைத்ததோ எதுவும் நடைபெறவில்லையே; பின் ஏன் வீண் பிடிவாதம் என்ற ஆளுந்தரப்பினரின் கேள்விக்கு சரியான விடை தரவில்லை எதிர்க்கட்சியினர்!
சி.ஏ.ஜி. (CAG) என்ற தணிக்கையாளர் தந்த அறிக்கையில் இழப்புத் தொகை இவ்வளவு என்று கணக்கிட்டு திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளாரா? இல்லையே!
59 பக்கம் உள்ள அந்தத் தணிக்கை அறிக்கையின் இறுதி - இத்தொகை (அதுவும் ஊகம், உத்தேசம்தான்) விவாதம் செய்து முடிவு செய்யலாம். (‘‘The Loss Amount is Debatable’’) என்று எழுதுவாரா? எந்தத் தணிக்கை அறிக்கையிலாவது இப்படி ஒரு உத்தேசத் தொகை விவாதம் செய்து முடிவு செய்துள்ளார்கள் என்ற வரலாறு உண்டா? எங்காவது கூட்டுப் புள்ளிக்கு விடை விவாதத்தின்மூலம் பெற்ற கேலிக் கூத்து உண்டா?
பொதுக்கணக்குக் குழுவின்மீது நம்பிக்கை இல்லையா?
நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்கு (PAC) என்பதில் தலைமை தாங்கி விசாரணை - ஆய்வு செய்பவர் பா.ஜ.க.வின் மூத்த தலைவர் (எதிர்க்கட்சியினர் இடதுசாரிகள் உள்பட பலரும் உள்ளனர்) முரளிமனோகர் ஜோஷி. விசாரணை தொடங்கிவிட்டது. அதில் எதிர்க்கட்சியின ருக்கே நம்பிக்கை இல்லை போலும்!
இந்தப் பிரச்சினை 2ஜி அலைக்கற்றை உச்ச நீதிமன்றத்தின் ஆணைப் படி அடி முதல் நுனிவரை மத்திய புலனாய்வுத் துறையால் (சி.பி.அய்.) நடத்தப்பட்டு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய் யப்படுகிறது-அவ்வப்போது என்ற நிலையும் தொடர்கிறது!
இந்நிலையில், போகாத ஊருக்கு, இல்லாத பாதை யைத் தேடுவதுதானே எதிர்க்கட்சிகளின் முயற்சி?
தெருவுக்குக் கொண்டு போவார்களாம்
இப்போது வரும் 22 ஆம் தேதி இப்பிரச்சினை தெருவுக்கு கொண்டுபோக ஒரு பெரும் கண்டனக் கூட்டம் நடத்திட திட்டமிடப் போகிறார்களாம்!
அதனுடைய உள்நோக்கம், UPA அரசினையே இயங்க விடாமல் செய்யத் திட்டம் என்பதைத் தவிர வேறு என்ன?

இதற்கு தகுந்த முறையில் பதிலடி கொடுப்பது அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைந்த கடமையல்லவா?
பெரும்பான்மையாக உள்ள காங்கிரசுக்கு - அது தலைமை தாங்குவதால் - மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் உண்டு.
அமைச்சர் இராசாவை ராஜினாமா செய்ய வைத்து, தி.மு.க ஜனநாயக ரீதியில் உயர்ந்துவிட்டது.

கருநாடக முதல்வரைப் பதவி விலகச் செய்ய முடியாதது ஏன்?

