Wednesday, November 2, 2016

அரசு வசம் வந்த பிறகும் அண்ணாமலை பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரியில் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஏன்?

தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள அறிக்கை
அரசு வசம் வந்த பிறகும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரியில் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஏன்? என்று  வினா எழுப்பி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சிதம்பரம் - அண்ணாமலைப் பல்கலைக் கழகம் என்பது எங்களின் கல்வித் தாய் வீடு! அந்தப் பல்கலைக் கழகம் இல்லை என்றால், தென்னாற்காடு மாவட்டத்தில் கல்விக் கழனி செழித்திருக்காது. தங்களின் திரண்ட செல்வத்தை கோவில் குளங்களை உண்டாக்குவதற்குத்தான் நகரத்தார் பயன்படுத்தி வந்தனர். அதில் விலக்காக அரசர் அண்ணா மலைச் செட்டியார் அவர்கள்தான் கல்விக் கண்ணைத் திறக்கும் ஓர் அரிய தொண்டில் ஈடுபட்டார் - அரசர் முத்தையா செட்டியார் அவர்கள் அதனை மேலும் வளர்த்தார்.
அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டதே!
2013 ஆம் ஆண்டில் அரசுடைமையாக்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு ரூ.200 கோடி மானியமும் வழங்கி வருகிறது.
இப்பல்கலைக் கழகத்தில் உள்ள அரசர் முத்தையா மருத்துவக் கல்லூரியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் தனியார்ப் பல்கலைக் கழகமாக இருந்தபோது எந்தத் தொகையோ அதுவேதான் தொடர்ந்து கொண்டுள்ளது.
அரசு நடத்தும் பல்கலைக் கழகமாக மாறிய பிறகு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ளபடியான கட்டணத் தைத்தானே வசூலிக்கவேண்டும். ஆனால், அங்கு நடப்பது என்ன?
அரசர் முத்தையா மருத்துவக் கல்லூரி கட்டண விவரம்
எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு ரூ.5 லட்சத்து 54 ஆயிரம்
பல் மருத்துவ மாணவர்களுக்கு ரூ.3 லட்சத்து40 ஆயிரம்
முதுநிலை டிப்ளோமாவுக்கு ரூ.8 லட்சம்
முதுநிலை மருத்துவப் படிப்புக்கு ரூ.9.8 லட்சம்
மற்ற அரசுக் கல்லூரிகளில் கட்டண விவரம்
ஆனால், தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்லூரிகளில் கீழ்க்கண்டவாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ரூ.13,600
பல் மருத்துவப் படிப்புக்கு ரூ.11,600
முதுநிலை டிப்ளோமாவுக்கு ரூ.31,125
முதுநிலை மருத்துவப் படிப்புக்கு ரூ.42,025
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின்கீழ் இயங்கும் அரசர் முத்தையா மருத்துவக் கல்லூரி கட்டணத்தையும், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்படும் கட்டணத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், எத்தனை மடங்கு அதிகமாக அரசர் முத்தையா மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படுகிறது என்பது எளிதாகவே விளங்கும்.
ஏனிந்த இரட்டை அளவுகோல்? இதனால் பாதிக்கப் படுவோர் ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தானே!
தமிழக அரசு ஆவன செய்யட்டும்
பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் இவ் வாண்டு கிராமப்புற இருபால் மாணவர்கள்கூட அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு இந்த அதிகக் கட்டணம் பெருஞ்சுமையல்லவா?
நிர்வகிப்பதில்பொருளாதாரச்சுமை இருக்குமானால், அரசு கொடுக்கும் மானியத்தை அதிகரிக்கவேண்டுமே தவிர, பெற்றோர்களைத் தண்டிக்கலாமா? அது சரியா?
தமிழ்நாடுஅரசு இந்தப்பிரச்சினையில் உடனடி யாகத்  தலையிட்டு மற்ற அரசு கல்லூரி கட்டணத்தையே அண்ணாமலைப் பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரி யிலும் வசூலிக்க ஆணை பிறப்பிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.

கி.வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்.

28.10.2016
சென்னை

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...