Thursday, July 14, 2016

‘‘பகுஜன் - சர்வ ஜன் ஹித்தே, சர்வஜன் சுகே!’’

 ஊசிமிளகாய்
புத்த மதம் நம் நாட்டை விட்டு வெளியேற்றப் பட்டதற்கு முக்கிய காரணம், ‘‘எதிர்த்து அழிக்க முடியாதவைகளை அணைத்தோ, ஊடுருவியோ அழித்துவிடு’’ என்ற பார்ப்பன தந்திர முறைகள்தான் என்பது வரலாற்று உண்மை!

அண்ணல் அம்பேத்கரின் தத்துவ வாரிசு போல் பணியாற்றி ஓய்வின்றி உழைத்து, சமூகநீதிப் புரட்சியாளர்கள் இதோ என்று ஜோதிபாபூலே, சாகு மகராஜ், நாராயண குரு, தந்தை பெரியார், அம்பேத்கர் ஆகியவர்களை சரியாக அடையாளம் காட்டி, இந்தியா வின் ஒவ்வொரு மாநிலத்திலும் பயணம் செய்து, தவறாது தந்தை பெரியார், அம்பேத்கர் படங்களை பொதுக்கூட்ட, பிரச்சார மேடைகளில் வைத்தும், கடும் உழைப்பாக ‘‘பகுஜன் சமாஜ்’’ என்ற அரசியல் கட்சியை - தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், இஸ்லாம், கிறிஸ்தவர் போன்ற பாதிக்கப்பட்ட சிறுபான் மையோருக்கென உருவாக்கினார் கன்ஷிராம் அவர்கள்!

அக்கட்சி உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்தது; அரசியலில்கூட அவர் எப்படி யாரைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அவர்களை (கட்சி ரீதியாக)ப் பயன்படுத்தி வெற்றியும் பெற்றார்.

லக்னோவில் ‘பெரியார் மேளா’ நடத்தி பெரும் அதிர்ச்சியை பார்ப்பனர்களுக்குத் தந்தார்! செல்வி மாயாவதி அவர்களை தலைவராக உருவாக்கத் தக்க பயிற்சியும் தந்தார். மாயாவதியும் ஆட்சியைப் பிடித்தார். அதன் பிறகு...?!

அதன் பிறகுதான் ஆரிய ஊடுருவல் நடந்து, அதன் தனித்தன்மையான அடையாளமான ‘பகுஜன்’ என்பது மறைந்து, சர்வஜன் என்ற நிலைக்கு ஆளாகி, பார்ப்பனீயத்திற்குப் பலியாகும் பரிதாப நிலை - தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கத்திற்கு ஏற்பட்ட விபத்து போலவே அங்கும் ஏற்பட்டுள்ளது!

சத்தீஷ் சந்திரமிஸ்ரா என்ற வக்கீல் பார்ப்பனர், அதன் பொதுச்செயலாளராக ஆக்கப்பட்டு, அவர் கொள்கை விளக்கப் பரப்புரை - பேட்டிகள் தரும் அளவுக்கு அது கீழிறக்கத்திற்குச் சென்று கொண்டுள்ளது அக்கட்சி. அக்கட்சியின்மீது மிகுந்த நட்புறவும், பற்றும் கொண்ட கன்ஷிராம் தோழர்களுக்கு சொல்லொணாத மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது!
அக்கட்சியை விட்டு, நீண்ட காலம் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட தலைவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் எல்லாம் வெளியேறிடும் நிலையில், மிஸ்ராக்கள்தான் இனி எல்லாம் என்பது போன்ற ஒரு விரும்பத்தகாத நிலை - விபத்து - மாயாவதி அம்மையாருக்குத் தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தோ, புரியாமலோ ஏற்பட்டுள்ளது!

அதன் ‘கெமிஸ்டிரியே’ மாறியிருக்கிறது. ‘சர்வஜன் ஹித்தே - சர்வஜன் சுகே!’ ‘எல்லோரது நலம்; எல்லோரது மகிழ்ச்சி’ என்று புதுக்குரல் கேட்கத் தொடங்கியுள்ளது என்கிறார் மிஸ்ரா!
2007 ஆம் ஆண்டிலேயே, செல்வி மாயாவதி பார்ப்பனர்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும் ஒரு அணியில் கொண்டு வந்தார் என்று பெருமிதத்துடன் இவர் கூறுகிறார்.
அப்போது வெற்றி பெற்ற முதலமைச்சர் செல்வி மாயாவதி அமர்ந்துள்ளார்; இந்த சத்தீஷ் சந்திர மிஸ்ரா என்ற பார்ப்பனர் பக்கத்தில் நின்றார்; வந்த அத்தனை பேரும் மிஸ்ராவின் கால்களைத் தொட்டனர்; விழுந்து கும்பிட்டனர்; ஆனால், முதலமைச்சர் மாயாவதியைக் கண்டு கொள்ளவில்லை!  காரணம் வெளிப்படை!

இனி அக்கட்சியும் ‘சர்வஜன்’ என்றால், ‘பார்ப்பனஜன்’ என்றே உள் பொருள். ஆனால், கட்சியின் பெயரோ இன்னும் பகுஜன்தான் (BSP) என்பது முரண்பாடே!
பதவி படுத்தும்பாடு, ‘கொள்கை காற்றில், மனதில் கோட்டை’ என்றால், இந்நிலைதான்!

வரலாற்றின் பாடங்களைக்கூட கற்காவிட்டால், உருப்படுவது எப்படி?

அந்தோ, கன்ஷிராமின் கொள்கைக் கருவூலம் இப்படியா கொள்ளைப் போவது?
வேதனை, வேதனை, வெட்கமும்கூட!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...