Thursday, October 1, 2015

சுரண்டப்படும் தாழ்த்தப்பட்டவர்கள்


தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை மானியக் கோரிக்கையின்மீது நடைபெற்ற விவாதத்தில் சட்டப் பேரவை உறுப்பினர் தோழர் அண்ணாதுரை (சி.பி.எம்.) சட்டப் பேரவையில் இத்துறை சம்பந்தப்பட்ட பல குறைபாடுகளையும், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் கூறியுள்ளார். இடை இடையே சம்பந் தப்பட்ட அமைச்சர்கள் குறுக்கிட்டு சில தகவல்களைச் சொன்னார்கள் என்றாலும் சட்டமன்ற உறுப்பினர் எடுத்துக் கூறியவற்றுள் பல உண்மைகள், குற்றச்சாற்றுகள் துல்லியமானவை என்பதில் அய்யமில்லை.
தமிழ்நாட்டில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின ருக்கான 27 ஆயிரம் காலிப்  பணி இடங்களை ஆறு மாதத்திற்குள் நிரப்ப வேண்டும் என்று 2014 ஜூலை மாதம் சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. ஓராண்டு ஆன பிறகும் நீதிமன்றத்தின் ஆணை நிறைவேற்றப்பட வில்லை என்று சட்டப் பேரவை உறுப்பினர் கூறினார். துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் இதற்காகக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழு 2.7.2015 அன்று கூடியது. பல்வேறு துறைத் தலைவர்களைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. துறைவாரியாக உள்ள பணி இடங்கள் கோரப்பட்டுள்ளன. அதன் பின்னர் இந்தப் பணி இடங்கள் நிரப்பப்படும் என்று மேலெழுந்த வாரியாகப் பதில் சொல்லி இருக்கிறார்.
27,000 பணி இடங்கள் என்பவை சாதாரணமானதல்ல; தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களின் சம்பந்தப் பட்ட மிக முக்கியமான பிரச்சினை இது. இவர்களைப் பொறுத்தவரை முதல் தலைமுறையாகப் படித்து விட்டு வந்தவர்கள்; இவர்களின் பெற்றோர்கள் இன்னும் கூலி வேலை செய்யக் கூடியவர்களாகத்தானிருப்பார்கள்.
முதல் தலைமுறையில் படித்து விட்டு வந்தவர்களுக்கு இவ்வளவுப் பெரிய எண்ணிக்கையில் வேலை வாய்ப்பு களிருந்தும், அதுவும் உயர்நீதிமன்றம் ஆணை பிறப் பித்தும் இப்பொழுதுதான் குழு போடப்பட்டுள்ளது என்று அமைச்சர் சொல்லுவது ஒரு பொறுப்பான பதிலாகக் கருதப்பட முடியாது.
கல்வியும், வேலை வாய்ப்பும்தான் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் சமூக மரியாதையை அவர்களுக்குத் தேடித் தரும் - ஒடுக்கப்பட்டவர்களாகக் கிடந்த மக்கள் மத்தியில் சுயமரியாதை உணர்வு பீறிடும் - பொருளாதாரத்திலும் அடுத்த அடி எடுத்து வைக்கும் கம்பீரமும் கிடைக்கும்.
27,000 காலி இடங்கள் என்றால் 27,000 குடும்பங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை - ஒரு பெரிய எழுச்சியை தாழ்த் தப்பட்ட மக்கள் மத்தியில் உண்டாக்கக் கூடிய பிரச்சினை. இதில் இவ்வளவு அலட்சியமாக தமிழ்நாடு அரசு இருப்பது கண்டிக்கத் தக்கதாகும்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கான பஞ்சமி நிலங்கள் பற்றிய பிரச்சினையையும் சட்டப் பேரவை உறுப்பினர் திரு. அண்ணாதுரை வலியுறுத்திக் கூறியுள்ளார். 2009ஆம் ஆண்டு வருவாய்த்துறைக் கணக்குப்படி 1,10,794 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலங்கள் குறித்த நிலவரங்களை சார்பதிவாளர் அலுவலகத் திற்கு அனுப்பி வைத்து வில்லங்கங்கள் சரி பார்க்க வேண்டும். 
