Tuesday, November 7, 2017

மலத்தில் அரிசி பொறுக்குவதா?

மகாபாரதக் கதையில் வரணாவதன் என்ற ஊரில் ஒரு அரக்கு மாளிகையில் தங்கியிருந்த போது அந்த வீடு தீப்பற்றி எரிந்த உடன் பாண்டவர்கள் சுரங்கம் ஒன்றை குடைந்து அதன்வழியாக கங்கை கரையை அடைந்ததாக  ஒரு கதை; தற்போது அந்த சுரங்கம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாம்.

மகாபாரதத்தில் பாண்டவர்களை ஓராண்டுக்கு வரணாவதன் காட்டுப் பகுதியில் வசிக்கும்படி திருதராட்டிரர் கேட்டுக் கொள்கிறார். அதன்படி பண்டவர்கள்  வரணாவதன் என்ற ஊரில் தங்க முடிவு செய்கின்றனர். இவர்களின் முடிவைக் கேட்ட வரணாவதனத்து மக்கள் பாண்டவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். வரணாவதனத்தின் மன்னன் புரசேனன் துரியோதனனின் நண்பன். இவன் பாண்டவர்களை அணுகி, தான் அமைத் திருக்கும் அரக்கு மாளிகையில் தங்குமாறு. வேண்டி னான். பாண்டவர்கள் ஏதும் அறியாதவர்கள் போல அங்கு தங்கினர். அந்த மாளிகை அரக்கு, மெழுகு போன்ற பொருள்களால் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து மாளிகையின் உள்ளேயே ரகசிய மாக சுரங்கம் ஒன்றை பாண்டவர்கள் குடைந்தனர்.

இந்த நிலையில் குந்தியைக் காண ஒரு வேடுவப் பெண் தனது அய்ந்து மகன்களுடன் வந்தார்.அவர் களுடன் விருந்து உண்டு அங்கேயே அன்றிரவு தங்கினார் அந்த வேடுவப் பெண். இந்த நிலையில் பாண்டவர்கள் சுரங்க வழியாக சென்றுவிட அது அறியாமல் புரசேனன் ஆட்கள் மாளிகையின் அனைத்துப் பகுதிகளிலும் தீ வைத்தனர்.

பாண்டவர்கள் குந்தியுடன் சுரங்கம் வழியே நீண்டதூரம் கடந்து கங்கையை அடைந்தனர். அங்கிருந்து படகோட்டி மூலம் கங்கையைக் கடந்த பாண்டவர்கள் முன்பின் தெரியாத ஒரு நாட்டை அடைந்தனர். அது பீமன் அமைத்த சுரங்கமாம்.

இந்த வரணாவதன் தற்போது உத்தரப் பிரதேசத்தின் பாக்பட் மாவட்டத்தில் பர்னவா என  உருமாறியுள்ளதாம்.  தற்போது அங்கு  அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள தொல்பொருள் ஆய்வுத்துறை முனைந்துள்ளது. இது குறித்து தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் ஜிதேந்திர நாத் கூறுகையில், முழுமையான ஆய்வுக்குப் பிறகு, இங்கு தொல்பொருள்  ஆய்வுத்துறையின் இரண்டு நிறுவனங்கள் அகழ்வாராய்ச்சி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. அகழ்வாராய்ச்சி பணி அடுத்த மாதம் முதல் வாரம் தொடங்கி மூன்று மாதங்கள் நடக்கும். தொல்பொருள் ஆராய்ச்சி மாணவர்களும் இதில் பங்கேற்பார்களாம்.

இதே போல் அர்ச்சுனன், சூரியனிடமிருந்து சக்தியைப் பெற்று அணுகுண்டைப் போன்ற ஒன்றைத் தயாரித்து போரில் பயன்படுத்தினான் என்ற கட்டுக்கதை ஒன்று;  இது குறித்து கடந்த ஆண்டு அரியானா மாநில கல்வித்துறை அமைச்சர் அனில்விஜ் கூறும் போது "பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் அணுகுண்டைத் தயாரித்து அதை குருசேத்திரப் போரில் பயன்படுத்தினர்.  குருட்சேத்திர பகுதியில் அணுகுண்டு வெடித்ததற்கான பல அடையாளங்கள் உள்ளன. ராஜஸ்தான் பாலைவனம் உருவானதே அந்த அணுகுண்டால்தான்" என்று கூறிய அவர் மத்திய அகழ்வாராய்ச்சித்துறை இதை ஆய்வு செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.

பிஜேபி ஆட்சியில் நாடு எந்தத் திசையில் சென்று கொண்டிருக்கிறது? இந்த இதிகாசங்கள்பற்றி 'அராபியன் நைட்' போன்ற பஞ்ச தந்திரக் கதைகள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல் லுவதுண்டு. வரலாற்று ஆதாரம் கொண்ட  - திராவிடர் நாகரிகத்தைப் பறை சாற்றும் 'கீழடி' போன்ற ஆய்வுகளை அவசர அவசரமாக ஊற்றி மூடும் பிஜேபி அரசு, புராண இதிகாசங்களின் புரட்டுகளுக்காக கோடிக்கணக்கில் கொட்டியழுவது யார் வீட்டுப் பணம்? போகிற போக்கைப் பார்த்தால் பூமியைப் பாயாக சுருட்டி இரண்யாட்சன் கடலில் ஒளிந்தான் என்ற புராணக் குப்பையைக் கிளறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மலத்தில் அரிசி பொறுக்குவதா என்ற தந்தை பெரியாரின் கேள்விதான் நினைவிற்கு வருகிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...