Tuesday, August 2, 2016

குஜராத் முதல்வர் ராஜினாமா - பின்னணி என்ன?

2014 ஆம் ஆண்டு குஜராத்தில் இருந்து நரேந்திர மோடி டில்லிசென்றதும் ஆனந்திபென் பட்டேல் குஜராத் முதல்வரானார்.

அப்போதைய மராட்டிய நாளிதழ் ஜனசத்தா ஒரு கட்டுரை எழுதியிருந்தது, அதில் செல்லரித்த மரச்சட்டத்தின் மீது பூசப்பட்ட வர்ணம் விலகியது; உண்மையில் குஜராத் ஒரு செல்லரித்த மரச்சட்டம் தான்; அதனால் தான் மோடி வெளியேறியதும் குஜராத்தின் உண்மை முகம் வெளியே வரத் துவங்கியது.
முக்கியமாக குஜராத்தில் தொடர்ந்து நடந்து வரும் தாழ்த் தப்பட்ட பழங்குடி மக்கள் மீதான வன்முறைகள், வனங்கள் அனைத்தும் எல்லாவித விதிமுறைகளையும் மீறி பெரும் முதலாளிக்கு தாரைவார்ப்பது போன்றவை ஏற்கனவே நடந்து வந்தன. ஆனால் மோடி மற்றும் அமித்ஷா என்ற சர்வாதிகாரிகளின் மிரட்டலுக்கு அனைவரும் அடங்கிப் போயிருந்தனர். ஹரன் பாண்டியா என்னும் உள்துறை அமைச்சரின் நிலை தான் நமக்கும் என்ற அடங்கி ஒடுங்கிப் போய்விட்டனர்.  மர்மமான முறையில் அவர் கொல்லப்படவில்லையா?
ஒரே நேரத்தில் அமித்ஷா மற்றும் நரேந்திர மோடி குஜராத்தை விட்டுப் போய்விட்டதால் ஆனந்திபென் பட்டே லின் கையில் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டதும், பழைய நிலை அப்போது இல்லாமல் போய்விட்டது,  ஆனந்திபென் படேலின் மகன் ஸ்வேதாங் பட்டேல் அனார் ரிடைல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் துவங்கி பல கோடிகள் ஊழல் செய்தார் என்றும் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களில் ஒருவரான ரோஷன் ஷா புகார் தெரிவித்திருந்தார்.  அந்த நிறுவனம் பதிவு செய்த அலுவலகம் முகவரி போலியானது என்று கூறிய பிறகும் இன்றுவரை அந்த புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதேபோல் இவரது மகள் அனார் படேல் குஜராத் வனத்துறைக்குச் சொந்தமான 480 ஏக்கர் நிலத்தை அரசிட மிருந்து இலவசமாக பெற்றார். இந்த நிலத்தை பொழுதுபோக்கு நிறுவனம் ஒன்றிற்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டார்.  இந்த ஊழல் விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது, இது தொடர்பாக குற்றவாளிகள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
கடந்த ஆண்டு பட்டிதார் இனத்தின் இட ஒதுக்கீடு போராட்டம் போன்றவை ஆனந்திபென் பட்டேலில் நிர்வாகத் தோல்விக்குப் பெரும் காரணமாக இருந்தது, இந்த நிலையில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த தாழ்த்தப்பட்டமக்கள் மீதான தாக்குதல் காரணமாக கடந்த சில வாரங்களாக குஜராத் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் இறந்த மாடுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் பணிகளை தொடரமறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இனிமேல் இறந்த மாடுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடமாட்டோம் என்று கூறிவிட்டனர். இதனால் குஜராத்தின் முக்கிய நகரங்களில் அரசு அலுவலங்களில் வீசப்பட்ட செத்துப் போன மாடுகளை அப்புறப்படுத்த முடியாமல்  நாற்றமெடுத்து வருகிறது. அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து மாடுகளை அகற்ற ஆட்களை அழைத்து வந்தாலும் வாகன இயக்கிகள் மற்றும் கிரேன் ஓட்டுநர்கள் ஒத்துழைப்பு அளிக்காத காரணத்தால் நிலைமை மோசமாகி வருகிறது.

இந்த நிலையில் தான் தன்னுடைய முகநூல் வழியாக பதவி விலகல் கடிதத்தை தலைமைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கிறார் ஆனந்தி பென்.  தனக்கு 75 வயது ஆகப் போவதால் தானாக முன்வந்து, அடுத்த தலைமுறைக்கு இப்பதவியை விட்டுக்கொடுப்பதாக சொல்கிறார். அடுத்த ஆண்டு குஜராத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அதற்குள் ஆனந்தி பென்னின் பதவி விலகல் ஏன் என்று கேள்வி எழுகிறது.
கணிசமான தலித் ஓட்டுகளைக்கொண்ட உத்திரப் பிரதேச தேர்தல் நெருங்கும் நேரத்தில், குஜராத் தலித்துகளின் போராட்டம் அங்கே எதிரொலிக்கலாம் என தலைமை நினைத்திருக்கலாம். அந்தப் போராட்டத்தை திசை திருப்பும் வகையில் இந்தப் பதவி விலகல் அரங்கேற்றப்பட்டிருக்கலாம். நேரம், காலத்தைப் பொறுத்துதான் ஒரு செயலுக்கான பொருளைக் கற்பிக்க வேண்டியுள்ளது.

இவரை தற்போது பஞ்சாப் மாநில ஆளுநராக அனுப்ப மத்திய அமைச்சரவைக் குழுவில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைவலி நீங்க தலைப்பாகையை மாற்றினால் போதுமா?
மோடி என்ற ஜிகினா மனிதர் குஜராத்தில் வேடிக்கைகள் பல காட்டி தாக்குப் பிடித்து நின்றார். அதைவிட்டு அவர் வெளியேறிய நிலையில், பல உண்மைகள் வெளி உலகிற்குத் தெரிய வந்துள்ளன.
கல்விக்கு 2 சதவிகிதத்திற்கும் கீழேதான் அங்கு நிதி ஒதுக்கீடு (1.78 சதவிகிதம்), குடிமக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடையாது; அதேநேரத்தில், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 1000 லிட்டர் தண்ணீர் 10 ரூபாய்க்குத் தாராளமாகத் தரப்படுகிறது.
சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும் நிதி 0.42 சதவிகிதமே! பள்ளி செல்லும் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச் சத்துக் குறைவால் பாதிக்கப்படுவோர் 47 சதவிகிதமாகும். இதுதான் பி.ஜே.பி. ஆளும் குஜராத் மாநில அரசின் நிலை. இதனை ‘குஜராத் மாடல்’ என்று சிறிதும் வெட்கமில்லாமல் மார்தட்டிச் சொல்லுகின்றனர்.
குஜராத்தில் முதலமைச்சர் விலகல் - நடக்க இருக்கும் உத்தரப்பிரதேச தேர்தலிலும் எதிர்விளைவை ஏற்படுத்தும். அடுத்த ஆண்டு குஜராத் மாநில தேர்தலின் முன்னோட்டமாகவும் இது இருக்கப் போகிறது என்பதில் அய்யமில்லை. இவை நிகழும் பட்சத்தில் மத்தியிலும் பி.ஜே.பி. ஆட்சிக்கு நெருக்கடிதான்!


.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...