Friday, December 24, 2010

கீழ்ப்பாக்கத்தில் ஊளையிடும் பார்ப்பன நரியே!

டில்லியில் இராசா விசாரணை - கோபாலபுரத்தில் திக், திக் என்ற அட்டைப் படத் தலைப்புப் போடும் கீழ்ப்பாக்கத் திலிருந்து ஊளையிடும் பார்ப்பன நரியே!
பல லட்சங்கள் சுவாகா மோசடி செய்ததாக குமுதம் ஆசிரியர் ஜவகர் பழனியப்பன் காவல்துறையிடம் கொடுத்த கிரிமினல் குற்றப் புகாரினால் அரண்டு திக் திக், பக், பக் என்று நடுநடுங்கி, எங்கே தன்னை கம்பி எண்ண வைத்து விடுவார்களோ என்று ஓடி ஓடி கோபாலபுரம் படிக்கட்டேறி, மானங்கெட காலில் விழுந்து கெஞ்சியது யார்?
காஞ்சி வரதராஜப் பெருமானா?
இல்லை இல்லை என
அப்போது திக் திக், பக் பக்கா? கீழ்ப்பாக்கம் வரதராஜ அய்யங்காரா?
இன்று மட்டும் திக், திக் தலைப்பா?
1976 நெருக்கடி நிலை காலம் என்ற இருண்ட காலத்திலேயே... கோபாலபுரம் திக் திக், பக் பக் இல்லையே, இப்போதா?
பொய்யைச் சொன்னாலும் பொருத்த மாகச் சொல்லவேண்டாமா?
அட வெட்கங்கெட்ட பூணூல்களே, உங்கள் கதை விரிவாக இனி வந்தால், ஊர் சிரிக்கும், உலகம் சிரிக்கும்! மல்லாந்து படுத்து மார்மீது எச்சில் துப்பும் புத்திசாலிகளே,
தொடங்கலாமா உங்கள் கதையை?

Wednesday, December 15, 2010

தமிழர் தலைவர் எச்சரிக்கை அறிக்கை!

அடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களை மனதிற்கொண்டு
எதிர்க்கட்சிகள் 2ஜி பிரச்சினையை எடுத்துக் கொண்டுள்ளனர்
அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக் (UPA) கட்சியினர் மறுப்பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும்
இல்லையேல் கடும் விலையைக் கொடுக்க நேரிடும்!
தமிழர் தலைவர் எச்சரிக்கை அறிக்கை!
சட்டமன்றத் தேர்தலை மனதிற்கொண்டு பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 2ஜி அலைக்கற்றைப் பிரச்சினையில் ஊழல் என்று கூறி மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை முடுக்கிவிட முனைந்துள்ளனர். இந்நிலையில், அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சியினர் (UPA) தனித்தனியாகவோ, கூட்டாகவோ தெருவில் இறங்கி மறுப் பிரச்சாரத்தை முடுக்கிவிடவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை வருமாறு:
2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற இரண்டாவது தலைமுறை வரிசை அலைக்கற்றை வழங்கப்பட்ட முறையை சாக்காகக் கொண்டு, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை கடந்த 22 நாள்களாக முடக்கி, கூச்சல் குழப்பத்தால் நடத்திய வெட்கக்கேடு மிகப்பெரிய அண்மைக்கால தேசிய அவமானமாகும்!
நாடாளுமன்ற முடக்கத்தால் 22 நாள் செலவு ரூ.146 கோடி
சுமார் 146 கோடி ரூபாய் பொருள் இழப்பு - மக்கள் வரிப்பணம் பாழானதோடு, சென்றால் திரும்பவே பெற முடியாத நாடாளுமன்ற விவாத காலத்தையும் இழந்துள்ளது இரு அவைகளும்!
இப்படி கூச்சல் - குழப்பம் செய்யவா மக்கள் இவர்களை அனுப்பினார்கள்?
ஊழலை ஒழிப்பதுதான் தங்கள் இலக்கு என்பது உண்மையானால், பொறுப்புள்ள எதிர்க்கட்சிகள் என்ன செய்திருக்கவேண்டும்?
பல்வேறு ஆதாரங்களை அங்கே தாக்கல் செய்து, அறிவார்ந்த ஆணித்தரமான வாதங்களை எடுத்துரைத்து, உலகமே அவைகளை அறியும்படிச் செய்திருந்தால், அது உண்மைகளை உலகுக்குப் புரிய வைக்கக் கூடியதாக இருந்திருக்கும்!
கிளிப்பிள்ளைப் பேச்சு!
வெறும் கிளிப் பிள்ளைகளைப் போல சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி ஜே.பி.சி. (JPC) என்ற நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை நியமிக்கவேண்டும் என்றே பிடிவாதம் காட்டினர்.
இதற்கு முன்னால், நடைபெற்ற கூட்டுக் குழு விசாரணைகளில் எதிலும் குற்றமிழைத்தோர் சரியாக அடையாளம் காட்டப்பட்டதோ, தண்டனை பெற வைத்ததோ எதுவும் நடைபெறவில்லையே; பின் ஏன் வீண் பிடிவாதம் என்ற ஆளுந்தரப்பினரின் கேள்விக்கு சரியான விடை தரவில்லை எதிர்க்கட்சியினர்!
சி.ஏ.ஜி. (CAG) என்ற தணிக்கையாளர் தந்த அறிக்கையில் இழப்புத் தொகை இவ்வளவு என்று கணக்கிட்டு திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளாரா? இல்லையே!
59 பக்கம் உள்ள அந்தத் தணிக்கை அறிக்கையின் இறுதி - இத்தொகை (அதுவும் ஊகம், உத்தேசம்தான்) விவாதம் செய்து முடிவு செய்யலாம். (‘‘The Loss Amount is Debatable’’) என்று எழுதுவாரா? எந்தத் தணிக்கை அறிக்கையிலாவது இப்படி ஒரு உத்தேசத் தொகை விவாதம் செய்து முடிவு செய்துள்ளார்கள் என்ற வரலாறு உண்டா? எங்காவது கூட்டுப் புள்ளிக்கு விடை விவாதத்தின்மூலம் பெற்ற கேலிக் கூத்து உண்டா?
பொதுக்கணக்குக் குழுவின்மீது நம்பிக்கை இல்லையா?
நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்கு (PAC) என்பதில் தலைமை தாங்கி விசாரணை - ஆய்வு செய்பவர் பா.ஜ.க.வின் மூத்த தலைவர் (எதிர்க்கட்சியினர் இடதுசாரிகள் உள்பட பலரும் உள்ளனர்) முரளிமனோகர் ஜோஷி. விசாரணை தொடங்கிவிட்டது. அதில் எதிர்க்கட்சியின ருக்கே நம்பிக்கை இல்லை போலும்!
இந்தப் பிரச்சினை 2ஜி அலைக்கற்றை உச்ச நீதிமன்றத்தின் ஆணைப் படி அடி முதல் நுனிவரை மத்திய புலனாய்வுத் துறையால் (சி.பி.அய்.) நடத்தப்பட்டு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய் யப்படுகிறது-அவ்வப்போது என்ற நிலையும் தொடர்கிறது!
இந்நிலையில், போகாத ஊருக்கு, இல்லாத பாதை யைத் தேடுவதுதானே எதிர்க்கட்சிகளின் முயற்சி?
தெருவுக்குக் கொண்டு போவார்களாம்
இப்போது வரும் 22 ஆம் தேதி இப்பிரச்சினை தெருவுக்கு கொண்டுபோக ஒரு பெரும் கண்டனக் கூட்டம் நடத்திட திட்டமிடப் போகிறார்களாம்!
அதனுடைய உள்நோக்கம், UPA அரசினையே இயங்க விடாமல் செய்யத் திட்டம் என்பதைத் தவிர வேறு என்ன?

