Saturday, August 12, 2017

“திராவிடம் என்பது தென்னகத்தோடு நின்று விடாது!

“திராவிடம்  என்பது தென்னகத்தோடு நின்று விடாது!


 நாடு தழுவிய மக்கள் சக்திதான் திராவிடம்!”

'முரசொலி' பவளவிழாவில்  கமல்ஹாசன் சிறப்புரை


சென்னை, ஆக.11 சென்னையில் நேற்று (10.8.2017) மாலை கலைவாணர் அரங்கில் -பத்திரிகையாளர்கள், கலையுலகினர் பங்கேற்ற முரசொலி பவள விழா வாழ்த்தரங்கில் உரையாற்றிய  கமல்ஹாசன், "திராவிடம் என்பது தமிழகம், தென்னகத் தோடு நின்று விடாது, நாடு தழுவிய மக்கள் சக்திதான் திராவிடம்" எனக் குறிப்பிட்டார்.
இவ்விழாவில்  கமல்ஹாசன் பேசியதாவது:-
“நீரின்றி அமையாது” - இந்த அவையும் மேடை யும்! நீர் அனைவரும் இங்கே இருப்பதால்தான், என் தலை தயக்கமின்றி தாழ்ந்து வணங்குகிறது! இதை மட்டும்தான் நான் இங்கே உட்கார்ந்து தயார் செய்து கொண்டேன், அதுவும், தோள் உரச வைரமுத்து பக்கத்தில் இருந்த காரணத்தால், அந்தப் பக்கம் செயல் தலைவர் இருந்ததனால், ஒட்டிக் கொண்ட தமிழ்! மற்ற தமிழ் எல்லாம் செவிவழிச் செய்திதான்.அதில் கேட்ட இரண்டாம் குரல்,கலைஞர் அவர்களு டையது. ஏன் இரண்டு என்று சொல்கிறேன் என்றால், எனக்கு சிவாஜி அவர்கள் பேசிய வசனத்தை, அவரே எழுதிக்கொள்வார் என்று நினைத்திருந்ததால், அது தான் முதல் குரல்.
ரசிகனாக  இருக்கிறேன்!
இந்தக் குரல் நன்றாக இருக்கிறதே என்று கேட்ட பொழுது, அந்தக் குரலுக்கு வசனம் எழுதியவர் இன்னார் என்று தெரியும் வயது வந்தது முதல், நான் இந்த முதியவரின் (கலைஞரின்) ரசிகனாக இருந்து கொண்டிருக்கிறேன்(கைதட்டல்).
"ரஜினி அவர்கள் இந்த விழாவிற்கு வருகிறாரா?" என்று நான் ஒரு கேள்வி கேட்டேன். அதற்கு, “அவர் வருகிறார்” என்றார்கள். "அவரும் பேச இருக்கிறாரா?" என்று கேட்டேன். “இல்லை. அவர் கீழே உட்கார்ந்து கொண்டு விழாவைப் பார்க்கிறார்” என்றார்கள். அப்படியானால் நானும் கீழே உட்கார்ந்து கொள் கிறேன் என்றேன். (சிரிப்பு)
ரஜினியோடு கீழே அமர்ந்து கொண்டால், கையைப் பிடித்துக் கொள்ள ரஜினி இருப்பார், நாம் வம்பிலே மாட்டிக் கொள்ளமாட்டோம் என்று நினைத்தேன். (சிரிப்பு) ஆனால் விழா அழைப்பிதழ் எல்லாம் கொடுத்து விட்டுப் போனபிறகு நான் கண்ணாடியில் பார்த்துக் கொண்டேன்.
தன் மானம்தான்  முக்கியம்!
எவ்வளவு பெரிய வாய்ப்பை இழக்கவிருக்கிறாய்? இந்த விழா எப்படிப்பட்ட விழா என்பதை முதலில் புரிந்து கொள்! தற்காப்பு இல்லை முக்கியம்! தன்மானம்தான் முக்கியம்! (கைதட்டல், ஆரவாரம்) என்று கூறிக் கொண்டேன்.
ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், இந்த மேடையில் வீற்றிருக்கும் பெரிய பத்திரிக்கை ஆசிரியர்களுடன், பாதியில் பத்திரிக்கை நடத்த முடியாமல் நிறுத்திய கடைநிலைப் பத்திரிக்கை ஆசிரியனாக இந்த மேடையில் அமரும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. (கைதட்டல்) இந்த மேடை மாபெரும் வாய்ப்பு. அவர்களுடன் அமரத் தகுதியானவனா என்பதைக் கூட நான் யோசித்துப் பார்க்காமல், வாய்ப்பைப் பறித்துக் கொண்டேன் என்பதுதான் உண்மை (கைதட்டல்)
இன்று வரை  பதில் சொல்லவில்லை!
என்னைக் கேட்கிறார்கள்; “எங்கே அந்த மேடையில் போய்கழகத்தில் சேரப் போகிறீர்களா?’’ என்று ஒரு கேள்வி டுவிட்டரில் எல்லாம் வருகிறது. அப்படிச்சேருவதாக இருந்தால், 1983இல் கலைஞர் அவர்கள் அனுப்பிய ஒருடெலிகிராம் எனக்கு வந்து சேர்ந்தது. அது ஒரு கேள்வி. அந்தப் பெருந் தன்மையை நான் இன்றும் மறக்க மாட்டேன், என்றும் மறக்க மாட்டேன். நீங்கள் ஏன் திராவிடமுன்னேற்றக் கழகத் தில் சேரக் கூடாது? என்று கேட்டு ஒரு டெலிகிராம் வந்தது. (தலைவர் கலைஞரின்செயலரை நோக்கி, உங்களுக்கு அது தெரிந்திருக்கும் என்கிறார் கமல்.) அந்த டெலிகிராமை வெளியே காட்டவும் தைரியம் இல்லை, பதில் சொல்லவும் தைரியம் இல்லை. என்னன்னு சொல்வேன் நான்? அதை அப்படியே மடித்துஉள்ளே வைத்துக் கொண்டேன். அதற்கு நான் இன்று வரை பதில் சொல்லவில்லை.