பஞ்சமி நிலங்கள் மீட்புக் குழுவின் தலைவர் விநாயகம் 12.8.2012 அன்று தொடர்ந்த வழக்கின் அடிப் படையில் தவறான நில மாற்றத்தை ரத்து செய்யவும், மீண்டும் உண்மையான உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. ஆனால் இதுவரை அது நிறைவேற்றப்பட வில்லை. தானாகவும் செய்வதில்லை, உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்கூட செயல்படுவதில்லை என்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் எங்கு சென்று பரிகாரம் தேடுவது?
ஏதோ ஒரு காலத்தில் ஆதிதிராவிடர் தோழர்கள் படிப்பறிவு அற்றவர்களாக கூலிகளாக - அடிப்படைத் தேவையும், உரிமைகளும் பறிக்கப்பட்டவர்களாக இருந்தார்கள் என்றால், திராவிடர் இயக்கம் தோன்றி விழிப்புணர்வூட்டப்பட்ட இந்தக் காலத்தில்கூட சட்டங்கள் இருந்தும், தீர்ப்புகள் இருந்தும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடிவு கிடைக்கவில்லை என்பது துயரமானது - கண்டனத்துக்குரியது!
இதில் இன்னொரு மிகப் பெரிய சுரண்டல் நடந்து வருகிறது. தாழ்த்தப்பட்டோருக்கென்று ஒதுக்கும் நிதியைக் கூட மாநில அரசுகள் அவர்களுக்கு பயன்படுத்துவ தில்லை - அந்நிதியின் பெரும் அளவுத் தொகை வேறு துறைகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது என்பது எவ்வளவுப் பெரிய ஏமாற்று வேலை?
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று ஒதுக்கப் படும் 18 சதவீத ஒதுக்கீட்டில் 2 சதவிகிதம் மட்டுமே அவர் களுக்குச் செலவு செய்யப்படுகிறது என்ற பேரிடித் தகவலை தாழ்த்தப்பட்டோருக்கான தேசீய ஆணையம் கூறியுள்ளது.
தேசீய ஆணையம் கூறியுள்ள இன்னொரு தகவலும் மிக முக்கியமானது. தேசிய அளவில் தாழ்த்தப்பட்டோ ருக்கு எதிரான வன்கொடுமைகள் அதிக அளவில் நடக்கும் அய்ந்து மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். வன் கொடுமை தொடர்பான புகார்களின் அடிப்படையில் உட னடியாக வழக்குகள் தமிழ்நாட்டில் பதியப்படுவதில்லை; நீதிமன்றத் தலையீட்டுக்குப் பிறகே தமிழ்நாடு அரசு வழக்குகளைப் பதிவு செய்கிறது. தமிழ்நாட்டில் 70 சதவீத வழக்குகள் ஆதாரமில்லை என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்றால் - எந்த லட்சணத்தில் தமிழ்நாடு அரசின் துறைகள் செயல்படுகின்றன என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். தாழ்த்தப்பட்டோர் தொடர்பான பிரச்சினைகளைக் கண்காணிக்க மாநில அளவில் முதல் அமைச்சர் தலைமையில் கண்காணிப்புக் குழுக்கள் இருக்கத்தான் செய்கின்றன. இக்கூட்டம் ஆண்டுக்கு இரு முறை கூட்டப்பட வேண்டும். ஆனால் 2013 ஜூன் 25க்குப் பிறகு ஒருமுறைகூட தமிழ்நாட்டில் கூட்டப்படவில்லை.
தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகள் மட்டும் வேண்டும்; ஆனால், அவர்களுக்குச் சட்டப்படி உள்ள உரிமைகளும், திட்டங்களும் புறக்கணிக்கப்படுகின்றன என்பது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றே!
என்ன கொடுமை என்றால், தாழ்த்தப்பட்டோர்மீதான இத்தகைய சுரண்டல்கள்கூட வெளிச்சத்துக்கு வராதது தான்!
தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்! அதன்மூலம் தான் இந்தச் சுரண்டலை முறியடிக்க முடியும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...