இதற்கு தகுந்த முறையில் பதிலடி கொடுப்பது அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைந்த கடமையல்லவா?
பெரும்பான்மையாக உள்ள காங்கிரசுக்கு - அது தலைமை தாங்குவதால் - மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் உண்டு.
அமைச்சர் இராசாவை ராஜினாமா செய்ய வைத்து, தி.மு.க ஜனநாயக ரீதியில் உயர்ந்துவிட்டது.

கருநாடக முதல்வரைப் பதவி விலகச் செய்ய முடியாதது ஏன்?

கருநாடக பா.ஜ.க. முதல்வரை அப்படிச் செய்ய வைக்க முயற்சித்தும், பா.ஜ.க.வின் படே படே தலைவர்கள் பரிதாபமாக மூக்குடைபட்டார்களே!
எனவே, அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் இப்பிரச்சினையில் எதுவும் தவறோ, ஊழலோ உண்மை யான இழப்போ ஏற்படவில்லை என்பதை நாடு தழுவிய பிரச்சாரத்தின்மூலம், ஒரே குரலில் சொல்லியாக வேண்டும்.
உண்மைகளைப் பலியாக்கிவிட எதிர்க்கட்சியினர் முயலுகின்றனர்!
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி பிரச்சாரத்தில் இறங்கட்டும்!
ஜே.பி.சி. கிடையாது என்ற முடிவில் காட்டிய உறுதியை, தவறு ஏதும் நடக்கவில்லை; நடந்ததாக பூதாகரமான ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரத்தை அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) க்கு எதிரான முயற்சி என்ற அவர்களது பலூன் போன்ற பிரச்சாரத்தை - தங்களது ஊசி குத்திடுவது போன்ற முயற்சியின்மூலம் மக்களை விழிப்புறச் செய்யவேண்டும்.
எதிர்க்கட்சிகள் இப்படி கூச்சல் போட்டு தெரு முனைக்கு வருவது ஏன் தெரியுமா? அடுத்த 4, 5 மாதங்களில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளம், புதுச்சேரி, கிழக்கே சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்வர இருப்பதாலே அரசியல் மூலதனமாக இதனை ஆக்கத் திட்டமிட்டுள்ளனர்!
இந்த முகமூடியைக் கிழித்தெறிந்து காட்டுவது அவசர- அவசியமாகும்!
இதை ஒரு கட்சிப் பிரச்சினையாகக் கருதி, கடைசி வீட்டில் தானே தீ எரிகிறது என்று நினைத்தால், அதே வரிசை வீடுகளுக்கும் தீ பரவுவது உறுதி.
எனவே, கூடிக் கலந்து பேசி, நாடு தழுவிய மறுப் பிரச்சாரத்தை, அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சியினர் கூட்டாகவோ, தனியாகவோ செய்தால்தான் மலையென வரும் எதிர்ப்பு - பனியென விலகிட வாய்ப்பு ஏற்படும்!
செயலாற்றும் காலம் இது!
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றிட முடியாது என்று தெரிந்துள்ளதால் அவர்கள் அதற்கு முயற்சிக்க முன்வரவில்லை!
மக்களுக்கு ஆளுந்தரப்பில் விளக்கிடவேண்டும். இது தனிப்பட்ட ஒரு அமைச்சரைச் சார்ந்ததோ ஒரு கூட்டணிக் கட்சியைச் சார்ந்த பிரச்சினையோ அல்ல!
கூட்டு முயற்சி உடனே தேவை!
இல்லையேல், கொடுக்கவேண்டிய விலை அதிகமாகி விடும். கூட்டணிக் கட்சித் தலைவர்களும், அனைவரும் சிந்திப்பார்களாக! செயலாற்றும் காலம் இப்போது வந்துவிட்டது!




தலைவர்,
திராவிடர் கழகம்

Sunday, December 12, 2010

ஆரியர் - திராவிடர் போர்

முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் வேலூரிலும், நாகப்பட்டினத்திலும் ஆற்றிய உரை நேரு கூறிய ஆரியர் - திராவிடர் போர் - நேற்றும் - இன்றும் எனும் தலைப்பில் திராவிடர் கழகம் நூலாக வெளியிட்டுள்ளது. அந்நூல், சென்னைப் பெரியார் திடலில், தந்தை பெரியார் நினைவு நாளில் வெளியிடப்பட்டது. 32 பக்கங்களைக் கொண்ட இந்நூலுக்கான நன்கொடை ரூபாய் பத்து மட்டும்தான். இந்நூல் பட்டிதொட்டியெல்லாம் பரவும் வகை செய்ய தமிழர்கள் போதிய முயற்சிகளை மேற்கொள்வார்களாக!

இன்றைய சூழலில் இந்நூல் கடைகோடி மனிதர்க்கும் கொண்டு போய் போய் சேர்க்கப்படவேண்டியது அவசியம் ஆகும்.

தி.மு.க. ஆட்சியைப் பொறுத்த அளவில் மக்கள் நல அரசு (றுநடகயசந ளுவயவந) என்ற சொல்லாக்கத்திற்குப் பொருத்த மானதாகும்.

தேர்தல் அறிக்கையில் எவற்றையெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளனவோ - என்னென்ன வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளனவோ, அவையெல்லாம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது மட்டும் அல்லாமல், தேர்தல் அறிக்கையில் கூறப்படாத பலவும்கூட நிறைவேற்றப்பட்டுள்ளன.

