Friday, December 6, 2019

ஜாதி ஒழிப்பிற்கு இந்துமதம் ஒழிய வேண்டும்

இப்பொழுது அதிசயமாக உலகம் பூரா வும் நினைக்கும்படியான சம்பவம் ஒன்று நடந்தது. அதுதான் அம்பேத்கர் புத்தமதத்தில் சேர்ந்தது. இப்போது பேருக்குத்தான் அவர் புத்தமதத்தில் சேர்ந்ததாகச்  சொல்கிறாரே தவிர அம்பேத்கர் வெகுநாட்களாகவே புத்தர் தான்.
டாக்டர் அம்பேத்கர் 20, 30 ஆண்டு களுக்கு முன்னால் இருந்தே இந்து மதத்தை ஒத்துக்கொள்வதில்லை. அவர் காந்தியைப் பற்றிச் சொல்லும் போது காந்தி ஒரு பச்சை இந்து. மனுதர்ம முறை, வர்ணாசிரம முறையைப் பாதுகாக்க நினைப்பவர். அவர் ஆதித்திராவிட மக்களுக்கு என்ன செய்ய முடியும்? என்று கடுமையாகத் தாக்கி வரு ணாசிரம ஆதார சுலோகங்களை யெல்லாம் கூட எடுத்துப்போட்டு, காந்திபச்சை இந்து வாக இருப்பதால்தான் அவர் புத்தி இப்படிப் போகிறது என்று எழுதினார்.
1930-35 லேயே ஜாதி ஒழிப்பில் தீவிர கருத்துள்ளவராக இருந்தார்; ஜாதி ஒழிப் புக்காக பஞ்சாபில் (ஜாட்மட்தோடகமண்டல் என்று கருதுகிறேன்.) ஒரு சபை ஏற்படுத்தி யிருந்தார்கள். என்னைக்கூட, அதில் ஒரு அங்கத்தினராகச் சேர்த்திருந்தார்கள். அந்தச் சபையினர் ஜாதி ஒழிப்பு மாநாடு என்பதாக ஒரு மாநாடு கூட்ட ஏற்பாடு செய்து அந்த மாநாட்டுக்கு அம்பேத்கர் அவர்களைத் தலைமை வகிக்கக் கேட்டுக்கொண்டார்கள், அவரும் ஒத்துக் கொண்டு தலைமை உரையாக (address)  100 பக்கம் ஆங்கிலத்தில் எழுதினார். அதில் பல ஆதாரங்களை எடுத்துப்போட்டு ஜாதி ஒழிய இந்து மதமே ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். இதைத் தெரிந்து அவரிடம் உங்கள் மாநாட்டுத் தலைமை உரையை முன்னாடியே அனுப்புங்கள் என்று கேட்டு வாங்கிப் பார்த்தார்கள். அதில் ஆதாரத்தோடு இந்து மதம் ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். அதைப் பார்த்துவிட்டு உங்கள் தலைமையுரை எங்கள் சங்க மாநாட்டில் படிப்பதற்கு ஏற்றதாக இல்லை. ஜாதி  ஒழிப்புச் சங்கமே தவிர, இந்து மத ஒழிப்புச் சங்கமல்ல, ஆகையால் நீங்கள்  இந்து மதம்  ஒழிய வேண்டும் என்கிற அந்த  ஒரு அத்தியா யத்தை(Chapter) நீக்கிவிட வேண்டும் என்று அம்பேத்கரிடம் கேட்டார்கள். அதற்கு அம்பேத்கர் ஜாதி ஒழிப் பிற்கு இந்து மதம் ஒழியவேண்டும்  என்கிறதுதான் அஸ்திவாரம். அதைப் பேசாமல் வேறு எதைப் பேசுவது? ஆகையால் அதை நீக்கமுடியாது என்று சொல்லி விட்டார். பின் மாளவியா ஏதேதோ சமாதான மெல்லாம் சொன்னார்.  அதற்கும் அவர் நான் தலைமை உரையைப் பேசுகிறபடி பேசுகிறேன்; நீங்கள் வேண்டு மானால் அதைக் கண்டித்து மாநாட்டில் பேசுங்கள்: தீர்மானம் வேண்டுமானாலும் போடுங்கள், நான் முடிவுரையில் அதுபற்றி பேசுகிறேன் என்று சொல்லிவிட்டார் பிறகு மாநாடே நடக்காமல் போய்விட்டது. நான் அம்பேத் கரிடம் அந்தப் பேச்சை வாங்கி ஜாதியை ஒழிக்கும் வழி என்று (1936 ஆம் ஆண்டு) தமிழில் புத்தகமாகப் போட்டு வெளியிட்டேன். அவர் அப்போதே அவ் வளவு தீவிரமாக இருந்தார்.
நாம் இராமாயணத்தைப் பற்றி வாயால் பேசிக்கொண்டிருக்கும் போதே அதாவது 1932லேயே அவர் இராமாயணத்தைக் கொளுத்தினார். அந்த மாநாட்டுக்கு என். சிவராஜ்தான் தலைவர். இதெல்லாம் குடிஅரசில் இருக்கிறது.
அவர் ஒரு தடவை சென்னைக்கு வந் திருந்தபோது கீதையைப் பற்றி பேசும்போது கீதை ஒரு பைத்தியக்காரனின் உளறல் என்றே பேசினார். அப்போது சி. பி. ராமசாமி அய்யர் போன்றவர்கள் இதென்ன அக்கிரமம்; வெறும் அம்பேத்கர் பேசியிருந்தால் கூடக் கவலையில்லை; ஒரு கவுன்சில் மெம்பராக இருக்கிற அம்பேத்கர் அதுவும் சென்னையில் வந்து கீதை பைத்தியக்காரனின் உளறல் என்று பேசுவதென்றால்  அக்கிரமம்  என்றெல்லாம் கூச்சல் போட்டார்கள்.
நான் 1930 இல் ஈரோட்டில் நடந்த சீர்திருத்த மாநாட்டிற்கு அம்பேத்கரை அழைத்தேன். அந்த மாநாட்டுக்கு ஆர். கே. சண்முகஞ் செட்டியார் வரவேற்புரை அளித் தார். என்ன காரணத்தாலோ அம்பேத்கர் வரவில்லை. அவருக்குப் பதிலாக எம்.ஆர். ஜெயக்கர் வந்திருந்தார். அவர் ஏதோ நம்மைப் பாராட்டிப் பேசி விட்டுப் போய் விட்டார். அம்பேத்கர் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
(28.10.1956 அன்று வேலூர் நகராட்சி மன்றத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு)

- விடுதலை, 7.12.1956

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...