கருநாடக பா.ஜ.க. முதல்வரை அப்படிச் செய்ய வைக்க முயற்சித்தும், பா.ஜ.க.வின் படே படே தலைவர்கள் பரிதாபமாக மூக்குடைபட்டார்களே!
எனவே, அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் இப்பிரச்சினையில் எதுவும் தவறோ, ஊழலோ உண்மை யான இழப்போ ஏற்படவில்லை என்பதை நாடு தழுவிய பிரச்சாரத்தின்மூலம், ஒரே குரலில் சொல்லியாக வேண்டும்.
உண்மைகளைப் பலியாக்கிவிட எதிர்க்கட்சியினர் முயலுகின்றனர்!
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி பிரச்சாரத்தில் இறங்கட்டும்!
ஜே.பி.சி. கிடையாது என்ற முடிவில் காட்டிய உறுதியை, தவறு ஏதும் நடக்கவில்லை; நடந்ததாக பூதாகரமான ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரத்தை அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) க்கு எதிரான முயற்சி என்ற அவர்களது பலூன் போன்ற பிரச்சாரத்தை - தங்களது ஊசி குத்திடுவது போன்ற முயற்சியின்மூலம் மக்களை விழிப்புறச் செய்யவேண்டும்.
எதிர்க்கட்சிகள் இப்படி கூச்சல் போட்டு தெரு முனைக்கு வருவது ஏன் தெரியுமா? அடுத்த 4, 5 மாதங்களில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளம், புதுச்சேரி, கிழக்கே சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்வர இருப்பதாலே அரசியல் மூலதனமாக இதனை ஆக்கத் திட்டமிட்டுள்ளனர்!
இந்த முகமூடியைக் கிழித்தெறிந்து காட்டுவது அவசர- அவசியமாகும்!
இதை ஒரு கட்சிப் பிரச்சினையாகக் கருதி, கடைசி வீட்டில் தானே தீ எரிகிறது என்று நினைத்தால், அதே வரிசை வீடுகளுக்கும் தீ பரவுவது உறுதி.
எனவே, கூடிக் கலந்து பேசி, நாடு தழுவிய மறுப் பிரச்சாரத்தை, அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சியினர் கூட்டாகவோ, தனியாகவோ செய்தால்தான் மலையென வரும் எதிர்ப்பு - பனியென விலகிட வாய்ப்பு ஏற்படும்!
செயலாற்றும் காலம் இது!
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றிட முடியாது என்று தெரிந்துள்ளதால் அவர்கள் அதற்கு முயற்சிக்க முன்வரவில்லை!
மக்களுக்கு ஆளுந்தரப்பில் விளக்கிடவேண்டும். இது தனிப்பட்ட ஒரு அமைச்சரைச் சார்ந்ததோ ஒரு கூட்டணிக் கட்சியைச் சார்ந்த பிரச்சினையோ அல்ல!
கூட்டு முயற்சி உடனே தேவை!
இல்லையேல், கொடுக்கவேண்டிய விலை அதிகமாகி விடும். கூட்டணிக் கட்சித் தலைவர்களும், அனைவரும் சிந்திப்பார்களாக! செயலாற்றும் காலம் இப்போது வந்துவிட்டது!




தலைவர்,
திராவிடர் கழகம்

Sunday, December 12, 2010

ஆரியர் - திராவிடர் போர்

முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் வேலூரிலும், நாகப்பட்டினத்திலும் ஆற்றிய உரை நேரு கூறிய ஆரியர் - திராவிடர் போர் - நேற்றும் - இன்றும் எனும் தலைப்பில் திராவிடர் கழகம் நூலாக வெளியிட்டுள்ளது. அந்நூல், சென்னைப் பெரியார் திடலில், தந்தை பெரியார் நினைவு நாளில் வெளியிடப்பட்டது. 32 பக்கங்களைக் கொண்ட இந்நூலுக்கான நன்கொடை ரூபாய் பத்து மட்டும்தான். இந்நூல் பட்டிதொட்டியெல்லாம் பரவும் வகை செய்ய தமிழர்கள் போதிய முயற்சிகளை மேற்கொள்வார்களாக!

இன்றைய சூழலில் இந்நூல் கடைகோடி மனிதர்க்கும் கொண்டு போய் போய் சேர்க்கப்படவேண்டியது அவசியம் ஆகும்.

தி.மு.க. ஆட்சியைப் பொறுத்த அளவில் மக்கள் நல அரசு (றுநடகயசந ளுவயவந) என்ற சொல்லாக்கத்திற்குப் பொருத்த மானதாகும்.

தேர்தல் அறிக்கையில் எவற்றையெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளனவோ - என்னென்ன வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளனவோ, அவையெல்லாம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது மட்டும் அல்லாமல், தேர்தல் அறிக்கையில் கூறப்படாத பலவும்கூட நிறைவேற்றப்பட்டுள்ளன.