2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று சொல்லப்பட்டது. அவ்வாறே அளிக்கப்பட்டும் வந்தது. அடுத்தகட்டமாக ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியத் துணைக் கண்டத்தில் வேறு எந்த மாநில அரசும் நினைத்துப் பார்க்கப்பட முடியாத ஒன்று இது. இதற்காக கிலோ ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய் 21 இழப்பு என்று கணக்கிடப் பட்டுள்ளது. இருந்தாலும், மக்களின் பசிப்பிணி என்ற நோயைத் தீர்க்கும் இந்தத் திட்டத்தை வெறும் ரூபாய் அணா பைசா எனும் தராசு தட்டில் போட்டு நிறுத்துப் பார்ப்பது - மனிதாபிமானமற்ற மனத்தையே சுட்டிக்காட்டும்.

அதேபோல, மனிதனுக்கு மிக முக்கியமானது உடல் நோய் தீர்க்கும் பிரச்சினையாகும். கலைஞர் உயிர் காக்கும் திட்டம்; 108 ஆம்புலன்ஸ் உதவி - இவை எல்லாம் அடித்தட்டு மக்களின் நல்வாழ்வைத் தன் அடிமனத்தில் கொண்ட ஓர் அரசால்தான் செயல்படுத்த முடியும்.
அதேபோல குடியிருக்கக் கான்கிரீட் வீடு  21 லட்சம் மக்களுக்கு என்பது - எண்ணிப் பார்க்கவே மலைப்பாக இருக்கக் கூடியதாகும்.

வேலை வாய்ப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை - இது சில வெளிநாடுகளில் உண்டே தவிர, இந்தியாவுக்குள் கிடையாது.

சமூக மறுமலர்ச்சித் திசையில், பெரியார் நினைவு சமத்துவபுரம், தமிழ் செம்மொழி, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்பு என்பன காலத்தைக் கடந்து கம்பீரமாக நிற்கக் கூடியவையாகும்.

இவ்வளவு நடந்தும் ஒரு சிறு கும்பல் இந்த ஆட்சியின் மீது மண்ணை வாரி இறைக்கிறது. இந்தக் கும்பலிடம் ஊடகம் என்பது வசதியாக, வளமாகச் சிக்கிக்கொண்டு இருக்கிறது. அந்தக் கும்பல் எண்ணிக்கையில் சிறுபான்மையான பார்ப் பனர்களாக இருந்தாலும்கூட, ஆதிக்கக் சக்திகளாகத்தான் நங்கூரம் பாய்ச்சி நிற்கிறது.

தூசைத் துரும்பாக்கிக் காட்டுகின்றன. பெரும்பான்மை மக்களான பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கான அரசாக இது அமைந்துள்ளதால், அதனை இந்தச் சிறு நரிக் கூட்டத்தால் சீரணித்துக் கொள்ள முடியவில்லை.

இந்தச் சிறு கும்பலுக்கும், இந்த நாட்டுக்குரிய மக் களுக்கும் நீண்ட காலமாகப் போராட்டம் நடந்துகொண்டே இருக்கிறது. இராமாயணம் என்பதேகூட இந்த அடிப்படை யில்தான் என்று நேரு - விவேகானந்தர் போன்றவர்களே எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
 
நாட்டில் நடப்பது வெறும் அரசியல் போராட்டம் அல்ல; ஆரியர் - திராவிடர் போராட்டமே - தேவாசுர யுத்தமே என்று அறுதியிட்டுக் கூறியிருக்கின்றார் தந்தை பெரியார் (விடுதலை, 22.5.1967).

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரும் இதனை ஒப்புக் கொண்டுள்ளார். தேவர்கள், அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ்நாட்டின் நிலை (18.9.1953 இல் முதல மைச்சராக இருந்த நிலையில், திருவான்மியூரில் பேசியது) என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையேதான் வேலூர், நாகை நகரங்களிலும் (முறையே 27.11.2010, 10.10.2010) நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களும் வழிமொழிந்து பேசும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

1971 ஆம் ஆண்டு தந்தை பெரியார்: இப்பொழுது நடைபெறுவது திராவிட - ஆரிய யுத்தம் என்று சொன்னார். பெரியார் என்ன? இராமாயணத்தைப்பற்றி எழுதிய பண்டித ஜவகர்லால் நேரு அவர்களே, தேவாசுர யுத்தம் என்பது தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடந்த யுத்தம் என்று  எழுதியிருந்தாலும்கூட, இது திராவிடர்களுக்கும், ஆரியர்களுக்கும் நடந்த போராட்டம்தான் என்று ஜவகர்லால் நேரு தனது மகளுக்கு எழுதிய கடிதம் என்ற புத்தகத்திலே எழுதியிருக்கிறார்.

இப்பொழுது அரசியல் ரீதியாக அந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தாங்கவேண்டிய பெரும் பொறுப்பு நம்முடைய தோள்களுக்கு வந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர்.

சிலர் குழப்புவதுபோல பிரச்சினையைத் திசை திருப்பு வதற்குக் கூறப்பட்ட ஒன்றல்ல இது. நாட்டு நடப்பும், பார்ப்பனர் களும், அவர்கள் கையில் சிக்குண்டு கிடக்கின்ற ஊடகங்கள் மேற்கொண்டிருக்கிற அடாவடித்தனமான பிரச்சாரங்களும் முதலமைச்சர் கூறுவது - கணித்திருப்பது மிகச் சரியானது தான் என்பதை வெளிப்படுத்துகின்றன.

இது ஒன்றும் இராமயண காலம் அல்ல; திராவிடர் இயக்கமும், தந்தை பெரியார் அவர்களும் எழுப்பியிருக்கிற தன்மான உணர்ச்சி தலைதூக்கி நிற்கும் காலகட்டம். 1971 பொதுத் தேர்தல் அதனை நிரூபித்தும் உள்ளது. 2011 தேர்தலும் அதற்கு மேலாகவும் திராவிடர்கள் தங்கள் ஆளுமையைக் காட்டுவார்கள் என்பது கல்லின்மேல் எழுத்தாகும்.
தமிழா, தமிழனாக இரு!
தமிழா, இன உணர்வு கொள்!!

