அசாம் மாநிலம் சில்சார் நகரத்தில் உள்ளது - அசாம் மத்திய பல்கலைக்கழகம். இப்பல்கலைக் கழகத்தில் தத்துவவியல் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் சர்வாக் முகோபத்யாய. இவர் வகுப்பறையில் பகுத்தறிவு, புராணங்களின் புரட்டுகள், போலி அறிவியல், மூட நம்பிக்கைகள் குறித்து மாணவர்களிடையே அதிகம் கலந்துரையாடுவார். இந்த நிலையில் இவர் மீது மத நம்பிக்கைகளுக்கு விரோதமாக செயல்படுகிறார், இந்து மதம் குறித்து மாணவர்களிடையே தவறாக, மோசமான கருத்துக்களைப் பரப்புகிறார் என்று கூறி அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் பொதுச் செயலாளர் சிறீஹரி போரிகர் என்பவர் 2015ஆம் ஆண்டு புகார் அளித்தார்.
2015ஆம் ஆண்டு அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் நடந்த ரோகித் வேமுலா என்ற மாணவர் தற்கொலை விவகாரம், அதில் அப்போதைய மனித வள மேம் பாட்டுத் துறை அமைச்சரான ஸ்மிருதி இரானியின் தலையீடு குறித்து பெரிய அளவில் விவாதம் நடந்து கொண்டிருந்ததால் அசாம் பல்கலைக்கழக பேராசிரியர் மீதான புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் மாணவர் அமைப்பினரின் எந்தப் புகாரையும் அமைச்சர் கவனிப்பதில்லை என மோடியிடம் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் புகார் கூறினர்.
இந்த நிலையில், ஸ்மிருதி இரானி அந்தத் துறையில் இருந்து மாற்றப்பட்டு பிரகாஷ் ஜாவடேகர் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய அமைச்சர் பதவி ஏற்ற பின் பல்கலைக்கழக மானியக் குழுவிடம் இருந்து அசாம் பல்கலைக்கழகப் பதிவாளருக்கு ஒரு அறிக்கை ஒன்று வந்துள்ளது.
அதில், "சர்வாக் முகோபத்யாய என்னும் பேராசிரியர் பல்கலைக் கழக மானியக்குழு அறிவித்துள்ள குறைந்த பட்ச கல்வித் தகுதி இல்லாமலே பணியில் அமர்த்தப் பட்டுள்ளதாக அகில பாரத வித்யார்த்தி பரிஷத் பொதுச் செயலாளர் ஸ்ரீஹரிபோரிகர் புகார் அளித்துள்ளார். அது மட்டும் இன்றி மேலும் இரு ஆசிரியர்களும் அதே போல பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் மீதும் விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் அந்த அறிக்கையில் குறிப் பிடப்பட்டிருந்தது.
அதன் பிறகு திடீரென பேராசிரியர் சர்வாக் முகோ பத்யாய பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் இரண்டாம் பருவ வகுப்புகள் ஆரம்பத்தின் போது வகுப்பறைக்கு வந்த அவரை "நீங்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளீர்கள். வகுப் பறைக்கு வரவேண்டாம்" என்றிருந்த சில வரிக்கடித்தை பல்கலைக்கழக நிர்வாகம் அவர் கையில் கொடுத்து பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறுமாறு கூறியது. அவர் மீது விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த மற்ற இரு பேராசிரியர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை அசாம் மாநில பல்கலைக்கழக பேராசிரியர் களிடையே பெரிதும் சர்ச்சையை ஏற்படுத் தியது. பல்கலைக்கழகத்தின் இந்த சர்வாதிகாரப் போக்கு அசாம் உயர்நீதி மன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. வழக்கை விசாரித்த அசாம் உயர்நீதிமன்றம் "எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் ஒரு அமைப்பின் புகார் காரணமாக பேராசிரியர் மீது நடவடிக்கை எடுத்தது சட்டவிரோதமானது" என்று கூறி பல்கலைக்கழக நிர்வா கத்தை கண்டித்து அவரை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கிணங்க சர்வாக் முகோபத்யாய மீண்டும் டிசம்பர் 18 முதல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
ஆனால் பேராசிரியர்கள் இடையில் ஏற்பட்டுள்ள அதிருப்தி மேலும் வளர்ந்து வருகிறது. இது குறித்து பேராசிரியர்கள் கூட்டமைப்பின் வழக்குரைஞர் சப்யாசாசி சட்டர்ஜி, "பல்கலைக் கழகம் முதலில் பணி நீக்கம் செய்ததற்கும், பின்பு அந்த நீக்க உத்தரவை ரத்து செய்ததற்கும் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. இது பேராசிரியர்களிடையே சந்தேகத்தை உண்டாக்கி உள்ளது. பேராசிரியர் சர்வாக் முகோபத்யாய தலைசிறந்த அறிஞரும் முன்னணி பத்திரிகையாளரும் ஆவார். அவருடைய கடவுள் மறுப்புக் கொள்கையால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பலரும் கருதுகின்றனர். ஒரு சில மத அமைப்புகளின் கைப்பொம்மையாக பல்கலைக்கழக நிர்வாகம் செயல்படுவது வருத்தத்தை அளிக்கிறது" என்று கூறினார். அசாம் மாநிலத்தில் சிறுபான்மை பாஜக கூட்டணி அமைத்து ஆட்சிபுரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசும் சரி, 19 மாநிலங்களில் நடைபெறும் பிஜேபி ஆட்சி என்பதும் சரி, பகுத்தறிவுச் சிந்தனைக்கு எதிரானது; மாறாகப் புராணப் புழுதிச் சேற்றில் கிடந்து உழலக் கூடியது என்பதல்லாமல் வேறு என்னவாம்?
No comments:
Post a Comment