Thursday, August 4, 2016

பாசிச சக்திகளை கட்டுப்படுத்தாவிட்டால், இந்திய ஜனநாயகமே அழிந்துபோகும்!

உணவுப் பற்றாக்குறை, அன்னிய செலவாணி பற்றாக்குறை நிலவும் சிக்கல் நிறைந்த தருணங்களில் இந்திய பொருளாதாரத்தின்மீது அவ்வப்போது கவனம் செலுத்தப்பட்டு வந்த நேரத்தில்,  நாட்டின் மக்களாட்சி நடைமுறைமீது மட்டும் சிறிதளவும் கவனம் செலுத்தப்பட வேயில்லை. இது மக்களாட்சி நடைமுறையின்பால் நாம் கொண்டிருக்கும் அலட்சி யத்தைக் காட்டுகிறது.
நமது சமூகத்தினுள்ளேயும், வெளியேயும் உள்ள நோக்கர்களைப் பொறுத்தவரை, நம் நாட்டின்மீது மேற் கொள்ளப்பட்ட அணுகுமுறையின் ஒவ்வொரு கோணத்திலும் இந்த அலட்சியம் மிக நன்றாகத் தெரிகிறது. மிக உயர்ந்தவை எனக் கருதப்படும் சுதந்திர சந்தைக் கட்டமைப்பு சட்டதிட்டங்களை மீறியதாக இந்தியாவை மேற்கத்திய  ஆட்சியாளர்கள் இவ்வாறு சிறுமைப்படுத்திய நேரத்தில், இந்தியாவின் உயர் தேசிய வர்க்கத்தினர் இதற்கான காரணம் மேற்கத்திய ஆதிக்கமே என்று கண்டறிந்தனர். 1947 ஆம் ஆண்டு முதல் ஏறக்குறைய எந்தவித மாற்றமும் ஏற்படாமல் இருக்கும் நமது மக்களாட்சி நடைமுறையின் தோல்விகளுடன் தொடர்புகொண்ட அதன் நிலையைக் காண மறுப்பதன்மூலம், இரு தரப்பினருமே இந்த வரலாற்று நிகழ்வின் உண்மையை அறிந்துகொள்ளத் தவறிவிடுகின்றனர். இதில் உள்ள உண்மை என்னவென்றால், நமது மக்கள் தொகையில் பெரும்பாலானோர் மிகமிகக் குறைந்த ஆற்றல்களைக் கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பதுதான்.

நாட்டு விடுதலைக்குப் பிறகும்
மக்கள் சுதந்திரமற்று இருப்பது

தாங்கள் மதித்து வாழ விரும்பும் ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு ஒவ்வொரு தனிப்பட்டவரையும் தகுதியுடையவராக ஆக்குவதே இந்த ஆற்றல்கள்தான். இதுதான் உண்மையான சுதந்திரம் என்றும், முன்னேற்றத்திற்கான நமது அனைத்து முயற்சிகளின் நோக்கமே அதுவாகத்தான் இருக்கவேண்டும் நோபல் பரிசு பெற்ற பொருளியலாளர் அமர்த்தியா சென் கூறுகிறார். முன்னேற்றம் என்பது குறுகிய பொருளாதார அல்லது அரசியல் விளக்கங்களுக்கும் மேலானது என்பதை அடிப்படையாகக் கொண்டது இக்கருத்து. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதியன்று, தனது புகழ் பெற்ற சுதந்திர தின உரையில் ஜவகர்லால் நேரு பேசியிருந்த போதிலும், நமது மக்களில் பெரும்பாலானோர், தாங்கள் விரும்பி வாழ நினைக்கும் வாழ்க்கையை வாழ்வதற்கான சுதந்திரமற்றவர்களாக இருக்கும் வரை ஆட்சியையோ அல்லது சந்தையையோ நாம் பெற்றிருக்கிறோம் என்பதோ, நமது அரசமைப்புச் சட்டத்தில் சமதர்மம்,  மதச்சார்பின்மை என்ற சொற்களை நாம் சேர்த்திருக்கிறோமா என்பதோ, அதனுடன் எந்த விதத்திலும் தொடர்புடையது அல்ல.