Saturday, December 11, 2010

பெரியார் திரை - குறும்படப்போட்டி 2010

பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை & பகுத்தறிவாளர் கழகம்
இணைந்து நடத்தும் 
பெரியார் திரை - குறும்படப்போட்டி 2010

முதல் பரிசு: ரூ.10,000
இரண்டாம் பரிசு: ரூ. 5,000
மூன்றாம் பரிசு: ரூ. 3,000
மேலும் சிறப்பு, ஊக்கப் பரிசுகள் உண்டு
நுழைவுக் கட்டணம் இல்லை.
போட்டிக்கான விதிமுறைகள்: 
*     குறும்படம் தமிழில் எடுக்கப்பட்டதாக 30 மணித் துளிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 
*     ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன் (Subtitles) இருப்பின் நலம்.
* DVD அல்லது CD வடிவில் தரமானதாக இருக்க வேண்டும். குறும்படத்தின் 2 பிரதிகள் அனுப்பப்பட வேண்டும்.
* போட்டியில் கலந்து கொள்ளுவதற்கான ஒப்புதல் கடிதம் படத்தின் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.
* போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் குறும் படங்கள் அனைத்தும் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை நடத்தும் திரையிடல் நிகழ்வில் திரையிடப்படும்.
* குறும்படங்கள் 2008-2010 ஆம் ஆண்டுக்குள் எடுக்கப்பட்டனவாக இருக்க வேண்டும்.
* தேர்வு செய்யப்படாத குறும்படங்களைத் திருப்பி அனுப்புதல் இயலாது.
* ஆவணப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
* தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது. 

விண்ணப்பம் மற்றும் முழுமையான விதிமுறைகளை
ஆகியவற்றில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

கடைசித் தேதி: டிசம்பர் 20, 2010.
அனுப்ப வேண்டிய முகவரி:
அமைப்பாளர்,
பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை,
பெரியார் திடல்,
50, ஈ.வெ.கி. சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை-7

மேலும் தொடர்புகளுக்கு:
செல்பேசி: 9444210999, 9940489230

Wednesday, October 20, 2010

அண்ணா அமெரிக்கா செல்ல பழைய கோட்டு-சூட்டைக் கேட்டார்


அண்ணா நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் விளக்கம்
சென்னை, டிச.30- அண்ணா அமெரிக்காவுக்குச் செல்ல பழைய கோட்டை இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களிடம் கேட்டார் என்னும் வரலாற்று சம்பவத்தை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கிக் கூறினார்.
அறிஞர் அண்ணா 100 அரிய தருணங்கள் எனும் நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் அரங்கத் தில் 25.12.2010 அன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
பெரியாரின் தலைமகன் அண்ணா
தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் குடும்பத்தின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றிலே அவருடைய சாதனைகளிலே சிறப்பான அம்சங்களை அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் அவர்களோடு அன்றாடம் பழகிய வர்கள், நேரத்தை செலவிட்டவர்கள்? நல்ல கருத்துகளைத் திரட்டி ஒரு சுவையான நூலை ஒரு வார ஏடு நல்ல பணியை - பெருமைக்குரிய இந்தப் பணியை செய்திருக்கிறது.

