Saturday, June 27, 2015

தந்தை பெரியாருக்குப் பிறகு - அறக்கட்டளைகளைக் காப்பாற்ற வீரமணியால்தான் முடியும்:

தந்தை பெரியாருக்குப் பிறகு - அறக்கட்டளைகளைக் காப்பாற்ற வீரமணியால்தான் முடியும்:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியால் பாதுகாக்கப்பட்ட  அன்னை மணியம்மையாரின் கடிதம் உறுதி செய்தது வரலாற்றை சுட்டிக்காட்டி அய்.ஓ.பி. முன்னாள் இயக்குநர் நமச்சிவாயம் பெருமிதம்
சென்னை, ஜூன் 27_ தந்தை பெரியாருக்குப் பிறகு, அறக்கட்டளைகளைக் காப்பாற்ற வீரமணியால்தான் முடியும் என்று அன்னை மணியம்மையார் அவர்கள் கடிதம் எழுதி, அப்பொழுதைய இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இயக்குநர் நமச்சிவாயம் அவர்களிடம் வழங்கி, பாதுகாக்க சொல்லியதைப்பற்றி சுட்டிக் காட்டினார் நமச்சிவாயம் அவர்கள்.
பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளரும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மேலாளரும், வங்கி அதிகாரிகள் அமைப்பின் இணைப் பொதுச் செயலாளருமான வீ.குமரேசன் அவர்களின் வங்கிப் பணி நிறைவு, நன்றி செலுத்தும் விழா 25.6.2015 அன்று மாலை பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேனாள் செயல் இயக்குநர் நமச்சிவாயம் பேசும்போது குறிப்பிட்ட தாவது:
தந்தை பெரியாருக்கும், எங்களுக்கும் மிகுந்த தொடர்பு உண்டு. அது நிறைய பேருக்குத் தெரியாது; தந்தை பெரியார் அவர்கள் நம்முடைய வங்கியிலே கதீட்ரல் கிளையில் ஓர் உறுப்பினராக இருந்தவர்கள். தந்தை பெரியார் விடுதலை பத்திரிகை பெரிய பத்திரிகை ஆவதற்காக வேண்டிய மெஷினை நாம் தான் இறக்குமதி செய்து கொடுத்தோம். அதுமட்டு மல்ல. மணியம்மையார் அம்மாவின் பெரிய நம்பிக்கைக்கு நாம் பாத்திரமானோம். மணியம்மையார் அம்மாவும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்தார்கள்.
தந்தை பெரியாருக்கு அப்புறம் யார் என்று சின்ன சந்தேகம் வந்தது. யாரை நிய மிப்பது என்று மணியம்மையார் அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அவர்கள் ஒரு சீட்டில் எழுதி கவரில் போட்டு எனக்கு பின்னால் இவர்கள் என்று சொல்லி வேறு யாரிடமாவது கொடுத்திருக்கலாம்.
என்னிடம் கொடுத்து நம்முடைய இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பெட்டகத்தில் (சேஃப்டி பாக்சில்) வைத்திருக்குமாறு சொன்னார்கள். அதில் யார் பெயர் இருந்தது என்று எனக்கும் தெரியாது. பெட்டகத்தில் வைத்திருங்கள். நான் போனபிறகு அதைத் திறந்து பாருங்கள் என்று கூறிவிட்டார். ஆகவே, அதை நம்முடைய வங்கியிலே சேஃப்டி பாக்சில் பத்திரமாக வைத்துவிட்டோம். அவர்கள் இறந்தபிறகு அதை எடுத்து ஒரு நாலைந்து பேருக்கு முன்னால் பிரித்துப் பார்த்ததால், வீரமணி அவர்களுடைய பெயர் இருந்தது. அவருக்கு அப்பொழுதே தெரியும், இவ் வளவு பெரிய டிரஸ்டை காப்பாற்ற வேண்டுமானால், தந்தை பெரியாருக்குப் பிறகு வீரமணி அவர்களால் தான் முடியும்  வேறு யாராலும் முடியாது என்று.
ஆகவே, தந்தை பெரியாருக்கும் வங்கிக்கும் பெரிய தொடர்பு இருந்தது. அதிலே முழுமையாகச் சொல் வதானால், பெரியார், பெரியாருடன் வாழ்ந்துள் ளோம்.
ஆனால், இங்கே நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்க்கின்றபோது, யாராவது பணி ஓய்வு பெற்றால் வழியனுப்புகின்ற விழாவாகத்தான் செய்வார்கள். எனக்கும்கூட இதே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலு வலர்கள் சங்கம் எல்லாம் சேர்ந்து பெரிய அளவில் செய்தார்கள். ஆனால், தனக்கு உதவியவர்களை அழைத்து அவர்களுக்கு மரியாதை செய்வது என்பது இதுவரைக்கும், நான் கேள்விப்படாதது. குமரேசன் அவர் சார்ந்த இயக்கத்தை மறக்காமல் ஆசிரியர் அவர்களை அழைத்துள்ளார். அதுமட்டு மன்றி இந்த விழாவை பெரியார் திடலில் நடத்து கிறார். மிகப்பெரிய தன்னம்பிக்கை உள்ளவர்கள், ஆழ்ந்த சிந்தனை உடையவர்கள் என்பதை இதி லிருந்து பார்த்துவிடலாம். எனக்கும், குமரேசன் அவர்களுக்கும் வங்கி வழியாகத்தான் தெரியும். இருந்தாலும் என்னை இந்த விழாவுக்கு வரவேண்டும், உங்களை, நான் போற்ற வேண்டும் என்று சொன் னவுடனே அதிர்ச்சி அடைந்தேன். நான் ஆடிப் போய்விட்டேன் முதலில்.  நம்மை எதற்காக கூப்பிடு கிறார்கள் என்று முதலில் தெரியவில்லை.
நான் முதல் சம்பளம் வாங்கியபோது என்னுடைய பள்ளிக்கூடத்து ஆசிரியரிடம்தான் கொடுத்தேன். பேராசிரியர் அன்பழகன்கூட ஒரு முறை ஆசிரியர்கள் ஸ்டிரைக் நடந்துகொண்டிருந்தபோது சொன்னார். கூட்டத்தில் சொன்னாராம். நீங்கள் எல்லாம் படிக் கும்போதே பிள்ளைகளுக்குச்  சொல்லிக் கொடுத் திருந்தீர்கள் என்றால் நமச்சிவாயம்போல் முதல் சம்பளத்தை உங்களுக்கு அனுப்பிவிடுவார்கள். ஒவ் வொரு ஆசிரியரும் பெரிய பணக்காரர் ஆகியிருக்க லாம் என்று சொன்னார். அதுமாதிரி  பெரிய மரியாதைக்கு உரியவர் நம்முடைய ஆசிரியர் வீரமணி அவர்கள்.
தந்தை பெரியாருக்கும், நம்முடைய வங்கிக்கும் இருக்கின்ற ஒரு பெரிய தொடர்பு அதிகமாக இருந்த காரணத்தால், குமரேசன் இந்த இடத்தைத் தேர்ந் தெடுத்ததும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆகவே, குமரேசனை நாம் பாராட்டியாக வேண்டும். ஆனால், நம்மையெல்லாம் அழைத்து பாராட்டி இருக்கிறார்.
பாராட்டுதலுக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். நான் வேறு எந்த விதத்திலும் அவருக்குக் கடமைப்பட்டவன் அல்லன். ஆனால், அவர் வங்கியிலிருந்து ஓய்வு பெற்று, இந்த கழகப் பணிகளையும், மற்றும் ஏனையத் தொண்டுகளையும் செய்து, சிறப்பான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன். _ இவ்வாறு நமச்சிவாயம் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