வளம் நிறைந்த, ஜனநாயக நடை முறையிலான, முன்னேற்றமடைந்த ஒரு நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கும், ஒவ்வொரு குடிமகனுக்கும், குடிமகளுக்கும் நியாயத்தையும், முழுமையான வாழ்க் கையையும் தருவதை உறுதிப்படுத்திக் கொள்வதற்குமான, சமூக, பொருளாதார, அரசியல் நிறுவனங்களையும் உரு வாக்குவதற்குமான ஒரு நல் வாய்ப்பாகவே இந்திய சுதந்திரத்தை நேரு பார்த்தார்.

சட்டப் பேரறிவும், நிதர்சனமான செயல்பாட்டு மனப்பக்குவமும் கொண்ட பி.ஆர். அம்பேத்கர், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையில், ரத்தம் ஏதும் சிந்தாமல், குறிப்பிடத்தக்க ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு வழிதான் மக்களாட்சி நடைமுறை என்று விளக்கம் அளித்துள்ளார். இத்தகைய உயர்ந்த நோக்கம் கொண்ட செயல்திட்டங்களும், அவற்றிற்காக அவர்கள் ஆற்றிய கடுமையான உழைப்பும், இந்திய அரசியல் பிரிவினரின் நடவடிக்கைகளினாலும், அவற்றின் அறிவுஜீவிகளின் பரப்பு ரையாலும், விழலுக்கு இறைத்த நீர்போன்று வீணாகிப் போயின.

சுதந்திர இந்தியாவை உருவாக்கப் பாடுபட்ட நமது தலைவர்கள் நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றி எத்தகைய கனவைக் கொண்டிருந்தபோதிலும்,  இந்திய ஜனநாயகம் அவர்கள் எதிர்பார்த்தபடி செயல் படத் தவறிவிட்டது. சொல்லப்போனால், அதற்கு மாறாக மாபெரும் கேட்டினையே அது இழைத்துள்ளது என்றும் கூட கூறலாம். கடந்த ஓராண்டு காலத்தில் பொழுதை வீணே கழிக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளதாகவே தோன்றுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக அண்மையில் குஜராத் மாநிலத்தில், பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, நான்கு தலித் இளைஞர்களை மிகக் கொடூரமான முறையில் காவல்துறையினர் தாக்கிய நிகழ்வைக் கூறலாம். மறுநாள் அது பற்றிய குற்றச்சாட்டுகளும், மறுப்புகளும் நாடாளுமன்றத்தில் எழுந்தன என்று தெரிய வருகிறபோதும், எந்தவிதமான பாதிப்பை அது ஏற்படுத்தும் என்பதோ, நாகரிக சமூகம் இதனை எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதோ இன்னமும் தெளிவாகத் தெரியாததாகவே உள்ளது. இனத்தின் அடிப்படையில் இந்தியர்கள் மேற்கு நாடுகளில் அவமானப்படுத்தப்படும் செய்திகள் வெளியாகும்போது, இந்திய மத்திய பிரிவு மக்கள் கண்டனம் தெரி விப்பதில் காட்டும் வேகத்தை நமது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சாதார ணமாகக் காணலாம்.
மகாத்மா காந்தி ஒரு கருப்பர் என்பதால் தென்னாப்பிரிக்க ரயிலின் முதல் வகுப்பு பயணப் பெட்டியில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்ட ரயில் நிலையம்வரை பிரதமர் நரேந்திர மோடி ரயில் பயணம் மேற்கொண்ட நாடகத்தை எவரும் பார்க்காமல் இருந்திருக்க முடியாது. இவ்வாறு இழிவுபடுத்தப்படும் நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள் ஒரு நூறாண்டு காலத்திற்குப் பிறகு இந்தியாவில் இருந்து வெளிவந்துள்ளன. குஜராத்தில் தாக்கப்பட்ட தலித் இளைஞர்கள் இறந்து போன பசுவின் தோலைத்தான் உரித்துக் கொண்டிருந்தனர் என்று பரவலாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் தொழிலைத் தவிர வேறு எந்தத் தொழிலையும் செய்யக்கூடாது என்று இந்திய சமூகம் அவர்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. அந்தத் தொழிலைச் செய்ததன் மூலம் அவர்களது கவுரவம் மட்டுமே பாதிக்கப்படவில்லை; அவர்களது வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு நாகரிக சமூகத்திலும் இக் குற்றத்தை இழைத்தவர்களை சட்டத்தின் நீண்ட கரங்கள் பிடித்து தண்டிப்பது மட்டுமன்றி, பொதுமக்கள் காண அவமானப்படுத்தப்பட்டுமிருப்பார்கள்.