அண்ணா 100 அரிய தருணங்கள
இதை அறிஞர் அண்ணா 100 அரிய தருணங்கள் என்ற தலைப்பில் நூலாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். அண்ணாவின் குடும்பம் இங்கே வந்திருக்கிறது. ரத்த சம்பந்தமுள்ள குடும்பம். நாமும் அண்ணாவின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான். பிரித்துக்காட்ட முடியாது.
அந்த வகையிலே அண்ணா அவர்களின் மகன் ராஜேந்திரன் வந்திருக்கிறார். அண்ணா அவர் களுடைய மருமகள் இங்கே வந்திருக்கின்றார்.
வடக்கத்தியர் தயாரித்த நூல்
எனவே இந்தக்கூட்டம் ஒரு சிறப்பு வாய்ந்த கூட்டம். அதுவும் ஒரு வார ஏடு. ஆக்க ரீதியான பணியை அற்புதமாக இதைச் செய்திருக்கிறது. 14 மொழிகளிலே வரக்கூடிய வார ஏடு. அது மட்டுமல்ல. அந்த வார ஏட்டின் தரம் பாராட்டக் கூடிய அளவிலே இருக்கிறது என்பதை ஒவ்வொரு வாரமும் படிக்கக் கூடியவன் என்ற முறையிலே சொல்லுகின்றேன். ஒரு காலத்திலே திராவிடர் இயக்கம் என்று சொன்னால் ஏன் இன்றைக்குக்கூட சிலருக்கு அந்த மயக்கம் இருக்கிறது. தயக்கம் சிலருக்கு இருக்கிறது. ஆனால் மயக்கமோ, தயக்கமோ இல்லாமல் வடக்கே இருந்து வந்தவர்கள் இப்படி ஓர் அற்புதமான நூலை தமிழகத்திற்குத் தந்திருக் கிறார்கள் என்று சொன்னால் பெரியார் வென்றி ருக்கிறார்.அண்ணா வென்றிருக்கிறார். கலைஞர் வென்றிருக்கிறார். திராவிடர் இயக்கம் வென்றிருக் கிறது. (பலத்த கைதட்டல்).
போரில்லாமல் வென்றிருக்கிறது. இரத்தம் சிந்தாமல் வென்றிருக்கிறது. அமைதிப் புரட்சியி னாலே வென்றியிருக்கிறது என்பதற்கு இதுதான் அடையாளம். எனவே முதலில் புத்தகத்தைப் பாராட்டுவதை விட, அவர்களுடைய துணிச்சலை யும், செயலையும் அனைத்துத் தமிழர்கள் சார்பாக பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றோம் (கைதட்டல்).
அண்ணா மாபெரும் கடல்
அவர்கள் சொன்னதைப்போல அண்ணா அவர்கள் ஒரு மாபெரும் கடல். இமயம் போன்ற வர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்திலே பார்க்கக்கூடிய அளவிற்கு அத்துணைபேருக்கும் பொது மனிதராகக் காட்சியளிக்கக்கூடிய ஆற்றல் அண்ணா அவர்களிடம் உண்டு.
அவரை எழுத்தாளராகப் பார்த்து சுவைக்கின்ற வர்கள் சிலர். அவரைப் பேச்சாளராகக் கேட்டு பன்மடங்கு அதை நினைவூட்டிக்கொள்ளக் கூடியவர்கள் பலர். அண்ணா அவர்களுடைய நாடகங்களைப் பார்த்தவர்கள் பலர். அவருடைய திரைக்காவியங்களைப் பார்த்து நினைவிலே வைத்துக்கொண்டவர்கள் பலர்.
அரசியலில் அண்ணா பதித்த முத்திரை
அவருடைய ஆற்றலைப் பார்த்து, அவருடைய ஆங்கிலப் பேச்சைக் கேட்டு அதற்கு அடிமையான வர்கள் பலருண்டு. அவர்கள் அரசியலுக்கு வந்து அவர் பதித்த முத்திரை இன்னமும் அவரு டையதாகவே இருக்கிறதே தவிர, அதை வெல்லு வதற்கு யாரும் வரவில்லை. அதைப் புரிந்து கொண்டு. அண்ணாவின் தலைசிறந்த தம்பியாக இருந்து அய்ந்தாவது முறையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றார் முதல்வர் கலைஞர்.
அண்ணாவின் இதயம்
அவர் மிகச்சிறப்பாக அண்ணா அவர்களைப் புரிந்து கொண்டார் என்பதற்கு அடையாளம்தான் அண்ணாவின் இதயத்தை இரவல் வாங்கினார். எனவேதான் இத்துணை சாதனைகளையும் மனிதநேயத்தோடு நடத்தக்கூடிய இத்தனை சாதனைகளையும் செய்திருக்கிறார். எனவே அண்ணாவின் மூளையைவிட, அண்ணா வின் சிந்தனையைவிட, அண்ணாவின் மற்ற, மற்ற ஆற்றலைவிட அவருடைய இதயம் இருக்கிறதே-அதுதான் எல்லா மக்களுக்கும் பயன்படக்கூடிய அளவிலே சிறப்பாக இருக்கிறது என்று இப்படி ஒரு தனித்தன்மையோடு அண்ணா அவர்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்திலே பார்க்கக் கூடிய ஒரு பல்கலைக் கொள்கலன் என்று பார்க்க வேண்டும். அவ்வளவு ஆற்றல் மிகுந்தவர்கள். எனவே எதைச் சொல்லுவது, எதை விடுவது என்பதி ருக்கிறது.
இதுவரையிலே வெளிவராத செய்திகள்
சிறு புத்தகத்தை அண்ணாவின் 100 அரிய தருணங்கள் என்று காட்டியிருக்கின்றார்கள். தனித்த சுவையான சம்பவங்கள் இதிலே இடம் பெற்றிருக்கின்றன.
இந்தப் புத்தகத்திலே நம்முடைய இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.அவர்கள், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராசாமி அவர்கள், அவருடைய வாழ் விணையர் கல்யாணி அம்மாள் அவர்கள் இப்படி பலரை அவர்கள் தேர்வு செய்து, தனிப்பட்ட முறையிலே கேட்டு, இதுவரையிலே வராத செய்திகளை எல்லாம் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இது தமிழிலே ஒரு நல்ல முயற்சி. பொதுவாக ஆங்கில நூல்களிலேதான் ஒரு தலைவரைப் பற்றி எழுதும்பொழுது அந்தத் தலைவருடைய சிறப்பை மற்றவர்களிடமிருந்து கேட்டு எழுவதைவிட இன்னொரு முறையைக் கையாளுவார்கள்.
உதவியாளரால் அற்புதமான செய்திகள்
யார் உதவியாளராக இருந்தார்களோ அந்த உதவியாளரே புத்தகத்தை எழுதக்கூடிய அளவுக்கு செய்வார்கள். அதில் அற்புதான பல்வேறு கிடைக்காத செய்திகள் அதன் மூலம் வெளி வருவதைக் காணலாம்.
வின்ஸ்டன் சர்ச்சில் எவ்வளவு பெரிய இரும்பு மனிதர் என்பது எல்லோருக்கும் தெரியும். சர்ச்சில் அவர் எவ்வளவு துணிச்சலோடு இருந்தார். லண்டன் நகரில் குண்டு விழுந்தபொழுது அவர் எப்படி செயல்பட்டார் என்பது இவை எல்லாம் வரலாற்றுச் செய்திகள். போரின்பொழுது சர்ச்சிலின் நிலை
ஆனால் சர்ச்சில் அந்த நேரத்தில் வீட்டிற்குள் இருந்தார். எப்படி நடந்துக்கொண்டார்? மனிதராக எப்படி அந்தப் பிரச்சினைகளை அணுகினார் என்பதைப்பற்றி எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமானால் பெரிய தலைவர்களிடமிருந்து இதுபோன்ற செய்தி களைத் தெரிந்துகொள்ள முடியாது.