நெருக்கடி நிலை பிரகடனமும், பாஜக., ஆர்.எஸ்.எஸ். தகிடுதத்தமும்

ஜூன் 25, 1975. இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை சட்டம் பிரகடனம் செய்யப்பட்டு. நாற்பது ஆண்டுகள் கழிந்துவிட்டன. அய்ம்பது வயதுக் குட்பட்டவர்களுக்கு, இந்த இருண்ட காலத்தின் சமூக, அரசியல் நடப்புகள் இன்று தெரியாது. தமிழ் நாட்டில் திரா விடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும், நெருக்கடி நிலை சட்டத்தால், கடுமையாக பாதிக்கப்பட்ட இயக் கங்கள். முன்னணித் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு, ஓராண்டு கடும் சிறை வாசம் மேற்கொண்டவர்கள் இந்த இயக்கத்தவர். சட்டமன்றத்தில் 183 உறுப்பினர்களைக் கொண்ட தனிப் பெரும்பான்மைப் பெற்ற கட்சியான திமுக, நெருக்கடி  நிலையை ஆதரிக் காமல், எதிர்க்கிறது என்பதற்காக, 356-ஆவது பிரிவின் கீழ் ஆட்சி கலைக்கப்பட்டது.
மிசா சட்டத்தை பயன்படுத்தி, பலரும் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முரசொலிமாறன், மு.க. ஸ்டாலின், ஆற்காடு நா. வீராசாமி போன்றோர் கடுமையாக தாக்கப் பட்டனர். சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும், சிறை யில் கடுமையாக தாக்கப்பட்டு,  சிறையில் மாண்டனர்.
ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் தவே, சுப்ரமணியம் என்ற இரு பார்ப்பனர் களின் கொடுங்கோல் ஆட்சியைத்தான் தமிழகம் சந்தித்தது. விடுதலையில் தந்தை பெரியார் எனப் போடக்கூடாது என சென்சார் செய்யும் அளவுக்கு கட்டுப் பாடுகள் இருந்தன. அந்த இரு பார்ப் பனர்களும் சிண்டை அவிழ்த்து ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. வட நாட்டில் பல தலைவர்கள் கைது செய் யப்பட்டாலும், அவர்களுக்கு இத்தகைய தாக்குதல்கள் நடந்ததாக செய்திகள் இல்லை. பல தலைவர்கள் உடல் நலம் கருதி, பிணை பெற்று வந்துவிட்டார்கள்.
அதில், இன்றைய பாரத ரத்னா வாஜ்பாயும் ஒருவர். அவர் கைது செய்யப்பட்டதும், உடல் நலம் கருதி, இறுதிவரை மருத்துவமனை சிகிச்சை யில் தான் இருந்தார்.
ஏறக்குறைய இருபது மாதம் நெருக் கடி நிலை அமுலில் இருந்த காலத்தில், பெரும்பான்மை மாதங்கள், வாஜ்பாய் பரோலில் வெளியில் இருந்தார். அரசுக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடு வதில்லை என்ற உறுதிமொழியைக் கொடுத்துவிட்டு, வாஜ்பாய் வெளியில் இருந்தார்.
இவ்வாறு நாம் சொல்லவில்லை; இன்று பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவ ரான சுப்ரமணியன் சுவாமி கூறியதைத் தான் நாம் மேற்கோள் காட்டுகிறோம்.  இதோடு அவர் நிறுத்தவில்லை.
அன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டு, அதன் அன்றைய  தலைவர் பாலாசாகிப் தியோரஸ், ஏர்வாதா சிறையில் இருந்தார். அங்கிருந்து இந்திரா காந்திக்கு பல கடிதங்கள் எழுதினார். ஆர்.எஸ்.எஸ்.க் கும், ஜெயபிரகாஷ் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தங்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, இந்திரா காந்தியின் இருபது அம்ச திட்டத்திற்கு முழு ஒத்து ழைப்பு தந்து பாடுபடும் என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார்.
தியோரஸும், வாஜ்பாயும் இவ்வாறு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து நெருக்கடி நிலைக்கு எதிரான இயக்கத்திற்கு முற்றிலும் துரோகம் இழைத்து விட்டார்கள். அப்போதைய மகாராட்டிர சட்டமன்ற நடவடிக்கைகளின் குறிப்புகளில் இந்த செய்திகள் இருக்கின்றன என ஆதாரத் துடன் சொன்னவரும் சாட்சாத் சுப்ர மணியன் சுவாமிதான். ஆதாரம் வேண்டு வோர், ஆங்கில இந்து பத்திரிக்கையில் ஜூன் 13, 2000 அன்று அவர் எழுதிய கட்டுரையைப் படித்து தெரிந்து கொள்ளவும். எந்த தருணத்தில் சுப்ரமணியன் சுவாமி இந்த கட்டுரையை எழுதினார் தெரியுமா? நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்து இரு பத்தைந்து ஆண்டுகள் ஆகிய நிலையில், அதை பாஜக நினைவுபடுத்தி நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்ததைக் கிண்டல் செய்து, சுவாமி இந்த கட்டுரையை எழுதினார்.
இவ்வாறு வாஜ்பாயும், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் மன்னிப்பு கோருவது ஒன்றும் புதிதல்ல. இதே பாரதரத்னா வாஜ்பாய், 1942 வெள்ளையனே வெளி யேறு போராட்டத்தில் கலந்து கொண்ட தியாகி என பீலா விட்டு, அது வடிகட்டின பொய் என்றும், எதேச்சையாக நான் கலவரம் நடந்த பகுதியில் இருந்தேன்; என்னை கைது செய்து விட்டார்கள் என நீதிமன்றத்தில் கடிதம் கொடுத்ததை, பிரண்ட் லைன் ஆங்கில பத்திரிகை (பிப்ரவரி 7-20, 1998) வெளியிட்டு, முக மூடியை கிழித்து விட்டது. அதேபோல், காந்தி படுகொலைக்குப் பின் ஆர். எஸ்.எஸ். இயக்கம் ஒரு முக்கிய காரணம் என்ற அடிப்படையில் பிப்ரவரி 2, 1948-இல் தடை செய்யப்பட்டது. இனி அரசி யல் நடவடிக்கை எதிலும் கலந்து கொள்ள மாட்டோம்; எங்கள் அமைப்பு ஒரு கலாச்சார அமைப்பு என்று ஒரு சட்ட விதி உருவாக்கி, மத்திய அரசுக்கு கடிதம் கொடுத்ததற்குப் பின் தான், ஜூலை 11, 1949-இல் ஆர்.எஸ்.எஸ். மீதான தடை நீக்கப்பட்டது.
இந்த ஆர்.எஸ்.எஸ்., பாஜக பரிவாரங் களால் சுதந்திர போராட்ட தியாகி என பொய்யாக வர்ணிக்கப்பட்டு, நாடாளுமன் றத்தின் மய்ய மண்டபத்தில், காந்தியின் படத்திற்கு எதிராகவே, அன்றைய வாஜ்பாய் அரசால் 2003-இல் படமாக வைக்கப் பட்டுள்ள சவார்க்காரின் வீரத்தையும் சற்று பார்ப்போம்.
இந்த சவார்க்கர், காந்தி கொலையில் தொடர்புண்டு என்று கைது செய்யப் பட்டவர். முறையான ஆவணங்கள் இல்லை என்பதால் விடுதலை ஆனவர்.
சவார்க்கர், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார் என்பதாக அந்தமான் சிறையில் இருந்தவர்; அவர் சிறையில் இருந்து வெளிவர பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதுகிறார். என்னை பிரிட்டிஷ் அரசு, இரக்கத்தோடும், கருணையோடும் விடுதலை செய்தால், இந்த அரசுக்கு வலி மையான ஒரு விசுவாசியாக இருப்பேன்; அரசு என்ன மாதிரி விரும்புகிறதோ, அந்த வகையில் நான் சேவை செய்ய சித்தமாக இருக்கிறேன். என்மீது கருணையை மேன்மை தங்கிய தங்களால் மட்டுமே வழங்க முடியும். ஆகவே, இந்த ஊதாரித்தனமான மகன் பிரிட்டிஷ் அரசான பெற்றோரிடம் செல்லாமல் எங்கு செல்ல முடியும்
இப்படி எழுதி, வெளியில் வந்து, எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் காலத்தை கழித்தவர்தான், இந்த சவார்க்கர். இவர் தான் நாடாளுமன்றத்தில் படமாக வைக்கப்பட் டுள்ளார். இதைவிட அவமானம் நாடாளு மன்றத்திற்கு எதுவாக இருக்க முடியும்?
இந்த குறிப்புகளை சதாத்ரு சென் எழுதி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலில், உள் துறை அமைச்சகத்தின் குறிப்புகளிலிருந்து அதன் ஆசிரியர் மேற்கோள் காட்டியுள்ளார்.
ஆனால், திமுக 1975-இல் நெருக்கடி நிலைப் பிரகடனத்தை கடுமையாக எதிர்த்த நிலையில், இந்திரா காந்தியின் சார்பில் இரு பிரதிநிதிகள், கலைஞரைச் சந்தித்து, நீங்கள் நெருக்கடி நிலையை ஆதரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; மாறாக எதிர்க்காமல் இருந்தால், திமுக ஆட்சி தொடரும் என தெரிவித்தபோது, கலைஞர், தான் பெரியார், அண்ணா ஆகியோரின் மாணவன், எக் காரணத்தைக் கொண்டும் நெருக்கடி நிலையை ஆதரிக்க முடியாது. ஜனநாயகத்திற்கு ஆதரவாகவே திமுக இருக்கும் என உறுதிபட தெரிவித்ததை, ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் (25.6.2015) மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதற்கு முற்றிலும் மாறாக, நெருக் கடி நிலை பற்றி மூச்சு விடாமல் இருந்த கட்சி புரட்சி நடிகராக இருந்து புரட்சித் தலைவரான எம்.ஜி.ஆரின் அதிமுக,
இப்படி, பிரிட்டிஷ் அரசிடம் கைது செய்யப்பட்டால், மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தவர்களும், நெருக்கடி நிலை சட்டத்தின்போது கைது செய்யப் பட்டு மன்னிப்பு கடிதம் எழுதி வெளியே வந்தவர்களுமான, பாஜக, ஆர்.எஸ்.எஸ். கம்பெனி, தற்போது நாற்பாதாம் ஆண்டு நிகழ்ச்சியை நடத்துகிறார்களாம்.
நெருக்கடி நிலைக் காலத்தில் அதை எதிர்த்து இறுதி வரை நின்றவர்கள் யார்? அதற்காக ஆட்சியை இழந்தவர்கள் யார்? அதை எதிர்க்காமல் கட்சியை நடத்தியவர்கள் யார்? கைது செய்யப் பட்டதும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து வெளியே வந்து இன்றைக்கு ஜனநாயகக் காவலர்களாக காட்டிக் கொள்பவர்கள் யார்? இதற்கான வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டியது நம் கடமை. இதை நாம் சரியாக செய்யாத தினால்தான், மன்னிப்பு கேட்டவர்கள் இன்றைக்கு ஜனநாயகக் காவலர் வேடம் போடுகிறார்கள். தங்களுக்கு சார்பான கருத்துக்களை மட்டுமே பேச வேண்டும்; மாறான கருத்துக்கள் விவாதம் மேற் கொண்டால், வெடி குண்டு வீசுவோம்; ஆட்களை தீர்த்துக் கட்டுவோம் என சொல்லும் ஒரு பாசிசக் கூட்டம், நெருக் கடி நிலையில் ஜனநாயகம் நெரிக்கப் பட்டது என நிகழ்ச்சி நடத்தும் கூத்து இந்தியாவைத் தவிர வேறு எங்கும் நடக்காது.
இன்றைய தலைமுறை, இந்த வரலாற்றை தெரிந்து கொண்டால்தான், எதிர்காலத்தில் ஜனநாயகத்திற்கு நெருக்கடி வந்தால் யார் அதற்கு போராடுவார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.
 - குடந்தை கருணா

