Friday, April 27, 2018

அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானம் வெல்லட்டும்!

திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் (1.4.2018) காவிரி நீர் உரிமையை ஈட்டும் வகையில் முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரும் 5ஆம் தேதி முழு வேலை நிறுத்தத்திற்கு அழைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்து தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமருக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் கருப்புக் கொடி காட்டுவது, மூன்றாவதாக ஆளுநர் மாளிகை நோக்கி காவிரி உரிமை மீட்புப் பயணம்  ஆகிய மூன்று அற வழிப் போராட்டங்கள் ஒருமனதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை பிஜேபியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் காவிரி நீர்ப் பிரச்சினையில் ஒருமித்த மன நிலையில்தான் உள்ளன.
இதில் ஆளும் கட்சியான அதிமுக நிலைதான் விசித்திரமானது. அவர்களும் தங்கள் பங்கிற்கு உண்ணா நோன்பினை அறிவித்துள்ளனர். கோழி திருடனும் கூடவே குலவுகிறான் என்பது ஒரு பழமொழி. அப்படித் தானிருக்கிறது அதிமுக ஆட்சியின் செயல்பாடு.
ஆட்சியே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முக்கியமான தீர்மானத்தை அனைவரின் ஒப்புதலுடன் நிறைவேற்றியது. காவிரி நதி நீர்ப் பிரச்சினை தொடர்பாக முதல் அமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலை வர்களும் பிரதமரைச் சந்திப்பது என்பது அக்கூட்டத்தின் முக்கிய முடிவாகும்.
முறைப்படி முதல் அமைச்சர் பிரதமருக்கு எழுதி சந்திப் புக்கான தேதியைக் கேட்டும், அதற்கான வாய்ப்பைப் பிரதமர் அளிக்காதது - ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமர் என்பதற்கான அழகல்ல. ஜனநாயகப் போர்வையில் ஒரு எதேச்சதிகார மனப்பான்மையுடையவர்தான் நரேந்திர மோடி என்பது இதன் மூலம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
மாநில ஆட்சிகள் ஒன்றும் மத்திய டில்லி ஆட்சிக்குக் கொத்ததடிமைகள் அல்ல;  ஒரு முதல் அமைச்சர்  சந்திப்புக்கான வேண்டுதலைக்கூட நிராகரிப்பது என்பது எந்த வகையில் மாநில ஆட்சியை மதிப்பதாகும்?
India that is Bharat - shall be a Union of States  என்று அரசமைப்புச் சட்டம் சொல்லுவதற்கு என்னதான் பொருள்? மாநிலங்கள் பல கொண்டதுதான் இந்தியா என்றால் அந்த மாநிலத்தின் குரலை உரிய வகையில் மதிக்க வேண்டாமா?
ஒரு பக்கம் மத்திய அரசு சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறது என்றால் மாநில அதிமுக அரசோ மாநில உரிமையை உறுதி செய்யும் முதுகெலும்பு அற்றதாக இருப்பது வேதனைக்குரியதாகும்.
இதனால் இரட்டை அதிகாரத் தாக்குதலுக்குத் தமிழ்நாடு இரையாகி விட்டது.
மாநில உரிமைகளுக்காக எப்பொழுதுமே குரல் கொடுத்து வந்துள்ள அண்ணாவின் பெயரில் உரிய ஒரு கட்சி - ஆட்சி அத்தகு உணர்வற்று இருப்பதற்குக் காரணம் என்ன? மடியில் கனம்தான் என்பது பொதுவாகவே நிலவிவரும் கருத்தாகும்.
காவிரி நீர்ப் பிரச்சினையைப் பொருத்தவரையில் சட்டம், நீதி, நியதி எல்லாம் தமிழ்நாட்டின் பக்கம் பலமாக இருந்தாலும், கையேந்தி நிற்கும் கையறு நிலை என்பது வெட்கக் கேடாகும்.
கருநாடக மாநிலத்தில் நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலை மனதிற் கொண்டு மத்திய பிஜேபி இப்படிக் கபட நாடகம் ஆடுகிறது என்பது பரவலாக எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும்.
எந்த அளவுக்கு மோடி தலைமையிலான பிஜேபி அரசு சென்று இருக்கிறது? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று ஆணையிட உச்சநீதிமன்றத் திற்கு அதிகாரம் இல்லை என்று சொல்லும் அளவுக்குத் திமிரி செல்லுகிறது என்றால் இது எவ்வளவுப் பெரிய விபரீதமாகும்!
நேற்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மான வாசகத்தில் அரசமைப்புச் சட்டத்தையும்,  சட்டத்தின் ஆட்சியையும் (Rule of Law) மதிக்காத மத்திய அரசு என்று குறிப்பிட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
ஆறு வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், அதற்கு மேல் கால நீட்டிப்புக் கிடையாது என்று உச்சநீதிமன்றம் கறாராகத் தீர்ப்பில் கூறிய பிறகும், ஆறு வாரம் கடந்து, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விளக்கம் கேட்கிறது என்றால் இதற்குப் பெயர் என்ன? காலம் கடத்தும் சூழ்ச்சி இதன் பின்னணியில் இருக்கிறது; மூன்று  மாதம் அவகாசம் கேட்பதன் நோக்கம், அதற்குள் கருநாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்து விடும் அல்லவா?
வெளிப்படைத் தன்மையில்லாத சூழ்ச்சியும், தந்திரமும் கொண்ட அரசியல்  குரூர சித்து விளையாட்டை பிஜேபி அரசு நடத்துவது வெட்கக் கேடானதாகும்.
மத்திய அரசு தான் இந்த சித்து விளையாட்டை விளையாடுகிறது என்றால் அதற்கு ஒத்து ஊதும் அரசாக தமிழக அரசும் தோதாக அமைந்து விட்டதால், தமிழ்நாடு தன் உயிரோட்டமான காவிரி நதி நீர் உரிமையில் பெரும் இழப்பைச் சந்திக்கும் மரணக் குழிக்குத் தள்ளப்பட்டு விட்டது.
தமிழ்நாடே பாலைவனமாகக் கூடிய ஒரு பிரச்சினை யில் கட்சிகளை மறந்து ஒரு குடையின் கீழ் நிற்க வேண்டியது அவசியமாகும். அரசியல் கட்சிகள், வியாபார  சங்கங்கள் தனித்தனியே போராட்டங்களை அறிவிப்பது புத்திசாலித்தனமல்ல. தங்கள் பக்கத்தில் சட்டமோ, தீர்ப்போ, நியாயமோ இல்லாத ஒன்றிற்காகக் கருநாடக மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும், வணிக நிறுவனங்களும் ஒன்றுபட்டு நிற்கும்போது, இந்த மூன்றும் தம் பக்கம்  வலிமையாக  உள்ள தமிழ்நாடு ஒன்றுபட்டு நிற்க மனமின்றி ஆளுக்கொரு திசைக்குச் செல்லுவது சரியானதல்ல.


பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ளா விட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...