அவர்களுக்கு உதவியாளர்கள் இருக் கிறார்கள் அல்லவா? அவரை வைத்தே ஒரு புத்தகம் எழுதி வாங்கியிருக்கிறார்கள்.
நீண்ட காலத்துக்கு முன்னாலே அந்தப் புத்தகம் வெளிவந்தது. சர்ச்சில் என்னென்ன செய்வார்? எப்படி எல்லாம் செயல்படுவார்? வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு இப்படிப்பட்ட ஆற்றல் எப்படி எல்லாம் வந்தது என்று தெரிந்து கொள்ளக் கூடிய சுவையான அம்சங்கள் இருக்கும்.
அதேபோல இந்த நூலிலே அறிஞர் அண்ணா 100 அரிய தருணங்கள் என்ற இந்த நூலிலே பல அரிய தகவல்கள் அடங்கியிருக் கின்றன. நூலின் விலை 75 ரூபாய். நல்ல வாய்ப்பாக இன்றைக்கு மட்டும் 50 ரூபாய்க்குத் தருகிறார்கள். நீங்கள் அனைவரும் அந்த நூலை வாங்கிப் படிக்க வேண்டும். விலை கொடுத்து வாங்கிப் படிக்க வேண்டும். அப்படி வாங்கிப் படித்தால் ஒரு பதிப்பு அல்ல. பல பதிப்பு வந்தது என்பதை இந்த பதிப்பாளர்களுக்குக் காட்ட வேண்டும்.
இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்
இந்தப் புத்தகத்திலிருந்து ஒன்றிரண்டு செய்தியை சொல்லிவிட்டு, மற்ற செய்திகளை சொல்லுகிறேன். குறிப்பாக இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்கள் இந்த இயக்கத்திலே கொள்கை ரீதியாக வளர்ந்தவர். இன்றைக்கும் அவர் ஒரு பகுத்தறிவுவாதியாக இருக்கக்கூடியவர். அரசியலிலே அவருடைய நிலைப்பாடுகள், வண்ணங்கள் மாறியிருக்க லாம். ஆனால் அடிப்படையிலே அவருடைய எண்ணங்கள் என்றைக்கும் மாறியதாக நாம் கொள்ள முடியாது.
இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்கள் அண்ணா அவர்களுடன் தனக் கேற்பட்ட ஒரு சம்பவத்தை சொல்லியிருக் கிறார். அதை இந்த நூலிலே எடுத்துப் போட்டி ருக்கின்றார்கள்.
இதை வைத்து எனக்கு வேறு செய்தி நினைவுக்கு வந்தது. அந்த செய்தியையும் இதோடு இணைத்துச் சொல்ல வேண்டுமென்று விரும்புகின்றேன்.
அண்ணா அவர்கள் எளிமையானவர்
அண்ணா அவர்களுடைய எளிமையை இங்கே சொன்னார்கள். எளிமையாகப் பொது வாழ்க்கையில் இருந்தால் பிரச்சினையே இல்லை என்று வேலூர் வி.அய்.டி. பல்கலைக் கழக வேந்தர் விஸ்வநாதன் அவர்கள் அழகாகச் சொன்னார். ரொம்பவும் அடிப்படையான தேவையான அறிவுரை. இன்றைக்கு பல சிக்கல்களுக்கே காரணம் அந்த எளிமையை விட்டுவிட்டு ஆடம்பரமாக எல்லாம் இருக்க வேண்டும் என்று நினைப்பதன் கோளாறுகள் ஏராளம். அந்த வகையிலே அண்ணா அவர்கள் அவ்வளவு எளிமையானவர்.
அண்ணா முதலமைச்சரான நிலையில்...
அவ்வளவு சிக்கனம். காரணம் அண்ணா அவர்கள் பயின்ற குருகுலம். தந்தை பெரியாரிடத்திலே அவர்கள் பயின்ற காரணத்தினாலே பெரியார் அவர்களிடத்திலே இருந்த எளிமை. அந்த சிக்கனம் அண்ணா அவர்களுக்கு இயல்பாகவே ஆகிவிட்டது.
அண்ணா முதலமைச்சராகி பெரிய நிலைக்கு வந்துவிட்டார்.இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் சொல்லுகிறார்: அண்ணா அவர்கள் முதன்முதலாக அமெரிக்காவுக்குப் போகிறார்.
பழைய கோட்டு கொண்டு வா!
அந்த சமயத்தில் என்னை கூப்பிட்டனுப்பினார். நீ சினிமாவில் கோட்டெல்லாம் போட்டு நடிச்சிருப்ப. அதிலே ஒன்றை எடுத்துக்கொண்டு வா. என் சைசுக்கு ஆல்ட்டர் செய்து தைத்துக்கொள்ளலாம் (சிரிப்பு-கைதட்டல்). அண்ணா நினைத்தால் ஆயிரம் பேர் அவருக்கு சூட்டு கோட்டு தைத்துக்கொடுப்பதற்கு தையல்காரர்களே தயாராக இருப்பார்கள். மற்றவர்கள் தரவேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் அண்ணா அவர்களுக்கு இருந்த சிந்தனை பாருங்கள். இதிலே இருக்கிற தத்துவம் மிக முக்கியம். இந்த சம்பவத்தை விட இந்தத் தத்துவம் மிக முக்கியம்.
பழசெல்லாம் எதற்கு?
பழசெல்லாம் எதற்கு, புதுசாவே தைத்துவிடலாம் என்று சொன்னேன். வேண்டாம்பா. அமெரிக்கா போய்விட்டு வந்தவுடன் அப்புறம் எதுக்கு கோட்டு என்று சொன்னார். நான் விடவில்லை. புதிதாகவே தைத்துக் கொடுத்துவிட்டேன் என்று எஸ்.எஸ்.ஆர். (சொல்லுகிறார்.
எதையும் பயன்கருதி செய்பவன்தான் பகுத்தறிவுவாதி அண்ணா ஒரு தலைசிறந்த பகுத்தறிவுவாதி. பகுத்தறிவு எல்லா துறைகளிலும் வாழ்க்கைக்கு முறையாகப் பயன்பட வேண்டும்.
அண்ணா பார்த்தார், ஒருநாள்தானே அதற்குப் பிறகு கோட்டு எனக்குப் பயன்படாதே என்று நினைத்தார்.
அண்ணாவுக்கு இந்த சிந்தனை எப்படி வந்தது?
இந்த சிந்தனை எல்லாம் அண்ணா அவர்களுக்கு எப்படி வந்தது என்று சொன்னால் இன்னொரு சுவையான சம்பவம்.
அண்ணா அவர்கள் தந்தை பெரியார் அவர்களுடன் வடநாட்டிற்குப் போகிறார். அண்ணா அவர்களுடன் பழகியவர்களைக் கேட்டால் ரொம்பத் தெளிவாகத் தெரியும்.
அண்ணா அவர்களுடைய பொழுது போக்கே கூட, பயணங்கள் செய்யும்பொழுது, காரிலே பயணங்கள் செல்லும்பொழுது அல்லது மற்ற இடங்களிலே இருக்கும்பொழுதெல்லாம் அண்ணா அவர்கள் எப்படி நேரத்தை செலவழிப்பார் என்றால், தனியே இயக்கம் ஆரம்பித்த பிற்பாடுகூட அய்யா அவர்களோடு இருந்த காலத்தில் என்னென்ன சம்பவங்கள் நடந்தது என்பதை இளைய தலைமுறையினருக்கு, நண்பர்களுக்கு வரிசை யாகச் சொல்லுவார்கள்.
பழைய சம்பவங்களைச் சொல்லுவார்கள்
பேராசிரியராக இருக்கலாம், கலைஞராக இருக்க லாம், ராஜாராமாக இருக்கலாம் அல்லது மற்ற நண்பர்களாகக்கூட இருக்கலாம். இவர்களைப் போன்ற வர்களுடன் சென்றால் பழைய நடந்த சம்பவங்களை எடுத்துச்சொல்லுவார்கள்.
பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில் கூட அண்ணா அவர்கள் எப்பொழுதும் சொல்லத் தயங்கியதில்லை. அப்பொழுது ஒரு சம்பவத்தை சொன்னார். - (தொடரும்)