தலித்துகளுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் பல இடங்களில் குஜராத்தும் ஒன்று. அத்தகைய தாக்குதல் நடத்தப்படுவது இந்தியா முழுவதிலும் பெரிய அளவில் பரவி இருக்கிறது என்பது மட்டுமன்றி,  தென்னிந்தியாவிலும் இல்லாமல் போய்விடவில்லை.  முக்கியமாக தமிழ் நாட்டில் பெரிய அளவில் அது பரவியுள்ளது.  தலித்துகள் மீதான தாக்குதல்கள் அண்மைக் காலத்தில் தொடங்கியது அல்ல என்பதும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். அவர்களை ஒடுக்குவது என்பது ஒரு சீரான நடைமுறையில் இந்தியா முழுவதும் ஆழமாக வேர் கொண்டுள்ளது. காங்கிரஸ் அல்லாத கட்சித் தலைவர்கள் முதலமைச்சர்களாக இருந்த தமிழ்நாடு, பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களிலும்கூட சில நேரங்களில் தலித்துகளின் மீதான வன்முறைத் தாக்குதல்கள் நடந்துள்ளன. தாங்கள், ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது இந்த மத்திய ஜாதிக் கட்சியினர், ஜாதி அமைப்பின் மேல்நிலையில் உள்ள ஜாதியினரை நோக்கி தங்களது வசைமாரிப் பேச்சுகளை திருப்பி விட்டுவிட்டு,  அடி மட்டத்தில் இருந்த ஜாதியினரை அடக்கி ஒடுக்கி வைத்திருந்தனர்.

சமதர்மம் என்னும்
எட்ட இயலாத கனவு

அப்படியானால் இப்போது நம்மால் என்ன செய்யமுடியும்? ஆட்சி அதிகார எல்லைக்கு வெளியே இருப்பவர்கள் மேற்கொள்ள வேண்டிய வேலை இந்திய ஜனநாயக நடைமுறையை மாற்றியமைப்பதுதான். வன்முறைத் தாக்குதல்களுக்கு உள்ளாகும் வாய்ப்புள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்திக் கொள்ளும் அதே நேரத்தில், ஒட்டுமொத்த மனித இனத்தின் முன்னேற்றத்தை நோக்கியே அவர்களது இலக்கு இப்போது மாற்றியமைத்துக் கொள்ளப்படவேண்டும். ஒரு பலமான பொருளாதார நிலைக்கு நாடு வளர்ச்சி அடைவதற்கு இது எந்த விதத்திலும் தடையாகவோ, இடையூறாகவோ இருக்கத் தேவையில்லை. உண்மையில், வேகமான சந்தை உள்ளிட்ட பலமான ஒரு பொருளாதர நிலை, சுதந்திரங்களை விரிவுபடுத்தும் பணியில் மேலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தச்  செய்யும் ஒரு கூறே ஆகும். சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் இந்தியாவில் உள்ள இடதுசாரிகள், வலதுசாரிகள் இருவரிடமிருந்தும் வரும் சந்தைப் பொருளாதாரத்தின் மீதான எதிர்ப்பு, இக்கருத்தை முழுமையாகக் கவனிக்கத் தவறிவிடுகிறது. ஒரு சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களை முன் னேற்றுவதற்கும், தனியார் துறையைக் கட்டுப் படுத்துவதற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. அவர்களது ஆற்றல் களை வளர்த்துக் கொள்ளச் செய்யும் பொதுமக்களின் நேரடி செயல்பாட்டினால் மட்டுமே அவர்கள் முன்னேற்றம் பெறமுடியும்.