2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று சொல்லப்பட்டது. அவ்வாறே அளிக்கப்பட்டும் வந்தது. அடுத்தகட்டமாக ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியத் துணைக் கண்டத்தில் வேறு எந்த மாநில அரசும் நினைத்துப் பார்க்கப்பட முடியாத ஒன்று இது. இதற்காக கிலோ ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய் 21 இழப்பு என்று கணக்கிடப் பட்டுள்ளது. இருந்தாலும், மக்களின் பசிப்பிணி என்ற நோயைத் தீர்க்கும் இந்தத் திட்டத்தை வெறும் ரூபாய் அணா பைசா எனும் தராசு தட்டில் போட்டு நிறுத்துப் பார்ப்பது - மனிதாபிமானமற்ற மனத்தையே சுட்டிக்காட்டும்.

அதேபோல, மனிதனுக்கு மிக முக்கியமானது உடல் நோய் தீர்க்கும் பிரச்சினையாகும். கலைஞர் உயிர் காக்கும் திட்டம்; 108 ஆம்புலன்ஸ் உதவி - இவை எல்லாம் அடித்தட்டு மக்களின் நல்வாழ்வைத் தன் அடிமனத்தில் கொண்ட ஓர் அரசால்தான் செயல்படுத்த முடியும்.
அதேபோல குடியிருக்கக் கான்கிரீட் வீடு  21 லட்சம் மக்களுக்கு என்பது - எண்ணிப் பார்க்கவே மலைப்பாக இருக்கக் கூடியதாகும்.

வேலை வாய்ப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை - இது சில வெளிநாடுகளில் உண்டே தவிர, இந்தியாவுக்குள் கிடையாது.

சமூக மறுமலர்ச்சித் திசையில், பெரியார் நினைவு சமத்துவபுரம், தமிழ் செம்மொழி, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்பு என்பன காலத்தைக் கடந்து கம்பீரமாக நிற்கக் கூடியவையாகும்.

இவ்வளவு நடந்தும் ஒரு சிறு கும்பல் இந்த ஆட்சியின் மீது மண்ணை வாரி இறைக்கிறது. இந்தக் கும்பலிடம் ஊடகம் என்பது வசதியாக, வளமாகச் சிக்கிக்கொண்டு இருக்கிறது. அந்தக் கும்பல் எண்ணிக்கையில் சிறுபான்மையான பார்ப் பனர்களாக இருந்தாலும்கூட, ஆதிக்கக் சக்திகளாகத்தான் நங்கூரம் பாய்ச்சி நிற்கிறது.

தூசைத் துரும்பாக்கிக் காட்டுகின்றன. பெரும்பான்மை மக்களான பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கான அரசாக இது அமைந்துள்ளதால், அதனை இந்தச் சிறு நரிக் கூட்டத்தால் சீரணித்துக் கொள்ள முடியவில்லை.

இந்தச் சிறு கும்பலுக்கும், இந்த நாட்டுக்குரிய மக் களுக்கும் நீண்ட காலமாகப் போராட்டம் நடந்துகொண்டே இருக்கிறது. இராமாயணம் என்பதேகூட இந்த அடிப்படை யில்தான் என்று நேரு - விவேகானந்தர் போன்றவர்களே எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
 
நாட்டில் நடப்பது வெறும் அரசியல் போராட்டம் அல்ல; ஆரியர் - திராவிடர் போராட்டமே - தேவாசுர யுத்தமே என்று அறுதியிட்டுக் கூறியிருக்கின்றார் தந்தை பெரியார் (விடுதலை, 22.5.1967).