Friday, October 15, 2010

இவள்தான் சரசுவதி


இவள்தான் சரசுவதி
பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டு அவனால் மணக்கப்பட்டவள்.
ஒரு காலத்து - அகத்தியரிடம் பிறந்தவள்.
பிரம்மன் தன்னை நீக்கி யாகம் செய்ததால் நதியுருவாய் யாகத்தை அழிக்க வந்தவள்.
இவள், தன்னைச் சிருஷ்டித்துத் தன்னுடன் கூடப் பிரம்மன் வருகையில், பிரம்மனுக்கு அஞ்சி பெண் மான் உருக்கொண்டு ஓடினாள். பிரம்மன் ஆண் மான் உருக்கொண்டு தொடர, சிவமூர்த்தியால் தடையடையக் கண்டு சிவமூர்த்தியை வேண்டி, பிரம்மனைக் கணவனாகப் பெற்றவள்.
பிரம்மன் காயத்ரி, சாவித்திரி, சரசுவதி ஆகிய மூவருடன் கூடிக் கங்கா ஸ்நானத்திற்குப் போக சரசுவதி ஆகாய வழியில் பாடிக் கொண்டிருந்த வித்யாதர ஸ்திரீயின் இசையில் மனம் வைத்தனள். சரசுவதி ஒழிந்த இருவரும் தம் நாயகருடன் கங்கை அடைந்து ஸ்நானம் செய்தனர். சரசுவதி சற்று தாமதித்துப் பிரம்மதேவனிடம் சென்று, தான் வருமுன் ஸ்நானம் செய்ததுபற்றிக் கோபித்தனள். பிரம்மன் குற்றம் உன்மீது இருக்க என்மீது பயனிலாது கோபித்தலால்...
இவள் பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டு, அவனால் மோகிப்பது கண்டு, அந்த மோக வார்த்தையுரைத்த முகத்தை நோக்கி நீ இவ்வாறு தூஷித்துக்கொண்டு இருந்ததால், ஒரு காலத்தில் சிவபெருமானையும் அவ்வாறு தூஷித்து அவரால் சிரம் அறுக்கக் கடவாய் எனச் சபித்தனள் (சிவமகா புராணம்).
(ஆதாரம்: சிங்காரவேலு முதலியார் தொகுத்துள்ள அபிதான சிந்தாமணி எனும் பெருநூலில் - பக்கம்-598).
பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டவள் சரசுவதி என்றால், அவள் பிரம்மனுக்கு மகள் அல்லவா ஆகிறாள்? மகள் சரசுவதியை அப்பன் பிரம்மன் மணப்பது எவ்வகையில் நியாயம்?
பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டவள் சரசுவதி என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு, மறுபக்கம் ஒரு காலத்து அகத்தியரிடம் பிறந்தாள் என்றும், பிரம்மனின் யாகக் கலசத்துள் பிறந்தாள் என்றும் முரண்படக் கூறப்படும் கதைக் கருத்தின் நியாயம் என்ன?
பிரம்மனால் பெண்டாளப்படுவதை விரும்பாது, அவனை வெறுத்து ஒதுக்கி, அவனின் காம வேட்கையிலிருந்து தப்பிக்கப் பெண் மான் உருக்கொண்டு ஓடிய சரசுவதி, பின்னர் சிவமூர்த்தியை வலிய வேண்டிப் பிரம்மனைக் கணவனாகப் பெறுவானேன்?
பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டவள் ஒரு சரசுவதி - பிரம்மனின் யாகக் கலசத்துள் அவதரித்தவள் ஒரு சரசுவதி - அகத்தியருக்குப் பிறந்தவள் ஒரு சரசுவதி.
ஆக, சரசுவதி என்பது மூவரா - அல்லது ஒருவரா? சரசுவதி மூவர் எனில் - இதில் கல்விக் கடவுள் சரசுவதி யார்? கலவிக் கடவுள் சரசுவதி யார்?
ஒருத்திதான் சரசுவதி எனில், அவளுக்கு மூன்று வரலாற்றுப் பிறப்புக் கதைகள் ஏன்?
படைப்புக் கடவுள் பிரம்மனுக்கு காயத்ரி, சாவித்திரி, சரசுவதி என மூன்று மனைவியர் இருப்பது ஏற்புடைத்ததா? ஒருபுறம் சிவமூர்த்தியை வேண்டிப் பிரம்மனைக் கணவனாக அடையப் பெற்றவள் சரசுவதி எனக் கூறிக்கொண்டே - மறுபுறம் தன்னைக் காம இச்சையால் மோகிக்க வந்த பிரம்மனை சிவமூர்த்தியால் சிரம் அறுக்கக் கடவாய் என்று சரசுவதி சபித்ததாக சிவமகா புராணம் கூறுவானேன்?
எந்த ஒன்றிலும் கணவனும், மனைவியும் கலந்து பேசி - கூடி விவாதித்துக் காரியமாற்றுவதே குடும்ப உயர்வுக்கும், பெருமைக்கும் உகந்தது என்கிற இந்த எளிய உண்மை மனித இயல்பாக இருக்க - பிரம்மன் கடவுள் தன் மனைவி சரசுவதியைக் கலக்காமல் யாகம் செய்தார் என்பதும், அதற்காகக் கோபித்துக்கொண்ட சரசுவதிக் கடவுள் அந்த யாகத்தை அழித்தனள் என்பதும் கடவுள் இலக்கணத்திற்கும் - குடும்ப இலக்கணத்திற்கும் பொருத்தமுடையவைதானா?
கல்வி என்பது அறிவையும், அன்பையும், பண்பையும், பாசத்தையும், நியாயத்தையும், நேர்மையையும், உண்மையையும், ஒழுக்கத்தையும் போதிக்கின்ற ஒன்று. இந்தக் கல்விக்குக் காமாந்திரக் கிறுக்கியும், செக்ஸ் தலைவியும், மோகக் கள்ளியும், போக மினுக்கியும் ஆன குச்சு சரசுவதி எப்படிக் கடவுள் ஆக முடியும்? அவள்தான் ஆனாலும், மானமும் அறிவுமுள்ள மனித சமுதாயம் எப்படி அவளைக் கடவுளாக ஏற்றுக்கொள்ள முடியும்?
அறிவு, நாணயம், ஒழுக்கம், நேர்மை, பண்பு ஆகிய இவற்றிற்கும் சரசுவதி பற்றிய ஈனக் கதை கருத்துக்கும் எள்முனை அளவேனும் தொடர்புளதா?
அபிதான சிந்தாமணியின் தொகுப்பாசிரியர் திருவாளர் ஆ. சிங்காரவேலு (முதலியார்) பெரியார் தொண்டர் அல்லவே - திராவிடர் இயக்கத்தைச் சார்ந்தவர் அல்லவே - நாத்திகக் கொள்கையினர் அல்லவே! இவர் நூலைத் தொகுக்க - எழுதத் தொடங்கும் முன்னும், முடிக்கும்போதும் பகவானை அதாவது சிவபெருமானைத் துணைக்கு அழைத்தல்லவா காரியமாற்றி இருக்கிறார்?
இவரால், நம்மால் கல்விக் கடவுள் என்று நம்பப்படுகிற - போற்றப்படுகிற - சொல்லப்படுகிற சரசுவதிபற்றி மேற்கூறப்பட்ட கருத்துகளைத்தாதனே சொல்ல முடிகிறது?
இவரும் தானாக இட்டுக்கட்டி - கற்பனையில் சொல்லவில்லையே!
நம் முன்னோர்களால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற புராண வழிக் கருத்துகளையும் - சமய மத வழிக் கருத்துகளையும் அறிந்தும், ஆய்ந்தும், சுவைத்தும், தோய்ந்தும், உணர்ந்தும்தானே தொகுத்துரைக்கிறார்.
ஏ! பக்தத் தமிழா! இனியேனும் இவைகளைப் படித்து அறிந்தேனும் திருந்துவாயா? உலக நடப்புகளோடு பொருந்துவாயா? உன் அறியாமையையும், தவற்றையும் எண்ணி வருந்துவாயா?
- குடந்தய் வய்.மு. கும்பலிங்கன்