உண்மையில், சமதர்மத்தை உண்மை யாக ஏற்றுக் கொள்வது இங்கு உதவி செய்திருக்க வேண்டும். ஒவ்வொருவரும் அவரவரது திறமைக்கு ஏற்ற உழைப்பை அளிக்க வேண்டும்;  அவரவரது தேவைக்கு ஏற்றபடி ஒவ்வொருவருக்கும் வசதிகள் அளிக்கப்பட வேண்டும் என்று பொதுவுடைமைக் கோட்பாட்டிற்கு காரல் மார்க்ஸ் விளக்கம் அளித்துள்ளார். அதற்கு மாறாக, முப்பதாண்டு காலமாக இந்தியாவின் அதிகாரபூர்வமான கோட்பாடாக விளங்கிய சமதர்மம்,  அதன் பலன்களும், வரலாற்று ரீதியில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் மீது  விளைந்த அதன் பாதிப்புகளும், விளைவுகளும் எத்தகையனவாக இருந்தாலும் சரி, பொருள் உற்பத்தியில் பொதுத் துறை நிறுவனங்களை விரிவுபடுத்திக் கொண்டே செல்வது என்ற பொறியில் சிக்கிக் கொண்டது.

சமூக அரங்கில் தலையிடாமல், பொருளாதார விவகாரங்களில் மட்டுமே, தான் தலையிடுவதாக தன்னைப் பற்றி அரசு பெருமை பேசிக்கொள்கிறது. தனிமனித சுதந்திரத்தை அதிகரிக்கச் செய்யத் தேவையான நிறுவனங்களை உருவாக்கும் பணியைப்பற்றி நேரு கொண்டிருந்த நோக்கம் நிறைவேறவில்லை. வரலாற்று ரீதியாக ஒதுக்கப்பட்டவர்களும், ஒடுக் கப்பட்டவர்களும் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஏற்பட்ட நிலை, கொடுங்கோலர்களை முன்னிலைப்படுத்துவதற்கு ஒப்பானதாகும்.
பொதுக் கொள்கையை மறு சீரமைப்பு செய்தல்

வாங்கும் சக்தியில் இந்தியா, உலகில் மூன்றாம் இடத்தில் இருந்த போதிலும், குறைந்த அளவிலான கல்வி, சுகாதார வசதிகளைப் பெற்றிருக்கும் மக்களை பெரும் எண்ணிக்கையில்  கொண்டிருக்கும் ஒரு நாடாக இந்தியா விளங்குவது ஒரு முன்னேற்றப் பேரழிவாகும். நாடு முழுவதிலும் பயணம் செய்ய இயன்ற ஒருவரால், எந்த அளவுக்கு மக்களுக்கு வசதிகள் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொண்டு, இன்று கடைப்பிடிக்கப்படும் பொதுக்கொள்கை எந்த அளவுக்கு இக்குறைபாடுகளைத் தீர்த்து வைப்பதாக உள்ளது என்பதை மதிப்பிட இயலும். பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரில் இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பின் மீது கவனம் செலுத்துவதிலேயே ஒரு கால் நூற்றாண்டு காலம் செலவிடப் பட்டுள்ள நிலையில்,  இத்தகைய மனிதாபிமான மறுப்புகளுக்கு எதிரான ஒரு போராட்டத்தை இன்னுமொரு 25 ஆண்டுகள் மேற்கொள்வது பயனுள்ளதாக இருக்கும். இந்தியப் பெண்களும், தலித்துகளும்தான் மிகுந்த அளவில் வாய்ப்புகளும் வசதிகளும் மறுக்கப்பட்டவர்கள் என்பதால்,  அவர்களது ஆற்றல்களை மேம்படுத்துவதையே முக்கியமான கடமையாகக் கொண்டு, அதற்குத் தேவையான நிதி ஆதாரங்கள் செலவிடப்படவும் வேண்டும்.