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


எளிமை + பண்பு + பல்திறன் = அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியார் அவர்களை தமது வாழ்நாள் தலைவராகக் கொண்டு இறுதிவரை வாழ்ந்து காட்டியவர்.
அய்யா பெரியார் அவர்களிடத்தில் இருந்த - தொண்டு புரிந்த காலத் தையே தமது வாழ்வின் வசந்தம் என்று முதல் அமைச்சர் ஆன பிறகும் நிலை நாட்டி உறுதிபடக் கூறியவர் அறிஞர் அண்ணா.
தந்தை பெரியார் அவர்களுடன் இருந்து ஈரோட்டுக் குருகுல வாச முன்னோடியான அவர், எப்போதும் எளிமையான பழக்க வழக்கங்களைக் கொண்ட மாமேதை.
பதவி அவரை அதிகார போதை யில் தள்ளாடச் செய்யவில்லை; மாறாக; இவ்வளவு பெரிய பொறுப்பை மக்கள் நம்மீது - இத்தேர்தல் முடிவு மூலம், சுமத்தி விட்டார்களே என்ற கவலை அவரை ஆட் கொண்டது. மேலும் தன்னடக்கத்தின் தாயகமாகத் தன்னை ஆக்கிக் கொண்டார்!
அருமை நண்பர் கவிவேந்தர் கா. வேழவேந்தன் அவர்களின் தித்திக்கும் தீந்தமிழ் என்ற தலைப்பில் பல கட்டுரைத் தொகுப்பாக ஒரு நூலைத் தொகுத்து, மணிவாசகர் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளார்கள்.
அந்நூலை எனக்கு அனுப்பி அதுபற்றி கருத்து எழுதும்படிக் கேட் டுக் கொண்டார்.
மகிழ்ச்சியோடும், மனநிறை வோடும் எழுதுகிறேன்.
நூலைப் படித்தேன் - நவில் தோறும் நயம் அதில் மலரின் தேன் போல் இருந்தது! படித்தேன் - சுவைத்தேன்.
அறிஞர் அண்ணாவின் சிந்தனைச் செழுமை என்ற தலைப்பில், ஒரு அரிய கட்டுரை. (பக்கம் 112 - 118 வரை) பல்வேறு செய்திகளை மருந்துக் குப்பி (சிணீஜீறீமீ) போன்று அடக்கி எழுதப் பட்டுள்ளது.
இன்றைய தலைமுறையும் தலை வர்களும் தங்களுக்கு அதனை வழி காட்டியாக, கலங்கரை வெளிச்சமாக கொண்டால் அவர்களுக்கு நல்லது.
அந்த பக்கங்களில் உள்ள செய்திகள்:
அண்ணா தம் வாழ்க்கையின் தொடக்க முதலே, பொது வாழ்க்கைக்கு இலக்கணம் வகுப்பவராக எளிமை யோடும், பொருளாசை இன்றியும் வாழ்ந்து காட்டினார்.
நீதிக்கட்சியும் அவர் ஆற்றலுடன் இயங்கியதைக் கண்ட முத்தையா செட்டியார் அவர்கள், அண்ணாவை அணுகி, உங்களுக்குக் கை நிறைய ஊதியமும், தனி வீடும், தனிக் கார் வசதியும் தருகிறேன்; என்னிடம் பணிக்கு வந்து விடுங்கள் என்று கூறியபோதும், பெரியாரின் குருகுல வாழ்க்கையை விட்டு வர மாட்டேன் என்று, சொற்பச் சம்பளத்தில் தந்தை பெரியாரின் விடுதலை இதழில் தொண்டாற்றினார் அண்ணா. தாம் எம்.ஏ. படித்திருந்தாலும், அய்யாவின் அறிவியக்கத்தின் தன்மானக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட அண்ணா இறுதிவரை, நான் கண்டதும், கொண் டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார் தாம் என்றார்.
1949இல் இராபின்சன் பூங்காவில் பெரியாரிடமிருந்து பிரிந்து, திராவிட முன்னேற்றக் கழகம் எனும் தனி இயக்கம் கண்ட போதும், மேடையின் மத்தியில் ஒரு காலி நாற்காலியிட்டு, இது தந்தை பெரியாருக்கே உரிய தலைவர் நாற்காலி; தி.மு.கழகத்திற்குத் தனித் தலைவர் கிடையாது. என்றைக்கு இருந்தாலும்  தந்தை பெரியார்தாம் தலைவர் என்று, தந்தைபெரியாரிடம் பக்தியும் பாசமும் காட்டியவர் அண்ணா.
1967இல் மக்கள் அண்ணாவை முதல் அமைச்சர் ஆக்கியவுடன், முதல் வேலையாகத் திருச்சிக்கே சென்று, அங்கே தங்கியிருந்த தந்தை பெரியா ருக்கு மாலை அணிவித்து, அமைந்தி ருக்கும் மந்திரி சபையே தந்தை பெரியா ருக்குக் காணிக்கை என்று கூறி, அய் யாவை நெகிழ வைத்தார். தாம் கடுமை யாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்தாலும், தனயன் அண்ணா காட்டிய உயரிய பண் புணர்வு, தந்தை பெரியாரைச் சிலிர்க்க வைத்தது.
தமிழக மக்கள் படிப்பாற்றல் பெற்றவர் களாகவும், நூலறிவு மிக்கவர்களாகவும் திகழ வேண்டுமென்று, அண்ணா கனவு கண்டார். ஏனெனில், அவரே எளிய ஓட்டு வீட்டில் பிறந்தாலும் ஏராளமான நூல்களை இராப் பகலாகப் படித்து, மாமேதையாக விளங்கியதால், புத்த கங்களே மக்களுக்குப் புத்தறிவு ஊட்டக் கூடியவை என்று, திடமாக நம்பினார்.
ஓர் எழுத்தாளர் சங்க மாநாட்டில் அறிஞர் அண்ணா, இப்படி முழங்கினார்: பாருங்கள்! நம் நண்பர் ஒருவரின் புதுமனை புகுவிழாவிற்குச் சென்றால், அவர் பெருமிதத்துடன் தாம் புதிதாகக் கட்டிய வீட்டின் திண்ணைகளைக் காட்டுவார்; கூடத்தைக் காட்டுவார்; வர வேற்பு அறையைக் காட்டுவார்; சமையல் அறையைக் காட்டுவார்; சாப்பிடும் அறையைக் காட்டுவார்; படுக்கை அறை யைக் காட்டுவார்; கடவுள் அறையை காட்டுவார். ஆனால் இதுதான் நான் படிக்கும் படிப்பறை என்று, ஒன்றைக் காட்டுகிறாரா? அப்படி வீட்டுக்கு வீடு நூலக அறை திகழும் நாள்தான், அறிவுப் புரட்சிக்கு வழிவகுக்கும் திருநாள்!
எத்தனை சிந்தனை ஆழத்துடன் அண்ணா அவர்கள் உதிர்த்த சொற்கள் இவை!
அதேபோல் தமிழ் மாந்தர், அறி யாமைச் சேற்றிலிருந்தும் வைதிகச் சகதியிலிருந்தும் வெளியே வந்தால் தான் அறிவார்ந்த விஞ்ஞான முன் னேற்றம் காண முடியும் என்று, திட்ட வட்டமாக எண்ணினார் அண்ணா.
அவர் ஒருமுறை அழுத்தத்து டனும், சிந்தனைச் செழுமையுடனும் கூறினார்; கடிகாரத்தின் நொடி முள்ளும், மணிமுள்ளும் நகர்வதைக் கவனித்து, வாழ்க்கையை வேகமாக நகர்த்திக் கொண்டிருக்கும் மேனாட் டார், எங்கோ உயரத்திற்கு முன் னேறிப் போய்க் கொண்டிருக்கி றார்கள். ஆனால் இன்னமும் பஞ்சாங் கத்தைப் பார்த்து, நவக்கிரகங்கள் நகர்வதைப் மட்டுமே சார்ந்து செயல் படும் நாம், பின்னேறிக் கொண்டே இருக்கிறோம்
அறிவுப் பாதைக்கு நம்மை ஆற்றுப் படுத்திட அண்ணாவின் சிந்தனையோட்டம் எப்படியெல்லாம் செயல்பட்டது.
அறிஞர் அண்ணா முதல் அமைச் சரான பிறகுகூட ஒரு விருந்து ஏற்பாடு நாகரசம்பட்டியில் திரு என்.எஸ். சம்பந்தம் வீட்டில். அப்போது முதல் வரை தனக்கு அருகில் அமர்த்திட வேண்டுமென அய்யா  - விரும்பி ஜாடை காட்டினார் எங்களிடம்.
அண்ணாவோ மிகுந்த கூச்ச சுபாவம் உள்ளவர். அவர் தயங்கி சில இலைகள் தள்ளி என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். இதற் கிடையில் அய்யாவுக்குப் பக்கத்தில் ஒரு அதிகம் பேசும் தொணதொணா ஒருவர் அந்த இலையை ஆக்கிர மித்துக் கொண்டார்! அய்யாவுக்கு வந்த கோபத்தை எங்கள்மீது பார் வையில் காட்டி பிறகே உணவு உண்டார்!
ஈரோட்டில் விடுதலை ஆசிரிய ராக இருந்தபோது எப்படி அய்யா விடம் இருந்தாரோ - நடந்தாரோ - அதே பயபக்தி யுடன் முதல் அமைச் சரான அண்ணாவும் இருந்தார்.
அத்தகையவர்களை இனி எளி தில் எங்கே சந்திக்கப் போகிறோம்?
கவவேந்தர் கா. வேழவேந்தனின் மற்ற கட்டுரைகளும் நல்ல தகவல் களஞ்சியங்கள் ஆகும்.

- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்

ஈழத் தமிழர்களுக்கு எதிரான உச்சக் கட்டப் போரில் வெள்ளைக் கொடியுடன் சரண் அடைந்தவர்கள் கொல்லப்பட்டது ஏன்?

ஜெனீவா மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் மனைவிகள் கண்ணீர்ப் பேட்டி
ஜெனீவா, ஜூன் 27_ இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான உச்சக்கட்டப் போரில் வெள்ளைக் கொடியுடன் சரண் அடைந்தவர்களை இலங்கை சிங்கள ராணுவம் கொன்றது ஏன்  என்று ஜெனீவா நகரில் நடைபெற்ற அய்.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் மனைவிகள் கண்ணீர் மல்க கேள்வி கேட்டனர்.
அய்.நா. மனித உரிமைப் பேரவையின் 29ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் கடந்த 15ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. அடுத்த மாதம் (ஜூலை) 3ஆம் தேதி முடிய இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் இலங்கையில் 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலி களுக்கு எதிரான உச்சக் கட்டப்போரில் மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக இலங்கை அரசு மீது பல்வேறு நாடு களின் உறுப்பினர்களும் கடுமையாக குற்றம் சாட் டினர்.
அவர்கள் பேசும் போது: வெள்ளைக்கொடி யுடன் சரண் அடைந்த விடுதலைப்புலிகள் இயக் கத் தலைவர்கள் புலித் தேவன், நடேசன், மல ரவன், விடுதலைப்புலிகள், அப்பாவித் தமிழர்கள் உள்ளிட்ட 18 ஆயிரம் பேரின் நிலை என்ன ஆயிற்று? அவர்கள் உயி ருடன் இப்போது இருக் கிறார்களா? என்பதை சொல்ல இலங்கை அரசு ஏன் மறுக்கிறது? என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
முன்னதாக பசுமை தாயகம், இங்கிலாந்து தமிழர் பேரவை, அமெ ரிக்க தமிழர் அரசியல் செயற்பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்த சிறப்பு இணை கூட்டத்தை நடத்தின.
கூட்டத்துக்கு இங்கி லாந்து முன்னாள் எம்.பி. யும், தமிழர்கள் நீதிக்கான நல்லெண்ண தூதுவரு மான லீ ஸ்காட் தலைமை தாங்கினார்.
சர்வதேச மனித உரி மைகள் சட்ட நிபுணரும், இங்கிலாந்து வழக்குரை ஞர்கள் பேரவையின் மனித உரிமை குழு தலை வருமான ஜெனைன் கிறிஸ்டி பிரிமெலோ கியூசி, தமிழக வழக்குரை ஞர்கள் சமூக நீதி பேரவை தலைவர் க.பாலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இலங்கை போரின் போது வெள்ளைக்கொடி யுடன் சரண் அடைந்த விடுதலைப்புலிகள் இயக்க தலைவர்களான மலரவன் மனைவி சுசிலாம்பிகை, புலித்தேவன் மனைவி குறிஞ்சி மற்றும் நடேச னின் மகன் உள்ளிட்ட பல ருடைய உறவினர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக அய்.நா. சபையில் செப் டம்பர் மாதம் இறுதி அறிக்கை தாக்கல் செய் யப்பட இருக்கிறது. அப் போது அய்.நா.வின் நேரடி சாட்சிகளாக உள்ள இந்த மூவரின் சாட்சியங்களால் இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்று கருதப்படுகிறது.
மலரவன் மனைவி சுசிலாம்பிகை கண்ணீர் மல்க ஜெனீவா அய்.நா. வளாகத்தில் கூறும்போது, 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி முல் லைத்தீவு வட்டுவாய்க்கால் பகுதியில் பல போராளி களுடன் எனது கணவரை சரணடைய வைத்தேன். அதன்பிறகு 6 ஆண்டுகள் ஆகியும் அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. இலங்கை ராணுவம் எந்த பதிலையும் தெரிவிக்க மறுக்கிறது என்றார்.
புலித்தேவனின் மனைவி குறிஞ்சி கூறும் போது, இலங்கை அரசு அனுமதியுடன் சர்வதேச நாடுகளுக்கு தெரிவித்த பிறகு ராணுவ கட்டுப் பாட்டு பகுதிக்குள் புலித் தேவன், நடேசன் உள் ளிட்ட போராளிகள் வெள்ளைக்கொடியுடன் சென்று சரண் அடைந் தனர். அதன்பிறகு அவர் களின் உயிரற்ற உடல் களைத்தான் இலங்கை மீடியா காட்டியது. வெள்ளைக்கொடியுடன் சரண் அடைந்தவர்கள் என்ன காரணத்துக்காக கொல்லப்பட்டனர் என்பதற்கு பதில் கிடைக்க வேண்டும் என்றார்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