Thursday, October 14, 2010

ஆயுத பூஜை - வரலாறு தரும் பாடம்!


தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னன் செங்கமலதாசன் என்பவனை வீழ்த்த வேதியர் வெங்கண்ணா என்பவன் பிஜப்பூர் சுல்தானின் படைத்தலைவன் வெங்காஜி என்பவனை வேண்டி னான்.
வெங்காஜியும் வெங்கண்ணாவின் தூண்டு தலின் பேரில் தஞ்சை மீது படையெடுத்து வந்தான். அவன் படையெடுத்து வந்த சமயமானது ஆயுத பூஜை சமயமாகும். படை வீரர்களின் படைக் கலங்கள் எல்லாம் ஆயுத பூஜைக்காக கொலுவில் வைக்கப்பட்டிருந்தன.
மன்னன் செங்கமலதாசனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மனக்கலக்கம் அடைந்தவனாய் பார்ப்பன அமைச்சர்களையும், பார்ப்பன குருமார்களையும் அழைத்து ஆலோசனை கேட்டான். அதற்கு அந்தப் பார்ப்பனர்கள், மன்னர் மன்னா! கவலைப்படாதீர்கள்! ஆயுத பூஜையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை எடுத் தால் சாஸ்திர விரோதம். நம் நாட்டின்மீது படையெடுத்து வருபவன் முகமதியன் அல்லன். படையெடுத்து வருபவன் அவனது தளபதியான வெங்காஜியாவான். அவனோ ஓர் இந்து. மேலும் பரம வைணவன். ஆகவே, திருமாலுக்கு மிகவும் உகந்த திருத்துழாய்களை (துளசிச் செடிகளை) நமது நகரின் எல்லையில் தூவிவிட்டால், அவன் அதனைத் தாண்டி படைகளைச் செலுத்திக் கொண்டு வரமாட்டான் என்று சொன்னார்கள்.
மன்னனும், அவர்களின் கூற்றினை ஏற்று, துளசிச் செடிகளை நகரின் எல்லையில் ஏராளமாகக் குவிக்கச் செய்துவிட்டு, தானும் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு ஹரி பசனைச் செய்துகொண்டு இருந்தான். வெங்காஜியின் படைகளின் குதிரை களோ, குவிந்திருந்த துளசிச் செடிகளைப் புல்லென எண்ணி, அதிவிரைவாகவும், அனாயசமாகவும் வாயில் கல்விக் கொண்டு நகருக்குள் புகுந்தன.
இதனைக் கேள்வியுற்ற மன்னன் செங்கமல தாசன், வெங்காஜி சத்தியம் கெட்டவன், திருமாலின் திருத்துழாயினை மதிக்கவில்லை. ஆகவே, அவனுடன் போர் செய்தல் கூடாது என்று கூறி, யாரும் அறியாமல் எங்கோ ஓடி ஒளிந்து விட்டான்.
வெங்காஜியின் படைகள் செங்குருதி சிந்தா மலும், வாளை எடுக்காமலும், வேலைத் தூக்கா மலும் எளிதில் தஞ்சையினைக் கைப்பற்றின.
ஆயுத பூஜை கொண்டாடும் பக்தர்களும், வணிகர்களும், பொது மக்களும் இதற்குப் பிறகும் ஆயுத பூஜை கொண்டாடுவார்களேயானால், வரலாற்றின் பாடத்தைக் கற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்றுதான் பொருள்.
இந்து மதக் கடவுள்களின் கைகளில் கூட ஆயுதங்கள் இருக்கத்தான் செய்தன. அவை யெல்லாம் கொலைக்குப் பயன்படும் கருவிகள்தாம். இருந்தும் என்ன பயன்? கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகளையே தூக்கிக் கொண்டு போய் வெளிநாட்டில் விற்று விடுகிறார்கள்.
உருவமற்ற கடவுள்கள் என்று ஒரு பக்கத்தில் கூறிக்கொண்டு, கற்பனைக்குத் தகுந்த உருவங் களைப் படைத்து அவற்றின் கைகளில் ஆயுதங் களைக் கொடுப்பதெல்லாம் சிறுபிள்ளை விளை யாட்டு அல்லவா! ஆன்மிகப் பொய்கையில் குளித்து எழுந்த வடலூர் இராமலிங்க அடிகளார் இந்தப் பொய்யுரைக்கும், கற்பனைகளைச் சாடவில்லையா?
கடவுளை நம்புபவர்கள்கூட சிந்திக்க வேண் டியவை பல உள்ளன. கருணைக்கடல் கடவுள் என்று கூறிக்கொண்டு சூலாயுதம், வேலாயுதங் களைக் கடவுள் கைகளில் கொடுத்திருக்கி றார்களே என்று சிந்திக்கவேண்டாமா?
தொழில் அபிவிருத்திக்காக ஆயுதங்களுக்கு நன்றி என்பதுகூட அறிவுக்குப் பொருத்தமாகாது. காலுக்கு செருப்பு அவசியம்தான் - அதற்காக அதற்குப் பூஜை போட முடியுமா?
எத்தனை ஆயிரம் ஆண்டுகாலமாக ஆயுதங்களுக்குப் பூஜை போடுகிறோம்? பூஜை போடும் நாட்டைச் சேர்ந்தவர்கள் உருப்படியாகக் கண்டு பிடித்த கருவிகள், ஆயுதங்கள் என்ன? விரலை மடக்க முடியுமா?
புதுப்புது உருவத்தில் கடவுள்களை உருவாக்கி யதைத் தவிர நாம் சாதித்ததுதான் என்ன?
பக்தர்கள் சிந்திப்பார்களாக!


குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...