ஒரு ஜனநாயகம் முழுமையானதாக ஆகவேண்டுமானால், எவ்வளவுதான் தகுதி பெற்றிருந்தாலும் தனிப்பட்டவர்களின் மீது கவனம் செலுத்துவதையும் கடந்து,  ஒரு மக்களாட்சியின் உறுப்பினராக ஒருவர் மற்றொருவருடன் கலந்துறவாடுவது இன்றியமையாததாகும். இல்லாவிட்டால், நாம், சமமானவர்களாக இருந்தாலும், தனிமைப்படுத்தப்பட்டவர்களாக ஆகிவிடுவோம். அதில் பொதுநலன் காக்கப்படுவது என்பதே முக்கியமானதாக ஆகிவிடுகிறது. பங்கெடுத்துக் கொள்வதில் ஒரு சமத்துவம் நிலவுவதன் அடிப்படையில் இந்தியர்கள் சந்தித்துக் கொள்வதற்குத் தேவையான இடத்தை நமது பொதுக்கொள்கை உருவாக்கித் தரவேண்டும். பள்ளிகள், மருத்துவமனைகள், பூங்காக்கள், இடுகாடுகள் என்ற அளவில் பொது மக்களுக்குத் தேவையான சேவைகள், தேவைகளை நிறைவேற்றுவது, பிறந்ததில் இருந்து இறப்பது வரை போராடிக்கொண்டிருக்கும் அந்த தனிப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பதற்கான வழிகளில் ஒன்றாகும். இவ்வாறு பொதுக் களத்தில் தொடர்ந்து உறவாடுவது நமது பொதுவான மனிதத் தன்மையை நம்மை உணரச் செய்து, நமக்கென தனித்த அடையாளம் ஏதேனும் மிச்சமிருக்கிறதா என்பதையும், உண்மையில் அது எது என்பதையும் உணரச்  செய்கிறது.

அனைவரும் பங்கிட்டுக் கொள்ளவேண்டும்

பொதுமக்கள் சுதந்திரமாகவும், அமைதியாகவும் கலந்துறவாடுவதற்கான இடத்தை இந்தியப் பொதுக்கொள்கையில் உருவாக்குவதற்கான முயற்சிகள் மிகக் குறைந்த அளவிலேயே மேற்கொள்ளப் பட்டுள்ளன. பல நாடுகள் அத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. எடுத்துக் காட்டாக, முதலாளித்துவ சிங்கப்பூர் நாட்டில், பொதுமக்களுக்கு வீட்டுவசதி செய்து தரும் திட்டத்தில்,  சீனர்கள், இந்தியர்கள், மலாய் இனத்தவர்கள் அனைவரும் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் என்ற விதிகள் இருப்பதை சுட்டிக் காட்டலாம்.
தீவிரவாதத்திற்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி உலக அரங்கில் அடிக்கடி பேசியுள்ளார். அவ்வாறு அவர் பேசியதும் சரியானதுதான். ஆனால், இப்போது குஜராத்தில் தலித்துகள் தாக்கப்பட்டது,  நாடு முழுவதிலும் பெண்கள் மீது பரவலாக பாலியல் வன்கொடுமை தாக்குதல்கள் நடந்தேறுவது, உத்தரப்பிரதேச மாநிலத்தில்  முஸ்லிம்களுக்கு விடப்படும் அச்சுறுத்தல்கள் ஆகிய நிகழ்ச்சிகள் எல்லாம் தீவிரவாதம் நம்மிடையேதான் இருக்கிறது என்பதை நம் நினைவுக்குக் கொண்டு வருகின்றன. இவைகளில் சில, அவர் டில்லியில் பதவிக்கு வருவதற்கு முன் நடந்தவை என்றாலும், அவர் பிரதமர் பதவிக்கு வந்த காலத்திலிருந்தே, தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் சிறிதுமின்றி செயல்பட பாசிச சக்திகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுவதை நம்புவதற்குப் போதுமான காரணங்கள் உள்ளன.

இத்தகைய பாசிச சக்திகள் கட்டுப்படுத்தப்படாமல் போனால், இந்திய ஜனநாயகமே தோல்வி அடைந்து வருவது போலத் தோன்றவும் கூடும்.  மற்றவர்களின் பாதுகாப்புக்கு நம்மால் உறுதி அளிக்க முடியவில்லை என்றால், நமது சொந்த பாதுகாப்புக்கும் நம்மால் உறுதி அளிக்க முடியாது என்று பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் கூறியிருக்கிறார். தொடர்ந்த அடக்குமுறைகளினால் சோர்வடைந்து போன தலித்துகள் ஒன்று திரண்டு எழுச்சி பெற்றுவிட்டனர். நமது பொதுவான மனிதத் தன்மையையாவது அவர்கள் அங்கீகரித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் அவர்கள் இறந்துபோன கால் நடைகளைக் கொண்டு வந்துதான் குவித்தனர்; குடிநீரை அவர்கள் நச்சுப்படுத்தவில்லை.

நன்றி: ‘தி இந்து’, 27.07.2016

தமிழில்:  த.க.பாலகிருட்டிணன்


.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...