சக்தி வாகினி எனும் தொண்டு நிறுவனத்தின் சார்பில் காப் பஞ்சாயத்துக்கு எதிராகவும், ஆணவக்கொலைகளைத் தடுத்திட வேண்டும் என்றும், மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகி யோரைக் கொண்ட அமர்வு விசாரணை மேற்கொண்டு, நல்லதோர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடந்த ஜனவரியில், ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் ஆண், பெண்களுக்கு எதிராக தாக்கி வருகின்ற காப் பஞ்சாயத்தார்களின் செயல் முற்றிலும் சட்ட விரோதமானது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.
உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவில், காப் பஞ்சாயத்து நீதிமன்றத்துடன் இணக்கமாக உள்ளதாக கூறினாலும் நாங்கள் அதை ஏற்கமாட்டோம். உரிய திருமண வயதில் ஓர் ஆணோ, பெண்ணோ திருமணம் செய்துகொள்ளும்போது, காப் பஞ்சாயத்தோ, எந்த ஒரு தனி நபரோ, சமூகத்தின் எந்த ஒரு பிரிவோ அத்திருமணத்துக்கு எதிராக இருந் தால் அதுகுறித்து கவனத்தில் கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளது.
கிராமங்களில் காப் பஞ்சாயத்து என்பது ஜாதி அல்லது குறிப்பிட்ட வகுப்பால் நடத்தப்படுவதாகும். பழைமையான பழக்க, வழக்கங்களின் பெயரால், அரைகுறை நீதிகூறுகின்ற அமைப்புகளாக, கடுமையான தண்டனைகளை அளித்து ஒடுக்கி வருகின்றன. அதனுடைய உச்சமாக ஆணவக் கொலைகள் நடக்கின்றன.
பெண்கள் எதிர்கொள்கின்ற மோசமான பிரச்சினைகளி லிருந்து காவல்துறையினரால் பெண்களைக் காப்பாற்ற முடியாத நிலை உள்ளது. காப் பஞ்சாயத்துகளின்மூலமாக பெண்களுக்கு எதிராக நடத்தப்படுகின்ற குற்றங்களைக் கண்காணிப்பதற்கு ஓர் அமைப்பை மத்திய அரசு நிறுவிட வேண்டும். 2010ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இத்தீர்ப்பை அளித்துள்ளது. இவ்வழக்கு விசாரணை 7.3.2018 அன்று நடைபெற்றது. அனைத்து மாநிலங்களிலும் ஜாதி, மத மறுப்புத் திருமணம் செய்துகொள்வோரைப் பாதுகாத்திட சிறப்பு அமைப்புகள் உருவாக்கப்படும் என்று நீதிமன்றத்தில் அரசின் சார்பில் உறுதி கூறப்பட்டது.
அவ்வழக்கின்மீதான தீர்ப்பு நேற்று (27.3.2018) அளிக்கப் பட்டது. மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பில் கூறியதாவது:
தனியே சட்டம் இயற்றப்படும்வரை உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவைப் பின்பற்ற வேண்டும். ஜாதி மறுப்புத் திருமணங்கள், மத மறுப்புத் திருமணங்கள் ஆகியவற்றுக்கு எதிராக காப் பஞ்சாயத்துகள், ஜாதி பஞ்சாயத்துகள், கிராமப்பஞ்சாயத்துகள் வன்முறைகளை ஏவிவிடுகின்றன. சமூகத்தை பதற்றமாகவே வைத்திருக்க விரும்புகின்றன. ஆணவக்கொலைகள் இனியும் நடை பெறாத வண்ணம் அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
காப் பஞ்சாயத்து சார்பில் வாதிட்ட வழக்குரைஞர் கூறுகையில், ஆணவக்கொலைகளுக்கு திருமணம் செய்துகொள்ளும் இணையரும், அவர்களின் குடும்பத் தாருமே பொறுப்பு என்று குறிப்பிட்டதை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டார்கள்.
ஜாதி, மத மறுப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்து வதாகவும், முறையற்ற உறவுகளிடையே திருமணங்கள், இந்துக்களிடையே நிலவிவருகின்ற நெருங்கிய ரத்த உறவுகளுடனான திருமணம் ஆகியவற்றுக்கு எதிராக உள்ளதாகவும், சமுதாயத்தில் நடத்தை நெறிமுறை காப்பதற் காகவுமே காப் பஞ்சாயத்து செயல்பட்டு வருவதாக காப் பஞ்சாயத்து சார்பில் வாதிட்ட வழக்குரைஞர் குறிப்பிட்டார்.
அதை ஏற்கமறுத்த உச்சநீதிமன்றம், அச்சுறுத்துவது, உரிய வயதை எட்டிய பின்னர் ஜாதி மறுப்பு, மத மறுப்புத் திருமணங்களை செய்துகொள்வோரிடம் சமூக நடத்தை நெறிகளை காப்பதாகக் கூறுவது முற்றிலும் சட்ட விரோதமாகும். திருமணம் செய்துகொள்வோரை விசாரணைக்கு அழைத்து, யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறும், காப் பஞ்சாயத்துகள் தலையீட்டைத் தடுத்து நிறுத்த உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு எச்சரித்துள்ளது. காப் பஞ்சாயத்துமீதான தடை மற்றும் ஜாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் அதிகரித்து வரும் ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கான வழி முறை களை உருவாக்கி கண்காணித்திட கோரும் மனு மீதான இவ்வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறுகையில், திருமண வயதை எட்டியவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கும்போது, மற்ற எவரும் அதில் தலையிடக்கூடாது. இருவர் திருமணம் செய்துகொள்ளும்போது, மூன்றாவது நபராக தனிப்பட்ட ஒருவரோ அல்லது கூட்டாகச் சேர்ந்த பலரோ அவர்கள் முடிவில் சட்டப்படி தலையிட முடியாது என்றார்.
திருமணம் என்பது வயது வந்த ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் சம்பந்தப்பட்ட காரியமே ஒழிய மற்ற யாருக்கும், வேறு எந்தக் கட்டுப்பாட்டுக்கும் சம்பந்தப் பட்டதல்ல. (விடுதலை, 22.6.1948, பக்கம் 3) என்று கூறும் தந்தை பெரியார் அவர்களின் கருத்து உச்சநீதிமன்றத் தீர்ப்பில் எதிரொலித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்
No comments:
Post a Comment