Wednesday, April 10, 2019

பித்தலாட்டமே, உன் பெயர்தான் பி.ஜே.பி.யா?

பா.ஜ.க.வின் தோல்வி பயம் எங்கும் எதிரொலிக்கிறது!
ஏர்டெல் நிறுவனத்தின் பெயரில் திமுகவுக்கு எதிராக எஸ்.எம்.எஸ். அனுப்பிய மோசடி அம் பலத்துக்கு வந்துள்ளது.
சென்னை கேளம்பாக்கத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பணியாளரான ராஜ் பன்னீர்செல் வம் என்பவரின் அய்டியா நிறுவன செல்பேசி எண்ணுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஏப்ரல் 5 ஆம் தேதியன்று குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. 'ஏர்டெல்' நிறுவனத்தின் பெயரில்,BZ- Alerts என்ற முகவரியிலிருந்து வந்துள்ள அந்த குறுஞ்செய்தியில், "ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி வாக்கு கேட்கும் திமுகவிற்கு வாக்களிக்காதீர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்துத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ள ராஜ் பன்னீர்செல்வம், "ஓர் அரசியல் கட்சிக்கு எதிராக இத்தகைய எரிச்சலூட்டும் குறுஞ்செய்தியை ஏர்டெல் நிறுவனமே அனுப்பும் என்று என்னால் நம்ப இயலவில்லை. இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிலருக்கு திமுகவுக்கு எதிரான இந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த 'பாரதி ஏர்டெல்' நிறுவனம் தங்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும், நேர்மையற்ற கும்பல் ஒன்றின் செயலே இது என்றும் தெரிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனமும் இந்த குறுஞ்செய்தியில் தங்கள் நிறுவனப் பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிராக மயிலாப்பூர் காவல்நிலையத்தில் சனிக்கிழமை அன்று புகார் கொடுத்துள்ளது.
ஙிஞீ என்பது பி.எஸ்.என்.எல்.நிறுவனம், எஸ்.எம்.எஸ் அனுப்பும் தனியார் நிறுவனங்களுக்கு  வழங்கும் குறியீடாகும். ஏதேனும் அரசியல் கட்சி ஒன்றினால் பணிக்கமர்த்தப்பட்டுள்ளமகாராட்டிரத்தைச் சேர்ந்த தனியார் டெலி மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்று தான் இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளதாகவும், அனைத்து நிறுவன செல்பேசி பயனாளர்களுக்கும் இந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏடு, தாங்கள் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்தியப் பிரத சாகுவைத் தொடர்பு கொண்டு கருத்துக் கேட்க முயன்றதாகவும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், எனினும் தொடர்ந்து இது குறித்து விசாரணை செய்யப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சித்தரிக்கப்பட்ட படங்களையும், போலிச் செய்திகளையும், தவறான தகவல்களையும் பரப்புவதற்கென்றே தனி தகவல் தொழில்நுட்ப குழுக்களைப் பணிக்கு வைத்துள்ள பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கீழ்த்தரமான செயலே இது என்றும், அண்மைக் காலத்தில் சர்ச்சைகளை உருவாக்கி, ஊதிப் பெரிதாக்க தொடர்ந்து முயன்று வருவதன் ஒரு பகுதியே இது என்றும் சமூக ஊடகங்களைக் கவனிக்கும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு பெரு நிறுவனத்தின் பெயரையே துணிச்சலாக போலிச் செய்திக்குப் பயன்படுத்துவது ஆபத்தான போக்கு என்று தகவல் தொழில்நுட்பத் துறையினரும் கூறியுள்ளனர்.
தார்மிகத்தையும், அறநெறிகளையும் உரத்த குரலில் பேசும் பி.ஜே.பி., சங் பரிவார்களின் பித்தலாட்டத்தைப் பார்த்தீர்களா?
தேசப் பக்தியும், தெய்வீக பக்தியும் இரு கண்கள் என்று பீற்றிக்கொள்வதில் மட்டும் குறைச்சல் இல்லை.
பொய்யிலே பிறந்து பொய்யிலே புழுத்த இந்த புல்லர்க் கூட்டத்திற்குத் தேர்தலில் வாக்குச் சீட்டுமூலம் பாடம் கற்பிக்கவேண்டாமா?
சிந்திப்பீர், செயல்படுவீர்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...