ஊராட்சி மன்றத்தார்களுக்கு நான் பணிவுடன்
எனது கருத்தைத் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், ஊராட்சி மன்றம் ஜாதி
ஒழியும்படியாகவும், மக்கள் எல்லோருக்கும் படிக்கும் வசதி செய்யும்
முறையிலும் நடந்தால் அதுவே போதுமானது. இதுதான் முக்கியம். மற்ற சங்கதிகள்
அடுத்தபடி என்றுதான் கூறுவேன்.
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் படத்தை
நீங்கள் திறந்து வைக்கும்படிப் பணித்துள்ளீர்கள். இது எனக்கு மிக்கப்
பிடித்தமான சங்கதியாகும் . டாக்டர் அம்பேத்கர் மாநாட்டில் ஒரு பெரிய
மாறுதலை உண்டாக்கும் வண்ணம் மேல் ஜாதியார் கொடுமைகளை எல்லாம் எடுத்து
விளக்கியவர். காந்தியையும், காங்கிரசையும் ஜாதி ஒழிப்புக்கு இடையூறாக
இருப்பது கண்டு கண்டித்துப் பேசியவர் ஆவார்.
காந்தியார் எந்தவிதத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தலைவர் என்று சொல்லிக் கொள்ள அருகதை அற்றவர் என்று கூறியவர்.
இந்து மதக் கொடுமையைக் கண்டு அதை நம்மால்
ஒழிக்க முடியா விட்டாலும் அந்த மதத்துக்கே முழுக்குப் போட்டுவிட்டு 5
இலட்சம் மக்களுடன் புத்த மதத்தில் சேர்வது என்று முடிவு பண்ணிக் கொண்டு
சேர்ந்தவர். இன்று வரை உயிருடன் இருந்திருந்தால் அவர் இன்னும் பல இலட்சம்
மக்களைப் புத்த மார்க்கத்தில் சேரும்படிச் செய்து இருப்பார்.
அவர், தாம் புத்த மதத்துக்கு மாறும்
முன்பு என்னையும் அழைத்தார். நான் கூறினேன். இந்து மதத்தில் இருந்து கொண்டு
இந்து மதத்தைக் கண்டித்து அதன் வண்டவாளங்களை எல்லாம் வெளுத்து வாங்கினால்
எவனும் எதிர்த்துக் கேட்க முடியாது.
மதம் மாறிவிட்டு இந்து மதத்தைப் பற்றிப்
பேச ஆரம்பித்தால் உனக்கு என்ன யோக்கியதை உள்ளது என்று கேட்பார்கள். இந்து
மதத்தில் இருந்து கொண்டே கண்டித்தால் எவரும் எதிர்த்துக் கேட்க முடியாது
என்று எடுத்து உரைத்தேன்.
அது கண்டு அவர் கூறினார். நீங்கள் என்ன
காலம் எல்லாம் பேசிக்கொண்டே இருந்து விட்டுச் சாவது என்று முடிவு செய்து
கொண்டீர்களா? என்று என்னைக் கேட்டார். அதற்கு நான் என்னமோ அய்யா எனக்கு
இந்து மதத்தில் இருந்து கொண்டே இந்து மதத்தைத் தாக்குவதுதான் சரி என்று
படுகின்றது. தாங்கள் வேண்டுமானால் இப்போது சேருங்கள். நான் என்னாலான அளவு
ஆதரவு கொடுக்கின்றேன். பிறகு வேண்டுமானால் பார்க்கலாம் என்று கூறினேன்.
இது பர்மாவில் நடைபெற்ற உலக புத்த மார்க்க
மாநாட்டுக்குப் போன இடத்தில் இப்படிப் பேசிக் கொண்டோம். அவர் அங்கேயே
புத்த மார்க்கத்தில் சேர்வது என்று முடிவு செய்துகொண்டு கையெழுத்துப்
போட்டுவிட்டு வந்தார். வந்த பிறகு தாமும் சேர்ந்தது அல்லாமல்
பல்லாயிரக்கணக்கான மக்களையும் மதம் மாறச் செய்தவர். டாக்டர் அம்பேத்கர்
அவர்கள் சிறந்த கல்விமான். இந்த இந்திய உபகண்டத் திலேயே சிறந்த
ஆராய்ச்சிக்காரர். இவர் எழுதிய நூல்களுக்கு உலகெங்கிலும் செல்வாக்கு
இருந்து வருகின்றது.
எங்கள் இருவருக்கும் கொள்கையில்
பெரும்பான்மையான கருத்து ஒற்றுமையுண்டு. நான் ஜாதி ஒழிய வேண்டுமானால்
அதற்கு ஆதார மான கடவுள், மதம், சாஸ்திரம் இவைகள் ஒழிந்தாக வேண்டுமென்று
கூறுகின்றேனோ அதே கருத்தைத்தான் அவரும் கொண்டு இருந்தார். அவரின் லாகூர்
ஜாதி ஒழிப்பு மாநாட்டு தலைமை உரையினைப் பார்த்தால் தெரியும்.தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு - சட்டசபை, பார்லி மெண்டு முதலியவற்றில் 100க்கு 16 வேண்டும்
என்று கேட்டு வெற்றி பெற்றத்தோடு நின்று விடாமல் உத்தியோகம், கல்வி
போன்றவத்தில் 100க்கு 16 வேண்டும் என்று கேட்டு வழிவகை செய்தவர் ஆவார்.
இவர் யாரும் செய்யாத காரியத்தைச் செய்து வெற்றி பெற்றவர். அவர் புத்த
மதத்தில் சேர்ந்ததிலிருந்தே அவரை எப்படியாவது ஒழித்து விடுவது என்று முடிவு
செய்து விட்டார்கள். எப்படியோ சதி செய்து அவரைக் கொலை செய்து விட்டார்கள்.
அவர் சாவு இயற்கை அல்ல என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
நம்மவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அம்பேத்கர் என்று பெயர் வைத்து நன்றியைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.
(25.04.1963 அன்று மாயூரம் தாலுகா மணல்மேட்டுக்கு அடுத்த கொறுக்கையில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு)
- விடுதலை, 04.05.1963
No comments:
Post a Comment