8 தமிழர்களை கொலை செய்த சிங்கள ராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு, ஜூன், 27_ இலங்கையில் 4 குழந் தைகள் உள்பட 8 தமிழர் களை கொலை செய்த ராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இலங்கையில் தமிழர் களுக்கு எதிராக இழைக் கப்பட்ட போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து, சர்வ தேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 8 தமிழர்களை, சுனில் ரத்னாயகே என்ற சிங்கள ராணுவ அதிகாரி கடந்த 2000ஆம் ஆண்டு பிடித் துச் சென்று அவர்களது கழுத்தை அறுத்து கொடூர மாக கொலை செய்ததாக புகார் கூறப்பட்டது.
இலங்கையில் ஈழத் தமிழர்கள் மத்தியில் மிகவும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத் திய இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. சுமார் 15 ஆண்டு களாக நடந்து வந்த இந்த வழக்கில், ராணுவ அதி காரி சுனில் ரத்னாய கேவுக்கு மரண தண் டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை அரசு வழக்குரைஞரும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலு மான சரத் ஜெயமன்னா வரவேற்றுள்ளார். ஒரு நம்பகமான விசார ணையை எங்களால் நடத்த முடியும் என்பது இதன் மூலம் தெளிவு படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
புத்த மதத்தினரை பெரும்பான்மையாக கொண்ட நாடான இலங் கையில், கடந்த 1976ஆம் ஆண்டுக்குப்பிறகு யாருக் கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. அங்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி கள் சுமார் 400 பேர், தண் டனை நிறைவேற்றத்துக் காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இனவாதம் மீண்டும் தலைதூக்குகின்றது
மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு சமூக வலைத் தளமான டுவிட்டர் பக் கத்தில் 10000 பேர் தமது ஆதரவினை தெரிவித்துள் ளனராம்.
கடந்த 2000ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் மிருசுவிலில் 8 தமிழ் மக்களைப் படுகொலை செய்த வழக்கில் குற்ற வாளியாக நிரூபிக்கப்பட்டு கொழும்பு மேல் நீதிமன் றத்தால் நேற்றுமுன்தினம் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிபர் சுனில் ரத்னாயக் கவுக்கு ஆதரவாக டுவிட் டர் தொடங்கப்பட்ட பக்கத்திற்கு முதல் நாளி லேயே 10 ஆயிரம் பேர் ஆத ரவு தெரிவித்துள்ளனர்.

'போர் வெற்றி வீரர் சுனில் ரத்னாயக்கவை பாதுகாப்போம்' என்ற பொருள்படும் ஆங்கில வார்த்தைகளால் தொடங் கப்பட்ட இந்தப் பேஸ்புக் பக்கத்திற்கே பல்லாயிரக் கணக்கான சிங்களவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளன ராம்!
படைவீரர்களைப் பாதுகாப்போம் என அரசு மீண்டும் மீண்டும் கூறி வரும் நிலையில், சிங்கள மக்கள் மத்தியில் படை வீரர்கள் தொடர்பில் நிலவும் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாகவும் இந்த ஆதரவு அமைந்துள்ள தாக டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டவர் கள் குறிப்பிட்டுள்ளனர். ஈழத் தமிழர்மீது சிங்களர்களின் இனவாதம் மீண்டும் தலைதூக்குகின் றது என்ப தற்கு சான்றாக இதுவும் ஒன்றாக அமைந் துள்ளதாக சமூக வலைத் தள பதிவர்கள் தமது கருத் துக்களை பதிவிட்டிருக் கிறார்கள்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

காஞ்சி சங்கராச்சாரியார்மீதான கொலை வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுமா?

