Friday, April 27, 2018

பழனி கோயில் மோசடி

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று பழனி கோயில் என்கின்றனர். இக்கோயிலின் கருவறையில் உள்ள முருகனின் அய்ம்பொன்சிலைகுறித்த பிரச்சினை நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. இப்போது பழனி முருகன் கோயிலில் பஞ்ச லோகம் எனப்படும் அய்ம்பொன் சிலையாக இருந்த உற்சவர் சிலை மாற்றப்பட்டு, புதிய சிலை வைக்கப்பட்டது. உற்சவர் சிலையை உருவாக்கும் போது சேர்க்கப்பட்ட தங்கத்தின் அளவில் மோசடி நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிலை உருவாக்கிய தலைமைச் சிற்பி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழனி முருகன் கோயிலுக்கு 2004ஆம் ஆண்டு 200 கிலோ கிராம் எடையில் புதிய அய்ம்பொன் சிலை செய்ய வேண்டும் என்றும், அதில் 10 கிலோ கிராம் தங்கம் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருத்தணி கோயிலில் இருந்து 10 கிலோ கிராம்  தங்கமும் பெறப்பட்டது. சிலையை கோயிலிலேயே செய்ய வேண்டும் என்ற ஆகம விதியையும் மீறி கேளம்பாக்கத்தில் உள்ள சிற்பி முத்தையாவுக்கு சொந்தமான ஸ்வர்ணம் என்ற சிற்பக் கலைக் கூடத்தில் உற்சவர் சிலை செய்யப்பட்டது. புதிதாக செய்யப்பட்ட உற்சவர் சிலை 6 மாதங்களிலேயே கருத்துப் போனதால் கோயிலின் பூட்டிய இருட்டறையில், பூஜையே செய்யாமல் 14 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து காவல்துறை அய்.ஜி. பொன்.மாணிக்கவேல் உத்தரவின்பேரில், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் ஆய்வு நடத்தினார்.
அந்தச் சிலையைக் கைப்பற்றிய சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர், அய்அய்டி தொழில்நுட்ப வல்லுநர் குழு விடம் அளித்து அதனைப் பரிசோதித்தனர். அந்தச் சிலையை பரிசோதித்த தொழில்நுட்பக் குழுவினர் நடத்திய ஆய்வில் 22 கிலோ கிராம் தங்கத்தால் செய்யப்பட்ட சிலையில் 10 சதவீதம் கூட தங்கம் இல்லை எனவும், அய்ம்பொன்னால் சிலை செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. உற்சவர் சிலைக்காக பழனி கோயிலில் ஒரு கோடியே 31 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
கடந்த 2004இல் அப்போதைய கோயில் இணை ஆணையராக இருந்த கே.கே.ராஜா, தமிழ்நாடு தேர் வாணையத்தில் உறுப்பினராக இருந்தவர். மேலும் இவர் மூத்த அமைச்சர் ஒருவரின் நெருங்கிய உறவினர் என்றும் கூறப்படுகிறது. பழனி பால தண்டாயுதபாணி கோயிலில் உற்சவர் சிலை செய்ததில் தங்கம் முறைகேடு செய்ததாக எழுந்துள்ள புகாரில் தலைமைச் சிற்பி முத்தையா, கோயில் இணை ஆணையர் கே.கே.ராஜா  ஆகியோரை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சிற்பி முத்தையாமீது ஏற்கெனவே காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சிலை செய்ததில் தங்கம் கையாடல் செய்ததாக சிவகாஞ்சி காவல்நிலையத்தில் வழக்கு உள்ளது. கடவுள் இல்லை, இல்லவே இல்லை - அது ஒரு கற்பனை - மனிதன் காட்டுவிலங்காண்டியாய் அலைந்து திரிந்த கால கட்டத்தில், தன்னைச் சுற் றிலும் நடக்கும் இயற்கைச் சீற்றங்களைக் கண்டும், அதனால் பல துன்பங்களை அனுபவித்தும் வாழ வேண்டிய நிலையில், ஏதோ ஒரு சக்தி இருந்து இவற்றையெல்லாம் நடத்துகிறது என்று அன்றைக்கு இருந்த அறிவு நிலையில் நினைத்தான் - நம்பினான்-  அதுதான் கடவுளானது. அதை மய்யமாக வைத்து மதங்கள், புராணங்கள், அவற்றைக் காப்பாற்ற 'புனித' நூல்கள் உண்டாக்கப்பட்டன. இவற்றையெல்லாம் ஏற்படுத்திய பிறகு கடவு ளுக்கும், மனிதனுக்கும் இடையே தரகர்கள் தோன்றி னார்கள். அவர்கள்தான் இந்தக் கோயில் அர்ச்சகர்கள். இந்த வழிபாட்டிலும் பல நிலைப்பாடுகள் உண்டு. துவிஜதர்களுக்கு - அதாவது இரு பிறப்பாளர் என்று எழுதி வைத்துக் கொண்டுள்ள, பார்ப்பனர்களுக்கு தெய்வம் அக்னி, முனிவர்களுக்கு தெய்வம் இதயம், புத்தி குறைந்தவர்களுக்குத் தெய்வம் சிலை  என்று பாரதத்தில் ஒரு பாகமான உத்திரகீதை பகர்கிறது.
கடவுள் சிலைகளும், கோயில் சொத்துக்களும், பண மதிப்புடையவை என்பதால் அவற்றைத் திருடுவது ஒரு தொழிலாகி விட்டது. இந்தத் திருட்டில் பெரும்பாலும் உடந்தையாக இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட கோயில் அர்ச்சகர்களே!
ஒவ்வொரு கோயிலுக்கும் தலப்புராணம் எழுதி வைத்து அதன் பெருமைகளை, சக்திகளை வியாபாரத் தந்திரத்தோடு விளம்பரப்படுத்துவார்கள்! பக்தர்களும் விட்டில் பூச்சிகளாக அறிவையும், பொருளையும், காலத்தையும் பாழடித்து வருகிறார்கள்.
கோயில்களில் உள்ள சிலைகள் திருடு போவது, அதனை கண்டுபிடிக்க தனித்துறை இருப்பதிலிருந்து கடவுளாவது வெங்காயமாவது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?
அறியாமை இருளை அகற்றுவது பகுத்தறிவே சிந்திப்பீர்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...