என்பிஆர், என்ஆர்சி, சிஏஏ -
காந்தியார் பேரன் துஷார் காந்தி ஆவேசம்
மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக, இந்திய மக்கள் இரண்டாவது சுதந்திரப்
போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதாக, காந்தியாரின் பேரன் துஷார் காந்தி
கூறியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு,
மக்கள் தொகை பதிவேடு ஆகியவை காந்தியின் மார்பில் புகுந்த 3 தோட்டாக்கள்
என்றும் துஷார் காந்தி குறிப்பிட்டுள்ளார். பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், துஷார் காந்தி மேலும் பேசியிருப்பதாவது:
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு
எதிராக, நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஏனெனில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள்
தொகை பதிவேடு ஆகியவை இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலை
ஏற்படுத்தக் கூடியவை. குடியுரிமைத் திருத்தச் சட்டம், ஒருதலைப்பட்சமாக
இயற்றப்பட்ட முதல் சட்டம் ஆகும். இது நமது அரசமைப்பின் ஆன்மாவிற்கு
எதிரானது.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய
குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேட்டை எதிர்ப்பவர்கள் அனைவரும்
முஸ்லிம் அல்லது முஸ்லிம் சார்புடையவர்களாகக் கருதப்படுகின்றனர். அதன்
பெயரில் வெறுப்பு பரப்பப்படுகிறது. இந்த இரண்டு சட்டங்களும்
பணக்காரர்களுக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. அதேநேரத்தில்
தொலைதூரப் பகுதிகளிலும் கிராமங்களிலும் வாழும் ஏழை மக்கள் இதனால்
பாதிக்கப்படுவார்கள். இந்த மக்கள் அரசாங்க அதிகாரிகளின் முன் தங்களை
நிரூபிக்க வேண்டும். எனவேதான், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய
குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக இரண்டாவது
சுதந்திரப் போராட்டத்தை மக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு துஷார் காந்தி பேசியுள்ளார்.
No comments:
Post a Comment