"இந்தியாவில் இந்து தேசத்தை
ஏற்படுத்துவோம், ராமராஜ்ஜியத்தை உண்டாக்குவோம்" என்று சொல்பவர்கள்
ஆட்சிக்கு வந்தால், நாடு எப்படி இருக்கும் என்பதை இப்பொழுதே நாடு
நிதர்சனமாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்தியா ஒரே நாடு- இங்கு மாநிலங்கள் என்ற பேச்சுக்கு இடமில்லை.
இந்தியாவின் ஆட்சி மொழி சமஸ்கிருதம் -
அதன் முன்னோட்டமாக இந்தி- எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மொழிகள்
அனைத்தும் ஆட்சி மொழி என்பது எல்லாம் வெற்றுப் பேச்சு.
இந்தியா முழுவதும் ஒரே பாடத் திட்டம் தான்
- அது வேதக் கல்வியாக - குலக்கல்வியாகத் தானிருக்கும் - காரணம் 'இந்து'
என்பதன் உள்ளடக்கம் அதுதான்.
உணவில்கூட மதவாதம் இருக்கும் - மரக்கறிதான் சரியான உணவு. மாட்டு மாமிசம் என்பது எல்லாம் ஏற்கப்பட முடியாத ஒன்று.
மரக்கறியில் கூட வெங்காயம், பூண்டுக்கு
எல்லாம் இடம் கிடையாது - மண்ணுக்குள் புதைந்து இருக்கும் கிழங்கு வகைகள்
கூடாது - இவை எல்லாம் ஒன்று ஒன்றாக அணி வகுக்கும்.
மதம் என்று எடுத்துக் கொண்டால் இங்கு
இந்து மதம் மட்டும்தான், மற்ற மதக்காரர்கள் யாராக இருந்தாலும் இராமனையோ,
கிருஷ்ணனையோ தான் ஏற்றுக் கொண்டு வழிபட வேண்டும். சமஸ்கிருதம் தான்
வழிபாட்டு மொழி யாக இருக்கும். பார்ப்பனர்கள் மட்டும்தான் அர்ச்சகர்களாக
இருப்பார்கள்.
இந்து மதத்தின் ஆணி வேர் ஜாதி - ஜாதியை
ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்; ஜாதியின் குலத்தொழில் தொடர வேண்டும்;
கல்விக்கூடங்களிலும் இந்த வகைக் கல்விதான் கற்பிக்கப்படும். குருகுலக்கல்வி
என்பது இந்த அடிப்படையில்தான்.
எந்த அனாமதேயத்திடமிருந்தும் ஒரு
சான்றிதழைப் பெற்றுக் கொண்டு "நான் சமஸ்கிருதம் படித்திருக்கிறேன்" என்று
சொன்னால் போதும், நேராகப் பத்தாம் வகுப்பிலேயே சேர்ந்து கொள்ளலாம்.
இடஒதுக்கீடு என்ற பேச்சுக்கே இடமில்லை;
எல்லாம் மனப்பாட மார்க் என்ற 'தகுதி' 'திறமை'யின் அடிப்படையில் தான்
தேர்வு. தேவைப்பட்டால் இடஒதுக்கீடு என்பது வெறும் பொருளாதார
அடிப்படையில்தான் என்று சட்டம் வகுக்கப்படும்.
பெண் கல்வி என்பது தேவையில்லாத ஒன்று.
ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் படித்து, கை நிறைய சம்பளம் பெறுவதால்
ஆண்களுக்கு அடங்கி நடக்க மாட்டார்கள். எனவே பெண்களுக்குக் கல்வி என்பது
மட்டுப்படுத்தப்படும் - கட்டுப்படுத்தவும்படும்.
மாநில உரிமை, மொழி உரிமை, கலாச்சாரம்
என்று எல்லாம் பேசக் கூடாது; அப்படிப் பேச ஆரம்பித்தால் நாம் இந்து எனும்
மனப்பான்மை தடைப்படுத்தப்படும் - உளவியல் ரீதியாக இந்து என்ற கட்டுக்குள்
வர மாட்டார்கள்.
தேசிய கீதம்கூட மாற்றப்படும், ஏன் எனில் அதில் பல மாநிலங்களின் பெயர்கள் இடம் பெறுகின்றன.
தேசியக் கொடியிலிருந்து அசோக சக்கரமும் அகற்றப் படும். ஏன் எனில் இந்துத்துவா தத்துவத்துக்கு நேர் எதிரானது புத்தமாகும்.
பிஜேபி சங்பரிவார் விரும்பும் இந்த இந்து
ராஜ்ஜியத்தை ஏற்காவிட்டால் இந்துக்கள் ஒரு பக்கம், சிறுபான்மை மதங்களைச்
சேர்ந்தவர்கள் இன்னொரு பக்கம் என்று உத்தி பிரித்து நாட்டை மதவாதத்தின்
அடிப்படையில் பிளவுபடுத்தி - இந்து வாக்கு வங்கி என்ற ஒன்றை உருவாக்கி -
அதன் அடிப்படையில் அதிகாரப் பீடத்தில் அமர்ந்து - மதக் கண்ணோட்டத்தில்
சட்டங்களைச் செய்து - நாட்டில் அமளியை உண்டாக்கி - பிற மதக்காரர்கள்
பெட்டிப் பாம்பாக ஒடுங்கச் செய்யப்படும்.
சங்பரிவார்களின் ஆணைக்குக் கட்டுப்படாத
நிருவாக மும், குறிப்பாகக் காவல்துறையும், செயல் படும் தன்னாட்சி அதிகாரம்
கொண்ட அமைப்புகள் அத்தனையும் காயடிக்கப் படும். அதற்கான ஆரம்பங்கள்,
ஆயத்தங்கள் தொடங் கப்பட்டு விட்டன.
இப்பொழுது இந்தியா முழுவதும் அமளிகள் உண்டாக்கப்படுவது என்பது எல்லாம் எதேச் சையாக நடப்பதல்ல - திட்டமிட்ட காவிகளின் செயல்பாடுகளே!
No comments:
Post a Comment