Friday, April 27, 2018

இராம ராஜ்ஜிய யாத்திரையும் எதிர்ப்பும்!

இராமாயணம் அறிவையும், ஒழுக்கத்தையும் போதிக்கக் கூடிய இதிகாசம் அல்ல; இன்னும் சொல்லப் போனால் மூலநூல் என்று கூறப்படக் கூடிய வால்மீகி இராமாயணத்தில் இராமன் சாதாரண ஒரு ஜீவனாகத்தான் படைக்கப்பட்டு இருக்கிறானே தவிர உதாரண புருடனாகப் புனையப்படவில்லை.
மற்ற மற்ற மக்களைப் போல குடித்திருக்கிறான், மாமிசம் சாப்பிட்டிருக்கிறான், யாரோ சொன்னார் என்பதற் காக  கர்ப்பிணியான தன் மனைவி சீதையைத் தனியாகக் கொடிய மிருகங்கள் வாழும் காட்டில் கொண்டு போய் விட்டிருக்கிறான்.
தனக்குச் சம்பந்தமில்லாத வாலி - சுக்ரீவன் குடும்பச் சண்டையில் அதிகப் பிரசிங்கித்தனமாகத் தலையிட்டு, வாலியை மரத்தின் பின் ஒளிந்திருந்து கோழைத்தனமாக அம்பெய்து கொன்றிருக்கிறான்.
கைகேயியைத் தசரதன் மணம் செய்து கொள்ளும் போதே கைகேயிக்குப் பிறக்கும் மகனுக்குத்தான் நாடா ளும் உரிமை என்ற உண்மை இராமனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தும் - தான் மகுடம் சூட்டிக் கொள்ள சம்மதித் தவன் இராமன் (அயோத்தியாகாண்டம் 107ஆம் சருக்கம்).
தசரதன் மனம் மாறி பரதனுக்குத்தான் பட்டாபிசேகம், இராமன் காடேக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டபோது சராசரி மனிதனுக்கும் கீழாகத்தான் இராமன் துக்கித்தான்,
"நாட்டை இழந்து, சுகத்தை இழந்து நல்ல மாமிசப் பட்சணங்களை இழந்து காட்டிற்குச் சென்று காய், கனிகளைப் புசிக்க வேண்டியவனாகி விட்டேனே" என்று தன் தாயார் கவுசல்யாவிடம் சங்கடப்பட்டுப் புலம்புகிறான் (அயோத்தியா காண்டம் 20ஆம் சருக்கம்).
ஒருபடி மேலே சென்று "எந்த மடையனாவது தன் இஷ்டப்படியெல்லாம் நடந்து வரும் மகனைக் காட் டுக்கு அனுப்பிட சம்மதிப்பானா?" என்று தன் தம்பி இலட்சு மணனிடம் தன் தகப்பன் தசரதனைத் திட்டித் தீர்த்து இருக்கிறானே! (அயோத்தியா காண்டம் 53ஆம் சருக்கம்)
"பெண்களை நம்பக் கூடாது, மனைவியிடத்தில் இரகசியம் சொல்லக் கூடாது" என்கிறான் இராமன் (அயோத்தியா காண்டம் 100ஆம் சருக்கம்). இதன் மூலம் பெண்களைப்பற்றி மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று புராணிகர்கள் புளுகும் இராமனின் தாழ்ந்த கருத்து எத்தகையது என்பது விளங்கவில்லையா?
மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று மெச்சிக் கொள் கிறார்களே - அந்த இராமனின் இறுதி எவ்வளவு பரி தாபகரமானது! தனது தம்பி இலட்சுமணனையும் தள்ளி விட்டு,தானும் சரயுநதியில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறானே! (உத்தரகாண்டம் - சருக்கம் 11).
இராமாயணத்தின் கதாநாயகனான இராமனின் எண் ணங்களும், நடப்புகளும் அவன் பின்பற்றத்தக்க உத்தமன், உதாரண மானுடன் என்று எண்ணுவதற்குச் கிஞ்சிற்றும் இடமில்லையே!
இந்த நிலையில் இராம ராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் என்று கூறி சங்பரிவார்க் கும்பல் இராமராஜ்ஜிய யாத்திரையை மேற்கொள்வதில் உயர்ந்த நோக்கமோ, ஒழுக்கமோ கடுகு மூக்கு அளவாவது உண்டா - உண்டா?
இன்னொரு வகையில் பார்க்கும் பொழுது இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டத்தைச் சித்தரிக்கப் புனையப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் எழுதி யுள்ளார்களே!
"ஆரியர் அல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள்  - சூத்திரர்கள் என்றும், தஸ்யூக்கள் என்றும், அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கின்றது. ஆரியருக்கும் ஆரியர் அல்லாதாருக்கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இரு வகுப்பினர்களுக்குமிடையேயிருந்த கலை வேற்றுமையும், அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைக்குக் காரணம்" என்று பிரபல வரலாற்றாளர் ராதா குமுத முகர்ஜி எழுதிய 'இந்து  நாகரிகம்' - பக்கம் 62 கூறுகிறது.
அமெரிக்கா வரை சென்று இந்து மதத்தைப் பற்றிப் பரப்புரை செய்தவர் என்று பார்ப்பனர்கள் பீற்றிக் கொள்ளும் விவேகானந்தரே என்ன கூறுகிறார்?
"தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் இராமா யணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்" என்பது விவேகானந்தரின் கணிப்பாகும். (சுவாமி விவேகானந்தர் அவர்களது சொற் பொழிவுகளும், கட்டுரைகளும்" "இராமாயணம்" என்ற தலைப்பில் பக்கம் 587).
"இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ - 'ஆரியர்' காலத்தையும், அவர்களுடைய வெற்றிகளையும் உள் நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும். இவற்றை உண்மை என்று நான் நினைக்கவில்லை 'பஞ்ச தந்திரம்', 'அராபியன் நைட்' முதலிய கற்பனைக் கதைகளைப் போன் றவை என்பது  என் கருத்து" என்று எழுதுகிறார் பண்டிதர் ஜவகர்லால் நேரு (டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 76-77).
தந்தை பெரியார் கூறினால் மகா  ஆத்திரம் கொண்டு அக்னிமழை பொழியும் பார்ப்பனாதிகள் பண்டிட்டான ஜவகர்லால் நேருவே இப்படி எழுதி இருக்கிறாரே - எங்கே கொண்டு முகத்தைப் புதைத்துக் கொள்வார்கள்?
அன்று தொட்டு இன்று வரை அரசியல் என்பதெல்லாம் ஆரியர் - திராவிடர் போராட்டமே என்பதுதான் தந்தை பெரியார் அவர்களின் ஆய்வின் முடிவாகும்.
மறுபடியும் பழைய ராம ராஜ்ஜியம் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் - மக்கள் மத்தியில் அத்தகு மனப்பான்மையை ஊன்ற வேண்டும் என்பதற்குத்தான் விசுவ ஹிந்து பரிஷத்தின் ராமராஜ்ஜிய யாத்திரையாகும்.
இதன் முகத்திரையைக் கிழிப்பதே, இதனை எதிர்ப்பதே திராவிடர் கழகத் தலைவரின் இராமாயணம் பற்றிய சிறப்புச் சொற்பொழிவு என்பதைப் பார்ப்பனர் அல்லாதார் உணர்வார்களாக!
வாருங்கள் 27ஆம் தேதி மாலை சென்னை பெரியார் திடலுக்கு.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...