மூதறிஞர்களுக்கு உரிய தன்மை!
அவருடைய (கலைஞருடைய) பெருந்தன்மை என்ன வென்றால், அதற்குப் பிறகு அவர் அதைக் கேட்கவில்லை. (கைதட்டல்) அது மூதறிஞர்களுக்கு, பெரியவர்களுக்கே உரிய தன்மை. அந்த மரியாதை இந்த மேடையிலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இங்கேநான் வந்திருக்கிறேன். (கைதட்டல்)
ஒருவரை ஒருவர் விமர்சித்தும், கிண்டலடித்தும் பேசியவர்கள் எல்லாம், இந்த மேடையில் இருக்கும் இந்தப் புதிய கலாச்சாரத்தைநானும் பயில இந்த மேடைக்குவந்திருக்கிறேன்.
விகடன் சீனிவாசன், அவர்கள் பேசும் போது, எங்கள் பத்திரிக்கையைப் பற்றி பூணூல் பத்திரிக்கை என்றும், பாரம்பரியப் பத்திரிக்கை என்றும்   சொல்லிக் கிண்டலடித்திருக்கிறார்கள் என்று சொன்னார். அவரே சந்தோஷமாக இந்த விழாவிற்கு வந்திருக்கும் போது, (சிரிப்பு), பூணூலே இல்லாத கலைஞானி, (கை தட்டல்) இந்த விழாவிற்கு வருவதில் என்னஆச்சரியம் இருக்கிறது? ஏன் இப்படிப் பதறுகிறீர்கள்?
இது ஒரு பத்திரிக்கையின் வெற்றி விழா. 75 ஆண்டுகள் பத்திரிக்கை நடத்துவது என்னஎன்பதை, இங்கே நூறுவருடத்திற்கு மேலாகப் பத்திரிக்கை நடத்தியவர்களும், 90 வருடங்கள் பத்திரிக்கை நடத்தியவர்களும் இங்கே பேசியிருக்கிறார்கள். நான் அதைப் பற்றி பொழிப்புரைசொல்ல வேண்டியதில்லை.ஆனால் நான் இங்கு வந்தகாரணத்தைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அதற் காகத்தான் நான் இங்கே வந்தேன். இங்கேவந்து ஏதாவது அரசியல் விமர்சனம்சொல்வீர்களா என்றால், அதற்கு இதுவா மேடை? அந்த அறிவு எனக்காவது இருக்க வேண் டாமா? (சிரிப்பு) இங்கே ஒரு புதிய அனுபவத்தை தமிழகம் பெற்றுக் கொண்டிருக்கிறது. இவர்கள் எல்லாம்அதற்கு முன்னோடிகளாக விளக்குவார்கள். சரித்திரம் சொல்லும்.
வெவ்வேறு கருத்து உடையவர்கள்!
இந்த  மேடையில் இருக்கும் பத்திரிக்கை ஆசிரியர்கள், அவர்கள் காட்டிய கண்ணியம், அவர்கள் செய்த கடமை, அவர்கள் காண்பித்த கட்டுப்பாடு; ஏற்கெனவே கேட்டவைதான். ஆனால்அதனைச் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள், இந்தப் பத்திரிக்கையாளர்கள்; வெவ்வேறு கருத்து உடையவர் களாக இருப்பினும்! அந்தக் கூட்டத்தில் அமரும் பாக்கியத்தைப் பெற்றே ஆகவேண்டும் என்ற ஒரு பேராசையுடன் வந்தவன் நான். இன்னொரு விஷ யத்தை இந்த மேடையில் வைப்பதில் நான் பெருமை கொள்கிறேன்; அரசியலே பேசாமல் போய் விட்டார் என வையக் கூடாது இல்லையா, அதற்காக! (சிரிப்பு)இத்தோடு முடிந்தது இந்த திராவிடம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு நான் ஒரு பேட்டியில், “ஜனகணமனவில் 'திராவிடம்' என்ற சொல் இருக்கிற வரை இது இருக்கும்" என்று சொன் னேன். (கை தட்டல்) இதற்கு அடுத்த கட்டம் செல் கிறேன்.
நாடு தழுவியது திராவிடம்!
திராவிடம் என்பது, இங்கே தமிழகம், தென் னகத்தோடு மட்டும் நின்று விட்டது என்று நினைப்ப வர்களுக்கு கொஞ்சம் Archaeology  (தொல்லியல்) பற்றியும், Anthropology (மானுடவியல்) பற்றியும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்குப் படித்துத் தெரிந்ததால் அல்ல, சொல்லக் கேட்டதால் சொல்கிறேன். நாடு தழுவியது இந்த திராவிடம்! Indus Valley Civilization-லிருந்து மெதுவாகத் தள்ளிக் கொள்ளப்பட்டு வந்து கடைசியில் ‘டிக்காக்ஷனாக’ இங்கு நிற்கிறது.
திராவிடம் என்பது PAN Indian  Movement. இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.இந்த அரங்கு மட்டுமல்ல; நாடும் நினைவில் வைத்துக் கொள்ளும். நான் சொல்வது 'ஓட்டி'-ன் எண்ணிக்கையை அல்ல; மக்களின் சக்தியை! வணக்கம்!
இவ்வாறு  கமல்ஹாசன் பேசினார்.


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...