- மின்சாரம்
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கராமன் ஒரு பட்டப் பகலிலே வரதராஜ பெருமாள் சன்னதியிலே படு கொலை செய்யப்பட்டார்.  அதற்குக் காரண மானவர் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்று ஒருமுகமாக பேசப்பட்டது அப்பொழுது தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்தவர் செல்வி ஜெ. ஜெயலலிதா; ஒரு தீபாவளி நாளில் சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டார் (11.11.2004).
வேலூர் மத்திய சிறைச் சாலையில் இந்த லோகக்குரு 61 நாள்கள் கம்பி எண்ணியது. இவரது சிஷ்யக் கே()டி விஜயேந்திர சரஸ்வதி 31 நாள்கள் கம்பி எண்ணினார். நாள்தோறும் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வந்தார்.
இந்தக் கைது முதல் அமைச்சராக கலைஞர் அவர்கள் இருந்த கால கட்டத்தில் நடந்திருந்தால் அடேயப்பா என்ன களேபரம் செய்திருப்பார்கள்.
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போது திருவாளர் சோ ராமசாமி துக்ளக்கில் என்ன எழுதினார்?
(1) வலுவான சாட்சியங்கள் அடிப் படையிலேயே கைது நடந்திருக்கிறது.
2) மைனாரிட்டிகளைத் திருப்திபடுத்த இந்தக் கைது என்பதும் சரியில்லை.
3) எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கை காரணமாக இந்தக் கைது என்பதும் சரியல்ல.
4) அரசியல் லாபக் கணக்கில் எடுக்கப் பட்ட நடவடிக்கையா என்றால் அதுவும் இல்லை.
5) நள்ளிரவில் அய்தராபாத் சென்று காவல்துறை எடுத்த நடவடிக்கையையும் குறை சொல்ல முடியாது.
ஆக, சோ வட்டாரத்தாலேயே குற்றம் சொல்லப்பட முடியவில்லை என்பது முக்கியமானது.
இந்தக் கொலை வழக்கில் ஜெயேந்திரர் விடுதலையானதானது - நீதி மீது நம்பிக்கை கொண்டவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி நெருப்பு அலைகளை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.
மொத்தம் 177 சாட்சிகளில் 77 பேர் பிறழ் சாட்சிகள் என்பதை எந்த வழக்கிலாவது கேள்விப்பட்டதுண்டா? இந்த அதிசயம் இந்த வழக்கில் முக்கியமாக நடந்தது. பிறழ் சாட்சிகள் இந்த அளவு ஏன் ஏற்பட்டது என்று விசாரிக்கப்பட்டதா? இல்லையே! இந்த வழக்கில் புதுச்சேரி நீதிபதி இடையில் மாற்றப்பட்டுள்ளார். நீதிபதியின் உதவியாளரிடம் ஜெயேந்திர சரஸ்வதி பேரம் பேசினார். அதற்கான குறுந்தகடுகள் எல்லாம்கூட வெளியில் வந்தன. இவை எல்லாவற்றிற்குப் பிறகும்கூட ஜெயேந் திரரும் விஜயேந்திரரும் இவர்களின் கூட்டாளிகளும் விடுதலை செய்யப்பட் டனர் என்பது சகிக்கவே பட முடியாத ஒன்று.
இந்தத் தீர்ப்பின்மீது மேல் முறையீடு  செய்யவும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தவறி விட்டது.  இப்பொழுது இதில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கொலை வழக்கில் முக்கிய சாட்சி யான ரவி சுப்பிரமணியம் தான் பிறழ் சாட்சியாக மாறியதற்கான சூழ்நிலையை யும் நிர்ப்பந்தத்தையும் கூறி அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற சென்னைப் பெரு நகரக் காவல்துறை ஆணையாளரிடம் மனு கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜூனியர் விகடன் வார இதழில் (21.6.2015) பக்கம் 9,10) வெளி வந்துள்ள சேதிகள் முக்கியமானவை.
அரசு சாட்சியாக இருந்த நீங்கள் ஜெயேந்திரருக்கு ஆதரவாக பிறழ் சாட்சியாக மாறியது ஏன்? நான் பிறழ்சாட்சி ஆகிவிட்டேன் என்று ஒரு வரி தகவல் மட்டும்தான் வெளியே தெரியும். அதற்குப் பின்னால் என்னென்ன நடந்தது என்று உலகத்துக்குத் தெரியாது. சிறைத் துறையின் முன்னாள் டி.அய்.ஜி.யாக இருந்த ஒருவர்தான் இந்த விவகாரங்களுக்கு சூத்ரதாரி. அவர், இப்போது காஞ்சி மடம் நடத்தும் பல்கலைக் கழகத்தின் நிர்வாக அதிகாரியாக இருக் கிறார். அவர் மூலமாக அப்பு, கதிரவன் ஆகியோர் என்னை மிரட்டினர். புதுச் சேரிக்கு எவிடென்ஸ் கொடுக்க செல்வ தற்கு முதல் நாள் அன்று காஞ்சிபுரம் சப்-ஜெயிலுக்குள் இருந்த என்னை கதிரவன், தனி அறையில் என்னைச் சந்தித்தார். காஞ்சி பெரியவருக்கு எதிராக கோர்ட்டில் ஏதாவது சொன்னால் உன் கதையையே குளோஸ் பண்ணிடுவோம் என்று நேருக்கு நேர் மிரட்டும்போது நான் என்ன செய்ய முடியும்? அதுவும் அரசு சாட்சியாக ஜெயிலுக்குள் இருக்கும்போதே இந்த நிலை. தனி மனிதனாக நான் என்ன செய்ய முடியும்? உயிர் பயம்... அவர்கள் சொல்படி நடக்க வைத்தது. பண பலம், ரவுடிகள் பலம் மூலம் கொலை வழக்கில் இருந்து அனை வரும் விடுதலை ஆகி விட்டார்கள். அவர் களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றுதான் இப்போது முதல்வர் தனிப் பிரிவில் புகார் கொடுத்துள்ளேன்
சங்கரராமன் கொலை வழக்கில் தீர்ப்பு வந்து ஒன்றரை வருடத்துக்கு மேல் ஆகி விட்டது. இப்போது ஏன் புதி தாகப் புகார் சொல்கிறீர்கள்?
சங்கராச்சாரியார் உள்பட அனை வருமே குறுகிய கால சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை ஆகி விட்டனர். ஆனால், சுமார் 9 ஆண்டுகளாக சிறையில் இருந்த எனக்கு, ராதாகிருஷ்ணன் வழக்கில் 18.12.2013 அன்று உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி விடுவித்தது. நான் வெளியே வந்த பிறகும் ஜெயேந்திரரின் உத்தரவின் பேரில் அப்பு என்னை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தற்போது அப்புவும், கதிரவனும் இறந்து விட்டனர். எனவே, நான் சற்று சுதந்திரமாக இருக்கிறேன். பிறழ்சாட்சி சொல்லி உண்மைக் குற்றவாளிகளை தப்பிக்கவிட்ட எனது செயலை எனது மனசாட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. இரவும், பகலும் மனசாட்சி என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ராதா கிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்குக்கான சிறப்பு அரசு வக்கீலை 8.6.2015 அன்று நீதிமன்றத்தில் சந்தித்து, நடந்த உண்மைகளை எல்லாம் கூறுவதற்கான ஆலோசனையைக் கேட்டேன். அதற்கான மனுவையும் அவரிடம் சமர்ப்பித்தேன்.
புகார் கொடுத்த பிறகு உங்களுக்கு ஏதாவது மிரட்டல் வந்ததா?
ஆம். ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கின் அரசு வழக்கறிஞரை நான் அன்று சந்தித்தபோது ஜெயேந்திரர் வழக்கறிஞர்களும் அந்த வழக்கில் தொடர் புடைய சுந்தரரேசய்யரும் என்னைப் பார்த்தனர். சிறிது நேரத்தில் சுந்தரேசய்யர் என்னை தனியாக அழைத்தார். பெரியவா இன்றைக்கு வரச் சொன்னார். சாயங்காலம் வந்துவிட்டுப் போ என்றார். நானும் மாலையில் ஜெயேந்திரரை சந்தித்தேன். அப்போது ஜெயேந்திரர் என்னிடம், என்ன மறுபடியும் எனக்கெதிராக சாட்சி சொல்லப் போகிறாயா? உன்னையும் உன் குடும்பத் தையும் தொலைச்சிப்புடுவேன் என்று மிரட்டினார். அங்கிருந்த சுந்தரேசய்யர் என்னைப் பார்த்து, நீ பெரியவாளை பகைச்சிண்டேன்னா இந்தியாவின் எந்த மூலையிலும் உயிரோடு வாழ முடியாது. சென்ட்ரல் கவர்மென்ட்டுக்கே ஆலோசக ராக அவர் இருப்பது தெரியாதா? என எச்சரித்தார்.
சிறிது நேரத்தில், காஞ்சிபுரம் காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு எஸ்.அய்.-யாகப் பணியாற்றும் கண்ணன் என்ற மடத்துக் கண்ணன் வந்தார். அவர், நீ பெரியவாளுக்கு எதிராக ஏதாவது செய் தால் காணாமல் போயிடுவாய். பக்குவமா நடந்துக்கோ என்று எச்சரித்தார். இவர் களால் எனது உயிருக்கு ஆபத்து வரும் என்று பயமாக இருக்கிறது. அதனால்தான் முதல்வர் தனிப்பிரிவிலும் புகார் கொடுத்தேன்
காஞ்சி மடத்தில் நீங்கள் நடத்திய பேரம் படியாததால்தான் இப்போது புகார் கொடுத்ததாகச் சொல்கிறார்களே?
பணம் பொருளுக்கு ஆசைப்பட்டிருந் தால் நான் எப்போதோ செட்டில் ஆகி இருப்பேன். 9 வருடங்கள் ஜெயிலில் இருக் காமல் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தி ருப்பேன். பணத்தோடு பல நாடுகளைச் சுற்றி வந்திருப்பேன். 9 ஆண்டுகாலம் காத்திருந்து பணம்கேட்டு இப்போது மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை. சட்டத்தின் ஆட்சி நடக்கும் அம்மா ஆட்சி யில் நீதி நிலைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் தைரியமாகப் புகார் கொடுத் துள்ளேன். முக்கிய சாட்சியான என்னை கலைத்ததோடு இல்லாமல், பல சாட்சிகளை இவர்கள் கலைத்துள்ளனர். ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கில் உள்ள எஞ்சிய சாட்சிகளையும் கலைக்கும் முயற்சியில் ஈடு பட்டுள்ளனர். ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீனில் உள்ள ஜெயேந்திரர் உள்ளிட்டவர்களின் ஜாமீனை ரத்து செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு சொல்கிறார் ரவிசுப்பிரமணியம்.
ரவி சுப்பிரமணியத்தின் இந்தப் பேட்டி தன்னிலை விளக்கம் கொண்டதாகவே இருக்கிறது. கொலை செய்யப்பட்ட சங்கர ராமன் மனைவியிடமும் ஜெயேந்திரர் சார்பில் பேரம் பேசப்பட்டது (பெட்டிச் செய்தி காண்க).
இதன் அடிப்படையில் மேல் முறையீடு செய்யப்படுமா? நாடே எதிர்ப்பார்க்கிறது.
--------------
--------------
ஜெயேந்திரர் பேரம் பேசினார்
உங்கள் கணவரை ஜெயேந்திரர்தான் கொலை செய்திருப்பார் என்று நம்புகிறீர்களா?
என் ஆத்துக்காரர் இறந்தப்போ பலரும் அதுபற்றிப் பேசினா. வீட்ல அவர் எதையும் சொல்லாததால் எனக்கும் எதுவும் தெரியலை. பெரியவா, சகல அதிகாரமும் படைச்சவா. அவாளப்பத்தி எப்படிச் சொல்ல முடியும்? அந்தச் சமயத்துல போலீஸ் காட்டின கெடுபிடியைப் பார்த்து நாங்களே மிரண்டு போயிட் டோம். போலீஸெல்லாம் அவாளோட ஆளோன்னுகூட சந்தேகப்பட்டோம்.
அவரோட பதிமூனாவது நாள் விசேஷத்தப்போ, மகாப் பெரியவா அடக்கம் பண்ணின இடத்துக்குப் போனப்போ, என் மகனை பெரியவா கூப்பிட்டுப் பேசினா. நீங்க எல்லாரும் குடும்பத்தோட சென்னைக்குப் போயிடுங்க. இங்க இருந்தா போலீஸும், பத்திரிகைக்காரர்களும் தொல்லைப்படுத்துவா. உனக்கு மாதவப் பெருமாள் கோயில்ல வேலை போட்டு தர்றேன். மாசா மாசம் செலவுக்கு மடத்துலிருந்து பணம் தர்றேன்னு சொல்லியிருக்கார். ஆத்துல அம்மா ஒத்துக்க மாட்டான்னு மகன் சொன்னதும். சங்கர்ராமன் அவனை மாதிரியே புள்ளைய வளர்த்து வச்சிருக்கான்னு பக்கத்தில் நின்னவங்ககிட்ட சொல்லியிருக்கார்.
ஆரம்பத்துல வந்த கணபதியும் மடத்துல பணம் கொடுத்திருக்கா இத வாங்கிக்கோ, போலீஸோ, பத்திரிகைக்காரர்களோ வந்தா மடத்தைப் பத்தி எதுவும் சொல்ல வேணாம்னு சொன்னார். இதையெல்லாம் அவா ஏன் சொல்லணும்? அவர் தான் இதை செய்திருக்கணுமுன்னு போலீஸ் சொல்லுறத நம்பித்தானே ஆகணும்!
சங்கரராமனின் மனைவி பத்மா பேட்டியிலிருந்து (குமுதம் ரிப்போர்ட்டர் 16.12.2004)
--------------
குற்றப் பத்திரிகை
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் வியாழக்கிழமை இரவு (11.11.2004) கைது செய்யப்பட்ட ஜெயேந்திரர் வெள்ளிக்கிழமை வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சின்ன காஞ்சிபுரம் தெற்கு மாட வீதியைச் சேர்ந்த ஆனந்த சர்மா மகன் சங்கரராமன். இவர் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். 2004 செப்டம்பர் 3ஆம் தேதி மாலை கோயில் அலுவலகத்தில் இருந்த சங்கரராமனை அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் சரமாரியாக  வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். கோயில் வளாகத்திலேயே நடைபெற்ற இக்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை செய்யப்படுவதற்கு 2 நாள்களுக்கு முன்னர் ஜெயேந்திரருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து சங்கரராமன் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். உங்களைப் பற்றிய எல்லா விஷயத்தையும் வெளியில் சொல்லி விடுவேன் என்று அவர் அக்கடிதத்தில் ஜெயேந்திரரை மிரட்டியுள்ளார். அதன் பிறகே அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். காலை 6.15 மணிக்கு போலீஸ் வாகனத்தில் காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் மன்றத்திற்கு (எண்1) ஜெயேந்திரர் அழைத்து வரப்பட்டு நீதிபதி ஜி. உத்தமராஜ் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார் - அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் காலை 7.35 மணிக்கு வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
குற்றப்பிரிவு 302,120-பி, 34,201 ஆகிய பிரிவுகள்: கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுச் சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் போலீசார் ஜெயேந்திரர்மீது பதிவு செய்துள்ளனர்.
(தினமணி 13 நவம்பர், 2004, சனிக்கிழமை சென்னை)

Friday, June 26, 2015

இரயில்வேயும் தனியார் துறைக்குச் செல்லுகிறதா?


