மும்பையில் உள்ள அய்.அய்.டி. விடுதிகளில் தங்கி யுள்ள மாணவர்கள் மாமிசம் சாப்பிடுவதாக இருந்தால் தனி தட்டில் மட்டும்தான் சாப்பிட வேண்டும் என்றும், மரக்கறி (சைவ) உணவுகளை சாப்பிடும் மாணவர்களின் தட்டுக்களை உபயோகப்படுத்தக்கூடாது என்றும்
இ-மெயில் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள அய்.அய்.டி.யில் மரக்கறி உணவு (சைவம் என்று சொல்லப்படுவதுண்டு), மாமிச (அசைவ) உணவுகள் தனித்தனியாக வழங்கப்படுகின்றன. சைவ உணவுகளை எவர்சில்வர் தட்டிலும், அசைவ உணவுகளை பிளாஸ்டிக் தட்டிலும் சாப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர் அமைப்பு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அசைவ உணவு சாப்பிடும் மாணவர்கள் பிளாஸ்டிக் தட்டுக்களை மட்டுமே உபயோகிக்கவேண்டும். சைவ மாணவர்களின் தட்டுக்களை உபயோகிப்பதால் அவர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது என்று நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு சென்னை அய்.அய்.டியில் இறைச்சி சாப்பிட்டவர்களை தாக்கிய நிகழ்வு நடந்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் மத்திய அரசின் மாட்டிறைச்சித் தடைச் சட்டத்தை எதிர்த்து மாணவர் அமைப்பினர் போராடியுள்ளனர். சென்னை அய்.அய்.டி மாணவர்கள் இது தொடர்பாக விவாதம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அய்.அய்.டி.யில் உள்ள சில இந்துத்துவ அமைப்பினர் விவாதம் நடத்திக்கொண்டு இருந்த மாணவர்களை கடுமையாகத் தாக்கினர், இதில் சூரஜ் என்ற கேரள முதுகலை முனைவர் மாணவருக்கு கண் எலும்புகள் முறிந்துள்ளன.
இந்த நிகழ்வை தமிழகத்தின் அனைத்துத் தலை வர்களும் கண்டித்திருந்தனர். இதன் பிறகுதான் அங்கும் இரட்டைத் தட்டு முறையில் உள்ளது எனத் தெரிய வந்துள்ளது.
சென்னை அய்.அய்.டியில் பத்து உணவகங்கள் உள்ளன. இவை எல்லாமே மரக்கறி உணவு (சைவம்) மட்டுமே! இறைச்சி உணவு (அசைவம்) வேண்டுமென்றால் வெளியில் இருந்து வாங்கி வருவார்கள் அதுவும் தனியான பாத்திரத்தில் கொண்டுவந்து பரிமாறுவதற்கும் தனியான தட்டு உண்டு. அசைவம் பரிமாறும் தட்டில் சிவப்பு வண்ணம் அடித்திருப்பார்கள். அதாவது சிவப்பு வண்ணம் அடித்திருக்கும் தட்டில் மட்டுமே அசைவம் தருவார்கள். அந்தப் பாத்திரங்களை உணவகத்திற்கு வெளியே எடுத்துச்சென்று போட்டுவிடுவார்கள். அதைக் கழுவும் பணியாட்கள் மரக்கறி உணவைக் கழுவும் வேலையைச் செய்யமாட்டார்கள். அந்த அளவிற்கு தனியாக ஒதுக்கி வைத்திருப்பார்கள். வேறு உணவு, அதாவது மரக்கறி உணவு வைக்கப்பட்டிருக்கும் பாத் திரங்களுடன் ஒட்டிவிடக்கூடாது என்பதில்கூட மிகக் கவனமாக இருப்பார்களாம்.
தமிழகத்திலேயே இப்படி என்றால், வட இந்தியாவில் எப்படி இருக்கும்? அய்.அய்.டி கான்பூரில் குறிப்பிட்ட பிரிவினரைத் தவிர மற்றவர்கள் விடுதிகளில் தங்க அனுமதியில்லை, அவர்கள் வெளியில் வீடுகளில் வாடகைக்குத் தங்கவேண்டும்.
கல்லூரியில் சேர்ந்த பிறகு அவர்களுக்குத் தனியாக ஒரு விண்ணப்பம் கொடுக்கப்படும். அதில் அவர்களின் உணவு முறை கேட்கப்பட்டிருக்கும்; அதற்குப் பதில் அளித்த பிறகுதான் அவர்களுக்கு விடுதி ஒதுக்கப்படும். அவர்கள் மரக்கறி உணவு சாப்பிட்டாலும் அவர்கள் பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியினப் பிரிவினராக இருந்தால், அவர்களுக்கு விடுதிகளில் இடமில்லை. இதே நிலைதான் கோரக்பூர் உள்ளிட்ட வட இந்திய அய்.அய்.டி.க்களிலும் நடைமுறையாக உள்ளது.
கருநாடக மாநிலம் சிர்சி என்ற ஊரில் பொங்கலன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டு ‘‘பெருமைமிக்க நமது அரசமைப்பு’’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் உரையாற்றிப் புறப் பட்ட பிறகு, சில இந்துத்துவ அமைப்பினரும், பாஜக வினரும் அவர் பேசிய மேடையை கோமியம் (மாட்டு மூத்திரம்) மற்றும் (ஆற்றுநீர்) புனித நீர் தெளித்து புனிதமாக்கினராம். மேலும் அவ்விடத்திற்கு சாம்பிராணி புகையும் காட்டப்பட்டதாம்.
இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள பிரகாஷ்ராஜ், பாஜக நிர்வாகிகள் நான் பேசிய சிர்சி நகரத்தில் மேடையை மாட்டு கோமியத்தைக் கொண்டு சுத்தப்படுத்தியுள்ளதை நாளிதழில் பார்த்து தெரிந்துகொண்டேன், இனி அவர்கள், நான் செல்லும் இடமெல்லாம் அப்படிச் செய்வார்களா? என்று இந்துத்துவ அமைப்பினரையும், பாஜகவினரையும் பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இரட்டைக் குவளை முறை மற்றும் தீண்டாமை குறித்து பேசிவரும் வேளையில் தற்போது தொழில்நுட்ப அமைப்பான அய்.அய்.டி.யில் இரட்டைத் தட்டுமுறையும், நாத்திகம், பகுத்தறிவு மற்றும் அரசமைப்புச்சட்டம் குறித்து பேசினால் தீண்டத்தகாதவர்கள் என்ற முறையும் புதிதாக உருவாகியுள்ளன.
மத்தியில் பி.ஜே.பி. வந்தாலும் வந்தது; மனுதர்மம் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டது. இளைஞர்களின் பெருங்கிளர்ச்சி ஒன்றுதான் இதற்குக் கடிவாளம்; எழுக இளைஞர்காள்!
No comments:
Post a Comment