Friday, June 17, 2016

முதல் அமைச்சரின் கோரிக்கைகள்!

தமிழ்நாடு மாநில முதல் அமைச்சர், இந்தியப் பிரதமரைச் சந்தித்து 29 கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். மேனாள் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் சொன்னதைப் போல இது போன்ற கோரிக்கை மனுவை பிரதமரிடம் தமிழக முதல் அமைச்சர் நேரில் சென்று அளித்ததுண்டு. அது போன்ற சடங்காச்சாரமான நிகழ்வுதான் இது என்ற கருத்து அலட்சியப்படுத்தப்படக் கூடியதல்ல.

இதற்கு முன் அவ்வாறு அளிக்கப்பட்ட மனுவின் மீது பிரதமர் எடுத்த நடவடிக்கைகள் என்ன? சாதித்துக் கொடுத்த திட்டங்கள் என்னென்ன? ஏற்கெனவே பலமுறை வைக்கப்பட்ட கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்தானே உள்ளன என்று எழுப்பப்படும் வினாக்களுக்கு அரசியல் பார்வை என்று கூறி அடக்கிவிடவோ அலட்சியப்படுத்தவோ முடியாது - அப்படி செய்யவும் கூடாது.

முதல் அமைச்சரின் கோரிக்கைகள் இதற்கு முன்பும் பல தடவை பிரதமரின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டதுண்டு; ஒரே ஒரு வித்தியாசம் இப்பொழுது நேரில் சென்று மனு கொடுத்துள்ளார்.

மனுவில் கூறப்பட்டுள்ள பல பிரச்சினைகள் கடிதம் மூலம் பிரதமருக்கு முதல் அமைச்சரால் தெரியப்படுத்தப்பட்டதுண்டு.

அவற்றின்மீது மோடி தலைமையிலான அரசு இதுவரை ஆக்க ரீதியாக எடுத்த நடவடிக்கைகள் என்ன? நிறைவேற்றிக் கொடுத்த திட்டங்கள் என்னவென்று விரல் விட்டுக் கூற முடியுமா?
எடுத்துக் காட்டாக காவிரி நதி நீர்ப் பிரச்சினையை எடுத்துக் கொள்ளலாம். காவிரி நீர் மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்கு முறை குழுவையும் உடனே அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது முதல் அமைச்சரின் கோரிக்கைகளுள் ஒன்றாகும்.

இப்படி ஒரு கோரிக்கையை வைக்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட வேண்டும்? இந்தக் கேள்விக்குக் கிடைக்கும் விடை என்பது - நம் நாட்டில் நீதித்துறை வழங்கும் தீர்ப்புக்கு என்ன மரியாதை? நிருவாகத்துறை எந்த அளவு முறையாக நடந்து கொள்கிறது? என்ற கேள்விதான் அந்தக் கேள்விக்கான விடை!

காவிரி நதி நடுவர் மன்றம் 2007ஆம் ஆண்டில் அளித்த இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டது. 2013 பிப்ரவரி 19ஆம் நாள் மத்திய அரசிதழில் இத்தீர்ப்பு வெளியிடவும் பட்டு விட்டது.

பல ஆண்டுகள் ஓடி மறைந்து விட்டன; மத்தியில் மோடி  ஆட்சிக்கு வந்தும் இரண்டாண்டுகள் கரைந்து விட்டன. இன்னும் நடுவர் மன்ற தீர்ப்பை ஏன் செயல்படுத்தவில்லை? ஒரு முதல் அமைச்சர் சொல்லித்தான் பிரதமருக்கு இது தெரிய வேண்டுமா? பல முறை நினைவூட்டப்பட்ட பிறகும் நடுவர் மன்ற ஆணை நிறைவேற்றப்படாதது ஏன்?

காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது என்றும் அதுவரை கடந்த அரசு அமைத்த தற்காலிகக் குழுவே நீடிக்கும் என்று மத்திய பிஜேபி அரசு அறிக்கை வெளியிட்டதுண்டே! (18.6.2014).

ஏன் இதுவரை செயல்படுத்தப்படவில்லை என்றல்லவா முதல் அமைச்சர் வலியுறுத்தி இருக்க வேண்டும்?  அப்படி கேட்பது தானே செல்வி

ஜெ. ஜெயலலிதா அவர்களின் பாணி? குறிப்பிட்ட நாட்கள் அவகாசம் கொடுத்து அதற்குள்ளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லையானால் தமிழ்நாடு முதல் அமைச்சர் போர்ப் பரணி பாடுவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அதுபோலவே மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் இன்னொரு கோரிக்கை.

இந்தக் கோரிக்கையை நினைத்தால் அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு இது கேலிக்குரியதாகி விட்டது. கேட்டுக் கேட்டுப் புளித்தும் போய் விட்டது.
இதையெல்லாம் பார்க்கும் பொழுதுதான் முதல் அமைச்சர், பிரதமரிடம் அளித்த மனு என்பது வெறும் சம்பிரதாயமானது தானோ என்று அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் மத்தியிலும் தோன்றுகிறது.

மருத்துவ பொது நுழைவுத் தேர்வில் தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு வேண்டும் என்றும் முதல் அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.
இது அகில இந்தியாவுக்கு தேவையான கோரிக்கையே !அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிராமப்புறத்து ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் நுழைவுத் தேர்வால் கண்டிப்பாக பாதிக்கப்படவே செய்வார்கள்.
பிற மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைந்த அளவே உள்ளதால் இந்த அகில இந்திய தேர்வு மூலம் அந்த மாநிலங்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்ற சுயநலத்தால் பிற மாநில அரசுகள் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். முதல் அமைச்சர் பிரதமரிடம் அளித்த கோரிக்கைகள் செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டுக்கு நல்லதுதான். ஆனால் அது நடக்க வேண்டுமே!


.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...