இரயில்வே சீர்திருத்தத்துக்காக விவேக்தேவ்ராய் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. அந்தக் குழு கடந்த மார்ச்சு மாதத்தில் இடைக்கால அறிக்கை ஒன்றை அளித்தது - அதன் பிறகு கடந்த வாரத்தில் இறுதி அறிக்கையையும் அளித்து விட்டது. அய்ந்து ஆண்டுகளில் இரயில்வே துறையை எப்படியெல்லாம் மேம்படுத்த வேண்டும் என்பதற்கான வழிமுறைகளையும், திட்டங்களையும் அவ்வறிக்கை விலாவாரியாகக் கூறியுள்ளதாம்.
* ரயில்வேக்கு தனி அமைச்சகம், தனி பட்ஜெட் தேவையில்லை. அதை மத்திய போக்குவரத்துத் துறையுடன் இணைத்து விடலாம்.
* இந்திய ரயில்வே உள்கட்டமைப்புக் கழகம், ரயில்வே போக்குவரத்துக் கழகம் என இரண்டாகப் பிரிக்க வேண்டும். உள்கட்டமைப்புக் கழகத்தை அரசு நிர்வகிக் கலாம். தண்டவாளம், ரயில் நிலையங்கள், சிக்னல்கள் இதில் அடங்கும். போக்குவரத்துக் கழகத்தில் தனியாரை இணைக்கலாம். ஏர்போர்ட் போல ரயில் நிலையம் அரசிடம் இருக்கும் (இதையும் படிப்படியாக தனியாருக்குத் தரவேண்டும்).
ரயிலை தனியார் நிறுவனங்கள் ஓட்டலாம்.
* புறநகர் ரயில்கள் போன்ற நஷ்டம் ஏற்படுத்தும் ரயில் களை மாநில அரசுகளிடம் தந்துவிட வேண்டும். அல்லது, மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து இயக்கலாம். * சரக்குப் போக்குவரத்தை தனியார் கையில் தர வேண்டும்.
* ரயில் போக்குவரத்தில் மட்டுமே ரயில்வே துறை கவனம் செலுத்த வேண்டும். பள்ளி, மருத்துவமனை, ரயில்வே பாதுகாப்புப் படை போன்றவற்றை தனியாரிடம் தந்து விடவேண்டும்.
* கட்டண நிர்ணயிப்பில் அரசு தலையிடக்கூடாது. சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தனியாரே நிர்ணயித்துக் கொள்ளலாம். * ஓய்வுபெறும் ஊழியர்கள், பணியின்போது மரணம் அடைந்தவர்களின் குடும்பத்துக்கு பணிக்கொடை உள்ளிட்ட செட்டில்மென்ட்டுகளை பணமாகத் தராமல், புல்லட் பாண்ட்டாக தரவேண்டும். (இதை 30 ஆண்டுகள் கழித்தே பணமாக்க முடியும்
 * தனியாருக்கும் ரயில்வே துறைக்கும் உள்ள பிரச் சினைகளைத் தீர்க்கவும், கட்டணத்தைக் கண்காணிக்கவும் ரயில்வே ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்க வேண்டும். 
* அடுத்த 4 ஆண்டுகளில் ஓய்வுபெறவுள்ள 2.25 லட்சம் தொழிலாளர்களுக்கு மாற்றாக ஆட்களைத் தேர்வு செய்யக்கூடாது.
இத்தகைய பரிந்துரைகளின் அடிநாதம் எது என்றால் அரசுத் துறையில் இருக்கும் இந்தப் பெரிய இந்திய நிறுவனம் தனியார்த்துறைக்குத் தாரை வார்க்கப்பட வேண்டும் என்பதுதான்.
12,617 பயணிகள் இரயில்கள், 7,421 சரக்கு இரயில்கள், 7,172 தொடர் வண்டி நிலையங்கள், 1.16 லட்சம் கி.மீ., இருப்புப்பாதை  13 லட்சம் ஊழியர்களை கொண்டது இந்திய இரயில்வே துறை. நாள் ஒன்றுக்கு சராசரியாக  2.30 கோடி மக்கள் பயணிக்கும்  மிக முக்கியமான துறை இது. உலகில் உள்ள அரசுத் துறை நிறுவனங்களில் இந்தியாவின் இரயில்வே துறையே மிகப் பெரியது. மக்கள் பயணிப்பது மட்டுமல்ல; சரக்குப் போக்குவரத்து என்பது பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையானதாகும்.
இப்பொழுது நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் பொருளாதாரக் கொள்கை என்று எடுத்துக் கொண்டால் தனியார்மயம் என்ற தண்ட வாளத்தில் ஓடக் கூடியதாகும். பன்னாட்டு நிறுவனங் களும், உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளும் சகட்டுமேனிக்கு மேய்வதற்கு அகலப் பாதையைத் திறந்து விடும் கொள்கையைக் கொண்டதாகும்.
இதனைப் புரிந்து கொண்டால் இரயில்வே நிருவாகம் பெரும்பாலும் தனியார்த்துறைக்குத் தள்ளி விடப்படுவதன் இரகசியம் எளிதாகவே புரிந்து விடும். தொடக்கத்தில் சில பணிகள் மட்டும் தனியாருக்கு என்று சொல்லுவார்கள்; நாளடைவில் முழுக்க முழுக்க கூடாரத்தில் ஓட்டகம் நுழைந்த கதையாகத்தான் முடியும். இரயில்வேயில் நட்டம் ஏற்படுகிறது என்றால் அதனைச் சரி செய்வதற்கான முயற்சியையும், திட்டங்களையும் மேற்கொள்வதுதான் புத்திசாலிகள் செய்யக்கூடிய செயலாக இருக்க முடியும்.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் லாலு பிரசாத் அவர்கள் இரயில்வே அமைச்சராக இருந்தபோது இரயில்வேயை இலாபகரமான நிறுவனமாக நிகழ்த்திக் காட்டினாரே! இந்தப் பார்ப்பன உயர்ஜாதி ஊடகங்கள் அடேயப்பா, எப்படி எப்படியெல்லாம் அவரைக் கேலி செய்வார்கள் தெரியுமா? அவர்களின் முகங்களில் எல்லாம் கரியைத் தடவும் வகையில் அவர் சாதனை வீரராகக் கம்பீரமாக வெளிவந்தாரே! இன்னொன்றும் இதில் முக்கியமாகும்.
 அரசாங்கம் நடத்தும் எல்லாத்துறைகளுமே இலாபத்தில் நடக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கக் கூடாது மக்கள் நலன்தான் முதன்மையானது -அதனை வெறும் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் அணுகக் கூடாது.
 கட்டணத்தை முடிவு செய்வதில் அரசு தலையிடக் கூடாதாம். சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தனியாரே நிர்ணயித்துக் கொள்ளலாமாம். இது ஒன்று போதாதா தனியார் முதலாளிகளுக்கு? தானடித்த மூப்பாகத்தானே வரிந்து கட்டிக் கொண்டு சம்பாதிக்க முயலுவார்கள்.
ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வதில் என்ன நடந்து கொண்டுள்ளது? எண்ணெய் நிறுவனத்தவர்களே விலை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற பூட்டுச் சாவியை முதலாளிகளின் கையில் கொடுத் ததால் அதன் சுமை பொது மக்கள் தலையில் விடிந்து கொண்டு இருக்கிறது.
 அதே பாணியில்தான் இரயில்வே துறையும் இயங்கும் நிலை ஏற்படப் போகிறது.
 உலகில் இரயில்வே துறையில் எட்டாவது இடத்தில் இருக்கும் நாடு அர்ஜென்டினா. 47 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அங்கு இரயில் இயக்கப்படுகிறது; 95 ஆயிரம் ஊழியர்கள்அங்கு பணியாற்றினர். சில ஆண்டுகளுக்குமுன் அரசுத் துறையில் இருந்த இரயில்வே, தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட பலன் சோகமானது.
இரயில்களைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி தண்டவாளங்களையும், இரயில் நிலையங்களையும்கூட நேர்த்தியாகப் பராமரிக்க முடியவில்லை.
 70 ஆயிரம் பேர்களின் வேலைகள் பறிக்கப்பட்டன.
 உற்பத்திப் பொருள்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதிலும் தோல்வி ஏற்பட்டதால் விலைவாசிகள் விண் ணைத் தொட்டன. அதன் விளைவு, சிறிது சிறிதாக மீண்டும் அரசு கைக்கு இரயில்வே துறை பயணித்துக் கொண்டுள்ளது.
அர்ஜென்டினாவின் கசப்பான அனுபவத்தைப் பார்த்த பிறகாவது மத்திய அரசு புத்திக் கொள்முதல் பெற வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் உறுதி செய்யப்பட்ட சோசலிலிஸ்ட் என்பதையும் கவனத்தில் கொள்ள அரசு கடமைப்பட்டுள்ளது. தனியார்மயம் சமூகநீதிக்கு குழிவெட்டக் கூடியது என்பதையும் மறக்கக் கூடாது.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