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரும் இதனை ஒப்புக் கொண்டுள்ளார். தேவர்கள், அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ்நாட்டின் நிலை (18.9.1953 இல் முதல மைச்சராக இருந்த நிலையில், திருவான்மியூரில் பேசியது) என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையேதான் வேலூர், நாகை நகரங்களிலும் (முறையே 27.11.2010, 10.10.2010) நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களும் வழிமொழிந்து பேசும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

1971 ஆம் ஆண்டு தந்தை பெரியார்: இப்பொழுது நடைபெறுவது திராவிட - ஆரிய யுத்தம் என்று சொன்னார். பெரியார் என்ன? இராமாயணத்தைப்பற்றி எழுதிய பண்டித ஜவகர்லால் நேரு அவர்களே, தேவாசுர யுத்தம் என்பது தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடந்த யுத்தம் என்று  எழுதியிருந்தாலும்கூட, இது திராவிடர்களுக்கும், ஆரியர்களுக்கும் நடந்த போராட்டம்தான் என்று ஜவகர்லால் நேரு தனது மகளுக்கு எழுதிய கடிதம் என்ற புத்தகத்திலே எழுதியிருக்கிறார்.

இப்பொழுது அரசியல் ரீதியாக அந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தாங்கவேண்டிய பெரும் பொறுப்பு நம்முடைய தோள்களுக்கு வந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர்.

சிலர் குழப்புவதுபோல பிரச்சினையைத் திசை திருப்பு வதற்குக் கூறப்பட்ட ஒன்றல்ல இது. நாட்டு நடப்பும், பார்ப்பனர் களும், அவர்கள் கையில் சிக்குண்டு கிடக்கின்ற ஊடகங்கள் மேற்கொண்டிருக்கிற அடாவடித்தனமான பிரச்சாரங்களும் முதலமைச்சர் கூறுவது - கணித்திருப்பது மிகச் சரியானது தான் என்பதை வெளிப்படுத்துகின்றன.

இது ஒன்றும் இராமயண காலம் அல்ல; திராவிடர் இயக்கமும், தந்தை பெரியார் அவர்களும் எழுப்பியிருக்கிற தன்மான உணர்ச்சி தலைதூக்கி நிற்கும் காலகட்டம். 1971 பொதுத் தேர்தல் அதனை நிரூபித்தும் உள்ளது. 2011 தேர்தலும் அதற்கு மேலாகவும் திராவிடர்கள் தங்கள் ஆளுமையைக் காட்டுவார்கள் என்பது கல்லின்மேல் எழுத்தாகும்.
தமிழா, தமிழனாக இரு!
தமிழா, இன உணர்வு கொள்!!

Saturday, December 11, 2010

பெரியார் திரை - குறும்படப்போட்டி 2010

பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை & பகுத்தறிவாளர் கழகம்
இணைந்து நடத்தும் 
பெரியார் திரை - குறும்படப்போட்டி 2010

முதல் பரிசு: ரூ.10,000
இரண்டாம் பரிசு: ரூ. 5,000
மூன்றாம் பரிசு: ரூ. 3,000
மேலும் சிறப்பு, ஊக்கப் பரிசுகள் உண்டு
நுழைவுக் கட்டணம் இல்லை.
போட்டிக்கான விதிமுறைகள்: 
*     குறும்படம் தமிழில் எடுக்கப்பட்டதாக 30 மணித் துளிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 
*     ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன் (Subtitles) இருப்பின் நலம்.
* DVD அல்லது CD வடிவில் தரமானதாக இருக்க வேண்டும். குறும்படத்தின் 2 பிரதிகள் அனுப்பப்பட வேண்டும்.
* போட்டியில் கலந்து கொள்ளுவதற்கான ஒப்புதல் கடிதம் படத்தின் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.
* போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் குறும் படங்கள் அனைத்தும் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை நடத்தும் திரையிடல் நிகழ்வில் திரையிடப்படும்.
* குறும்படங்கள் 2008-2010 ஆம் ஆண்டுக்குள் எடுக்கப்பட்டனவாக இருக்க வேண்டும்.
* தேர்வு செய்யப்படாத குறும்படங்களைத் திருப்பி அனுப்புதல் இயலாது.
* ஆவணப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
* தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது. 

விண்ணப்பம் மற்றும் முழுமையான விதிமுறைகளை
ஆகியவற்றில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

கடைசித் தேதி: டிசம்பர் 20, 2010.
அனுப்ப வேண்டிய முகவரி:
அமைப்பாளர்,
பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை,
பெரியார் திடல்,
50, ஈ.வெ.கி. சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை-7

மேலும் தொடர்புகளுக்கு:
செல்பேசி: 9444210999, 9940489230

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...