உலக சமஸ்கிருத மாநாடாம்

அடுத்து உலக சமஸ்கிருத தின அறிவிப்பிற்கான நடவடிக்கையில் இறங்கி விட்டது மோடி அரசு    உலகம் முழுவதும் ரூ.7000 கோடி க்குமேல் வருவாய் ஈட்டும் யோகாவை உலக யோகா தினமாக மாற்றி சந்தைப்படுத்திய நிலையில், அடுத்து சமஸ் கிருதத் தையும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல, உலக சமஸ்கிருத தினத்தை விரைவில் கொண்டுவர மோடி அரசு முடிவெடுத்துள்ளது; ஜனவரிமாதம் நடந்த பகவத்கீதை  விழாவின் போது சமஸ்கிருத மொழியின் சர்வதேச தூதுவராக சுஸ்மாசுவராஜ் நியமிக்கப்பட்டார்.
அப்போதே உலகம் முழுவதும் சமஸ்கிருதத்தை எப்படி கொண்டு செல்வது என்று திட்டமிடப்பட்டது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் ஆலோசகர் கிருஷ்ணகோபால்  யோகாதினத்தின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதின் முடிவை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறினார். இதனை அடுத்து யோகா தினம் முடிந்த கையோடு சுஸ்மா சுவராஜ் அடுத்த நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
இம்மாதம் 28-ஆம் தேதி துவங்கி ஜூலை 2 வரை உலக சமஸ்கிருத மாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உலக சமஸ்கிருத மொழித்தூதுவராக இருக்கும் சுஸ்மா சுவராஜ் ஜூன் 24 அன்று காலை புறப்பட்டுச் சென்றார்.  இந்த மாநாட்டில் முதல் முறையாக முழுக்க முழுக்க சமஸ்கிருதத்திலேயே உரையரங்கேற்றம் மற்றும் கட்டுரைகள் நடைபெறுகிறது. மொழிபெயர்ப்பிற் கென்று சிறப்பு மென்பொருள் அடங்கிய ஒலிப்பேழை அனைவருக்கும் வழங்கப்படும். மாநாட்டு நிகழ்ச்சி நிரலின் போதே ஆரம்ப சமஸ்கிருதப் பயிற்றுவிப்பும் நடைபெறுமாம்.   அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது சமஸ்கிருத மொழிக்கென தனித்துறை ஒதுக்கப்பட்டு அதற்காக நிதிவாரியமும் அமைக்கப்பட்டது.  இதற்கு சமஸ்கிருத பாரதி என்று பெயர் சூட்டப்பட்டது.  தற்போது மோடி தலைமையில் ஆன அரசு மீண்டும் சமஸ்கிருதத்திற்கு உயிர்கொடுக்கும் முயற்சி யில் ஈடுபட்டு வருகிறது, சமஸ்கிருத பாரதியின் தலை வரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான  சுஸ்மா சுவராஜுடன் பாங்காக்செல்லும் போது அவருடன் 250 பேர் அடங்கிய குழுவில் 40 ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் களும் 8 இந்து அமைப்பின் முக்கியப் பிரமுகர்களும் உடன் சென்றுள்ளனர் - யார் வீட்டுப் பணத்தில் பார்ப்பனீயம் கொழிக்கிறது?
சமஸ்கிருத பாரதி அமைப்பின் செயலாளர் தினேஷ்காமத் கூறும்போது இம்முறை சமஸ்கிருத மொழிக்கான முழு மரியாதையும் கிடைத்திருக்கிறது. பாங்காக்கில் இது போன்ற மாநாடு நடைபெறுவது முதல் முறையாகும். பாங்காக்கில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு இந்தியாவில் இருந்து பத்திரிகையாளர்கள் மற்றும் சமஸ்கிருத மாணவர்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.    இந்த மாநாட்டில் சமஸ்கிருத தினமாக அறிவிக்க அரசு எடுத்துவரும் முயற்சி குறித்து ஆய்வறிக்கை வெளியிடப் படுகிறது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் 60 நாடுகளில் இருந்து சமஸ்கிருத வித்வான்கள் கலந்துகொள்கிறார்கள்  யோகா தினம் போல் உலக சமஸ்கிருத தினம் ஒன்றை அறிவிக்க பல்வேறு நாடுகளுக்கு பிரச்சாரத் திட்டம் இந்த மாநாட்டில் உருவாக்கப்படுமாம். இந்தப் பிரச்சாரக் குழுவிற்கும் சுஸ்மா சுவராஜ் தலைவராக இருப்பார். இந்தக் குழு இந்த ஆண்டில் 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்து சமஸ்கிருத தினம் கொண்டாட அய் நாவை வற்புறுத்தும் என்று சமஸ்கிருத பாரதி தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டு களுக்கு ஒருமுறை நடக்கும் இந்த மாநாட்டை வெற்றி கரமாக முடித்துத் தர தாய்லாந்து அரசு முழுமையாக ஒத்துழைப்பு நல்கும் என்று தெரிவித்துள்ளார். வரும் 2017-ஆம் ஆண்டிற்குள் சமஸ்கிருத தினம் அறிவிக்க முழுமுயற்சி எடுக்கப்படும்; இதனை அடுத்து 2018-ஆம் ஆண்டு உலக சமஸ்கிருத நாளில் மாநாடு நடைபெறும் என்று தினேஷ்காமத் கூறினார்.
இது குறித்து மோடியின் பிரதமர் அலுவலகம் மற்றும் ஸ்மிருதி இராணியின் மனிதவளத்துறை அமைச் சரகம் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை விவரித்துள்ளது.
தாய்லாந்தில் துவங்கும் சமஸ்கிருத மாநாடு வெற்றிபெற இந்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் சமஸ்கிருதத்தை உலகெங்கும் கொண்டுசெல்ல இந்த மாநாடு நல்ல துவக்கமாக அமையும் என்றும் உலகமெங்கும் சமஸ்கிருத பிரச்சார அமைப்புகள் துவங்க இந்த மாநாட்டில் முடிவெடுத்து சமஸ்கிருத பாரதி தரப்பில் அதற்கு நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மக்கள் தொகையில் 0.1 சதவீதம் பேசும் மொழிக்கு இவ்வளவு அமர்க்களம்!
ஆர்.எஸ்.எஸின் அடிப்படையில்தான் இன்றைய மத்திய அரசு இயங்குகிறது என்பதற்கு இது ஒரு கூடுதல் சான்றாகும். இந்தியாவுக்கு ஆட்சி மொழியாக சமஸ் கிருதம் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். நிறுவனரான கோல்வால்கர் கூறியுள்ளார்; குருநாதர் கூறியதை மோடிகளால் அலட்சியப்படுத்த முடியுமா?
1938ஆம் ஆண்டிலே சென்னை மாநிலத்தின் பிரத மராக சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் இருந்த போது சென்னை  லயோலா கல்லூரியில் என்ன பேசினார்? சமஸ்கிருதத்தைப் படிப்படியாகக் கொண்டு வரவே இப்பொழுது இந்தியைக் கொண்டு வந்துள்ளேன் என்று பேசிடவில்லையா?
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் குறியாக இருப்பார்கள் பார்ப்பனர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்; பார்ப்பன எதிர்ப்பு கொழுந்து விட்டு எரியப் போகிறது என்பது மட்டும் அசைக்க முடியாத பேருண்மையாகும்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...